கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 6,306 
 

“ஊருக்குள்ள பறையனுகளுக்கு ஏகப்பட்ட திமிரு ஆயி போச்சு”

“பேரணி நடத்துறானுகளாமா”

“ராசுக்கவுண்டருக்கு இருக்குற செல்வாக்குல அவனுகள அடக்கினாத்தான் உண்டு. இல்லாட்டி கால்மேல கால் போட்டுட்டு நம்மகிட்ட பஞ்சாயத்து பேசுவானுக”

“கவுண்டர் இருக்கிற அந்தஸ்துக்கு சமானமா அவுரு பையன் இல்லை”

“பற வளவுக்கு போய்ட்டு வந்தா தொலையட்டும்ன்னு உட்டுடலாம் ஒருத்தருமில்லாதப்போ பறப் பசங்களை ஊட்டுக்கு கூட்டிட்டு வர்றானாம்”

***

“பறப் பசங்க கூட சுத்தறதும் உங்க அய்யனுக்கு சுத்தமா புடிக்கல கண்ணு”

“ம்ம்ம்”

“தொரை வாயத் தொறந்து பேச மாட்டாரோ”

“நம்பியூர் பாலாஜி கல்யாண மண்டபத்தை அவுங்களுக்கு ஏன் வாடகைக்கு தர மாட்டேங்குறாங்க?”

“லட்சக்கணக்குல செலவு செஞ்சு மண்டபத்தை கட்டி சக்கிலிக்கும் பறயனுக்கும் கொடுத்தா நாளையும் பின்ன எந்த குடியானவன் மண்டவத்துக்கு வருவான்?”

“என்னதுக்கு வெட்டி பேச்சு? இதோட நிறுத்திக்ககுற. அவ்வளவுதான் சொல்லுவேன்”

“ஊருக்குள்ள மானம் போவுது”

“உம்பையன் இனிமே பறவளவு சக்கிலி வளவுக்கு போறான்னு தெரிஞ்சா கொன்னுபோடுவேன் இல்லன்னா நான் நாண்டுக்குவேன்”

“வெள்ளிக்கிழமயும் அதுவுமா ஏன் அவசகுணமா பேசறீங்க நம்ம பையன்தான, நாஞ் சொல்லுறேன் போங்க”

***

“மினிஸ்டரு ஆர்.டி.ஓவுக்கு போன் பண்ணியிருக்காரு. கை மீறுனா சுடச் சொல்லுறேன்னு ஆர்.டி.ஓவும் சொல்லிட்டாரு”

“எம்.எல்.ஏ கிட்ட ராசுக்கவுண்டரு பேசிட்டாப்ல. புதுசா வந்திருக்கிற இன்ஸ்பெக்டர் பொம்பளகிட்டயும் பேசியாச்சு. அதுவும் நம்ம சாதிப்புள்ளதான்”

“இதெல்லாம் நம்மளக்குள்ளயே இருக்கட்டும். நாலஞ்சு பசங்கள சுட்டுத்தள்ளுனாத்தான் அடங்குவாங்க”

“ஊருக்குள்ள கலவரமா கெடக்குது. காத்தால இருந்து உம்புள்ள எங்க போனான்?”

“ஒண்ணுஞ் சொல்லலீங்களே”

“வக்காரோளி, சொன்னா கேக்காம பறயனுக கூட சேந்து சுத்த போய்ட்டானா? சுட்டாங்கன்னா சாவுட்டும் புள்ளையே இல்லைன்னு நெனச்சுக்குறேன்”

“அய்யோ”

“புள்ளைய வளத்துன லட்சணத்துக்கு ஒப்பாரி வெக்குறியா…..கலத முண்ட”

“அளுக்குளியில நாலு பசங்க ரொம்ப ராங்கு பண்ணியிருக்கானுக கை வெச்சுட்டானுகன்னு கேஸ் போட்டு அந்த இன்ஸ்பெக்டர் அரெஸ்ட் பண்ணிடுச்சாமா”

“கடத்தூர் ஸ்டேஷன்ல வெச்சு அடிச்சதுல ஒரு பறப்பையன் டிக்கெட் வாங்கிட்டான். சாவட்டும்”

“வாங்க கவுண்டரே…ஸ்டேஷன் பக்கம் வந்திருக்காப்ல”

“கவுண்டரே உங்க பையன அரெஸ்ட் பண்ணுவமா? அவுரு இங்கே வரலை… வேற எங்கேயாச்சும் போயிருப்பாப்ல..நாங்களே தேடி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம் நீங்க போங்க”

“அன்புள்ள அம்மாவுக்கு, பறையன் சக்கிலி என்று வெறுப்பை உமிழும் அய்யனுக்கு எப்படி புரியவைப்பது என்று தெரியவில்லை. நான் தெளிவாக இருக்கிறேன். அவருக்கு ஆகாத சாதியிலேயே ஒரு பெண்ணோடு செல்கிறேன். திருமணமும் செய்துகொள்ளவிருக்கிறேன்………………”

– ஜூன் 30, 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *