குறையொன்றுமில்லை

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 6, 2021
பார்வையிட்டோர்: 4,392 
 
 

“ஐயா.குழந்தை பசியால அழுவுதுய்யா..கையிலே துட்டு இல்லே.கொஞ்சம் பாலு ஊத்தினீங்கன்னா..உங்களுக்குப் புண்ணியமாப் போகும்”

ராமராஜ் ஏற இறங்க அந்தப் பெண்ணைப் பார்த்தார்.

இடுப்பில் பெண்குழந்தை.இரண்டு வயதிற்குள் இருக்குமா..மூக்கொழுக அழுது கொண்டு இருந்தது. தாயின் முகத்தைப் பார்த்தபடி.

“டே சம்முவம்.அந்தம்மாவுக்கு ஒரு கிளாஸிலே பாலக் கொடு..நல்லா ஆத்திக் குடு..குழந்த குடிக்கற பதத்துக்கு. அப்படியே அந்தம்மாவுக்கு ஒரு டீ குடு.வேற எதுனாத் துன்றியாம்மா.”

அந்தப் பெண் அவசர அவசரமாகத் தலையாட்டி மறுத்தாள்.

“அண்ணே..இன்னும் போணியாகலேண்ணே.”

“ஏன்..இது போணியில்லியா..அடச் சும்மாக் குடுடா..”

குழந்தை ஆவலுடன் அவசர அவசரமாகப் பாலைச் சாப்பிட்டது. பசியடங்கிய உணர்வில் அங்குமிங்கும் பார்த்தபடி, ராமராஜைப் பார்த்துப் புன்னகைத்தது.

“ஐயா.ரொம்பத் தேங்க்ஸ்ய்யா.ரொம்ப ரொம்ப நன்றிய்யா..”

கண்ணில் நீரொழுக கையெடுத்துக் கும்பிட்டவாறே குழந்தையை நன்றாக இடுப்பில் ஏந்தியபடி அந்தப் பெண் நடந்தாள்.

சாலை பரபரப்பாக இருந்தது. ரயில்வே ஸ்டேசனில் இருந்து பயணிகள் சுறுசுறுப்பாக வெளியேறவும், உள் போகவுமாக இருந்தனர்.

ராமராஜின் இட்லி பலகாரக் கடை ஸ்டேஷனுக்கு வெளியே பிரதான சாலையினை ஒட்டி இருந்தது.

ஒரு புறம் பேருந்தில் வெளியேறும் கூட்டம், இன்னொரு புறம் ஸ்டேஷனில் இருந்து வரும் கூட்டம்.

கடையில் வியாபாரம் சூடு பிடிக்கும் நேரம். ராமராஜின் கடையில் பலகாரங்கள் சுவையாகவே இருக்கும்.

விலையும் குறைவாகவே இருக்கும். அதனால் இட்லி, தோசை, பூரி, பரோட்டா, விதவிதமான வடை எல்லாம் சுடச்சுட வந்தவண்ணம், விற்ற வண்ணமாக இருக்கும்.

“ராஜி.! அந்தப் பெரியம்மாக்கு இட்லி குடுத்தியா.பாவம்..பசின்னு வாயெடுத்துச் சொல்லக்கூட முடியலே..”

ராமராஜின் மனைவி தான் ராஜி. காலையில் குளித்துவிட்டு மஞ்சள் பூசிய முகத்தில் நெற்றியில் பாந்தமாய் குங்குமப் பொட்டிட்டு வந்து நின்னா கடையே ஒரு களை கட்டும். மங்கலமாய் இருக்கும்.

பார்ப்பவர் கையெடுத்துக் கும்பிடத் தோன்றும் தோற்றம்.

“அட.. அந்தப் பெரியம்மா மேலே மட்டும் என்னா கரிசனம்..அதெல்லாம் அப்பவே இட்லி சாப்பிட்டாங்க..ஒரே இடத்திலே வெறிச்சிப் பார்த்தபடி உக்காந்திருக்காஙக..ஒன்னும் குறையில்லே..”

“சரி.சரி.வந்து வியாபாரத்தக் கவனி..”

“மாஸ்டர்.அடுத்து பூரி.வடை.தயாராவட்டும்”

உள்பக்கம் பார்த்துக் குரல் கொடுத்தார்.

அவ்வப்போது வயதானவர்கள், உடம்பு முடியாதவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஒருவர் இருவராக வந்து ராமராஜ் கொடுக்கும் இட்லிப் பொட்டலத்தை வாங்கிச் சென்ற வண்ணம் இருந்தனர். ஒரு சிலர் கையை நெஞ்சுக்கு நேரே உயர்த்தி வணக்கம் வைத்த னர். இன்னும் சிலர் கையெடுத்துக் கும்பிட்டவாறே சென்றனர்.

திலீபன் அங்கிருந்த நீள மர இருக்கையில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தான். கடைக்கு வருவோர் போவோரை எல்லாம் பார்த்தபடி. அவனுக்கு வியப்பாகவும்,புரியாத புதிராகவும் இருந்தது.

“தம்பி..ரொம்ப நேரமா உக்காந்திருக்கீங்க..எதுனாச் சாப்பிட்றீங்களா தம்பி.இல்லே.டீ.காப்பி.”

ராமராஜின் குரலால் திடுக்கிட்டு எழுந்தான் திலீபன்.

“இல்லே.தம்பி.உக்காருங்க. ஏன் எழுந்தீங்க.?”

“பூரி தயாராகட்டுமுன்னு உக்காந்திருக்கேன்.உங்க கடையிலே கிழங்கு மசாலா ரொம்ப நல்லா இருக்கும்னு கேள்விப்பட்ருக்கேன்..”

“ஆமா.தம்பி.அது ராஜி.அதான் என் மனைவி யோட கைப்பக்குவம்.அதுலெ ஒரு ருசி இருக்குங்கறாங்க.நீங்க உக்காருங்க தம்பி.பூரியானதும் நானே கூப்பிட்றேன்..”

கடையில் வியாபாரம் சூடு பிடித்தது. பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள், அலுவலகத்திற்குச் செல்லும் மக்கள், வேலைக்குச் செல்லும் வெளியூர் ஆட்கள் என மாறி மாறி வந்து பலகாரங்கள் வாங்கிப் போவதும், கடைக்குள் அமர்ந்து தின்பதுமாய் இருந்தனர்.

அதில் சிலபேர் காசு கொடுக்காமல் சாப்பிட்ட பின் வெறும் வணக்கம் வைத்துச் சென்றனர். ராமராஜ் ஒரு புன்னகையால் அவர்களைக் கடக்கவைத்தார்.

“டே.சம்முவம்..சாருக்குப் பூரியும், வடையும் கொண்டாந்து குடு..மசாலா நிறைய வச்சிக் குடுடா..பாவம் ரொம்ப நேரமாக் காத்திருக்கார்.”

சண்முகம் திலீபனை நோக்கி பூரி மசாலா, வடை வைத்த தட்டை நீட்டினான்.

பூரியில் சிறு துண்டைப் பிய்த்தான். மசாலாவில் தோய்த்தான். உருளைக்கிழங்கும் வெங்காயமும் மசால் மணக்க பூரித் துண்டை வாயில் வைத்தான் திலீபன்.

“ஆஹா..இதுவரை காணாத சுவையும் மணமும். இப்படி ஒரு பூரி மசாலாவைச் சாப்பிட்டதே இல்லையே..”

திலீபன் நினைத்தபடியே அடுத்த செட் பூரிக்கு ஆர்டர் கொடுத்தான்.

“ஆமா.தம்பி..இங்கே பூரி நல்லாருக்கும்னு யாரு சொன்னா.உங்களுக்கு எந்த ஊரு தம்பி.”

ராமராஜ் கேட்டதும் திலீபன் முழித்தான்.

“ஓ.அதுவாண்ணே..ஹோட்டல்னா.பூரி இல்லாமயா இருக்கும்.அதுவும் மசாலா காம்பினேசனோட..சும்மா.ஒரு பேச்சுக்குக் கேட்டேன்..”

“.ஓ. இது தான் போட்டு வாங்கறதா..”

ராமராஜ் சிரித்தார். திலீபனும் சேர்ந்து கொண்டான்.

“..ஆமாண்ணே..நானும் அப்பதேருந்து பாக்றேன்..இங்கே நிறைய பேர் வயசானவங்க, உடம்பு முடியாத வங்க வர்றாங்க.கை நீட்றாங்க.நீங்க பார்சல் கொடுக்குறீங்க..சிலபேர் உக்காந்து சாப்பிட்றாங்க.வெறும் வணக்கம் சொல்லிட்டு காசு கொடுக்காமப் போறாங்க.நீங்களும் ஒன்னும் சொல்றதில்லே..”

“அதுவா.தம்பி..இங்கே வச்சிருக்கிற போர்டு படிச்சீங்களா.”

திலீபன் அப்போது தான் பார்த்தான். கடைய ஒட்டி ஒரு போர்டு வைக்கப்பட்டிருந்தது. படித்தான்.

“இங்கே வயதானவர்களுக்கும், உடம்பு முடியாதவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், உண்மையில் கையில் காசில்லாதவர்களுக்கும், கைக்குழந்தையோடு வரும் ஏழைத் தாய்மார்களுக்கும், ஆதரவற்
றோர்களுக்கும் உணவும் பாலும் எப்போதும் இலவசம் ”

“எப்படிண்ணே.உங்களால இது முடியுது.அட.நான் கூடச் சாப்பிட்டுட்டுக் காசில்லேன்னு சொல்லிரலாம் போலருக்கே..”

“உங்க மனசாட்சி .இடங் கொடுத்ததுன்னா.காசு கொடுக்காமப் போகலாம்.தம்பி.ஒரு குறையும் இல்லே..”

ராமராஜ் சொன்னதும் திலீபன் நெகிழ்ந்து போனான்.

“அதில்லேண்ணே..உங்களுக்கு எப்படிக் கட்டுப்படியாகுதுன்னு தான் கேக்கறேன்..”

“.தம்பி..ஒரு நாளைக்கு,இருபது முப்பது பேர் இப்படிச் சாப்பிடுவாங்களா.வியாபாரத்துக்குன்னு போட்ற இட்லி மாவுக்குக் கூடுதலா கொஞ்சம் அரிசி, உளுந்து போடப் போறேன். கிரைண்டர் அதுக்குன்னு தனியாவா மாவாட்டப் போகுது. அதே மாதிரி பூரி, பரோட்டாவுக்குக் கூடுதலாக் கொஞ்சம் சேர்த்து மாவு பிசையச் சொல்வேன். ஒரே மாஸ்டர் தான், ஒரே வேலை தான், மதியச் சோறுக்குக் கூடுதலா கொஞ்சம் அரிசி,பருப்பு எல்லாம் ஒரு வேலை தான்.”

“இருந்தாலும் லாபமில்லாம.. எப்படி.”

“இல்லே தம்பி.ஒரு நாள் போல ஒரு நாள் இருக்காது. ஆனா..கடவுள் ஒரு நாளும் குறை வைக்கறதில்லே.ராஜியும் என்னைக் கைப்பிடிச் சதிலேர்ந்து ஒருநாளும் முகம் சுழிச்சதில்லே..”

நெகிழ்ந்த கண்களுடன் ராஜியைப் பார்த்தார் ராமராஜ். ராஜி புன்னகைத்தவாறே நின்றிருந்தார்.

என்ன தான் வாய் பேசினாலும் கண்களும் கைகளும் வியாபாரத்தைச் சுறுசுறுப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தன.

ஆச்சரியம் தாங்காமல் திலீபன் பூரித்தட்டைக் காலி செய்தான். கை கழுவுவதற்குள் அவனுக்கு டீ கொண்டுவந்து கொடுத்தான் சண்முகம்.

“ராஜி..அந்தப் பெரியம்மாவக் கவனிச்சியா.கொஞ்சம் வெந்நீர் போட்டுக் குளிக்க வச்சிரு.ஏதாவது பாத்ரூம் போகனும்னா..ஒத்தாசை பண்ணேன்..”

“அட.. அதத் தானே ஒரு வாரமாப் பண்ணிட்டு வர்றேன்..இதென்ன ஸ்பெசல் கவனிப்பா இருக்கே..ஒரு நாளும் இல்லாத திருநாளா.உங்க மனசு போலவே செய்றேன்..”

“அண்ணே.எப்படின்னே.உங்களுக்கு இப்படி ஒரு மனசு வந்தது.இந்த ஹோட்டல் வச்ச நாள்ல இருந்தே இது மாதிரியாண்ணே.”

திலீபன் கேட்ட கேள்விக்கு ஒரு நீண்ட பெரு மூச்சு விட்டார் ராமராஜ்.

“அது ஒரு பெரிய கதை தம்பி..”

“அதைக் கேட்கத் தான் நான் வந்திருக்கேன். எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தான் பாத்திட்டிருந்தேன்..”

“என்ன தம்பி சொல்றீங்க..”

“ஆமாண்ணே..எங்க பத்திரிக்கையிலேர்ந்து உங்களைப் பேட்டி எடுத்துட்டு வரச் சொன்னாங்க.”

பிரபலப் பத்திரிக்கையின் பெயரைச் சொன்னான் திலீபன்.

“அய்யய்யே.பேட்டியெல்லாம் வேணாம் தம்பி..நீங்க வேற.நான் அவ்ளோ பெரிய ஆளில்லே தம்பி.”

“அதெல்லாம் பத்திரிக்கைக்குத் தெரியாமயா என்னை அனுப்பியிருக்காங்க.நீங்க சொல்லுங்க.ஏற்கனவே பாதி பேட்டி எடுத்து முடிச்ச மாதிரி தான்.சரி.உங்களப் பத்தி சொல்லுங்க.. அதென்ன நீண்ட கதை..”

கடைக்கு வரும் கூட்டம் கொஞ்சம் குறைந்து இருந்ததால் ராமராஜ் சிறிது ஆசுவாசப்படுத்திக் கொள்ள நினைத்தார். மனதில் இருந்த பாரத்தைக் கொஞ்சம் இறக்கி வைக்க திலீபனைச் சுமைதாங்கியாய் நினைத்தார்.

“ஆமாம்..தம்பி.ஒரு இருபத்தி ஐந்து வருசத்துக்கு முன்னே..ஒரு நாள் விடிகாலையிலே இந்த ஸ்டேசன் வாசலுக்கு வெளியே என்னைக் கூட்டிவந்து நிக்கவச்சிட்டுப் போனார் எங்கப்பா..இதோ வந்திர் றேன்னுட்டு போனவர் தான் வரவே இல்லே.நான் கொஞ்ச நேரம் அங்கே இங்கேன்னு வேடிக்கை பாத்திட்ருந்தேன். அப்பாவக் காணலே..எனக்கு அழுகையா வந்தது..சின்ன வயசிலேயே அம்மா இறந்ததனாலே அப்பா சித்தியக் கட்டிட்டாரு. அப்பாவுக்கு கல்யாணம்னு சந்தோசம் எனக்கு. அப்பா கூடத் தூங்கப் போனாச் சித்தி சத்தம் போட்டாங்க.தினம் அப்பா அம்மாவுக்கும் சண்டை.இந்தச் சனியன எங்கெயாவது தொலைச்சிட்டு வாங்கன்னு ஓயாத நச்சரிப்பு. தாங்காம அப்பா இங்கே கொண்டாந்து விட்டுட்டுப் போயிட்டார். இதெல்லாம் எனக்குப் போகப்போக விளங்கின விபரம்..”

திலீபன் கதையின் மும்முரத்தில் ராமராஜையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“அப்றம பசியெடுத்திச்சா.ஒரே அழுகை.திக்குத் தெரியாத இடத்திலே அறியாத வயசிலே.நான் அழறதப் பாத்து.இதோ இங்கே தான் ஒரு டீக்கடை இருந்திச்சி..சுந்தரம் ஐயா தான் ஓனர்.அவர் தான் என்னைக் கடையிலே உக்காத்தி வச்சி டீயும், பன்னும் கொடுத்துப் பசியப் போக்கினார். நான் அப்பா.அப்பான்னு அழுதிட்ருந்தேன்..அப்பா வந்திருவார்னு ஆறுதலாப் பேசினார்.. மதியம் சாப்பாடு போட்டார்.இரவு தோசை சுட்டுத் தந்தார். யார்யாரிடமோ விசாரித்தும் அப்பாவோட விவரம் தெரியவில்லை. தொலைக்கறதுக்காக விட்டுப் போனவர் எப்படித் திரும்ப வருவார். அன்னிக்கு ராத்திரி சுந்தரம் ஐயாவ அணைச்சிக்கிட்டு அப்பா.அப்பா.ன்னு புலம்பியபடியே தூங்கிட்டேன். அன்னிலேர்ந்து ஐயா தான் என்னை ஆளாக்கினார்..அவருக்குக் குடும்பம்னு சொல்லிக்க ராஜி தான்..அவரோட அண்ணன் பொண்ணு சின்ன வயசிலே ராஜிய ஒப்படைச்சிட்டு அவரும் எங்கியோ போயிட்டார். அவரோட அண்ணியும் சித்த பிரமை பிடிச்சி கொஞ்ச நாள்லேயே இறந்துட்டாங்க.. ராஜியும் நானும் டீக்கடையோட வளர்ந்தோம்.. எங்க ளுக்காக அவர் கல்யாணம் கூடப் பண்ணிக்கலே.இந்த ஓட்டலையும் ராஜியையும் எனக்குக் கட்டி வச்சிட்டார். ராமு.பசின்னு யாரு வந்தாலும் மறுக்காம அவங்களுக்கு உணவு கொடுப்பா.ன்னு உபதேசம் பண்ணிட்டு அவரும் தெய்வமாயிட்டாரு..அந்த உபதேசம் தான்.இன்னிய வரைக்கும் தொடருது.குறையில்லாமத் தொடரும்..இனிமேலும்.”

“ஆமா..அந்தப் பெரியம்மாவ மட்டும் நீங்க ஸ்பெசலா கவனிக்கிறீங்கன்னு உங்க மனைவி சொல்றாங்களே..ஒரு வாரமா வந்ததிலேர்ந்து.ஏன்.”

திலீபனின் கேள்விக்கு என்ன பதில் வரப் போகிறதுன்னு ராஜியும், சண்முகமும், கடையில் உள்ள மற்ற வேலையாட்களும் ராம்ராஜின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

“ஏன்னா..தன்னோட பிள்ளையினாலேயே இந்த ஸ்டேசன் வாசலுக்கு வெளியே அநாதரவாக விடப்பட்டுச் சென்ற அந்த அம்மா தான் என்னோட சித்தி.!”

“தனியொருவனுக் குணவில்லையெனில் இச்சகத்தினையே அழித்திடுவோம் “என வானொலியில் உரத்தகுரலில் யாரோ ஒரு பேச்சாளர் பேசிக்கொண்டிருந்தது திலீபனின் காதுகளில் எதிரொலித்தது.

Print Friendly, PDF & Email

1 thought on “குறையொன்றுமில்லை

  1. குறையொன்றுமில்லை என்ற சிறுகதை ஒரு நல்ல சிறுகதை. திரு இளவல் ஹரிஹரன் அவர்கள் நிறைய சிறுகதைகள் எழுதி, சிறுகதைத் தொகுப்புகள் பல வெளியிட்டிருத்தும், அவருடைய இரண்டே இரண்டு கதைகள் மட்டும் சிறுகதைகள் டாட் காமில் வெளியாகியிருப்பதற்குக் காரணம் என்ன?
    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *