கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 2, 2022
பார்வையிட்டோர்: 4,705 
 
 

(1968 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கிழக்கு வெளுத்தது. செங்கதிர்களால் ஒளிவீசிக்கொண்டு கதிரவன் வரவு தந்தான். அகிலம் ஜெகஜோதியாகப் பிரகாசிக்கத் தொடங்கியது. உலகம் விழித்துக் கொண்ட நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்தது நிஸ்வி ஹாஜியாரின் பங்களா. புனித ரமழான் மாதம் ஸஹர் சாப்பாட்டை முடித்துக் கொண்டு தூங்கின பங்களாவாசிகள் இன்னும் எழுந்திருக்கவில்லை.

பங்களா வாசிகள் தூங்கின நேரத்தில் விழித்துக்கொண்டு கேட்டடியில் காவல் காத்துக்கொண்டிருந்து ஒரு கூட்டம்.

அன்று நோன்பு இருபத்தேழு. புனிதத் திருநாள். நிஸ்வி ஹாஜியார் ஏழை எளியவர்களுக்கு தானதருமம் கொடுக்கப் போகிறார். இதனால்தான் ஸஹர் நேரந்தொட்டு ஹாஜியாரின் கேட்டடி வாசலில் காத்துக்கொண்டிருந்தனர் இஸ்லாமிய இரப்பர் கூட்டங்கள் – மிஸ்கீன்கள் – பிச்சைக்காரர்கள்.

நாளுக்கு நாள் பட்டினியால் வாடிய சதைப் பிடிப்பில்லாத உடல்களும், அழுக்குப் படிந்த புடைவை, சட்டை, சாரங்களும் அங்கு காட்சி தந்தன. குழந்தைகளை இடுப்பில் தூக்கிக் கொண்டிருந்த தாய்மார்கள். ஷேவ் செய்யாத முகங்களைக் கொண்ட முதியவர்கள், கிழிந்த தொப்பிகளை தலையில் போட்டுக்கொண்ட சோம்பல் இளைஞர்கள். முகம் கழுவாத பிள்ளைகள்…. இத்யாதி அழகுக்காட்சிகள் அக்கூட்டத்தில் காணக் கிடைத்தன.

ஜேம்ஸ்பொண்ட் முதலிய சண்டைப் படங்கள் வந்தால் படமாளிகைகளில் விலை குறைந்த ஆசனங்களுக்காக ஒருவர் மேல் ஒருவர் ஏறி எப்படி முக்கு கொடுப்பார்களோ அதே நிலையில் ஹாஜியாரின் பங்களா கேட்டடி வாசல் காட்சி தந்தது. சலவாத்துச் சொல்ல வேண்டிய நேரத்தில் தூஷண வார்த்தைகள் காதைத் துளைத்துக் கொண்டிருந்தன.

இந்த இரைச்சலுக்கு மத்தியில் ஹாஜியாரின் பங்களா வாசல் ‘திறக்கப்பட்டது. வெளியே கப்சிப்பென அமைதி நிலவியது. ஹாஜியாரின் அந்தரங்க வேலையாள் நௌஷாத் வெளியே வருகிறான்; கூட்டத்தை ஒரு முறை நோட்டம் விடுகிறான். பின் தொண்டையை கனைத்துக் கொண்டே “ஹாஜியார் இப்பதான் குளிச்சப் பெய்த்திருச்சிய; நீங்க எல்லாரும் கொரடாம போலின்ல வாங்கோ!”

நௌஷாத் சொன்னதுதான் தாமதம். பொருளாதாரத் துறையில் தனக்கென தனியிடம் வைத்த வியாபாரச் சமுதாயம், அறிவியலில் முன்னணியில் நிற்கவேண்டிய சமுதாயம், அறிவற்ற சிந்தனையற்ற உயிருள்ள மிருகங்களைப்போல் வரிசையின் முன்னே நிற்க, ஆண், பெண் பேதமின்றி போட்டி போட்டுக்கொண்டனர். குழந்தைகளின் அழுகுரலும் அடா, புடா அநாகரீக வார்த்தைகளும் காதைப் பிளந்தன. இத்திருக்காட்சியே நௌஷாத்துக்கு கோபத்தை மூட்டிவிட்டது.

கொதிக்கும் எண்ணெயில் போட்ட பப்படம் போல் பலத்த குரலில் “அடே நாசமாகப் போக… ஆம்புள பொம்புள இப்படி பெரண்டு கொள்ளிய; ஆம்பிள அந்த கேட்டாலையும் பொம்புள இந்த கேட்டாலையும் வாங்கோ” என பொரிந்து தள்ளினான்.

ஆண்கள் எல்லாரும் அமைதியாக வரிசையில் போய் நின்றனர். பெண்களின் இரைச்சல் அடங்கினபாடு இல்லை. அவர்கள் கேட்டடிச் சண்டை பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்பொழுதுதான் ஹாஜியார் வந்து சாய்வு நாற்காலியில் அமர்கிறார். – ஐந்தே முக்கால் அடி உயரம், விட்டமின் வர்க்கங்களே உண்டு தடித்துப் பெறுத்த கட்டுமஸ்தான பெஸர் உடம்பு. ஐந்து பேருக்கு இருக்க வேண்டிய சதையை அவர் ஒருவரே சுமந்து கொண்டு வந்து அமர்ந்த காட்சி அங்கே தனியழகைக் கொடுத்தது.

ஹாஜியாரின் அடுத்த பக்கத்தில் அவரின் திருவருள் செல்வர், எதிர்கால ஹாஜியார் நிஸ்வி பௌஸ் அமர்ந்து கொள்கின்றான். அவர்கள் இருவரின் பக்கத்தே ஹாஜியாரின் செல்லச் சீமாட்டி ஹாஜும்மா இரண்டு பெரிய தட்டுகளைக் கொண்டு வந்து வைக்கிறார். பல் அவைகளில் இருபத்தைந்து, ஐம்பது ஒரு ரூபா நாணயங்களும் இரண்டு ரூபா தாள்களும் நிரம்பியிருந்தன. இவைகளைக் கண்டு கியூ வரிசையில் ஊர் கீழே விழுந்தாலும் கேட்க கூடிய விதமாக நிசப்தம் நிலவியது.

இது ஹாஜியாரும், அவர் திருவருட் செல்வரும் கொடை கொடுக்க துவங்கிவிட்டனர். வயதானவர்களுக்கு இரண்டு ரூபாவும், சிறுவர்களுக்கு ஐம்பது சதமும், குழந்தைகளுக்கு இருபத்தைந்து சதமுமாக தமது இன்கம்டக்ஸ் கணக்கை முறைப்படி கொடுத்துக் கொண்டிருந்தனர்.

மூன்று மணி நேரம் முழுமூச்சுடன் ஹாஜியாரும் அவரைச் சார்ந்தோரும் தமது வேலைகளை திறம்பட செய்து முடித்தனர். இஸ்லாமிய சமுதாயத்தில் பிச்சைக்காரக் கூட்டத்தை வளர்க்கிறோம். இந்த எண்ணம் அவர்களுக்கு தோன்றவில்லை. பதிலாக ஊர் புகழ பெரிய கொடை கொடுத்துவிட்டோம் என்ற மமதையும், பெருமையும் அவர்களின் நெஞ்சை உயர்த்துகிறது.

நாம் இந்நேரம் “ஹாஜியார்” என அமைதியான குரல் வாசலிலே கேட்கிறது. ஆயாசத்துடன் பருத்த தொந்தியை தூக்கிக் கொண்டு சாய்வு நாற்காலியில் இருந்து எழுந்த ஹாஜியார் திரும்பிப் பார்க்கின்றார். பார்த்தால்….. முஸாபர் போல ஒருவரும், வாலிப வயதை தாண்டிக் கொண்டிருக்கும் பெண்ணும் சிறு பிள்ளையொன்றைக் கையில் பிடித்தபடி கேள்விக் குறிபோல் வளைந்து நிற்கின்றனர்.

இவர்களைக் கண்ட ஹாஜியார் வெறுப்புடன் “இது எனத்தியன்… இப்பதானே எல்லாத்தையும் வாரிக்கொடுத்த, நேரத்தோட வர ஏலாதோ? என்கிறார்.

“இல்ல ஹாஜியார், நேரத்தோட தான் வந்த அவங்க எல்லாம் போகக் காட்டியும் தான் நிண்ட” என்கிறார் முஸாபிர்.

“அப்படியோ அப்படி எனத்தியன் ஒங்களுக்கு மட்டும் விஷேசம்?” என ஞானத்துடன் கேட்கின்றார்.

இவ்வார்த்தை முஸாபிருக்கு ஒரு மாதிரியிருந்தது. எனினும் அடக்கத்துடன் “கொமறு காரியமாக ஒங்களிடம் உதவி தேடி வந்தோம்.

நாங்க கஷ்டப்பட்டாலும் எங்கட மகள் சரி நல்லா இருச்ச வேணும் எலியோ? அதுக்காகத்தான் நல்ல ஒரு எடத்தில கலியாணம் பேசின. மாப்பிள ஊட்டுல சீதனமும் வேணும் என்டிய. நல்ல எசவு. ஆனா எங்கட மகளுக்கு பொடவ எடுத்துக் கொடுக்க சரி வசதியில்ல. இந்த நெலமையில் எங்களுக்கு கடன் தரவும் நாதியில்ல. இப்படி இருக்கச் செல்லத்தான் அடுத்தவூட்டு ஹாமிது நாநா ஒங்கலப்பத்தி செல்லி இந்த காயிதத்த தந்த” எனக் கூறியவாறே தன் சட்டைப் பையில் இருந்த கடிதத்தை ஹாஜியார் வசம் கொடுக்கிறார்.

கடிதத்தை வாசித்த ஹாஜியார், “ஆமிதுக்கு வேற வேல இல்லை எலியோ. இது பாருங்கோ. இப்படி எத்தனையோ பேர் வந்து ஒப்பாரி வச்சிய; புள்ளகல கலியாணம் முடிச்சி கொடுக்க வழியில்லாட்டி பெற அசடு, சரி சரி. ஆமிது ஒரு காயிதம் அனுப்பியிருச்சிய பாவம் அவண்ட மொகத்துக்காக இந்தாங்கோ.” பத்து ரூபா நோட் ஒன்றை நீட்டுகின்றார்.

முஸாபிருக்கு தன்மானம் தலைதூக்குகிறது. ஏழைகளின் சொல் அம்பலம் ஏறாது என்பது அவருக்கு தெரியும். கண்ணீராக வெளிப் படுத்தினார். இரண்டு மூன்று முறை ஹாஜியாரையும் பத்து ரூபா நோட்டையும் பார்த்தார். நீண்ட பெருமூச்சுக்கிடையே பத்து ரூபா நோட்டைப் பெற்றுக் கொள்ளாமல் தன் பிள்ளையைக் கையில் பிடித்தபடி மனைவியுடன் வெளியேறுகிறார்.

ஹாஜியாருக்கு பெரிய அவமானம். அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் “பிச்ச வேங்க வந்தவண்ட திமிர், இவன் ஏண்ட மாமாவோ, மச்சானோ, அள்ளிக் கொடுக்க… என அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே அழகிய பென்ஸ் கார் ஒன்றும், பெரிய எம்.ஜி. காரொன்றும் வந்து வாசலில் நிற்கவும் சரியாக இருந்தது.

ஹாஜியாரின் கோபமெல்லாம் எங்கே பறந்தது என்று சொல்ல முடியவில்லை. வாயெல்லாம் பல்லாக சிங்களத்தினால் ஆயுபோவான் கூறி வரவேற்கிறார். தீராத மனச்சுமையுடன் வெளியேறிக்கொண்டிருந்த முஸாபிர் “யா…… அல்லாஹ்!” – என கையை ஏந்துகிறார். இவர்களுக்கு நல்லெண்ணத்தைக் கொடு!’ என அவர் மனம் வேண்டுகிறது. கண்களில் ஆறாக கண்ணீர் ஓடுகிறது. பாது

அடுத்த நாள். “கொடை வள்ளலின் கொடை’ என்ற தலைப்பில் வந்த செய்தி இவ்வருடம் ஒரு இலட்சம் ரூபா செலவுடன் நிர்மாணிக்கப்பட இருக்கும் வெசாக் பந்தலுக்கு பிரபல வணிகரும், கொடை வள்ளலுமான நிஸ்வி ஹாஜியார் அவர்கள் பத்தாயிரம் நன்கொடையாக வழங்கியுள்ளார். இவரின் சுயநலமில்லாத இச்சேவையை பௌத்த, முஸ்லிம் மக்கள் எல்லாரும் புகழ்கின்றனர்.

இச்செய்தி தினசரிகளில் – பெரிய எழுத்தில் – முதலாம் பக்கத்தில் வெளிவந்திருந்தது.

– இன்ஸான் – 1968.டிசம்பர்.22, மூன்றாம் தலாக் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மே 2007, முஸ்லிம் சமுதாய மறுமலர்ச்சி இயக்கம், பாணந்துறை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *