கேரக்டர் – சித்ராங்கி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 30, 2012
பார்வையிட்டோர்: 9,373 
 
 

அழகான மலைப் பிரதேசம் அது. நான் அங்கு போய்ச் சேர்ந்தபோது மாரிக்காலம். வானத்துக்கும் பூமிக்கும் திரை போட்டாற் போல் மழை பெய்து கொண்டேயிருக்கும். எப்போதாவது ஒரு நாள் விட்டு சில மணி நேரம் சூரியன் தலைகாட்டும். அப்படி ஒரு நாளில்தான் அவளைப் பார்த்தேன். ஒரு அபூர்வமான குடியமைப்பு அந்தப் பகுதி. காஃபி, ஏலக்காய் தோட்ட அதிபர்கள், அவர்கள் தோட்டங்களில் வேலை செய்யும் கூலிக்காரர்கள் என்று மலையும் மடுவுமான குடிகள். தோட்ட அதிபர்களின் வீட்டுப் பெண்களை வெளியில் காண்பதே அரிது. கூலிக் குடியில் இப்படி ஒரு பெண்ணை எதிர்பார்த்திருக்கவே முடியாது.

ஒரு நடிகையைப் போல மேக்கப்புடன், சிவப்பு நைலக்ஸ் சேலை, ஹீல்ஸ் செருப்பு, கையில் அந்த வெயிலுக்கே விரித்த குடையுடன் இறங்கி வந்துக் கொண்டிருந்தாள். அக்கம் பக்கத்து குவார்டஸ் பெண்களின் கன்னட வசவும், உமிழ்தலும் பிடிபடத்தான் இல்லை. அப்போதுதான் அவளைக் கடந்து போகிற இருவரை ‘நம்ஸ்காரா அண்ணா, நம்ஸ்காரா ரீ’ என்று அவள் வணங்குவதும், ‘நம்ஸ்காரம்மா’ என்ற சொல்லோடு கடந்த அடுத்த நொடியில் ‘ஹேங்கிதாள நோடு சூளே நன்னமகா (எப்படி இருக்கிறாள் பார் விலைமாதுக்குப் பிறந்தவள்)’ என்ற சொல் அவளைக் காயப்படுத்திற்றோ இல்லையோ, என்னைப் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏதோ சரியில்லை என்பது மட்டும் தெரிந்ததாலும், மொழிப் பிரச்சனையோடு, வயதும் சேர மேற்கொண்டு விசாரிக்கத் தோன்றவில்லை.

அடுத்த நாளில், அவசரமாக வீட்டிற்குக் கடிதம் எழுதவேண்டியிருந்ததால், ப்யூனிடம் போஸ்டாஃபீஸ் எங்கே என்று விசாரித்தபோது, அலுவலகத்துக்கு மேலேயே லைசன்ஸ் செல்லர் இருப்பதாகத் தெரியவந்தது. இடம் விசாரித்துப் போனபோது, ஒரு டேபிளில் ட்ரேயில், கார்டு, கவர், இன்லண்ட் லெட்டர், மணியார்டர் ஃபாரம் இத்தியாதியோடு, அந்தப் பெண் அமர்ந்திருந்தார். சித்ராங்கி, லைசன்ஸ் போஸ்டல் செல்லர் என்ற போர்டும் இருந்தது. ‘ஏனு பேக்கு தம்மா (என்ன வேண்டும் தம்பி?)’ என்ற கேள்வியோடு படித்துக் கொண்டிருந்த புத்தகத்தைக் கீழே வைத்துச் சிரித்தாள். ரண்டு இன்லண்ட் லெட்டர், ரண்டு கவர் என்று காசை நீட்டியபடியே கவிழ்த்து வைக்கப் பட்ட புத்தகத்தின் மீது கண்ணை ஓட்டினேன். மைசூர் யூனிவர்சிடியின் தொலைதூரக் கல்வியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு புத்தகம் அது.

மாதம் ஒரு முறை மணியார்டர் அனுப்புவதற்கு மட்டும் மலையிறங்கி மெயின் போஸ்டாஃபீஸ் போனால் போதும் என்பதால், தபால் தேவைகளுக்கு அவள் வீட்டில் வாங்குவது எளிதானது. அப்படிப் போகையில், ஒரு நாள் அவளில்லாமல் போக காத்திருந்தபோது, உள்ளிருந்து, ‘ஏனு பேக்கு? (என்ன வேண்டும்) என்ற குரல் மட்டும் வந்தது. இன்லண்ட் லெட்டர் என்ற போது காசை வைத்துவிட்டு எடுத்துச் செல் என்ற அவளின் குரல் மட்டும் கேட்டது. பல நாட்களில் இப்படி நடக்கவும், தவிர அந்த ட்ரேயில் இருந்த கணிசமான காசும் அதெப்படி இப்படி ஒரு நம்பிக்கை. யாராவது காசு போடாமல் எடுத்துக் கொண்டு போனாலோ, அல்லது ஒன்றுக்கு இரண்டாக எடுத்துக் கொண்டு போனாலோ என்ன செய்வாள்? காசு வேறு இப்படி கிடக்கிறதே என்ற கேள்விகள் எழத்தான் செய்தன.

அப்படி ஒரு நாளில், கவரோடு வந்து, கடிதம் எழுதிக் கொண்டிருக்கையில் உடன் பணிபுரியும் ரகோத்தமராவிடம் கேட்டேன். நமட்டுச் சிரிப்போடு, நீ இனிமேல் அங்கே போய் வாங்க வேண்டாம். எப்போதாவது டவுனுக்குப் போகும்போது வாங்கி வைத்துக் கொள் என்றாரே ஒழிய விஷயம் வெளிவரவில்லை. வயதில் மிக மூத்தவராதலால், தயக்கத்துடனே மாலையில் மீண்டும் கேட்டேன். நீ அங்கே போறது நல்லதில்லைப்பா. பொறுப்பான பதவியில் இருக்கிறாய். ஊரில் ஒரு மாதிரி பேச்சு வரும் என்று மேலும் தயங்கியபோது லேசாக புரிந்தது. அவரே தொடர்ந்தார். அந்தப் பெண்ணுக்கு பெற்றவர் யாரும் இல்லையாம். மாமன் வீட்டில் இருக்கிறாளாம். தேயிலைத் தோட்ட அதிபர்கள் எந்தப் பெண்ணைக் கை காட்டினாலும், அது அவளுடைய புருஷனே ஆனாலும், அழைத்துக் கொண்டு போய்விட வேண்டுமாம். அப்படி அவள் மாமனால் அழைத்துச் செல்லப் பட்டாளாம் படிக்கும் காலத்திலேயே. மாறி மாறி அவர்களுக்கு விருந்தாகி, ஒரு கட்டத்தில் செக்ஸ் தொழிலாளியாக மாறியவளாம்.

ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய், திருந்தி ஒரு ஆரம்பப் பாடசாலையில் டீச்சர் வேலை கிடைத்ததும் இதிலிருந்து ஒதுங்கியிருந்தாளாம். பட்டதாரி ஆனால் பிறகு உயர்வகுப்புக்கு ஆசிரியையாகச் செல்லலாம் என்ற கனவில் இருந்தவளை, ஒன்றாவது இரண்டாவது படிக்கும் பிள்ளைகளுக்கு இவள் பாடம் சொல்வதை விட வேறு ஏதோ சொல்லிக் கொடுப்பாள் என்ற ஊர் மக்களின் பிராது மீண்டும் தொழிலுக்கே தள்ளியதாம். அப்படி ஆட்கள் இருக்கும்போதுதான் ட்ரேயில் காசு போட்டு விட்டு கார்டோ கவரோ கொண்டு போகச் சொல்லுவாள் என்று கிண்டலாக அவர் சொன்னபோது அருவருப்பாய்த்தான் இருந்தது.

அதோடு அங்கு போவதையும் நிறுத்திக் கொண்டு அவர் சொன்னபடி மொத்தமாக கார்டு, கவர் வாங்கி வைத்துக் கொண்டாயிற்று. வழியில் பார்க்க நேரும்போது ‘ஏனு தம்மா பரோதில்லா’ (என்ன தம்பி வருவதே இல்லை) என்று சிரித்தபடி கேட்கையில் யாராவது கேட்டுவிடுவார்களோ என்ற பதைப்பும் அருவருப்பும் கூட வந்து தொலைந்ததே தவிர, அவள் நரகத்தைப் புரிந்து கொள்ள புத்தியில்லாமல் போனது.

ஏட்டு கெங்கண்ணா அலுவலகத்தின் மேல் புறம் அமைந்துள்ள டீக்கடையில்தான் டீக்குடிக்க வருவார். டீக்குடிப்பது ஒரு சாக்கென்பதும், அவளிடம் மாமூல் வாங்க வந்திருந்த நேரம் சரியில்லையென்பதால் டீக்குடித்துக் காத்திருப்பதும், டீக்கடை ராமன் நாயர் பின்பு சொல்லித்தான் தெரியும். புழுவை விடக் கேவலமாக, ‘அவனுக்க நாயி மேலல்லா சாரே! அவளே விதியில்லாம உடம்ப விக்கிறா. இந்த வேசிமகன் அதுக்க காசும் வேண்டிட்டு அவளுக்க சுகமும் கேப்பான். பட்டிமகன்’ என்று உமிழ்வார். ஒரு நாள், ‘சூளே முண்டே! நன்னத்தர ஆட்டவாடுத்தியா (தேவடியா முண்டை, என்னிடமே விளையாடுகிறாயா)’ என்ற குழறலான கெங்கண்ணாவின் மிரட்டலும் ’(அண்ணா பிட்டு பிடண்ணா, நினக தேவரு ஒள்ளேது மாடலி (அண்ணா விடு அண்ணா, கடவுள் உனக்கு நல்லது செய்யட்டும்)’ என்ற அவள் கதறலும் அலுவலகம் முழுதையும் வெளிக் கொணர்ந்தது. அவிழ்த்துத் தோளில் போட்ட சட்டையோடு, அவளைத் தலை முடியைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தான் கெங்கண்ணா. இரண்டு கையாலும் புடவையை மார்பைச் சுற்றி இருக்கிக் கொண்டு நாய் போல் இழுபட்டுக் கதறிக் கொண்டிருந்தாள் சித்ராங்கி.

‘விடய்யா கெங்கண்ணா அவளை’ என்று வந்த ராமன் நாயரை ஒரே தள்ளில் விழுத்திக் கொக்கரித்தான் கெங்கண்ணா. காசும் கொடுக்காமல் உடம்பு சரியில்லை என்று அவனோடு படுக்கவும் மறுத்தாளாம் அவள். அத்தனை பேரிருந்தும் ஒருவரும் அவளுக்காக பேச வரவில்லை. சுற்றிலும் குவார்ட்டர்ஸ். பெண்களெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க அவளுக்காக பேசி குடும்பத்தில் குழப்பம் வருமென்ற பயமும் ஆண்களும் ஒதுங்கியிருக்க ஒரு காரணம். அப்போது பார்த்து அவள் நல்லகாலம், எங்கள் இன்ஸ்பெக்டர் அப்துல்லா குட்டி வந்து சேர்ந்தார். இன்ஸ்பெக்டர் என்றால் போலீஸ் இல்லை. பில்டிங் இன்ஸ்பெக்டர். கோட்டை அறையாய் ஒரு அறை கொடுத்தார் கெங்கண்ணனுக்கு. அவன் மேலிருந்த சட்டையை பிடுங்கி தன்னிடம் பணி புரிபவனிடம் கொடுத்து, ‘ஹேமவதி ஆத்தில் கொண்டு போய் போடுடா’ என்றார்; ’தாயி! நீனு மனேக ஹோகம்மா (தாயீ நீ வீட்டுக்கு போம்மா) என்றார். சிங்கம் போல் கர்ஜித்த கெங்கண்ணா நாயை விடக் கேவலமானான். காலில் விழுந்தான். பேட்ஜ் போனால் சஸ்பெண்ட் பண்ணி விடுவார்கள் என்று அழுதான்.

கட்டுடா அவனை என்று லாம்ப் போஸ்டில் கட்டவைத்தார். போலீஸ் ஸ்டேஷனுக்கு ஃபோன் போட்டு இன்ஸ்பெக்டரை வரவழைத்தார். வீடு புகுந்து பெண்ணை நடு ரோட்டிற்கு இழுத்து வந்து மானபங்கப்படுத்தியதாக புகார் கொடுக்கப் போவதாகச் சொன்னார். ஒரு வழியாக கெங்கண்ணா இனி தொல்லை கொடுக்கமாட்டான் என்ற உத்தரவாதத்தின் பேரில் கெங்கண்ணா விடுவிக்கப்பட்டான். ‘அண்ணா, அண்ணா என்று இரு கை கூப்பி உதடு துடிக்க அழுதவளை போம்மா’ என்று அனுப்பிவிட்டு, ‘வா சாரே, நமுக்கு ஒரு டீ குடிக்காம் என்று என்னை அழைத்துக் கொண்டு போனார் அப்துல்லா குட்டி.

ஒரு சில மாதங்களில் பஞ்சாயத்து எலக்‌ஷன் வந்தது. தோட்டத்து முதலாளிகள் ஆதரவில் ஆளுங்கட்சிக்கு ஒருவரும், அவனின் பரம எதிரியான ஒருவனும் வேட்பாளராவதாகப் பேச்சு இருந்தது. அப்போதே ஏதாவது வெட்டு குத்து நடக்கும் என்ற பேச்சு பரவலாகவே இருந்தது. அதற்கும் பகடைக்காய் ஆணாள் சித்ராங்கி. எதிர்க்கட்சி ஆட்களால் கடத்திச் செல்லப்பட்டு, கன்னாபின்னாவென்று காயப்பட்டு, ஆளும்கட்சி வேட்பாளர் கடத்திச் சென்று அடித்ததாக கேஸ் கொடுக்க வைத்தார்கள். கொடுத்த கேசை வாபஸ் வாங்கச் சொல்லி ஆளும் கட்சி ஆட்களிடமும் அடியும் உதையும் விழுந்தது. தேர்தல் இருந்ததால் உள்ளூர் மாஜிஸ்ட்ரேட்டு கோர்ட்டில் உடனடியாக கேஸ் வந்தது.

யாரும் எதிர்பாராத ஒரு காரியம் செய்தாள் சித்ராங்கி. ஆளும் கட்சி ஆளைக் கவிழ்ப்பதற்காக அடித்து உதைத்து புகார் கொடுக்க வைத்ததைச் சொன்னாள். புகாரை வாபஸ் வாங்க ஆளும் கட்சி ஆட்கள் அடித்ததையும் சொன்னாள். அதையும் விட ஊர் முழுதும் பேச்சானது அவளின் சாட்சி. ‘எஜமானரே! உங்கள் முன் பல முறை விபச்சாரத்துக்காக ஃபைன் கட்டியிருக்கிறேன். டீச்சராக இருந்தேன். இந்தத் தொழிலைச் சொல்லி என்னை அதில் நிலைக்கவிடவில்லை. இப்போதும் படித்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் சுயமாகத்தான் நான் முன்னேற முடியும். நானும் ஒரு வேட்பாளராக களமிறங்கப் போகிறேன். எனக்குப் பாதுகாப்பு வேண்டும். யாருக்காகவோ பலிகடா ஆக்கப்பட்டேன். அவர்கள் மேல் வருத்தம் மட்டுமே இருக்கிறது. கேசை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்றாளாம். .

அதே கெங்கண்ணா பாதுகாவலுடன், ‘அம்மா,, அவ்வா,,அண்ணா,,தாத்தா’ என்று வயதுக்கேற்றவாறு கால் பிடித்து கை பிடித்து ஓட்டுக் கேட்டாள். இதற்குள் எனக்கு ட்ரான்ஸ்ஃபராகி சென்னை வந்துவிட்டேன். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு அங்கிருந்து வந்த ஒரு ஊழியர் நஞ்சப்பன் என்னைச் சந்தித்தபோது கேட்டேன். அவளின் தைரியத்தை மெச்சியோ, கவுன்சிலரானால் தன் வீட்டு ஆண்மகன்கள் இவளிடம் இனி காசைத் தொலைக்க மாட்டார்கள் என்றோ விழுந்த ஓட்டுகள் போக,. ஆளும் கட்சி வேட்பாளர் கடைசி நேரத்தில் வாபஸ் வாங்கியதால் அந்த ஒட்டும் கிடைத்ததாம். சித்திராங்கி பெருத்த வாக்கு வித்தியாசத்தில் கவுன்ஸிலராகிவிட்டாளாம். தன்னை வேலையிலிருந்து தூக்கிய பள்ளிக்கு நிதி திரட்டி நல்லதாகக் கட்டிக் கொடுத்தாளாம். ஊரில் பெருமதிப்பாம் அவளுக்கு. எல்லாம் விட ‘நம்ம ஊரிந்த ஒந்தே ஒந்து ஹெண்ணுகே கண்ணாக்தக்கே பிடல்லா ஆ எஸ்டேட் சூளே நன்ன மக்க சாயபுருக்கே சார். (நம்ம ஊர் பெண்கள் ஒருத்தி மேலும் அந்த எஸ்டேட் அதிபர்கள் கண்ணெடுத்துப் பார்க்க விடுவதில்லை சார்)’ என்று சொன்னபோது குரல் கம்மியது நஞ்சப்பனுக்கு.

– செப்டம்பர் 15th, 2011

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *