அருள்பரதன் சொல்லும் வரைக்கும் அவன் சக்கிலி என்று தெரியாது. ஜீன்ஸ் பேண்ட்டையும் டீ சர்ட்டையும் சக்கிலியும் கூட அணிந்திருக்க முடியும் என்று அதுவரைக்கும் எனக்கு உறைத்ததும் இல்லை. பரதனை முதன் முதலாக ஃப்ரொபஷனல் கூரியர் அலுவலகத்தில்தான் பார்த்தேன். கதிர்வேலுதான் அறிமுகப்படுத்தினான்.
அப்பொழுதெல்லாம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எங்கள் பள்ளியில் ‘நைட் ஸ்டடி’ நடக்கும். இரவு உணவை வீட்டில் முடித்துவிட்டு சைக்கிள் எடுத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றுவிடுவோம். ஒன்பது மணியிலிருந்து ஒரு மணி வரைக்கும் படிப்பு. பிறகு அதிகாலை நான்கு மணி வரைக்கும் குட்டித்தூக்கம். மீண்டும் எழுந்து ஏழு மணி வரைக்கும் படித்துவிட்டு வீட்டிற்கு செல்வோம்.
கதிர்வேலுவும் நைட் ஸ்டடிக்கு வருவான். பன்னிரெண்டு மணி வரைக்கும் உட்கார்ந்து கொண்டே தூங்குவான். எல்லோரும் தூங்க ஆரம்பிக்கும் போது அவன் விழித்துக் கொள்வான். அதன்பிறகாக அவனோடு சேர்ந்து கொண்டால் சொர்க்கத்தை காட்டுவான் என்பது எங்களுக்குள் ஐதீகம்.
ஆனால் அது அத்தனை சுலபமில்லை. அவன்தான் அன்றைய இரவில் தன்னோடு சுற்றவிருக்கும் ஆட்களை தேர்ந்தெடுப்பான். அவன் என்னைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பள்ளிக்கு அருகில் இருக்கும் சக்தி வினாயருக்கு ஐந்து ரூபாய் காணிக்கை கூட போட்டிருக்கிறேன். விநாயகரின் அருள்பார்வை என் மீது பட்ட தினத்தில் கதிர்வேலு இரவுச் சுற்றுக்கு அழைத்துப் போனான். அப்பொழுதுதான் அருள் பரதனின் அறிமுகம் கிட்டியது. பரதன் கூரியர் ஆபிஸிலேயே தங்கிக் கொள்வான். அவனுடைய உடைமைகள் அங்கேதான் இருந்தன. உடைமைகள் என்றால் கொஞ்சம் துணி ஒரு பக்கெட் அதன் கூடவே ஒரு ப்ளாஸ்டிக் டப்பா.
இரவுகளில் பரதன் தூங்கி நாங்கள் யாருமே பார்த்தது இல்லை. நிறைய சினிமா பத்திரிக்கைகளை வைத்திருந்தான். சினிமா டைரக்டர் ஆவதுதான் லட்சியம் என்று அடிக்கடி சொல்லிக் கொள்வான். முதல் அறிமுகத்திலேயே எழுதி வைத்திருந்த தனது கதைகளைத் தந்து வாசிக்கச் சொன்னான். அப்பொழுது எனக்கு கதைகள் புரியவில்லை. ஆனால் அவனது எழுத்துக்கள் அச்சடித்தது போன்ற அழகுடன் இருந்தன.
பத்தாம் வகுப்பு வரைக்கும் கட்டுப்பெட்டித்தனமாக வளர்ந்த எனக்கு அவன் வைத்திருந்த சினிமா பத்திரிக்கைகளில் இருந்த கவர்ச்சி நடிகைகள் புது உலகத்தை காட்டினார்கள். இதற்காகவே கதிர்வேலு உடன் வந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி நான் அருள்பரதனை பார்க்கச் சென்றேன். எனக்காகவே ஈரம் சொட்டும் நடிகைகள், நீச்சலுடைகள் அணிந்த நடிகைகள் என்றெல்லாம் வகை வாரியாக பிரித்து வைத்திருப்பான்.
அவனது குடும்பம் எங்கள் ஊரில் சக்கிலி வளவில் இருக்கிறது. இதை அவன் சொன்னபோது என் உடல் அதிர்ந்ததை அவன் கவனித்திருக்கக் கூடும். அவன் காட்டிக் கொள்ளவில்லை. நானும் இயல்பாக இருக்க முயன்று தோற்றேன். அவனோடு திரிவது எனக்கு பிரச்சினையில்லை. ஆனால் வீட்டில் தெரிந்தால் பெரும் அக்கப்போர் செய்வார்கள். ஊருக்குள் பங்காளிகளுக்கு தெரிந்தால் இன்னமும் அசிங்கப்படுத்துவார்கள் என்ற பயம் அவனை விட்டு விலகி வரச் செய்தது. அவன் நெருங்கி வந்த போதெல்லாம் விலகிச் செல்வதற்கான காரணத்தை கண்டறிய வேண்டிய கட்டாயம் உருவானது. தேர்வு என்று சொல்வதோ உடல்நிலை சரியில்லை என்று சொல்வதோ எனக்கு சலித்துப் போனது. இந்த சாக்குகளை பலமுறை அவனிடம் சொல்லியிருக்கிறேன்.
கல்லூரியில் சேர்ந்த பிறகு அவனை பார்க்க முடியவில்லை அல்லது அவன் தவிர்த்துவிட்டான். அதற்கும் காரணம் இருக்கிறது. அவன் சென்னையில் இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராகச் சேரப்போவதாகவும் ட்ரெயின் டிக்கெட் எடுப்பதற்கு நூறு ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்டு வீட்டிற்கு வந்துவிட்டான். அப்பொழுது நான் வார விடுமுறைக்கு வந்திருந்தேன். அவனை தனியாக அழைத்துச் செல்லும் போது அவனை முன்னால் நடக்கச் சொல்லி பத்தடி இடைவெளிவிட்டு நடந்து சென்றேன். ஐம்பது ரூபாய்தான் இருப்பதாகவும் இனிமேல் எதற்காகவும் வீட்டிற்கு வரவேண்டாம் என்றும் சொன்னபோது அடர்ந்த இருட்டிலும் அவன் முகம் சிறுத்துப் போனதை உணர முடிந்தது.
அதன் பிறகாக அவன் என்ன ஆனான் என்று தெரியவில்லை. ஒரு முறை அவனது அப்பாவை பார்த்த போது அவன் ஊர்ப்பக்கமே வருவதில்லை என்றார். கடைசிகாலத்தில் சோறு போடுவான் என்று நம்பியிருந்த பையன் கைவிட்டுவிட்டதாகச் சொன்னபோது அவரது கண்கள் கலங்கின. சினிமாவில் நன்றாக வருவான் என்று சொன்னதற்கு பதிலாக ஒரு வறட்டு புன்னகையையும் அவனைப் பற்றிய சில வசவுகளையும் விட்டுச் சென்றார்.
இப்பொழுது ஏழெட்டு வருடங்கள் ஓடிவிட்டன. நான் அமெரிக்கா வந்துவிட்டேன். அவ்வப்பொழுது இணையதளத்தில் சில சினிமா செய்திகளை வாசிப்பதுண்டு. எதேச்சையாக வாசித்த சினிமாச் செய்தியில் புதிதாக பிரபலமாகியிருக்கும் இயக்குனர் எங்கள் ஊரைச் சார்ந்தவர் என்று இருந்தது. ஆனால் பெயர் அருள்பரதன் என்று இல்லை. ஒருவேளை அவன் தன் பெயரை மாற்றியிருக்கக் கூடும். அந்த இயக்குநர் பரதனாக இருக்க வேண்டும் என பிரார்த்தித்துக் கொண்டேன். எழுந்து சென்று குளியலறையில் கண்ணாடியில் முகம் பார்த்தேன். கேவலமாகவும் அருவெறுப்பாகவும் இருந்தது. என் மீதான அத்தனை வெறுப்புகளையும் காறி கண்ணாடி மீது துப்பிவிட்டு வெளியேறினேன்.
– ஜூலை 9, 2012