அம்மா…அம்மா…மாமி….மாமி…அஞ்சலை வந்திருக்கேன். சீக்கிரம் எல்லோரும் ஆளாளுக்கு தண்ணீர் கொண்டு வாங்க…ம்..ம்..ம்..ம்…ம்.
வாசலில் கலகலப்பான குரல் ஒன்று ஓங்கி ஒலித்தது. குரலுக்கு உரியவளான அஞ்சலையும் கலகலப்பானவள்தான். குளித்து முடித்து “பளிச் ” என்று உடை உடுத்தி, பூவும் போட்டும் அணிந்து மங்களகரமாக சிரித்த முகத்துடன் வருபவள், நட்புடன் நன்கு பேசக்கூடியவள்தான், ஆனால் அங்கு அவளிடம் நட்பு பாராட்டுவோர்தாம் சிலரை தவிர அதிகம் பேர் இல்லை.
காவேரி கரையை ஒட்டிய, கிட்ட தட்ட 20-25 வீடுகளை கொண்ட குடியிருப்பு அது. கடந்த காலங்களில் ஒரு சத்திரமாக இருந்த அக்கட்டிடம் தற்போது சிறு சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு வாடகைக்கு விடப்பட்டு இருக்க அங்கு மத்திய தர வசதியுள்ள பல்வேறு குடும்பங்கள் வசித்து வந்தன. வீடுகளுக்கு வெளியே காம்பௌண்ட் சுவரை ஒட்டி பொது கழிப்பறைகள் நான்கு இருக்க அவற்றை சுத்தம் செய்ய தினமும் வருபவள்தான் இந்த அஞ்சலை. அவள் குரல் கொடுத்தவுடன் எல்லோரும் குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து கொடுப்பார்கள். சிலர் நட்பாக பேச, பலருக்கு அவள் என்றால் கொஞ்சம் அலட்சியம்தான். அதை நினைத்துதான் அவள் வருத்தப்படுவாள்.
“காலையிலே பரபரப்பாக கிளம்பும் சமயம்தான் இவள் வந்து குரல் கொடுப்பாள்” என்று சிலர் கூற,
“அவள் கரெக்டா தினமும் எட்டு மணிக்கு வருகிறாள். நாம்தான் பங்க்சுவாலிடி காப்பாத்தறது இல்லை . அப்பப்ப வேலை நேரத்தை மாத்திக்கறோம் அவளை குறை கூறுகிறோம் ”. அவளுக்கு ஆதரவாக பேசுவாள் விஜி. அங்குதான் விஜியின் குடும்பமும் இருந்தது. கல்லூரியில் படித்து கொண்டிருந்த அவள் அஞ்சலியிடம் அவ்வப்போது பேசிக்கொண்டு இருப்பாள்.
“அஞ்சலை நாளைக்கு உன் தோட்டத்தில் இருந்து எனக்கு ஜாதி மல்லி தொடுத்து எடுத்து வருகிறாயா”? ஆசையாக விஜி கேட்க “கட்டாயம் கொண்டு வரேம்மா” அன்பாக பதில் கூறுவாள் அஞ்சலை.
“ஏண்டி காலேஜ் போற வழியில் உனக்கு பூ வாங்க பூக்கடையே இல்லையோ ?” பக்கத்து வீடு மாமி கேலி செய்வாள். “ ஏன் இல்லாம ? அவனே அஞ்சலைகிட்டதான் மொத்தமாக வாங்கி விற்கிறான். கைக்கு கை மாறாமல் நான் அஞ்சலை கிட்டயே நேரடியாக வாங்கிக்கிறேன். என்ன இப்போ “.
“எந்த பூவிலும் வாசம் உண்டு;எந்த பாட்டிலும் ராகம் உண்டு” என்று பாடி வெறுப்பேற்றுவாள்.
“என்னடி அங்கே அரட்டை? உனக்கு காலேஜுக்கு நேரமாகலியா?” உள்ளே இருந்து குரல் வரும்.
“ஆமாம் அரட்டை வித் அஞ்சலை; தினமும் காலை 8.00 மணிக்கு” விஜி அசராமல் அதற்கும் பதிலளிப்பாள்.
“அம்மா அஞ்சலை ஆன்ட்டி வந்திருக்கா”- குழந்தை ஒன்று குரல் கொடுக்கும். “ஆன்ட்டி என்னடா ஆன்ட்டி. அஞ்சலை சொல்லு போதும்” அதட்டுவாள் குழந்தையின் அம்மா.
“ஆன்ட்டி சொன்னா என்ன தப்பு; கள்ளமில்லா குழந்தைக்கு கல்மிஷத்தை நீங்களே சொல்லிக் கொடுப்பீர்களா” என்று சண்டை போடுவாள் விஜி.
“பாரும்மா…நானும் மனுஷிதானே ? இது என்னுடைய வேலையாகி விட்டது. என்னோட ஒட்டி உறவாட வேண்டாம். ஆனால் ஏதோ தீண்ட தகாதவள் மாதிரி ஒதுங்கி போறாங்க. அதுதான் கஷ்டமா இருக்கு” என்று புலம்பும் அஞ்சலைக்கு…
“விடு அஞ்சலை ; உன்னோட வேலைக்கு எவ்வளவு சகிப்புத்தன்மை தேவை என்பது அவங்களுக்கு தெரியல . உன்னை அலட்சிய படுத்துறாங்க. உன்னுடைய அருமையும் புரியல. உன்னுடைய சேவை எல்லோருக்கும் தேவை. ஒரு நாள் நீ வராவிடில் காம்பௌண்டு நாறிப்போய்விடும். அது அவங்களுக்கு தெரிந்தாலும், மனசுக்கு புரிந்தாலும் ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். ஒரு நாள் புரியும். கவலைப்படாதே” என்று விஜி ஆறுதல் சொல்வாள்.
***
ஒரு நாள் முற்பகல் நேரம் வீட்டின் பின்பக்க வாயில் அருகே ஆற்றங்கரையோரம் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தாள் விஜி.
நீண்ட படித்துறையில் ஒரு பக்கம் சரளா அக்கா பாத்திரங்களை தேய்த்துக்கொண்டு இருந்தாள். கரையில் மேல் அவளது இரண்டு வயது மகன் விக்னேஷ் விளையாடிக்கொண்டு இருந்தான்.
அப்போது “என்னம்மா இன்னிக்கு லீவா” என்று கேட்டுக்கொண்டே வந்த அஞ்சலை,
“எனக்கும் எல்லா தெருவிலேயும் வேலை முடிந்து விட்டது. காலையிலே வீட்டிலே குளித்தாலும் இப்போ ஆத்திலே சில்லுனு ஒரு முறை குளிச்சிட்டு, பிள்ளையாரையம் ரெண்டு சுற்று சுற்றி வணங்கி விட்டுப் போகலாம் என்று வந்தேன் —- பேசியபடியே ஆற்றில் இறங்கி குளிக்க ஆரம்பித்தாள்.
“தினமும் இதுதான் உன் வழக்கமா அஞ்சலை.” என்றாள் விஜி.
“ஆமாம்மா. எங்கெங்கேயோ இருந்து காவேரியை தேடி வந்து ஜனங்க குளிக்கிறாங்க. நாம் பக்கத்தில இருந்து பார்க்காம, குளிக்காம போகலாமா ? ஓடி வரும் தண்ணீரில் முழுகி குளிக்கும்போது உடம்பு மட்டும் இல்லை மனசும் குளிர்ந்து போகுது. ஒரு சுறுசுறுப்பு ,புத்துணர்ச்சி கிடைக்குது.”
“அஞ்சலை…இந்த காவேரியை பார்த்தியா? ஒரு பக்கம் குளிக்கிறாங்க; ஒருபக்கம் ஆடு மாடு குளிப்பாட்டுறாங்க; ஒரு பக்கம் துணி தோய்க்கிறாங்க ; பாத்திரம் தேய்க்கிறாங்க; ஏன்…நீ சுத்தம் செய்யும் கழிவுகளும் இங்குதான் கடைசியில் வந்து கலக்கிறது”.
“அது மட்டுமா தினமும் விடியற்காலையில் ஒரு நூறு ஆடுகளை கொண்டு வந்து, இங்கே தண்ணீர் எடுத்து நிறைய உப்பை கலந்து வலுக்கட்டாயமா ஆடுகளுக்கு புகட்டி விடுகிறார்கள். அப்பதான் விற்கும்போது வெய்ட் நிக்குமாம் . ஆடுகள் பாவமாக, தீனமாக கதறதை கேட்க எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியமா. தன் கரையில் இப்படி நடப்பதை நினைத்து காவேரித்தாய் எவ்வளவு கலங்குவாள்? போற போக்கிலே இந்த இடத்து தண்ணீர் ஓடிக்கொண்டே இருந்தாலும், கடல் தண்ணீர் மாதிரி உப்பு கரிச்சா கூட ஆச்சர்ய படுவதற்கு இல்லை. ஹ்ம். என்னவோ போ”
எல்லா அழுக்கையும் சேர்த்து சுமந்து கொண்டுதான் ஓடிக்கொண்டு இருக்கிறாள் இந்த காவேரி. எல்லோருக்கும் காவேரி அவசியம் தேவை, உன்னைப்போல, உன் சேவை போல…
“அவளிடம் என்றாவது ஒரு நாள் மன்னிப்பு கேட்டிருக்கோமா, அல்லது நன்றி சொல்லி இருக்கோமா எப்போதாவது மாதத்தில் ஒரு நாள் பூஜை செய்வதோடு சரி. உனக்கு மாதத்தில் ஒரு நாள் சம்பளம் கொடுப்பது போல.”
“தண்ணீர் இல்லாமல் வறண்ட காலத்தில்தான் காவேரியின் அருமை தெரியும். அது போல நீ வராத நாட்களில்தான் உன் அருமை புரியும்.”
“காவேரி கோபம் கொண்டால் என்னாகும்? பொறுத்துக்கொண்டு போகிறாள் பார். அது போல நீயும் பொறுத்துக்கொண்டு இந்த மக்களின் அலட்சியத்தையும், அதிகாரத்தையும் தலையில் சுமக்காமல் காவேரியில் கரைத்து விடு. காலம் மாறும்” என்றாள் விஜி. சொன்னதோடு இல்லாமல் ஒரு கவிதையாக படித்தும் காட்டினாள்.
நதியாக உருவெடுத்து, நடந்து வரும் பாதையில்
கடந்து வரும் இன்னல்கள் எத்தனை…
காணும் மனிதர்கள் எத்தனை…
அழகை ரசிப்போரும் உண்டு;
அணை இட்டு தடுப்போரும் உண்டு
வாழ்த்தி வணங்குவோரும் உண்டு;
வேகம் கண்டு வசை பாடுவோரும் உண்டு
கும்பிட்டு பூசை செய்வோரும் உண்டு;
குப்பையை வீசி எறிவோரும் உண்டு
சீராட்டி கொண்டாலும், பாராட்டி சென்றாலும்
போற்றி துதித்தாலும், தூற்றி மிதித்தாலும்
அத்தனையும் ஒன்றாய் பொறுத்து,
அழுக்கையெல்லாம் புரட்டித் தள்ளி
பின்னால் திரும்பி பாராமல்,
பிரதிபலன் எதுவும் கேட்காமல்
நன்மை ஒன்றே நமக்கு தந்து,
நாளும் இரவும் ஒன்றெனக்கொண்டு
செல்லும் பாதை தெளிவாக, சேரும் இடமே இலக்காக
கடமை தவறா ஓட்டத்துடன் கடலில் கலக்கும் நதியை பார்…
“நீ நதி போல ஓடிக்கொண்டிரு”.
“நீ பாட்டா படிக்கிறது கேட்பதற்கு நல்லா இருக்கும்மா. மனசுக்கு ஒரு ஆறுதலாகவும் இருக்கு . இனிமேல் குளிக்கும்போதெல்லாம் இதை நினைத்துக்கொள்வேன்” என்று சிரித்தாள் அஞ்சலை.
“ம்…இனிமேல் லீவு நாட்களில் கூப்பிடு. நானும் இங்கே வருகிறேன். நிறைய கவிதை சொல்கிறேன்; கதை பேசலாம்” என்றாள் விஜி.
இவர்கள் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருக்க, திடீரென சரளா அக்கா “ஐயோ குழந்தையை காணோம்”என்று கூக்குரலிட்டாள். சட்டென்று திரும்பிய அஞ்சலை தண்ணீரில் விழுந்த குழந்தை சற்று தொலைவில் தத்தளிப்பதை பார்த்தாள். அடுத்த கணம் ஆற்றில் பாய்ந்து குழந்தையை தூக்கி வந்தாள். தலைக்கு மேல் தூக்கி சுற்றி குழந்தை குடித்த தண்ணீரை எல்லாம் வெளி வர செய்து, சமாதானப்படுத்தி பின், அழுது கொண்டு இருந்த சரளாவிடம் “இந்தாங்கம்மா. உங்க மகன். ஆபத்திற்கு பாவம் இல்லை . நான் தொட்டு தூக்கி விட்டேன். நீங்க வேணா இன்னொரு முறை குளிக்க வைத்து அழைத்து செல்லுங்கள். பிடிங்க” என்று கொடுத்தாள்.
கண்ணெதிரே நடந்த இந்த நிகழ்ச்சிகளால் விக்கித்து போன விஜி சுதாரித்துக்கொண்டு “ஆபத்துக்கு பாவம் இல்லையா ? நீ வேற; குழந்தை தண்ணீரில் விழுந்தது கூட ஆபத்து இல்லை. நீ காப்பாத்தினதுதான் ஆபத்து என்று இவங்க நினைப்பாங்க. நல்ல வேளை அஞ்சலை, சட்டென்று பாய்ந்து காப்பாத்தி விட்டாய். அப்படியே ஆசுவாசமா கொஞ்சம் உட்காரு” என்றாள்.
அவர்களை உறுத்துப் பார்த்த சரளா அக்கா வேகமாக படியேறி தன வீட்டுக்குள் சென்று விட்டாள்
“என்னம்மா இது…இந்தம்மா ஓடிடுச்சு; நீயாவது பிள்ளையை அவங்க வீட்டில கொண்டு போய் விட்டு விடு” என்று கூறிக்கொண்டே அயர்வுடன் படிக்கட்டில் அமர்ந்தாள் அஞ்சலை.
“அடடா…அஞ்சலை. நீ கையில் வைத்திருந்த உன் புடவை ஆத்திலே அடித்துக்கொண்டு போய் விட்டதே. நீ எப்படி உன் வீட்டுக்கு போவாய். இரு…நான் அம்மாவிடம் ஒரு புடவை வாங்கி வருகிறேன்” என்று விஜி வீட்டுப்பக்கம் திரும்பினாள்.
அங்கு சரளா அக்கா கையில் பெரிய துண்டு, புடவை ஒன்றுடன் நின்று கொண்டு இருந்தாள். அஞ்சலையிடம் துண்டை நீட்டி “நல்லா துடைச்சிக்கோ; குழந்தைக்கும் துவட்டிவிடு. தண்ணியிலே பாய்ந்து காப்பாத்த தெரிஞ்சவளுக்கு வீட்டுக்கு வர வழி தெரியாதா? புடவையை கட்டிக்கொண்டு குழந்தையை வீட்டிலே கொண்டு வந்து விடு, படபடப்பு குறைய சூடாக காப்பியாவது தரேன் குடிச்சிட்டு போ” என்றாள்.
“என்ன பார்க்கிறீங்க எனக்கும் மனசு இருக்கு. என்ன…வெளிப்படையாக பேசியது இல்லை; பேச முடியலை” என்று கண் கலங்கி நின்றாள்.
“என்ன அஞ்சலை நான் சொன்னதுதான் உண்மை என்று காவேரித் தாய் நிரூபித்து விட்டாள் பார்த்தியா. ஆத்தங்கரை பிள்ளையாரும், காவேரியும் என்றும் உன் பக்கம். நண்பர்கள் கூடிக்கொண்டே போகிறார்கள். நீரோட்டம் குறைவான சமயம் ஆழத்தில் தோண்டினால் கிடைக்கும் ஊற்றுத் தண்ணீர் போல இந்த அன்பு. வெளியிலே தெரியாது; தேடினால் மட்டுமே கிடைக்கும்”
“காவேரிக் கரையிருக்கு
கரை மேலே பூவிருக்கு
பூப் போலே பெண்ணிருக்கு
புரிந்து கொண்டால் உறவிருக்கு” …என்றாள் புன்னகையுடன் விஜி.
பயம் தெளிந்த குழந்தை விக்னேஷ் சலுகையாக அஞ்சலையின் தோள்களில் சாய்ந்து கொண்டு சந்தோஷமாக சிரித்தான். அவர்களது உரையாடலை ஆமோதிப்பது போல் பிள்ளையாரின் அருகே இருந்த மரத்திலிருந்து பன்னீர் புஷ்பங்கள் சொரிந்தன. “அக்கோ” குருவி கூவியது. காவேரியும் மென்மையாக சிரித்தபடி ஓடிக்கொண்டிருந்தாள். அஞ்சலையும் மகிழ்வுடன் சிரித்தாள்.