ஆசிரியர் ஆனந்தக் கண்ணன் கண்கள் மூடியபடி அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டு இருந்தார்.
“சார், இன்னும் கொஞ்ச நேரத்துல வக்கீல் வரதராஜன் வந்துடுவாரு. அமெரிக்காவுல பிரபல சாஃப்ட்வேர் இன்ஜினீயரா கொடிகட்டிப் பறக்குற சடகோபன் சென்னைல லேண்ட் ஆயிட்டாராம். வந்துட்டே இருக்கேன்னு போன் பண்ணாரு. அப்புறம்… நம்ம இளம் புயல் ஹீரோ விஸ்வம் ஷ¨ட்டிங் முடிச்சுட்டு, ஆன் தி வே-ல இருக்காராம். இப்படி மொத்தம் இருபது பேர் இன்னிக்கு ஒண்ணாக் கூடறோம். அத்தனை பேரும் உங்க கிட்டே படிச்ச பசங்க சார். இன்னிக்கு எல்லாரும் நல்ல நிலைமைல இருக்கோம். எல்லாம் உங்க ஆசீர்வாதம். எல்லாரும் சேர்ந்து ஒரு கெட்- டுகெதருக்கு ஏற்பாடு பண்ணி, உங்களுக்கு ஒரு நினைவுப் பரிசு கொடுக்கணும்னு ஆசைப்பட்டோம். எல்லாம் சடகோபன் ஐடியாதான்!
இந்த ஸ்டார் ஓட்டல் ஹாலை புக் பண்ணி, விருந்துக்கு ஏற்பாடு பண்ணினது விஸ்வம். ரொம்பச் சந்தோஷமா இருக்கு, சார்..!”
ஆனந்தக்கண்ணன் மெதுவாகக் கண்களைத் திறந்து,
அவர்களைப் பார்த்தார்.
“இந்த ஓட்டல்ல ரூம்பாயா வேலை செய்யற வைத்தியைத் தெரியுமா?”
“தெரியாம என்ன சார், எங்களோடு ஒண்ணாப் படிச்சவன். ஒழுங்கா படிக்காம வீணாப் போனவன். அவனுக்கென்ன சார்?”
“அவனும் இந்த விருந்துல கலந்துக்கறான் இல்லையா? பாருங்க, எனக்கு நீங்க எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு அவனும் முக்கியம்!” – தீர்மானமாகச் சொன்னார் ஆனந்தக்கண்ணன்.
– 15th ஆகஸ்ட் 2007