பையன் பி.காம் பரீட்சையில் தேறி விட்டான் என்றாலும், அவன் ‘டிஸ்டிங்ஷன்’ வாங்கவில்லை என்பது அவருக்குக் கவலையளிக்கத்தான் செய்தது. முதல் வகுப்பு இல்லை, இரண்டாம் வகுப்பும் இல்லை. சாதாரணமாகத் தேறியிருந்தான்.
திவான் பகதூர் திருவேங்கடம் பிள்ளை பேரப் பையன் பரீட்சை தேறியிருக்கும் லட்சணத்தைக் கண்டிப்பதற்காக அவன் அம்மாவை – அதாவது தம்முடைய ஒரே மகள் நாச்சியாரைக் கூப்பிட்டனுப்பினார். நாச்சியார் வந்தாள். எதிர்த்துப் பேசினால், அப்பாவுக்குக் கோபம் வரும். கோபம் வந்தால், ப்ளட்ப்ரஷர் அதிகமாகும் என்றெல்லாம் தெரிந்திருந்ததனால் அடக்க ஒடுக்கமாக அப்பாவுக்கு முன் வந்து நின்றாள் மகள். கிழவர் இரைந்தார்; “பார்த்தியா, உன் பிள்ளையாண்டான் பாஸ் பண்ணியிருக்கிற லட்சணத்தை இவனை நம்பி நான் என்ன என்னவோ கோழிக் கனாக் கண்டுக்கிட்டிருக்கேன். ஒரு செகண்ட் கிளாஸ் கூட வாங்கலை. இவனை நம்பி ‘லண்டன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸிலே’ இடத்துக்கு எழுதினேனே! இப்ப என்ன செய்யிறது”
“அவன் தலையிலே எழுதியிருக்கிறது அவ்வளவு தான் அப்பா! அதுக்கு நீங்க என்ன செய்வீங்க?”
“இந்தப் போர்டிலே பளிச்சுப் பளிச்சுனு எழுதி வச்சிருக்கே, இதெல்லாம் நாளைக்கு யாரை நம்பி விடறது?’ என்று கூறிக் கொண்டே வாக்கிங் ஸ்டிக்கால் முகப்பில் இருந்த அந்தப் பெரிய பித்தளைப் போர்டை மகளுக்குச் சுட்டிக் காட்டினார் திவான் பகதூர். திருவேங்கடம் கெமிக்கல்ஸ் அன்ட் இன்டஸ்ட்ரிஸ், திருவேங்கடம் ஃபெர்டிலைஸர்ஸ், மெட்ராஸ் மெஷின் டுல்ஸ் அன்ட் அல்லய்ட் பிராடக்ட்ஸ் என்று கம்பெனிகளின் பெயர்கள் பளீரென்று பாலிஷ் செய்திருந்த பித்தளை எழுத்துக்களில் மின்னின.
“என்னமோ போம்மா, ஒண்ணுமே நல்லாயில்லை.பி ஃபார்ம் தொந்தரவு, ஃபாரின் எக்ஸ்சேஞ்ஜ், எல்லாத்தையும் சமாளிச்சு, எப்பிடியோ தலை கீழே நின்று, பழைய சிநேகிதன் ராபர்ட்ஸனுக்கு லெட்டர் மேலே லெட்டராப் போட்டு நச்சரிச்சு’லண்டன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ்லே’ இடம் பிடிச்சேன். உலகத்திலே இருக்கிற கோடீசுவரன்களோட பிள்ளைகள் எல்லாம் படிக்க வருகிற இடம் அது. இப்ப இவனை அங்கே எப்படித் தள்ளி விடறதுன்னே புரியலை” “அனுப்புங்கப்பா, எல்லாம் அங்கே போய்ப் படிச்சா மாறிடுவான்” என் கூறி விட்டு நாச்சியார் மெல்ல நழுவி விட்டாள்.
திவான் பகதூருக்கு அவளுடைய மறுமொழிகளினால் சமாதானம் ஏற்பட்டு விட்டது என்று கூறுவதற்கில்லையானாலும், மனத்தின் பாரத்தை இன்னொருவரிடம் பகிர்ந்து கொண்டோம் என்ற அமைதி கிடைத்தது. கோடி கோடியாக முதல் போட்டு மாபெரும் தொழில்களை நடத்தும் ஒரு பெரிய இண்டஸ்டிரியலிஸ்ட் தம் வாரிசாக எதிர்பார்த்து வளர்க்கும் ஒரு பையன் கொஞ்சங்கூட அந்த வழியில் வரவில்லை என்பது அவருக்கு ஏமாற்றத்தையும், பயத்தையும் அளித்தது. பங்களா காம்பவுண்டில் அவன் படிப்பதற்கென்று ஒதுக்கி விட்டிருந்த அறையில் எகனாமிக் அட்வைஸர், பிஸினஸ் வீக்லி, கமர்ஷியல் டைம்ஸ் என்று தொழிலுக்கு உதவும் பத்திரிகைகளை வாங்கிக் குவித்திருந்தார் அவர். புத்தகங்களையும் வாங்கி அடுக்கியிருந்தார். மாகாணத்திலேயே அந்தத் துறையில் தேர்ச்சி மிக்க பேராசிரியர் ஒருவரைக் கொண்டு டியூஷனுக்கும் ஏற்பாடு செய்திருந்தார். பட்டம் வாங்கியதும், வெளிநாட்டுப் படிப்புக்கு அனுப்பவும் ஏற்பாடாகியிருந்தது.
பெண் நாச்சியாருக்கு எவ்வளவோ தேடித் தேடி வரன் பார்த்துப் பெரிய தொழிலதிபரின் ஒரே மகனுக்குக் கொடுத்தார். அவளுடைய கணவன் விமான விபத்தில் வெளிநாட்டில் மாண்டான். ஒரு மகனோடு வாழாவெட்டியாகத் தந்தை வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் மகள். பேரனைக் குழந்தைப் பருவத்திலேயே தம் பொறுப்பில் வளர்க்கத் தொடங்கியும் அவனை அவர் நினைத்தபடி உருவாக்க முடியவில்லை. சில மாதங்களுக்கு முன் டியூஷன் வாத்தியார் ஒரு விஷயத்தைத் திவான் பகதூரின் கவனத்துக்குக் கொண்டு வந்தார். அப்போதே நம்பிக்கை ஆட்டம் கண்டு விட்டது.
“ஒண்ணுமில்லை, சாதாரண விஷயந்தான். நான் ஏதோ புரொடக்ஷன், கன்ஸம்ப்ஷன்னு பாடம் ஆரம்பிச்சா உங்க பேரப்பிள்ளையாண்டான், ‘ஸார் ஸார்! நான் ஒரு கவிதை எழுதியிருக்கேன். படிச்சுக் காட்டட்டுமா?’ன்னான். ‘சரி! படி’ன்னேன். ‘ரோஜாப்பூ ஏன் சிவப்பாயிருக்கிறது?’ன்னு கவிதைக்குத் தலைப்பாம். தலைமுறை தலைமுறையாக உழைக்கிறவங்க ரத்தம் எல்லாம் பூமிக்குள்ளே பாய்ந்து தேங்கிக் காய்ந்து போயிருக்கிறதனாலே தான் ரோஜாப்பூச் சிவப்பாப் பூக்கிறதுன்னு பாட்டு எழுதியிருக்கான்” என்று சொல்லிக் கொண்டே ஒரு துண்டுக் கடிதத்தைப் பெரியவரிடம் எடுத்து நீட்டினார் டியூஷன் வாத்தியார். –
பெரியவர் அதை வாங்கிக் கண்ணாடியை எடுத்து மாட்டிக் கொண்டு படிக்கத் தொடங்கினார் :
“ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
ஆடி அயர்ந்தே இருகரமும்
ஓய உழைப்பார் உழைப்பெல்லாம்
உதிரம் பெருக்கிப் பரந்தபின்னே
காயும் நிலத்துள் கரந்தந்தக்
கைகள் உழைத்த காந்தியினால்
பூவாய்ப் பூத்து மலர்ந்ததுவே
புத்தம் புதிய ரோஜாவாம்.”
படித்ததும் திவான் பகதூருக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது.
“ஸார்! உங்கக்கிட்டக் காண்பிக்கிறதுக்காக நான் எனக்கு வேணும்னு சொல்லிப் பையனிட்ட எழுதி வாங்கிக் கொண்டு வந்தேன். நீங்க இதை அவனிட்டக் கேட்க வேண்டாம். அப்புறம் என்னை மிஸ்டேக் பண்ணிப்பான். தயவு செய்து இதை மறந்துடுங்க.எல்லாம் படிப்படியாகச் சரியாயிடுவான்” என்றார் டியூஷன் வாத்தியார்.
கோபத்தோடு காகிதத்தைக் கிழித்துக் கசக்கி எறிந்தார் திவான் பகதூர்.
“பாட்டா இது? கண்றாவி ஒரு டிரேட் யூனியன் லீடர் மாதிரியின்னா பிதற்றி வச்சிருக்கான்” என்று கோபத்தோடு கூப்பாடு போட்டார் திவான் பகதூர்.
அன்று மாலையிலேயே வீட்டுக்குப் பத்திரிகைகள், புத்தகங்கள் சப்ளை செய்து வந்த கடைக்காரனை வரவழைத்து, “அவன் கேக்கிற புக்ஸை அனுப்பு. ஆனா அது என்ன என்ன புக்ஸ்னு எனக்கும் ஒரு லிஸ்ட் கொடுக்கணும் நீ. அவன் வேண்டாம்னாலும், பிஸினல் வீக்லி, காமர்ஸ் ரெவ்யூ, அட்வான்ஸ் எகனாமிக் ரீடர் அதெல்லாம் நிறுத்திடப்பிடாது. ஜாக்கிரதை!” என்று எச்சரித்து அனுப்பினார் திவான் பகதூர்,
அடுத்த வாரமே புத்தகக் கடைக்காரன் கிழவருக்கு ஒரு லிஸ்ட்டும், பில்லும் அனுப்பியிருந்தான். பேரப் பிள்ளையாண்டானுக்கு அவராகக் கொடுக்கச் சொல்லியிருந்த புத்தகங்களைத் தவிர அவனே கேட்டு விரும்பி வாங்கிக் கொண்ட புத்தகங்களின் பெயர்களைப் பார்த்த போது அவருக்கு எரிச்சல் மூண்டது.
‘வர்ஜின்ஸ் அன்ட் வைன் யார்ட்ஸ்’ என்ற கவிதைத் தொகுதி, பால்கிரேவ் தொகுத்த ‘கோல்டன் டிரெஷரி ஆஃப் இங்கிலீஷ் போயம்ஸ்’, பாரதியாரின் குயில் பாட்டு, பாரதிதாசனின் ‘அழகின் சிரிப்பு’, ரவீந்திரரின் கீதாஞ்சலி என்று எல்லாப் புத்தகங்களுமே கவிதைகளாக இருந்தன. அவனாக விரும்பி வாங்கிய அந்தப் புத்தகங்களின் பட்டியலில், ஒரு புத்தகமாவது அவர் விரும்புகிறபடி இருந்திருந்தால் கூட மற்றவை பற்றி அவருக்கு அவன் மேல் கோபம் வந்திருக்காது.ஆனால் எல்லாமே அவர் விரும்பாத துறையாக இருக்கவேதான் கோபம் தாங்க முடியவில்லை. ‘இப்படிப் புத்தகங்களை அவன் கேட்டால் கொடுக்காதே’ என்று புத்தகக் கடைக்காரனிடம் கண்டிக்கவும், மனம் வரவில்லை. சிறு வயதிலிருந்து மடியில் வைத்துக் கொஞ்சி வளர்த்த பேரனை, முகம் சிணுங்கச் செய்யவும் பாசம் இடம் கொடுக்கவில்லை. ரங்கராஜன் என்று பெயர் வைத்திருந்தாலும், பிரியத்தைக் காட்டுவதற்காகச் செல்லப்பா, செல்லப்பா என்றுதான் அவனை வாய் நிறையக் கூப்பிடுவார் பெரியவர்.
வாத்தியாரைக் குறை சொல்லிப் பயனில்லை. அவருக்குக் கொடுத்த டியூஷன் பணத்துக்குச் செல்லப்பாவைப் பாஸ் செய்ய வைத்து விட்டார். அவனை வெளிநாட்டுக்கு அனுப்பியாக வேண்டும். லண்டன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸில் படித்துவிட்டுத் திரும்பும் போது பையன் மாறி வருகிறானா என்று பார்க்க ஆர்வமாக இருந்தார் பெரியவர். பணத்தின் செல்வாக்கும், தொழிலதிபராக இருப்பதன்
பெருமிதமும், செல்லப்பாவுக்கு உறைக்க வேண்டும் என்பதற்காக ‘ஸ்டூடன்ஸ் கன்ஸெஷன்’ டிக்கட் வசதி இருந்தும், விமானத்தில் முதல் வகுப்பில் அவனை லண்டனுக்கு அனுப்ப முடிவு செய்தார் பெரியவர்.
அவனுக்குள் வியாபார உலகின் நுணுக்கங்களே இல்லை. அவன் போக்கே புதுமையாக இருந்தது பெரியவருக்கு. அவுட் ஹவுஸில் அவன் படிப்பதற்காக விட்டிருந்த கீழ்ப்பகுதி அறையின் முன்னால் பூந்தொட்டிகளில் புதிய புதிய பூக்கள் பூக்கும் போதெல்லாம் அவன் சிறு குழந்தை போல் அதைக் கொண்டாடினான். மேற்கே சாயங்கால மேகம் ரோஜாப் பந்துகளாகச் சுருண்டிருப்பதை மொட்டை மாடியில் நின்று பருகுவது போல் பார்த்துக் கொண்டிருந்தான் செல்லப்பா. இந்த நிலையில் அவனை அடிக்கடி பார்த்திருந்தார் பெரியவர்.
“இந்த மாதிரிப் புத்தகம்லாம் இனிமே வாங்காதே செல்லப்பா! பேரே கேக்க அசிங்கமா இருக்கு ‘வர்ஜின்ஸ் அண்ட் வைன்யார்ட்ஸ்’ இதெல்லாம் உனக்கு எதுக்கு” என்று ஒரு நாள் பேரனைக் கண்டித்துப் பார்த்தார் திவான் பகதூர். பேரன் அவரை விடவில்லை.
“பேர்லே என்ன இருக்கு தாத்தா? ஹரீந்திரநாத் சட்டோபாத்யாயா எழுதினது இது. இன்னிக்கி இந்தியாவிலேயே சிறந்த கவி அவர்தான். அவரோட முதல் புத்தகத்துக்கு யோகி அரவிந்தரே பாராட்டுக் கொடுத்திருக்கிறார்” என்று பேரன் தாத்தாவிடம் விவாதத்துக்கே வந்து விட்டான்.
ஒரு முறை ஆல் இண்டியா மானுபாக்சரர்ஸ் அஸோஸியேஷன் கூட்டம் ஒன்றுக்காக டில்லி போன போது அவனையும் விமானத்தில் அழைத்துப் போயிருந்தார் அவர். அவனுக்கு அப்போது கல்லூரி விடுமுறையாக இருந்ததனால், தம் வழியைப் பழக்கி விட்டு விடலாம் என்று எண்ணித்தான் அவர் அவனை அழைத்துச் சென்றிருந்தார். அவனோ, அவரோடு சுற்றுவதில் சலிப்படைந்து, டில்லியிலிருந்து தாஜ்மகால் போவதும், ஹரித்துவார் போவதும், திரும்பி வந்து அவற்றை ஒரு குழந்தையின் வியப்போடு கிழவரிடமே வருணிப்பதுமாக இருந்தான். ஒரு தேர்ந்த வியாபாரியின் திறனோடு அவனை உரையாடப் பழக்க வேண்டும் என்று, “திஸ் இஸ் தி ஸிட்டி ஆஃப் வி. ஐ. பிஸ் அண்ட் டிப்ளமேட்ஸ், யூ மஸ்ட் லேர்ன் திங்க்ஸ் ஃப்ரம் அதர்ஸ்” என்று டில்லியைப் பற்றி அவர் ஆரம்பித்தால், “என்ன தாத்தா நீங்கள்?” என்று பதிலுக்குத் தமிழில் ஆரம்பித்தான் அவன். “பல மொழிகளில் சாமர்த்தியம் காட்ட முடியாமைக்குக் காரணம் ஒரு கவி மனப்பான்மையினாலும், ஒரு சிறிதும் ‘லிங்க்விஸ்டிக்’ ஆக இருக்க முடியாமைதான்” என்று டியூஷன் வாத்தியார் அதற்குப் பின்னால் எப்போதோ கிழவரிடம் இது பற்றி விளக்கம் கூறினார். செல்லப்பா சில பத்திரிகைகளில் கவிதை எழுதி அச்சில் வெளிவருவதாகவும் டியூஷன் வாத்தியார் மூலம் அவர் கேள்வியுற்றிருந்தார். மிகவும் கடுமையாக அவனை எப்படிக் கண்டிப்பதென்று அவருக்கு விளங்கவில்லை. பாசமும் தடுத்தது.
சிலசமயங்களில் காரில் அவனை அழைத்துக் கொண்டு வெளியே எங்காவது போகும் போது “ஸீரியஸ்லி ஐயாம் டெல்லிங் திஸ், யூ மஸ்ட் பிகம் ஏ பிஸினஸ் மேக்னட்! டோன்ட் வேஸ்ட் யுவர் டைம்” என்று அவனிடம் ஆரம்பித்திருக்கிறார் அவர். அதையும் அவன் சிரித்து மழுப்பிக் கொண்டே கேட்டிருக்கிறானே ஒழிய, ஸீரியஸ்ஸாகக் கேட்டதில்லை. ஒரு நாள் இப்படி அவர் ஏதோ கண்டிக்க முற்பட்ட போது, “தாத்தா, போன தடவை பெங்களூர் போனப்ப நாம் தங்கியிருந்த வீட்டிலே மாடி ஜன்னலோரமா, ஒரு சண்பக மரம் பூத்திருந்ததே. அது ரொம்ப நல்லா இருந்திச்சு. விடிய காலம்பர அறை முழுவதும் சண்பக வாசனை நிரம்பியிருந்திச்சு. அது மாதிரி ஒரு சண்பக மரம் அதே சாதிச் செடி கொண்டாந்து என் அவுட்ஹவுஸ் கிட்ட தோட்டத்திலே வைக்கணும். என்ன சொல்றீங்க?” என்று சம்பந்தமில்லாமல் அவன் பதிலுக்கு அவரைக் கேட்டான். அவருக்குச் சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. பெங்களூரிலிருந்து ஒரு நர்ஸரி மூலம் சண்பகச் செடி வரவழைத்து, நட ஏற்பாடு செய்தார். பேரனை மனம் புண்படச் செய்யவும் அவருக்குத் துணிவில்லை. சண்பக மரம் பெரிதாகி வளர்ந்து, தன் அறை ஜன்னலருகில் பூத்து மணம் பரப்புவதைப் பற்றி அவன் ஒருநாள் டியூஷன் வாத்தியாரிடம் வியந்து சொல்லிக் கொண்டிருந்தான்.
மேற்படிப்புக்காக அவன் லண்டனுக்குப் புறப்படு முன் அம்மாவுக்கு இரகசியமாகச் சொல்லி விட்டுப் போன செய்தி, “தோட்டக்காரன் மறந்துடப் போறான், நீ தினம் சொல்லி அந்தச் சண்பகச் செடிக்குத் தண்ணி ஊத்தணும்! தாத்தாக் கிட்டச் சொன்னா சண்டைக்கு வருவாரு” என்பதுதான். அவளுக்குச் சிரிப்புத்தான் வந்தது இதைக் கேட்டு.
“அத்தினி தூரம் சமுத்திரத்தைத் தாண்டிப் போறவன் ரொம்ப முக்கியமான சங்கதிதான் சொல்லிட்டுப் போறே, இதை வேற யாராவது கேட்டாச் சிரிப்பாங்க. போடா போ” என்று அவனுடைய தாய் அவனைக் கேலி செய்தாள்.
“எரையாதே! தாத்தா காதிலே விழுந்திடப் போகுது. ப்ளேனுக்குப் புறப்படற சமயத்திலே கோபிச்சுக்கப் போறாரு” என்று சொல்லிச் சிரித்தான் செல்லப்பா.
அவள் பதில் சொல்லவில்லை. திவான் பகதூர் பம்பாய் வரையில் போய் அவனை வழியனுப்பி வந்தார். “லண்டன்லே போனதுமே, ராபர்ட்ஸனைப் பாரு, அவரு சொல்றபடி எல்லாம் செய். நடுவே பத்து நாள் பன்னிரண்டு நாள் லீவு வர போது மத்த நாடுகளைப் பாரு. ஸ்விஸ்சர்லாந்து, ரோம், ஜெனிவா, ப்ராங்க்பர்ட் எல்லாத்தையும் வியாபார நோக்கத்தோடே பாரு. ராபர்ட்ஸன் எல்லா உதவியும் பண்ணுவாரு. பணம் தேவையானப்ப எழுது, பீகாம் தான் இப்பிடிப் போச்சு அங்கேயாவது டிஸ்டிங்ஷன் வாங்கணும்” என்றெல்லாம் படித்துப் படித்துச் சொல்லிப் பம்பாயில் அவனை வழியனுப்பி வைத்தார் திவான்பகதூர். பலமுறை போய் வந்த போது தமக்குப் பழக்கமாகியிருந்த லண்டன் நண்பர்களுக்குக் கடிதம் வேறு கொடுத்திருந்தார் அவனிடம்.
“இங்கிலாந்திலிருந்து இங்கிலீஷ் சானல் வழியாகவும், பிரான்ஸ் போகலாம். ஆனால் நீ ப்ளேன்லேயே போய்ப் பாரு, லண்டன் டு பிரான்ஸ் ‘ஏர் ஃப்ரான்ஸில்’ ஜெட் ப்ளைட் நாற்பது நிமிஷந்தான். இங்கிலீஷ் சானல் வழியாப் ‘போட்’லே போய்ச் சிரமப்படாதே” கிழவர் தொணதொணவென்று கூறித் தீர்ந்திருந்தார். செல்லப்பன் சிரித்தபடியே கேட்டான். பிரியப் போகிற நேரத்துப் பாசமும், பிரியமும் அவன் மனத்தைப் பிசைந்தன.
விமானம் புறப்பட்டதும் தாத்தாவைப் பிரிவதையும், பாசத்தையும் அவன் மிக அதிகமாக உணர்ந்தான். சொந்த மண், சொந்த மனிதர்கள், பாசம் எல்லாம் எப்படி இரத்தத்தோடு இரத்தமாக, உணர்வோடு உணர்வாக ஒன்றியவை என்பதை அவன் அப்போது உணர்ந்தது போல் அதற்கு முன் எப்போதும் உணர்ந்ததில்லை எனலாம்.
லண்டனிலிருந்து அவன் அவருக்கு எழுதிய இரண்டாவது கடிதத்தில் லேக் டிஸ்டிரிக்ட்டுக்குப் போய்க் கவி வேர்ட்ஸ்வொர்த் பிறந்து வாழ்ந்த பகுதியைப் பார்த்து விட்டு வந்ததை வியந்து வர்ணித்து எழுதியிருந்தான். தாத்தாவுக்கு மறுபடி கவலை பிறந்தது. மகள் நாச்சியாரிடம் சொல்லிக் குறைப்பட்டுக் கொண்டார்.
“படிக்கப்போன இடத்திலேயும் இவன் மாறலை. என்னதான் ஆகப் போகுதோ!” என்று வருத்தப்பட்டுக் கொண்டார். பையனைக் கவனித்துக் கொள்ளும்படி நண்பர் ராபர்ட்ஸனுக்கு விரிவாக ஒரு கடிதம் எழுதிப் போட்டார்.
ராபர்ட்ஸன் அவருக்கு எழுதிய பதிலில், “ஹி ஹாஸ் காட் எ ரேர் பொயடிக் டாலென்ட். டோன்ட் ஸஸ்பெக்ட் ஹிம்’ என்று எழுதவே, ராபர்ட்ஸன் மேலும் கோபம் கோபமாக வந்தது அவருக்கு. உலகமே தமக்கு எதிராகத் தம் பேரனைக் கெடுக்கச் சதி செய்வது போல் தோன்றியது.
ஆறு மாதம் கழித்து ஒரு கிறிஸ்துமஸ் லீவில் ஸ்விஸ்சர்லாந்து போய் அங்கிருந்து ஸ்விஸ் மலைகள், ஏரிகளின் அழகைக் கவிதையில் வருணித்து ஒரு தமிழ்க் கடிதம் அவருக்கு எழுதியிருந்தான் பேரன். முன்பு செய்தது போல் என்ன காரணத்தினாலோ, அந்தக் கவிதையைக் கிழித்துக் கசக்கி எறிய மனம் வரவில்லை அவருக்கு.
“பளிங்கிற் பதித்த நீர்நிலைகள் – இளம்
பச்சை மரகதப் புல்வெளிகள்”
என்று ஆரம்பமான அந்தக் கவிதையை அவரால் வெறுக்கவும் முடியவில்லை. பேரனின் இந்தப் போக்கை விரும்பவும் முடியவில்லை. படிப்பைக் கவனிக்குமாறு கடிதம் எழுதிக் கண்டித்தார். ‘அவன் குடிக்கிறான், கண்டபடி அலைகிறான்” என்றெல்லாம் கேள்வியுற்றிருந்தால் கூட அவருக்கு இவ்வளவு கவலை ஏற்பட்டிருக்காது. அப்படி எல்லாம் செய்தால் கூட அவன் தேர்ந்த வியாபாரியாக மாறி விட முடியும் என்று நம்பினார். ஒருவன் பிறரிடம் மறைக்கப் பழகும் இரகசிய உணர்வு அடைந்தாலே, அந்த அளவு வியாபாரியாகி விடுகிறான் என்பது அவருடைய நம்பிக்கை. பேரப் பிள்ளையாண்டான் அப்படியும் இல்லையே என்பதுதான் அவருடைய வருத்தமாக இருந்தது. கவலைப்படும் ஒவ்வொரு சமயமும் நண்பர் ராபர்ட்ஸனுக்கு ஒரு கடிதம் எழுதிப் பேரனைக் கவனிக்குமாறு வேண்டுவது அவர் வழக்கமாகியிருந்தது. ஒருமுறை ராபர்ட்ஸனே திவான் பகதூருக்கு விரிவான கடிதம் எழுதியிருந்தார் :-
“நீங்களும், நானும் நம்முடைய தலைமுறை இளைஞர்களைப் போலவே இன்றைய இளைஞர்களும் இருக்க வேண்டும் என்று எண்ணுவது தவறு.இன்றைய இளைஞர்கள் உருவாகிற விதமே பல விதங்களில் நமக்குப் புரிவதில்லை; புதிராகவும் இருக்கிறது. பெற்றோருக்கு அடங்கி அவர்கள் காட்டுகிற பாதையிலேயே போக வேண்டுமென்று ‘கன்ஸர்வேடிவ்’ ஆக அவர்கள் எண்ணுவதே இல்லை. உங்களுடைய பேரனுக்கு மிக நளினமாகவும், மென்மையாகவும் ஒரு மனம் வாய்த்திருக்கிறது. அப்படிப்பட்ட மனத்தை வியாபாரிக்கு உரிய கபடு, சூது எல்லாம் உடையதாக ஆக்கி விட நீங்கள் அவசரப்படுகிறீர்கள். எனக்கு உங்கள் மேல் கோபந்தான் வருகிறது. ஓர் அற்புதமான கவி கடுமையான வியாபாரியின் குடும்பத்தில் தவறிப் பிறந்து விட்டானே என்று உங்கள் பேரன் மேல் எனக்கு அனுதாபமாகவும் இருக்கிறது” என்று எழுதியிருந்தார். வழக்கம் போல் அதைப் படித்ததும் ராபர்ட்ஸன் மேல்தான் திவான் பகதூருக்குக் கோபம் வந்தது.
எப்படியோ பேரப் பிள்ளையாண்டான் லண்டனுக்குப் புறப்பட்டுப் போய் வருடம் ஒன்று ஓடி விட்டது. விடுமுறைகளில் ஊருக்கு வர விடாமல் ஐரோப்பாவில் ஒவ்வொரு நாடாகச் சுற்றிப் பார்த்து அவன் வியாபார அனுபவம் பெறும்படி ஏற்பாடு செய்திருந்தார் திவான் பகதூர். மொத்தம் இரண்டு வருடம் படிக்க வேண்டும், இரண்டு வருடமும் முடிந்து அவன் திரும்பும் போது தம்முடைய தொழில் பொறுப்புக்களில் சிலவற்றை அவனிடம் ஒப்படைக்க வேண்டுமென்று அவர் எண்ணியிருந்தார்.
அவன் போன ஐந்தாறு மாதங்களில் அவருடைய தொழில் நிறுவனங்களிலும் சில குழப்பங்கள் ஏற்பட்டன. ஸ்டிரைக், போனஸ் தகராறு, கோ ஸ்லோ, வேலை நிறுத்தம் என்றெல்லாம் குழப்பங்களை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. வயது முதிர்ந்த காலத்தில் அவ்வளவு கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு, சமாளிப்பதற்கு அவர் சிரமப்பட்டார். தளராத மனத் திடமும், தொழில்துறை நிபுணர்த்துவமும், விவகார ஞானமும் இருந்ததனால்தான், அந்த வயதிலும் அவரால் அவற்றை ஒழுங்கு செய்ய முடிந்தது. ஆயினும் அவருக்கு மன அமைதி இல்லை.இராத் தூக்கம் போயிற்று. ‘பிளட் பிரஷர்’ தொந்தரவு அதிகமாயிற்று.
வியாபாரத் தந்திரங்களிலும் தொழில் துறை நுணுக்கங்களிலும் வல்லாள கண்டர் என்று பெயரெடுத்த தமக்கே இப்படி என்றால், சூது வாது அறியாத பேரப் பிள்ளை செல்லப்பா எதிர் காலத்தில் இவற்றைக் கட்டிக் கொண்டு என்ன என்ன கஷ்டப்படப் போகிறானோ என்று சிந்தித்து அவர் மனம் குழம்பினார். நாட்டில் தொழில் நடத்துகிறவனுக்கும், தொழிலில் பணி புரிகிறவர்களுக்கும் இடையே சகஜமாக இருந்த நல்லுறவைக் குழப்பக்காரர்களும், அரசியல்வாதிகளும் சுயநலத்துக்காகப் படிப்படியாய்க் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விட்டனர் என்பது அவருக்குப் பெரிய வேதனையாக இருந்தது.
மன வேதனையோடு அவர் உடல்நலம் குன்றிப் படுத்த படுக்கையாக இருந்த போது செல்லப்பாவின் பழைய டியூஷன் வாத்தியார் அவரைப் பார்த்து விட்டுப் போக வந்திருந்தார்.
“நாடு போகிற நிலையைப் பார்த்தால், இத்தினி தொழிலிலே முதலீடு செய்திருக்கவே வேண்டாம்னு தோணுது.இந்தத் தொழில்களாலே ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வேலை கொடுத்துக் காப்பாத்தறோம். ஆனாலும் குழப்பக் காரன்களும் அரசியல்வாதிகளும் அவர்களுக்கும், நமக்கும் இடையே சண்டை மூட்டிவிடறாங்க. மன நிம்மதி கெட்டுப் போச்சு” என்று புரொபஸரிடம் அலுத்துக்கொண்டார் பெரியவர்.
அப்போது புரொபஸர் சிரித்துக் கொண்டேபெரியவரை ஒரு கேள்வி கேட்டார். “திரும்பி வந்ததும் உங்க பேரனுக்கும் இப்படிப்பட்ட சிரமங்களை எல்லாம் கொடுத்து, அவனைக் கஷ்டப்படுத்தப் போறீங்க, இல்லியா?”
திவான் பகதூரால் இதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. தம்மைப் போன்ற வல்லாள கண்டராலேயே சமாளிக்க முடியாத பிரச்னைகளை ஒரு சூது, வாதும் அறியாத பேரன் எப்படி எதிர் கொள்ளப் போகிறானோ என்பதுதான் அவருடைய பயமாகவும் இருந்தது. அதையே வாத்தியார் கேட்கவும் கிழவன் திகைத்தார்.
“புரொபஸர்! செல்லப்பா ஸ்வித்சர்லாந்திலேருந்து ஒரு கவிதை எழுதியனுப்பியிருந்தான். அது கொஞ்சம் நல்லாவே இருந்தது. நானே அதை ரஸிச்சேன்” என்று திவான் பகதூர் கூறிய போது புரொபஸரால் தம் காதுகளையே நம்ப முடியவில்லை. ராபர்ட்ஸனுடைய கடிதம் பற்றியும், பெரியவர் புரொபலரிடம் குறிப்பிட்டார். புதிய தலைமுறை இளைஞர்கள் பற்றிப் புரொபலரும் அதே கருத்தைப் பெரியவரிடம் தெரிவித்தார். அப்புறம் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் புரொபஸர் போய் விட்டார். போகும் போது திவான் பகதூரிடம் எற்பட்டிருக்கும் மன மாற்றத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டேதான் போனார்.
பெரியவரோ உடல் நலமும், மன நலமும் கெட்டுப் படுத்த படுக்கையானதிலிருந்து பேரனின் நினைவாகவே இருந்தார். அந்த வேளைகளில், அவர் பேரனின் கடிதங்களையும், ராபர்ட்ஸனின் கடிதங்களையும் திரும்பத் திரும்ப எடுத்துப் படிக்கலானார். அது அவருக்கு மனச்சந்துஷ்டி அளித்தது.
ராபர்ட்ஸன் எழுதியிருந்த வரிகள் இப்போது அவருக்கு வெறுப்பைத் தரவில்லை. டியூஷன் ஆசிரியர் கேட்ட கேள்வி இன்னும் கிழவரின் மனத்தை விட்டு அகலாமல் சுழன்றது.
‘பூப் போன்ற மெல்லிய மனத்தோடு கபடு சூது வாது இன்றி இருக்கும் பேரப் பிள்ளையாண்டானை இந்த உலகின் துரோகங்களிலும், வஞ்சகங்களிலும் முக்கி எடுத்துக் கஷ்டப்படுத்துவது அவசியந்தானா? பூக்களின் மலர்ச்சியிலும், நீரூற்றின் சிலிர்ப்பிலும், சண்பக மலரின் வாசனையிலும், சாயங்கால மேகங்களின் அழகிலும் மனத்தை லயிக்க விடும் ஒருவனை இன்வெஸ்ட்மென்ட், எஸ்டாபிலிஷ்மென்ட் பாலன்ஸ் ஷீட், போனஸ், இன்ஸென்டிவ், போனஸ் என்றெல்லாம் நினைக்க வைத்து, மனம் வறளச் செய்வது அவனுக்குச் செய்யும் நன்மையாக முடியுமா? என்று அவர் மனம் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கியது.
ஒரு பூவை நெருப்பில் எடுத்துப் போடுவதா, கூடாதா என்பது போன்ற தயக்கமாக இருந்தது அது. அதே சமயம் அவன் பாடிய பழைய ரோஜாப்பூ கவிதையை நினைத்த போது அவன் மேல் கடுங்கோபமும் மூண்டது. அது ஏதோ ஒரு புரட்சிக்காரனுடைய சிந்தனை மாதிரி தோன்றி அவரை மிரட்டியது. எதிர்காலத்தில் தம்முடைய தொழில் நிறுவனங்கள் அனைத்தையும் கவனித்துக் கொள்ளும் ஒரு ‘டிப்பிகல் இன்டஸ்டிரியலிஸ்ட்’ ஆக அவனை அவர் எதிர்பார்த்தார். அவர் எதிர்பார்த்தது பயனளிக்கவில்லை. தொழில்களும், தொழிலாளர்களும் போகிற போக்கைப் பார்த்தால் எதிர்காலத்தில் அவனால் அந்தப் பொறுப்பைத் தாங்க முடியும் என்று அவராலேயே நம்ப முடியவில்லை.
திவான் பகதூரின் இரண்டு கம்பெனிகளில் லாக் அவுட் ஆறு மாதத்துக்கு மேல் நீடிக்கலாயிற்று. ஒரு கம்பெனியில் ஸ்டிரைக். இன்னொரு கம்பெனியில் மானேஜரைக் ‘கேராவ்’ செய்து கொடுமைப்படுத்தியதனால், ஆபீஸ் முழுவதும் போலீஸ்காரர் காவலுக்கு நின்றார்கள். மற்றொரு தொழிலகத்தில் ‘கோ ஸ்லோ’வினால் பொருளுற்பத்தி மிக மிகக் குறைந்தது. ஆறேழு மாதம் அவர் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவே இல்லை. மானேஜர்களும், அட்மினிஸ்டிரேடிவ் ஆபீஸர்களும், அந்தரங்கக் காரியதரிசிகளும், தொழில் சம்பந்தமான பிரச்னைகளை அவரிடம் வீட்டிலேயே வந்து கலந்து ஆலோசித்துக் கொண்டு போனார்கள். நாளுக்கு நாள் குழப்பங்கள் அதிகமாயின. அரசியல் சார்புடைய சுயநல நோக்கமுள்ள தொழிற்சங்க வாதிகள் நல்ல தொழிலாளர்களைக் கூடக் குழப்பமான பாதைகளுக்கு அழைத்துச் சென்றனர். இன்னொரு வருடமும் ஓடி விட்டது. நிலைமையில் எந்த வித மாறுதலும் இல்லை.
அடுத்த வெள்ளியன்று டிரான்ஸ்வோர்ல்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பம்பாய் வந்து, பம்பாயிலிருந்து செல்லப்பா சென்னை வருகிறான். பேரனை வரவேற்க விமான நிலையத்துக்குக் கூடப் போக முடியாத நிலையில் இருந்தார் திவான் பகதூர். டியூஷன் வாத்தியாரும், நாச்சியாரும், திவான் பகதூரின் கம்பெனி நிர்வாகிகளும் மீ னம்பாக்கம் போய்ப் பேரனை அழைத்து வந்தனர்.
செல்லப்பா வெளிநாட்டுச் சூழ்நிலையில் நன்றாக அழகாக வெளுத்திருந்தான். ஆளும் திடீரென்று மிகவும் உயர்ந்து விட்ட மாதிரித் தோற்றமளித்தான். தாத்தா படுக்கையிலிருந்து எழுந்து அவனைக் கட்டித் தழுவிக் கொண்டார். ஆஜாதுபாகுவாகச் செழித்திருக்கும் பேரனைக் கண்டதும் அவருக்குத் தாங்க முடியாத மகிழ்ச்சி.
“ராபர்ட்ஸன் உங்களை விசாரித்தார்” என்றான் பேரன்.
“ஹெள இஸ் ஹி நெள? டிட் யூ ஹாவ் எ நைஸ் டிரிப்?” என்று ஆங்கிலத்தில் ஆரம்பித்தார் கிழவர். பேரன் தமிழிலேயே பதில் சொன்னான். வெளிநாட்டில் நாவுக்கு ருசியாகச் சாப்பிட முடியாமல் இரண்டு வருடத்தைக் கழித்து விட்டு வந்திருக்கும் பிள்ளைக்கு, வாய்க்கு ருசியாகச் சாப்பாடு போட அழைத்துக் கொண்டு போனாள் நாச்சியார். மற்றவற்றையும் அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்று கிழவரும் பேரனை டைனிங் டேபிளுக்கு அனுப்பி வைத்தார். கம்பெனி அதிகாரிகள் தொழில் நிர்வாகத்தில் பேரனுக்கு என்ன என்ன பொறுப்புக்களை அளிப்பது என்பது பற்றிக் கலந்து பேசுவதற்காகக் கிழவரின் படுக்கையருகில் சூழ்ந்தார்கள்.
உள்ளே டைனிங் டேபிளில் திடீரென்று அம்மாவுக்கும் பிள்ளைக்கும் ஏதோ பலத்த வாக்குவாதம் நடப்பது தடித்த குரல்களில் கேட்கவே அது என்ன என்று அறிந்து கொள்வதற்காக மகளைக் கூப்பிட்டனுப்பினார் கிழவர். மகள் வந்தாள்.
“வந்ததும் வராததுமா அவங்கிட்ட என்ன சத்தம் போடறே நாச்சியார்?”
“அவனுக்கு வேற வேலை என்ன? ஊருக்குப் போற போது ஏதோ சண்பகச் செடி நட்டுட்டுப் போனானாம், அதுக்கு நான் தோட்டக்காரனிடம் சொல்லி ஒழுங்காத் தண்ணி விட்டுக் கவனிக்காததனாலே அது பட்டுப் போச்சாம். அதைப் பார்த்து அவனுக்கு மனசே சரியில்லையாம். சாப்பிடக் கூடப் பிடிக்கலையாம். கத்தறான், கூப்பாடு போடறான்.”
கிழவர் முகத்தில் புன்முறுவல் மலர்ந்தது.”எனக்கு உடம்பு கெட்டுப் போயி, நான் படுத்த படுக்கையா இருக்கறதைப் பத்திக் கூட அவன் கவலைப்படலை. சண்பகச் செடி பட்டுப் போனதைப் பத்தி மட்டும் எவ்வளவு உருகறான் பாத்தியா நாச்சியாரு?”
“ஆமா அசட்டுப்பிள்ளை, ஒண்ணுமே தெரியலே.”
கிழவர் தம்மைச் சுற்றியிருந்த அதிகாரிகளிடம், “எக்ஸ்க்யூஸ் மி ஃப்ரண்ட்ஸ் ஹி இஸ் டூ யங், டூ டெண்டர் டு டேக் சார்ஜஸ் இன் தி ஆபீஸ், லீவ் ஹிம் நெள” என்று கூறினார். அவர்கள் விடைபெற்றுச் சென்றனர். அவர் மனத்தில் பாரம் அகன்றாற் போலிருந்தது.
அன்று அவருக்கு ப்ளட் ப்ரஷர் அதிகமாகவில்லை.போன இடங்களைப் பார்த்த நாடுகளை, சந்தித்த மனிதர்களைப் பற்றி எல்லாம் பேரன் கவித்துவம் பொங்கச் சொல்லியவற்றை அவர் அமைதியாக ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்.
– கலைமகள், தீபாவளி மலர், 1968.
– நா.பார்த்தசாரதி சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி), முதற்பதிப்பு: டிசம்பர் 2005, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை