கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: August 23, 2023
பார்வையிட்டோர்: 2,522 
 
 

‘ஒற்றைக்கொம்பு குதிரையில் தான் பயணம் செய்ததாக’, அவன் அடித்துச் சொல்கிறான். பொய்யென்று தெரிந்தும் அதை நம்புகிறேன்.

‘இவ்வளவு பட்டும் திருந்தமாட்டாயா?’ உள்மனம் ஓங்கி கேட்க, வழக்கம்போல அலட்சியப்படுத்துகிறேன்.

“இந்த மாசம் கம்பெனியில நெருக்கடி ரொம்ப அதிகமாயிடுச்சுன்னு சம்பளம் போடலப்பா. நீ இருநூறு வெள்ளி மட்டும் கொடு. பழைய பாக்கியோட சம்பளம் வந்ததும் சேத்து தந்துடறேன்” என்கிறான் என்னுடன் அறையில் தங்கியிருக்கும் நண்பன் சஞ்சீவ்.

சிங்கப்பூரில் சம்பள பாக்கி என்பது குதிரை முட்டைபோல என்பது எனக்கு தெரியாதா? இருந்தாலும் ஒவ்வொருமுறையும் புதுப்புது காரணங்களுடன் அவன் சொல்வது எனக்கு மகுடி இசையாகிறது.

எனக்கு சம்பளதினம் என்பது மூக்கின்மீது வியர்வைத்துளியாய் அவனுக்கு காட்டிக்கொடுக்குமோ? ஒவ்வொரு மாதமும் விதவிதமாக கடன் கேட்பான். அதை கடன் என்றும் சொல்வதற்கில்லை. கொடுப்பதும் வாங்குவதும்தானே கடன், இங்கு எல்லாமே ஒரு வழி பாதை மட்டும்தானே!

சம்பள தினங்களில் அறை நண்பர்களெல்லாம் அவன் தலையைக் கண்டவுடன் தலைமறைவாக, எப்போதும் நான் மட்டும் பொறியில். சஞ்சீவின் சிரமங்களை துடைக்கவே எனக்கு சம்பள நாட்கள் வருகின்றனவா?

“நண்பா… இடப்பக்க நெஞ்சுல யாரோ உக்காந்து அழுத்துறமாதிரி இருக்கு. ஒரு நூறு வெள்ளி இருந்தா டாக்டரைப் பாத்துடுவேன்” இதைக்கேட்டு என்னால் சம்பள பணத்தில் கை வைக்காமல் இருக்க முடியுமா? பள்ளிக்கூட காலத்திலேயே என் பெயர் புன்னகை மன்னன்.

ரொம்ப யோசிக்காதீங்க, இளிச்சவாயங்கிறதை கொஞ்சம் கெளரவமா சொன்னேன்.

இந்தமாதம் ஊருக்கு இருபதாயிரம் ரூபாயாவது அனுப்பிடணும்னு இருந்தேன். இவனிடம் நூறு வெள்ளி போனதில், மனைவியின் குரல் போனில் ஆங்காரமாய் ஒலிக்கிறது.

“கடங்காரங்களுக்கு இந்த மாசமும் வட்டியை மட்டும்தான் கட்டணுமா?”

“அது… அடுத்த மாசம் சேர்த்து அனுப்பிடுறேன்.”

“இதையேதான் போன மாசமும் சொன்னீங்க, ஞாபகமிருக்கா?”

‘இந்த Wi Fi யை கண்டுபிடிச்சது யாருங்க? முன்னல்லாம் பத்து வெள்ளிக்கு கார்டு வாங்கினா, காசு ஓடுதுன்னு நாலு தடவை சொல்லிட்டு போனை வச்சதுகூட சுகமாத்தான் இருந்தது.’

நான் இப்பதான் வேலையிலிருந்து வந்தேன்னு சொல்லி தப்பிக்கவும் முடியாது.

“அப்ப பத்துமணிவரை வேலை செஞ்சா சம்பளம் அதிகம் வருமே, ஏன் வட்டிகட்ட மட்டும் அனுப்புறீங்க?”ன்னு கேள்வி வருமே.

எதுக்கு வாயைக்கொடுத்து அவதிப்படணும்னு அவ பேசறதை எல்லாம் இப்ப கேக்க பழகிட்டேன்.

“கடன்காரன் வட்டியும் அசலுமா அடுத்த மாசம் எடுத்து வைக்கணும்னு சொல்லிட்டுப் போயிட்டான்.”

“சரி… சரி… அனுப்பிடுறேன்.”

ஒருவழியா போனை வைத்த நான், சஞ்சீவை தேடுகிறேன்.

“ரகு… சஞ்சீவ் எங்கே?”

“இன்னைக்கு ஞாயித்துக்கிழமையாச்சே, அவன் வேலையில இருப்பான்”, அறை நண்பனின் பதில்.

“என்னப்பா சொல்றே… வேலை முடிஞ்சுதான் வந்துட்டானே.” என் முகம் குழப்ப ரேகைகளுக்கிடையில்.

ழே கிடக்கும் தூசுபோல என்னைப் பார்த்து, “நீ சரியான பாலர்பள்ளி ஆளப்பா” என்று சொல்லிச் செல்லும் ரகுவை விளங்காது பார்க்கிறேன்.

“பேரர் பார்க் எம்ஆர்டி பக்கத்துல போய்ப்பார்” நமுட்டுச் சிரிப்புடன் ரகு.

‘அப்படி என்னவாக இருக்கும்?’

“இருநூறு வெள்ளி கடனுக்கு ஒரு நாளைக்கு அஞ்சுவெள்ளி வட்டி சரியா?” எம்ஆர்டி அருகில் தணிந்த குரலில் நெஞ்சுவலிக்கார சஞ்சீவ்.

– சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் அக்டோபர் மாத கதைக்களத்தில் முதல் பரிசுபெற்ற கதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *