சர்ப்பமரணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 3, 2023
பார்வையிட்டோர்: 1,754 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரவு பெய்த மழையில் மரம் எல்லாம் சொட்டச் சொட்ட நனைந்து பூ வெல்லாம் குளித்திருந்தது. இன்னும் சரியாக விடியவில்லை என்பதுடன் மழை இருட்டும் இருந்தது. மழை இருட்டில் அந்தப் பாம்பின் கருமை நிறம் மேகத்தின் வடிவத்தில் அதன் தோல் வரி அலை. இருளா ஒளியா மரணத்தைத் தழுவுகிறது?

அழுதே கழியும் ஊமை இரவுகளின் பின் பல்லு விளக்காத முகத்துடன் பவனி வருகின்ற சூரியன் இன்று புதிய உலகொன்றைக் கண்டு வழி தவறிப் போவோமா என்று மலங்க மலங்க விழித்து வெளியே வராது ஒளித்து நின்றான். நான் கதவைத் திறந்து முன் புறத் தோட்டத்தில் கால் வைத்தேன்.

அப்போது தான் அந்தப் பாம்பு பற்றை மறைவில் ஒளித்திருந்து விட்டு என்னைக் கண்டு மிரண்டு, கண்ணை மூடிக் கொண்டு ஓடி ….. கண்ணை மூடிக் கொண்டு என்பது பிழை. பாம்புக்குக் கண் மடல்கள் இல்லை . பிறகு எப்படிக் கண்ணை மூடுமாம்? – கடதாசிப் பூ மரத்தில் ஏறி அதன் கிளைகளில் மறைந்தது.

“ஐயோ!” காலுக்கு மிக அருகில்…ஒரு சென்ரி மீற்றர் தூரத்தில் பாம்பு ஓடியதால் அதிர்ச்சியும் பயமும் அடைந்து, நான் போட்ட கத்தல் குறைந்தது நூறு மீற்றருக்குக் கேட்டிருக்கும்.


தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தின் கோபுரத்துக்கு அருகில் நின்றிருந்த நான் – எனது தலைக்கு நூறு மீற்றர் தூரத்தில் அந்தக் குண்டு வருவதைக் கண்டு அதிர்ச்சியும் பயமும் அடைந்து, போட்ட குழறல் குறைந்தது ஐநூறு மீற்றருக்குத் தெளிவாகக் கேட்டிருக்கும்.

“ஐயோ…. போட்டிட்டான் அம்மாளாச்சீ…..” மனிதர்கள் எல்லாம் வேகமாய் ஓடுகிறார்கள் எங்கே என்று தெரியாமல்! நான் இன்னும் பலருடன் கோபுரத்தின் கீழ் பதுங்கிக் கொண்டேன். எங்கும் புகை, இருள்… செவிச் சவ்வு பிளந்து விடும் ஒலிகள்!

இருளைப் பிளந்து கொண்டு ஒற்றையாய் ஒரு அழுகை ஓலம் ! என்னுடையதுதான்!

“ஐயோ….. என்ரை பிள்ளை ‘சீனக் சகடை’ மீண்டும் சுற்றுகிறது …… எனது தலையும் கூடவே உடல் மிக நன்றாக…. குளித்தது போல் வியர்த்து விட்டது. இதயத் துடிப்பு …. கதவு காற்றுக்கு அடிப்பது போல் படார்… படார்’ என்று கேட்கிறது.

வெளியே வந்து பிள்ளையைத் தேடவும் முடியாமல்…. உள்ளே நின்று தேடாமல் நிற்கவும் முடியாமல் … என்ன வேதனை.

“ஐயோ, எனக்குப் பிள்ளை இல்லாமலே இருந்திருக்கலாமே!”

“இந்த நேரம் பாத்துக் கடலை ஆச்சிட்டைக் கடலை வாங்க வெண்டு ஓடினானே!”

“எனக்கு மேலை விழுந்தா விழட்டும். பிள்ளையைத் தேடிப் பிடிக்காம என்னாலை நிக்க ஏலாது….”

எனது சொந்தப் பாதுகாப்பு உணர்வு இடிந்து தகர்ந்து போயிற்று. சனத்தைப் பிளந்து கொண்டு வெளியே ஓடுகிறேன். அப்போது…

இரண்டாவது குண்டு எனது தலைக்கு இருநூறு மீற்றர் தொலைவில் …..

ஓடுகிறேன் ….. ஓடுகிறேன் ….. மனதுக்குள் பல கறுப்புக் குரல்கள் !


ஆசியாவின் பைத்தோன் போன்ற பாம்புகள் – தனது தலையை விட மிகப் பெரிய இரையை – சில சமயம் மான்களைக் கூட…. விழுங்கி விடுமாம்.

இந்தப் பாம்பு எனது ஒரு வயதுக் குழந்தையை விழுங்கி விடுமோ ?

எச்சிலை விழுங்கினேன். புண் மீது மருந்து தடவியது போல் எரிந்தது.

உள்ளே பாய்ந்து சென்று குழந்தையைப் பார்த்தேன். குழந்தை புற்பாயில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது.

இது உறக்கந்தானா…..? அல்லது ….? மேலே ஏறிய பாம்பு கூரை வளை மூலம் உள்ளே இறங்கி…?

இது ஒரு வேளை ஆபிரிக்கன் மம்பா’ வாக இருந்தால் ….? கடித்த ஒரு நிமிடத்துக் கிடையில் மரணம் நிகழ்ந்துவிடுமாமே….?

“கடவுளே….!” கடவுளிடம் நம்பிக்கை குறைகிற போதும்…. (இவ்வளவு அக்கிரமமும் நடக்கும் போது, தனது வாழிடமாகிய கோயிலிலேயே குண்டு விழுகிற போதும் ஒன்றும் பேசாமல் கல்லாய் இருக்கிற கடவுள்…..?) ஏன் என்று தெரியாமலே கடவுளைக் கூப்பிட்டுக் கொண்டு குழந்தையின் மூக்கின் கீழே புறங்கையை வைத்துப் பார்க்கிறேன்.

“அப்பாடா!” குழந்தை மூச்சுவிட்டு உறங்கியது!


“அப்பாடா!”

கடலை ஆச்சியைக் கட்டிக் கொண்டு தலையைக் கடலைச் சுளகுக்குக் கீழே போட்டுக் கொண்டு – இந்தா – படுத்திருக்கிறான்!

தலைக்கு வரும் குண்டைச் சுளகு காப்பாற்றிவிடும் என்பது போல!……..

என்னைக் கண்டதும் எழுந்து ஓடி என் முந்தானைச் சேலையைப் பிடித்துச் சிரிக்கின்றான்.

“அம்மா காசு விழுந்தோச்சு கடலை இல்ல…….” மூன்று வயதுக்குள் அடங்காத துடியாட்டம்.

கோயில் வாசலில் இரத்தக் குவியல் காயப்பட்டவர்களையும் மரண வாசலுக்குச் சென்றவர்களையும் காவிக் கொண்டு அம்புலன்ஸ் வண்டி ஒன்று பறந்து போகிறது.

கோயில் சூழலை அசுத்தமாக்கிவிட்ட திருப்தியில் சகடை மறைந்து போகிறது.

“ஐயோ! சகடையே! உனக்கு மரணம் இல்லையா?” மூன்று வயதை இடுப்பில் சுமந்து கொண்டு – நிறையவே ஆழ்மனதில் பயத்தையும் நிரப்பிக் கொண்டு – வீட்டுக்கு வருகிறேன்.

எனது நிலா முற்றம் கூட ஏதோ ஒரு அச்சத்தில் உறைந்து போய்க் கிடக்கிறது. மரம், செடி, கொடி, எதுவும் அசைய வில்லையே!


நான் பாம்புக்குப் பயம். பாம்பு எனக்குப் பயம். நல்ல வேடிக்கை இது! பாம்புக்கான பயம் மறைந்து விட்டதென்று யார் சொன்னது ? நேற்றிரவுக் கனவிலும் இதே பாம்பு வந்ததே ! கனவில் வரும் பாம்பு வேறு ஏதோ ஒன்றின் சிம்பல்’ என்று உளவியலாளர்கள் சொன்னால் சொல்லட்டும். எனக்கு வந்தது அசல் பாம்புதான்!

வானத்தில் வேட்டு முழக்கங்களுடன் தோன்றுகிற சீபிளேன்!

கொறித்த விழிகளுடன் திசைகளை அளந்து விட்டு….. சீ….. பிளேன் தலைக்கு மேல் வட்டமிடுவதை உணர்ந்து … குழந்தையின் நித்திரையைக் குழப்பித் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு…. பங்கரை நோக்கி ஓடுகிறேன்.

“குழந்தை கவனம்… பக்கத்திலை குண்டு விழுந்தால் காதுச் சவ்வு வெடிச்சிடும்…..”

கணவரின் குரல் செவிகளிலும் புலன்களிலும் அடிக்கடி மோதிச் சிலிர்த்து ரீங்காரித்த வண்ணம் இருக்கிறது.

குழந்தை ஒரு சாட்டுத்தான்! மூட்டை மாதிரி முடங்கிக் கொண்டு, வீடே அதிருகிற மாதிரி இருமுகிற பாட்டிக்குச் சீ-பிளேன் என்றால் பயமில்லையா? அல்லது இள ரத்தம் ஓடுகிற என் கணவருக்குத்தான் இல்லையா?

மூட்டைக்குள்ளிருந்து எலும்பும் நாருமான குச்சுக்கையை வெளியே நிட்டி, “தம்பி, சகடை எதாலை போகுது மேனை?” என்று கேட்கும் போது, நடுங்கும் பாட்டியின் குரல் வயதினால் மட்டும் வந்த தென்று சொல்ல முடியாது.

பங்கர் வாசலில் …. பனை மரங்களின் நடுவில் ஒரு பாம்புச் செட்டை. இதற்குள்ளே நுழைந்த பாம்பு வளர்ந்திருக்கிறது. வளர்ச்சிக்கு இடம் கொடாத தோலைக் கழற்றிவிட்டது.

“முந்த நாளும் உதுக்குள்ளை ஒரு செட்டை கிடந்தது மேனை …”

பாட்டியின் குரல் நடுக்கத்துடன் கேட்டது. ஆறு வாரங்களுக்கு ஒரு முறைதானே பாம்பு தோல் கழற்றுமாம்? அப்படியானால் ….. இந்தப் பங்கருக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட பாம்புகள் வாழுகின்றனவா?

பங்கருக்குள் போனால் தலைக்கு மேலே பாம்பு! வெளியே நின்றால் … தலைக்கு மேலே சீ-பிளேன்!

கண்ணை மூடினால் பாம்பு. திறந்தால் சீ-பிளேன! இல்லை திறந்தால் பாம்பு… மூடினால் சகடை! ஓ… கனவுதானா?


அந்தச் சத்தம்…. அவ்ரோதான்! மனம் சரியாகவே பாகுபடுத்தி அறிந்து கொள்கிறது. ஆனால் எதுவாக இருந்தால் தான் என்ன? அவ்ரோ … சீ-பிளேன், சகடை, பொம்பர், ஹெலி எதுவாக இருந்தாலும் அந்தச் சத்தம் கேட்டவுடன் எனக்குள் பல பாம்புகள் ஓடுவதுபோலத் திடீரென்று ஒரு பயம் மனத்தை இறுக்குகிறது.

எந்தப் பெரிய வியாதி வந்தாலும் இப்படி ஒரு வேதனை இருக்கும் போலத் தெரியவில்லை. அந்த வேதனையை எப்படி விபரிப்பது என்றும் புரியவில்லை. எங்கோ வேகமாக ஓட வேண்டும் போல ஒரு அந்தரம் …. ஆனால் அசைய முடியாத ஒரு விறைப்பு.

ஒரு நாள் அநுபவம் எப்போதும் நடக்கப் போவதில்லை, இது அநேகமாகக் குண்டு போடப் போவதில்லை’ என்று எவ்வளவு தான் அறிவு மனம் – நனவு மனம் – சொல்லிக் கொண்டாலும்… தன்னாட்சி நரம்புத் தொகுதி எல்லாம் தனக்கே தெரியும் என்பது போல் நடந்து கொள்கிறது. பாத்றாமுக்குப் போக வேண்டும் போல இருக்கிறது. உள்ளே நுழைந்தேன்.


பாம்பு இனங்களில் பத்தில் ஒன்பது பகுதி தீமை அற்றவை. சீ-பிளேன் . அவ்ரோ வகைகளில் பத்தில் பத்தும் தீமையானவையே!

ஆகவே பங்கருக்குள் நுழைந்தேன். புகையும் புழுக்கமும் இறுக்க எங்கோ ஒரு இருட்குகையில் பாறையின் இடிபாடுகளில் அமுக்குவது போல், யாரோ கழுத்தை நெரிப்பது போல், மூச்சு அடைத்தது.

மனம் என்பது பெரிய பள்ளத்தாக்குத்தான்!

ஆழம், இருட்டு , அடர்த்தி !

அன்று கனவில் தோன்றிய அந்தப் பாம்புக்கு மஞ்சள் நிறமான கண்வில்லை. இந்த மஞ்சள் கண்கள் ஊதாக் கடந்த கதிர்களைப் பிரித்துப் பார்வையைக் கூர்மை அடையச் செய்யும் என்று எனக்குக் கனவிலும் நினைவு வருகிறது பாருங்கள் !

“நீ என் மனைவியைக் கொலை செய்தாய். நான் உனக்குச் சாபம் போட்டிருக்கிறான் ….” பாம்பு பேசுகிறது.

“பாம்பு சாபம் போடுவதை நம்ப நான் ஆயத்தமில்லை. நான் புத்தி ஜீவி”

என்பது நான் சொல்லாத பதில். பயங்கரமாக நாக்கை நீட்டிக் கொண்டு அது என்னைத் துரத்துகிறது. இது “தீமையற்றதாக இருக்கலாம்” என்று எனக்குத் தோன்றவில்லை. நான் ஓட்டமாய் ஓடுகிறேன்.

“என்னை ஒன்றும் செய்யாதே” என்று கெஞ்சுகிறேன். பாம்பு ‘செவிடு’ என்பது என் மனதில் உறைக்கவில்லை.


அவ்ரோவின் சத்தம் என்னை நோக்கி வருகிறது.


இரவு நேரம்! அமாவாசை! இப்போது பாம்பு எனக்கு மிக அண்மையில் வந்து விட்டது. அதன் கண்கள் பூனையின் கண்கள் போலப் பிரகாசமாய்! என்னை நுணுக்குக் காட்டியில் பார்ப்பது போல் தெளிவாகப் பார்த்திருக்கும்.

நாக்கை நீட்டி என்னைத் தொட்டுப் பார்க்கிறது. எனது உடல் மணத்தை அச்சொட்டாக அறிந்திருக்கும். இனிமேல் தப்புவது சாத்தியமில்லையோ?

“உட்பக்கம் வளைந்து, ஊசி போலக் கூர்மையான உன் பற்களால் என்னுடலில் நீ நஞ்சு செலுத்த நான் விடப் போவதில்லை…”

நான் திடீர்த் துணிவுகொண்டேன் . வேகமாய் ஓடி, வேலியில் கிழுவங் கதியாலை முறித்தேன். விசையுடன் ஓங்கி தலையில் ஒரு போடு போட்டேன்.

“டும்”


என்னை நோக்கி வந்து கொண்டிருந்த அவ்ரோவின் சத்தத்தின் மத்தியில் அந்த “டும்….” சத்தம் மிகத் தெளிவாகவே கேட்டது.


“நீ என்னிடம் தப்பி விட்டாய். ஓ…என்னை…என்னை ஓ…ஆ….ஆ…முடிந்து விட்டாயா?”

முனகிக் கொண்டே உயிரை விட்டது பாம்பு.

கண் விழித்தேன்.

பூமியில் பாதம் பரவாத பரவசம் மனதில் இருந்தது.


தெருவெல்லாம் ஒரே களபுளா! இவர்கள் எல்லாம் எங்கே ஓடுகிறார்கள் வலு உற்சாகமாய்?

“டேய்…பிளேன்…”

“ணிங் ணிங் ணிங்…”

“மச்சான் அவ்ரோ…”

“பீப்…பீப்…சரியடா…”

“இண்டைக்கு இரண்டாவது ஆளும் முடிஞ்சார். இனிமேல் இந்தப் பக்கம் தலையும் வைக்க மாட்டார்!”

எல்லாரும் சிரித்துக் கொண்டே ஓடுகிறார்கள் பார்க்க!

மே தினக் கூட்டத்தை விட…அதிகளவு சனம்! நான் இப்போது பாம்புக்குப் பயமில்லை!

ஓ…பிளேனுக்குத் தான்!

– புரட்டாதி – ’95

– வாழ்வு வலைப்பந்தாட்டம் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: ஜூலை 1997, கலை இலக்கியக்களம், தெல்லிப்பழை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *