கொடுத்து வைக்காதவர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 1,838 
 

சிலரைப் பற்றிக் குறிப்பிடுகிறபோது, அவனுக் கென்ன! கொடுத்து வைத்தவன்” என்று சொல்வார்கள். திருவாளர் நமசிவாயம் அவர்கள் அவ்வாறு குறிப்பிடப்பட வேண்டிய அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவர் அல்லர். “பாவம், கொடுத்து வைக்காதவர்” என்று தான் அவரை அறிந்தவர்கள் கூறுவார்கள்.

திருவாளர் நமசிவாயம் தமாஷாகச் சொல்லுவார்: “நம்ம ஜாதக விசேஷம் அப்படி. ஐயாவாள் ஒரு நிமிஷம் முந்திப் பிறந்திருந்தால் பெரிய சீமான் பேரனாக விளங்கியிருப்பேன். சொத்தும் சுகமும் சகல பாக்கியங்களும் பிறக்கும் போதே கிடைத்திருக்கும். எங்க ஊரிலேயே அப்படிப்பட்டவன், கொடுத்து வைத்தவன், ஒருவன் இருக்கிறான். நான் பிறந்தி அதே நாளில், ஆனால் நான் பிறந்த நேரத்துக்கு ஒரு நிமிஷம் முன்னாலே பிறந்தவன் அவன். அது தான் தொலைகிறது! நான் ஒரு நிமிஷம் தாமதித்தாவது பிறந்திருக்கப் படாதோ? அப்படி அவதரித்திருந்தால் நான் ஒரு சினிமா நட்சத்திரம் ஆகியிருப் பேன். புகழும் பணமும் ஆடம்பர வாழ்வும் எனக்கு வந்து சேர்ந்திருக்கும். அதுக்கும் நான் கொடுத்து வைக்கவில்லை!”

இதைக் கூறிவிட்டு அவர் அவுட்டுச் சிரிப்பு உதிர்ப்பார். அது விரக்தியும் வேதனையும் கலந்த சிரிப்பா? வாழ்க்கையின் அர்த்தமற்ற தன்மையையும், மனித நாடகங்களையும் வேடிக்கையாகக் கண்டு ரசிக்கக் கற்றுக் கொண்டவனின் நையாண்டிச்சிரிப்பா? அளவிட்டுச் சொல்ல முடியாதுதான்.

திருவாளர் நமசிவாயம் பிறப்பில் தான் “கொடுத்து வைக்காதவர்” ஆகிவிட்டார் என்றால், வளர்ப்பு நிலையிலும் அவர் பிரமாத வாய்ப்புகளைப் பெற்றுவிட வாழ்க்கை உதவவில்லை.

அவர் பிறந்த சில மாதங்களிலேயே தாய் “வாயைப் பிளந்து விட்டாள். அவள் விதி அப்படி! அதற்கு நமச்சிவாயம் என்ன செய்ய முடியும்? ஆனால், உறவினரும் ஊராரும் குழந்தை யைத் தான் பழித்தார்கள். “ஆக்கம் கெட்டது! பெத்தவளையே தூக்கித் தின்னுட்டு நிற்குது!” என்றார்கள்.

அவர் தந்தை சுமாரான வாழ்க்கை வசதிகளைப் பெற்றிருந்தார். அவருடைய கஷ்ட காலமும் அவர் வாங்கிய கடன்களும் இருந்த சொத்துக்களை இழக்கச் செய்தன. அதற்கும் பையனின் துரதிர்ஷ்டம் தான் காரணம் என்று பலரும் பேசினார்கள்.

இந்த விதமாகப் பல சந்தர்ப்பங்களிலும், பலரும் சொல்லிச் சொல்லி, நமசிவாயத்துக்கே அவருடைய அதிர்ஷ்டம் கெட்ட தனத்தில் ஒரு நம்பிக்கையும் பற்றுதலுட் படிந்து விட்டன. அவர் வாழ்வில் அவ்வப்போது குறுக்கிட்ட நிகழ்ச்சிகளும் அவருடைய அபிப்பிராயத்தை வலுப்படுத்தின.

“பணம் கட்டிப் பரீட்சை” என்றும் “சர்க்கார் பரீட்சை” என்றும் முன்னோர்கள் பெருமையாகக் குறிப்பிட்டு வந்த எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சையில் நிச்சயம் பாஸ் செய்து விடுவோம் என்ற நம்பிக்கை நமசிவாயத்துக்கு இருந்தது. எல்லாப் பாடங்களையும் “ஒரு கை பார்த்து”, கேள்விகளுக்கு உரிய பதில்களை “வெளுத்துக் கட்டியிருந்தார். ஆனாலும், பரீட்சை யில் தேறியவர்களின் பட்டியலில் அவர் எண் இல்லாமல் போய்விட்டது.

அதற்காக நமச்சிவாயம் வருத்தப்படவில்லை. “கொடுத்து வைத்தது அவ்வளவு தான்!” என்று அலட்சியமாக ஒதுக்கி விட்டார். அதிலும் தமாஷ் பண்ணுவதில் உற்சாகம் கண்டார்.

“பரீட்சைகள் மூலம் எவருடைய திறமையையும் எடை போட்டு விட முடியாது. பரீட்சையில் தேறியவர்கள் எல்லோரும் அற்புதப் புத்திசாலிகள் என்றும், பெயிலாகிறவர்கள் சுத்த மண்டூகங்கள் என்றும் எண்ணினால், அது அறியாமைதான். பரீட்சை விடைத் தாள்களைத் திருத்தி மார்க்குக் கொடுக்கிற அண்ணாத்தைகள் எல்லோருமே சரியாக எல்லாப் பேப்பர் களையும் வாசித்து நியாயமான மார்க்குகள் கொடுப்பதில் ஆர்வமும் அக்கறையும் காட்டுவதில்லை. எட்டாவது வகுப்பு படிக்கிற போது எனக்கு ஓர் அனுபவம் ஏற்பட்டது. ஒரு பரீட்சையில் நான் மிகவும் சரியான விடைகளையே எழுதியிருந்தேன். எப்பவுமே நான் பிரைட் ஸ்டுடன்ட் தான். ஆனால், எனக்கு இருபத்து மூன்று மார்க்குகள் தாமே கொடுக்கப்பட்டிருந்தன. மண்டுவான ஒரு பையன், தப்பும் தவறுமான விடைகள் எழுதியிருந்தவன், எழுபது மார்க்குகள் வாங்கியிருந்தான். பல மாணவர்களுக்கும் இது அதிசயமாகவே பட்டது. அதனால் ஸார்வாளிடமே இரண்டு பேப்பர்களையும் காட்டி, இது எப்படி ஏன் என்று கேட்டார்கள். அவர் என் தாளில் உள்ள பதில்களைப் படித்துப் பார்த்தார். அடடே, ரொம்பவும் சரியாக இருக்குதே என்றார். பிறகு, மறுபடி கவனித்து மார்க்குகள் கொடுத்தார். எனக்கு எண்பத்தைந்து மார்க்கு வந்தது. இன்னொரு பையனுக்கு, பதினெட்டு மார்க்குக் கூடக் கிடைக்கவில்லை. அந்த ஸார் தமது பாலிசியை பெருமையாக விவரித்தார் – நான் பேப்பர் திருத்துகிற விதமே தனி, விடைத் தாள்களின் கட்டை எடுப்பேன். முதலில் இருக்கிற தாளுக்கு பாஸ் மார்க் கொடுப்பேன். அடுத்ததுக்குப் பெயில் மார்க் தான். இப்படி மாறி மாறிக் கொடுப்பேன். நமசிவாயம் பேப்பர் பெயில் மார்க் பெற வேண்டிய இடத்தில் இருந்திருக்கிறது! அது தான் விஷயம்” என்றார். இந்த லெட்சணத்தில் தான் இருக்கும் ஒவ்வொருவர் பாலிசியும்” என்று நமசிவாயம் கூறுவார்.

“பார்க்கப் போனால், கடவுள்கூட அந்த வாத்தியார் மாதிரிதான் நடந்து வருகிறார். நல்லவங்க, திறமை உள்ளவங்க, தகுதி உடையவங்க கஷ்டப்படுகிறாங்க. வாழ்க்கை வசதிகள் அவர்களுக்குக் கிடைப்பதேயில்லை. ஆனால், ஏமாற்றுகிற வர்கள், அயோக்கியர்கள், மனச்சாட்சி இல்லாதவங்க சகல வசதிகளையும் பெற முடிகிறது. இதெல்லாம் கடவுள் சித்தம் என்றால், கடவுளும் கண்மூடித்தனமாக மக்களின் வாழ்க்கையை மதிப்பிட்டு “மார்க்குக் கொடுக்கிறார்” என்று தானே சொல்லவேண்டும்?” இப்படியும் பேசுவார் நமசிவாயம்.

மனிதரின், உயிர்க்குலத்தின், உலகத்தின் வளர்ச்சி வீழ்ச்சி களைப் பாதிக்கிற காலத்தைக் கண்காணிக்கும் உபாத்தியாயர் என்று உருவகப்படுத்தினால், அந்த “வாத்தியார்” திருவாளர் நமசிவாயம் அவர்களின் வாழ்க்கைத் தாளில் தாறுமாறான மதிப்பு எண்களையே சிதறி வைத்தார் என்று சொல்ல வேண்டும்.

நமசிவாயத்துக்குத் திருமணம் செய்து வைப்பதற்கு முன்னரே அவருடைய தந்தை காலமாகிவிட்டார். நமசிவாயம் பிழைப்புக்காக என்னென்னவோ வேலைகள் பார்த்து, எங்கெங்கோ திரிந்து, எப்படியோ ஒரு தினுசாக நாளோட்டி வந்தார். அவருடைய ஊர் பெரியவர் ஒருவர், அவர் மீது அனுதாபம் கொண்டோ, அல்லது பெண்ணைப் பெற்று வளர்த்துப் பெரியவளாக்கிய பிறகு எவன் கையிலாவது பிடித்துக் கொடுத்துத் தங்கள் பொறுப்பைக் கழித்துவிடப் பெரிதம் முயன்றும் வெற்றி பெறாது தவித்த பெற்றோர் தந்த கமிஷனைப் பெற்றுக் கொண்டோ, லட்சுமி என்கிற பெண்ணை நமசிவாயத்துக்கு வாழ்க்கைத் துணைவி ஆக்கினார்.

இல்லற வாழ்வின் இனிமைகளை முழுமையாக அனுபவிக் கவும் நமசிவாயத்துக்குக் “கொடுத்து வைக்கவில்லை” லட்சுமி கொடிய நோயினால் பீடிக்கப்பட்டாள். அந்த எலும்புருக்கி நோய்க்கே பலியானாள்.

அதன் பிறகு நமசிவாயம் கல்யாணத்தை நாடவில்லை; குடும்ப வாழ்வுக்கு ஆசைப்படவுமில்லை. சமூக சேவை, பொது நலப் பணி கடுமையான உழைப்பு என்று பல வழி களிலும் தன் கவனத்தையும் காலத்தையும் செலவிடலானார். அதில் அவருக்குப் பணம் கிடைக்கவில்லை. ஓரளவு பெயர் கிடைத்தது. அவருக்கு அன்பர்களும் வியப்பர்களும் வந்து சேர்ந்தார்கள்.

“நமசிவாயம் அவர்களின் அன்பு உள்ளத்தை, ஆற்றலை, உழைப்பை, தன்னலமற்ற சேவையை – பொதுவாக, அவரது பெருமையை, மதிப்பை – நம்மவர்கள் நன்றாக உணரவில்லை. ஊம். அவருக்குக் கொடுத்து வைத்தது இவ்வளவுதான் அவர் மட்டும் அமெரிக்காவில், அல்லது ஐரோப்பிய நாடு எதிலாவது பிறந்திருந்தால், மிகவும் ஏற்றிப் போற்றப்பட்டு மிகுந்த கெளரவ நிலைக்கு உயர்த்தப் பட்டிருப்பார்” என்று அவர்கள் சொல்வது வழக்கம்.

பிறப்பு, வாழ்வு இவைகளிலே அவருக்குச் சீரும் சிறப்பும் கொடுக்காத காலம் மரணத்திலாவது பரிகாரம் செய்ததா? அதுவும் இல்லை.

முக்கியமான சமூகத் திருப்பணி ஒன்றின் காரணமாக திருவாளர் நமசிவாயம் தமது மாவட்டத்தை விடுத்து பட்டணம் போகத் திட்டமிட்டார். இன்று போகலாம், நாளைப் போகலாம் என்று காலத்தை ஏலத்தில் விட்டு நாள் கழித்தார். பிறகு ஒரு நாள் துணிந்து ரயிலேறிவிட்டார்.

அங்கும் காலம் சதி செய்துவிட்டது. “நேற்றே கிளம்பி யிருக்கணும். போக முடியலே. நாளைக்கு என்று இன்னும் ஒத்திப் போடுவது சரியல்ல. இன்றே போய்விட வேண்டியது தான்” என்று சொல்லி யாத்திரை கிளம்பினாரே நமசிவாயம், அவர் தமாஷ் பண்ணி மகிழ்ந்த ஜாதக விசேஷம் இப்பொழுது விஷமத்தனமாக விளையாடியது! ஒரு நாள் முந்தியோ, ஒருநாள் தாமதித்தோ நேராத, கோர விபத்து அன்றுப் பார்த்து ரயில் பாலத்தில் விளையாடி, வண்டிகளைக் கவிழ்த்து, பலரைச் சாகடித்தது. செத்தவர்களில் நமசிவாயமும் ஒருவர்.

அவர் உடல் நசுங்கிச் சிதைந்து, “ஆளே அடையாளம் தெரியாதபடி மாறிப்” போயிருந்தது.

“பாவம், நல்ல மனிதருக்கு நல்ல சாவு கொடுத்து வைக்கலியே! என்று அவரை அறிந்திருந்த அனைவரும் அனுதாபப்பட்டார்கள்.

திருவாளர் நமசிவாயம் வளர்ந்து, வாழ்ந்து, பணி பல புரிந்து வந்த நகரத்தில் அவருக்காக – அவர் நினைவை கெளரவிப்பதற்காக – அவருடைய நண்பர்கள் அனுதாபக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்கள். அநேக பிரசங்கிகள் பங்கு கொள்வதாக இருந்தது. அதற்கென விளம்பரங்கள், முன்னேற் பாடுகள் எல்லாம் ஆர்வத்தோடு செய்யப்பட்டன.

அன்று மாலைதான் இரங்கல் கூட்டம்.

அது பற்றியும், பேச்சாளர்கள் நிகழ்த்தக் கூடிய நமசிவாயப் புகழுரைகள் குறித்தும், அவருடைய வரலாற்றையும் பத்திரிகை களில் வெளியிடுவதற்குச் சிலர் தீவிர முயற்சிகள் செய்தார்கள்.

ஆனால், பாருங்கள் –

மனிதர்கள் தீவிரமாகத் திட்டம் தீட்டுகிறார்கள்; காலம் குறும்புத்தனமாக அல்லது குரூரமாக, அதைச் சிதைத்து விடுகிறது!

நமசிவாயம் விஷயமும் அப்படித்தான் ஆயிற்று!

அன்று அதிகாலையில், யாருமே எதிர்பார்த்திராத விதத்தில், பெரும் சோகம் நாடெங்கும் கவிழ்ந்து கொண்டது. பெரும் தலைவர் ஒருவர் திடீரென்று மரணமடைந்தார். அதனால் எல்லா நிகழ்ச்சிகளும் நின்று போயின. அத்துக்கத்தைக் கொண்டாடும் முறையில், முன்னறிவிப்பில்லாமலே, பல துறைகளிலும் சகலவிதமான கொண்டாட்ட ஏற்பாடுகளும் ரத்து செய்யப் பட்டன. திரு. நமசிவாயம் அவர்களின் நினைவுக்காகத் திட்ட மிடப் பெற்றிருந்த நிகழ்ச்சி மட்டும் விதி விலக்கு ஆகிவிட இயலுமா என்ன?

“பாவம், நமசிவாயம்! அவருக்குக் கொடுத்து வைக்க வில்லை!” என்றுதான் இரக்கப்பட முடிந்தது அவருடைய நண்பர்களால்!

(“அமுத சுரபி” 1966)

– வல்லிக்கண்ணன் கதைகள், ராஜராஜன் பதிப்பகம், 2000 – நன்றி: http://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email

பகடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

சதிவிரதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *