குதிரை மரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 23, 2023
பார்வையிட்டோர்: 2,075 
 
 

1

ஜன்னல்களின் வழியே இளங்காலை சூரியக்கதிர்கள் நெசவில் வெளிப்படும் நூல்களைப்போல சாய்ந்து விழுந்து கிடப்பதை கண்டு ஆர்வம் பொங்க தூக்கத்திலிருந்து எழுந்தமர்ந்து கொண்டான் குடுத்தா பிரபுராம். ஜன்னலோரம் சாய்ந்தமர்ந்து தலைக்குமேல் குறுக்காக செல்லும் கதிர்களை விரல்களால் தொட்டு மீட்டினான். அது பாவில்(1) நூல் கோர்க்கும் வேலைபோல இருந்தது. ஆட்காட்டிவிரலும் பெருவிரலும் நூலை பின்ன விடுவதுபோல ஒளிக்கதிர்களை பின்னிக் கொண்டிருந்தான். சற்று பொறுமை அதற்கு தேவை. மெல்ல விரல்கள் நூலுக்கு பழக்கப்பட்டதும் வெள்ளைநூல் பாவு நூலுடன் அழகாக பின்னிச் சென்று அமர்ந்துக் கொள்ளும். அப்பா சின்ன மெல்லிய வெள்ளை நூலை எடுத்துக் கொடுப்பார். அதுதான் பாவுக்கு சரியாக அமரும் என்பார். ராமர் கலரில் பழுப்பு பார்டர் அவனுக்கு பிடித்த காம்பினேசன். அந்த தாவணி(2) வரும்போதெல்லாம் அப்பாவுடன் சிகுடாவிற்கு(3) அமர்ந்துக் கொள்வான்.

அப்பாவின் மெல்லிய கரங்களை கவனித்துக் கொண்டிருப்பான். வலது கையில் பழுப்புநிற கயிற்றை கட்டியிருப்பார். மொட்டைத் தலையில் மென்மயிர்கள் வளர்ந்ததுபோல வளர்ந்திருக்கும் முடிகள் கொண்ட கையில் பழுப்பு கயிறு இறுக்கமாக பிடித்திருக்கும். தறிக்கு மேல் உள்ள குண்டுபல்பு எரிய அணைக்கும் வசதி கொண்டது. தொங்கும் சுவிட்சை ஆன் செய்து தீவிரமான கண்களால் உற்று நோக்குவார். பிசுறுகள் இருந்தால் தேய்ப்பு பட்டை(4) எடுத்து முதலில் நீவிவிட்டு வேலைய தொடங்குவார். அதே வேகத்தில் திரும்பி “என்னடா இது, புட்டா கட்டையில(5) சரியா சுத்தினியா இல்லையா” என்பார். “புஸ்கா(6) இல்லாம சுத்த எப்பதான் கத்துக்க போறியோ”.

இன்று ஏப்ரல் மாத வெய்யின் வெப்பம் அதிகமாக இருக்கும். சூடான காபி குடித்தால் தேவலையாக இருக்கும். வச்சலா எழுந்தால் வறட்டு காபியாக ஒன்று கொடுப்பாள். வச்சலாவும் பிள்ளைகளும் வேறு எங்கோ தலைவைத்து படுத்திருந்தார்கள். தறியின் கீழ்தான் படுத்திருந்தார்கள். முன்பு பிள்ளைகள் எழுந்து நின்றால் விரிந்த பாவில் தலைமுட்டும். இப்போது வேலையில்லாததால் வெறும் முறுக்கு கயிறுதான் போகிறது. இரு ஓரத்தில் போவதால் எழுந்து நிற்கலாம். தாம்பு கயிற்றை பிடித்துக் கொண்டு மெல்ல அவர்களை எழுப்பாமல் தாண்டி எழுந்து போனான்.

வெளியே இளந்தண்ணீரை தொட்டதுபோல குளிராக இருந்தது. சின்ன இடைநாழியை கடந்து வாசலுக்கு வந்தான். திறந்த திண்ணையில் அமர்ந்து சாலையை பார்த்துக் கொண்டிருந்தான். சாலை எப்போதும் போலவே அமைதியாக கிடந்தது. தண்ணீர் பிடிக்கும் பெண்களோ தனி(7) போடும் ஆண்களோ யாரும் இல்லை. கெந்தியபடி கடந்து செல்வதை நிறுத்திய கண்ணன், “என்ன மாப்பிள சீக்கிரம் எழுந்திட்டாப்பல தெரியுது, டீ குடிக்க போறோம் வரியா?”, முதலில் தூக்க கலக்கத்தில் அவன் கேட்டது புரியவில்லை. “இப்பதான் கண்ணண்ணே எழுந்தன், போயிட்டுருங்க மூஞ்சி கழுவிட்டு வாறேன்,” என்றான்.

அவனுடன் செல்வதற்கு பிரியமில்லை. எந்நேரமும் தங்களைப் பற்றிய பிரதாபங்களில் திளைப்பவர்களோடு எப்படிப் பேசமுடியும். அவன் நண்பர்களின் கூட்டம் பெரியது. பெரிய மூலையில் உள்ள பிஷ்மா ஜகதா டீக்கடையில் நின்றுபடி தேநீர் குடித்துக் கொண்டே பேச்சு தொடரும். சிலர் ஆத்துப்பாலம் நடைபாதையில் நடைக்கு செல்பவர்கள் உண்டு. அங்கும் பேச்சுதான். பேசுவதால் கிடைக்கும் ஆனந்ததிற்காகவே பேச்சு தொடர்கிறது என நினைப்பான்.

முகம்கழுவி அவசரமாகப் பல்தேய்த்தான். சட்டையை சத்தம் கேட்டுவிடாமல் மெதுவாக உதறி அணிந்துக் கொண்டு கிளம்பினான். வாசப்படியில் கால் வைத்தபோது “கதவ சாத்திக்கிட்டே போங்க,” வச்சலாவின் குரல் இருள் நிறைந்த குகையிலிருந்து வெளிவந்தது போலிருந்தது. அவள் தூக்கத்திலும் அவனை கவனிக்கிறாள். ஒருவகையில் அதை எதிர்பார்த்துதான் இருந்தான். அவன் நடை செருப்பின் தேய்விற்கு தகுந்தமாதிரி இருந்தது. முன்பக்கம் கிழிந்து வெளியே நீட்டியிருக்கும் இடது கால் செருப்பை சரியாக தூக்க முடியவில்லை. மிஷன் மேட்டுத் தெருவில் ஏறி பழைய கோர்ட் மைதானம் வழியாக சென்றான். அடர்ந்த பனியில் நாய்கள் மூன்று அந்த மைதானத்தில் சுற்றிவந்தன. அவை ஒன்றோடு ஒன்று மோதுவதும், முன்னங்கால்களை தூக்கிப் பாய்வதுமாக இருந்தன. விளையாட்டில் ஒரு உற்சாக விளையாட்டு. இடது பக்கம் திரும்பியதும் முக்கிய சாலையை தாண்டி ஆத்துப்பாலம் சென்று சேர்ந்தான்.

ஆத்துப்பாலம் போனபோது பெரிய கும்பல் தன்னை மறந்த நிலையில் லயித்திருந்தது. வேலையற்ற கும்பல், வேலையில்லாத போது பேச்சுதான் சுவாசமாக இருக்கிறது. அருகில் வந்தபோது அவர்களிடம் இருந்த கேலியும் கிண்டலும் உச்சத்தில் இருந்தது தெரிந்தது. அந்த பகுதியின் விடியற்காலை நேரச் சூழலை அவர்களின் சிரிப்பலைகள் மாற்றி விட்டிருந்தன. அவன் மேல் திரும்பிவிடுமோ என அச்சம் கொண்டான். கல் பெஞ்சில் அமைதியாக ஓரமாக அமர்ந்து கொண்டான். கல் பெஞ்சில் சிலர் ஒரு காலை வைத்துக் கொண்டும், சிலர் அகண்ட கால்களோடு நின்றும் பேசிக்கொண்டிருந்தார்கள். மாணிக்கா சுரேஷ் தன் தொந்தியை அசைத்து பலவாறு சேட்டைகள் செய்து தன் முழு ஆளுமையையும் காட்டிக் கொள்ளும் முனைப்பில் இருந்தான். அப்படி என்ன பேசிவிடுகிறார்கள் என்று கூர்ந்து கவனித்தால் அது நேற்று தகராறில் அடித்துக் கொண்ட இருவரின் பின்னணியில் இருக்கும் காரணிகளை வேடிக்கையாக அலசி கொண்டிருக்கிறார்கள்.

“இன்னும் சின்ன மாப்பிளப்பா அவரு கொஞ்ச நாள் ஆவும் அதெல்லாம் செட்டாவ” என்றான் பஸ்வா கிருஷ்ணன்.

உண்மையில் அவன் வந்தது தேநீர் எதாவது கிடைக்கும் என்ற நினைப்பில்தான். தேநீர் கிடைக்கவில்லை என்றாலும் கொஞ்சம் வாழ்வை மறந்து சிரிக்கலாம் என்கிற எண்ணமும் முறித்துவிடுவது போலிருந்தது. ஆளாளுக்கு பேச்சு நீண்டு அவனையே நோக்கி வந்தன. “என்ன சின்ன சகல, வேல ஒன்னையும் காணாமே நமக்கு, பன்னை(8) போட கொடுக்க மாட்டேங்குறீங்க, நீங்க பெரிய ஆளுவள பாத்துதான் போவீங்க” என்றான் மோகன்ராம்.

“என்ன புரியாம பேசிறீங்களோ போங்க, நானே வேலை இல்லாம இருக்கேன். எம் முதலாளி வேல கொடுத்தா பன்னை போட உங்களுக்கு கொடுக்காம யாருக்கு கொடுக்கபோறேன்”.

“என்ன இப்படி சொல்லிட்ட உன் வேட்டியில ஒட்டியிருக்கிற மஞ்ச நூல பார்த்தா தெரியலையா? நீ இன்னும் நல்லா கொழுத்துதான் இருக்கேன்னு”

அப்போது அவன் வேட்டியை குனிந்து பார்த்தான். அதில் ஒரு சிவப்பு நூல் தாம்பு கயிற்றில் ஒட்டியிருந்தது, அது எப்படியோ அவன் வேட்டியில் வந்துவிட்டது. “அது எப்போதோ இருந்ததுன்னே” என்றான் சலிப்புடன்.

பேச்சு வளர்ந்தது, சிலர் ஆத்துபாலத்தில் சிரத்தையாக நடைபயின்றனர். சிலர் திரும்பிச் செல்ல எத்தனித்தனர். “போலாம் நேரமாயிடுச்சுல்ல,” என்றார் ஒருவர். அதற்கு காத்திருந்ததுபோல மற்றவர்களும் கிளம்பினார்கள். இரண்டு மூன்று பேராக நடை நடந்தது.

“இது கிண்டல்தான் தம்பி, எல்லாருக்கும் தெரியும் நமக்கு வேலை இல்லேன்னு, முன்னமாறி சரக்கு வரதில்ல, நூறு இருந்த இடத்துல ஒன்னு ரெண்டு இருக்கு அதுவும் சொசைட்டி புடவ. உனக்கு குடுக்குற சுதா சில்க்ஸ் அண்ணே அவரே லாபம் இல்லேன்னு விட்டுடலாம்னு இருக்காரு. அவரு எங்க உனக்கு தாத்(9) கொடுக்க போறாரு. இனிமே சொசைட்டியிலயும் சேர முடியாது. இங்கிருந்தும் போவ முடியாது. எப்படி வாழ்றதுன்னுதான் தெரியல.

“நான் கேட்டுட்டண்ணே தாத் தாரேன்னுதான் சொல்றாரு, அத்தோட பழைய பாக்கி வேற இருக்கு. அத கொடுத்தால்ல பரவாயில்லை.”

“இப்ப எல்லாம் சேலைய எடுத்துக்கிட்டு மெட்ராஸூக்கு போயிகிட்டு இருக்கானுவ, தனியா தவணைக்கு கொடுத்து அது ஒரு வியாபாரம் நடக்குது எவ்வளவு கிடைக்குங்ற, அதுவும் கம்மிதான். பேசத் தெரிஞ்சவன் அதுல பொழைக்கிறான். மத்தவன்?”

“பிசிறு இல்லாம அழகா நெய்வண்ணே, புடவைய தூக்குனா அப்படியே ஸ்டிப்பா நிக்கும், எங்க அப்பாரே பெருமையா சொல்லுவாரண்ணே ஆனா எனக்கு பாரு தாத் கிடைக்க மாட்டேங்குது.”

“யாருக்கு கிடைக்குது உனக்கு கிடைக்கலன்னு சொல்ற, எல்லாம் இப்ப வேறவேல போயாச்சு, நீ இன்னும் புதுசா ஏதோ வரும்னு நினைச்சுகிட்டு இருக்க.”

“ஒரு வேலையும் இனிமே வராதுன்னா சொல்றீங்க?”

“கொஞ்ச நாளைக்கு பொடவைய விக்க போ, இல்ல உனக்கு தெரிஞ்ச வேலை செய்ய போ, கல்யாண சமையல் வேல, பரிமாறுற வேல இப்படி நிறைய இருக்கு, அப்புறம் இருக்கவே இருக்கு, புடவை காட்ற வேல, ஆனந்தம், மஹாராஜா எல்லாம் நம்ம ஆளுங்கதான்.”

“போங்கண்ணே சும்மா எதையாவது சொல்லிட்டு.”

“இப்படிதான் பஸ்வா கிருஷ்ணனும் சொன்னான், இப்ப போகலையா? எல்லாம் நேரம் வரும்போது வரும்பா. முன்னமே படிச்சவன் இருக்கான் பாத்தியா, அவன் வேற வேலைக்கு போயிட்டாம், அவம் புள்ளைகளையும் இதுல வரவுடாம பார்த்துக்கிட்டான், இதுல எதுவுமே இல்லாத நாமதான் திண்டாடுறோம்.”

நடந்துவந்த அலைச்சல் அவனை எரிச்சல் கொள்ள வைத்தது. சிவராயத் தோட்டம் வழியாக நடந்தான். வீடுகளின் வாசலில் பெருக்கி கோலம் போடும் படலம் தொடங்கியிருந்தது. எங்கேயாவது தறி ஓட்டும் சத்தம் கேட்கிறதா எனக் கூர்ந்து கவனித்தபடி வந்தான். ஆண்கள் யாரும் எழுந்திருந்ததாகவே தெரியவில்லை. டீ குடிக்கலாம் என்றால் காசில்லை. வச்சலாவிடம் கேட்டால் கோபப்படுவாள். நாக்கு நமநம என்கிறது. தேநீரின் கசப்பும் இனிப்பும் கலந்த கலவை சூடாக நாக்கில் படும்போது இதம்தான். சீக்கிரம் எழுந்துவிட்ட பசி வேறு.

சத்தமில்லாமல் வீட்டிற்கு வந்து தறிக்கு கீழே அமர்ந்துக் கொண்டான். வச்சலா வேகமாக வந்து எட்டிப்பார்த்துவிட்டு உள்ளே சென்றாள். அப்படி செய்கிறாள் என்றால் ஏதாவது சொல்லப்போகிறாள் என்று அர்த்தம். “என்ன வச்சலா பால் வாங்கிட்டு வரணுமா?” என்று சாதாரணமாக கேட்பது போல கேட்டான்.

“உங்களுக்கு எப்ப புத்தி வரப்போகுதோ, சொன்னா என்கிட்ட சத்தம் போடுவீங்க. ஒரு வேளைக்கு வழிய காணாம் இதுல வாக்கிங் வேற. அவங்களுக்கு சோறு தின்னு செரிக்கலன்னு போறாங்க. இல்லன்னா சுகரு இருக்குதுன்னு போறாங்க. உங்களுக்கு என்ன இருக்கு. பசி தான் இருக்கு.”

உள்ளிருந்து அவள் குரல் ஒலித்தது. கூடவே பாத்திரங்களின் தாறுமாறான ஓசைகள். அவள் விளக்குவதும் வேகமாக பாத்திரங்களை போடுவதில் இருக்கும் அலட்சியமும் தன் மீதான கோபம் என உணர்த்தியது. வார்த்தைகளில் வதைப்பதைத் தாண்டியும் செய்கைகளில் உணர்த்துகிறாள். சற்று தன் மீது இரக்கம் கொள்ளக் கூடாதா என்று மனம் ஏங்கியது. குழந்தைகள் வாணியும் நரேனும் தூங்குகிறார்கள், இன்னும் எழுந்திருக்கவில்லை. அவர்களின் செய்கைகளில் இரண்டு மட்டுமே இருந்தன. தின்பது, விளையாடுவது. பேசாமல் குழந்தையாகவே இருந்திருக்கலாம் என நினைத்தான்.

வச்சலாவின் குரலில் எதிரொலித்த சலிப்பு அவனை கோபம் கொள்ளவைத்தது. அதுவும் காலையில் அவள் எது பேசினாலும் அவனுக்குக் கோபமாக இருந்தது. அவள் வேண்டுமென்றே நல்ல காலை நேரத்தை கெடுக்க வேண்டும் என நினைப்பதுபோல எதையாவது சொல்லிக் கொண்டிருக்கிறாள். அதில் அர்த்தமற்ற வார்த்தைகள் வந்து விழுவதும் தன் எதிர்வினையை முகத்தில் தேடுவதும் அவனுக்கு கோபத்தின் நுனிமூக்கு வரை வந்து வேர்த்தது. அவள் அடிவாங்குவதை மனக்கண்ணில் நினைத்து அதைத் தள்ளிப்போடுவதில் கவனம் கொண்டான். காலையில் ஒரு டீ கொடுக்க நேரம் கழிப்பதை வேண்டுமென்றே செய்கிறாள் என தோன்றியது. அடுப்பில் பாலை வைத்துவிட்டு குப்பை பக்கெட்டை எடுத்துக் கொண்டு வெளியே தெருமுனைக்கு சென்று கொட்டிவிட்டு வந்தாள். வழியில் யாராவது நின்றால் அவளிடம் ஒரு பேட்டி கொடுத்துவிட்டு, இன்னைக்கு என்ன கொழம்பு என்ற வரை பேசிவிட்டு வந்தாள். வந்ததும், கையை கழுவி முகம் கழுவி அடுப்பின் முன் உட்காரும்போது யோசனை வந்தவளாக எழுந்து வீட்டைப் பெருக்க ஆரம்பித்தாள்.

“மசமசன்னு உட்காராம டீய குடிச்சிட்டு போயி கொண்டா சீனிய போயி பாத்துட்டு வாங்க.”

“சும்மா கத பேசாத, டீய எப்ப கொடுப்ப.”

“அவருகிட்ட பேசாம தப்பிச்சிடலான்னு பார்க்காதிங்க.”

“பல்லு தெரிச்சுடும் பாத்துக்க.”

கூட்டிக்கொண்டிருந்த விளக்கமாற்றை கீழே போட்டுவிட்டு நிமிர்ந்து நின்றாள்.

“என்னய அடிக்கலாம்னு மட்டும் நினைக்காதிங்க, நா போயி எங்க அண்ணன கூட்டிக்கிட்டு வருவேன்.”

கோபத்திலும் ஆச்சரியமாக இருந்தது, என்ன தைரியத்தில் அவள் என் முன் பேசுகிறாள் என்று. இந்நேரம் ஓடி டீய போட்டு கொடுக்காமல் என்ன செய்கிறாள் என்று கோபம் தலைக்கு ஏறியது.

“எனக்கு தெரியும்டீ யார பாக்கனும்னு.”

“ஆமா கிழிச்சீங்க, போய் எப்ப கேட்டிருக்கீங்க, அவரும் எப்ப வேணா வரச்சொல்லுமான்னுதான் சொல்றாரு, நீங்க போனாதானே.”

“எனக்கு எப்ப போகனும்னு தெரியும், இன்னோருமுற அதப்பத்தி பேசுன, மூஞ்சி திரும்பிக்கும்.”

சற்று சமாதானமானவளாக முகத்தை வைத்துக் கொண்டு “அவரே குறைச்சு நல்ல ரேட்டு புடவ தரேன்னு சொல்றாரு, அத எடுத்துகிட்டு போற பையெல்லாம் தரேங்குறாரு, அவரு தொடங்கின இடத்தையும் ஆட்களையும் காட்றேன்னு சொல்றாரு, அதுவும் சென்னைக்கு தான், மாசத்துக்கு பத்துநாளு போனாகூட போதும், அப்புறம் என்ன வேணும் உங்களுக்கு.”

“சரிசரி டீய கொடு, நா போயி பார்க்குறேன்.”

“எத்தன நாளைக்கு இப்படி சால்ஜாப்பு சொல்லுவீங்க, பாக்குறேன்னு சொல்லிட்டு வேற எங்கையாவது போய்ட்டு வரவேண்டியது, அதானே. இன்னிக்கு கண்டிப்பா பார்க்குறீங்க”

“இன்னிக்கு கண்டிப்பா”

அப்படி சொல்லும்போது அவன் தலை வேறுபக்கம் இருந்தது. பெருக்கிக் கொண்டிருந்தவள், நின்று அவனைப் பார்த்தாள். அவள் கண்களை சந்திப்பதைத் தவிர்க்க வேறு வேலையில் மூழ்கியவன் போல எதையாவது செய்தான்.

“புள்ளைகள பாருங்க, அவங்க என்ன பாவம் பண்ணுனாங்க. உங்களுக்கு தெரிஞ்ச வேலையதான செய்யச் சொல்றேன். அதுவும் கொஞ்ச நாளைக்கு”

ஆடாமல் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தான். கண்கள் ஒரே இடத்தில் சுவரை நோக்கி நிலை கொண்டிருந்தன, வலதுகை விரல்கள் மட்டும் வரிசையான தாளத்தில் அசைந்தன. பிளாஸ்டிக் கைப்பிடி கொண்ட விளக்கமாறை அவள் விட்டதும் டொக் என்ற ஓசையுடன் கீழே விழுந்தது. கீழே குனிந்து தறியை தாண்டி அவன் அருகில் வந்தாள். சிக்குபிடித்த அவன் தலையை கையால் கோதினாள். அவன் கண்கள் கலங்கியிருந்ததை பார்த்ததும் அவளால் நிலைகொள்ள முடியவில்லை. அவனை தன் மார்போடு அணைத்துக் கொண்டாள்.

“பிள்ளைகளுக்கு ஒரு வேளயாவது நல்ல சாப்பாடு கொடுக்கவேண்டாமா?, சுமாரான ஸ்கூலு, அதுக்கு பீஸ்கட்ட வேண்டாமா? நா உங்ககிட்ட வேற எதுவும் கேக்கல” என்றாள். அமைதியாக மெல்ல தலையசைத்தான். இரண்டு நிமிடம் இருந்திருக்கும். நம்பிக்கை அவள் மனதில் தோன்றியது. எதுவும் பேசாமல் விலகிச் சென்றாள்.

சத்தமில்லாமல் டீ கொண்டுவந்து கொடுத்தாள். அவளுக்கு அவன் மேல் என்றுமில்லாத நம்பிக்கை உண்டானது. அவனும் அவளைப் பார்த்து சிரித்து வைத்தான். தேநீரை குடிக்கும்போது சிரித்தபடி அவள் பேசியது அவனை அவள் உற்சாகப்படுத்துகிறாள் என்று நினைத்தான். டீ குடித்து முடிந்ததும் அவன் டம்ளரையும் எடுத்துக் கொண்டு அடுப்படி சென்றாள். பாத்திரத்தைக் கழுவும் வேலையை தொடர்ந்தாள்.

அங்கிருந்தபடியே பேசினாள். அவள் பேசுவது என்றுமில்லாமல் அன்பாக இருப்பது போலிருந்தது. “புள்ளைக இப்ப எழுந்திச்சுடும். நேத்து தேங்கா வித்த காசுல செலவுபோக பாக்கி 50 ரூவா இருக்கு, யேனம் தரேன், சாம்பாருக்கு, கிளப் இட்லி பத்து வாங்கிட்டு வந்துடுங்க, என்ன?”

“ம்”

“மத்தியானத்துக்கு சோறு வடிச்சு வெச்சிடறேன், நேத்து குழம்பு இருக்கு, ரசம் மட்டும் வெச்சுடறேன். தேவைனா நம்ம காசி கடையிலேந்து நாலு மசால் வடய வாங்கிக்குவோம். என்ன?”

“ம்”.

“எல்லாம் சரியாகும் கவலையே படாதிங்க. நா எங்கண்ணன்ட சொல்லியிருக்கேன், எல்லாம் நல்லதா முடியும் பாருங்க. எல்லாம் நமக்கு ஜாதக கோராறு தாங்க. எல்லாம் கீழவாசல் ராமநாதசாமிகிட்ட கேட்டப்ப சொன்னதுதான். இன்னும் ஆறுமாசம்தான், அப்புறம் தலைகீழா மாறிடும்னு சொன்னாரு”

“சரி”

“என்ன சரி, குளிச்சிட்டு வாங்க போயி, லேட்டு பண்ணிடாதிங்க, போயிட்டு வாங்க”

திருமணமான புதிதில் பூசினாற் போலிருந்தாள். உப்பிய கன்னங்கள். எடுப்பான பற்கள் பார்க்க லட்சணமாகவே இருந்தாள். சரக்குகளை வாங்கிவரும் மாலை வேளைகளில் சிறிய இடை நெளிய புன்னகையுடன் உள்ளிருந்து ஓடிவந்து கைகளில் வாங்கிக் கொள்வாள். மனைவி என்கிற கெளரவமும், புதிதாக வந்தடைந்த குடும்பம் என்கிற அமைப்பின் மீதான பெருமிதமும் அவளுக்குத் தேவையாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து போன வாழ்க்கையில் பத்தாண்டுகளுக்குப் பின் வற்றலாக மாறிவிட்டாள். மெல்லிய தேகத்தில் அவள் உயிர் அவள் கண்களிலிருக்கிறது. சுற்றி கருவளையத்திற்கு நடுவில் மங்கிய ஒளியின் அகல்விளக்கு போன்றிருந்தது அவள் கண்கள். அவளுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான். சோறும், ஆசை நிறைந்த வார்த்தைகளும்தாம்.

“ஏங்க, இந்த வெள்ளமணி நல்லா இருக்குங்களா, இன்னும்கொஞ்சம் நீளமா இருந்தா நல்லயிருக்கும்ல”

“ம், நல்லாயிருக்கு”

“போங்க, நீங்க பாக்கவேயில்ல”

வாணியும் நரேனும் எழுந்தபோது நன்கு விடிந்திருந்தது. அவன் வாங்கிவந்திருந்த இட்லியை நால்வரும் உண்டார்கள்.

“அப்பா எனக்கு ஒரு சீல கட்டுன பொம்ம வேணும்பா”

“அப்பா எனக்கு ஒரு ராணுவ காரு பொம்ம வேணும்பா”

“சரி, சரி வாங்கி தரேன்”

“எப்பப்பா வாங்குவீங்க”

“முதலாளி பணம் கொடுக்கட்டும், உடனே வாங்கி தாரேன்”

இருவரும் ஒரு பக்கமாக அவனைத் தள்ளி படுத்திருந்த அவன் மேல் ஏறி குதிரை விளையாடினார்கள். நான் முன்னாடி நீ பின்னாடி என்று இருவரும் மாறி மாறி குதித்தார்கள். இந்த சின்ன சந்தோசத்தை அவர்களுக்கு கொடுக்க வேண்டி அமைதியாக இருந்தான்.

“அப்பா, நா டிவில சூப்பர் சிங்கர்ல பாடறேன்பா என்னய கூட்டிக்கிட்டு போப்பா”, நரேன் கண்கள் பெரிதாக விரிய கேட்டான்.

“சரி கூட்டிக்கிட்டு போறேன். சரி போயி விளையாடுங்க” என்றதும் இருவரும் வெளியே ஓடினார்கள்.

2

இயல்பாக எதுவும் நடப்பது போன்று தோன்றும்போதே அதில் ஒரு மனதில் ஒரு விலகல் வந்துவிடுகிறது. தன் மனதிற்கு நெருக்கமில்லாதவைகள் அவளுக்கு மட்டும் நெருக்கமானவையாக மாறிவிடுகின்றன. அவளுக்கு எதுவுமே நெருக்கமானதுதான்.

இன்று வியாழக்கிழமை புது வேலை தொடங்கும் நாள். ஆனால் ஒன்றும் கைக்கு வரவில்லை. சொசைட்டி மில்லிலிருந்து தாத் வரவில்லை. எம்பிஆர் முதலாளியிடமிருந்து சரக்கு வரவில்லை. இன்று கஞ்சி(10) தாத் வாங்கும் சுரேந்திரன் மட்டும் நெய்து கொண்டிருக்கிறான். அதுவும் மிக சொற்பக் கூலிக்கு. மற்றவர்கள் வேறு வேலை அல்லது வாங்கி விற்கும் வேலையை செய்கிறார்கள். அதுவும் நாய் பிழைப்புதான். எங்கே சென்று முடியுமோ இந்த வாழ்க்கை என்று நினைத்தான்.

பதினோரு மணி வாக்கில் வச்சலாவின் பெரியம்மா பையன் கேசவன் சற்று அகண்ட பெரிய பையோடு வந்து நின்றார். தான் போகப்போவதில்லை என்பதை அறிந்து அவரையே அழைத்துவிட்டாள்.

“வாங்கண்ணே, உட்காருங்க.”

“மாப்ள, எப்படியிருக்கீங்க.”

“வச்சலா பாக்கும்போதெல்லாம் சொல்லிகிட்டு இருக்கும். அதுவும் ஒருவாரமா தினமும் சொல்லுச்சு. புதுவேல ஆரம்பிக்கட்டும்னு நான் தான் பேசாம இருந்தன். சத்யா நகர்ல ஒரு வேலை, புதுவீட்டுக்கு வயரிங்க் பண்ணவேண்டியிருக்கு, ஒரு வாரம் வேலை இருக்கும். ஒரு நாளைக்கு 300ரூ சம்பளம், அசிஸ்டண்டுக்கு 200ரூவாதான் கொடுக்கிறது வழக்கம். உங்களுக்காக கொஞ்சம் ஏத்தியிருகேன். என்னம்மா வாம்மா.”

“வாங்கண்ணே” சிரித்து பல்லாக மாற்றியிருந்தாள் முகத்தை, சற்றுநேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் பிரபுராம்.

“கைகளை வேகமாக துடைத்துக் கொண்டே இருங்கணே டீ போட்டுட்டு வாரேன்.”

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.”

“இன்னைக்கு வேல ஆரம்பம்மா, மாப்ளக்கி சால்ட்ரிங் வரைக்கு நல்லா தெரியும், அதான் அவர கூட்டிக்கிட்டு போயி வேலய கத்துக்கொடுத்தோனா வையி அப்புறம் அவரே தனியே எதையும் செய்யமுடியும். ஒரு வாரம் வேல இருக்கும் பாத்துக்க, ஒரு பதினோரு மணிக்கு போனோம்னா வையி ஏழு மணிக்கா வந்துடலாம்.”

“சரிங்கண்ணே.”

“இல்ல நா வரல.”

அவள் இதை எதிர்பார்த்ததுதான். ஆனால் உண்மையான அதிர்ச்சியாகவே அவளிடமிருந்து வெளிப்பட்டது.

“என்னாங்க சொல்றீங்க, நீங்க நேத்திக்கு போறேன்னு சொன்னதாலதானே அண்ணன கூப்பிட்டேன்.”

“யார்ட கத உடற, ஒரு வாரத்துக்கு முன்னமே அவர்ட சொல்லிட்டு நேத்து சொன்னேன்னு சொல்ற”

“இப்ப என்ன போவிங்களா மாட்டீங்களா.”

“இல்ல, நா போற மாரி இல்ல.”

அவள் கண்களில் கண்ணீர் முட்டி நின்றது. முகம் கோணலாக ஆக கைகளை பொத்தி அழுதாள். கேசவனின் முன்னால் அவளின் நாடகம் செல்லுபடியாக கூடியதுதான். ஆனாலும் அவன் விடுவதாக இல்லை.

“இன்னோரு நாளு பேசிட்டு போவோம் வச்சலா.”

“இங்க பாருங்க, நீங்க இப்ப இல்ல சொன்னீங்கன்னா, புள்ளைகள விட்டுட்டு அப்படியே அய்யம்பேட்டைக்கு எங்க அம்மாவீட்டுக்கு போயிடுவேன். நீங்களாச்சு உங்க புள்ளையாச்சு”

கேசவனின் கால் ஒன்று நொடிந்து போன ஒரு ப்ளாஸ்டிக் சேரில் அமர்ந்து கொண்டார். அவர் முன் நடந்த களேபரத்திலும் அவர் அமர்ந்த இருக்கை உடையுமோ என பயமேற்பட்டது பிரபுராமுக்கு.

“மாப்ள உட்காருங்க, ஒரு நாளைக்கு 300 மேனிக்கு ஒரு வாரத்துக்கு 2100 ரூவா வருது, இது 15 நாளைக்கு ஒரு முறை அறுக்கிற தாவணிக்கு கிடைக்கிற காசு. அதுவும் வேலை கிடைக்குதான்னா அதுவும் இல்ல. நானும் தறியில உட்கார்ந்தவன்தான், நாலுநாளைக்கு ஒருகா தாவணி அறுத்தவன் தான். ஆரணி கஞ்சில தாத் கிடைக்குது, அதுவும் ஜாங்க்லா(11). தஞ்சாவூர் கும்பகோணத்துல சுத்தமா இல்ல, திருபுவனத்துல கொஞ்சம் இருக்கு, ஆனால் லாபம் இல்லையே, போட்டி எக்கச்சக்கம், என்னா பண்ணுவீங்க, அது வரும்போது வேலை தொடங்குங்க, இப்ப என்ன யாரு உங்கள வேணான்னா, நா கூட இத விரும்பியா செய்யிறேன். தன்னால சரியாயிடும் மாப்ள. திருப்பி இங்க வரதானே போறோம்”

“இல்ல நா வரல, எனக்கு வேற வேல செய்ய விரும்பம் இல்ல.”

“ஏன் வரலன்னு சொல்றீங்க, அத சொல்லுங்க.”

“உங்களுக்கு தெரியாதா, உங்களுக்கு தெரியும்.”

“சொல்லுங்களேன் கேப்போம்.”

“கை காப்பு கட்டிக்கும், எலக்டிரிக் வேல கொஞ்சம் தெரியும் தானே, விரலல்லாம் தடிச்சுடும். அப்புறம் பாவுல நூல் சேக்க வராது. பண்ணாவுல நூல் கோர்க்க வருமா சொல்லுங்க.”

“இப்படிதாண்ணே சொல்றாரு, எல்லாத்துக்கு ஒரு சல்ஜாப்பு.”

“இது சல்ஜாப்பு இல்ல, எனக்கு வேல வரும்ணே, இந்த எம்பிஆர்ட, இல்ல சொசைட்டியில பாக்குறேன், அதுவும் இல்லேண்ணா கஞ்சி போயி வாங்கிக்றேன்.”

“அங்க இருக்குறங்களுக்குதான் முதல்ல கிடைக்கும். அதுவுமில்லாம செலவு அதிகம் வரும்படி கம்மி, தாக்குபிடிக்க முடியாமதானே வேற வேல தேடறோம் மாப்ள.”

“அதெல்லாம் பண்ணிடலாம், இப்பதான் சில பேர்ட பேசியிருக்கேன். பார்ப்போம்.”

“ஆமா நீங்க சொல்றது சரிதான், கை காப்பு கட்டிக்கிச்சுன்னா இதெல்லாம் செய்யவராது, வந்தாலும் அழகா இருக்காது.”

“அப்ப சோத்துக்கு என்னதாண்ணே வழி.”

“இரும்மா, மாப்ள, உங்களுக்கு கைவேல இல்லாமல் நா பாத்துகிறேன். வேற வேல எல்லாம் நிறைய இருக்கு, ஹெல்பர் வேல இருக்க வாங்க பேசிக்கலாம். விரலுக்கு கஷ்டமான வேலை கொடுக்கமாட்டேன். அப்படி கொடுத்த வேலைய விட்டு நின்னுகங்க. இதமட்டும் முடியாதுன்னு சொல்லாதிங்க, நா ஒத்துக்க மாட்டேன்.”

மெளனமாக இருந்தான் பிரபுராம். அவனால் எதையும் பேசமுடியவில்லை தன்னை மடக்க வேண்டும் என நினைப்பது அவனுக்கு புரிந்தது. கடைசியாக “சரி” என்றான்.

“அப்பாடா”, என்று கைகளால முகத்தை மூடி ரொம்ப சலிப்பை காட்டினாள் வச்சலா.

சட்டையை மாட்டிக் கொண்டு அவருடன் சென்றான். அவரிடம் புதுவகை பைக் இருந்தது. அவற்றில் சில இரவு ஒளி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு பளபளப்பாக இருந்தது. மற்ற வண்டிகளைவிட சற்று அகலம் குறைந்திருந்தது. கேரியரில் தடித்த கயிறு சுற்றப்பட்டிருந்தது, அது எதற்காக பயன்படும் என யோசித்துக் கொண்டிருந்தான். அவன் ஏறி அமர்ந்ததும், சுக்சுக் என்ற மெல்லிய ஒலியுடன் சீறீயது. வச்சலா பலமாக கையை ஆட்டினாள்.

காற்று பலமாக முகத்தில் அடிக்க மேம்பாலத்தை தாண்டி மாரியம்மன் கோவில் சாலையில் வழுக்கியபடி ஓடியது. சுழலும் சக்கரத்தில் காலைவிட்டுவிடலாம் என்கிற பயம் அவன் மனதில் இருந்தது. சாலையின் அகலம் பெரிய மைதானத்தை ஒத்திருந்தது. யாரும் போகாத இடத்தில் சாலை எதற்கு என யோசித்தான். சின்ன வாகனங்கள் சாலையிலேயே இல்லை என நினைத்தான். பெரியசாலையில் இடது பக்கத்திலிருந்து வலதுபக்க சின்ன சாலைக்கு திரும்ப சற்று நேரமானது. அதன் மற்றோரு சாலையில் வீடுகள் சற்று தள்ளித் தள்ளி வரிசையாக வந்தன. குறுக்குத் தெரு, பிரதான தெரு என்று மாறிமாறித் திரும்பினார். அது வளர்ந்து வரும் புதிய நகர் என்று சற்று பிந்தியே புரிந்தது. திருப்பங்களில் ஒரு பக்கம் சாய்த்து அவர் லாகவமாகத் திருப்பினார். காற்றில் பரவியிருந்த தூசிகளை எண்ணிவிடலாம் என தோன்றுமளவு பரவலாக சுற்றித்திரியும் தூசுப்படலத்தை கொண்ட புதியதாகக் கட்டப்படும் வீட்டின் முன் வண்டி நின்றது.

உள்ளே வந்ததும் கேசவனின் உடல்மொழி மாறியிருந்தது. சற்று அழுத்தமான தொனியில் வார்த்தைகள் வெளிவந்தன. கையில் வைத்திருந்த வண்டிச் சாவியைச் சுழற்றி ஆட்டிக் கொண்டிருந்தார். அவர்கள் சாமான்கள் வைக்கப்பட்டிருந்த ஒரு அறையில் அவர் கொண்டு வந்திருந்த சாமன்களை ஓரமாக வைத்து சாவியைப் பொதுவாக இருந்த ஒரு மேசையில் தூக்கிப் போட்டார். அதன் பெரிய ஒலி அறையை நிறைத்தது.

“வாங்க மாப்ள, நிறைய பேரு வேலைய கேட்டுகிட்டு இருக்கானுவோ, நம்ம ஆளுங்கள வேலைக்கு வைக்கமுடியாது. எப்பப்பாரு கதபேசிகிட்டு சுத்திகிட்டு இருபானுவோ. ஆனா உங்களுக்கு சரின்னு சொன்னது தங்கச்சிகாகதான்.”

வீடு பெரிய படகிற்குள் இருந்தது போன்றிருந்தது. பெரிய கூடம், சமையலறை, அறைகள் என்று தனியாக இருந்தன. மரவேலைகள் கூடத்தில் நடந்துக் கொண்டிருந்தன.

“நம்ம பயல்கள விட்டு வடயோ, பஞ்சியோ வாங்கியாறச் சொல்றேன், டீய குடிச்சிட்டு வேலய ஆரம்பிக்க வேண்டியதுதான்.”

உள்ளே நாலைந்து பேர் இருந்தார்கள். ஆளுக்கு ஒரு வேலை இருந்தது. ஒருவர் கருவிகளை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தார். ஒருவர் சட்டையையும் வேட்டியையும் கழற்றிவிட்டு கறைகள் படிந்த டிராயர் அணிந்து மேலுக்கு பணியனுடன் நின்றார்.

“மகேசு இங்க வா” என்றார். ஒல்லியான மகேஷ் ஓடிவந்து “என்னண்ணே” என்றான். “தூக்க நல்லா கழுவி எடுத்துக்கிட்டு வடை ஆறு டீ ஒரு ஆறு வாங்கிட்டு வா” என்றார். மகேஷ் கிளம்பியதும் “இவருதான் நமக்கு புதுசா வந்திருக்கிற ஹெல்பர், இப்பதான் தொழில் கத்துகிறாரு.” மற்றவர்களிடம் அறிமுகம் படுத்திவைத்தார். சட்டையை கழற்றி ஆணியில் மாட்டி, வேட்டியை தூக்கிக் கட்டிக் கொண்டார். அவனும் சட்டையை கழற்றி வைத்துவிட்டு சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அவர்களில் ஒருவர் அவனிடம் “இதெல்லாம் எடுத்துக்கிட்டு போயி அடுப்படி பக்கத்துல ஒரு நட இருக்குதுல்ல அங்க ஒரமா வையு,” என்றார். பலவகையான எலக்டீரிக் சாமான்கள். இதுவரை கைகளுக்கு பழக்கப்படாத பொருட்களை தூக்குவது போன்ற பிரமை. கைகளை வேட்டியில் துடைத்துக் கொண்டேயிருந்தான். ஒவ்வொன்றாக எல்லாவற்றையும் கொண்டு வந்து வைக்கும்போது டீ வந்திருந்தது.

வடையை சாப்பிடும்போதுதான் அவனுக்கு பசி இருப்பது தெரிந்தது. அகோர பசி. வயிற்றின் உள்ளறைகளில் ஆங்காங்கே வலி எடுத்தது. கனமான பொருட்கள் அங்கே தொங்கிக் கொண்டிருப்பது போன்றிருந்தது. வடையும் டீயும் உள்ளே சென்றதும் அவை இலகுவாக மாற ஆரம்பித்தன. வச்சலா கேட்பது இதைதான். எத்தனை நாட்களுக்கு வெறும் ரேசன் அரிசியை மட்டும் தின்பது என்று. கடந்த மூன்று ஆண்டுகளாக வேலை எதுவும் வராமல் இதே நிலைமைதான். எப்போதாவது ஒரு தாத் வரும் அதை நெய்து கொடுத்தும் சரியாக கூலிவராது. பசியை வெல்ல என்ன செய்வது? பசியோடு இருக்கப் பழகிவிட்டேன். ஆனால் வச்சலாவாலும் குழந்தைகளாலும் இருக்க முடியவில்லை. எட்டுவயது வாணியாலும் ஐந்துவயது நரேனாலும் இருக்க முடியாதுதான். தன் இரண்டு அண்ணன்களைப் போல என்ஜினியரிங்கோ அல்லது எதாவது ஒரு டிகிரியோ முடித்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது.

தொடர்ச்சியாக வேலை இருந்தது. இதை அங்கே வைப்பது எடுப்பது என்று இடம் மாறி மாறிச் செல்ல வேண்டியிருந்தது. கேசவன் தட்டுஏணியின் மேல் நின்றுகொண்டு தன் கருத்த பனியனில் கோணலாக விடைத்த நெஞ்சுடன் அவனை அழைத்து “போயி இந்த சைசுல இருக்கும் போல்ட் நாலு, இந்த சைசுல நெட்டுல நாலு இந்த ஸ்ரூல நாலு வாங்கிட்டு வாஙக. மெயின் ரோட்டு மேலேயே கட இருக்கு, பேரு ஜெய்கணேஷ்னு போட்டிருக்கும் அங்கதா வாங்கிட்டு வாங்க போங்க.” என்றார்.

வெளியே வந்ததும் சற்று அயர்ச்சி குறைந்திருந்தது. உள்ளே மனிதர்களிடம் மாட்டிக்கொண்ட சிறுவிலங்கிடம் இருக்கும் பயம் போல இருந்தது. வெளியே வந்ததும் காற்றில் இருந்த வேகம் சற்று உற்சாகம் ஏற்படுத்தியது. தனித்தனி வீடுகள் ஒருவர் ஒருவருடன் பேச முடியாதபடி இருந்தது வீடுகளின் தூரம். சாலையின் வழிகள் பிடிபடவில்லை. நான்கு தெருக்களாவது இருக்கும் முக்கிய சாலை வருவதற்குள் போதுமென்றாகிவிட்டது. ஜெய்கணேஷை கண்டுபிடித்து பொருட்களை வாங்கிக் கொண்டான். திரும்பி வரும்போது வாயில் கப் கவிழ்க்கப்பட்ட பச்சைவண்ண பெயிண்ட் முகத்தில் மூசப்பட்ட பச்சைவண்ண மேலாடையும், அதே வண்ண கால்சராயும் அணிந்து வளைந்து நிமிர்ந்து நின்ற வாலுடன் வந்துக் கொண்டிருந்தான் ஒருவன். ஒவ்வொரு வீட்டின் முன் நின்று சிங்கா இசைக்க பாடல்களைப் பாடினான். கிட்ட வந்ததும் சட்டென திரும்பி “சாமி எப்படியிருக்கீங்க,” என்றான்.

வாய் மூடியிருந்ததால் அனுமானிக்க முடியவில்லை. கப்பிற்கு சிகப்பு வண்ணம் பூசப்பட்டிருந்தது. நான்கு பக்கமும் சிறுநூலால் துளையிட்டு காதில் கட்டப்பட்டிருந்தது. “நான் தான் ராமா” என்றான். “ஓ ராமா, எப்படி இருக்கீங்க, பாத்து ரொம்ப நாளாச்சே.”

“ஆமா சாமி, ஏதோ போகிகிட்டிருக்கு, ஒன்னும் வரும்படி இல்ல சாமி.”

“ராமர் வேஷமில்ல போடுவீங்க, ஹார்மோனிய பெட்டி வேற எடுத்து வருவீங்க, இப்ப என்ன அனுமான்?”

“ராமர் வேஷம் போட்டா காசு தேற மாட்டேங்குது சாமி. அனுமன் போட்டா குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்குது. புள்ளைக சந்தோஷமா பின்னாடியே வருதுங்க, அவங்க சந்தோஷத்துல அப்பா அம்மா எதாவது கொடுக்குங்க.”

“இங்கெல்லாம் வீட்டுக்க உள்ளேந்து வரவே நேரமாகுமே, நீங்க பாடறது வேற கேட்குமா?“

“நிறைய வீட்டுகள்ள எதுவும் தரமாட்டாங்க, கண்டுக்கவும் மாட்டாங்க, சில வீடுகள்ள பத்து இருவதுன்னு கொடுப்பாங்க அது போதும்.”

முகம் கெஞ்சலாக மாறுவதை அவர் கண்களில் கண்டான். கண் ஓரங்களில் பளபளக்கும் மஞ்சள் நிற சாந்து பூசியிருந்தார். சாந்தை ஒட்டி சிறுசிறு புள்ளிகளாக கருப்பு மை வைக்கப்பட்டிருந்தது. சற்று தொலைவிலிருந்து பார்த்தால் கண்களை சுற்றி கருமை திருடர் மறைத்துக் கொள்ளும் கண்கள் மட்டும் தெரியும் கருப்பு துணி மாதிரி தெரியும். வெண்ணிற தாடிக்காக பஞ்சுபோன்ற துணி தாடையில் ஒட்டப்பட்டிருந்தது. கண்களை சுற்றி மஞ்சளும் கருமைக்கு அடுத்து மற்ற இடங்களில் பச்சை வண்ணம் பூசியிருந்தார். நெற்றியில் அழகிய நாமம், அதன் கீழ்நுனி மூக்குவரை வந்தது. அட்டையில் செய்த பளபளக்கும் பேப்பரால் ஒட்டப்பட்டு நடுவில் பிளாஸ்டிக் கல் பதித்த கிரிடம் தலையில் சற்று கோணலாக நின்றிருந்தது. காதில் குண்டு தொங்கும் ஒரு ப்ளாஸ்டிக் தோடு, பலவகை மணிகள் பல சுற்றுகளாக கழுத்தை இறுக்கி சுற்றியிருந்தன.

சிகப்பும் மஞ்சளும் இடையிடையே வரும் வெண்ணிற ப்ளாஸ்டிக் மாலை அணிந்திருந்தார். வெற்றிலைப்போன்று துருத்தியிருக்கும் துணிக்குவியலாக உள்ள மேலாடை மேல் ஒரு மடித்த சால்வே ஒன்று போட்டிருந்தார். கீழே ஜிகினாக்கால் பதித்த கால்சராய். செருப்புகளற்ற கால்கள். உடைகள் பளபளப்பாக இருப்பது போன்றிருந்தாலும் கூர்ந்து கவனித்தால் கருமை படிந்து அழுக்கடைந்தது தெரியும். கிட்டேவரும்போது முடை நாற்றம் அவரிடம் அடித்தது.

“டீ பலகாரம் எதாவது வாங்கி கொடுங்க சாமி”

கேட்கவந்த கேள்வி அவனுக்கு மறந்து போனது. சொந்த தொழிலைவிட்டு புதிதாக வேலைக்கு வந்திருப்பதும், அதுவும் எடுபுடி வேலைதான். இன்றைக்கு சம்பளம் கிடைக்குமா என்கிற சந்தேகம் வேற. இன்று கொடுத்தால் தான் நாளைக்கு சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்வாள் வச்சலா.

“நா இப்ப தினகூலி வேலைக்குதான் இருக்கேன் ராமா. இன்னிக்கு சம்பளம் வந்தாதான் எதுவுமே. நிஜமாவே ஒரு பைசா இல்ல. அதுவும் ஒரு மாசமா சரியா சாப்பாடு வேற இல்ல.”

“ஒரு பட்டு துணியாவது கொடுங்க சாமி. நல்ல வேஷம் போட முடியல. உங்க பேர சொல்லி வெச்சுகுவேன் சாமி”

“பாக்கலாம். இன்னிக்கு எதுவும் எங்கிட்ட இல்ல. சரி நா வரேன்”

எதிரில் கேசவன் வந்துவிட்டார் பைக்கில். “என்ன மாப்ள, போனா வரமாட்டியா, அதுவும் அந்த ஆளுகிட்ட கதபேசிகிட்டு இருக்கீங்க”

“கதயெல்லாம் இல்லண்ணே, சும்மா பேசிகிட்டிருந்தார், தெரிஞ்சவரு காசு கேட்கிறாரு”

“அதுக்கு இவ்வளவு நேரமாவா, உங்களால அங்க வேல நின்னுபோயி கிடக்கு, உங்கள இப்படி அவசரத்துக்கு வேலை செய்ய ஆளுவேணும்னுதான் கூட்டியாந்தது. நீங்க கத பேசறதுக்குஇல்ல”

ராமா முன்னால் அவனை திட்டியதுதான் சங்கடமாக இருந்தது. “கான்டிராக்டரு என்னையதான் திட்டுவான், சட்டுன்னு வண்டியில ஏறுங்க,” கொடுக்கும் ஒவ்வொரு பதிலளிருந்து வார்த்தைகளை எடுத்து மேலும் பேசித் திட்டுவார் என தோன்றியதும் அமைதியானான் பிரபுராம்.

3

எல்லா பக்கங்களிலும் காற்று வீசிக் கொண்டிருந்தது. தலைகலைந்து ஆடைகள் தாறுமாறாக அவன் உடலில் ஆடிக் கொண்டிருந்தன. இரவு வீட்டிற்கு வந்தபோது அவன் காலையிலிருந்து வெறும் வடையும் டீயும் மட்டுமே சாப்பிட்டு வந்தது நினைவிற்கு வந்தது. ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் ஓடிவந்து அவனை கட்டிக் கொண்டு “அப்பா நீ எங்கப்பா போயிருந்த” என்றார்கள். இதுவரை வெளியே சென்றதை காணாத பிள்ளைகளின் புதிய கவலை. “அப்பா தினமும் இப்படிதான் போவியாப்பா.” நாளை நடப்பதைப் பற்றி யோசிக்க மறுத்த தன் மனதை பெட்டியின் அடியில் மறைத்து வைப்பதுபோன்று மறைத்துக் கொண்டான்.

வச்சலா சிரித்த முகத்துடன் அவனை வரவேற்றாள், அவர் கொடுத்த 200 ரூபாயை உடனே அவளிடம் கொடுத்தான். மிக நீண்ட நாட்களுக்குபின் சிரித்த முகத்துடன் அவளை கண்டது அன்றுதான். ரசமும், பொட்டுகடலை துவையலும், அப்பளம் சுட்டும் வைத்திருந்தாள். “சாப்பாடு ரெடியா சூடாயிருக்கு சாப்பிட்டுருங்க இப்பவே” என்றாள். உண்மையில் பெரும் பசிதான். ஆனால் மெதுவாக, கவனமாகத் தின்றான். அதிகம் தின்று அவளுக்கும் பிள்ளைகளுக்கும் இல்லாமல் செய்துவிடக்கூடாது என்கிற பயம். ஒரு முறை அப்படி சாப்பிட்டு அவளிடம் திட்டு வாங்கியிருந்தான். பொறுமையாக அதிகமாகவே பரிமாறினாள். “பசியில இருப்பீங்க நல்லா சாப்பிடுங்களேன்” என்றாள். அவன் மனதில் பசியே இல்லை. உணவு குறித்த சிந்தனையே இல்லை. உணவு வெறும் சொற்களாகவே மனதில் இருந்தது. தறியின் ஈரவாசம் நாசியின் நுனியில் படபடத்தது. அது இல்லாத நாட்கள் தனக்கு சாதகமான நாளாக இல்லை என்பதை அறிந்திருந்தான். எப்போது அந்த வாசத்தை அவன் கண்டுணர்ந்தான் என்று நினைவில்லை. மிக இளவயதில் அம்மா நூல் சுற்ற விடும்போது அந்த வாசத்தை கண்டுணர்ந்ததாக நினைத்தான்.

“ஏங்க சாப்புடுங்க எங்க யோசனையாக இருக்கீங்க, இன்னும் ஏங்கிட்ட சரியா பேசல நீங்க.”

அவள் கண்களில் இப்போது கோபம் இருந்தது. முழு நினைவிற்கு திரும்பிவந்தான். அவள் கோபத்தை வளரவிடக்கூடாது என்பதை முதன்முதலாக புரிந்தது.

“வச்சலா, இன்னிக்கு சாப்பாடு நல்லா இருக்குமா, இந்த துவையல்தான் அருமையா இருக்கு.”

“முகத்துல ஒன்னும் அப்படி தெரியலையே, நீங்க ஏதோ நா உங்களை தண்ணியில்லாத கிணத்துல தள்ளிவிட்ட மாதிரியில்ல முஞ்சிய வெச்சுறிக்கிங்க.”

பொறுமையாக கண்களை மூடிக்கொண்டான். அவன் உடலில் சில இடங்களில் விதவித வலிகள் நிறைந்திருப்பது போன்றிருந்தது.

மெல்ல கண்களை திறந்து “போயிட்டு வந்ததுல, கொஞ்சம் களப்பா இருக்குடி, வேற ஒன்னுமில்ல, நீயும் சாப்பிட ஆரம்பி,” என்றான்.

பக்கத்தில் அமர்ந்திருந்த வாணி “அப்பா இங்க பாரேன் நான் என்ன பண்றேன்னு,” என்று சோற்றுடன் அப்பள துண்டை வைத்து அதை வாயில் போட்டு மெல்லாமல் அப்படியே விழுங்கி காட்டினாள். “அப்பா இங்க பாரு”, என்று நரேன் விழுங்கி காட்டினான். இருவருக்கும் “இஸ்” என்று அவன் ஆச்சரியத்தை காட்டுவதாக ஒலி எழுப்பினான். அப்படி செய்யவில்லை என்றால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்களின் பெருமித சிரிப்பு வரும்போதே, “ஆமா, இப்படியே அவங்கள கெடுங்க, தொண்டைல மாட்டிக்க போவுதுடி கழுத,” என்றாள்.

அவனை கட்டிக் கொண்டு படுத்தன பிள்ளைகள். இருவரும் தூங்கியதும் கைகளை பிரித்து விட்டு தனியே தள்ளி படுத்துக் கொண்டான். உடல் களைப்பாக இருந்தது. மனதின் களைப்பு தான் உடல் முழுதும் இருப்பதாக நினைத்தான். மெல்லிய குறட்டைஒலி வச்சலாவிடமிருந்து வந்தது. அவள் தூங்குவதுபோல் நடிக்கிறாள் என்கிற எண்ணம் அவன் மனதில் ஒரு அச்சமாகவே இருந்தது.

சிவந்த முகத்தில் குனிந்த தலையுடன் நாணத்தோடு நின்ற அவள் முகம் நினைவிற்கு வந்தது. கன்னங்களில் செவ்வண்ணம் பூசப்பட்டிருந்தது. கண்களில் கருமை சற்று அடர்ந்திருக்க இமைகளை தூக்க சிரமப்படுவது போன்றிருந்தாள். தலையில் பலவண்ணங்களில் பூச்சூடியிருந்தாள். அவள் திரும்பும் சமயங்களிலெல்லாம் நகைகளின் சிறுமணிகளின் ஓசை. மணப்பெண் எந்த அறையில் இருக்கிறாள் என்பதை அந்த ஓசைகளை கொண்டே கணித்துவிடமுடியும். சிறு டம்ளரில் பால் கொடுத்தபோது, உதட்டு சாயத்திற்கு பயந்து சற்று மேலே தூக்கி குடித்துவிட்டு, குனிந்த தலையோடு டம்ளரை தான் வாங்கும் விரல்களை நோக்கினாள். இன்று நினைக்கும்தோறும் அவள் கொண்டிருந்த வாசனைதான் அவள் முகத்தோடு நினைவிற்கு வந்தது.

“ம்… கூப்டீங்களா…” தூக்கத்தில் விழித்து குழம்பிய கண்களோடு தலைதூக்கி நோக்கினாள். மேல் கூரையை பார்த்து யோசித்தவனுக்கு இக்கேள்வி அரட்டிவிட்டது. “என்ன? இல்ல தூங்கு,” நடுஇரவில் தூங்கும்போதுகூட அவள் ஆழ்ந்து தூங்குவதில்லை. ஒன்றை சொல்லி “அத ஊறவைக்கலையே,” என்று எழுந்தமர்ந்து கொண்டைக்கு முடிச்சிடுவாள். காலையில் கனவுகள் துல்லியமாக அவளுக்கு நினைவிருக்கும். குழந்தைக்குரிய முகபாவனையில் அதை விவரிக்கையில் அவள் அதன் அர்த்தங்களை தேடுகிறாள் என தோன்றும்.

தூக்கத்திலேயே எழுந்து வாணியை தனியே படுக்கவைத்தாள். அருகில் படுத்து அவன் தோளில் கையை போட்டு கொண்டாள். மெல்லிய குறட்டை ஒலி கேட்டதாக தோன்றியது. அவள் அணிந்திருந்த நைட்டி தோளில் இறங்கியிருந்தது. அவள் தோளில் துருத்தியிருந்த முட்டு எழும்பை தடவினான். நைட்டியை சரிசெய்தபோது, மென்னையாக அவள் குரல் ஒலித்தது “ஏங்க இன்னும் தூங்காம இருக்கீங்க’, அவன் எதுவும் பதிலளிக்காமல் இரவுவிளக்கின் மினுங்கலைக் கவனித்துக் கொண்டிருந்தான். “

“வேலைக்கு போனது உங்களுக்கு பிடிக்கலையா…”

“சேச்சே அதெல்லாம் இல்ல, தூக்கம் வரல”

“ஏம்மேல உங்களுக்கு கோவம் தானே”

“இல்லல்ல அதெல்லாம் இல்ல, நீ நல்லதுதானம்மா பண்றே”

“இல்ல, நீங்க என்னய திட்டுனீங்க”

“இன்னிக்கு வேல செய்ற இடத்துல ஒரு ஆள பார்த்தேன். தலையாட்டி பொம்மயல்லாம் செய்சு விக்கிறவராம், ஒன்னும் வரும்படி இல்லன்னு, பூச்சு வேலைக்கு வந்துட்டாரு”

அமைதியாக லேசாக தலைதூக்கி பார்த்தாள்.

“இப்பா நல்ல காசு வருதாம், எல்லாம் ஒன்னுதானங்கன்னாரு”

“ஏங்க இப்படி பண்றாங்க, இந்த அரசாங்கம் எதாவது பண்ணி வேல கொடுக்கலாம்ல.”

“ம், புதுசா தொழில் வரவர இப்படிதான்”

ஒரு காலை மேலே போட்டு இறுக அணைத்துக் கொண்டாள். அவள் தலைமுடி ஃபேன் காற்றில் அவன் நாசியில் அலைந்தது.

அன்னிய முகத்துடன் கேசவன் காலையில் கோபப்பட்டது நினைவிற்கு வந்தது. அவர் நாளை வேலை இல்லை என்று சொல்லக்கூடும் என நினைத்தான். வேகமாக தூங்க ஆரம்பித்தான். கண்களில் தூக்க சுழற்சி ஏற்பட்டபோது, அவன் கன்னத்தை ஒரு கையால் வருடிக் கொண்டிருந்தாள்.

4

வெங்கல பாத்திரத்தின் ஒலிபோல கணீரென்று கேட்டது அந்த குரல். இடையே விட்டுவிட்டு ஒலித்த ஹார்மோனியத்தின் ஒலி தேய்ந்து போன சப்பரத்தை இழுத்தது போன்றிருந்தது. கொல்லையில் துணிகளை துவைத்துக் கொண்டிருந்த பிரபுராமுக்கு அந்த ஒலி கேட்டதும் சற்று ஆச்சரியமடைந்தான். கிணற்றிலிருந்து வெளிவரும் பாம்பு போல ராமாவின் குரலும் முகமும் அடிமனதிலிருந்து வெளிவந்தது.

அந்த குரலை பல மாதங்களுக்கு முன்பு கேட்டது. இன்றும் அதில் அதே கம்பீரம் அதே தெளிவு எங்கே நிறுத்த வேண்டும் எங்கே உச்சஸ்தாயில் செல்லவேண்டும் என்கிற தெளிவு. கேட்பவரை நோக்கும் குரல் அல்ல அது. தன்னை திருப்திபடுத்த நினைக்கும் குரல். தன்னலமற்ற சொற்களில் குவியல் கூட்டிலிருந்து கிளம்பிய தேனீக்கள் போல நாலாதிசைகளிலும் செல்கிறது.

ராமா இன்று சிவப்பு நிற உடையணிந்திருந்தார். முகத்திலும் கைகளிலும் நீலவண்ணம் தீட்டப்பட்டிருந்தது. கருத்த தோலின் நிறம் அவ்வண்ணத்தின் அடியில் தெரிந்தது. பெரிய நாமமும் தலைப்பாகையும் பொருத்தமற்றிருந்தன. பஞ்சகச்சமாக அணிந்திருந்த அரக்கு கரை கொண்ட வெள்ளை வேட்டி மண்நிறத்தில் அங்காங்கே கிழிந்திருந்தது. அவர் அறிந்திருக்கவில்லை என தோன்றியது. மானத்தை மறைக்கும் எண்ணத்தை அவர் என்றோ விட்டிருந்தார். பின்பக்கம் அவர் கெளபீனம் தெரியுமளவிற்கு கிழிசல் ஒரு கோடாக பிட்டம் வரை சென்றது.

அரசர் வந்து பணிய உச்சித வீரன்
மெச்சிய வீரன்
குண்டு கடகமாட
தனுவு மாயு மேந்தி
பருதிகுலேசன்
சர்வ விலோசன்

பாடி முடித்தான். வேறு பாடல்களை அவன் மனம் தேடிக் கொண்டிருந்தது. ஆனால் பசியோ என்னவோ, கழுத்தில் மாட்டின ஹார்மோனியப் பெட்டி நாடாவை மெல்லத் தலைவழியாக கழற்றி திண்ணையில் வைத்தான். “அய்யா…. சாமீ…” என்று குரல் எழுப்பினான். சொன்னவுடன் தனக்கு சம்பந்தமில்லாதவன் போல் எதிர் திண்ணையில் சப்லாகட்டி அமர்ந்துக் கொண்டான். இமைக்காத கண்களுடன் வாயில் இருக்கும் வெற்றிலை துணுக்கை நாவால் எடுக்க முயற்சிப்பது அவன் சிந்தனையில் இருக்கிறான் என காட்டியது.

மறைந்து தூரத்திலிருந்து கூர்ந்து ராமாவை கவனித்துக் கொண்டிருந்த பிரபுராமை பார்த்தாள் வச்சலா.

“நா பேசிக்கிறேன் நீங்க வராதிங்க,” என்று முறைப்பாக சொல்லிவிட்டு கையிலிருந்த பாத்திரத்தை தொப்பென்று வைத்துவிட்டு கிளம்பினாள்.

மூன்று கட்டுகள் கொண்ட வீடு. நடுகட்டில் பிரபுராமின் குடும்பம் இருந்தது. கடைசி கட்டில் பலராமனின் ஒரு பெரிய குடும்பம் இருந்தது, முதல் கட்டில் வீட்டு முதலாளி அம்மா தனியா இருந்தாள். காது சரியாக கேட்காது ஆனால் வாசலில் யாராவது நின்றால் தெரிந்துவிடும். யாரை பார்க்க வருகிறார்களே அவர்களை வைது காலி செய்ய பயமுறுத்துவாள். நடையில் வேகமாக வந்து நிலைப்படியை தாண்டி நின்றாள். அவளை கவனித்ததும் ராமா எழுந்துநின்று குனிந்து கைகளை குவித்து கும்பிட்டு வணக்கம் வைத்தான். கம்பீரமான ராமன் ஒரு கணம் தன்நிலை மறந்து பணிந்து நிற்கிறார்.

“என்ன?”

“முதலாளி இல்லைங்களாம்மா?”

“அவரு உனக்கு முதலாளியா? அவரே வேலை இல்லாம இருக்காரு, நெய்யறத விட்டாரு, வெளிவேலைக்குதான் போறாரு, அங்க அவர பாத்துக்க, இப்ப குழந்தைக ஸ்கூலுக்கு போற நேரம், வேல நிறைய கிடக்கு, போயிட்டு அப்புறமா வா”

முகத்தை ஒருமாதிரி சுருக்கமாக வைத்துக்கொண்டு “அம்மா சாப்பிட்டு ரெண்டு நாளாச்சுமா, எதாவது கொடுதாயி “

“நாங்களே இன்னும் சாப்பிடல, காலைல என்ன கிடைக்கும்”

“எதாவது காசி இருந்த கொடுங்கம்மா”

“அதுக்குதான் இப்ப அலையறாரு, இன்னொரு நாளைக்கு வா”

“எதாவது துணியிருந்தா கொடு தாயி”

“கொடுப்பாங்க கொடுப்பாங்க, ஒன்னுமில்ல போயிட்டு வா”

உள்ளே நடையை கட்டினாள். பிரபுராமை காணவேண்டுமென்ற ஆர்வம் அவன் மனதில் அரித்தெடுத்தது.

அவர் எதாவது கொடுக்கலாம். அல்லது நான்கு பாடல்களை பாடச்சொல்லி கேட்பார். டீயோ பஜ்ஜியோ கட்டாயம் வாங்கி தருவார்.

மெதுவாக ஹார்மோனியத்தின் வாரை எடுத்து கழுத்தில் மாட்டிக் கொண்டான். நடையில் சில மனிதர்கள் இங்குமங்கும் நடந்தபடி இருந்தார்கள் ஆனால் அது மங்கலாகவே தெரிந்தது. அதில் பிரபுராமை கண்டுபிடிக்க முடியவில்லை.

உள்ளே வந்தவள் நேராக அவனிடம் வந்தாள். “ஏங்க அவனுக்கு ஏன் பயந்துகிட்டுருக்கீங்க, இல்லென்னா இல்லேன்னு சொல்ல வேண்டியதுதானே, ஸ்கூலுக்கு புள்ளைகள் கிளம்புவோமா இல்ல இந்தாள பாப்பீங்களா?”

“யாரு வச்சலா, கொடுக்கறேன் சொன்னா, என்கிட்டேயே காசு இல்ல”

“கொடுத்துதான் பாருங்களேன், புள்ளைகளுக்கு பீஸ் கட்ட காசு இல்ல, இதுல இவரு பிரண்சுங்களுக்கு வாரி வழங்குவாராம்”

“அவரு என் பிரண்டு இல்ல”

அவன் வார்த்தைகளை கேட்க அவள் அங்கில்லை. நரேனை பள்ளிக்கு கிளப்பிக் கொண்டிருந்த அவனுக்கு இது பெரிய சங்கடமாக இருந்தது. நரேனின் கண்களைக் காணத் தயக்கமாக இருந்தது. அப்பா என்கிற பிம்பம் உடைவதில் இருக்கும் சங்கடம் அவள் அறிந்ததில்லை. “நான் எங்க கொடுத்தேன் அத சொல்லு மொதல்ல.”

“உங்களதான் முதலாளி முதலாளின்னு சுத்திகிட்டு இருக்காரே, இதுலேந்தே தெரியலையா, நெய்ற காலத்துல எவ்வளவு கொடுத்தீங்களோ, யாருக்கு தெரியும். நா வாங்கிவந்த வரம் இதெல்லாம். உங்க தாத்தா வேணா முதலாளியா இருந்திருக்கலாம், உங்க அப்பா காலத்திலேயே அது போயிடுச்சு, தெனம் வேலை செஞ்சாதான் காசு நமக்கு அத ஞாபகம் வெச்சுகங்க.”

அவள் உள்ளிருந்தபோதும் கணீரென்று தெளிவாக கேட்டது. அவள் சொல்வதை அவனால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. அவளது பயம் யாருமற்ற வெளியிலிருந்து பறந்துவருவது. தன் இருப்பைச் சொல்வதில் அவளுக்கிருக்கும் ஆர்வத்தின் வெளிப்பாடு என்றுதான் நினைத்தான்.

பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு வந்த காலை உணவாக உப்புமாவை உண்டான். காலையிலேயே சென்று ரவையும் கூடவே நாட்டுச் சக்கரையும் வாங்கி வந்திருந்தாள். கடுத்த முகத்துடன் அதை தட்டில் வைத்தாள். “நல்லாயிருக்கு வச்சலா” என்றான், அவள் எதையும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. முந்தானையின் நுனியில் நூல் பிரிந்து தொங்கி கொண்டிருந்தது. நீண்ட நேரத்திற்கு பின் அதை பலமாக பிடித்து இழுத்து அறுத்தாள். அதில் தான் இன்னும் கோபமாக இருப்பதைக் காட்டினாள் என நினைத்தான். எதுவும் தன் கை மீறி செய்வதாக ஒரு பாவனை செய்வது அவளது வாடிக்கையாகிவிட்டது.

பைக்கில் சற்று கடுத்த முகத்துடன் கேசவன் வந்தார். ஒரு டப்பாவில் அவலுடன் கொஞ்சம் சக்கரையை சேர்த்து கிளறி வைத்திருந்தாள். அதை எடுத்துக் கொண்டு அவன் பைக் அருகில் சென்று திரும்பிப் பார்த்தான். அவளைக் காணவில்லை, உள்ளே போய்விட்டிருந்தாள். ஒரே நாளில் அவள் தன்னை ஒரு வேறுவகை வாழ்க்கைக்கு பழகிக் கொண்டுவிட்டாள் எனத் தோன்றியது.

தெளிந்த வானமும் வேகமான வெப்ப காற்றும் வாழ்க்கை எப்போதும் போன்றது என்று காட்டிக்கொண்டன. சுற்றி நிகழும் நிகழ்வுகளில் தன்னை பொருத்திக் கொள்ள மனிதனுக்கு மட்டுமல்ல இயற்கைக்கும் தெரிந்திருந்தது. கேசவன் எதுவும் பேசாமல் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தார். அசைந்து கொடுக்காது நேராக நின்ற அவரது கழுத்து அவர் இன்னும் நேற்றைய நினைவில் இருக்கிறார் என்று தோன்றியது. உன்னை அழைத்துச் செல்வதே நீ செய்த பெரிய பாக்கியம் என்பது போல. வழியில் எங்காவது கிழே விழுந்தால் கூட அதையும் கவனியாது அவர் செல்லக்கூடும். ‘சைட்’டுக்கு வந்து சேர நேற்றைவிட இன்று அதிகநேரமெடுக்கவில்லை. பழகின பாதை என்பதை மனம் அறிந்துவிட்டிருந்தது. ஒவ்வொரு இடத்தை கடக்கும்போது இன்னும் எவ்வளவு தூரம் என்பதை மனம் கணித்துவிடுகிறது.

சுலுவான வார்த்தைகளில் சொல்லும் எதுவுமே அது தனக்கானது தான் என தெரிந்திருந்தான் பிரபுராம். கொஞ்சம் கவனம் பிசகினாலும் அவர் கோபம் முகத்தில் தெரியும் என பயந்தான். அவர் கூறும் வார்த்தைகளை மிக கவனமாக மனதில் குறித்துக் கொண்டான்.

“இந்த பேக தூக்கிட்டு போய் வைங்க மாப்ள.”

“இந்த இத போயி வாங்கிட்டு… சீக்கிரம் வாங்க.”

“சின்ன ஸ்குரு எங்க இருக்கு தேடி எடுங்க.”

“மத்த ஆட்களையும் வராண்டவுல உட்கார்ந்து சாப்பிட சொல்லுங்க.”

பூச்சு பூசுவதற்கு முன்னால் சுவற்றின் உள்ளே குடைவுகள் ஏற்படுத்தப்பட்டு வயரிங் செய்யப்பட்டது. புதிய இடங்களுக்கு மின் வயரிங் கொடுக்க வேண்டும் என காண்டிராக்டர் சொல்லும்போது ஒரு கொத்தனார் வந்து செய்து கொடுத்தார். மரவேலைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தன. சிமெண்ட், மணல், மரத்தூள் போன்றவற்றின் தூசுகள் பல இடங்களில் பரவியிருந்தது. பெரும் இரைச்சல்களுக்கு இடையே வேலை செய்வது பிரபுராமுக்கு முதல்முறை. பல கட்டளைகள் விரல் அசைவுகளில் சொல்லப்பட்டன. செய்தித் தொடர்புகள் அப்படித்தான் கடத்தப்பட்டன. புதியதாக பொருட்களை வாங்கி வருவது, தேவையானவர்களுக்கு உதவி செய்வது, சில்லறை வேலைகள் என்று வயர்களை அறுத்து தருவது, வயர்களை இணைத்து தருவது, ஃபேன் போன்ற எலக்ரிக் பொருட்களை பேக்கிலிருந்து கழற்றி பிட் செய்து தருவது என்று தொடர்ந்து இருந்தது.

மிகப்பெரிய தனிமையை அது உணர்த்தியது. அதிலிருந்து மீள்வதற்கு இன்னும் பல வேலைகள் செய்ய வேண்டும் என நினைத்தான். சட்டென நினைவிற்கு வந்தவனாக கைவிரல்களைப் பார்த்தான். அதில் தெரிந்த அழுக்கு, விரல்களை ஊடுருவி உள்ளே சென்றதாகப்பட்டது. உணவு அருந்தும்போது கைகளை சோப்பு போட்டு கழுவினாலும் போகவில்லை.

தனிமையில் சொற்களைத் தேடவேண்டியிருந்தது. ஒலிகளற்ற பெரிய காட்டில் தனியே மாட்டிக்கொண்டது போலிருந்தது. கேசவன் எப்போதும் வேலையில் கவனமாக இருப்பது போன்றிருந்தார். காண்டிராக்டர் மணிராஜ் வேண்டுமென்றே சிரித்தபடி இருந்தார், அப்படி இருப்பது ஒரு வகையில் அனைவருக்கும் நல்லதாகத் தோன்றினாலும், வேலை செய்யவைக்க அவர் செய்யும் உத்தியாக அதை பயன்படுத்தினார். அவர் நினைத்தால் கேசவனின் அடுத்த வேலையைக் கொடுக்காமல் இருக்கலாம். அல்லது குறைவான சின்ன சம்பள வேலைக்கு மட்டும் அவரை அழைக்கலாம். இதெல்லாம் கேசவன் பேச்சுகள் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.

இன்று முழுப் பணத்தை கொடுத்தார். வீட்டிற்கு வந்தபோது வச்சலா தன் வேலைகளில் முழுகியிருந்தாள். வேகமாக தேங்காய் துருவிக் கொண்டிருந்தாள். தலையில் எண்ணெய் தேய்த்து அழகுற பின்னி குங்குமம் துலங்க சேலையில் இருந்தாள். தொலைக்காட்சி பார்ப்பதை விட்டு வாணியும் நரேனும் படித்துக் கொண்டிருந்தார்கள்.

தொலைக்காட்சி அணைந்த விளக்குபோல் இருந்தது. அதன் சிறிய உருவம் அப்போதுதான் துலங்கியிருந்தது. அவள் சிரிப்பை அடக்கிவைத்த உதடுகளும் ரகசியத்தை வெளிப்படுத்தும் கண்களும் என அவள் தோற்றம் புதிதாக இருந்தது. முகம் கைகால் கழுவி வந்ததும் குழந்தைகள் அப்பாவிடம் ஒட்டிக் கொண்டன. “அப்பா எனக்கு என்னப்பா வாங்கிட்டு வந்த” என்று வாணி முதலில் ஆரம்பித்து வைத்தாள். இப்படி கேட்பாள் என்று அவனுக்கு நினைவில் இருந்தது. ஆகவே இரண்டு பிஸ்கட்டுகளை வாங்கி வந்திருந்தான். ஆளுக்கு ஒன்றை கொடுத்ததும் சந்தோஷத்தில் துள்ளி குதித்தன. “போதும் போதும் எடுத்து வைங்க, காலைல சாப்பிடலாம், இப்ப சாப்பிட்டேன்னா சோறு இறங்காது” என்றாள் வச்சலா.

பணத்தை கொடுக்க அவன் கைகள் நடுங்கின. அவள் அதற்காகவே காத்திருக்கிறாள். அவள் செய்யப்போகும் சேட்டைகளை காண அவன் மனம் கூசியது. கொடுத்துவிட்டு ஓடிவிடலாமா என நினைத்தான். ஆனால் அவன் சிரித்தபடி அவளிடம் கொடுத்துவிட்டு சிரிப்பை எதிர்ப்பார்ப்பவன் போல் முகத்தை வைத்துக் கொண்டான். அவள் சிரிக்கும் சிரிப்பு பொறுமை இழக்க வைப்பது. வெட்கப்பட்டு சிரிப்பதுபோன்ற பாவனை ஒன்றை செய்தாள். “ஏங்க, உங்களுக்கு இன்னிக்கு அவரக்காய் பொரியல் பண்ணிருக்கேன், இன்னிக்கு வெள்ளிக்கிழமை இல்ல செளசெள போட்டு சாம்பார் பண்ணிருக்கேன், வேணும்னா அப்பளம் பொறிச்சு தாரேன்”

சுருக்கமாக இருந்த அவன் சட்டையை நீவிவிட்டாள், மிக நெருக்கமாக அவள் நின்றது அவள் தலைமுடியில் எண்ணையின் வாசம் அவன் நாசியில் விழுந்தது. வகிடு எடுத்த அவள் மண்டையை மிக அருகில் பல்பு வெளிச்சத்தில் பார்த்தது லேசாக அதிர்ச்சியுற்றான். அவர்கள் இருவரும் மிக அருகில் நின்றது நரேன் இதுவரை காணாதது. “அப்பா நானும் வரேன் என்னையும் கட்டிக்கப்பா” என்றான். அவள் விலகி நின்று “இவன் ஒருத்தன் போதும் உங்களுக்கு” என்று சிரித்தாள்.

குழந்தைகளுக்குப் பானையின் மேலான சோறும், கீழ்ப்பகுதியில் சூடான உணவாக எடுத்து அவனுக்குமாகப் பறிமாறினாள். ஒவ்வொரு வாய் உண்ணும்போது அவன் முகக்குறியின் மாறுதல்களை கவனித்தாள். “பொரியல் சரியாக வேகலையாங்க” என்றாள். தான் அதைக் குறைவாக தின்பதை வைத்து அவள் சொல்கிறாள் என புரிந்ததும், “இல்ல நல்லாதான் இருக்கு” என்றான். “தேங்கா இன்னும் முத்துனதா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும் இல்ல”, அவன் மோர் சாதம் வரும்போது, நீயும் சாப்பிட ஆரம்பி வச்சலா என்றான். “இல்ல இருக்கட்டும், நல்லா பசிக்கட்டும் அப்புறம் சாப்புடறேன்”. என்றாள். நீண்ட இடைவெளிக்கு பின்னர் அவர்கள் ஆர்வமாக உண்கிறார்கள். அப்பா எனக்கு “மிச்சர் வாங்கிட்டுவாப்பா நான் குழம்பு சாதத்தோட சாப்பிடனும்”, வாணி சொன்னதும், நரேன் “அப்பா எனக்கு அல்வா வாங்கிட்டு வாப்பா” என்றான். “ம், சரி”. வச்சலாவும் சிரித்தபடி ரசித்தாள்.

அதே வாழ்க்கை, அதே படுக்கை, அதே உணவு மாற்றமே இல்லாமல் தொடர்வதாக நினைத்தான். படுக்கையை தட்டி ஒழுங்கு செய்தபோது நரேனும் வாணியும் உதவினார்கள். “அப்பா எனக்கு கத சொல்லுபா” என்று சொல்ல, உடல்வலியும் கண் எரிச்சலும் அவனைத் தூங்க வேண்டும் என வேண்டின, ஆனால் கஷ்டப்பட்டு “ஒரு ஊர்ல” என்று ஆரம்பித்து ஏதோ ஒரு கதையை சொன்னான். அதற்குள் இருவரும் தூங்கிவிட்டிருந்தார்கள்.

ஒரு வார இதழை எடுத்துவந்து அவன் பக்கத்தில் படுத்துக் கொண்டு, இங்க பாருங்களேன், அதிலிருந்த ஒரு செய்தியை காட்டி விவரிக்க ஆரம்பித்தாள், அவனுக்கு அதில் லயிக்க முடியவில்லை. அவள் சொல்வது எதைப் பற்றியது என்பதும்கூட புரியவில்லை. அவன் அதை கேட்க கூடாது என்று நினைத்தவன் அவனையும் அறியாமல் அவ்வார்த்தை அவன் உதட்டில் வந்தான் “ஏன் வச்சலா, நா நம்ம முதலாளிக்கிட்ட ஒரு வாட்டி போய் பாக்கட்டா”, நிதானமாக அவள் முகம் திரும்பியது அதில் கோபம் இருக்குமென நினைக்கவில்லை. கையில் இருந்த புத்தகத்தை தூக்கி எறிந்துவிட்டு திரும்பி படுத்துக் கொண்டாள்.

5

காலை எழுந்ததும் அன்றைய வேலையை நினைத்து பயம் மனதில் எழுந்தது. இரவு முழுவதும் அந்நினைப்பு ஒரு புளிச்ச ஏப்பம்போல் நெஞ்சில் நின்றுகொண்டிருந்தது. தூக்கம் கலையும் போதெல்லாம் எதை மறந்தேன் என்கிற பயம் மனதை அரித்தெடுத்தது. மறக்க நினைப்பது மற்றொரு துக்கம் என்று மனது சொல்லிக் கொண்டிருந்தது. அப்பாவின் குரல் கிணற்றடி வரை கேட்டது. டே… பிரபு… கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்த பிரபுராம் வேகவேகமாக இழுத்தான். மூன்று வாளியை நிரப்பிய பின் கடைசி வாளியில் ஊற்றினான் அதில் இன்னும் நிறைக்க இடமிருந்தது. அப்படியே போட்டுவிட்டு முன்னே ஓடிவந்தான்.

“டே.. சீக்கிரம் கிளம்பு, போயி, சாயப்பவுடரு, கோரா எல்லாத்தையும் வாங்கிட்டு வரனும். வரும்போது வஜ்சிர தூளு அப்புறம் இன்னும் சிலது வாங்கனும், சட்டைய போட்டுகிட்டு வா”, வெளியே இருந்து வந்தவர் என்பதை அவர் சட்டை வேட்டியில் இருந்த வேர்வையும் அழுக்கும் காட்டின. உள்ளே சென்று தண்ணி குடித்துவிட்டு, சட்டையை போடும்போது அம்மா, “டே குழந்த, அப்பாகிட்ட சண்டெயெல்லாம் போடவேணாம், போனோமா வந்தோம்ன்னு இருக்குனும். சாப்புட்டு போறீயா” என்றாள். “வேணாம்மா நா வரேன்”. அப்பா எது சொன்னாலும் எதிராக ஒரு வார்த்தை சொன்னதில்லை, அப்பாவை கேள்வி கேட்டதையே சண்டை என்று கூறுபவள்.

அப்பா சைக்கிளை மிதிக்க பின்னால் அமர்ந்துக் கொண்டான். அத்தனை ஆவேசமாக உற்சாகத்துடன் சைக்கிளை மிதித்து அவன் பார்த்ததில்லை. புது தாவணி ஆரம்பிக்குபோதெல்லாம் அவருக்கு உற்சாகம் வந்துவிடுகிறது. பெரிய மூலைக்கு சென்று கலர்பொடிகளை பார்த்து பார்த்து வாங்கிக்கொண்டார். அவற்றின் நிறம் கொஞ்சம் மாறுபட்டதாக தெரிந்த உடனே கடைக்காரரிடம் உன் கடைக்கு இனி வரமாட்டேன், கும்பகோணத்துல வாங்கிக்குவேன் என்று மிரட்டினார். டப்புகளை(12) பத்து வாங்கிக் கொண்டார். தார்க்கட்டை(13) ஒன்று புதிதாக வாங்கிக் கொண்டார்.

“அப்பா இதெல்லாம் நம்மகிட்ட இருக்குபா, தேவையின்னா முதலாளியே கொடுப்பாரே, ஏன் வீனா செலவழிச்சுகிட்டு”

“டே.. இதுக்கெல்லாம் முதலாளிய நம்பிக்கிட்டு இருக்க கூடாதுடா, நம்மகிட்ட இருக்குதான் புதுசா வாங்குனாதான் அதோட மதிப்பு நமக்கு உயரும், நா நாளைக்கு நெய்யப்போறது என்ன தெரியுமா? பொண்ணு மாப்பிள பேர் போட்ட ரெண்டு மொழம் முந்தி, மஞ்ச கலர்ல வாடாமல்லி கலர்ல பூ, அதோட ஒரு ஜான் அகலத்துல பேட்டு(14), அப்புறம் தாவணி முழுக்க கட்டம் போட்ட கத்திரி கலரு. இதுவரைக்கு யாருமே நெஞ்சதில்ல”

“அப்பன்னா வாங்க வேண்டியதுதான்”

“எனக்கு தெரியும்டா நீ அப்படி சொல்லுவேன்னு”

பிரபுராம் சிரித்துவிட்டான். அப்பா நேராக வண்டியை கீழவாசலுக்கு விட்டார். அங்கு இரண்டு கவுளி வெத்தலையை வாங்கிக் கொண்டார். பாக்கு, சீவல், சுண்ணாம்பு எல்லாமே கொஞ்சம் அதிகமாக வாங்கிக் கொண்டார். கடைக்கார பாய் “என்ன அண்ணே வீட்ல எதாவது விசேஷமா” என்றார். சற்று பெருமிதம் முகத்தில் பொங்க “விசேஷம் மாதிரிதான் பாய்” என்றார்.

பெரியண்ணன் தறியில் உட்கார மாட்டேன் என்று சொல்லிவிட்டான். கோராவை கையால்கூட தொடுவதில்லை அவன். சின்னண்ணன் படிப்பும் வரவில்லை, தறியும் வரவில்லை. தன் சகாக்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவதற்கே நேரம் சரியாக இருந்தது. இப்போது சென்னைக்கு ஏதோ ஒரு வேலைக்கு போய்விட்டான். கண்ணனுக்கு நம்பிக்கை எல்லால் பிரபுராம் மேல்தான். அதனால் அவனுக்கு முழுசுதந்திரம் கொடுத்திருந்தார். மற்ற இருவரைவிடமும் தைரியமாக அப்பாவுடன் பழகினான். கேள்விகளை கேட்டான். “இப்படி வேண்டாம்பா, நல்லா இல்லை” என்று எதிர்பதிலை கூறினான்.

பஜ்ஜி ராமாச்சாரி மூன்று நபர்களை முழுமையாக நம்பினார் அதில் ஒருவர் கண்ணன். சரியான நேரத்தில் வரவேண்டும் என்றால் முதலில் கண்ணனிடம்தான் கொடுப்பார். சரக்கு எந்த சேதாரமும் இல்லாமல் திரும்பி வரும், கூலி அதிகமாக கேட்டாலும் சொன்ன நேரத்தில் தந்துவிடுவார் என்கிற நம்பிக்கையை எடுத்திருந்தார்.

“பஜ்ஜி வீட்டுல சரக்க காட்டுனுமா” சைக்கிளை மிதித்துக் கொண்டே இக்கேள்வியை கேட்டான். “அதெல்லாம் வேண்டாம்டா, நா சரியா எடுத்திருப்பேன்னு அவங்களுக்கு தெரியும். பதிலை கேட்டதும் சற்று பதறி ஓரமாக நிறுத்தினான். “என்னப்பா சொல்றீங்க, சாயம் போடனுமே”

“சாயம் நானும் நீயும் தான் போடபோறோம்” மேலும் அதிர்ச்சியாக இருந்தது, “அப்பா நாம சாயம் போட்டதே இல்லையே, பஜ்ஜி வீட்டுல, மாரிமுத்தண்ணன் இருக்காரே அவர விட்டு யாருக்கும் கொடுக்க மாட்டேங்களே”

லேசாக நமட்டு சிரிப்பு சிரித்தார். “நா அதை பேசிட்டேன். ராமாச்சாரிக்கிட்ட கேட்டுட்டேன் நான்ந்தான் போடுவேன்னும் சொன்னேன் சரின்னுடாரு, அதுக்கு தனியா பணம் கொடுத்திடரேன்னு சொல்லிட்டாரு, நா உன்வயசுல சாயம் போட்டுறுக்கேன், ஒன்னும் பிரச்சனையில்ல, நா சொல்றேன் நீ போடலாம்”

“சரி வண்டிய ஓரமா நிறுத்து”, என்று சொல்லிவிட்டு அதே சாரியில் இருந்த தாசன் கடைக்கு வந்தார்கள். “இரண்டு சர்பத் கொடுங்க” என்று சொல்லிவிட்டு அமர்ந்தார். எப்போதும் சுவையாக தோன்று நன்னாரி சர்பத் இன்று லயித்தே குடிக்க முடியவில்லை அவனால். அப்பா எதற்கு ஆபத்து வேலையில் இறங்குகிறார், அப்படி என்ன வேண்டியிருக்கிறது தேவையில்லாத அக்கறை. பெரியதாக கூலி எதுவும் கிடைக்கப் போவதில்லை என்று அவர் அறிந்ததுதான்.

வீட்டிற்கு வந்ததும் தனியே அம்மாவின் கூறினான். “எதுக்கு இப்படி சின்னபுள்ளயாட்டம் இருக்காருமா?”, “அவரு ரொம்ப ஆர்வமாயிடுச்சுன்னா இப்படிதான் நடந்துக்குவாரு, அதுவுமில்லாம மாரடைப்பு வந்ததிலேந்து ரொம்ப படுத்துறாரு, அவரு குணங்ந்தான் உனக்கு தெரியுமேடா”.

பரணையில் இருந்து பெரிய அண்டாக்கள் இரண்டை வெளியே எடுத்தார். நசுங்கி சொட்டையாக இடங்களில் கருத்த வண்ணம் அப்பியிருந்தது. நூலாண்படையும் தூசியும் படிந்து புதுவகை பொருளாக இருந்தது. ஒரு பித்தளை அண்டாவில் தண்ணீர் நிரப்பி கொல்லை இருந்த மூன்றுகல் அடுப்பில் ஏற்றினார். கீழே மண்ணெண்ணை நனைத்த துணியுடன் நாலு அழுத்தமான விறகு கட்டைகளை வைத்தார். கொல்லையில் கிணற்று எதிர் திசையில் சிறிய தடுப்புடன் இருக்கும் அந்த பகுதியே அதற்கு தான் இருக்கிறது என தோன்றியது பிரபுராமுக்கு. சுவரில் படிந்த கரி ரொம்ப காலம் அங்கு சாயம்போடுவது நடந்திருக்கிறது என தெரிந்தது.

கூடத்தில் வரிசையாக கோராவை காயவைத்திருந்தார். நீண்ட நூல்களை கைமுட்டியால் கோணப்பட்ட நீளநூல்கள் வரிசையாக மூங்கில் கம்பில் நுழைக்கப்பட்டு இறவான கூரையில் ஊஞ்சல் பலகையில் வரிசையாக தொங்கிவிடப்பட்டிருந்தன. அதன் மட்கிய நூலின் வாசனை கூடம் முழுவதும் நிறைந்திருந்தது.

நான்கு கோரை இருந்தது. அதில் ஒவ்வொன்றாக எடுத்து ஆய்வு செய்துவிட்டு நல்லதாக தோன்றிய ஒன்றை எடுத்து சிறு எடை இயந்திரத்தில் போட்டு எடைபார்த்தார். வண்ணம் பூசப்பட்டபின் ஒருமுறை எடையிடுவது அவரது வழக்கம். பித்தளையில் செய்த சதுரமான அழகிய திறக்கும் வசதி கொண்ட சின்ன பெட்டியின்மேல் நடுவில் உயர்ந்த குழல் ஒன்று இருந்தது. அதில் மேல்முனையில் இருந்த கொக்கியில் சங்கிலியாலான தொங்கிய தட்டுகள் இருபுறமும். தாத்தாவின் தாத்தா காலத்தில் அது செய்யப்பட்டது. மீண்டும் கவனமாக மடித்து உள்ளே வைத்துவிடுவார் அப்பா.

“டே வாடா” என்று அழைத்துக் கொண்டு கொல்லைக்கு போனார் அப்பா. நடக்கும்போது அவர் கவனம் சிதறவேயில்லை. அங்கிருந்த இரு கொக்கிகளுக்கு இடையை கோராவை தொங்கவிட்டார். பொடிகளை ஒரு பேப்பரில் எடுத்து சிறு மற்றொரு தராசில் அதை எடைபார்த்தார். இரு வெவ்வேறு நிறங்கள் நான்கு இருந்தன. முதலில் ஒன்றை கொதிக்கும் நீரில் போட்டார். மற்றொன்றை சிறு இடைவெளியில் போட்டார். பின்பு கோராவை எடுத்துவரச் சொல்லி மற்றொரு குச்சியை அதில் நுழைத்து ஆளுக்கு ஒன்றை பிடித்துக் கொண்டு கொதிக்கு நீரில் விட்டு எடுத்தார் அப்படி பலமுறை செய்தார். பின் சாதாரண நீர் நிரம்பியிருந்த அண்டாவில் அதை தனியே நனைத்து வெளியில் வைத்து பிழிந்தார்.

தேவையற்ற நிறங்கள் வெளியேறி ஓடின. மீண்டும் கொதிக்கும் மற்றொரு அண்டாவில் வேறு இரு பொடிகளை கலக்கினார். “இது முந்திடா’ என்று சொல்லிவிட்டு கோராவை வேறுஒரு பாதியில் இருவரும் பிடித்துக் கொண்டு நனைத்தார்கள். பலமுறை முக்கி எடுத்தார்கள். வேறு ஒரு சாதாரண நீர் நிரம்பிய அண்டாவில் அதை பலமுறை விட்டு எடுத்து பிழிந்தார். இரு வண்ணங்களும் மிக அழகாக பிரிந்திருந்திருந்தது. இணையும் இடங்கள் தேர்ந்த ஓவியனின் தீற்றல்கள்போல ஜொலித்தன.

பாவுநூலை கையில் முழமாக மாட்டிக் கொண்டு குத்துஆணிகள் இரண்டை கையில் பிடித்தபடி இருட்டில் நடந்தார். இன்னும் விடிந்திருக்கவில்லை. வரப்போகிற சூரியஒளியின் அறிகுறி எதுவுமில்லை. மிகவும் பழகிய இடம்போல அவர் எப்போதும் இடும் இடத்தில் வந்தார். முதல் குத்துஆணியை ஒரே அறையில் அறைந்தார். மீண்டும் பிடுங்கி அறையும் வழக்கம் அவரிடம் இருந்ததில்லை. பிரபுராம் அப்படி செய்தால் கடிந்துக் கொள்வார். அதில் பாவின் ஒரு முனையை மாட்டிவிட்டு பின்னோக்கி நடந்தார். நடக்க நடக்க ஒவ்வொரு முழமாக விட்டபடி சென்றார். கடைசி முனை வந்ததும் கையில் பிடித்துக் கொண்டு மற்றொரு குத்துஆணியை அறைந்தார். அந்த முனையை தேர் தடம் இழுப்பது போன்று பாதி உடலை முன்னால் மடித்து ஆணியில் மாட்டினார்.

காற்று அதன் வேகத்தை கூட்டியிருந்தது. கிழக்கிலிருந்து மேற்குநோக்கி ஓடிக் கொண்டிருந்தது. மேற்கில் திரும்பி பார்த்தபோது கிருஷ்ணன் கோயிலில் விளக்கு வெளிச்ச துணுக்குகள் துளிர்த்துவிட்டிருந்தது. குத்துஆணியில் நன்கு விரியும்படி கீழ்வரை இழுத்துவிட்டார். இழையிழையாக பிரிந்து நின்றது. எல்லாம் சரியாக இருக்கிறது என்பதை உறுதிசெய்து கொண்டு திரும்பி வீட்டிற்கு சென்றார்.

ஒரு முழமளவிற்கு இருக்கும்படியாக வெட்டிய வெள்ளை நூல்களை ஒரு பண்டுலை எடுத்து தோளில் போட்டு “டே பிரபு வாடா” என்று அழைத்தார். அம்மா கொடுத்த நீராகாரத்தை குடித்துக் கொண்டிருந்தவன் “இதோ வரேன்பா” என்று சொல்லிவிட்டு வேட்டியை தூக்கி கட்டிக்கொண்டிருந்தான். “என்னடா இவ்வளவு லேட்டு பண்ற” என்றார் சலிப்புடன். “அப்பா இன்னும் விடியவேயில்லைபா, கொஞ்சம் நேரம் இருங்கபா போலாம். இருட்டுல என்ன தெரியும்னு சொல்லிறீங்க.”

அவருக்கு இருக்கும் ஆர்வத்தில் பாதிகூடத் தனக்கு இல்லை என்பதை நினைத்துக் கொண்டான். இன்றும் புதிதாக கற்றுக்கொள்ளூம் மாணவனாகத் தான் இருக்கிறார். அவர் கால்கள் பரபரப்பில் இங்குமங்கும் அலைந்தபடி இருந்தது. நடையின் மூன்றுமுறை இருபக்கமும் சென்று வந்துவிட்டார்.

லேசாக விடிய தொடங்கியபோது இருவரும் அங்கு இருந்தார்கள். கக்கத்தில் ஆறு தட்டு குச்சிகளை வைத்திருந்தார். கிழக்குப் பக்கத்தில் மூன்றும் மேற்கு பக்கத்தில் மூன்றையும் பாவு நூற்களின் இடையாக லாகவமாக சொருகினார். நூல்களின் வரிசையை கிடார் வாசிப்பது போன்று விரல்களால் அவ்வப்போது மீட்டினார். அப்படி மீட்டும் போது மேலும் கீழுமாக பாவு ஊஞ்சல் போன்று ஆடி நின்றது.

ஒரு கொத்து நூலை இடுப்பில் சொருகியிருந்தான் பிரபுராம். வேகமாக நூல்களால் பாவுகளின் இழைகளை இணைப்பதில் ஈடுபட்டான். பாதி வேலை முடிந்தபோது திரும்பிப்பார்த்தால் அப்பாவைக் காணவில்லை. மடித்த வேட்டியில் கால்களை ஆட்டியபடி அந்த வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தார். ஒரு கையில் வெற்றிலை, மற்றொரு கையின் சுட்டு விரலில் சுண்ணாம்பு. கழுத்து மேல் நோக்கியிருக்க, வாய் அசைபோட்டபடியிருந்தது. இடுப்பில் ஒரு செட் வெத்தலை இருக்கும். மற்றொரு வெற்றிலைக்கு சுண்ணாம்பு தடவிட்டு வாயில் இட்டார். கால் அசையில் அவர் நல்ல லயிப்பில் இருக்கிறார் என தோன்றியது. முன்பின்னுமாக மெல்லிய அசைவு, சிலவேளைகளில் இடவலமாக. வெற்றிலை போடும் காலைவேளையில் எதையும் அவர் சாப்பிடுவதில்லை. பனியனில்லாத எலும்புகள் தெரியும் மெல்லிய உடல். மூநூலை இழுத்து முதுகை சொறிந்தார், கண்கள் ஏதோ ராகத்தின் இசைவில் மெய்மறந்திருக்க, வாய் மட்டும் வேகமான அசைவில் இருந்தது.

“அப்பா, என்னப்பா பண்றீங்க”

தன்பக்க பாவுவை நோக்கி கையை காட்டி மேல்நோக்கி காட்டினார். அதே கண்கள் லயிப்பிலும் வாய் அசைவிலும் இருந்தது. மேற்கு பக்கம் திரும்பி பார்த்தான். எல்லாவற்றையும் முடித்துவிட்டது தெரிந்தது. அவன் அதைப் பார்க்கிறான் என்றதும் அவர் முகத்தில் குழந்தையின் களிப்பு.

ஒரு பக்க பாவை நீக்க போனவனை பார்த்து,

“டே இருடா, போய் குதிர மரத்த எடுத்துட்டு வா”

சலிப்பாக, “ஏப்பா அது இப்ப, அதான் சரியா இருக்கே”

“போய் எடுத்துட்டு வாடா”

எடுத்து வந்ததும் அவை இரண்டு பக்கமுமாக வைத்து இழுத்து அதில் மாட்டினார். ஒவ்வொரு நூலாக அது தெளிவாக இணைந்திருக்கிறதா என பார்த்தார். “சரியாதான் இருக்கேப்பா, ஏன் இதுல வேற பாக்கனும்” “டே ஒரு கலைஞனுக்கு கற்பனை முக்கியம்டா பாவுநூல குத்தூசியில மாட்டுனா மட்டும் போதாது, இந்த குதிர மரத்துலயும் மாட்டி பாக்கனும், இப்ப இத பாரு, இதோட நிறம், புட்டா, பேட்டு எல்லாம் தெரியுதா, அப்படி தெரியலண்ணா நீ நெய்யறத விட்டுடலாம்” அதைக் கூர்ந்து கவனித்தான். அவன் கண்கள் விரிவதைக் கண்டு அப்பா, “பாத்தியா, அதான் சொல்றது” என்றார்.

சொறுவு குச்சிகளை எடுத்துவிட்டு, ஒருபக்க பாவை நீக்கி முழங்கையில் சுற்ற ஆரம்பித்தான். குளிக்க மறுக்கும் நாயை இழுப்பது போன்று பின்பக்கம் இழுத்து படி சுற்றினான். நல்லா பின்னாடி வாடா, இன்னும் டைட் வேணும் என்றார் அப்பா.

அன்று காலை உணவு முடிந்ததுமே அப்பா பாவை தூக்கிக்கொண்டு பண்ணை போட கிளம்பினார். சிவராய தோட்டத்தில் விஜயராகவன் என்று ஒருத்தர் இருந்தார் அவரிடம் கொடுத்து “இன்னிக்கு சாயந்தரமே வேணும் சீக்கிரம் போட்டு கொடுடா விஜயனு” என்றார். “போட்டுடலாம் போட்டுடலாம்” என்றார். “நா இங்கேயே இருக்கேன் கையோட வாங்கிட்டு போயிடறேன்” என்றார். “அட போயிட்டு வாங்கண்ணே, என்னிக்கு நா லேட்டு பண்ணிருக்கேன். மத்தியானம் நாலு மணிக்கா வாங்க, ரெடியா இருக்கும்”. ஏதோ மனமில்லாதவர் போல எழுந்து போனார்.

வடிவமைப்பு அட்டை துளையிடுவதற்கு கொடுத்திருந்த ராமாச்சாரியை சென்று பார்த்தான் பிரபுராம். இரண்டாம் தெருவுல “கெந்தபடி கணேஷுன்னு ஒருத்தன் இருக்கான்பாரு அவன்டதான் நா கொடுத்திருக்கேன். போய் முடிஞ்சிடுச்சான்னு பார்த்துட்டு வாங்கிக்க” என்றார்.

அவர் சொன்னதுபோலவே கணேஷ் ரெடியாகத்தான் வைத்திருந்தான். ஆனால் பிரபுவுக்குதான் சந்தேகமாக இருந்தது. “என்னண்ணே அட்டயெல்லாம் பிசிறா இருக்கு, அதோட பழசா வேற இருக்கு, புது அட்டப்பா, பாக்க அப்படியிருக்கு, எடுத்துக்கிட்டு போ எல்லாம் கரிக்டா வரும்”

ஆறுமணிக்கு ஆரம்பித்தவர் அப்பா, இரவு எட்டுக்குள் தறியில் பூட்டிவிட்டார். பொதுவாக ஒரு நாளோ அல்லது ரெண்டு நாள்கூட ஆகும் சிலவேளைகளில். பெருமிதம் கண்களில் தெரிய இடுப்பில் கைவைத்து முன் நின்றார். எல்லா விளக்குகளையும் போட்டுவிட்டு எங்கே குறையிருக்கிறது என தேடும் வேகத்தில் சுற்றிச் சுற்றி வந்தார்.

கீழ்த்தறியிலிருந்து பாயும் பாவு நூல்கள் தோய்வு ஏற்பட்டுவிடக்கூடாது என்று மேல்தறியில் கட்டியிருந்த தாம்புக் கயிற்றின் நுனி கீழ்த்தறிவரை இழுத்துவிட்டிருந்தார். அதை எப்போது வேண்டுமானாலும் இழுத்து தளர்த்திக் கொள்ளமுடியும். இன்றே தன் மனைவியிடம் சொல்லி புட்டாவை குச்சியில் சுற்றச் சொல்லியிருந்தார். அவளும் ராட்டையை மாலையிலிருந்தே சுற்ற ஆரம்பித்திருந்தாள். தார்க்கட்டைகளை முனைகள் நன்றாக இருக்கும் இரண்டையும் புதிதாக வாங்கிவந்த இரண்டையும் எடுத்து வைத்தார்.

6

அடுத்த நாள் காலை எழுந்து குளித்துவிட்டு, மெல்லிய மல்லு வேட்டியை அணிந்துக் கொண்டு பூஜையைத் தொடங்கினார். கொஞ்ச நாள் முன்பு வந்த மாரடைப்பு பற்றிய நினைவு சில நாட்களாக நினைக்கவில்லை என்பதை நினைத்துக் கொண்டார். உண்மையில் வேலை என்பதே தன் துயரங்களை மறக்கத்தானா என நினைத்தார்.

சட்டையில்லா உடலுடன் உருளையைத் தொட்டு வணங்கிவிட்டு கீழ் தறிக்குள் இறங்கினார். அமரும் இடத்தில் சிறுதலையணை இருந்தது. பின்பக்கம் சாய்ந்து அதை சரியான திசைக்கு கொண்டுவந்து அழுத்தி பிடித்துக்கொண்டார். கால் கட்டைகளை மிதித்து மேலுள்ள பண்ணைகளின் முன்பின் இயக்கங்களின் சரிபார்த்தார். அடிக்கட்டையை ஒரு முறை அடித்தார்.

“டே சிகுடா தம்பி வாடா சீக்கிரம்” என்றார் அவர் அடித்த ஜோக் நினைத்து அவரே சிரித்தார். அவன் தீவிரமுகத்துடன் “இதோ வந்துட்டேன்பா” என்று சட்டையை மாட்டிக் கொண்டு வந்து அவர் பக்கத்தில் இடது பக்கத்தில் அமர்ந்தான். ஒரே ஆளாக அவரால் நெய்துவிட முடியும். நிறைய பேட்டு கொண்ட சேலை, சிறுசிறு புட்டா டிசைன்கள் வேறு. இன்னொருவர் கூட இருந்தால்தான் நன்றாக இருக்கும். அத்தோடு சீக்கிரமாக முடியும்.

அவனுக்கு கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது. எல்லாவற்றையும் அவனுக்கு சொல்லிவிடவேண்டும் என்கிற நினைப்பும், இன்னும் எத்தனை நாளைக்கு என்ற நினைப்பும் அவரைப் பதட்டமடைய வைத்தன. அடிக்கட்டையை பிடித்துக் கொண்டு அதையே பார்த்துக் கொண்டிருந்தார். சன்னல் வழியே வீசிய வெளிச்சம் சரியாக உருளையின் மீது விழுந்தது. தெளிவாக அதன் சேலையின் வரிவடிங்கள் தெரிந்தன.

அடிகட்டையை பிடித்திருந்த இருகைகளும் நடுங்குவதாக நினைத்தார். நகஓரங்களில் அழுக்கு. கைவிரல்களில் ஒன்றை ஒன்று விஞ்சுவது போன்ற நெளிவு. நான் என்ன நினைக்கிறேன், எதைக் கண்டு பயப்படுகிறேன், எந்த நினைப்பை வெல்ல நினைக்கிறேனோ அதைக் கண்டு பயப்படுபவனாக இருக்க வேண்டும். நான் நினைப்பது பிரபுராமுவுக்கு தெரிந்தால், அவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான். அடுக்கடுக்கான கேள்விகள் மனதில் தோன்றியபடி இருந்தது. இன்று காலையிலிருந்த உற்சாகம் வடிந்துவிட்டதை அவர் மனஓரங்களின் திகில்போல பரவியது. சற்றுநேரம் தூங்கினால் என்ன என நினைத்தார். சற்று நேரம் தள்ளி வைக்கவேண்டும், தொலைக்காட்சியில் பழைய பாட்டுகளை பார்க்கவேண்டும் என தோன்றியது அக்கணத்தில் தலையை சற்று வேகமாக ஆட்டி மறக்க முயன்றார்.

எந்தஒரு செயலிலும் அதன் காலப்பின்னணியைப் பார்க்க வேண்டியிருக்கிறது. காலம் என்பது நாம் நினைப்பதுதானே! நமக்கு தேவைப்படும் சமயம் என்றஒன்று இருக்கிறது. அது நம்மை இயக்கியபடி இருக்கிறது. எதற்காக பணம் சம்பாதிப்பது எதற்காக குடும்பத்தை வழிநடத்துவது என்கிற நினைப்பில் இந்த வாழ்க்கை இல்லை. ஆனால் மனஒருமை கெடுக்கும் எதுவும் இந்த உலகத்தில் வெற்றி பெறுவதில்லை. ஆனால் உண்மையில் வெற்றி என்பது மற்றவர்களின் அபிப்ராயம் தான். ஒருவன் இறந்தால், அவன் என்ன தனக்குள் பெற்றான் என்பது தெரியப்போவதில்லை. பொருளியலாக எதை அடைந்தான் என்று அவர்களே தெரிவிக்கப்போகிறார்கள். பின் எதற்காக இவ்வளவு முயற்சிகள். இம்முயற்சிகளின் பலன் உண்மையில் யாரை திருப்திபடுத்துவதற்காக? என்னை தவிர வேறு ஒருவருக்கு இம்முயற்சிகள் பலன் அளிக்குமா?

“அப்பாஆ…. என்னப்பா பண்றீங்க. கொஞ்சம் தொடங்கி வைக்கலாம்னு சொல்லிட்டு யோசிச்சுக்கிட்டிருந்தா எப்படிப்பா?”

“இல்லடா வேற நினைப்பு? சரி தொடங்குவோம்”

“நீங்க நிதானமா இல்லப்பா, ஏதோ யோசனையிலயே இருக்கீங்க”

மேல் கயிற்றை பிடித்தவர் அப்படியே நின்றுவிட்டார். புணியின் மேல் இருந்த காலை எடுத்தார். முன்பக்கம் உருளையை வயிற்றால் முட்டுக் கொடுத்து தாங்கியபடி தரையில் நின்றார். மேல்தறியிக்கு பின்னால் இருந்த சுவரில் இருந்த ஒப்பிலியப்பனை நோக்கி வணங்கினார்.

அவர் கண்கள் கலங்கின. நின்று நிதானித்து தன்னை ஒருநிலைப்பட்டவராக ஒரு கணம் உணர்ந்தார். சட்டென அமர்ந்து வலது காலை தூக்கி புணியில் காலை வைத்தார். “ம்” என்று சொல்லிவிட்டு வலது கையிலிருந்து தார்கட்டையை செலுத்தினார். அவன் வாங்கியதும் அடுத்த இடது கட்டையை மிதிக்க மேலே ஜக்கார்டின் திரும்பல் இனிய ஒலியாக கேட்டது. மீண்டும் தறிப்பலகையை அடித்தார். வேகம் கூடக்கூட ஒவ்வொன்றின் ஒசையும் கூட இனிய இசைதாளம் போல ஒலித்தது.

பிரபுராமால் பின் தொடர்முடியாத அளவிற்கு வேகமாக நெய்தார், தலைதெறிக்க மலைச்சாலையில் ஓடிவரும் வெறிகொண்ட மதயானை போன்று வேகமாக நெய்தார். அவர் தன்னை மறந்திருந்தார், அருகே அமர்ந்திருக்கும் பிரபுராம் எங்கோ தூரத்தில் அமர்ந்திருந்தான். மனைவி சரோஜா அவர் நினைவில் சிறுபுள்ளியாக இருந்தாள். வெளியூரில் வேலையில் இருக்கும் பெரியவனும் சின்னவனும் அவர் நினைவிலேயே இல்லை. காலை உணவிற்குகூட அவர் நிறுத்தவில்லை. சரோஜா வந்து தூணை பிடித்துபடி நின்று பார்த்தார். இவர் வருவதாக தெரியவில்லை என்றது. ராட்டினத்தில் கட்டையில் புட்டாவை சுற்ற ஆரம்பித்தார். எதாவது சொன்னால் திட்டுவாரோ என்ற பயத்தில் பிரபுராமும் தார்கட்டையை வாங்கி கொடுத்தும், புட்டாவை சரியாக நினைவுபடுத்தி எடுத்துக் கொண்டிருந்தான்.

வாசலில் போஸ்ட்மேனோ யாரோ வந்து வந்து குரல் கொடுத்தபோது அம்மா எழுந்துபோன சமயத்தில் நிறுத்தினார். அவர் நிறுத்திய வேகத்தில் மழை சட்டென நின்றது போன்று அமைதியுற்றது உலகம். உடலில் அருவி போல் ஓடியது வியர்வை. மூச்சை வேகமாக வாங்கிக் கொண்டிருந்தார். பிரபுராம் எழுந்து மேஜை காற்றாடியை போட்டு அவர் பக்கத்தில் வைத்துவிட்டு உள்திண்ணையில் நடந்து அடுப்படிக்கு போனான்.

அடுப்படி மிக விசாலமான அறையாக இருந்தது. வலது பக்கத்தில் வைப்பு அறையுடன் டைனிங் இடமாகவும் இருந்தது. இடப்பக்கம் உயரம்குறைந்த மேடையில் அடுப்பு இருந்தது. அம்மாவின் உயரத்திற்கு சரியாக இருந்தது. பிரபு மெல்ல “அம்மா அப்பா ஏன் ஒருமாதிரியாக இருக்காரு” என்றான்.

“அவரு எப்பையுமே ஆர்வகோளாறாதான் இருப்பாருடா”

“இல்லம்மா இன்னிக்கு கொஞ்சம் ரொம்ப ஓவரா பண்றாரு, ஹார்ட் அட்டாக் வந்ததிலேந்தே இப்படித்தான் இருக்காரு.”

அவர் காதில் விழுந்து விடப்போகிறது என்று கவனமாக மெதுவாக பேசினான். அப்பா சிறுநீர் கழித்துவிட்டு கால்களை கழுவிக்கொண்டு வந்தார். அவர் வந்த தடத்தில் ஈரக்கால்கள் பதிந்திருந்தன. அவர் விட்டுவந்த தடங்கள் அவர் வேகத்திற்கு பின்னால் நடந்துவருவதாக தோன்றியது. அவர் அடுப்படியில் இறங்கியதும்,

“என்ன அம்மாவும் புள்ளையும் என்னையப் பத்தி பேசிமுடிச்சாச்சா?”

பிரபுராம் பேசாமல் இருந்தான். அவர் கோபம் கொள்கிறாரா அல்லது தன்னை கிண்டல் அடித்துக் கொள்கிறாரா என கணிப்பது சிரமம். காலை உணவாக அம்மா கொடுத்த இட்லியை சாப்பிட ஆரம்பித்ததும், அவர் முற்றிலும் தன்னுள் ஆழ்ந்து போனார். அவருக்கு தெரிந்தவை இருவிசயங்கள். ஒன்று மிக உற்சாகமாக இருந்து எல்லாரையும் படுத்தி வைப்பது, அல்லது மிக அமைதியாக இருந்து சங்கடத்தில் ஆழ்த்துவது.

சாப்பிட்டு முடிந்தது மிக அமைதியாக எழுந்து தறியில் அமர்ந்து கொண்டார். சிறுசிறு வேலைகளை அங்கே அமர்ந்து செய்து கொண்டிருந்தார். தறிகட்டையை சரிசெய்வது, புணியை மிதித்து மேலேறும் கட்டைகளை கவனிப்பது, இழுப்பு கயிற்றை இழுத்து அதன் முழு பலத்தை சோதிப்பது என்று செய்து கொண்டிருந்தார். நூல் கோர்த்த புட்டா கட்டைகளை எடுத்து ஒரு பழைய பெருங்காய டப்பாவில் போட்டு அருகில் வைத்துக் கொண்டார்.

சாப்பிட்டு முகம் கழுவி துடைத்து துண்டை காயப்போட்டு, வேட்டியை சரியாக கட்டிக் கொள்ளும் தன்னை அவர் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்று தோன்றியது. அவன் வரும்வரை அமைதியாக எதையாவது செய்து கொண்டிருக்கும் பாவனை மிகப் பொறுமையான அவரது சிரத்தையை காட்டியது. அவன் ஏறி அமர்ந்ததுமே புணியை மிதித்தார்.

“அப்பா அவசரம் வேண்டாம்பா, பொறுமையா பண்ணுங்க”

“ஏண்டா இதுக்கே அவசரம்னா”

“இல்லப்பா நமக்கு நாலு நாள் டைம் இருக்கு”

அமைதியாக நெய்ய ஆரம்பித்தார். அவர் நெய்யும்போது பேசுவது பிடிக்காது. சில சமயங்களில் நெய்வதை நிறுத்தி உன்னிப்பாக குனிந்து சேலையை கவனிக்கும் அவரது குனிந்த சித்திரம் பார்க்க அழகாக இருக்கும். ஒருவரின் ஒருமித்த வேலையின் செய்கை நம்மை ஆட்கொண்டுவிடுகிறது. தன்னையும் அறியாமல் கூர்ந்து கவனிக்கிறோம்.

அப்பா அதன்பின் மூன்று நாட்களுக்கு எதுவும் பேசவில்லை. அவர் செய்கைகள் அவனுக்கு வேடிக்கையாக இருக்கும். புரிந்துக் கொள்ள முடியாத தூரத்தில் இருப்பது போன்றது. அப்பாவின் தத்தளிப்பை எப்படி புரிந்துக் கொள்வது? அவரது ஒருங்கிணைவு சித்திரக்காரனின், சிற்பவேலைக்காரனின் ஒருங்கிணைவு. அந்த செயல் நடைபெறும்போது அவர் அவரிடமே இல்லை. அந்தவேலை முடிந்ததுமேகூட அவர் அவரிடமில்லை. முதலாவது யோகி நிலை என்றால் இரண்டாவது விளையாட்டுப் பிள்ளையின் நிலை.

ஒரு மாதம் முன்பு மாரடைப்பு வந்ததில் இன்னும் விளையாட்டாக மாறிவிட்டது அவரது குணம். அவர் செய்கைகள் ஆழ்மனதை மறைக்கும் விளையாட்டு. அவர் இல்லாத நேரம் வீடு தன் சோபையை இழந்துவிடுகிறது. நாள் முழுவதும் அப்பா நெய்தார். பெரியண்ணனின் உறவுமுறையில் இருந்த ஒரு திருமணத்திற்குகூடச் செல்லாமல் நெய்தார். அதனால் அண்ணனுக்கு மனவருத்தம் உண்டானது. அவர் சென்னையிலிருந்து போன் செய்வதை நிறுத்தியிருந்தார்.

பெரிய பேட்டு கொண்ட சேலை, அதனால் ஒருவாரம் ஆனது, மற்ற சேலைகளைவிட நான்கு நாட்கள் அதிகம். அம்மா சொல்லியது போக எதையும் கேட்கக்கூடாது என்றிருந்தவன். அந்தி சாயும் ஒரு மாலை வேளை சூரிய ஒளி மங்கி ஜன்னலுக்கு வெளியே இருந்த வீடுகளின் உண்மை நிறம் துலங்கியது. அப்பா எப்போதோ எல்லா லைட்டுகளையும் போட்டிருந்தார். மேலிருந்த குண்டுபல்பு இப்போது மஞ்சள் நிறமாக தாவணியில் விழுந்தது. அதில் பிசுறுகளின் முட்டுகள் சிறு மரவட்டை போல தெரிந்தது. மனதில் இருந்ததை பால் திடீரென பொங்குவது போல அவரிடம் கேட்டுவிட்டான்.

“அப்பா உங்களுக்கு ஒன்னுமில்லப்பா, நீங்க ரொம்ப பயப்படுறீங்க”

குனிந்து புட்டா அறுபட்ட இடத்தை தேடிக்கொண்டிருந்தவர் அப்படியே இருந்தார். தீர்க்கமாக அவர் குரல் ஒலித்தது.

“நா பயப்படல, ஆனா நா அவசரப்படுறேன்”

அவர் முகத்தை பார்க்கமுடியாமல் கீழே பார்த்தான்.

“என் முடிவு எனக்கு தெரியும். அதுக்கு முன்னாடி எதாவது பண்ணனும்னு பண்ணல, ஆனா என் படைக்கிற திறமை இருக்குறவரைக்கு வேலை செய்யனும்னு நினைக்கிறேன். அது போறதுதான் என் சாவு. என் உயிர் போறது எனக்கு சாவு இல்ல”

அவர் கண்கள் சிவந்திருந்தன. அந்த கோபத்திலும் அவர் நிதானம் இழக்கவில்லை.

“இப்ப என்னப்பா சொல்வறீங்க”

அமைதியானார். சாந்தமான முகமாக மாறியிருந்தது. நீண்டதூர பயணத்திலிருந்து வெளிவந்தவர் போல் நிதானமாக பேசினார்.

“டே, ஒரு கலைஞனுக்கு எப்போ படைப்புத் திறமை போகுதோ அப்போ அவன் இருந்தும் ஒன்னும்தான் செத்ததும் ஒன்னும்தான். அது முடியறதுக்குள்ள நா செத்துட்டா தேவலாம்னு தோணுது”

அவர் சொன்னதும் எரிச்சலாகத்தான் இருந்தது. ஆனால் அவர் வார்த்தைகளில் உண்மை இருந்தது. அவரது உற்சாகம் அவரது வேலை, அதை இழக்கும் மற்ற புறவிஷயங்களை அவர் அதீத பாவனைகளை செய்து தன்னை மீட்டுக் கொள்கிறார்.

தாவணி அறுத்த மறுநாள் அவருக்கு மீண்டும் மாரடைப்பு வந்தது. படுக்கையில் விழுந்தார். அதற்கு அடுத்த நாள் இறந்துபோனார். அந்த தறுவாயில் அவர் சொன்னது, “பெரியவனுக்கும் சின்னவனுக்கு இருக்கிறது வெறும் சம்பாதிக்கிற குணம், உனக்கு இருக்கிறது படைக்கிற குணம். அதை எந்த சூழலிலும் விட்டுறாதே. எப்போ அது உன்ன விட்டு போகுதோ அப்ப நீ நினைச்சாலும் திரும்ப பெறமுடியாது”

7

சைக்கிளை வேகமாக மிதித்துக் கொண்டிருந்தான் பிரபுராம். கால் மிதிப்பின் வேகத்திற்கு சைக்கிள் ஈடுகொடுப்பதாக தெரியவில்லை. அது எப்போது போலவே எந்த சலனத்தையும் காட்டாமல் மெதுவாக சென்றுக் கொண்டிருந்தது. அதிலிருந்து வரும் பல்வேறு ஓசைகள் பரிதாபமாக ஒலித்தன.

இன்று புதிய இடம் சத்யா நகரை தாண்டி உள்ளே இருக்கும் மற்றொரு நகரான பார்வதி நகர். இன்னும் வளர்ச்சியடையாத நகராக இருப்பதை பார்க்கும்போதே தோன்றியது. வீடுகள் தள்ளித் தள்ளி எங்கோ இருந்தன. அதன் வாசல்கள் வேவ்வேறு திசைகளில் இருந்ததைக் கொண்டு வெவ்வேறு சாலைகளாக பிரிவதை புரிந்துக் கொண்டான். கறுப்பு தார்சாலைகள் மறைந்து செம்மண் தரை சாலை வரும்போது அதிலிருந்த மேடுபள்ளங்கள் அது இன்னும் புன்செய் நிலமாய் இருப்பதை காட்டிக் கொண்டிருந்தது. சில இடங்களில் பனைவளர தயாராகும் இலை துளிர்வை பார்க்கும்போது துயரமாக இருந்தது.

ஆரஞ்சு, சிவப்பு, பச்சை வண்ணங்கள் அடிக்கப்பட்ட வீடும், எவர்சில்வரில் கம்பிகளும் டிசைன்களும் கொண்ட கேட்டை உடைய வீட்டின்முன் வண்டியை நிறுத்தினான். கிழக்கு பார்த்த வீடு. சூரிய ஓளியில் காய்ந்துக் கொண்டிருப்பதாக தோன்றியது.

உள்ளே சாமான்களை எடுக்கும், வைக்கும் நகர்த்தும் ஓசைகள் அலங்காரத்திற்கு தயாராகும் யானையின் ஒசை போன்றிருந்தது. கேசவன் இப்போது சைட்டிற்கு அவனை அழைத்து செல்வதில்லை. வேறு இரு சைட்டுகளில் அவருக்கு வேலைகள் இருந்தன. காலை பத்து மணி முதல் மாலை பத்துமணிவரை மூன்று இடங்களுக்கும் மாறி மாறி செல்வார். உள்ளே சென்றபோது, மாரியும் ராஜாவும் வந்திருந்தார்கள்.

ராஜா கேசவனின் வலதுகரம் போல இருந்தான். அவன் செயல்பாடுகள் அதைத்தான் உணர்த்தின. உள்ளே வந்த முதல் நாளில் ராஜா அவனை தயக்கமின்றி கூர்ந்து பார்த்தான். முதல் அறிமுகங்களில் தெரியும் கூச்சம் எதுவுமில்லை. அது ஒரு ஆளுமை திறன். பிரபுராமை எப்படி வேலை வாங்குவது என்று எண்ணுகிற பயத்தின் வெளிப்பாடு. இன்று வந்ததும் அவன் முகத்தில் அதே அலட்சியம் “என்ன பிரபு இப்படிதான் லேட்டா வர்தா?” என்றான். “லேட்டா, சரியாதானே வந்திருக்கேன்”. “இன்னிக்கு நிறைய வேல இருக்குன்னே நேத்தே சொன்னேன்ல, அது ஞாபகம் இல்லையா?” சட்டென கோபம் அவன் தலையில் ஏறியது. “அதுக்காக முன்னாடியே வரமுடியாது” என்றான்.

அவன் பார்வையில் அத்தனை விரோதமிருந்தது. மிக நன்றாக அதை பழகியதின் அறிகுறியும் இருந்தது. “ஹலோ இங்க பாருங்க, என்கிட்ட கேசவன் அண்ணன் வேல வாங்குங்கன்னு சொல்லிட்டு போயிருக்காரு, அதுபடிதான் நான் செய்யமுடியும்”

“போய் சொல்லுயா அந்தாளுகிட்டேயே முன்னாடியெல்லாம் வரமுடியாது டயத்துக்குதான் வருவேன்னு சொல்லு”.

கைகளில் இருந்த பொருட்களை எல்லாம் வைத்துவிட்டான் ராஜா. அவனுக்கு தெரியும், வீரமாக பேசுபவர்கள் எல்லாம் தன் அதிகாரத்தை எப்படி காட்டவேண்டும் என்பதை அவர்களுக்கு புரியவைக்கும் ஒரு தருணம் என்று.

உடனே போனை போட்டான் கேசவனுக்கு. போன் போடும்போது அவன் கண்களில் விரோதத்துடன் பிரபுவையே பார்த்தான். “ம், ம்” என்று சொல்லிவிட்டு கடைசியில் போனை மெதுவாக அணைத்துவிட்டு பிரபுவைப் பார்க்காமலேயே சென்றுவிட்டான்.

அவனுக்கு இடவேண்டிய கட்டளைகளை வேறு ஆளிடமிருந்தே கொடுத்தான் ராஜா. மதியம் சாப்பிடப் போகும் போது பிரபுவின் அருகில் வந்தான் ராஜா. இப்போது அவன் உடல்மொழி சற்று மாறியிருந்தது. சிநேகபாவம் கூடி கண்களும் உதடுகளும் சிரிப்பை வெளிப்படுத்தின. அவனது அருவருப்புச் செயலை பிரபுராம் விரும்பவே செய்தான். எந்த நேரத்திலும் முதலில் இருந்த நிலைக்கு மாறக்கூடும் என்பதை அறிந்திருந்தான். ஆகவே சிநேகமாக சிரித்துவிடாமல் அமைதியாக அவனை பார்த்தான்.

“நீங்க கேசவன் அண்ணனோட சொந்தக்காரரா? அது நமக்கு தெரியாது, அண்ணன்தான் சொன்னாரு”

“ஆமா, வேற எதுவும் சொன்னாரா?”

“உங்க நெசவு ஆளுவ தான் இப்ப வேலை இல்லாம இருக்காக, எனக்கு தெரிஞ்சு ரொம்ப பேர் இப்ப வேற வேல தான். இல்ல?”

“ஆமா”

“இப்ப எல்லா வேலைக்கு வந்துட்டாங்க, தள்ளுவண்டியில விற்க வந்துட்டாங்களாமே” அவன் சீண்டலை அவனே ரசித்து சிரித்தான். “எந்த வேலையும் தப்பில்ல, வேல செய்யவிடாம அதிகாரம் பண்ண வருவான் பாருங்க ஒருத்தன், அதுதான் தப்பு”. அவன் வேலையைப் பார்க்க சென்றுவிட்டான். அல்லது மற்ற வேலையாட்களை மிரட்டி வேலை வாங்க சென்றிருக்கலாம்.

அவனை அப்படிப் பேசியிருக்க கூடாதோ என்று தோன்றியது. தன்னால் அவனை ஆட்டிவைக்க முடியும் என்று நினைப்பதுதான் அவனது பணிவிற்கு காரணம். வேலையில் நிலைத்திருக்க பல்வேறு வேஷங்களை போடும் நிலையில் ராஜா இருக்கிறான். அவர்கள் எதிர்பார்ப்பு முதலாளிக்கு பணிவாக இருந்து அந்த இடத்தை பெறவேண்டும் என்கிற அவசரம். என்றும் நம்பிக்கைக்கு உரியவன் என்கிற இடத்தை தக்க வைத்துக் கொள்ள படும்பாடு.

ராஜாவின் மனதை எந்த வகையிலும் எந்த அனுபவமும் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. முன்பே தீர்மானித்த வாழ்க்கை வாழ்பவன். தன்மானம், தொழில்பக்தி போன்றவற்றிலும் எதிலும் அவனுக்கு நம்பிக்கை இருக்கப் போவதில்லை. ஆனால் பிரபுராமின் பயமெல்லாம் தானும் அவனைப் போலவே ஆகிவிடுவோமா என்கிற எண்ணம்தான்.

பிரபுராம் கொடுக்க வேண்டிய வயரிங், சுவிட்ச் அமைத்தல் போன்ற எல்லா வேலைகளையும் செய்துவிட்டான். ஆனாலும் சற்று மிச்சம் வைத்திருந்தான். உடனே முடித்தால் வேறு வேலைகளை அவன் கொடுத்துவிடுவான் என்பதுதான். அவனுக்கு இதுவே சற்று அயர்ச்சியாக இருந்தது வீட்டில் இருந்திருந்தால் தன் நெசவு வேலைகளை எதையும் அவன் மிச்சம் வைப்பதில்லை.

அப்பா இறந்த பின்னே அம்மா அவன் திருமணம் வரை உயிருடன் இருந்தாள். அப்போதெல்லாம் எல்லா நெசவு வேலைகளுக்கும் உடனிருந்து உதவி செய்தாள். தறிவேலைக்கு ஒருவர் உதவிக்கு தேவை. அம்மா அதைப் புரிந்தவள், எல்லா வகையிலும் உதவி செய்யமுடிந்தது. சாப்பிடும் நேரத்திற்குமுன் கொஞ்சம் வேலையிருந்தால் பொறுத்திருப்பாள். வேலையின் தன்மை அவளுக்கு தெரிந்திருந்தது. பக்கத்தில் வந்து நின்று என்ன செய்யவேண்டும் என பார்த்துக் கொண்டிருப்பாள்.

வச்சலா அப்படி இல்லை. தறிவேலையே அவளுக்கு புரியவில்லை. அலுவலக வேலைபோல எதுவும் நேரத்திற்கு நடக்கவேண்டும் என நினைப்பாள். அவளைச் சொல்லிக் குற்றமில்லை. அவள் வளர்ந்த விதம் அப்படி. நான் தான் அவளுக்கு புரிய வைக்க முயற்சி செய்யவில்லை என நினைத்தான்.

வேலையை முடித்துவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டு வெளியே வந்தபோது, சாலை இருட்டியிருந்தது. ஆனால் நாற்சாலை சந்திக்கும் முனைகளில் அபரிதமான வெளிச்சம். அங்கே மனிதர்கள் எதையாவது தின்றுகொண்டோ, குடித்துக்கொண்டோ பேசிக்கொண்டோ கிடந்தார்கள். மனிதர்களைக் கவனிப்பதும் ஒருவகை கலைதான். சைக்கிளைத் தள்ளிக்கொண்டே சென்றான். ஏறிமிதிக்கும்போது விரைவில் வீடு வந்துவிடும் என தோன்றியது. இருமாதங்களாக இந்த வேலை செய்துக் கொண்டிருக்கிறான். வெவ்வேறு இடங்கள் வெவ்வேறு மனிதர்கள், ஒரே பண்புடையவர்கள். பொய்யான ஏமாற்று வேலைகள், நூறு ரூபாய் சாமான் வாங்கிவிட்டு ஆயிரம் என கணக்கு காட்டவேண்டும். யாருக்கு வேலை செய்கிறேன் என்பது தெரியாத நிலை. அவனுக்கு மேலே ராஜா, கேசவன், காண்டிராக்டர், ஓனர் என்று நீள்கிறது. யாரும் யாரையும் ஏமாற்றலாம், அதெல்லாம் தொழில் தர்மங்கள்தான். நியாயப்படுத்தப்பட்ட அநியாங்கள்.

கூட்டத்தில் ஒருவனாக கலந்துவிடும் நிம்மதியின்மையை உணர்ந்தபடி இருந்தான். வெறும் ஜடமாக மாறிவருவது போன்ற உணர்வு. அதைத் தாண்டி மனிதனாக வருவதற்கு மனம் சொல்லும்படி வேலை செய்யவேண்டும். ஆழ்மனதும் உரையாடல் நடக்கவேண்டும். செய்நேர்த்தி இருக்கும் படியான வேலையைச் செய்துமுடித்த திருப்தி இருக்க வேண்டும். சொற்களுக்கு அங்கு அதிக வேலையிருக்காது, மற்றவர்களுடன் சண்டையிட்டு தன் இடத்தை தக்கவைக்கும் போட்டியிருக்காது. தனக்கு மட்டுமே அறிந்த சில ரகசியங்கள் அதில் உண்டு. அவற்றை நடைமுறைப்படுத்துவதில் எந்த நிர்பந்தமும் இருக்காது.

ராமாவை நினைத்துக் கொண்டான். கணீரென்ற குரலில் கால்களில் ஜதியை கூட்டி கைகளில் ஒன்றை வாசித்து அவன் பாடும் பாடல் அவனையே மறக்க செய்துவிடுகிறது. வெறும் பணம் குறித்த ஆசையல்ல அது. கூடிநிற்கும் கூட்டத்தின் மனதை தன் மனதோடு இணைக்கும் செயல். அவனால் ஒவ்வொரு நாளும் மனதோடு பேசமுடிகிறது. ஆனால் தினமும் அவமானங்களை சந்திக்கிறான். அவன் கலையை பிச்சையாகதான் நினைக்கிறார்கள், அவனுக்கு தெரிந்த, தன் பிள்ளைப் பருவத்திலிருந்து அறிந்த, ஒவ்வொரு நாளும் கூர் தீட்டிக் கொள்ளும் தன் கலைக்கு, சமமாக சன்மானமாக மக்கள் அளிப்பது வெறும் அவமானங்கள்தாம். கூடவே சில சில்லறைகள், அதில் அவன் தன் வாழ்க்கையை நடத்திக் கொள்கிறான். அது குறித்து எந்த புகார்களும் அவனுக்கு இல்லை. தான் அறிந்த தன் கலைக்கு முன்னால் இந்த அவமானங்கள் அவனுக்கு ஒன்றுமில்லை.

பிரபுராம் ஒரு கடைக்கு முன்னால் நின்றான். அது ஒரு நாட்டுமருந்துக் கடை. அவனிடம் வச்சலா குழந்தைக்கு கொடுக்கும் சுரமருந்து வாங்கி வரச் சொல்லியிருந்தாள். கை அறியாமல் தன் வேட்டி மேல் கைவைத்து உள்ளிருக்கும் இருக்கும் கால்சிராயை தொட்டுப் பார்த்து உணர்ந்தது.

மனதினுள் இருக்கும் தனிமையை எப்படி உணர்வது. அது தன் இருப்பை பல துருத்தல்களின் வழியே வெளிக்காட்டுகிறது. எப்படி ராமா தன்னை மறந்து வாழ்கிறான். அவனுக்கு மட்டும் தெரிந்திருக்கிறது அந்த ரகசியங்கள். எந்த கெளரவங்களும் மனிதர்களுக்குதான். கலையை தன் வாழ்வாக கொண்டிருப்பவனுக்கு கெளரவம் தேவையில்லை. தன்னோடு நெசவு செய்து வாழ்ந்தவர்கள் கலையாக அதை நினைக்காததால் அதிலிருந்து வெளியேறி வேறுவேலைகள் செய்யமுடிகிறது. எல்லோருக்கும் இவ்வேலைகள் தெரிந்திருக்க நியாயமில்லை. என்னைப் போன்றவன் மட்டுமே அதிகம் கவலையுறுகிறான்.

பணம் தரும் வேலையும், நல்ல உடைகளும், அன்பான மனைவியும் குழந்தைகள் மட்டும் போதும் என்று நினைப்பது ஒருவகையில் சுயபச்சாதாப வாழ்க்கைதான். அவற்றில் போதாமைகளும், வஞ்சகங்களுமே நிறைந்திருக்கும். ராஜாவைப் போல வாழ்வதற்கு பொய் வேஷங்களும் துரோகங்களும் எளிதாக கைகொடுக்கும். ஆனால் எனக்கு அப்படி எளிதாக அதை செய்ய முடியவில்லையே. நான் அப்படி நினைப்பது என்னுடைய தவறுதானா? என் குழந்தைகளும் மனைவியும் எனக்கு முக்கியமில்லையா? என் வருமானம் அவர்களுக்கு போதாதபோது நான் என்ன செய்யவேண்டும். என்னுடைய இலக்கை அடைவதற்கு நான் அதிக உழைக்க பயப்படுகிறேனா? பல இன்னல்களையும் தடைகளையும் உடைத்துச் செல்லும் கம்பியூட்டர் விளையாட்டு போலத்தான் இந்த பொருளியல் வாழ்க்கை, அது சொல்லும் இலக்கை அடையமுடியாதவரை ‘விளையாட்டு முடிந்தது’ வந்து கொண்டேயிருக்கும். ஆனால் என்னுடைய இலக்கு அதுவல்லவே.

“இறைவா, நான் விரும்பும் இலக்கும், என்னை சார்ந்த மற்றவர் விரும்பும் வாழ்க்கையும் எனக்கு அருளக்கூடாதா? என் வாழ்க்கை என் கையில் இல்லாதபோது, எனக்கு பிடித்த வாழ்க்கையை நான் வாழ முடியாதபோது நான் என்ன செய்வது. யாருக்கும் பாரமாக இருந்து நான் என்ன சாதிக்கப்போகிறேன். எனக்கே நான் பாரமாக இருக்கிறேனே? ஆம் அதுதான் சரியாக இருக்கும். இறைவா, இனி நான் அடைவது உன் கையில்தான்.”

வண்டியை ஸ்டான்ட் போட்டு நிறுத்திவிட்டு, கடையில் சென்று சேலைக்கு போடும் வஞ்சிரத்தை 200 கிராமுக்கு வாங்கிக் கொண்டான். உள்பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, சைக்கிளை ஏறி மிதித்தான். மனம்போன போக்கில் அவனை செலுத்தியது. அது நேராக அவன் விரும்பும் கிருஷ்ணன் கோயிலில் நின்றது. எதையும் இனி யோசிக்க கூடாது என்கிற வைராக்கியத்தை மனதில் வைத்துக் கொண்டே பொட்டலத்தை திறந்து வாயில் இட்டு தண்ணீரை குடித்தான். சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு, கோயில் வெளி பிரகாரத்தின் ஓரமாக படுத்துக் கொண்டான்.

8

இரவு பன்னிரெண்டு மணியானபோது சற்று கலக்கமாக இருந்தது. வச்சலா குழந்தைகள் தூங்கிவிட்டன என்று உறுதி செய்துவிட்டு எழுந்துமர்ந்தாள். அருகில் வைத்திருந்த செல்பேசியில் எண்களை இட்டு கேசவனுக்கு போன் செய்தாள். பல சுற்றுக்குபிறகு எடுக்கும் ஓசை அந்த இருட்டில் ஒரு பறவையின் அலறல் போல கேட்டது. ஹோலோ வீட்டில் இந்த இடத்தில் யாரோ இருக்கிறார்கள் போன்றிருந்தது. “என்னம்மா” என்றார் கேசவன். இன்னும் “அவரு வரலண்ணா” என்றபோது அவளையும் அறியாமல் குரலில் பயம் வந்து அழுதுவிட்டாள். சற்று நேரம் அமைதியாக இருந்தது அந்தப்பக்கம். “சரிம்மா இதோ வாரேன் நா, காவேரி நகர்ல அவருக்கு வேலை, முடிச்சுட்டு எல்லோரும் கிளம்பிட்டதா ராஜா சொன்னான். எதுக்கும் கேட்டுகிறேன். அங்கேயே இரும்மா வாரேன்,” என்று போன் அவசரமாக கட் செய்யப்பட்டது.

வச்சலா வாசலில் வந்து நின்றுகொண்டாள். வீட்டின் முன்னே இருந்த தெருவிளக்கை தவிர தெருவில் விளக்கில்லை. இருபக்கமும் இருண்ட பாதைகள் ஒரு புள்ளியில் சந்திப்பது போலிருந்தது. இருட்டின் ஓசை மிக துல்லியமாக கேட்டது. நாயின் காலடி, மனிதர்கள் எங்கோ இருமும் ஒசை, பூச்சிகளின் ஓசைகள் என்று கலவையாக கேட்டபடி இருந்தது.

பிரபுராமுக்கு செல்போன் பிடிப்பதில்லை, அதை அலங்கார பொருளாககூட அவன் நினைக்கவில்லை. வீட்டிலேயே அதை வைத்துவிட்டு எப்போதும் மறந்து சென்றுவிடுவான். செல்போனால் யாருக்கும் போன் செய்ததில்லை அவன். அதில் போன் வந்தாலும் எடுக்க மாட்டான். ஒரு அவசரத்திற்கு அவனிடம் பேச வேண்டும் என்றால் முடியாது. இந்த நடுஇரவில் பேசி தொந்தரவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

கேசவன் முதலில் அவன் உதவியாளனை ஒருவனை அழைத்துக் கொண்டு நேராக வேலை செய்த காவேரி நகருக்கு பைக்கில் சென்றார். சைட்டில் இருந்த வாட்ச்மேனிடம் பிரபுராம் சென்றுவிட்டதை உறுதி செய்துகொண்டார். பின் அவர் வரும் பாதைகளை உன்னிப்பாக கவனித்து வந்தவர், கிருஷ்ணன் கோயில் முன்நின்ற சைக்கிளை வைத்து அவன் இங்கிருக்க வேண்டும் என உறுதிபடுத்திக் கொண்டார். முதலில் அவன் எங்கும் கிடைக்காததில் சற்று சலித்திருந்தவர், அவனை கண்டதும் உற்சாகம் கரைபுரண்டது. அதை மகிழ்ச்சி எதனடிப்படையில் வந்தது என்று நினைக்க முடியவில்லை. கோயில் மதில் சுவரொரமாக இருட்டில் கிடந்த அவர் உடலை தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தார். சின்ன ஆஸ்பத்திரி அவன் அறிந்தவரை யாரையும் குணப்படுத்தியதாக நினைவில்லை. அவனை சேர்த்துவிட்டு வச்சலாவிற்கு போன் செய்து தகவல் சொன்னான்.

அவள் கலங்கிப் போய் அழுது வந்திருப்பாள் என நினைத்தான். இருகுழந்தைகளை கவனிக்க பக்கத்துவீட்டில் சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு தனியாக வந்திருந்தாள். வயிற்றில் இருந்த விஷம் எடுக்கப்பட்டு கையில் டிரிப்ஸ் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. இரவு முழுவதும் அவன் பக்கத்திலேயே இருந்தாள். மருத்துவமனை வாசனை அவளுக்கு பிடிப்பதில்லை. எந்த மருத்துவமனைக்கும் அவள் செல்ல மறுத்துவிடுவாள். அதன் சின்ன வாசனையும் அவள் வயிற்றை கலக்க செய்யும். ஆனால் இன்று அந்த வாசனைகளின் ஊடே இரவை கழிக்கிறாள். காலைவரை அவன் உயிரைப் பிடித்துtஹ் தாண்டி விட்டால் போதும். அவன் உயிருடன் இருந்தால் போதும் என நினைத்தாள். அவனை அதிகம் வற்புறுத்தி துன்பத்தை அளித்துவிட்டதை நினைத்து நினைத்து அழுதாள்.

நீண்ட இரவை இப்படி தனிமையில் கழித்தது இன்றுதான். ஒவ்வொரு இமைப்பிலும் அவள் அவனைக் கண்ணுற்றாள். வேட்டி மட்டும் அணிந்த சட்டையில்லா வெற்று உடம்பு. எலும்புகள் துருத்தித் தெரியும் உடம்பில் சிவந்த கோடுகள் காணப்பட்டன. கோயிலின் வாசலில் படுத்துக் கிடந்து சிவந்து கிடக்கிறது. இனி எதை செய்ய முடியும். ஒன்று அவனுடன் சாகவேண்டும், அல்லது கேட்டதைக் கொடுக்க வேண்டும். என்ன கேட்கிறான். எதுவுமில்லை, நல்ல சாப்பாட்டைக் கூட அவன் விரும்பியதில்லை. மாமியார் கூறியதிலிருந்து அவனைப் பற்றி அறிந்த ஒன்று, அவனுக்குத் தேவை அவன் அப்பாவைப் போன்ற வாழ்க்கை. எப்படி சாத்தியமாகும் என தெரியவில்லை. காலம் தன் வேகத்தில் மாற்றங்களை கொண்டுவருகிறது.

அவன் பிழைத்தது, கடவுளின் பெரிய அருள் போல பார்க்கப்பட்டது. அந்த மருத்துவமனைக்கு சின்ன காயம், ஜூரத்திற்கு செல்பவர்களே அதிகம். பெரிய வியாதி, அவசர பிரிவிற்கு சென்றவர்கள் பிழைத்ததில்லை. அப்படியான நல்ல பெயர் கொண்ட மருத்துவமனையில் சென்று அவன் வந்ததே அதிசயம். காலையில் வீட்டிற்கு வந்து உணவு சமைத்து எடுத்துக் கொண்டுவந்தாள். மாலை அவன் டிஸ்சார்ஜ் ஆனதும் ஒரு ஆட்டோவில் அவனை அழைத்துவந்தாள். அதுவரை அவன் சம்பாதித்த பணம் எல்லாம் செலழிந்திருந்தது.

9

வீடு பிரபுராமுக்கு மிக புதியதாக இருந்தது. அவனை எப்போதும் கண்காணிப்பது போன்றிருந்தது. ஒருவர் மாற்றி ஒருவர். வாணி அவன் பக்கத்திலிருந்து விலகிச் செல்லும்போது, வச்சலா வந்து அமர்ந்துக் கொண்டாள், வச்சலா சில வேளையாக வெளியே செல்லும்போது நரேன் வந்து அமர்ந்துக் கொண்டான்.

அவர்கள் எதுவும் பேசுவதில்லை. மெளனமாக அவனை நோக்கினார்கள். அதில் பரிதாபமும், சங்கடங்களும் நிறைந்திருந்தன. எதையாவது சொல்லி அவன் மனதை புண்படுத்திவிடக்கூடாது என்று கவனமாக இருந்தார்கள். நரேனுக்குக் கூட வச்சலா சொல்லி வைத்திருந்தாள் எப்படி அப்பாவை அணுகவேண்டும் என்று. சமையல் வேலை செய்வதற்காக வச்சலாவின் அம்மா அய்யம்பேட்டையிலிருந்து வந்திருந்தாள்.

அவரது கால்கள் எப்போது வாசலுக்கும் அடுப்படிக்குமாக இருந்தன. எதையோ மறந்துவிட்டவர் போல் வாசலுக்கு சென்றார், மீண்டும் அடுப்படிக்கு வந்தவுடன் விட்டு சென்றவைகளை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். வாசலில் செல்லும் எதையும் நிறுத்தி விலை பேசினார். காய்கறி முதல் பொரிகடலை வரை எல்லாவற்றையும் பேரம் பேசி வாங்கினார். வாசல் பெருக்குவது, தண்ணீர் பிடிப்பது, சமையல் செய்வது, வந்தவர்களை வரவேற்பது, துணிதுவைப்பது, காயவைப்பது, பாத்திரம் கழுவுவது என்று மாறி மாறிச் செய்து கொண்டேயிருந்தார். மாமியும் வச்சலாவும் போட்டி போட்டு வேலை செய்வது போலிருந்தது. அதில் அலாதியான அனுபவமும் இருந்தது.

வயிற்றில் கை வைத்து படுத்திருந்தபோது உள்ளே உருளும் பொருள் ஒன்று சுழல்வது போலிருந்தது. சட்டென உலகமும் மாறிவிட்டது. எப்போது சிடுசிடுத்துக் கொண்டிருந்த வச்சலா உற்சாக சிரிப்புடன் காணப்படுகிறாள். நான் பிழைத்துவிட்டேன் என்கிற மகிழ்ச்சி அல்லது பெரிய சோகத்தை மறைக்கும் முகமாக எழுந்த உற்சாகம்.

மின்விசிறியின் சுழற்சி போலவும், அது நிறைக்கும் காற்றை போலவும் அன்று இருந்தது. அந்த பூசு வச்சிரத்தை அப்பா மிக கவனமாக எடுத்து வைத்துவிட்டு கையை கழுவுவார். அதற்கு அவர் சிறுவனாக இருந்த சமயம் வீட்டில் சாயம் போடும் வேலையை பார்த்த சின்னப்பா என்பவர் அதை குடித்து உயிரை விட்டார். காரணம் அவருக்கும் தெரியாது. உள்ளே சென்று இரப்பை குடல் எல்லாவற்றையும் அறுத்துவிட்டுவிடும் என்று கூறியிருக்கிறார். அப்படிதான் இருந்தது. அவர் சொன்னதால் அன்று அவர் முகம் துலக்கமாக மிக அருகில் “டே, பிரபூ எந்திரிச்சு வாடா” என்று கூறுவது கேட்டது. பதறி எழுந்துவிடும் அவன் அப்போது எழ முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக கிணற்றில் விழுவது போன்றிருந்தது. பெரிய பருந்து கூரிய கால்நகங்களுடன் அவனை தூக்கி மேலே சென்று விட்டது போன்றிருந்தது. நினைவு தப்புவதும் மீண்டும் வருவது ஒன்றுதான். மருத்துவமனையில் அவன் கண் விழித்தபோது அவன் கால்களை பிடித்து யாரோ சுற்றிவிடுவது போலிருந்தது. அதன் வேகம் குறைய குறைய நினைவு வந்தது. நினைவு வந்ததும் அவன் நினைத்தது நரேனை தான். அவனுக்கு எதுவும் சொல்லித் தராமல் செத்துப்போகிறேனே என்கிற நினைப்புதான் வந்தது.

நான்கு நாட்கள் நான்கு மாதங்களாக நீண்டன. இழந்த பணத்தை மீண்டும் மீட்கவேண்டும் அடகு வைத்தவைகளை மீட்டு அவளுக்கு அளிக்க வேண்டும் இவை பற்றிய யோசனை வரும்போதெல்லாம் கண்களை மூடித் தியானிப்பது போன்றிருந்தது. என்ன வழி என்பது அவன் அறியமுடியாத தொலைவில் இருந்தது. ஒரு நாள் காலை எழுந்தமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தான். இன்று என்ன கிழமை என்ன தேதி என்று யோசனை மனதில் இருந்தது. ஆனால் அது குறித்து யோசிக்க இப்போது நேரமில்லை.

முகம் கழுவி சட்டையைப் போட்டு, தலைவாரினான். லேசாக பவுடர் அடித்து, கொஞ்சம் முகத்தை அழகுபடுத்த எண்ணினான். “நா போயி கேசவன பார்த்துட்டு வாரேன் வச்சலா. இல்லேண்ணா இன்னொருத்தரு இருக்காரு முத்துன்னு பேரு, அவரும் எலக்ரீசியன் தான். நல்ல சம்பளம் கிடைக்கும்” என்றான்

அவன் முன் வந்து நின்றவளை பார்த்ததும் அவனுக்கு எதையாவது சொல்லப்போகிறாளா என சங்கடத்துடன் நின்றிருந்தான். “ஏங்க திருப்பியும் கேசவன் அண்ணன்டல்லாம் போறீங்க, பழைய முதலாளிகிட்ட நெய்யிறத்துக்கு கேளுங்க”.

அவள் சொல்வது அவனுக்கு குழப்பமாக இருந்தது. “இல்ல வச்சலா நீ தான்…”.

“உங்களுக்கு எது செய்ய வருது அத செய்யுங்கங்க. வருமானம் சரியாக வரலேன்னாலும் பரவாயில்ல, உங்களுக்கு புடிக்காதத இனிமே நா கட்டாயப்படுத்தமாட்டேன்”

எதுவும் சொல்லாமல் கட்டிலில் அமர்ந்து கொண்டான். கட்டில் அவனை தூக்கி மேலே பறப்பது போன்றிருந்தது. உண்மையைதான் சொல்கிறாளா? இன்று காலைவரை நினைத்திருந்தவைகளை அழித்து அவன் தலையில் புதிய எண்ணங்களை சேர்க்க முடியாமல் திணறலாக இருந்தது. மூச்சு திணறுவது போன்றிருந்தது. கட்டிலில் அமர்ந்திருந்த அவன் தலைமுடியை சீவுவது போல் அவள் வருடிவிட்டி “உங்க சந்தோஷம்தான் எனக்கு புள்ளைங்களுக்கு சந்தோஷம், சரிங்களா, அம்மாவும் இததான் சொன்னாங்க, சரி எனக்கு வேல கிடக்கு நீங்க என்ன பண்றீங்களோ செஞ்சுட்டு வந்து சொல்லுங்க” எழுந்து போய்விட்டாள்.

சட்டையை எடுத்து போட்டுக் கொண்டு வெளியே கிளம்பினான். தெருக்களில் மனிதர்கள் நிறைந்திருந்தார்கள். அவர்களின் அவனுக்கு தெரிந்தவர்கள் நின்று அவனை உற்றுப் பார்த்துவிட்டு சென்றார்கள். அவன் மீண்டும் எதையோ செய்ய போகிறானா என்கிற ஆவல் அவர்கள் கண்களில் தெரிந்தன. “என்ன பிரபுராமா ஏது இவ்வளவு தூரம்” என்கிற யாரோ ஒருவரின் கேள்வி அவன் காதில் விழுந்தது. அவனின் யோசனைகளுக்கு பதில் சொல்லும் நேரமில்லை என்று நினைத்தான்.

அவன் மனதில் வைராக்கியம் கூடியிருந்தது. தன் வாழ்க்கையை மாற்றப்போகும் வைராக்கியம். சிவராயதோட்டம் தெருவின் முதல் வரிசையில் அமைந்த அபிராமி சில்க்ஸ் என்று எழுதிய வீடு கடையும் கொண்ட கட்டிடத்தின் முன் நின்றான். முன்னே கடை பின்னே வீடு, கடை வழியாக உள்ளே செல்ல முடியும். ஆனால் கடையில் யாருமில்லை, கடை வேலையாட்கள் சில அமர்ந்திருந்தார்கள். சைடு வழியாக பின்னே சென்றான். நாய் ஒன்று இருக்குமே, என்கிற நினைப்பு அவனுக்கு பயத்தை ஏற்படுத்தவில்லை. அவன் வரும் வேகத்தை பார்த்த படுத்திருந்த நாய் பதறி எழுந்து பின்னே ஓடியது. வாசலைத் தாண்டி அதற்கு அளிக்கப்பட்டிருந்த சின்ன கூண்டு பக்கத்தில் நின்று கதறி குழைத்தது.

உள்ளேயிருந்து அர்ஜுனா கோவிந்தம் வெளியே வந்தார். வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்து நெற்றியில் விபூதி, குங்குமம் பூசி கழுத்தில் வெள்ளி பூண் போட்ட ருத்திராட்சங்கள் கோர்த்த மாலை நெஞ்சுவரை இருந்தது. அதன் கடைசியில் ஒரு பெரிய டாலர். அவர் முகத்தில் சின்ன அதிர்ச்சி, எதற்கு இவன் இங்கு வந்திருக்கிறான் என்று. “வா பிரபு” உட்கார் என்றார். “உடம்பு இப்ப தேவலாமா?”, “இப்ப உடம்பு தேவலாம் முதலாளி, ஒன்னும் பிரச்சனை இல்ல”. அவன் என்ன கேட்கப்போகிறான் என்று அவர் அறிந்திருந்தார். அவர் முன் தயாரிப்புகளுடன் இருந்தார். கடன் கேட்கும் வின்கர்களை(15) எப்படி சமாளிப்பது என்று அறிந்த பல்வேறு வழிகள் ஒன்றை முதலில் ஆரம்பிக்க காத்திருந்தார்.

“வீட்டில் எப்படி இருக்காங்க, குழந்தைங்க எப்படி இருக்காங்க, ஒரு நாள் வீட்டுக்கு அவங்கள கூட்டிக்கிட்டு வாயேன்”

“சரிங்க முதலாளி, நா இப்ப வந்தது வேற விஷயம்”

“சொல்லுப்பா, நா என்ன செய்யனும்”

“உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கும், வீட்ல காசே இல்ல, பொட்டு தங்கம் இல்ல, எல்லாத்தையும் அடகு வெச்சாச்சு, இருக்குறத எல்லாம் வித்தாச்சுன்னே வெச்சுகங்க”

“சரி”

“நா கேட்க வந்தது என்னன்னா பெரிய பேட்டு, நிறைய புட்டா இருக்கிற மாதிரியான ஒரு கல்யாணப் புடவ எனக்கு நீங்க கொடுக்கணும், ஒரு வாரத்துல நெய்சு கொடுக்கிறேன், திருப்பி ஒரு வாழ்க்கைய கொடுங்க”

“இப்படி திடீர்னு கேட்டுடியேப்பா, முதல்ல முன்ன வருமானம் இப்ப இல்லன்னு உனக்கு தெரியும். நானே திருபுவன், கஞ்சியிலேந்து வாங்கி விக்கிறேன். சாதாரண பேட்டு இருக்குறதுதான் இங்க நெய்யறதுன்னு உனக்கு தெரியும்”

“அதான் அதுல நல்ல பேட்டு எனக்கு கொடுங்கன்னு கேட்கிறேன், இல்ல ஜாங்க்லாவா இருந்தாலும் பரவாயில்லை, நா நெய்யறேன்”

“சரிப்பா, ஆனா, இப்பதான் உனக்கு உடம்பு சரியாயிருக்கு, இதெல்லாம் நெய்ய உடம்புல வலு வேண்டாமா? நா கொடுக்குற கூலி வேற உனக்கு பத்தனுமே, உனக்கு வீட்டுல அம்மா அப்பா இப்ப இல்ல, அண்ணன் தம்பியும் இல்ல கூடமாட வேலை செய்ய ஆளும் இல்ல. என்ன பண்ணுவ”

“இல்ல நா என்ன சொல்றேன்னா”

“இரு, இரு, இப்படி இருக்கிறப்ப, நீ அகல கால் வெக்கலாமா, உனக்கு தெரியாததா, ஒரு இழ போச்சுன்னா இப்ப எப்படி ரேட்டு குறையும்னு உனக்கு தெரியும்ல. நீ புணிய சரியாக மிதிக்கலன்னு வையு என்னாவும்?”

“இல்ல முதலாளி”

“இருப்பா, சரியில்லாத உடம்போட கான்சென்ட்ரேட் பண்ண முடியுமா?”

“அதெல்லாம் கரெக்டா இருக்கும், நா இப்ப தெளிவா இருக்கேன்”

“இப்ப ஹாப்ஃபைன்(16) தான் ஓடிக்கிட்டு இருக்கு. நீ அத நெய்ய மாட்டேன்னு சொல்லுவியே”

“எதவேணா நெய்வேன், எனக்கு பிரச்சனை இல்ல, பெரிய பேட்டா குடுக்கனும்னு சொல்றேன்”

கோவிந்தம் யோசித்தார். கடனோ இழப்பீடோ கேட்காமல், வேலை கேட்கிறான் என்று சந்தோஷப்பட்டார்.

“சரி நா கணக்குப் பிள்ளைக்கிட்ட கேட்கிறேன். ஆனா எதுவும் என்னால சொல்ல முடியாது, சாயந்தரமா வா, நா அவர்ட பேசிட்டு சொல்லிடறேன். இப்ப இருக்குற நிலைம என்னான்னு உனக்கு புரியும், எதுன்னாலும் என்ன கோச்சுக்காத”

“நீங்க எனக்கு நல்லதுதான் செய்வீங்க முதலாளி, நா சாயந்தரமா வாரேன்”

விடைபெற்று வெளியே வந்தபோது மிகுந்த தன்னம்பிகையாக உலகு தெரிந்தது. அவன் முகத்தில் தெரிந்த புன்சிரிப்பு எதிரிலிருப்பவர்களை திகைக்க வைத்தது. வேகவேகமாக நடந்து வீட்டிற்கு திரும்பிவந்தான்.

கால்களை கழுவிக் கொண்டு அவனிருந்த சின்ன கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

“டீ குடிச்சீங்களா போட்டு தரவா?”

“வச்சலா, நீ விஷயத்த கேட்டா சந்தோசப்படுவ”

“என்னான்னு சொல்லுங்க”

“என் பழைய முதலாளிய பாத்துட்டேன், பேசிட்டேன். புடவையக் கேட்டிருக்கேன். இன்னிக்கு சாயந்தரம் சொல்றேன்னு சொல்லியிருக்காரு, நீ கவலப் படாத வச்சலா, பழையபடி நெய்சு எல்லா காசையும் திருப்பி எடுத்துடுவோம்.”

“உங்களுக்கு என்ன புடிக்குதோ அத செய்யுங்க, ஆனா இப்ப இந்த நிலைமைல வேலை செய்யமுடியுமா”

“ஏன் முடியாது, நா பண்ணிக்காட்றேன் வச்சலா”

நின்றிருந்த அவளை கட்டிலில் அமர்ந்தபடி கட்டிக் கொண்டான். “ஐயோ அம்மா”, என்றாள். அவள் பொய்யாகத்தான் கூச்சலிடுகிறாள். உள்ளே அம்மா இருந்தாலும் அவளை கட்டியணைக்கும்போது அவளும் திருப்பி அணைத்துக் கொண்டாள். அவள் உடலில் மெல்லிய மஞ்சள் வாசனையடித்தது. இடைசிறுத்து மிக மெலிந்திருந்தாள். அவளின் இருதனங்களும் அவன் முகத்தில் பதிந்திருந்தன. “வச்சலா, நா எப்படி பண்றேன்னு பாரு, எனக்கு சின்ன கட்டைல புட்டா மட்டும் சுத்திக் கொடு போதும் வச்சலா”.

மேலுதட்டை கீழுதட்டால் இழுத்து அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள். அதையும் தாண்டி அவள் கண்களில் கண்ணீர் பெருகி வழிந்து அவள் ஜாக்கெட்டை ஈரப்படுத்தியது.

தலைதூக்கி மேலே பார்த்தவன் அவளை இழுத்து பக்கத்தில் அமரவைத்தான். கண்களை துடைத்து, “இத பாரு வச்சலா, நீதான் ஓகே சொல்லிட்டல, இனிமே பாரு, முதல்ல கொஞ்சம் கஷ்டம்தான். அப்புறம் தூக்கிடுவேன்”.

“உங்களுக்கு எல்லா வேலையும் தெரியுது, ஆனா பண்ணத்தான் மாட்டீங்க. பொண்டாட்டிய சமாதனப்படுத்த தெரியாத அப்பாவி நீங்க, அப்பவே என் கன்னத்துல ஒரு அறைவுட்டு நா இததாண்டி செய்வேன்னு சொல்லியிருந்தா நா என்ன மாட்டேன்னா சொல்லப்போறேன்”.

“சரி விடுமா”

“போங்க”

“இப்பதான் ஒன்னும் ஆவலல்ல”

“ஆ… நீங்க மட்டும் போயிருந்தீங்க, நா உயிரோட இருப்பேன்னு நினைக்கிறீங்களா, நானும் அப்பவே செத்திருப்பேன்”. இப்போது ஓவென அழ ஆரம்பித்திருந்தாள். அவன் மனதில் வெறி ஏறிக்கொண்டேயிருந்தது.

“வச்சலா, பாரு அழாத. இப்ப எல்லா சாமனையும் எடுத்து வைக்கிறேன். சிலதுகள கொண்டா ஆதிகிட்ட கொடுத்திருக்கேன். அதெல்லாம் போயி வாங்கிட்டு வாறேன், சரியா”

“சரி”

மாலை கோவிந்தம் வீட்டிற்கு போனபோது “நா பேசிட்டேன் பிரபு, உனக்கு கொடுக்கிறதா பேசிட்டோம். கணக்குபிள்ளைகிட்ட விவரத்த கேட்டுக, ஆனா ஒன்று, என்கிட்ட இருக்குற விங்கர்கள தாண்டி கொடுக்கிறேன். பார்த்துக்க, சரியா நல்ல செய். அவ்வளவுதான்”

நாளெல்லாம் மகிழ்ச்சியில் திளைத்தான். நினைக்கும் தோறும் அப்பாவின் முகம் முன்னே வந்தது. “டே…” என்கிற அவரது குரல் அடியாழத்து கிணற்று குரல்போல் காதில் ஒலித்தது.

அப்பாவிற்கு என்னைப் பற்றி தெரியும் என் திறன் மீது அவருக்கு அலாதியான அன்பு. இரு அண்ணன்களைவிட அவன் மேல் பிரியம். அவனின் தோள் மேல் கைவைத்து பேசக்கூடியவர். ஒவ்வொரு தாவணி அறுத்து முடியும்போது விளக்கெண்ணையோ அல்லது நல்லெண்ணையோ விட்டு அவர் கைகளையும் விரல்களையும் இழுத்துவிடச் சொல்வார். அவன் மீதான அன்பின் காரணமாகவே அதை செய்ய சொல்கிறாரா என தோன்றும். நடுவிரல் எப்போதும் வளையாமல் நேராக இருப்பது போன்றிருக்கும். “அப்பா இந்த விரல் நேரா இருக்குபா” என்றான்.

“தார்க்கட்டையை அந்த விரல் மூலமாதானே அதிகம் பயன்படுத்றோம்”

காலை எழுந்ததும் முதல் வேளையாக கீழ்தறியிலிருந்து மேல்தறிவரை நன்கு துடைத்தான். ஆறுமாதமாக பார்க்காமல் கிடந்தது பலவிதமான தூசிகளால் மூடியிருந்தது. நரேனும் வாணியும் பென்சிலால் சில மரங்களில் கிறுக்கி வைத்திருந்தார்கள். ஒரு தாங்குமரத்தில் வாணி தன்பெயரை எழுதியிருந்தாள். ஒருபக்க தாங்குமரம் பதிந்திருந்த தரையில் சுற்றி சின்ன வெடிப்பாக காணப்பட்டது. இடைவெளியில் கழுவிவிடும் தண்ணீர் போய் ஈரமாக கிடந்தது. கொல்லையில் கிடந்த மணலையும் பழைய கட்டிதட்டிய சிமெண்டையும் கரைத்து பூசிமூடினான்.

மேலே இருந்த ஜகார்டை இறக்கி, தேவையில்லாமல் இருந்த அட்டைகளை நீக்கிவிட்டு, எண்ணெய் விட்டு துடைத்துவிட்டு மீண்டும் மாட்டினான். உருளையை சுற்றவிட்டு இரும்பு பகுதிகளில் எண்ணெய் விட்டான். பாவுநூலின் பாரமின்றி எளிதாக சுற்றியது. அதிலிருந்த ரம்ப பற்களை சரியா பொருத்தி நிறுத்தினான், அது சுற்றி ஒரே அச்சில் நிற்பது வேடிக்கையாக இருந்தது. மீண்டும் மீண்டும் செய்துபார்த்து மகிழ்ந்தான். சிறுவயதில் அப்படி செய்து அப்பாவிடன் திட்டு வாங்கியது நினைவிற்கு வந்தது.

பாவுநூலின் வாசனை அறைமுழுவது நிரம்பி வழிந்தது. அந்த வாசனை தானிருந்த கருவறை வாசனை என்று யூகித்துக் கொண்டான். சாயம் ஏற்றப்பட்ட பாவை அவன் கையில் வந்ததும், அதை முதலில் தடவிப் பார்த்தான். வயதான இறந்துபோன பாட்டியின் தலைமுடிபோல இருந்தது. முகத்திற்கு மஞ்சள் தேய்ப்பதால் அது வெள்ளை தலைமுடி ஓரங்களில் படிந்து மேலும் கோரை புல்போல மாறியிருக்கும். அந்த தலைமுடியை தடவியபடி அவள் மடியில் சிறுவயதில் தூங்குவான்.

பாவை தறியில் பூட்ட ஆரம்பித்தபோது மழை பெய்ய தொடங்கியிருந்தது. நல்ல சகுனம் என்று அம்மா சொல்லுவாள். ஒரு செயல் செய்யும்போது மற்றொன்று தானே நடக்கும்போது அது நல்லவையின் அறிகுறி என்று மகிழ்வது நம் மனநிறைவிற்குதான். வான்வெளியில் பறவை போல நினைத்துக் கொண்டான். மழையில் நனைந்தபடி அவன் இறகுகளைச் சாய்த்து சுற்றி வருவது தன் மனதிற்கு சுதந்திரமாக இருந்தது. இனி தனக்கு விருப்பமற்ற வேலையைத் தொடரத் தேவையிருக்காது. தன் சொந்த படைப்புத் திறனை வெளிப்படுத்தும் வேலையை தன் மனம்போல செய்யமுடியும்.

அவன் பூட்டி முடித்தவேகம் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. வாணி வந்து அவனை கவனித்துக் கொண்டிருந்தாள். அவள் சென்று விளையாடிக்கொண்டிருந்த நரேனை அழைத்து வந்தாள். அப்பாவைத் தொந்தரவு செய்யக் கூடாது என்கிற அம்மாவின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு இருந்தார்கள். வச்சலா அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு சென்றாள்.

மறுநாள் காலை குளித்து, சாமி கும்பிட்டுவிட்டு ஆரம்பித்தான். புணியை மிதித்தபோது மென்மையான மண் குவியலை மிதித்தது போன்றிருந்தது. மேல் கயிற்றை இழுத்து அடிபலகையை அடித்து அதன் ஓசையை கேட்டு மகிழ்ந்தான்.

மெல்லத் தொடங்கும் பாடல் போல மெதுவாகத்தான் தொடங்கினான். தான் விரும்பிய இனிமையை தன் மனதில் நிறைத்துவைக்கும் முயற்சி. வச்சலா கூட்ட எதாவது பொருளை எடுக்க என்று அங்கு வந்துக் கொண்டிருந்தாள். கூட்டவென்று தறிஅடியில் சென்றபோது “ஏங்க கால் நகத்த வெட்டக் கூடாதாங்க, புணியோட சங்கிலிசெயின்ல உங்க கட்டவிரல் நகம் இடிக்குது பாருங்க.” “ம்ம்” என்று தொடர்ந்தான். சிறிய இடைவெளியில் “ஏங்க கொஞ்சம் இருங்க, இந்த புட்டா சரியா வந்திருக்கா, ஒன்னுவிட்டு ஒன்று வராம நேரா வந்தமாதிரி தெரியுதே” என்றாள். “என்ன சொல்ற, அதெல்லாம் அப்படி வராது”, என்று சொல்லியவன் சற்று அதிர்ந்து நிறுத்தினான். தன் அடிவயற்றில் ஏதோ ஒரு நூல் அறுந்தது போன்றிருந்தது.

தன் பக்கத்து தறியில் மேலிருந்த துணியை நீக்கி, முறுக்கு கயிற்றை தளர்த்தி, உருளையை சுற்றவிட்டான். ஏதோ ஒன்று குறைகிறதே, அவசரமாக கீழிறங்கினான். தறிக்கு அடியில் வந்து பார்த்தபோது அவள் சொல்வது சரிதான், எப்படி மாறியது. “என்ன வச்சலா இது, ஜக்கார்ட் சரியில்லையா”, அப்படி சொல்லும்போதே அவனுக்கு தன் பிழை புரிந்தது. “வெளியில வாங்க” என்று அழைத்துச் சென்றாள். “எத்தன முழம் வந்திருக்கு பாருங்க”, “அவ்வளவு வந்திருக்காது, ஒன்றை ஜான் வந்திருக்கும்”, தலையில் கைவத்துக் கொண்டான். “ஒன்னும் பிரச்சன இல்ல, இத பிரிக்கிறேன் இரு”, “இருங்க, முக்கா முழம் தானே விடுங்க, பாவு எக்ஸ்ட்ராவாதான் இருக்கும். முதல்லேந்து ஆரம்பிங்க”.

கொஞ்சம் யோசித்தவன், “சரி செஞ்சிடுவோம்”, “இருங்க இருங்க, டீ போட்டுத் தாரேன் குடிச்சிட்டு மெதுவா ஆரம்பிங்க, போய் பால் மட்டும் வாங்கிட்டு வாங்க” என்றாள்.

முன்பகல் நேரம் அவனுக்கு நேரம்போனதே தெரியவில்லை. காலையுணவை உண்டுவிட்டு தொடங்கியிருந்தான். பிள்ளைகள் பள்ளிக்கு சென்றதும் அவனுக்கு தெரியவில்லை. பால்கடை ராஜு அண்ணன் வெய்யில் தாங்காமல் ஓட்டை விழுந்த பனியனோடு நின்றிருந்தார். “என்னப்பா, நெய்யத் தொடங்கிட்டியாமே, எப்படி போவுது வேலையெல்லாம்”. அதிர்ச்சியில் கீழே விழுந்துவிடுவேன் என தோன்றியது அவனுக்கு, வேலை எப்படி போவதாக சொல்வது, “ம்” என்றான்.

“உனக்கு சேல கொடுக்க வேண்டாம்னுதான் இருந்தாராம் கோவிந்தமண்ணன், அங்கன கணக்குபிள்ள, மத்தவங்களெல்லாம் சொல்லி உனக்கு கிடைச்சிருக்கு, அதுவும் நீ இப்படி ஒரு முடிவ எடுத்ததும் எல்லாரும் பயந்து போயிட்டாங்க தெரியுமா?”

“ஏன்னே நா நல்லா நெய்யமாட்டேனா?, அதுக்காகவா வேலை கொடுப்பாங்க.”

“அப்படியில்லப்பா, சொசைட்டி சேல கிடைக்க மாட்டேங்கு, இப்பவெல்லாம் ஒரு சின்ன தப்பு நடந்தாலும் திருப்பி எடுக்க முடியாது, அந்த சேல விக்கவும் விக்காது, முதலாளிகளுக்கு பெருத்த நட்டமா போவுதுன்னு கொடுக்கிறதுல்ல.”

“நா எனக்கு அப்படியெல்லாம் ஆனதேயில்ல, இதுவரைக்கும் ஆயிரம் புடவ நெய்சுருப்பேன், தெரியுமா.”

“முன்னாடி இங்க 6000 தறிக இருந்துச்சு இன்னிக்கு 50கூட கிடையாது. யாரும் பட்டு சேலைய கட்டுறதில்ல, முன்னமாதிரி கூலி கொடுத்து மாளல, அப்புறம் எல்லாம் கூட்டு குடும்பமும் சிதஞ்சு இப்ப ஒன்னுமில்லல்ல, அதான் சொன்னப்பா.”

தொடர்ந்து அங்கு நிற்க முடியவில்லை. வேகமாக வீட்டிற்கு வந்துவிட்டான். பால்பாக்கெட்டை கொடுத்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தான். டீயுடன் வந்தவள்,

“ஏங்க, கவனமாச் செய்யுங்க, நீங்க அவசரப்படறீங்க, ரொம்ப நாள் கழிச்சு வேல வந்ததால அவசரமா செய்றீங்க, பொறுமையா செய்யுங்க.”

அதை கேட்கும்போதே அவனுக்கு சற்று வெறுப்பாக இருந்தது. தேவையற்ற வார்த்தைகளால் அனைவரும் தன்னை முழ்கடிப்பது போன்றிருந்தது. கோவிந்தம் சொன்னதாக ராஜூ சொன்ன வார்த்தைகளும் இவள் சொல்லும் வார்த்தைகளும் அதிக வித்தியாசமில்லை.

“அதெல்லாம் பயப்படாத வச்சலா”

ஒரு நாலு விரற்கடை விட்டுவிட்டு ஆரம்பித்தான். புணியை மிதித்தபோது அது தன் பலத்தை முழுமையாக பெறவில்லை என்று தோன்றியது. அடியில் தொங்கும் தகரப்பட்டைகளின் ஒலி சரியாக தன்னை வந்து சேரவில்லை, சரியாக அழத்தெரியாத குழந்தை போன்று அழுதது.

டக் டடக், டக் டடக் என்கிற உற்சாகப் பாடல்களை ஒலிக்கும் தாளக்கட்டு இன்று அதே பாடலின் சோகவடிவத்திற்கு ஒலிப்பது போலிருக்கிறது. இன்னும் வேகமெடுக்க வேண்டும், புதிய உற்சாகம் மனதில் வரும்போது அதன் ஒலிகள் மாறுபடும்தான். அப்பா தன் மேல் வைத்திருக்கும் பிரியத்தின் வடிவில் கால்களை மிதித்தும் அடிகட்டையை அடித்தும் மேலுள்ள கயிற்றை இழுத்தும் இயங்கிக் கொண்டிருந்தான். அப்பாவை போல தலை குனிந்து முதுகு வளைந்து மற்றவர்களின் பார்வைக்கு அகப்படாமல் வேலை செய்வதைபோல அவனும் தொடர்ந்தான்.

நேரம் செல்வது அவனுக்கு தெரியவில்லை. காலம் என்கிற ஒன்று இருப்பதாக அவன் நினைவிலில்லை. எளிய பேட்டும் புட்டாவும் கொண்டதை அவன் ஆழ்மனம் முழுவடிவில் காணத்துடித்துக் கொண்டிருந்தது. அரக்கு பார்டர், உடலில் சந்தன கலர். மங்களமான வண்ணங்கள். காதுகுத்து, வரவேற்பிற்கு இந்த சேலை போதுமானது.

பெரிய கடைகளில் செல்லும்போது பட்டு செக்ஷனுக்கு சென்று அங்கிருக்கும் புடவைகளை காண்பான். அதில் எது நம்மூர் புடவை என்பது, எது தான் நெய்தது என்றும் அடையாளம் காணமுடியும். ஆனால் அப்பா அதை செய்ய மாட்டார். “நாம நெய்சு முடிச்சோன்ன அது நமக்கு சொந்தமில்ல, அப்படி சொந்தம் கொண்டாடறது நல்ல கலைஞன் செய்ய மாட்டான்” என்பார்.

“டே குதிர மரத்த வெச்சு அளவுபாருடா” என்கிற குரல் பாதிஇருட்டில் ஒலித்தது இப்போது தன் காதில் கேட்டது போலிருந்தது. சட்டென தூக்கிவாரிப் போட்டது. நிறுத்திவிட்டு முதுகை நேராக்கி நெட்டி முறித்தான். மனம் தன் உடலோடு இல்லை என்று தோன்றியது. உடலிருந்து விலக விலக தன் தோல்வியை ஒத்துக் கொள்ளும் எதிரி நாய் கூட்டத்தில் மாட்டிய ஒரு நாய்போல பின்னோக்கி ஓடியது.

வேகமாக எழுந்து வெளியே வந்தான். கீழே வந்து அமர்ந்து நோக்கினான். இரண்டு முழம் வந்திருந்தது ஆனால் அவன் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை. எல்லா வண்ணங்களும் சேர்ந்து ஒரே வெள்ளை வண்ணமாக மாறியிருப்பது போன்றிருந்தது. சரியாகதான் இருக்கிறது எனக்குதான் குழப்பமாக இருக்கிறது என நினைத்தான். ஆனால் அவன் கைகள் நடுங்கிக் கொண்டிருப்பது புரிந்தது. அமர்ந்திருக்க முடியாவண்ணம் பிட்டம் வலித்தது. கால்களில் ஒன்று மரத்துபோய் எழுந்திருக்க முடியவில்லை. மயங்கி கீழே விழுந்துவிடுவேன் என எண்ணினான். குலதெய்வமான ஒப்பிலியப்பனை நினைத்தான். துளசியும் மலர்களாலும் சூழப்பட்ட அவன் கரியமுகத்தை நினைத்தான். “கடவுளே என்னைய எப்படியாவது இதிலேந்து காப்பாத்து, என் உடம்புல இருக்குற சேத்து மண்ண நான் தொடச்சி எடுத்துடுவேன் என் மனசுல அப்பியிருக்குறத”

தறி சத்தமில்லாததால் வெளியே வந்தாள் வச்சலா, அவன் நிலை பார்த்ததும், “ஏங்க என்ன பண்றீங்க” என்ற குனிந்து அவனை பார்த்தாள்.

அவன் உடல் முழுவதும் வேர்த்துக் கொண்டியிருந்தது. கண்கள் வேறு எங்கோ நிலைத்திருந்தது. சொற்கள் ஏதுமில்லாமல் அழுதுகொண்டிருந்தான். அவன் உடலின் வெப்பம் அவனை சுற்றி வட்டமிட்டிருந்தது போலிருந்தது.

“ஐயோ இருங்க, நா என்ன பண்ணுவே அய்யயோ நா போய் பின்வீட்டு மாமாவ அழச்சுகிட்டு வாரேன், கொஞ்ச நேரம் படுங்க, சொன்னா கேளுங்க படுங்க, ஐய்யோ ஐயோ” என்று வெளியே ஓடினாள்.

தன் கால்கள் நடுங்குவது நின்றிருந்தது. தன் பின்மண்டையில் பெருத்த வலியெடுத்து தன்னை உந்தி தள்ளுது போன்றிந்தது. தறியை விட்டு வெளியே வந்து எழுந்து நின்றான்.

பாவின் வாசனை நாற்றமெடுத்தது, சன்னலிருந்து வந்த ஒளியில் தறி ஓரமாக வளைந்திருப்பது போன்ற கோணல் குமட்டலாக இருந்தது. கோபமும் வெறுப்பும் தலைக்கேற தூணில் ஒரு காலை வைத்து மேலே கூரையில் சொருகியிருந்த மூணு அடி நீள பட்டா கத்தியை எடுத்தான். கூர்மழுங்கிய அது கோராவை நீவுவதற்கு பயன்படுவது. அதை எடுத்து குதித்த வேகத்தில் தறியின் மீது முழுபலத்தை செலுத்தி வீசினான். ஒன்று இரண்டு மூன்று என்று அவன் மனம் எண்ணிக்கொண்டிருந்தது. பாவு நூல்கள் பிரிந்து கிழிந்து சேதமடைந்த ஒரு இசைக்கருவிபோல அது கிடந்தது.

வச்சலா பலராம மாமாவை கூட்டி வந்தவள் விக்கித்து நின்றாள். அவன் மயங்கி கீழே விழுந்து கிடந்தான். தகரப் பட்டைகள் ஒன்றுடன் ஒன்று தாறுமாறாக இடித்து கர்ண கொடூர ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன.


(1) வண்ணம் ஏற்றப்பட்ட பட்டுநூல்.

(2) பட்டுப்புடவை.

(3) சிற்றாள்.

(4) பிசிறு இல்லாமல் இருக்க மேலே தேய்க்கப்படும் பட்டை.

(5) சிறுகட்டையில் கோர்க்கப்படும் புட்டாநூல்

(6) சிக்கல்விழுந்த நூல்.

(7) பாவை நீட்டி சிக்கலெடுப்பது.

(8) சீப்பு போன்று செய்யப்பட்டிருக்கும் மூங்கில் கருவி.

(9) மூலப்பொருட்கள்

(10) காஞ்சிபுரம்.

(11) ஒருவகை புடவை.

(12) நூல் சுற்றிவைக்கும் சிறு மரக்கட்டை.

(13) புட்டாவை செலுத்த பயன்படும் கட்டை.

(14) சேலையின் பார்டர்.

(15) வாடிக்கையாக வேலை பெறுபவர்.

(16) பட்டு போன்ற நகல்.

– சொல்வனம், இதழ்-242, மார்ச் 14, 2021

கே.ஜே. அசோக்குமார் மே 10, 1975-ல் கும்பகோணத்தில் கே.ஆர். ஜெயராமனுக்கும், சுதந்திராதேவிக்கும் பிறந்தார். திருவாரூரில் பள்ளிக்கல்வி பயின்றார். திருச்சியில் எம்.எஸ்.ஸி (வேதியியல்) முதுகலைப்பட்டம் பெற்றார். கே.ஜே. அசோக்குமார் புனேயிலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்து வருகிறார். அ. ஸ்ரீதேவியை 2000-ல் திருமணம் செய்து கொண்டார். மகள் ஹரிணி மற்றும் மகன் நந்தன். பள்ளிநாட்களில் கோகுலம் இதழ்களில் பங்களிப்புகள் செய்துள்ளார். கல்லூரிக் காலங்களில் கல்லூரி இதழ்களில் கவிதை, கதை, கட்டுரை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *