வாழ விரும்பியவள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 2,222 
 

“மாதவிக் குட்டி பார்ப்பதற்கு மான்குட்டி மாதிரி இருக்கிறாள். பூச்செண்டு போல் குளுமையாய், வாணமயமாயத திகழ்கிறாள். அதெல்லாம் சரிதானப்யா. அவள் மோகனப் புன்னகையையும், காந்தக் கண்ணொளியையும், கண்டு நீர் தப்பித் தவறி அசட்டுத்தனமாக நடந்து கொள்ளாதீர். உண்மையில் அவள் நெருப்பு ஐயா, சுட்டெரிக்கும் நெருப்பு!”

இப்படித்தான் எச்சரிப்பார் கிளார்க் பரமசிவம். சக குமாஸ்தாக்களில் எவராவது ஒருவர் அவரிடம் மாதவியைப் பற்றி அவ்வப்போது பேச்செடுப்பார்கள். அல்லது, அவரைக் கண்டு பேச வருகிறவர்களில் யாரேனும் மாதவிக் குட்டியின் “நிலவு செய்யும் முகத்தையும், காண்போர் நெஞ்சில் குறுகுறுப்பு ஏற்படுத்தும் விழிகளையும், நினைவில் நிலையாகப் பதிந்து விடுகிற முறுவலையும் பார்த்துவிட்டு, அவள் நினைவினால் அலைப்புண்டு, அப்புறம் பரமசிவத்திடம் அவளைப் பற்றிச் சுவாரஸ்யமாகப் பேச ஆரம்பிப்பார்கள். அப்போதெல்லாம் அவர் தனி ரகச் சிரிப்பை முகத்திலே படரவிட்டுத் தனது கருத்தை அழுத்தமாக எடுத்துச் சொல்வார்.

பரமசிவம் பணி புரிந்த அலுவலகத்தில் பல பிரிவுகள். ஒவ்வொரு பிரிவிலும் நாலைந்து ஆண்களோடு ஒன்று அல்லது இரண்டு பெண்களும் குமாஸ்தாக்களாக வேலை செய்து வந்தார்கள். அவர்கள் எல்லோருமே அழகிகள் என்று சொல்லிவிட முடியாது, ஆனால் அனைவரும் ஒய்யாரமாக அழகு படுத்திக் கொள்ளத் தெரிந்தவர்கள்.

பெண் குமாஸ்தாக்கள் வேலை பார்க்கிற இடத்தில் சரிநிகர் சமானமாக, ஆண்களும் வேலை செய்ய வேண்டியிருந்ததன் மூலம வேலையின் தரம் எப்படி இருந்தது; ஆண்களின் உழைப்புத் திறம் எத்திசையில் எவ்வாறு வேலை செய்தது; பெண் சக்தி யார் யாரை எந்த எந்த விதமாகப் பாதித்து வந்தது என்பன போன்ற விவரங்கள் யாவராலும் சேகரிக்கப்பட வில்லை. ஆயினும் ஓர் உண்மை எளிதில் பளிச்சிடத்தான் செய்தது.

பெண்கள் மேனி மினுக்கிகளாகவும், அலங்கார வல்லியரா கவும், நாளுக்கொரு தினுசுப் புடவை கட்டியும், சதா வாசன அலைகளைப் பரப்பியும், இரண்டு மூன்று பேர்களாகச் சேர்ந்து அர்த்தமில்லாமல் கிளுகிளுத்துச் சிரித்துக் கொண்டும் ஆபீசுக்கு வந்தார்கள். அவர்களது புறத் தோற்றத்தில் காணப்பட்ட அழகும் சுத்தமும் அவர்கள் செய்த வேலைகளில் இருக்குமா – இருந்ததா – என்று உறுதியாக யாரே சொல்ல முடியும்?

அவர்கள் பார்வையில் பட்டும், அவர்களுக்கு அருகே உட்கார்ந்தும், அவர்கள் பார்க்கட்டுமே என்பதற்காகவும் ஏதோ முக்கிய காரியம் இருப்பதுபோல் அங்கும் இங்குமாக, ஒர் அறையிலிருந்து இன்னோர் அறைக்குமாய் சும்மா சும்மா போய் வந்து கடமை ஆற்றிய ஆண்குமாஸ்தாக்கள அசமஞ்சங்களா கவும், பித்துக் குளிகளாகவும், ஏழை எளியவர்கள் போலவும், “கேவலம் குமாஸ்தாக்கள்” ஆகவும் காட்சி அளிக்கலாமா? அப்படிக் காட்சிதரத்தான் இயலுமா அவர்களால்?

ஆகவே, ஒவ்வொருவரும் “ஜம்” எனறு “ஜோர்” ஆகவும், “டீக்” ஆகவும், “டிப்டாப்” ஆகவும் ஆடை அலங்காரம் செய்து கொண்டு வந்தார்கள். சிலர், சினிமாவில், நடிக்க வேண்டிய வர்கள் தப்பித் தவறி, சாரமற்ற வேலைகள் நடைபெறும் அலுவலகத்தினுள் அடி எடுத்து வைத்து விட்டவர் போல் தோன்றினார்கள்.

இதனால் என்ன ஆயிற்று என்று கேட்டாலோ, காரியால யங்கள் கண்ணுக்கு இனிய காட்சிகளாகத் தோற்றம் காட்டலா யின. ஆபீஸ் கட்டிடங்களுக்கே உரித்தான அழுமூஞ்சித் தோற்றமும் ஒருவித விசேஷ நாற்றமும் இருந்த இடம் தெரியாமல் ஓடி விட்டன.

சுமார் அழகு பெற்ற நாரீமணிகள் சஞ்சரித்த பகுதிகளின் நிலையே இது வென்றால், மாதவிக்குட்டி போன்ற அழகான பெண்கள் வேலை செய்யும் பிரிவுகள் எப்படி இருக்கும் என்று தெரியாதா என்ன!

மாதவிக்குட்டி நல்ல அழகி. இவ்வளவு சொன்னாலே போதும். அவள் மல்கோவா மாம்பழம் போல் இருந்தாள் என்ற தன்மையில் வர்ணிக்க ஆரம்பித்துப் பழக்கடைக்கும் – அவள் கன்னங்களில் ரோஜாப்பூ சிரிக்கும், கண்களில் கருங்குவளை மின்னும் என்னும் தினுசில் தொடங்கிப் பூக்கடைக்கும் – அவள் மேனி மெருகில் பாதாம் அல்வாவைக் காணமுடியும், சரும மென்மையில் வெண்ணெய் மினுமினுக்கும், அவள் குரலில் குலோப் ஜான் ஊறிக் கிடக்கும் ஜீரா இழையும் என்றெல்லாம் விவரித்து மிட்டாய்க் கடைக்கும் – விளம்பரம் செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை தான்.

மாதவிக் குட்டி வெறுமனே பார்த்தாலும் போதும். எதிரே நிற்பவன் குற்றாலத்தின் குளுகுளு சாரலில் சுக உலா கிளம்பியவன் போல் ஆகி விடுவான். ஆனால், அவள் சுமமா பார்க்க மாட்டாளே! மை பூசப்பட்டிருக்கிறதோ இல்லையோ எனும் ஐயத்தைத் தூண்டும்படி ஒரு கருமை வரையிட்ட மாவடு வகிர் அன்ன” நெடுங்கண்கள் சுடரிட, இதழ்களில் சிறு நகை தவழ, அவள் “என்ன விஷயம் “என்ன விஷயம்?” என்று ஆர்வத்தோடு கேட்பவள் போல் பார்வை எறிவாள். அப்போது குற்றாலம் அருவியில் குளிக்கிற அற்புத இனிமை அல்லவா பிறக்கும்!

மாதவி சகஜமாகச் சிரித்துப் பேசும் சுபாவம் உடையவள். புதிதாக அறிமுகப்படுத்தப் பெறுகிற போது கூட, “ரொம்ப நாள் பார்த்துப் பழகியவர்கள் போல் முகம் நிறைந்த சிரிப்பு வழங்குவாள். வெகு விரைவிலேயே தாராளமாகப் பேச்சுக் கொடுத்து, பேச்சு வாங்க ஆரம்பித்து விடுவாள். அவள் முன்னால் நின்று உரையாடுவதே இனிய அனுபவமாக, சுசிருசியான குளிர் பானத்தைச் சுவைத்துப் பருகுவது போன்ற இன்பமாக அமையும்.

அந்த இன்பத்தை இழக்க மனம் இல்லாதவர்கள் தான் அவ் அலுவலகத்தில் மிகுதியாக இருந்தனர். பொதுவாகவே அங்குள்ளவர்களுக்கு அதிகமான வேலை கிடையாது! பத்தரை மணிமுதல் மாலை ஐந்து மணிவரை ஆபீஸ் நேரம்; நடுவில் ஒரு மணி நேரம் இடைவேளை என்ற திட்டம் இருந்தது என்னவோ உண்மை தான், ஆனால் ஒவ்வொருவரும் இடைக்கிடையே “ஓய்வு நேரம்” தேடிக் கொள்ளத் தயங்கவே இல்லை. சிற்றுண்டி விடுதியில் சிறிது நேரத்தைப் போக்குவார்கள். பெட்டிக்கடை அருகில் நின்று சிகரெட் பிடிப்பார்கள். நண்பரைக் கண்டு பேசச் செல்வது போல் ஒவ்வோர் அறையினுள்ளும் புகுந்து அங்குள்ள பெண்கள் முன்னே தங்கள் உடல் அழகையும், ஆடைப் பகட்டையும், அறிவுப் பிரகாசத்தையும் வெளிச்ச மிடுவதில் உற்சாகம் காட்டுவார்கள்.

பரமசிவத்திடம் சந்தேகத் தெளிவு பெற வருகிறவர்கள் போல் எட்டிப் பார்க்கிறவர்களும், “உங்களைப் பார்த்துப் போகலாமென்று வந்தேன்” என்று கூறிக் கொண்டே வருகிறவர்களும், உண்மையில் மாதவி எனும் சுடரினால் கவரப்படுகிற மனித விட்டில்கள் தாம் என்பதைப் பரமசிவமே நன்கு அறிவார். மாதவிக்கும் ஆண்களின் போக்கைப்புரிந்து கொள்ளத் தெரியாதா என்ன?

அவளுடைய போக்கை தவறாகப் புரிந்துகொண்ட ஆண்கள் அவள் மனம் தங்களிடம் நிலைபெற்று விட்டது என்றே எண் ணினார்கள். ஒவ்வொருவரும் தானே மாதவியின் பிரியத்துக்கு இலக்கானவர் என்று கருதியது மனித சுபாவத்தை எடுத்துக் காட்ட உதவியது.

ரகுநாதன் ஒரு நாள் டிபன் சாப்பிட்டு விட்டு வரும் போது தன் வாயில் ஒரு பீடாவும் கையில் ஒரு பீடாவுமாக வந்தான். உதடுகள் சிவக்க, வாய் நறுமணம் பரப்ப, முகம் மலர வந்தவனைச் சிரிக்கும் விழிகளால் வரவேற்றாள் மாதவி. குறுநகை விருந்து தந்தாள்.

“உங்களுக்குப் பீடா வேண்டுமா மாதவி?” என்று கேட்டான் ரகுநாதன்.

“கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறேன்?” என்று கேள்வியில் பதிலைப் பொதிந்து கொடுத்தாள் அவள்.

அவள் வாங்கிக் கொள்வாளோ மறுத்து விடுவாளோ என்ற சலன சித்தத்தோடு அதிகப்படியான பீடா வாங்கி வந்தவன் இப்பொழுது ஆனந்தம் அடைந்தான். இதோ!” என்று கையை நீட்டினான்.

தந்தத்தினால் கலை அழகோடு உருவாக்கப்பட்டன போன்ற மெல்லிய விரல்கள் முன் வந்து, பூவிதழ்கள் போல் குவிந்து, பீடாவை எடுத்ததை அவன் ரசித்தான். அவள் கைமேலே சென்று, செவ்விய உதடுகளுக் கிடையே அதைத் திணித்ததை யும், கண்கள் சுழன்றதையும், முகத்தின் மாறுதல்களையும் ஆசைக் கண்களால் அள்ளி விழுங்கியவாறே நின்றான் அவன். அவள் கண்களில் ஒளிர்ந்த தனிச்சுடர் அவனுக்காகவே பிறந்தது அல்லவோ!

அவன் உள்ளம் கிளுகிளுத்தது. “மாதவிக்கு என் மீது ஆசை தான். இதில் சந்தேகமேயில்லை” என்று உறுதியாக நம்பினான் அவன்.

“உனக்கு விருப்பமானதை எடுத்துக் கொள்ளலாம்” என்று சொல்லி, மூடியிருந்த விரல்களை அகலத் திறந்தான் பால கிருஷ்ணன், ஒரு சமயம்.

உள்ளங்கை நிறைய மிட்டாய்கள். பளிச்சிடும் வர்ணங்கள் மினுக்கும் கண்ணாடித் தாள்களில் அடங்கிய அருமையான இனிப்புகள்!

பொன்வளை ஒன்று அழகு படுத்திய எழிலான கை முன் வந்து ஒரே ஒரு மிட்டாயை எடுத்துக் கொண்ட போது, “பொன் அவிர் மேனி மங்கை” என்பது மாதவிக்குத் தான் பொருந்தும்; தங்கம் என்றால் தங்கமே தான் என்று அவன் மனம் பேசியது.

“உனக்கு மிட்டாய் பிடிக்குமா. மாதவி?” எனப் பரிவுடன் விசாரித்தான் அவன்.

“ஓ பேஷாக!” என்று இழுத்தாள் அவள். ஒரு சொல்லை உச்சரித்தால் “இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே” என்பதை வீணான கவிப்பிதற்றல் என்று அடித்துப் பேசும் பாலகிருஷ்ணன் “கவி வாக்கில் உண்மை இல்லாமல் இல்லை” என உணர்ந்தான் இப்போது.

அவள் கண்களை ஒரு தினுசாக ஒடுக்கிக் கொண்டு, சிறுநகை பூத்து “எனக்கு சாக்லட் தான் பிடிக்கும். மில்க் சாக்லட் இருந்தால் போதும். எனக்குச் சாப்பாடே வேண்டாம்” என்று அறிவித்த போது, பாலகிருஷ்ணன் இந்த உலகத்திலேயே இல்லை!

சினிமாக்காரர்கள் சில சமயங்களில் “ட்ரீம் லீக்குவன்ஸ்”” என்று படம் பிடித்துக் காட்டுவார்களே காதலர்களின் கந்தர்வலோக சஞ்சாரம் பற்றி, அப்படிப்பட்ட ஒரு காட்சியில் – பலூன்கள் மிதக்க, புகைச் சுருள்கள் நெளிய, விசித்திரமான இலைகளும் கொடிகளும் துவள, விந்தைப் பூக்கள் சிரிக்க அற்புதமாகத் திகழும் ஒரு கனவு உலகத்தில் – மாதவியோடு அவனும் திரிவதாக மயங்கி விட்டான்.

அதன் பிறகு கேட்பானேன்? அடிக்கடி மாதவிக்கு “மில்க் சாக்லட்” கிடைத்தது. அவள் நாவில் சாக்லட் இளக இளக, அவளது உள்ளமும் தன்பால் உருகி ஓடிவருகிறது என்றே பாலகிருஷ்ணன் நம்பினான்.

இந்த விதமாக ரகுநாதனும், பால கிருஷ்ணனும், சிவப்பிரகாச மும், சொக்கலிங்கமும், மற்றும் ஒன்றிருவரும் எண்ணிக் கொண்டு. ஆகாசக் கோட்டை கட்டுகிற அல்நாஷர்களாக அலைவதைக் கண்டும் காணாதவர்போல் இருந்தார் பரமசிவம். இளிச்சவாய் சுப்பன்கள்! ஒரு நாள் சரியானபடி பாடம் படிக்கத் தான் போகிறார்கள்!” என்று அவர் மனக் குறளி சிரிக்கும்.

அந்த நாள் வரத்தான் செய்தது.

அன்று இளிச்சவாய் சுப்பர்கள் மட்டுமே பாடம் கற்றுக் கொண்டார்கள் என்றில்லை. சிரித்துப் பேசிச் சிங்காரமாய் பொழுது போக்கிய “திட சுப்பி”யும் ஒரு பாடம் கற்றுக் கொண்டாள்.

சில நாட்களில் மாலை வேளைகளில் ஆபீஸர் காரியலாயத் தில் அதிக நேரம் தங்கி விடுவது உண்டு. அவர் கிளம்பிச் சென்ற பிறகே குமாஸ்தாக்கள் வெளியேற வேண்டும். வினாகக் கால நஷ்டம் உண்டு பண்ணுகிற ஆபீஸரை ஏசியாவது அவர்கள் வேலை செய்வது போல் பம்மாத்துப் பண்ணிக் கொண்டிருப்பார்கள்.

அன்று ஆபீஸர் ஆறே கால் மணிக்குத்தான் போனார். மேஜை மீது கிடந்த “குப்பைகளை எல்லாம் அள்ளி டிராயருக்குள் திணித்து விட்டு, குமாஸ்தாக்கள் புறப்படுவதற்கு ஆறரை மணி ஆகிவிட்டது.

ஆறு ஆறேகால் மணிக்கே இருள் பரவி விடுகிற – “பகல் பொழுது குறைவாகவும் இராப் பொழுது அதிகமாகவும் உள்ள” – காலம் அது. ஆபீஸின் அறைகளுக்குள் விளக்குகள் ஒளி சிந்தி அழுது கொண்டிருந்தாலும், வராந்தா, மாடிப்படி, சில திருப்பங்கள் போன்ற இடங்களில் வெளிச்சமே இல்லை.

மாதவி வேலை செய்யும் இடம் மாடியில் இருந்தது. அவள் வேகமாக வந்து படிக்கட்டுத் திரும்பினாள். “மாதவி! உனக்காகத் தான் காத்திருக்கிறேன்” என்ற குரல் கரகரத்ததும் அவள் திடுக்கிட்டாள்; நின்றாள். அதற்குள் ஒரு கரம் அவள் கையைப் பற்றி அவளை அருகே இழுக்க முயன்றது. இடுப்பில் வளைந்து சுற்ற நீண்டது.

இன்று மில்க் சாக்லட் மட்டுமல்ல; ஹேஸல்நட் சாக்லட்டும் கொண்டு வந்திருக்கிறேன். இப்படி நாம் ஜாலியாக பீச்சுக்குப் போகலாம்…..”

பேசியது பாலகிருஷ்ணன் என்பதை முதலிலேயே புரிந்து கொண்ட மாதவியின் உடல் படபடத்தது. அவள் இதயத்தில் பதைபதைப்பு. “சீ போ!” என்று சீறினாள் அவள். அவனைத் தள்ளிவிட முரண்டினாள்.

அவன் முகம் அவள் முகம் நோக்கித் தாழ்ந்து கொண் டிருந்தது. திடுமென, “பளார்” என்று ஓர் அறை விழுந்ததும் அது அதிர்ச்சியோடு பின்வாங்கியது.

“சீ மிருகம்!” என்று தன் வெறுப்பு முழுவதையும் திரட்டி வீசிவிட்டு, அவனை வலுவுடன் ஒதுக்கித் தள்ளிய மாதவி வேகமாகப் படிகளில் இறங்கினாள்.

அப்பொழுது தான் மாடிப்படியில் ஏற அடி எடுத்து வைத்த ரகுநாதன் “ஏன் மாதவி இவ்வளவு அவசரம்?” என்று கேட்டான்.

“சீ போடா!” என்று காறித் துப்பி விட்டு ஓடலானாள் மாதவி. ரஸ்தாவை அடைந்ததும் எதிர்ப்பட்ட முதல் டாக்சியை நிறுத்தி, அதில் ஏறிக்கொண்ட பிறகு தான் அவள் பயம் சிறிது தணிந்தது. ஆயினும் உள்ளப் பதைப்பு ஒடுங்கவில்லை.

“மிருகங்கள்! வெறிபிடித்த மிருகங்கள்” என்று முணுமுணுத் தாள் அவள். தாராளமாகப் பேசிப் பழகினேன் என்பதற்காக இப்படியா நடந்து கொள்வது? சீ” என்று குமைந்து கொதித்தது அவள் உள்ளம்.

“எல்லோரும் கெட்ட எண்ணத்தோடு பழகுகிறவர்கள்தாம் என்பது உனக்கு இப்பொழுது தான் புரிகிறது. பெண் ஒருத்தி சிரித்துப் பேசினால் அதன் பின் வேறு கருத்து பதுங்கிக் கிடக்கும் என்று இவர்கள் ஏன் எண்ணவேண்டுமோ, எனக்குத் தெரியவில்லை. ஃபிரண்ட்ஸ்களாகப் பழக அவர்கள் மனம் இடம் தராது போலிருக்கு. எப்பவும் வேறு ரக நினைப்புகள் தான் போலிருக்கு.”

இந்த ரீதியில் அவள் மனம் புழுங்கிப் புகைந்தது. அவ் அலுவலகத்தில் இனி கால் பதிக்கப் போவதில்லை என்று தீர்மானித்த பிறகே அவள் உள்ளத்தில் சிறிது அமைதி படர்ந்தது.

மாதவிக்குட்டி தனது வேலையை ராஜிநாமா செய்து விட்டாள்; தாங்கள் இருக்கிற திசையை எட்டிப் பார்க்கவே மாட்டாள் என்பதை அறிந்ததும், பாலகிருஷ்ணன் வகையறா மனம் போன போக்கில் விமர்சனம் கூறுவதில் மகிழ்வுற்றனர்.

“ஏ ஒன் ஏமாற்றுக்காரி! சரியான மினுக்கி! முதல்தர பட்டர்ஃபிளை!” என்று வயிற்றெரிச்சலோடு முனகினான் ரகுநாதன்.

பாலகிருஷ்ணன் “பச்சையான வார்த்தைகளில் வசைபாடித் தன் ஆத்திரத்தைத் தணிக்க முயன்றான். “தேவடியாள், பொறுக்கி” என்றெல்லாம் அர்ச்சனை செய்தான்.

“பசப்புக்காரி. மயக்கிப் பிடுங்கித் தின்கிற வஞ்சகி” என்றே எல்லோரும் அவளைப் பற்றி முடிவு கட்டினர்.

“மாதவிக்குட்டி உங்களை எல்லாம் ஏமாற்றி விட்டாள் என்பது சரியாக இருக்கலாம். ஆனால் அவ்வாறு ஏமாற்றும்படி தூண்டியதே நீங்கள் தான்” என்று பரமசிவம் புன்முறுவலோடு சொன்னார்.

“நன்றாக இருக்கிறதே நீங்கள் சொல்வது! நாங்கள் கொடுத்ததை எல்லாம் வாங்கி மொக்கு மொக்கென்று மொக்கினாளே அந்தத் தடிச்சி! மிட்டாய் கொடுத்தால், மில்க் சாக்லட் நன்றாக இருக்கும் என்றும், சாக்லட் சப்ளை செய்தால் ஐஸ்கிரீம் பிடிக்கும் என்றும் சொல்லி, தனக்குப் பிடித்ததைக் கேட்டு வாங்கித் தன் வயிற்றை ரொப்பிக் கொண்டிருந்தாளே. நாங்களா அப்படி எல்லாம் செய்யும்படி சொன்னோம்?” என்று சடபடவெனப் பொரித்து தள்ளினான் பாலகிருஷ்ணன்.

“அவள் மனசைக் குளிப்பாட்டி, அவள் உள்ளத்தில் இடம் பிடிப்பதற்காகத் தானே நீங்கள் போட்டி போட்டு அவ்விதம் செய்தீர்கள்? உபசரித்து, நல்ல வார்த்தை சொல்லி, நீங்களாக வாரிக் கொடுக்கிற போது, வேண்டாம் என்று யார் தான் மறுப்பார்கள்? மாதவிக்குத் தினசரி ஸ்வீட்டும், ஐஸ்கிரீமும், சாக்லட்டும் வாங்கித் தின்னவேண்டும் என்ற ஆசை இருந்தது. இப்படி எல்லாம் தின்ன ஆசைப் பட்டால் வீடு விட்டுப் போகும் மகளே; நமக்குக் கட்டுபடி ஆகிவராது என்று அவளுடைய அம்மா சொல்லியிருப்பாள். சுலபமாகச் சிரிப்பையும் பார்வையையும் இனிய பேச்சையும் கொண்டே அவற்றை எல்லாம் பெற்று விட முடியும் என்பதை அவள் கண்டு கொண்டாள். கிடைக்கிற வரையில் அனுபவித்து மகிழலாமே என்று துணிந்தாள். அவளுக்குக் கொடுப்பதில் உங்களுக்கும் ஓர் இன்பம் ஏற்பட்டது. இல்லை என்று நீங்கள் மறுக்க முடியாது. அப்புறம் அவளை ஏசுவானேன்?” என்றார் பரமசிவம்.

மற்றவர்களால் அவர் பேச்சை மறுக்க முடியவில்லை. எனினும், அவர்களுடைய மனக்கசப்பை மாற்றுவதற்குத் தேவையான சக்தியை அவ்வார்த்தைகள் பெற்றிருக்க வில்லை தான்.

(“கலாவல்லி, 1965)

– வல்லிக்கண்ணன் கதைகள், ராஜராஜன் பதிப்பகம், 2000 – நன்றி: http://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *