காற்றில் படபடத்த ஒரு காசோலை!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 15, 2018
பார்வையிட்டோர்: 5,986 
 
 

பஞ்சாயத்துத் தலைவர் முனியாண்டி அனல் பறக்கும் விழிகளுடன் நடுநாயகமாக வீற்றிருக்க, அவரைச் சுற்றி அமர்ந்திருந்த ஏழெட்டு மனிதர்கள், தலைவரின் கோபத்தை எப்படித் தணிப்பது என்று புரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தனர்.

“ஏங்க சுப்பையா, அந்தக் கெழவன் என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கான்? நாம யாருன்னு இன்னும் அவனுக்கு சரியாப் புரியலை போல!” என்று உறுமினார் தலைவர்.

“தல, நீங்க ஒண்ணும் கோபப் படாதீங்க. ஊர்ல ரொம்பப் பயலுவ தெனாவட்டாத்தான் திரியறானுவ. அதுல இந்தக் கெழவரும் ஒண்ணு. நம்மையெல்லாம் விரோதிச்சுகிட்டு ஒரு ஆசாமி இந்த ஊருக்குள்ள நடமாடிட முடியுமா?” என்றார் சுப்பையா.

“ஊருக்குள்ள ஒத்தை ரைஸ் மில்லு வெச்சிருக்கிற திமிரு. நாம எல்லாம் நெல்லு அரைக்க அவுருகிட்டத்தான் போவணும். இல்லைன்னா இருவது கிலோ மீட்டர் தாண்டி அகரம்சேரி ஐயர் மில்லுக்குத்தான் போகணும்கிற கர்வம் அந்தக் கெழவருக்கு! சரியான கஞ்சனாம் அந்த ஆளு! அதான் நம்ம பேச்சை மதிக்க மாட்டேங்கறாரு.”

“அது மட்டுமில்லீங்கோ தலைவரே, அவரோட பையன் அமெரிக்காவுல கம்பியூட்டர் கம்பெனியில வேலை பாத்து லச்சக் கணக்குல சம்பாதிக்கிறானாம்ல. அப்பிடியிருக்கும்போது கெழவர் இந்த ஊருப் பெரிய மனுசங்களை எப்பிடி மதிப்பார், சொல்லுங்க?” என்றார் பெரியசாமி.

“வர்ற தைப் பொங்கலுக்குள்ளாற வேலையை முடிச்சு கும்பாபிஷேகம் செஞ்சுடலாம்னா, ஒரு பய காசை அவுக்க மாட்டேங்கறானுங்களே, அட அவிங்கதான் சரியான வருமானம் இல்லாதவனுங்க. இந்த மில்லுக்காரக் கெழவருக்கு என்ன வந்துச்சு? ஊருல உள்ள ரெண்டு மூணு பணக்கார ஆளுங்கள்ல ஓரு ஆளு அவரு. ஊருப் பஞ்சாயத்துத் தலைவரு வர்றாரு, துணைத் தலைவரு வர்றாரு. ஊரு முக்கியஸ்தருங்கள்ளாம் வந்து நிதி கேக்கறாங்களேன்னு ஒரு பயம் வேணாம்? சரி, பணம் கொடுக்காத ஆளுக வீட்டுக்கு இன்னிக்கு ஒரு ரவுண்டு போயிக் கேட்டுட்டு வருவோம். முதல்ல மில்லுக்காரக் கெழவருகிட்டே போயி நன்கொடை கேப்போம். கொஞ்சம் கறாராக் கேக்கணும்போ! ”

“இது சரியான ரோசனை. எல்லோரும் வேற கூடியிருக்கோம். போயி கொஞ்சம் மெரட்டுனாப்புலப் பேசி, ஆயிரம் ரெண்டாயிரத்தைக் கறந்துகிட்டு வந்துடுவோம். வாங்க!” என்றார்
சுப்பையா.

துண்டை உதறித் தோளில் போட்டபடி தலைவர் எழுந்து முன்செல்ல, அனைவரும் அவரைப் பின்தொடர்ந்தனர். சுப்பையா நிதி வசூல் நோட்டைக் கையில் எடுத்துக் கொண்டார். வரவு செலவுக் கணக்கு விவகாரம் சுப்பையாவின் பொறுப்பு. கீழத் தெருக்கோடியில் ரைஸ் மில்லை ஒட்டிய வீடு. கம்பி போட்டுப் பாதுகாக்கப்பட்ட பெரியதும் சின்னதுமான இரு திண்ணைகள்… நாகரீகமாக டைல்ஸ் போட்டுத் தரை பள பளவென்று காட்சியளித்தது. வாசலில் இந்தக் கூட்டம் போனதும், “ஐயா! ஐயா! வீட்டுல யாருங்க? ஊர்ப் பெரிய மனுசங்க வந்திருக்காங்க..” என்று ஒருவர் குரல் கொடுத்தார்.

உள்ளிருந்து ஓர் ஒல்லியான முதிடீநுவர், செக்கச் செவந்த உடலில் வேட்டி கட்டி, திறந்த மேலுடம்பை ஒரு பளீர் வெள்ளைத் துண்டால் மூடிய கோலத்தில் தூய வெண்மை நிறத்தில் தலையில் சிலும்பி நிற்கும் கேசத்துடன், மூக்குக் கண்ணாடி அணிந்த கோலத்தில் வெளியே வந்தார். கையில் ஒரு வெள்ளி வெற்றிலைப் பெட்டி இருந்தது.

சின்னத் திண்ணையில் உட்கார்ந்த அவர், எல்லோரும் “உட்காருங்க. என்ன விஷயம்? ஊரே கூடி என்னைத் தேடி வந்திருக்கீங்கன்னா பெரிய விஷடீநுமாத்தான் இருக்கும்? சொல்லுங்க!” என்றபடி, வெற்றிலைப் பெட்டியைத் திறந்தார்.

கைநிறைய சீவலை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு வெற்றிலையை எடுத்து வேட்டியில் அழுந்தத் துடைத்தார். பின், அதன் நடு முதுகில் சுண்ணாம்பைத் தடவி, காம்பை மேலிருந்து கீழாகக் கிழித்தார். பின் அதைச் சுருட்டி வாயில் திணிக்கத் தொடங்கினார். பன்னீர்ப் புகையிலையை உள்ளங்கையில் போட்டு அதைக் கசக்கி வாயில் போட, அந்த இடம் பூராவும் பன்னீர்ப் புகையிலை மணம் கமழத் தொடங்கியது.

தலைவர் சுப்பையாவைப் பார்க்க, சுப்பையா முதியவரிடம் பேசத் தொடங்கினார். “ஐயா மில்லுக் காரவுகளே! இந்தத் தாயம்பாளையம் கிராமத்துல இருக்குற கற்பக விநாயகர் கோயில் ஆயிரம் வருஷத்துக்கு முந்தி ஒரு முனிவரால் கட்டப்பட்டதுன்னு ஒங்களுக்கே தெரியும். அழகான விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன், நடுவில் சூரிய பகவான் சற்று உயரத்திலும் ஏனைய நவக்கிரகச் சிலைகள் சூரியனைச் சுற்றி வட்டமாகவும் அமைந்துள்ள நவக்கிரக மண்டபம், வள்ளி தெடீநுவானை சமேத சுப்பிரமணியர், சிவலிங்கம், அம்பிகை, பிராகாரம் சுற்றி வர்றப்ப இருக்கிற செவிட்டு சாமி எல்லாச் சிலைகளுமே அழகு கொஞ்சற சிலைகள்! கோயில் ரொம்பப் பழசானதால சிதிலமாயிட்டுது. சுவரையெல்லாம் இடிச்சுபுட்டுப் புதுசாக் கட்டி, கோபுரத்தையும் இன்னும் உசரமாக்கிடணும்னு நம்ம சாதி செனமெல்லாம் அபிப்ராயப் பட்டு ஒரு முடிவை எடுத்தோம். ஊர்ல ஒசந்த சாதியும் வசதி படைச்ச செனமும் நாமதானே? நம்ம ஆளுங்க பணத்தை வாரிக் கொடுப்பாங்க, பிள்ளையார் கோயிலைக் கட்டிப்புடலாம்னு சாதாரணமா நெனச்சிப் போட்டோம். அது தப்புன்னு இப்பத்தான் தெரியுது. போன வாரம் ஒங்ககிட்டே வந்து இப்ப நாஞ் சொன்னதையெல்லாம் சொல்லி நிதி கேட்டோம். யோசிச்சிச் சொல்றேன்னு ஐயா சொன்னீங்க. இப்ப வந்துருக்கோம். நாங்க அன்னிக்குச் சொன்னதையெல்லாம் மறந்துபுட்டு, எதுக்கு வந்தீங்கன்னு ஐயா கேக்கறீங்க. பஞ்சாயத்துத் தலைவர் அண்ணன் முனியாண்டியே வந்து நிதி கேக்கறப்ப, நீங்களும் ஒங்களைப் போல இருக்கற மத்தவங்களும் ஒரு நல்ல காரியத்துக்கு நிதி கொடுத்தாத்தானேங்க நல்லது?”

மில் ஓனரான முதியவர் எழுந்து சாக்கடையில் வெற்றிலை எச்சிலைத் துப்பினார். “நல்ல காரியம் பண்றீங்க. ஏன் இதுக்குப் பணம் கொடுக்க மாட்டேங்கறாங்க? ஊர்ல ஐயாயிரம் தலைக்கட்டுக்கு மேல இருக்கே. நல்லாப் பண்ணலாமே!” என்றார்.

“ஐயா நீங்க சுலபமாச் சொல்லிப்புட்டீங்க. அந்த ஐயாயிரம் பேர்ல நம்ம ஜனம் பாதித்தானே இருக்காங்க? மீதி மத்த ஜாதியாருங்க. அவங்கவங்களுக்கும் தனித் தனிக் கோயில் இருக்கு.
அவுங்க அங்கே காலம் காலமாக் கும்பிட்டுகிட்டு வர்றர்ங்க. நம்ம சாதிக்காரங்க முழுசாப் பணம் போட்டுக் கோயிலைக் கட்டிப்புட்டால், மத்த சாதியாரு உள்ளே நுழையக் கூடாதுன்னு
சொல்லி வெரட்டிடலாம் பாருங்க… பதினைந்து லட்சம் ரூபா எஸ்டிமேட்டுல திருப்பணியை ஆரம்பிச்சோம். பக்கத்து ஊருகள்ல வசதியா இருக்கற நம்ம சாதி சனங்க நிறைய நிதியை வாரிக் கொடுத்தாங்க. இப்ப, மூணு லட்சத்துல கோபுர வேலை பாக்கி நிக்குதுங்க. தாராபுரத்து கணபதி ஸ்தபதி ரொம்பச் சிக்கனமாத்தான் செலவு வைக்குறாருங்க. ஊருக்குள்ள பலபேரு நம்ம சாதிக் கட்டுமானத்தை மதிக்காம, நிதின்னு போற எங்களைக் கேலி செடீநுயறாங்க. நிதி கொடுக்க மேலியும் கீழயும் பாக்கறாங்க. ஏதோ ஒங்களைப் ,போல வசதி படைச்சவங்க ஆயிரம் ரெண்டாயிரம்னு நிதியை வாரி வழங்கினீங்கன்னா நல்லா இருக்கும்?”

“ஐயையோ, ஆயிரம் ரெண்டாயிரமா?” முதியவர் பதறினார். ரைஸ் மில்லுல மாவு அரைக்கக் கூலியா அஞ்சு ரூபா, பத்து ரூபான்னு கேக்கும்போதே, எல்லோரும் முனகிக்கிட்டே பணத்தைக் கொடுக்கறாங்க. என்கிட்டே அவ்ளோ ரூபா எதிர்பார்க்கிறீங்களே நியாயமா?

“ஐயா அப்படிச் சொல்லப்படாது? அந்தக் கடவுள் ஒங்களுக்கு எந்தக் குறையும் வைக்கலீங்க. நீங்க மனசு வெச்சுக் கணிசமா நிதி போட்டீங்கன்னா, இன்னும் அக்கம் பக்கத்து ஊர்ப் பெரிய மனுசங்ககிட்டே கேட்டு தேவைப்படற நிதியைச் சேர்த்துப் புடுவோமுங்க!”

முதியவர் யோசித்தார். சுப்பையாவின் கையிலிருந்த நிதி வசூல் நோட்டை வாங்கிப் பக்கம் பக்கமாகப் புரட்டினார். எழுந்து உள்ளே போனார்.

தலைவர் முனியாண்டி, சுப்பையாவையும் மற்றவர்களையும் பார்த்தார். “இன்னிக்கு மட்டும் கெழவன் பண்ம் தரலைன்னா, கண்டமேனிக்குத் திட்டிப்புடறதுன்னு இருந்தேம்பா. நம்ம கூட்டத்தைப் பாத்து ஆளு பயந்துடுச்சுன்னு நினைக்கிறேன்..” என்றார்.

ஒருவர் “ஸ்..ஸ். பெரிசு வருது!” என்று அவர்களைப் பேச வேண்டாம் என்று ஜாடை காட்டினார்.

சின்னத் திண்ணையில் உட்கார்ந்த பெரியவர் கையில் வங்கியின் செக் புத்தகம் ஒன்று இருந்தது. அதைப் பிரித்தபடி அவர் சொன்னார்: “வழக்கமா டொனேஷன், நிதின்னு நான் யாருக்கும் பணம் தர்றதில்லை. என்னைக் கஞ்சன், திமிர் பிடிச்சவன்னு கூடச் சில பேரு சொல்லுவாங்க,. அதுபத்தியெல்லாம் நான் கவலைப் படறதில்லை. ஆனா, ஊர்க்காரங்க என்னைத் தேடி வந்துட்டீங்க. ஏதோ என்னால முடிஞ்ச்தைத் தர்றேன். குறை சொல்லாம வாங்கிட்டுப் போங்க. உம், யார் பேருக்கு செக் எழுதட்டும்?” என்று கேட்க, “எஸ். சுப்பையான்னு எழுதுங்க அவருதான் திருப்பணிக் கமிட்டியின் பொருளாளர்…” என்றார் பெரியசாமி.

செக்கில் தொகை எழுதிக் கையெழுத்துப் போட்டார் பெரியவர். பிறகு அந்த ஒற்றைச் செக்கைக் கிழித்து பெரிய திண்ணையில் அமர்ந்திருந்த ஊரார் முன் வைத்தார். அந்தக் காசோலையில் எழுதப்பட்டிருந்த தொகையைப் பார்த்த சுப்பையா நடுங்கிப் போனார்.

வெறும் இருநூறு அல்லது முன்னூறு ரூபாடீநு எழுதுவார் என்று நினைத்திருந்த அவர் மூன்று லட்சம் ரூபாடீநுக்குக் காசோலை எழுதப்பட்டிருந்தது கண்டு அதிர்ந்தார்.

“ஐயா!” என்று தழுதழுத்த குரலில் கூறியபடி, பெரியவரைக் கையெடுத்துக் கும்பிட்டார்.

“பெரியவர், ஒரு நிமிஷம்!” என்றார். காசோலையை எடுக்கப் போன சுப்பையா, பெரியவரை நிமிர்ந்து பார்த்தார்.

“உங்களுக்கு இன்னும் தேவைப்படும் தொகை மூன்று லட்சம் ரூபாடீநுனு சொன்னீங்க. நானே மூணு லட்சத்தையும் கொடுத்துட்டேன். ஆனா ஒரு கண்டிஷன். கடல், ஆகாயம், ஆலயம் எதையும் யாரும் தங்களுடையதுன்னு சொந்தம் கொண்டாடக்கூடாது. கோயிலைப் புதுப்பிச்சுக் கட்டறீங்க. சரி. ஆயிரம் வருஷத்துக்கு முந்தி ஒரு முனிவர் இன்ன ஜாதிக்காரங்களுக்குன்னா இந்தக் கோயிலைக் கட்டினார்? ஜாதிக்கு ஒரு கோயில்னு உரிமை கொண்டாடவோ, எங்க கோயிலுக்கு வேற சாதிக்காரன் வரக்கூடாதுன்னு தடுக்கவோ யாருக்கும் உரிமை கெடையாது. ஏழை, பணக்காரன், இந்த ஜாதிக்காரன், அந்த ஜாதிக்காரன்னு யாரும் மனப்பூர்வமா ஒற்றை ரூபாய் நிதியாகக் கொடுத்தாக்கூட அதை வாங்கணும். அதே மாதிரி, கோயில் கட்டி முடிச்சதும் எல்லா ஜாதி, எல்லா மதத்தைச் சேர்ந்தவங்களும் கோயிலுக்குள்ளே வர்றதை யாரும் தடுக்கக் கூடாது. விருப்பப்பட்டு ஆலயத்துக்குள்ளே உங்க நடைமுறையை மதிச்சு வருகிற மனுஷங்களைத் தடுக்கக் கூடாது. இந்த நிபந்தனைகளை ஏத்துக்கறதானால், இந்த செக்கைத் தாராளமாக நீங்க எடுத்துக்கிட்டுப் போகலாம். இது மட்டுமல்ல, கும்பாபிஷேகச் செலவுக்குத் தேவைப்படும் பணதையும் நான் என் கையிலிருந்து தரத் தயாரா இருக்கேன்” என்று கூறிய பெரியவர், இரண்டாவது தடவையாகப் போடுவதற்கு வெற்றிலையில் சுண்ணாம்பு தடவ ஆரம்பித்தார்.

வந்திருந்த ஊர்ப் பெரிய மனிதர்கள் பேச்சற்று சிலை போல் அமர்ந்திருக்க, தரையில் கிடந்த அந்தக் காசோலை காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது.

(ஆனந்த விகடன் வார இதழ்)

Print Friendly, PDF & Email

1 thought on “காற்றில் படபடத்த ஒரு காசோலை!

  1. ஐயா!,
    கதைக் களம், நடை, கதையின் கரு அத்தனையும் சூப்பர். படிக்கும்போது இப்படிப்பட்ட முற்போக்கு சிந்தனைகளை கொண்ட செல்வந்தர்கள் இங்கே இருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது. தி.தா.நாராயணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *