அத்தியாயம்–1 | அத்தியாயம்–2 | அத்தியாயம்–3
நான் மலைச் சிகரங்களுக்கு மேலே பறக்கும்போது கண்ட கேஸ்பக்கின் என் முதல் அனுபவத்தை என்றும் மறக்க மாட்டேன். பனி மூட்டத்துக்குக் கீழே மங்கலாகத் தெரிந்த நிலப்பரப்பை நோக்கினேன். குளிர்ந்த அண்டார்க்டிக்கின் காற்று கேஸ்பக்கின் வெப்பமான ஈரப்பதமுள்ள வளி மண்டலத்துடன் கலப்பதால் அங்கே ஒரு புகை மண்டலமாகக் கட்சி அளித்தது. அதனால் அது மெல்லிய நாடா போன்று நீர்த்திவலைகளைப் பசிபிக் கடலில் நீண்ட தூரம் பரப்பியது. மிக பிரமாண்டமான பாவியல் ஓவியம் போல அது காட்சி அளித்தது. சித்திரப்படாம் முழுவதும் பச்சை பழுப்பு கருஞ்சிவப்பு மஞ்சள் வண்ணங்கள் பூசி அதற்கு நடுவில் அடர் நீலத்தில் நாட்டுக்குள் இருக்கும் கடல். வெறும் வண்ணத் திவலைகள் கொட்டும் பனி மூட்டத்திற்கு நடுவில் உருவங்களாய்க் காட்டியது.
நான் மலையடிவாரத்திற்கு மிக அருகில் சென்று ஒரு வட்டமடித்தேன். பல மைல்களுக்குத் தரையிறங்கும் அமைப்பே எங்கும் தென்படவில்லை. பின் சற்றுத் திரும்பி ஒரு பிரமாண்டமான மலைச் சரிவின் அடி வரை சென்றேன். அங்கும் எந்தவித பாதுகாப்பான இடமே கிடைக்கவில்லை. இப்போது மிகவும் தாளப் பறந்து கொண்டிருந்தேன். தரை இறங்கும் இடம் தேடும் வேளையில் கீழிருக்கும் பல்வேறு உயிரினங்களையும் கவனித்துக் கொண்டிருந்தேன். அந்தத் தீவின் தென்கோடி வரை சென்று விட்டேன். அங்கே ஒரு ஆற்றின் கிளை நிலத்தின் வெகு தூரம் வரை பரவி இருந்தது. அதன் நீரில் முழுவதும் கருமை நிறத்தில் ஏகப்பட்ட உயிரினங்கள் மிதந்து கொண்டிருந்தன. அவைகள் என்னவென்று அறிய முடியாத உயரத்தில் இருந்தேன் நான். ஆனால் நிலம் நீர் இரண்டிலும் வாழக்கூடிய பிசாசுகள்தான் எல்லாம் என்பதை மட்டும் உணர முடிந்தது. நிலமும் அதே அளவு உயிர்ப்போடு இருந்தது. ஊர்வன தவ்வுவன ஓடுவன பரப்பன என அனைத்து உயிரினங்களும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தன. நான் அவ்வாறு கீழே மும்முரமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும் வேளைதான் பறப்பன ஒன்று தன் வேலையை என் மீது காட்ட ஆரம்பித்து விட்டது.
முதல் அறிகுறி என்னவென்றால் திடீரென்று மேலிருந்து கதிர் ஒளி மறைக்கப்பட்டது. நான் சட்டென்று மேலே பார்க்கும்போது ஒரு பயங்கரமான பறவை ஒன்று என்னை நோக்கிப் பறந்து வந்து கொண்டிருந்தது. அது முழுவதும் எண்பது அடிக்குக் குறையாமல் இருக்கும், அதன் நீண்ட பயங்கரமான அலகில் இருந்து அதன் குட்டையான கடினமான வால் நுனி வரை. அதே அளவு அதன் சிறகுகளின் பரவலும் இருக்கும். அது நேராக என்னை நோக்கி வந்தது. அதன் சத்தம் விமானத்தின் சுழல் விசிறியையும் தாண்டிக் கேட்டது. அது நேராக இயந்திரத் துப்பாக்கியின் முனைக்கு வந்தது. நானும் அதன் நெஞ்சுப் பகுதியில் சுட்டேன். இருந்தாலும் என்னை நோக்கி வந்தது. அப்போது நான் இன்னும் கீழே இறங்கித் திரும்ப வேண்டி இருந்தது. நான் கிட்டத்தட்டத் தரையை தொட்டு விடும் சூழ்நிலை.
அது என்னை விட்டுவிட்ட தூரம் ஒன்றும் 12 அடி இருக்காது. நான் எழுந்த போது அது திரும்பவும் என்னை நோக்கிப் பறந்து வந்தது. அப்போது கிட்டத்தட்ட மலை உச்சிக்குச் சென்று விட்டேன். இதமான குளிர்ச்சியான காற்று வீசியது. அங்கே திரும்பிக் கீழே இறங்கி விட்டது. சண்டை மற்றும் துரத்துவதில் மனிதனுக்கு இருக்கும் ஆசையினால் உந்தப்பட்ட நான் அதன் பின்னே செல்வதற்கு ஆயத்தமானேன். நானும் வட்டமடித்துக் கீழே இறங்கினேன். கேஸ்பக்கின் வெப்பமான வளி மண்டலத்தில் நுழைந்தவுடன் அது திரும்பவும் என்னை விரட்டியது. எனக்கும் மேலே பறந்து என்னை விழுங்க வந்தது. அப்போது எனது இயந்திரத் துப்பாக்கி 45 பாகை கோணத்தில் அதனைக் குறி வைத்து இருந்தது. இதைப் போல அருமையான தருணம் கிடைக்கவே கிடைக்காது. ஏனெனில் விமான ஓட்டியால் அந்தக் கோணத்தைக் கூட்டவோ குறைக்கவோ முடியாது. என்னுடன் துணைக்கு யாராவது வந்திருந்தால் அந்தப் பறவையை எந்தக் கோணத்திலும் சுட்டு வீழ்த்தி இருக்க முடியும். ஆனால் அது எப்போதும் மேலே இருந்து தாக்குவதால் என்னுடைய குண்டு மழையில் நனைவதற்கு எப்போதும் தயாராகவே வருகிறது. கிட்டத்தட்ட ஒரு நிமிடம் நடந்த சண்டையின் பின் திடீரென்று மல்லாக்கத் திரும்பி வேகமாகக் கீழே விழுந்தது.
கல்லூரியில் போவனும் நானும் ஒரே அறையில்தான் தங்கி இருந்தோம். அவனிடம் இருந்து படிப்பிற்கு அப்பாற்பட்டு நிறையக் கற்றுக் கொண்டிருக்கின்றேன். கேளிக்கைகளில் மிகுந்த ஈடுபாடு இருந்தாலும் அவன் நல்ல படிப்பாளி. அவனுடைய முக்கியமான பொழுதுபோக்கு அம்சமே புதைபடிமவியல்தான். பழங்காலத்தில் பூமியில் இருந்த விலங்குகள் மற்றும் தாவரங்களைப் பற்றிச் சொல்லி இருக்கிறான். அதனால் எனக்கும் அந்தக் காலத்திய மீன்கள் நீரிலும் நிலத்திலும் வாழும் மிருகங்கள் ஊர்வன பாலூட்டிகள் என்று அனைத்தும் தெரியும். என்னைத் தாக்கிய அந்தப் பறவை பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டெரோடாக்ட்டில் எனும் பறவை. போவன் தன் கட்டுரையில் எதையும் மிகைப்படுத்தவில்லை என்பதற்கு அது மட்டும் போதுமானதாய் இருந்தது.
எனது முதல் எதிரியை வீழ்த்தி விட்ட பின், நான் திரும்பவும் தரை இறங்க அந்த மலையடிவாரத்தில் ஒரு இடம் தேடி அலைய ஆரம்பித்தேன். அதன் மறு முனையில்தான் எங்கள் கூட்டாளிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர். என்னிடம் இருந்து வரும் வார்த்தைக்காக அவர்கள் எவ்வளவு ஆவலாய்க் காத்துக் கொண்டிருப்பார்கள் என்று எனக்குத் தெரியும். அவர்கள் கவலையைத் தீர்ப்பதற்கும் நானும் அதே போன்ற ஒரு ஆவலில்தான் இருந்தேன். அவர்களையும் எங்கள் பொருட்களையும் கேஸ்பக்கின் உள்ளே எடுத்துச் சென்று டைலரைத் தேடிக் கண்டுபிடிக்கும் வேலையை ஆரம்பித்து விட வேண்டும். அந்தப் பறவை விழுந்த கொஞ்ச நேரத்தில் ஒரு டஜன் பயங்கரமான உயிரினங்கள் என்னைச் சூழ ஆரம்பித்து விட்டன. பெரியதும் சிரியதுமாய் இருந்தன. ஆனால் அனைத்திற்கும் என்னைக் கொல்வது மட்டுமே நோக்கம். என்னால் அவை அனைத்தையும் எதிர் கொள்ள முடியவில்லை. அதனால் வேகமாக மேலே எழுந்து கொஞ்சம் குளிர்ச்சியான இடத்திற்குப் பறந்தேன். அங்கு அவைகள் என்னைப் பின் தொடரவில்லை. அதன் பின் போவனின் குறிப்புகளை நினைவு படுத்திப் பார்த்தேன். அவன் தெளிவாக ஒன்றைக் குறிப்பிட்டு இருந்தான். வடக்கு திசை நோக்கிச் செல்லச் செல்லக் கொடூரமான ஊர்ந்து செல்லும் விலங்குகள் கம்மி என்று. அதனால்தான் தெற்கில் மனிதர்கள் வாழ்வது இயலாது.
ஆதலால் வடக்கில் ஒரு இடத்தைக் கண்டுபிடித்துத் தரை இறக்குவதைத் தவிர வேறு வழியில்லை. அதன் பின் தொரியாதோருக்குச் சென்று மற்றவர்களையும் பொருட்களையும் எடுத்து வரலாம். இரண்டு இரண்டு பேராகக் கூட்டி வந்து அந்த இடத்தில் விட்டுவிடலாம். நான் வடக்கு நோக்கிச் செல்லச் செல்ல எனக்குள் தேடும் மனோபாவம் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. சிறிது எரி பொருளை வைத்தே கேஸ்பக் முழுவதும் சுற்றிவிட்டு அவர்கள் இருக்கும் கடற்கரையை அடைந்து விடலாம் என்று தோன்றியது. அந்த நேரத்தில் போவன் அல்லது அவனது கூட்டாளிகள் யாரையாவது கண்டு பிடித்து விட நேரிடலாம் என்றும் தோன்றியது. நாட்டிற்குள் இருக்கும் அந்த பிரமாண்ட கடலைப் பார்த்தவுடன் அதைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்று பேராவல் என்னுள் எழுந்தது. அதைக் கடக்கும் போது அதன் இருபுறமும் ஒரு தீவு இருந்தது. ஒன்று வடக்கிலும் மற்றொன்று தெற்கிலும். ஆனால் அவைகளை ஆராய்ச்சி செய்வதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.
அந்தக் கடலின் கரை வழியே இன்னும் செல்லச் செல்ல மலையடிவாரத்திற்கும் கடலுக்கும் நடுவில் உள்ள மேற்கில் இருப்பதைக் காட்டிலும் குறுகி இருந்த நிலம் ஒன்று வெளிப்பட்டது. அது மலைகள் சூழ்ந்த பரந்த வெளி உடைய நாடு. அருமையான இறங்கும் இடங்கள் இருந்தன. தூரத்தில் வடக்கில் ஒரு கிராமம் இருக்கிறதென்று எண்ணுகிறேன். இருந்தாலும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. நிலத்தை நெருங்கும் வேளையில் நிறைய மனித உருவங்கள் புல் வெளியில் ஒருவனைத் துரத்திக் கொண்டிருப்பது தெரிந்தது. இன்னும் சிறிது கீழே இறங்கும் போது விமானத்தின் விசிறிச் சத்தம் கேட்டு அண்ணாந்து பார்த்தார்கள். ஓடிக் கொண்டிருந்தவர்கள் ஒரு கணம் திகைத்து நின்றார்கள். அதன் பின் அருகில் இருக்கும் மரங்களுக்குப் பின் ஓடி ஒளிந்து கொண்டார்கள். அப்போது திடீரன்று எதோ ஒன்று கனமாக என் மேல் பாய்ந்தது. மேலே பார்த்தபோது கேஸ்பக்கின் இந்த பகுதியிலும் பறக்கும் பல்லிகள் இருப்பதை உணர்ந்து கொண்டேன். அது எனது வலது பக்க இறக்கையை பதம் பார்த்தது. அதில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் அப்படியே வேகமாக விழுந்தால்தான் உண்டு. ஏற்கெனவே நான் தரைக்கு அருகில் இருந்ததால் அது மிகவும் ஆபத்தானதாகி விடும். ஆனாலும் அதில் இருந்து சேதமில்லாமல் காப்பாற்றிக் கொள்ளும் வழியாக ஒரு பெரிய மரத்தை நெருங்கிச் சென்று கொண்டிருந்தேன். மரத்தையும் அந்தப் பறவையையும் ஒரே நேரத்தில் கடந்து விட எத்தனிக்கும் நேரம் ஆபத்தில் முடிந்தது. விமானத்தின் ஒரு இறக்கை மரத்தின் பெரிய கிளை ஒன்றில் மோதியது. அதனால் விமானம் அந்தர் பல்டி அடித்து கட்டுப்பாடு இல்லாமல் மற்ற கிளைகளில் மோதி உடைந்து நொறுங்கி நாற்பதடிக்கும் மேலே அந்தரத்தில் தொங்கிக் கொண்டு நின்றது.
பெரும் இரைச்சலுடன் சீறிக்கொண்டு எனது விமானம் தஞ்சம் அடைந்திருந்த மரத்தின் அருகில் வந்து இருமுறை வட்டமடித்து விட்டு தனது இறகுகளை விரித்து தெற்கு நோக்கி பறக்க ஆரம்பித்தது. அப்போது யோசித்தேன் பிறகு தெரிந்து கொண்டேன், காடுகள்தான் இது போன்ற பேராபத்துக்களில் இருந்து நம்மைக் காப்பாற்றும் அற்புத இடம் என்று. ஒரு கடல் விமானம் போலவே இந்த பறவையும் தன் நீண்ட இறகுகள் மற்றும் பருத்த உடம்பினாலும் மரங்களுக்கு நடுவில் தேவை அற்றதுதான்.
ஓரிரு நிமிடங்கள் என் உடைந்த விமானத்தைப் பற்றிக் கொண்டு இருந்தேன். இப்போது அதை உபயோகப்படுத்த முடியாத அளவு நொறுங்கி விட்டது. சபிக்கப்பட்ட இந்த பேராபத்தை நினைத்து என் மூளையே மழுங்கி விட்டது. போவன் மற்றும் செல்வி லா ர்யூவைக் காப்பாற்றும் அனைத்துத் திட்டங்களும் இந்த விமானத்தைப் பொறுத்தே இருந்தன. சில குறுகிய நிமிடங்களில் எனது சொந்த சாகச விறுப்பினால் அனைவரது நம்பிக்கைகளையும் நொறுக்கி விட்டேன். மீதி தேடுதல் வேட்டையின் எதிர்காலத்தில் இது என்ன விளைவு ஏற்படுத்தும் என்பதை என்னால் நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. என்னுடைய முட்டாள் தனத்தினால் அவர்களது உயிர்களும் தியாகம் செய்யப்பட்டு விட்டன. என் விதி முடிந்து விட்டது என்பது கண்கூடு. உண்மையைச் சொல்லப் போனால் என்னை விட என் நண்பர்களை நினைத்துத் தான் அப்போது மிக வருந்தினேன்.
இப்போதும் கூட அந்த மலைச் சிகரங்களுக்கு அப்பால் எனது கூட்டாளிகள் படபடப்புடன் காத்துக் கொண்டிருப்பார்கள். இப்போது அவர்களை பயமும் பீதியும் ஆட்கொள்ளும். அவர்களுக்கு என் நிலைமை தெரிய வாய்ப்பே இல்லை. அவர்கள் மலை ஏற முயற்சி செய்வார்கள் என்பது மட்டும் என்னால் நிச்சயம் சொல்ல முடியும். ஆனால் அவர்கள் அதில் வெற்றி பெறுவார்கள் என்று சொல்லிவிட முடியாது. அதன் பின் அவர்களில் மீதி இருப்போர் வீட்டிற்கு திரும்பிச் சென்று விடுவார்கள் கவலையோடும் துயரத்தோடும். வீடு! பற்களைக் கடித்துக் கொண்டு அந்தச் சொல்லை மறந்து விட நினைத்தேன். ஏனெனில் இதன் பின் எப்போதும் பார்க்க முடியாத ஒரு பொருள்.
போவன் மற்றும் அந்தப் பெண்ணின் நிலைமை? நான் அவர்களையும் ஆபத்திற்குள்ளாக்கி விட்டேன். அவர்களைக் காப்பாற்ற ஒரு முயற்சி நடந்தது என்பது கூட அவர்களுக்குத் தெரியப்போவதில்லை. ஒருவேளை அவர்கள் இன்னும் உயிரோடு இருந்தால் அழிந்து கொண்டிருக்கும் மிச்சங்களான இந்த பிரமாண்டமான கல்லறையில் தொங்கிக் கொண்டிருக்கும் விமானத்தை வந்து பார்த்து யோசித்து ஆச்சர்யப்படுவார்கள். அவர்களுக்கு எதுவும் தெரியப்போவதில்லை. எனது குற்றமுடைய சுயநலத்தால் டாம் பில்லிங்ஸ் அவர்களது விதியை அழுத்தி மூடி விட்டான் என்பது அவர்களுக்குத் தெரியப்போவதில்லை என்பதில் எனக்கு ஒரு அற்ப மகிழ்ச்சியே.
இப்படியான வீணான கவலைகள் என்னைக் கெட்ட வழியில் ஈர்த்து விட்டிருந்தன. ஒரு வழியாக அவைகளை உதறித் தள்ளிவிட்டு என் மனதில் இருந்து அகற்றப் பார்த்தேன். தற்போது இருக்கும் சூழ்நிலையில் என்னால் முடிந்தளவு முயற்சி செய்து தோல்வியில் இருந்து வெற்றியை நோக்கிச் செல்ல முடிவெடுத்தேன். நான் அந்த விபத்தில் வெகுவாக காயம் அடைந்து இருந்தேன். இருந்தாலும் உயிரோடு தப்பித்தது பெரும்பேறு என்றுதான் சொல்ல வேண்டும். விமானம் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தது. அதனால் மிகவும் கஷ்டப்பட்டு ஆபத்துக்களைப் பொருட்படுத்தாமல் அதில் இருந்து இறங்கி மரத்தின் வழியாகக் கீழே வந்தேன்.
எனது நிலை மிகவும் மோசம். எனக்கும் என் நண்பர்களுக்கும் இடையில் 60 மைல் அகலத்தில் ஒரு நீண்ட நெடிய உள்நாட்டுக் கடல் இருக்கிறது. அதன் பின் கிட்டத்தட்ட 300 மைல் தொலைவுள்ள நிலம் கடலின் வட திசையில் இருக்கிறது. இவ்வளவு ஆபத்துகளுக்கு நடுவில் நான் நன்றாகக் குழம்பிப் போயிருக்கிறேன் என்று உறுதியாகச் சொல்ல முடியும். கேஸ்பக்கில் இன்று நான் நிறைய அனுபவித்து விட்டேன். அதனால் இதன் ஆபத்துக்களைப் பற்றி போவன் எழுதியது ஒன்றும் மிகையல்ல என்று நிரூபிக்கப் பட்டுவிட்டது. உண்மையைச் சொல்லப் போனால் அந்தக் கட்டுரை எழுத ஆரம்பிக்கும் முன்னே இவைகளுக்கு அவன் பழகி விட்டிருப்பான். அதனால் அவன் கொஞ்சம் கம்மியாகவே எழுதி இருப்பது போல் தோன்றுகிறது. அந்த மரத்தின் அருகில் நான் நின்றிருக்கும் போது-மரம், இது நிலக்கரியாகி பல லட்சம் வருடங்கள் ஆகி இருக்க வேண்டிய மரம்- பீதி கிளப்பும் உயிரினங்கள் நிறைந்திருந்த கடலைப் பார்த்தேன் – அந்த உயிரினங்கள் எல்லாம் கடவுள் ஆதாமைப் பற்றி நினைக்கும் முன்னே படிமங்களாகி இருக்க வேண்டியவை. இதில் இருந்து மீண்டு வெளி உலகையும் என் நண்பர்களையும் பார்க்கும் வாய்ப்பிற்கு ஒரு சிறு பீர் கூட கொடுக்க என் மனம் ஒப்பவில்லை. இருந்தாலும் சூழ்நிலை ஏற்படுத்திக் கொடுக்கும் வழிகளில் எல்லாம் கஷ்டப்பட்டு பயணிக்க உறுதி பூண்டேன். என்னிடம் தேவையான அளவு வெடி மருந்துகள் இருந்தன. தானியங்கி துப்பாக்கி மற்றும் சுழல் துப்பாக்கியும் இருந்தன. பின்னது கிட்டத்தட்ட ஒரு இருபது எங்கள் படகில் அடுக்கப்பட்டிருந்தன போவன் கேஸ்பக்கில் இருந்த பெரிய மிருகங்களின் பலத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தபடியால். இங்கிருக்கும் மிகப் பெரிய ஆபத்து என்னவென்றால் அந்தக் கொடூரமான ஊர்வனவற்றின் நரம்பு மண்டலம் மிகவும் கீழான நிலையில் இருப்பதால் அவைகளின் செயல்பாடுகள் இறந்த பின்னும் பல நிமிடங்கள் தொடர்வதுதான்.
இதைப் பற்றி நான் சிந்தித்தது கம்மிதான். ஏனெனில் சட்டென்று எங்கள் திட்டங்களின் மேல் வெறுப்பு படர்ந்தது. மிகவும் கோபத்தோடு என்னையே நான் கடிந்து கொண்டேன் எனது முட்டாள்தனமான கோழைத்தனமான முடிவுக்காகத் தேவை இல்லாமல் அற்ப ஆயுளுடன் முடிவடைந்த எனது ஆய்வுப்பயணத்திற்காக. நான் முற்று முழுதாக போவனைத் தேடும் வேலையில் இருந்து நீங்கி விட வேண்டும் என்று தெரிகிறது. ஏனெனில் நான் நினைத்தது போல் இங்கிருந்து கிட்டத்தட்ட 300 மைல்களாவது கேஸ்பக்கின் பரப்பைக் கடந்துதான் மலை அடிவாரத்தையே அடைய முடியும். அதன் பின் தான் எனது நண்பர்கள் இருக்கிறார்கள். இவ்வளவு தூரம் கேஸ்பக்கின் உயிரனங்களைப் பற்றித் தெரியாத ஒருவன் கடப்பதென்பது நடைமுறையில் சாத்தியமற்றது. இருந்தாலும் நம்பிக்கை முழுவதுமாக இழக்கவில்லை. எனது கடமை என் முன்னால் தெளிவாக இருக்கிறது. என் உயிர் இருக்கும் வரை அதை நான் தொடர வேண்டும். அதனால் நான் வடக்கு நோக்கிச் செல்ல ஆரம்பித்தேன்.
இந்த நாடு நான் செல்லும் வழியெங்கும் மிகவும் ரம்மியமாக இருந்தது. அதே அளவு அசாதாரணமாகவும் இருந்தது. கிட்டத்தட்ட பூமிக்குச் சம்பந்தமில்லாத என்று சொல்லி விட்டேன். மரங்கள் பூக்கள் செடிகள் எதுவுமே நான் பார்த்த பூமிக்குச் சம்பந்தமில்லாமல்தான் இருந்தன. மிகவும் பெரிதாக நிறங்கள் கண்களைப் பறிக்கக் கூடியதாய் வடிவங்கள் மயக்கக் கூடியதாய் இருந்தன. சில தாவரங்கள் மனித மிருக உருவங்களை உருவாக்கி இருந்தன. அவைகள் அனைத்தும் இந்த மண்ணின் அழகையும் ரசனையையும் மெருகூட்டின. அதற்கு நடுவில் ஒரு பிரமாண்டமான கள்ளிச் செடி கவலை தோய்ந்த மொஹாவே இந்தியன் போல காட்சி அளித்தது. இதற்கு அப்பால் கதிரவன் மிகப் பெரிய செந்நிற வட்டமாக மின்னியது. அசுரத்தனமான உலகில் ஒரு அசுரத்தனமான கதிரவன். அதன் ஒளியை கேஸ்பக்கின் ஈரமான காற்று சிதறடித்தது. சூடான ஈரமான காற்று சோம்பேறியாய் இந்த பிரமாண்டமான உயிர்களின் தாயின் மார்பில் அமர்ந்திருந்தன. இயற்கையின் மிகப் பெரும் அடைகாக்கும் கருவி போல் இருந்தது.
என்னைச் சுற்றி அனைத்து திசைகளிலும் உயிர்கள் நிறைந்து இருந்தன. மரத்தின் மேலும் அதன் உடற்பகுதியிலும் அவைகள் சுற்றிக் கொண்டிருந்தன. கடலின் நெஞ்சுக்குள்ளும் விரிந்த மோதிக் கொள்கிற வட்டங்களில் அவை தன்னைக் காட்டிக்கொண்டிருந்தன. ஆழத்தில் இருந்து அவை துள்ளிக் குதித்தன. வலது பக்கம் அடர்ந்து இருந்த காட்டிற்குள்ளும் அவைகளின் சத்தத்தைக் கேட்க முடிந்தது. அவைகளின் முணுமுணுப்பு ஓயாமல் ஏற்ற இறக்கமாய்க் கேட்டுக் கொண்டே இருந்தது. அதை உடைத்துக் கொண்டு காட்டுக் கூச்சல் அல்லது இடி முழக்கம் கேட்டு பூமியை அதிர வைத்தன. பார்வைக்குப் புலப்படாத கண்கள் நம்மைக் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றன, சத்தமே இல்லாமல் சில பாதங்கள் பின் தொடர்கின்றன என்ற விவரிக்க இயலாத உணர்ச்சிகளை நினைக்கும் போதே பயமாய் இருந்தது. நான் பதற்றமாகவோ மிதப்பாகவோ இல்லை. ஆனால் கடமையின் பாரம் என்னை வெகுவாக அழுத்தியது. அதனால் வழக்கத்துக்கு மாறாக நான் கவனமாக இருக்க வேண்டி இருந்தது. நான் எப்போதும் இடம் வலம் பின் புறம் என்று எல்லா பக்கங்களிலும் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றேன். எனது துப்பாக்கியும் தயார் நிலையிலேயே இருந்தது. மரங்களின் நிழல்களுக்கு நடுவில் மங்கலாக எதோ ஒரு மனித உருவம் ஒரு மறைவில் இருந்து இன்னொரு மறைவிற்குத் தாவியது. ஒரு முறை கிட்டத்தட்ட உறுதியாய்ச் சொல்லி இருப்பேன், இருந்தாலும் முடியவில்லை.
பெரும்பாலும் நான் காட்டில் வட்டமடித்துக் கொண்டிருந்தேன். எப்போதாவது வந்த வழியிலேயே திரும்ப வந்தேன். அந்த இருட்டின் ஆழத்திற்குள் செல்ல விரும்பவில்லை. சில நேரங்களில் காட்டின் சில கிளைப் பாதைகளில் சென்றேன். அது கிட்டத்தட்ட கடலின் முனை வரை கொண்டு போய் விட்டது. வினோதமான விலங்குகளின் ஆபத்துக்களும் இன்னும் வினோதமான மனிதர்களும் ஒரு வகையில் ஆபத்து இல்லை என்ற போதிலும் காட்டை விட்டு வெளியே வந்த போதுதான் எனக்கு நிம்மதி பெருமூச்சு கிடைத்தது.
வடக்கில் ஒரு மணி நேரம் வரை நடந்திருப்பேன். இன்னும் அதே போன்ற உணர்ச்சிகளால் தொல்லை மிகுந்து இருந்தன. எதோ ஒரு மிருகம் பின் தொடர்வது போல் இருந்தது. நான் திரும்பிப் பார்த்தவுடன் அருகில் இருக்கும் மரத்தின் பின்னோ அல்லது புதர்களிலோ சென்று மறைந்து விடுகின்றன. நூறாவது முறையாக அப்படி ஒரு சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தபோது ஒரு மிருகம் வேகமாக என்னை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தது. அது தன்னை இனிமேல் மறைக்க வேண்டும் என்று எண்ணவில்லை. சிறு புதர்களுக்கு அடியில் வேகமாக வந்தது. அது என்னவாக இருந்தாலும் அது தைரியமாக என் மேல் பாய்ந்து விட வேண்டும் என்று நினைத்து விட்டது. அது என் கண் முன் வரும் போது அது தனியாக வரவில்லை என்பதும் தெரிந்தது. அதன் பக்கத்திலேயே சில அடி தூரத்தில் இன்னொன்றும் அந்த இலைகள் சூழ்ந்த காட்டினுள் முளைத்தது. வேட்டையாடும் விலங்குகள் அல்லது மனிதர்கள் என்னைத் தாக்க வருகிறார்கள் என்பது நன்றாகப் புரிந்து விட்டது.
கடைசியாக ஆடிக் கொண்டிருந்த செடியின் பின்னிருந்து முன்னால் ஒரு உருவம் வெளிப்பட்டது. நான் துப்பாக்கியை எனது தோள்பட்டையில் ஏந்தி அது வெளிப்படும் திசையை நோக்கிக் குறி வைத்துக் காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அது என் மேல் வேகமாகப் பாய்ந்தது. ஆச்சர்யமும் திகிலும் என் முகத்தில் தெரிந்திருந்தால் நான் முட்டாளாக தெரிந்திருப்பேன். துப்பாக்கியைக் கீழிறக்கிக் கொண்டே என்னை நோக்கி வேகமாக முன்னேறி வரும் மெலிந்த உடல்வாகு கொண்ட அந்தச் சிறு பெண்ணை அப்பாவியாகக் பார்த்தேன். ஆனாலும் அதே போல் இறங்கிய துப்பாக்கியோடு நீண்ட நேரம் இருக்க முடியவில்லை. ஏனெனில் அவள் தன் தோள்களுக்கு அப்பால் பயத்துடன் நோக்கினாள். நான் அவளைப் பார்த்த அதே இடத்தில் இப்போது இதுவரை பார்த்ததிலேயே மிகப் பெரிய பூனை ஒன்று நின்று கொண்டிருந்தது.
முதல் பார்வையில் அது ஒரு பட்டாக்கத்திப் பல் புலி போலத் தெரிந்தது. ஏனெனில் அது மிகத் பயங்கரமாகத் தெரிந்தது. ஆனாலும் அது பழங்காலத்தின் கொடிய அரக்கன் என்று சொல்லிவிட முடியாது. இருந்தாலும் சாகசம் வேண்டும் ஒரு வேட்டைக்காரனின் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் அளவு பயமுறுத்துவதாய் இருந்தது. அதன் கண்கள் இறுக்கமாக கொடூரமாக இருந்தன. அதன் பரந்த வாயின் மேல் அந்தக் கண்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. மடிந்து இருந்த அதன் உதடுகள் உறுமலை வெளிப்படுத்தியபோது அதன் கோரமான பற்களைக் காட்டியது. என்னைப் பார்த்ததும் கட்டுக்கடங்காத அதன் வேகத்தைக் குறைத்து மெதுவாக எங்களை நோக்கி வந்தது. அந்தப் பெண்ணிடம் ஒரு நீண்ட கத்தி இருந்தது. அதனால் என் இடது புறம் தைரியமாக எதிர்த்து நின்றாள். என்னை நோக்கி ஓடி வரும்போது எனக்குப் புரியாத மொழியில் எதோ கத்திக் கொண்டே வந்தாள். இப்போது திரும்பவும் பேச ஆரம்பித்தாள். அவள் சொன்னது நிச்சயமாக எனக்குப் புரியவில்லை. ஆனால் அவளது பேச்சு இனிமையாக இருந்தது. பண்படுத்தப்பட்ட சொற்கள். அதில் பயம் சிறிதும் இல்லை.
இப்பொழுது அதை எதிர்கொண்டு நிற்கையில் அது ஒரு பெரிய சிறுத்தை என்பது புரிந்தது. சரியான கோணத்தில் சுட வேண்டும் என்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தேன். ஏனெனில் இம்மாதிரி பெரிய மிருகங்களை முன் புறம் சுட்டால் அதற்கு கிச்சுகிச்சு மூட்டுவது போல் அமைந்து விடும். அது வேகமாகப் பாய்ந்து வரவில்லை என்பது ஒரு வகையில் அனுகூலம்தான். அதன் தலையில் தாழ்ந்தும் அதன் முதுகு தெரியவும் நடந்து வந்து கொண்டிருந்தது. அதனால் ஒரு நாற்பதடி தூரத்தில் கழுத்தையும் தோள்பட்டையையும் இணைக்கும் இடத்தில் அதன் முதுகெலும்பைக் கவனமாகக் குறி வைத்தேன். அதே நேரத்தில் என் எண்ணத்தைப் புரிந்து கொண்டது போல் தலையைத் தூக்கி என் மேல் பாய வந்தது. அதன் முன் நெற்றியில் சுடுவது என்பது வீண். அதனால் சற்று விலகிச் சுட்டேன். நம்பிக்கையின் மேல் நம்பிக்கை வைத்து மென்மையான முன்புறம் கொண்ட குண்டும் அதில் உள்ள வெடி மருந்தின் அழுத்தமான ஆற்றலும் சேர்ந்து அதனைச் சற்று நேரம் தாமதப் படுத்தும் அந்த நேரத்தில் இரண்டாவது சூடு நிகழ்த்தலாம் என்று எண்ணினேன்.
துப்பாக்கிச் சூட்டின் பலனாக அந்த முரட்டு உருவம் காற்றில் மேலெழும்பி அந்தர் பல்டி அடித்துக் கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் உடனே எழுந்தும் கொண்டது. விழுந்து எழும் அந்தச் சில வினாடிகளில் அது தனது இடது பாகத்தை முழுவதும் காட்டியது. அதன் இதயத்தை எனது இரண்டாவது குண்டு கிழித்தது. இரண்டாவது முறை கீழே விழுந்து எழுந்து என்னை நோக்கிப் பாய்ந்தது. கேஸ்பக் உயிரினங்களின் ஆற்றல் இந்த வினோத உலகில் ஒரு அதிசயிக்கத்தக்க விஷயம். உலகில் வேறெங்கும் இல்லாத கற்கால உயிரினங்களின் நரம்பு மண்டலங்களின் சிறுமையை அது பறைசாற்றுகிறது.
மூன்றடி தூரத்தில் இருக்கும் போது மூன்றாம் முறையாகச் சுட்டேன். அதன் பின் கதை முடிந்தது என்று நினைத்தேன். அது திரும்பி என் காலடியில் படுத்து இறந்தது. எனது இரண்டாவது குண்டு அதன் இதயத்தை முழுவதும் கிழித்து விட்டதை என்னால் உணர முடிந்தது. இருந்தும் அதனால் கோபத்தோடு என் மேல் பாய்ந்து வர முடிந்திருக்கிறது. மூன்றாவது குண்டைச் சுடாமல் இருந்திருந்தால் அது சாவதற்குள் என்னை அது கொன்றிருக்கும் போவன் சொன்னது போல் அது தான் இறந்ததை அறிவதற்குள்.
இப்பொழுது அந்தச் சிறுத்தை தான் இறந்ததை முழுவதும் அறிந்திருக்கும். அதனால் அந்தப் பெண்ணைப் பார்த்தேன். அவள் என்னைப் புகழத் தயாராக இருந்தாள். நிச்சயமாக வெறும் சின்ன ஆச்சர்யம் அவள் கண்களில் இல்லை. உண்மையைச் சொல்வதென்றால் அவளுக்கு நான் வைத்திருந்த துப்பாக்கி மிகவும் பிடித்து விட்டது. நான் பார்த்த விலங்குகளிலேயே மிகவும் அருமையானதாக அவள் இருந்தாள். அவள் அணிந்திருந்த கொஞ்ச நஞ்ச ஆடைகளும் அவள் அழகை மிகவும் அதிகரித்துக் காட்டின. பதப்படுத்தப்படாத சின்னத் தோல் துண்டு ஒன்று அவளது இடது தோள்பட்டையில் இருந்து வலது மார்பகம் வழியாக இடது பின்புறம் சென்று பின் வலப்பக்கம் உள்ள உலோகத்தால் ஆன ஒரு பட்டி, முழங்காலில் இருந்து மேலே அவள் காலைச் சுற்றி இருந்தது. அதன் மேல்தான் அந்தத் தோலின் கீழ் பகுதி இணைக்கப்பட்டிருந்தது. அவளது இடையில் தளர்ந்த வார் ஒன்று இருந்தது. அதன் நடுப் பகுதியில்தான் அவளது கத்தி வைக்கும் உறை பொருத்தப்பட்டிருந்தது. அவளது வலது கையில் தோள்பட்டைக்கும் முழங்கைக்கு நடுவில் ஒரே ஒரு வளை இருந்தது. அதே போல் நிறைய வளையல்கள் இடது முழங்கையில் இருந்து மணிக்கட்டு வரை இருந்தன. எதிரி யாராவது கத்தியை எடுத்துத் தாக்கும் போது முகத்திலோ நெஞ்சிலோ பட்டுவிடாமல் பாதுகாப்பதற்குத்தான் அவைகள் என்பதைப் பின்னால் அறிந்தேன்.
அவளது கனமான கூந்தலை நிறுத்தி வைக்க உலோகத்தாலான பட்டி ஒன்றை பயன்படுத்தி இருந்தாள். அதில் இருந்து ஒரு முக்கோண வடிவில் ஒரு ஆபரணம் அவளது முன் நெற்றியில் தொங்கியது. இந்த ஆபரணம் ஒரு பெரிய ரத்தினக்கல் போல் இருந்தது. அவள் ஆபரணத்தின் அனைத்து உலோகங்களும் செம்பு கலக்காமல் அடிக்கப்பட்ட தங்கமாகும். அதன் மேல் முத்துச் சிப்பிகளாலும் வேறு பல கற்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவளது இடது தோள்பட்டையில் இருந்து ஒரு சிறுத்தையின் வால் தொங்கிக் கொண்டிருந்தது. அவள் கால்களில் வலுவான காலணிகள் அணிந்திருந்தாள். கத்திதான் அவளது ஒரே ஆயுதம். அது இரும்பால் செய்யப்பட்டது. அதன் பிடி மிருகத்தின் தோலால் சுற்றப்பட்டிருந்தது. தோலை இறுக்கிப் பிடிக்க இரும்பால் ஆன மூன்று ஊசிகள் தைக்கப்பட்டிருந்தன. அதன் மேல் பகுதியில் சின்னத் தங்கக் குமிழும் இருந்தது.
நாங்கள் இருவரும் எதிரெதிர் நின்று கொண்டிருந்த அந்தச் சில வினாடிகளில் இவ்வளவையும் தெரிந்து கொண்டேன். அதே போல் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனித்தேன். அவள் மிகவும் அழுக்கடைந்திருந்தாள். அவளது முகம் கை கால்கள் உடை என்று அனைத்திலும் சேறு வியர்வை படிந்திருந்ததன. இவ்வளவு இருந்தாலும் இவளைப் போன்ற ஒரு அழகான நேர்த்தியான உருவத்தை எங்கும் பார்த்ததில்லை. அவள் அழகை வர்ணித்துக் கொண்டே இருக்கலாம். நான் ஒரு எழுத்தாளனாக இருந்திருந்தால் அவளது அம்சங்கள் கிரேக்க நாட்டினது என்று சொல்வேன். எழுத்தாளனாகவோ கவிஞனாகவோ இல்லாததால் ஒரு சராசரி அமெரிக்கப் பெண்ணிடம் இருக்கும் அனைத்துச் சிறப்பான அம்சங்களையும் சேர்த்து வைத்தவள் என்று சொல்வதுதான் அவளுக்குச் சரியான நீதியாக இருக்க முடியும். கிரேக்கக் கடவுள்கள் கூட ஆடு போன்ற அமைப்பு உள்ளவர்கள். இல்லை அந்தச் சேறு கூட அவள் அழகை மறைக்க முடியாது. ஒப்புமை இல்லாத பேரழகி அவள்.
“காலு?” என்று அதிகரிக்கும் தொனியில் கேட்டாள்.
போவனின் கட்டுரையில் காலு என்பவன் மனிதர்களின் பரிணாமத்தில் மேல் இருப்பவன் என்று படித்திருந்ததால் நான் என்னைக் கை காட்டி அதே வார்த்தையைத் திரும்பக் கூறினேன். பின் அவள் சாதாரணமாக பேச ஆரம்பித்து விட்டாள். ஆனால் எனக்குத்தான் அவள் சொல்லிய ஒரு வார்த்தை கூட புரியவில்லை. அவள் பேசிய நேரம் எல்லாம் அந்த காட்டை நோக்கியே அவள் பார்வை இருந்தது. இறுதியாக அவள் என் கையை அழுத்தி அந்தத் திசையைச் சுட்டிக் காட்டினாள்.
திரும்பி நான் பார்த்தபோது முடிகள் நிறைந்த ஒரு மனிதனைப் போன்ற ஒருவன் எங்களை கவனித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்தக் காட்டினுள் இருந்து ஒவ்வொருவராக வெளியே வந்தார்கள் ஒரு இருபது பேராவது இருக்கும். அவர்கள் அனைவரும் எவ்வித ஆடையும் உடுத்தி இருக்கவில்லை. அவர்கள் உடல் முழுவதும் முடி போர்த்தி இருந்தது. அவர்கள் தங்கள் கால்களால் நின்று கொண்டிருந்த போது கைகள் தரையைத் தொடவில்லை என்றாலும் கிட்டத்தட்ட மனிதக் குரங்கு போலவே இருந்தார்கள். முன் புறம் வளைந்து நீண்ட கரங்களுடன் மனிதக் குரங்கின் அம்சமாகவே இருந்தார்கள். அந்தக் குறுகிய கண்களும் தட்டையான மூக்குகளும் நீளமான மேல் உதடுகளும் வெளியில் துருத்திக் கொண்டிருக்கும் பற்களும் அவர்களின் அவலட்சணத்தைப் பறை சாற்றின.
“ஆலுக்கள்!” என்றாள் அவள்.
நான் போவனின் கட்டுரையை அடிக்கடி திரும்பப் படித்திருக்கிறேன். அதனால் அவர்களைப் பற்றி எனக்கு உடன் தெரிந்து விட்டது. ஆதி மனிதனின் கடைசிச் சுவடுகளை நான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன். மறந்து போன உலகின் ஆலுக்கள். பேசத் தெரியாத ஆதி மனிதன்.
“காசோர்!” என்று கத்தினாள் அவள். அப்போது அனைவரும் உளறிக்கொண்டு எங்களை நோக்கி ஓடி வந்தார்கள். அவர்கள் வினோதமான உறுமல் மற்றும் குரைக்கும் ஒலி எழுப்பிக் கொண்டு எங்களை அணுகிக் கொண்டிருந்தனர். அவர்களது ஆய்தம் இயற்கை தந்தது மட்டுமே. அவர்களது வலிமையான தசைகள் மற்றும் பெரிய பற்களும்தான். இருந்தாலும் வேறேதும் பாதுகாப்பு இல்லாதபட்சத்தில் அவைகள் மட்டுமே எங்களை வீழ்த்த போதும் என்பதும் எனக்குத் தெரியும். அதனால் எனது கைத்துப்பாக்கியை எடுத்து அவர்களின் தலைவனை நோக்கிச் சுட்டேன். அவன் ஒரு கல்லைப் போன்று வீழ்ந்து விட்டான். மற்றவர்கள் திரும்பி ஓட்டமெடுத்தார்கள். திரும்பவும் அந்தப் பெண் என்னைப் பார்த்து மெதுவாகச் சிரித்தாள். துப்பாக்கியின் முனையை வருடிக் கொடுத்தாள். அவ்வாறு செய்யும் போது அவளது விரல்கள் என் விரல்கள் மீது பட்டன. அது ஒருவித சிலிர்ப்பை என்னுள் ஏற்படுத்தியது. ஏனெனில் எந்தவொரு பெண்ணையும் நான் பார்த்து நீண்ட நாட்கள் ஆகி விட்டன என்பதையே அது காட்டுகிறது.
அவள் தன் மெல்லிய குழைந்த குரலில் ஏதோ சொன்னாள். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவள் வட திசையைக் கை காட்டி நடக்க ஆரம்பித்தாள். நான் அவளைப் பின் தொடர்ந்தேன். ஏனெனில் நான் போக வேண்டியதும் அதே திசைதான். தெற்காக இருந்தாலும் நான் அவளைப் பின் தொடர்ந்திருப்பேன். விலங்குகள் ஊர்வன மற்றும் பாதி மனிதர்களுக்கு நடுவில் ஒரு மனிதத் துணை கிடைத்திருப்பதென்பது ஒரு வரம் அல்லவா.
நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். அவள் நிறைய பேசிக் கொண்டே வந்தாள். எனக்கு அது புரியவில்லை என்பதை அவளால் விளங்கிக் கொள்ள இயலவில்லை. அவளது வெள்ளி மணி போன்ற சிரிப்பு மகிழ்ச்சியாக ஒலித்தது. நானும் அவளிடம் பேச முயற்சி செய்தேன் என் மொழி அவளுக்கு மிகவும் பரிச்சயமானது போல். பல முறை அவள் எனக்குப் புரிய வைக்க முயற்சி செய்தும் முடியாமல் போனதால் அவள் தன் உள்ளங்கையை மடக்கி என்னை நோக்கி “காலு” என்றாள். பின் எனது நெஞ்சையோ கையையோ தொட்டு “ஆலு, ஆலு” என்று கத்தினாள். அவள் என்ன சொன்னாள் என்று எனக்குப் புரிகிறது. ஏனெனில் போவன் கட்டுரையில் சொன்னது போல் அந்த எதிர்மறை சைகைகள் மற்றும் அவள் திரும்பத்திரும்பச் சொன்ன அந்த இரு வார்த்தைகளுக்கும் என்ன பொருள் என்று எனக்குத் தெரியும். நான் காலு இல்லையென்றும் பேசாத அந்த ஆலு மனிதன் என்றும் சொன்னாள். ஒவ்வொரு முறை அதை சொல்லும் போதும் சிரித்துக் கொண்டே இருந்தாள். அவளது சிரிப்பு அவ்வளவு வசீகரமாக இருந்ததால் வேறு வழி இல்லாமல் நானும் அவளுடன் சேர்ந்து கொண்டேன். நான் பேசுவது அவளுக்குப் புரியாமல் இருப்பதையும் அவள் பேசுவது எனக்குப் புரியாமல் இருப்பதையும் பார்த்து அவள் ஆச்சரியப்படுவதும் இயற்கையானதே. பரிணாமத்தில் மிகவும் கீழே இருக்கும் கேஸ்பக்கின் பேச ஆரம்பித்த முதல் மனிதனான கழி மனிதர்களில் இருந்து தங்க இனமான காலுக்கள் வரை அனைவரது மொழிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கின்றன பரிணாம வளர்ச்சியின் மாற்றங்களைத் தவிர. காலுவாக இருக்கின்ற அவள் போலுக்கள் சொல்வதை புரிந்து கொள்ள முடியும். அவர்களுக்குத் தன் மொழியைப் புரிய வைக்கவும் முடியும். அதே போல் கோடரி ஈட்டி அல்லது வில் மனிதர்களிடமும் உரையாட முடியும்.
மனிதக் குரங்குகளான ஹோலுக்கள், ஆலுக்கள் மற்றும் நான் இவர்களிடம் மட்டுமே அவளால் பேச முடியாது. அவளது அறிவுத் திறனில் இருந்து எனக்கு என்ன தெரிகிறதென்றால் நான் ஹோலுவும் அல்ல ஆலுவும் அல்ல. மனிதக் குரங்கும் அல்ல பேசத் தெரியாத மனிதனும் அல்ல.
இருந்தாலும் அவள் ஏமாற்றம் அடையவில்லை. எனக்கு அவள் மொழியைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தாள். போவன் மற்றும் தொரியாதோரில் என்னுடன் வந்த கூட்டாளிகள் பற்றி நான் கவலைப் படாமல் இருந்திருந்தால் அந்த உரையாடல் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்றே எண்ணி இருப்பேன்.
நான் எப்போதும் பெண்களின் மனிதனாக இருந்ததில்லை. இருந்தாலும் அவர்களுடன் இருப்பதை விரும்புவேன். எதிர் பாலினத்தவரிடம் கல்லூரியிலும் அதன் பின்பும் நட்பு கொண்டிருந்தேன். ஒரு குறிப்பிட்ட பெண் மட்டுமே என்னை விரும்புவாள் என்பதால் நான் யாரிடமும் இதுவரை உறவு வைத்துக் கொண்டது கிடையாது. என்னைவிட மிகவும் அருமையாக அதைக் கையாளும் பிறரிடம் அதை விட்டு விடுகிறேன். பெண்களின் சமூகத்தில் இருந்து எனது இன்பத்தை நான் வேறு விதத்தில் எடுத்துக் கொள்கிறேன் ஆடல், கோல்ப் விளையாட்டு, படகு செலுத்துவது, குதிரை விளையாட்டு, டென்னிஸ் இது போன்ற விளையாட்டுகளின் மூலம். இந்த அரை நிர்வாண சிறு காட்டுமிராண்டியுடன் இருக்கும் போது எனக்குக் கிடைக்கும் இந்த புதிய ஆனந்தம் இதுவரை நான் கண்டிராத புது விதமாக இருந்தது. அவள் என்னைத் தொடும்போது வேறெந்தப் பெண் என்னைத் தொடும் போது கிடைத்த இன்பத்தை விட மிக அதிகமாக உணர்ந்தேன். என்னால் அதை விளங்கிக் கொள்ள இயலவில்லை. ஏனெனில் அது காதலின் அறிகுறி என்று புரியத் தேவையான அளவு நான் வளர்ந்திருக்கிறேன். ஆனாலும் இந்தக் கேவலமான அழுக்கான சிறு காட்டுமிராண்டியை நான் காதலிக்கவில்லை. உடைந்த சீரற்ற நகங்களும் உடல் மேல் அப்பி இருந்த சேறும் முதலில் எந்த வண்ணத்தில் இருந்ததென்றே சொல்ல முடியாதபடி அதில் ஒட்டி இருந்த பச்சைச் செடிகளும் கொண்ட இவளை நான் காதலிக்கவில்லை. அவ்வளவு அருவருப்பாக இருந்தாலும் அவளது உறுதியான சீரான வெள்ளைப் பற்களும் வெள்ளி போன்ற சிரிப்பும் ராணி போன்ற நடையும் அவளுடன் பிறந்த நேர்த்தியைப் பறை சாற்றியது. அந்தச் சேற்றின் அழுக்கு கூட அதை மறைக்க முடியாது.
நாங்கள் ஆற்றங்கரையை அடைந்தபோது கதிரவன் கீழே இருந்தான். அது ஒரு மலையின் அடிவாரத்தை நோக்கிப் பாய்ந்தது. எங்கள் பயணம் ஆபத்து மிகுந்ததாகவே இருந்தது இந்த மண்ணில் எந்தவொரு பயணத்தையும் போல். எங்களை எப்போதும் பின் தொடர்ந்து கொண்டிருந்த பலதரப்பட்ட விலங்குகளின் தொடர்ச்சியான தாக்குதல்களை எல்லாம் விவரித்து உங்களைக் கழுத்தறுக்காமல் விட்டுவிட்டேன். எப்பொழுதும் கவனமாகவே இருந்தோம். சுருக்கமாகச் சொல்வதென்றால் தொடர்ச்சியான கவனமே இங்கு உயிரின் விலையாகும்.
அவள் மொழியைப் புரிந்து கொள்வதில் நான் சற்று முன்னேறி இருக்கிறேன். நிறையத் தாவரங்கள் மரங்கள் புற்கள் விலங்குகள் ஊர்வனவற்றின் கேஸ்பக் பெயர்களைத் தெரிந்து கொண்டிருக்கிறேன். கடல், ஆகாயம், ஆறு, மலை, கதிரவன் மற்றும் மேகங்களுக்கான வார்த்தைகளையும் தெரிந்து கொண்டிருக்கிறேன். ஆம் நான் அவளை நன்றாகப் புரிந்து கொள்ளத் தொடங்கி இருக்கின்றேன். திடீரென்று எனக்கு ஒரு விஷயம் புலப்பட்டது. அவளது பெயர் என்னவென்று இதுவரை எனக்குத் தெரியாது. அதனால் என் நெஞ்சில் கையை வைத்து “டாம்” என்றேன். பின் கேள்வி கேட்பது போல் எனது இரு புருவங்களை மேலே தூக்கினேன். அவள் தன் கையை அவளது அடர்ந்த கூந்தலுக்குள் விட்டுக் கொண்டு புரியாமல் தவித்தாள். நான் அதே போல் ஒரு டஜன் தடவை அவளிடம் கேட்டு விட்டேன்.
“டாம்” என்று அவளது தெளிவான இனிமையான குழைந்த குரலில் சொன்னாள்.
என் பெயரைப் பற்றி எனக்கு பெரிய அளவு அபிப்பிராயம் இல்லை. ஆனால் அதை அவள் சொல்லிய போது என் பெயர் அவ்வளவு அழகாக இருந்தது. அதன் பின் அவளுக்குச் சட்டென்று பொறி தட்டியது. தன் நெஞ்சில் கையை வைத்து “அஜோர்!” என்றாள்.
“அஜோர்!” என்று நான் சொன்னேன். அவள் அதைக் கேட்டுக் கைகொட்டிச் சிரித்தாள்.
எங்கள் இருவர் பெயரும் எங்களுக்குத் தெரிந்து விட்டது. அதுவே ஒரு பெரிய திருப்தியாய் இருந்தது. எனக்கு அவள் பெயர் பிடித்திருந்தது. அவளுக்கும் அது மிகவும் பிடித்து விட்டதென்று எண்ணுகிறேன். திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தாள்.
நாங்கள் அந்த ஆற்றை ஒட்டி இருந்த மலைச் சரிவிற்கு வந்து சேர்ந்தோம். அது அங்கே இருந்து ஒரு முகத்துவாரம் வழியாக அந்த உள்நாட்டுக் கடலில் கலந்தது. மலைப் பாறைகள் தேய்ந்தும் உடைந்தும் போயிருந்தன. ஒரு இடத்தில் மேலே தொங்கிக் கொண்டிருந்த பாறையில் பல அடிகள் நீளம் உள்ள ஒரு பெரிய ஓட்டை தெரிந்தது. அதை எங்கள் இரவைக் கழிக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். அங்கே சிறு கற்கள் எல்லா இடத்திலும் சிதறிக் கிடந்தன. அதை வைத்து வாயிலில் தடுப்பு செய்யலாம். அதனால் அங்கே நின்று அந்த இடத்தை அவளிடம் காட்டினேன். இங்குதான் இரவு நாம் தங்க வேண்டும் என்பதை அவளுக்குப் புரிய வைக்க முயன்று கொண்டிருந்தேன்.
நான் சொன்னதை அவள் புரிந்து கொண்டவுடன் அவள் சம்மதித்தாள் கேஸ்பக்கில் சொல்வதைப் போல. என் துப்பாக்கியைத் தொட்டுத் தன்னைப் பின் தொடரச் சொல்லிவிட்டு ஆற்றை நோக்கிச் சென்றாள். கரையில் ஒரு கணம் நின்றாள். அவள் வாரையும் கத்தியையும் கழற்றித் தன் பக்கத்தில் கீழே போட்டாள். அதைத் தொடர்ந்து அவளது ஆடையின் கீழ் புறத்தைக் காலில் மாட்டி இருந்த உலோகப் பட்டியில் இருந்து விடுவித்தாள். அது அவளது இடது தோள்பட்டையில் இருந்து சட்டென்று நழுவித் தரையில் விழுந்தது. அது அவ்வளவு இயற்கையாக சாதாரணமாக வேகமாக நடந்தது. அதைப் பார்த்து நான் நீரில் இருந்து நிலத்தில் குதித்த மீனைப் போல் துள்ளினேன். என்னைத் திரும்பிப் பார்த்து ஒரு புன்னகையை வீசி விட்டு ஆற்றில் குதித்தாள். அங்கு அவள் குளித்தாள் நான் காவல் காத்துக் கொண்டிருந்தேன். ஐந்து பத்து நிமிடங்களில் அவள் திரும்பி வந்தாள். அப்போது அவளது அழகான வெண்மையான மென்மையான தேகம் பளிச்சென்று மின்னியது. துவட்டிக் கொள்ள எதுவும் இல்லாததைப் பற்றிய கவலையே இல்லாமல் தன் உடையை அணிந்து கொண்டாள். என்னைப் பொறுத்த வரையில் அது தேவையானதாக இருந்திருக்கலாம் ஆனால் அவள் அதைப் பற்றிக் கவலைப் படவே இல்லை.
இரவு வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரமே இருந்தது. நான் மிகவும் களைத்துப் போயிருந்ததால் நான் கால் மைல் தூரம் திரும்பிப் போய் ஒரு சின்னப் புல் வெளியை அடைந்தேன். அங்குதான் கொஞ்ச நேரத்துக்கு முன் மறிமான் மற்றும் சிறு குதிரைகளைப் பார்த்தோம். அங்கே ஒரு சிறு மானைச் சுட்டு வீழ்த்தினேன். குண்டுச் சத்தம் கேட்டவுடன் மற்ற விலங்குகள் தெறித்துக் காட்டிற்குள் ஓடின. ஆனால் அங்கிருந்த இறைச்சி உண்ணும் விலங்குகளுக்கு அது கொண்டாட்டமாகி விட்டது. அவைகள் மேல் பாய்ந்தன.
என் வேட்டைக் கத்தியை எடுத்து அதன் பின் கால்களில் இருந்து மாமிசத்தை வெட்டி எடுத்தேன். அதன் பின் குகைக்குத் திரும்பி விட்டேன். அங்கே விழுந்து கிடந்த மரச் சுள்ளிகளைப் பொறுக்கினேன். அஜோர் எனக்கு உதவி செய்தாள். தீ மூட்டுவதற்கு முன் கற்களை வைத்து தடுப்பு செய்து கொண்டேன். இரவு விலங்குகளிடம் இருந்து காப்பதற்காக.
நான் தீக்குச்சியை வைத்து தீப்பற்ற வைக்க முயன்ற போது அஜோரின் முகத்தில் கண்ட அந்த உணர்ச்சியை என்றும் மறக்க முடியாது. எந்த ஒரு மனிதனின் முகத்திலும் அவ்வளவு ஆச்சர்யங்களை விதைக்கும் இறைவனின் மர்மமான விளையாட்டுக்களைக் கண்டு ரசிக்கும் அஜோரின் முகத்தில் பரவும் அந்த உணர்ச்சிகள் கண்டு. அஜோருக்கு நவீன காலத்திய நெருப்புப் பற்ற வைக்கும் முறை பற்றித் தெரியாதென்பது நன்கு விளங்குகிறது. எனது கைத் துப்பாக்கியும் சுழல் துப்பாக்கியும் மட்டுமே அதிசயங்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தாள். ஆனால் இந்தச் சிறு குச்சிகளின் மாய உரசல் நெருப்பு உண்டாக்குகிறது என்பதும் இன்னொரு அதிசயம்தான்.
கறி அந்த நெருப்பில் வெந்து கொண்டிருந்த போது அஜோரும் நானும் மீண்டும் பேச முயற்சி செய்தோம். இருந்தாலும் நிறைய சைகைகளும் ஒலிகளும் மட்டுமே எழுப்பியபடி இருந்ததால் பேச்சு அவ்வளவு சுவாரசியமாக இல்லை. அதன் பின் அஜோர் மிகுந்த ஆர்வத்தோடு எனக்கு அவளது மொழியைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தாள். அவள் போலுக்கள் பயன்படுத்துவது போன்ற மிக எளிமையான கேஸ்பக்கின், அல்லது உலகின் என்று கூட சொல்லலாம், முதல் மொழியைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தாள். அது மிகவும் சிரமம் என்று சொல்லிவிட முடியாது. அவளுக்கு எனது மொழி தெரியாதது ஒரு பிரச்சினை என்றாலும் அவள் கற்றுக் கொடுக்கும் விதம் மிகவும் அருமையாக இருந்தது. அவள் மிகுந்த நுண்ணறிவு படைத்தவளாக இருந்தாள்.
நாங்கள் சாப்பிட்டு முடித்தவுடன் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் இன்னும் சில கட்டைகளைப் போட்டேன் நெருப்பு அணைந்து விடாமல் இருக்க. மேலும் காட்டு விலங்குகள் அந்த நெருப்பைத் தாண்டி வராமல் பாதுகாப்பாகவும் இருக்கும். அதற்கு முன் இருவரும் அமர்ந்து கொண்டோம், அஜோர் தன் பாடத்தைத் தொடர்ந்தாள். கேஸ்பக்கின் உயிரினங்கள் தங்களது வினோத ஒலிகளைத் தொடர்ந்து கொண்டிருந்தன. புலிகள் சிறுத்தைகள் சிங்கங்களின் உறுமல் முனகல் சத்தங்கள், நரிகள் ஓநாய்கள் காட்டு நாய்களின் குரைப்பு ஊளைச் சத்தங்கள், பிடிபட்ட உயிர்களின் கிறீச்சிடல்கள் அதைப் பிடித்த பெரிய ஊர்வனவற்றின் சீற்றங்கள் எல்லாம் கேட்டன. மனிதனின் ஒலிகள் மட்டும் அமைதியாய் இருந்தன.
அனைத்து திசைகளில் இருந்தும் இந்தக் கொடூரமான கச்சேரிகள் ஏற்ற இறக்கங்களுடன் நடந்து கொண்டிருக்கும் போது திடீரென்று அதிகரிக்கும் சப்தங்கள் ஒரு கணம் இந்த பூமியையே புரட்டிப் போட்டு விடும். நான் என் பாடத்திலும் ஆசிரியரிடமும் மிகுந்த கவனத்தோடு இருந்ததால் அந்த ஒலிகள் ஒரு கணம் முழுவதும் மறைந்து பேரமைதியாகி விடுவது போல் தோன்றும் மறு கணம் அதைப் பற்றிய பேராச்சர்யம் எழும். அந்த அழகிய பெண்ணின் பேச்சும் முகமும் என் மேல் அதிக ஆர்வத்தோடு சாயும் சில வார்த்தைகளின் அர்த்தத்தை விவரிக்கும் போதும் சரி செய்யும் போதும். எனது ஐம்புலன்களும் அப்படியே அதில் லயித்துக் கிடக்கும். நெருப்பின் ஒளி உயிரோட்டமுள்ள அவளது அழகிய கண்களில் பட்டு மின்ன வைத்தது. அவளது கைகளின் மெல்லிய அசைவுகளுக்கு அந்த ஒளி புத்துயிர் ஊட்டியது. வெண்ணிறப் பற்களின் மேல் பட்டுத் தெறித்தது. உடலில் அணிந்திருந்த தங்க ஆபரணங்களை மினுக்கியது. மென்மையான நேர்த்தியான தோலின் மேல் பட்டுப் பளபளப்பாக்கியது. மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டிய ஆர்வத்தை விட அந்த விலங்கின் அழகின் மேல் அதீத ஆர்வம் கொண்டு விட்டேன் என்று பயமாக இருந்தது. எப்படி இருந்தாலும் நான் அன்றிரவு நிறையக் கற்றுக் கொண்டு விட்டேன். அதில் ஒரு பகுதி புதிய மொழியறிவாக இல்லாவிட்டாலும்.
நான் எப்படியும் கேஸ்பக்கின் மொழியை விரைந்து கற்று விட வேண்டுமென்பதில் அஜோர் மிகுந்த உறுதியோடு இருந்தாள். உலகின் முதல் பெண்ணிடம் தோன்றி வழி வழியாக அனைத்துப் பெண்களிடமும் பரவி வந்த ஒரு பெண்ணின் இயல்பில் ஒன்றைப் பார்த்ததாக எண்ணினேன் அவளது விருப்பத்தில், அது ஆர்வம். நான் அவளது மொழியைப் பேசிவிட வேண்டும் என்று நினைத்து விட்டாள். என் மேல் இருந்த ஒரு ஆர்வத்தை நிறைவு செய்வதற்காக. அந்த ஆர்வம் அவளிடம் வெடிக்கும் அளவு நிரம்பி விட்டது என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அவள் ஒரு சராசரியான உயிரோட்டமுள்ள கேள்விக்குறி. அவளிடம் கேள்விக் கணைகள் ததும்பி இருந்தன. நான் பேசாவிட்டால் அதைத் தீர்க்க முடியாது. அவளது கண்கள் ஆர்வத்தால் மின்னின. அவளது கைகள் செறிவான சைகைகளால் வேகமாக இயங்கின. அவளது சிறிய நாக்கு காலத்துடன் போட்டியிட்டது. எவ்வளவோ முயன்றும் பலனில்லை. கேஸ்பக் மொழியில் மனிதன் மரம் மலை சிங்கம் இது போன்ற பல வார்த்தைகளைச் சரியாகச் சொல்ல முடிந்தது. ஆனால் அந்த அகராதி என்னவோ ஏமாற்றமளிக்கக் கூடியதாய் இருந்தது. அது உரையாடலுக்கு உதவவில்லை. அதனால் கோபம் தலைக்கேறி உள்ளங்கையை மடக்கித் தன்னால் முடிந்தளவு என் நெஞ்சில் பலமுறை ஓங்கிக் குத்தினாள். அதன் பின் உட்கார்ந்து சிரிக்க ஆரம்பித்து விடுவாள் நிலைமையை உணர்ந்து.
அவள் எனக்குச் சில வினைச் சொற்களைக் கற்றுக் கொடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள் அவளே அந்தச் செயலைச் செய்து காண்பித்து அந்த வார்த்தையையும் திரும்பத் திரும்ப உச்சரித்தபடி. நாங்கள் அதில் அவ்வளவு ஈடுபாட்டோடு செய்து கொண்டிருந்ததால் வெளியில் என்ன நடக்கிறது என்பதில் சிறிதும் கவனம் செலுத்தவில்லை. அஜோர் திடீரென்று நிறுத்தி “கஜோர்” என்று கத்தினாள். அவள் அப்போது “ஜூ” என்றால் நிறுத்து என்பதையும் சொல்லிக் கொடுத்தாள். அதனால் அவள் கஜோர் என்று கத்தி நிறுத்தியவுடன் அது எனது பாடத்தின் ஒரு பகுதி என்று எண்ணி விட்டேன். ஒரு கணம் கஜோர் என்றால் கவனமாயிரு என்பதையே மறந்து விட்டேன். அதனால் நானும் ஆவலுடன் திரும்பச் சொன்னேன். ஆனால் அவளது முகத்தில் எழுந்த உணர்ச்சியைப் பார்த்ததும் என்னைத் தாண்டி அது செல்வதைப் பார்த்ததும் அவள் குகை வாயிலைக் கை காட்டியதும் நான் சட்டென்று திரும்பினேன். எதோ ஒரு முகம் அந்தச் சிறிய பொந்தின் வழியாக இரவினூடே எட்டிப் பார்த்தது. அது ஒரு பிரமாண்டமான கொடுமையான கோபமான கரடியின் முகம். அரிஸோனாவில் உள்ள வெள்ளை மலைகளில் வெள்ளித்தடங்களில் நடந்து போயிருக்கிறேன். அப்போது அதுதான் மிகப்பெரிய கொடூரமான விலங்கு என்று எண்ணி இருந்தேன். ஆனால் இந்த மோசமான விலங்கின் முகத்தைப் பார்க்கும் போது நான் இதுவரை கண்டிருந்த மிகப் பெரிய விலங்கின் தோற்றம் புதிய நாட்டின் நாய் போலாகி விட்டது.
எங்கள் நெருப்பு குகைக்கு உள்ளேயே இருந்தது. அதில் இருந்து வெளியேறும் புகை கற்குவியலுக்கு நடுவில் இருந்த ஓட்டைகள் வழியாக மலைச் சரிவில் வெளியேறியது. குகையின் வாயிலில் சில பெரிய கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த போதிலும் அது முழுவதும் வாயிலை மூடவில்லை. இருந்தாலும் அதன் வழியாக பெரிய மிருகங்கள் வந்து விட முடியாது. அதனால் நான் அந்த நெருப்பை மட்டுமே பெரிதும் நம்பி இருந்தேன். ஏனெனில் அதைத் தாண்டி இரவில் உலவும் மாமிசம் உண்ணும் விலங்குகள் அருகில் வராது. அதில் இப்போது ஒரு சிறிய தவறு நடந்து விட்டது. அந்தப் பெரிய கரடியின் மூக்கு நெருப்புக்கு ஒரு அடி தூரத்தில்தான் இருந்தது. அந்த நெருப்பும் இப்பொழுது குறைந்து விட்டது நான் பாடத்தில் மிகவும் கவனம் செலுத்தியபடியால் அதில் கட்டைகளை இட மறந்து விட்டேன்.
அஜோர் தன் கத்தியைச் சுழற்றினாள். எனது துப்பாக்கியின் மீது கை காண்பித்தாள். அதே நேரத்தில் அவளது பேச்சில் எந்தவித பயமோ நடுக்கமோ தோன்றவில்லை. மிகவும் சாதாரணமாகப் பேசினாள். அந்தக் கரடியின் மீது சுடுமாறு வற்புறுத்திக் கொண்டிருந்தாள் என்று எண்ணுகிறேன். ஆனால் வேறு வழி இல்லாதபோது பயன்படுத்த வேண்டும் என்பதில் நான் குறியாய் இருந்தேன். ஏனெனில் எனது பலம் வாய்ந்த குண்டுகள் கூட அதை இப்போது கோபப்படுத்தி விடும் அளவுதான் செயல்படும். அது உள்ளே வந்து விடும் வாய்ப்புதான் அதிகமாகி விடும்.
சுடாமல் நான் மேலும் சில கட்டைகளை எடுத்து வந்து நெருப்பில் போட்டேன். புகையும் நெருப்பும் அதன் முகத்தில் பட்டபோது அது சற்றுப் பின் வாங்கியது மிகவும் பயங்கரமாக உறுமியபடியே. இன்னும் என்னால் அந்த இரு அருவருப்பான வெளிச்சப் புள்ளிகள் வெளியில் கும்மிருட்டில் மின்னியதைப் பார்க்க முடிந்தது. அதன் பயம் கிளப்பும் உறுமல்கள் தொடர்ந்த படியே இருந்தது. சில நேரம் அது எங்கள் சிறிய குகையைப் பார்த்தபடியே நின்றிருந்தது. நான் எனது மூளையைக் கசக்கியபடி இருந்தேன் வேறு எதாவது செய்து அதை விரட்டி விட முடியுமா என்று. அது ஒரு முடிவுடன் எங்களை நோக்கி வந்தால் வாசலில் இருக்கும் கற்கள் அட்டைப் பெட்டிகள் போல் எளிதில் உடைந்து கரடி நேராக எங்கள் மேல் பாய்ந்து விடும்.
அஜோருக்கு என்னளவு துப்பாக்கியின் திறன் பற்றிய அறிவு இல்லாததால் அதன் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்துக் கரடியைச் சுடுவதற்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தாள். ஆனால் எனக்கு மட்டுமே தெரியும் ஒரே குண்டில் அதை நிறுத்த முடியாது என்று. அதைக் கோபப்படுத்தி விடும் என்பது மட்டும் 100 சதம் உண்மை. அதனால் காத்து இருந்தேன், அந்த காத்திருத்தல் பல யுகங்கள் போல் இருந்தது, அந்தக் கொடூரமான வெளிச்சக் கண்கள் எங்களைக் கவனிப்பதைப் பார்த்தபடியே. நாங்கள் நடுங்கி உட்கார்ந்திருந்த குகையின் மலையையே அதிர வைக்கும் அளவு பூமியின் அடியில் இருந்து எழுவது போன்று அதிகரித்தபடியே எழும் கூக்குரல்கள் கேட்டபடி இருந்தன. இறுதியில் அந்த விலங்கு திரும்பவும் எங்கள் குகை நோக்கி வந்தது. கட்டைகள் அதிகமிட்டு நன்றாகக் கொழுந்து விட்டு எரியும் நெருப்பு கூட அதை ஒன்றும் செய்யவில்லை இப்போது. நாங்கள்தான் கிட்டத்தட்ட வெந்து விட்டோம் உள்ளிருந்து. அது ஓட்டைக்கு மிக அருகில் வந்து தனது வாயைப் பிளந்தது. ஒரு கணம் நின்று பின் வாங்கியது. நான் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். அது எங்களை விடுத்தது வேறு எதாவது எளிதில் கிடைக்கும் உணவை வேட்டையாடலாம் என்றெண்ணிச் சென்று விட்டது. நெருப்பு அதற்கு மிக அதிகம் ஆகி விட்டது என்று எண்ணுகிறேன்.
ஆனால் எனது ஆனந்தம் சிறு நேரம்தான் நிலைத்தது. ஒரு நிமிடம் கழித்து என் இதயம் அப்படியே நின்று விட்டது. ஏனெனில் அதன் பிரமாண்டமான பாதம் குகை வாயிலில் அசைந்தது. அதன் பாதம் மிகப்பெரிய வடைச் சட்டி போல் இருந்தது. மெதுவாக அதன் பாதம் வெளியில் இருந்த பாதி வாயிலை மூடியிருந்த பெரிய கல்லை ஆட்டியது. தள்ளியும் இழுத்தும் பார்த்தது. அதன் பின் இழுத்து ஒரு பக்கமாகத் தள்ளியது. திரும்பவும் அதன் தலை தெரிந்தது. இப்பொழுது குகைக்குள் கொஞ்ச தூரம் முன்னேறி இருந்தது. இருந்தாலும் அதன் பெரிய தோள்கள் குகைக்குள் வர முடியவில்லை. அஜோர் எனதருகில் எனது தோள்பட்டையை உரசியபடி வந்தாள். அவளது உடம்பில் சிறு நடுக்கம் பரவியது போல் எனக்குத் தோன்றியது. அதைத் தவிர வேறு எதுவும் பயம் இருப்பது போல் தெரியவில்லை. தன்னிச்சையாக எனது இடது கையை எடுத்து அவளது தோள்பட்டையை அணைத்து இறுக்கிக் கொண்டேன். அவளது பயத்தைப் போக்கும் எண்ணம்தான் அதில் மேலோங்கி இருந்தது தவிர மோகத்தினால் அல்ல. இருந்தாலும் சாவின் விளிம்பில் இருக்கும் போது கூட அந்தத் தொடு உணர்ச்சி என்னுள் கிளர்ச்சி ஏற்படுத்தியது. அதன் பின் அவளை விட்டு விட்டு எனது துப்பாக்கியை எடுத்தேன். அதற்குப் பிறகும் நேரம் கடத்துவது வீண் என்று முடிவெடுத்தேன். என்னால் முடிந்தளவு சுட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றியது அது எங்களை நெருங்குவதற்குள். ஏற்கெனவே அது இரண்டாவது பாறையையும் பெயர்த்து விட்டது. இப்பொழுது உண்டான ஓட்டையில் அதன் முழு உருவத்தையும் உள்ளே நுழைத்து விட முயற்சி செய்தது.
அதன் இரு கண்களுக்கு மத்தியில் கவனமாகக் குறி வைத்தேன். எனது வலது கை விரல்கள் அழுத்தமாக மடங்கின சுட்டு விரல் தானாக பின்னால் சென்றது கைத் தசைகளின் செயலினால். குறி தவறாமல் குண்டு தன் இலக்கை அடைந்தது. துப்பாக்கி சிறிதும் ஆடி விடாமல் இருக்க என் மூச்சை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன். நான் நிலையாக அமைதியாக பயிற்சியின் போது சுடுவது போல் நின்றேன். சுடுவதற்கு முன்பே அது சரியாக இருக்கும் என்று என் மனக்கண்ணில் தெரிந்தது. எனக்குத் தெரியும் நான் இலக்கு தவறவில்லை என்பது. கரடி முன்னேறி வரும்போது இன்னொரு இலக்கில்லாத குண்டின் மேல் விசை அழுத்தியது.
அதே நேரத்தில் முற்று முழுதான நரக சத்தம் இல்லாத ஒரு ஒலி கேட்டது. கரடி தொடர்ச்சியான உறுமல்கள் எழுப்பிய வண்ணம் இருந்தது. அதன் இரைச்சலும் ஆற்றலும் இது வரை இல்லாத அளவு இருந்தது. மேலும் குகையில் இருந்தும் பின் வாங்கியது. எதனால் அப்படி நடந்தது என்பதை ஒரு கணம் என்னால் அறிய முடியவில்லை அதன் இரை கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் போது ஏன் அந்தக் கரடி சட்டென்று பின் வாங்கியது.
எதுவும் செய்யாத துப்பாக்கி விசையை வெறுமனே அழுத்தியதற்கு ஏன் இப்படி பயந்து பின் வாங்க வேண்டும் என்பதே அற்பத்தனமாக இருந்தது. ஆனால் அதையெல்லாம் ஆராய்ச்சி செய்வதற்கு எங்களுக்கு நேரமில்லை. அதன் பின் முனகல் உறுமல் ஒலிகளுக்கு நடுவில் பெரிய உடல் தரையில் மோதும் ஒலியும் கேட்டது நிலம் சிறிது ஆடும் வரை. அந்தக் கரடியின் பின் புறம் இருந்து வேறு எதோ பெரிய விலங்கு தாக்கி இருக்க வேண்டும். அவை இரண்டும் தங்களுக்குள் யார் பெரியவன் என்ற சண்டையில் ஈடுபட்டிருக்க வேண்டும். சிறிது இடைவெளி விட்டு, அந்த நேரங்களில் போட்டியாளர்களின் பலத்த மூச்சு விடும் சத்தம் கேட்டது, சண்டை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தொடர்ந்தது. அதன் பின் சத்தம் மெது மெதுவாகக் குறைந்து ஒரு கட்டத்தில் நின்றே போனது.
சைகைகள் மற்றும் எங்களுக்குப் புரிந்த பொதுவான வார்த்தைகளையும் சேர்த்து அஜோரின் யோசனைப்படி அந்த நெருப்பை வாசல் வரை தள்ளி வைத்து விட்டேன். அதனால் விலங்குகள் நெருப்பை நேரடியாகக் கடந்துதான் உள்ளே நுழைய முடியும். அதன் பின் அந்தச் சண்டையில் ஜெயித்த விலங்கு வந்து தனது பரிசை எடுத்துச் செல்வதற்காகக் காத்திருந்தோம். வெகு நேரம் வாசலில் கண்களை ஒட்டிக் காத்திருந்தும் வேறெந்த விலங்கும் வரவில்லை.
இறுதியில் அஜோரைத் தூங்குமாறு சைகை செய்தேன். அவளுக்கு உறக்கம் தேவை என்பது புரிந்தது. அவளுக்குப் பாதுகாப்பாக நான் விழித்துக் கொண்டிருந்தேன் மறுநாள் காலை வரை. அவள் எழுந்ததும் நான் உறங்க வேண்டும் என்று வற்புறுத்தினாள். சிரித்துக் கொண்டே அவளது கத்தியை எடுத்து வேகமாக என்னை நோக்கி வந்தாள்.
– தொடரும்…