குலத் தொழில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 2, 2024
பார்வையிட்டோர்: 238 
 
 

 (1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

முன்பு, வானோங்கிய மரங்கள் அடர்ந்து கவிந்து படர்ந்து பரந்து கிடக்கும் இவ்வெளியில், காட்டு மிருகங்கள்கூட ஒரு காலத்தில் இருந்தன என்றால் நம்பமாட்டீர்கள். ஆனால் நாற்பது ஐம்பது வருஷத்துக்கு முன்னெல்லாம் இதே காட்டிலேதான் சிறுத்தை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி எல்லாம் கிடந்தன. மான்களுக்கும் குதிரைகளுக்கும் காட்டெருமைகளுக்கும் குறைவில்லை. பிற்பகல் மூன்று மணிக்குப்பின் யாரும் அப்பக்கம் போகத் துணிய மாட்டார்கள். 

இன்று அவ்வளவு பெரிய காடு இல்லை. இருந்தாலும் முன் இருந்த பெருமை குலையாமல் இருக்க, இப்பொழுதும் மரங்கள் அடர்ந்து இருக்கின்றன ; ஆனால் துஷ்டப் பிராணிகள் இல்லை. எல்லாம் வெள்ளைக்காரத் துரைகளின் துப்பாக்கிக்கு இரை யாயின. அன்று பயமற்ற கொடூரமான மனிதர்கள் இருந்து வந்தனர்; இன்று எங்கும் கோழைகள் மலிந்து கிடக்கின்றனர். அக்காட்டில் இன்று பயமே உருவாகிவந்த மான் கூட்டம் குடி யிருக்கிறது; நரிகளும் காணப்படுகின்றன. 

என்ன இருந்தாலும், அன்று இருந்த பாம்புகளின் வம்சம் ஒழிந்தபாடில்லை. ஆனால் அந்தக் காட்டின் ஓரத்திலுள்ள கிராமத்திற்கு இடப்பட்டிருந்த “பாம்பாட்டிப் புத்தூர் என்பதுமட்டும் மாறிப்போய்விட்டது. 

பாம்புக்காடு என்று வழங்கி வரும் பெயருக்கொப்ப இக்காட்டில் அடர்ந்த புதர்களுக்கிடையில் உயர்ந்து வளர்ந்த புற்றுக்கள் ஏராளமாகக் காணக்கிடக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு விஷக்கோட்டைக்கு ஒப்பாகும். “எந்தப் புற்றில் எந்தப் பாம்போ!” என்று அஞ்சும்படியாகப் பாம்புகளின் அரசு நடந்து வந்தது. 


எழுபது வருஷத்திற்கு முன்புகூட இந்தக் காட்டிற்கு அருகில் உள்ள குறவர்கள் பாம்பு பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள். எந்த ஊரில் எந்தப் பாம்பு வந்தாலும், இந்த ஊர்க் குறவர்களுக்குத் தான் ஒலைவரும். அவர்கள் பாம்பு பிடித்தால் அவர்களுக்கு ஒரு ஜோடி வேஷ்டி, ஒரு கலம் நெல், இரண்டு ரூபாய் ஊரார் கொடுப்பது வழக்கம். இந்த ஊர்கூடக் கீழைப்பட்டு ஜமீன் தார் குறவர்களுக்கு மானியமாகக் கொடுத்ததுதான். அதிலே இருந்துதான் இந்த ஊருக்குப் பாம்பாட்டிப் புத்தூர் என்ற பேரே வந்தது. 

“இதெல்லாம் பழைய மனுசர்களின் பேச்சு. இப்பொழுது பாம்பாட்டியைப் பார்த்தால் உளறியடித்துக்கொண்டு, வேலை யில்லியேடா? போடா போ’ என்று விரட்டுவார்கள். எவ்வளவு ப்பட்டு, கண்ணெல்லாம் கரிக்கும்படி புகைமூட்டம் டு, உள்ளம் உருகும்படி மகுடி ஊதி, உதிரம் கொதிக்கும்படி நடுங்கிக்கிட்டே பிடித்துவந்த பாம்பைப் பார்த்து, அலக்ஷ்யமாக, ‘போடா, போ, உம் பாம்பும் நீயும்!’ என்று சொல்றாவளே. ஏ, பாம்பும் … நானும், அல்லாமே, பாம்பும் அவுகளுமா இருக்கமுடியும்? 

“என்னமோ, அப்பப் பாம்பு புடிக்க ஆசையும் இருந்துது. அதுக்கு ஆதரவும் இருந்துது. தெரியுமா? கூட, நாலுபேர் ஆதரவே போதுமே. இப்ப என்னடான்னா பாம்புத் தொழிலே அத்துப் போச்சு. பசங்கள் எல்லாம் படிக்கக் கிளம்பிட்டாங்க. இந்தப் பாருங்களேன்.எம் மவ புள்ளே ஒருத்தன்,ஏதோ எட்டுக் ளாசு படிச்சுப்புட்டானாம்.இதோ சண்டைக்குப் போயிட்டான். இப்ப மாச மாசம் ரூ.25 அனுப்புறான். இப்படி இருக்குது புழப்பு என்று பாம்பாட்டி நாகப்பன் தனது தள்ளாத வயசில் சொல்லி ஆற்றாமைப் பட்டான். 


அது குறவன் வீடு போலவே நமக்குத் தெரியாது. நல்ல ஓட்டு வீடு. தரையெல்லாம் சாந்து போட்டது. உள்ளே போனேன். 

“என்னங்க சாமி, எங்கூட்டிலே வந்திட்டிங்களே! நீங்க எல்லாம் எங்க ஊட்டுக்கு வரக்கூடாதுங்களே! தோசமாச்சே’ என்றான். 

“தோஷமாவது, மண்ணாங்கட்டியாவது!” என்று உள்ளே போனேன். ரிஷிகளின் ஆசிரமம்போல் இருந்தது தோற்றம். உட்காருவதற்கு அடிமரத்துண்டுகள் போடப்பட்டிருந்தன. 

ஒரு மரத்துண்டின்மீது உட்கார்ந்தேன். அவனும் ஒரு கட்டிலில் உட்கார்ந்துகொண்டு, தெற்குப்புறத்திலுள்ள ஜன்னல் கதவுகளைத் திறந்தான். ‘ஜில்’ என்ற காற்று வீரனாற்றில் தவழ்ந்துவந்து தடவியது அவனது முகத்தை. 

ஓர் இன்ப உணர்ச்சியோடு கூடிய புன்சிரிப்பு மீசை நுனிகளின் இருமருங்கிலும் ஏறி இறங்கின. கண்களில் மோகன ஒளி. நெற்றியில் சுருக்கங்கள். நரைத்த தலைமயிர்கள் இரண் டொன்று அவனது முகத்தில் புரண்டன. அவனுடைய கருத்தும் கண்களும் ஏதோ ஒன்றை ஞாபகத்திற்குக் கொண்டுவருபவை போன்றிருந்தன. 

நான் சுற்றிச் சுற்றிப் பார்த்தேன். வடக்குச் சுவரோரத்தில் காபூல் திராட்சை ரசம் வரும் காலி ஜாடிகள்; நீலநிறக் கண்ணாடி ஜாடி, ஒன்று அல்லது இரண்டு அடி உயரத்தில் வைக்கப்பட்டு இருந்தன. அதே போலப் பொடி வர்ணத்தில் உள்ள மேரு எனச் சொல்லப்படும் கண்ணாடித்திராவக ஜாடிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வைக்கப்பட்டிருந்தன. 

சுவரின் மேல் பலவிதமான பாம்புகளின் தோல்கள் உரித்துப் பதம் பண்ணித் தொங்கவிடப்பட்டு இருந்தன. சில பாம்புகளின் எலும்புக் கூடுகள் வாசலின் இருபுறங்களிலும் நெளிவோடு பொதிந்து வைக்கப்பட்டிருந்தன. சில பாம்புகள் உயிருள்ளவை போல் பஞ்சடைக்கப்பட்டுச் சுவரோரத்தில் சுருண்டு கிடந்தன. இதோ, இவ்வுயர்ந்த மேடைமீது அவன் பிடித்த பாம்புகளுக்குக் கிடைத்த பரிசுகள் வைக்கப்பட்டிருந்தன. இவைகளையெல்லாம் பார்த்தால், ‘ஒரு ஜமீனின் கண்காட்சி அறையா, அல்லது சென்னை மியூசியமா?’ என்று எண்ணும்படி இருந்தாலும், அது கைதேர்ந்த பாம்பாட்டி நாகப்பனின் வீடு என்று சொல்லவே வேண்டியதில்லை. 

“என்னங்க சாமி’ என்று கூறிக்கொண்டே, ஒரு கண்ணாடி ஜாடியிலிருந்து சாராயத்தை ஊற்றிக் குடித்தான் அவன்; “சாமி, கோவிச்சுக்காதிங்க; இது எங்க சாதிப் பழக்கம்” என்றான். 

“அது கிடக்கட்டும்; அதோ இருக்குதே, அவை யெல்லாம் சாராய ஜாடிகளா?” என்றேன் நான். 

“இல்லே, இல்லே,; இதோ பாருங்க” என்று ஒரு கம்பளிப் போர்வையை நீக்கினான். ஒரு மரத்துண்டின்மேல் வைக்கப்பட்ட உருண்டை வடிவமான கண்ணாடி ஜாடியில் மண்டலமிட்டுத் தலையை உயர்த்திக்கொண்டு மிகப் பெரிய, கர்ப்பம் கலங்கும் படியான சர்ப்பம் இருந்தது. வெளிச்சம் பட்டவுடன் சீறிக் கொண்டு படம் எடுத்தாடியது. அதன் மூச்சு வெளிவரமட்டும் துவாரமுள்ள சல்லடை போன்ற அடைப்பான் அடைத்து இருந்தது. 

துணியை நீக்கினான். ஒரு பல்லி அந்த அடைப்பான் மேல் சென்றது. அவ்வளவுதான்! துள்ளித் துள்ளித் துடித்து இறந்தது. 

“அப்பா; அவ்வளவு விஷக்காற்றா அந்த ஜாடியின் முகப்பில்!” என்றேன் நான். 

கிழவனின் கண்களில் நீர் ததும்பியது. தழுதழுத்த குரலில், “அப்பா…உனக்கு… எமனாகப்… போச்சு!” என்று புலம்பினான்.

“என்ன நாகு, விஷயம் ஒன்றும் புரியல்லியே?” என்றேன் நான். 

“ஒண்ணும் இல்ல, எனக்குப் பேரப்புள்ள ஒருத்தன் இருந்தான். வயசு மூணரைதான் இருக்கும். புள்ளேன்னா புள்ளே …அவனைப் போலப் புள்ளே இனிப் பார்க்கப் போகிற தில்லை. அவனும் இந்தக் கழுதைகள் கிடக்குதுன்னு பயப்படுவானா? இந்த வாசலிலே, இதுபோலக் கட்டுவிரியன்தான் கிடக்கும் எருமையாட்டம். பாப்பாரப் புள்ளேக பார்த்தாலே பயப்படுவாக. எம்புள்ளே அதோடே புரண்டு விளையாடுவான். அதுவும், அவனை வச்சுச் சுத்திக்கிட்டுக் கிடக்கும். ஏதோ தெய்வப் பொறப்புன்னு தான் நினைக்கணும். அவன்கூடப் போய் … பத்துப் பன்னிரண்டு வருசமாச்சு” என்று விக்கினான். 

“எங்கே போய்விட்டான்?” என்றேன். 

“அதான், கவலையீனமா வச்சிருந்த ஒரு பாம்பு ஜாடிகிட்டப் போயிட்டான். அது அவனைப் பார்த்துச் சீறிச் சீறி அடங்கியது. அதன் சத்தத்தைக் கேட்க மேல்மூடிகிட்டப் போய்ப் பார்த்தான். அவ்வளவுதான் எம்புள்ளே … வாயால் நொரை நொரையாய்த் தள்ளிக்கிட்டு ..சுருண்டு, மடிஞ்சுபுட்டான்” என்றான். 

“ஐயோ பாவம்! ஏன் இப்படி, அந்தக் கொடிய பாம்புகள் வைத்திருக்க வேணும்?” என்றேன். 

“ஹும்! நல்லா இருக்குது. நம்ம குலத்தொழிலை விட்டு விடலாமா? இப்ப எனக்கும் எழுபது எழுபத்திரண்டு வயசு ஆவுது. எப்பொழுதாச்சும் ஒண்ணு ரெண்டு பாம்பு புடிக்காமே இருக்கிறதில்லை. இண்ணைக்கும், இவ்வளவு சம்பத்துக்கும் காரணமா இருந்தது எது தெரியுமா? அது எங்க குலத் தொழில்தான்” என்றான்.

– கதைக் கோவை (தொகுதி IV), 75 எழுத்தாளர்கள் எழுதிய 75 சிறந்த சிறுகதைகள், முதற் பதிப்பு: 1945. அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *