கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 8, 2024
பார்வையிட்டோர்: 907 
 
 

3. பூர்வீக விலங்குணர்ச்சி | 4. தலைமைப்பதவி | 5. வாரும் வழியும்

டேய், நான் சொன்னதெப்படி? அந்த பக் ரெட்டைப் பிசாசுதானே?”

ஸ்பிட்ஸ் மறைந்ததையும், பக் உடம்பெல்லாம் காயமுற்றிருப்பதையும் கண்ட பிரான்சுவா இவ்வாறு மறு நாட் காலையில் கூறினான்; பக்கைத் தீக்கருகில் பிடித்துச் சென்று அதன் காயங்களை கவனித்தான்.

பக்கின் மேலே தென்பட்ட படுகாயங்களை நோக்கிய பெரோல்ட், ஸ்பிட்ஸ் சரியான சண்டை போட்டிருக்கிறது” என்றான்.

“பக் மட்டும் சம்மா விட்டதா? ரெட்டிப்புச்சண்டை போட்டிருக்கிறது. சரி. இனி நாம் வேகமாகச் செல்லலாம். ஸ்பிட்ஸ் போய்விட்டது. அதனால் தொல்லையும் போச்சு” என்றான் பிரான்சுவா.

சறுக்குவண்டியிலே பெரோல்ட் கூடாரச்சாமான்களை ஏற்றிக் கொண்டிருந்தான். பிரான்சுவா நாய்களுக்குச் சேணமிட்டு வண்டியில் பூட்டத்தொடங்கினான். தலைமைப்பதவியில் ஸ்பிட்ஸ் நிற்கக்கூடிய இடத்திற்கு ஓடி பக் நின்றது. அதைக் கவனியாமல் அந்த இடத்திற்கு பிரான்சுவா சோலெக்ஸைக்கொண்டு வந்தான். சோலெக்ஸ்தான் இனித் தலைமைப்பதவிக்கு மிகவும் ஏற்றது என்பது அவன் எண்ணம். பக் கோபத்தோடு சோலெக்ஸின் மேல் பாய்ந்து அதை விரட்டிவிட்டு முதலிடத்தில் நின்றது.

பிரான்சுவாகளிப்போடு தொடையைத் தட்டிக்கொண்டு, ஆஹா, அப்படியா? ஸ்பிட்ஸைக் கொன்றுவிட்டதால் அதன் இடம் உனக்கு வேணுமென்ற நினைப்பா?” என்று கூவினான்.

“உஸ், எட்டப்போ ” என்று அவன் அதட்டினான்; ஆனால் பக் அசையவில்லை. அதன் கழுத்தைப் பிடித்து அவன் இழுத்துக் கொண்டு போனான். பக் உறுமி அச்சுறுத்த முயன்றது. ஆனால், பிரான்சுவா அதை ஒரு புறமாக இழுத்துவிட்டு விட்டு சோலெக்ஸை முதலிடத்திற்குக் கொண்டு போனான். வயது முதிர்ந்த அந்த நாய்க்கு அது விருப்பமில்லை. பக்கிடம் அதற்குள்ள பயத்தை அது வெளிப்படையாகக் காட்டிற்று. பிரான்சுவா தனது முயற்சியில் விடாப்பிடியாக இருந்தான். ஆனால் அவன் சற்று மறுபக்கம் திரும்பியவுடன் சோலெக்ஸைத் துரத்திவிட்டு பக் முதலிடத்தில் நின்று கொண்டது. விட்டுக்கொடுக்க சோலெக்ஸும் தயாராகவே இருந்தது.

பிரான்சுவா கோபங்கொண்டான். “அப்படியா சங்கதி? இப்போ பார்” என்று அவன் கையில் தடியெடுத்து வந்தான்.

சிவப்பு மேலங்கிக்காரனை பக் நினைத்துப்பார்த்தது; உடனே அந்த இடத்தைவிட்டு மெதுவாகப் பின்வாங்கியது. மறுபடியும் சோலெக்ஸை முதலிடத்தில் பூட்டிய போதும் அதன் மீது பக் பாய முயலவில்லை. ஆனால் தடிக்கு அகப்படாமல் எட்டவே வட்டமிட்டுக்கொண்டு கோபத்தோடு சீறியது. தடியை வீசியெறிந்தாலும் தன் மேல் படாதவாறு அது எச்சரிக்கையோடிருந்தது. தடியின் விஷயம் அதற்கு நன்கு தெரியுமல்லவா?

பிரான்சுவா தன் வேலையில் ஈடுபட்டான். மற்ற நாய்களைப் பூட்டிவிட்டு டேவுக்கு முன்னால் பக்கைப் பூட்ட அதை அழைத்தான். பக் இரண்டு மூன்றடி பின்னால் நகர்ந்தது. பிரான்சுவா கொஞ்ச தூரம் அதன் அருகில் வந்தான். அதைக்கண்டு பக் மேலும் பின்னால் சென்றது. பிரான்சுவா இவ்வாறு சில தடவை அதன் அருகே வர முயன்றும் அவன் கருத்து நிறைவேறவில்லை. அடி கிடைக்குமென்று பயந்துதான் பக் பின்னடைகின்றதென்று நினைத்து, அவன் தடியைக் கீழே போட்டுவிட்டான். ஆனால் பக் அவனை வெளிப்படையாகவே எதிர்த்து நின்றது. தடியடிக்குத் தப்ப வேண்டுமென்று அல்ல; தலைமை ஸ்தானத்தை அடையவே அது விரும்பிற்று. அந்த ஸ்தானத்தைப் பெற அதற்கு உரிமை உண்டு. தானே உழைத்துச் சம்பாதித்த ஸ்தானம் அது. அதனால் அதைப் பெறாமல் பக் திருப்தியடையாது.

பெரோல்ட்டும் வந்து சேர்ந்தான். சுமார் ஒரு மணி நேரம் வரையில் அவனும் பிரான்சுவாவும் பக்கைத் துரத்தினார்கள்; தடிகள் அதன் மேல் வீசினார்கள். பக் தந்திரமாகத் தப்பிக் கொண்டது. அவர்கள் அதன் மீது வசைமாரி பெய்தார்கள். அதன் பெற்றோர்களும், மூதாதையரும், அதற்கு இனிமேல் பிறக்கப்போகும் குட்டிகளும் கூட அவர்களுடைய சாபத்திற்குத் தப்பவில்லை. பக் அந்தச் சாபத்திற்குப் பதிலாகச் சீறிக்கொண்டு அவர்கள் கைக்கு அகப்படாமல் எட்டி நின்றது. அந்த இடத்தைவிட்டு ஓடிப்போக அது முயலவில்லை; ஆனால் முகாம் போட்ட இடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது. இதன் மூலம் அது தன் விருப்பம் நிறைவேறினால் பழையபடி ஒழுங்காக வண்டியிழுக்க ஆயத்தமாக இருப்பதாக விளம்பரம் செய்தது.

பிரான்சுவா கீழே உட்கார்ந்து தலையைச் சொறியலானான். பெரோல்ட் கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு சீறினான். காலம் வீணாகப் பறந்துகொண்டிருந்தது. ஒரு மணி நேரத்திற்கு முன்பே அவர்கள் புறப்பட்டிருக்க வேண்டும். பிரான்சுவா மறுபடியும் தலையைச் சொறிந்தான். அவன் தலையை ஆட்டிக்கொண்டு பெரோல்டைப் பார்த்துப் பல்லை இளித்தான். தோல்விச் சின்னமாகப் பெரோல்ட்டும் தோள்களைக் குலுக்கினான். முதலிடத்திலிருந்த சோலெக்ஸுக்குப் பக்கத்தில் போய் நின்று கொண்டு பிரான்சுவா பக்கை அழைத்தான். பக் நாய்ச்சிரிப்பு சிரித்தது. ஆனால் அருகில் வரவில்லை. சோலெக்ஸை அவிழ்த்து அதற்குரிய பழைய இடத்தில் பிரான்சுவா பூட்டினான். பக்கைத் தவிர மற்ற நாய்களெல்லாம் ஒழுங்காக வண்டியில் பூட்டப்பட்டுப் புறப்படத் தயாராக இருந்தன. முதலிடத்தைத் தவிர பக்குக்கு இப்பொழுது வேறு இடம் கிடையாது. மறுமுறையும் பிரான்சுவா பக்கை அழைத்தான். மறுமுறையும் பக் சிரித்துக்கொண்டு எட்டியே நின்றது.

‘தடியைக் கீழே போட்டுவிடு” என்று பெரோல்ட் ஆணையிட்டான்.

பிரான்சுவா தடியை எறிந்தான். உடனே வெற்றிச்சிரிப்பு சிரித்துக்கொண்டே பக் ஓடி வந்து முதலிடத்தில் நின்றுவிட்டது. அள்ளைவார்களைப் பூட்டினார்கள். வண்டி புறப்பட்டு ஆற்றுப்பாதை வழியாக ஓடலாயிற்று.

பக் மிக நல்ல நாய் என்று பிரான்சுவா மதித்திருந்தான். ஆனால் அவன் அதற்குக் கொடுத்திருந்த மதிப்பே குறைவு என்று கருதும்படியாக அது நன்கு நடந்து கொண்டது. தலைமை ஸ்தானத்திற்குரிய கடமைகளையெல்லாம் அது ஒரேயடியாக மேற்கொண்டு விட்டது. விரைவிலே சிந்தித்து முடிவுக்கு வருவதிலும், விரைவிலே காரியம் செய்வதிலும் சரியான தீர்மானம் செய்வதிலும் ஸ்பிட்ஸைவிட அது மேம்பட்டு நின்றது.

ஒழுங்குமுறைகளை உண்டாக்குவதிலும், அவற்றைத் தவறாமல் பின்பற்றி மற்ற நாய்கள் நடக்குமாறு செய்வதிலும் பக் தன் திறமை காட்டிற்று. தலைமைப்பதவியில் ஏற்பட்ட மாறுதலை டேவும் சோலெக்ஸும் பொருட்படுத்தவில்லை. அந்தக் கவலை அவைகளுக்கு இல்லை. வண்டியிழுப்பதில் உற்சாகமாக இருப்பதுதான் அவைகளின் வேலை. அதிலே இடையூறு ஏற்படாமலிருக்கும் வரையில் அவைகள் மற்ற நிகழ்ச்சிகளைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. ஸ்பிட்ஸின் இறுதி நாட்களில் மற்ற நாய்கள் கட்டுப்பாட்டை மீறிக்கொண்டிருந்தன; அவற்றையெல்லாம் சரியானபடி பக் தண்டித்து ஒழுங்குக்குக் கொண்டுவருவதைக் கண்டு டேவும் சோலெக்ஸும் மிகவும் ஆச்சரியப்பட்டன.

பக்குக்குப் பின்னால் பைக் பூட்டப்பட்டிருந்தது. அது தன் பலம் முழுவதையும் உபயோகித்து இழுக்காது; மேல் போக்காகவே வேலை செய்யும். இதற்கு இப்பொழுது நல்ல தண்டனை கிடைத்தது. அதனால் முதல் நாள் முடிவதற்குள் அது தோள் கொடுத்து நன்றாக இழுக்கலாயிற்று. ஜோவைத் தண்டிக்க ஸ்பிட்ஸால் முடியவே இல்லை. ஆனால் முதல் நாள் இரவு முகாமிட்டபோதே பக் அதைச் சரியானபடி தண்டித்துவிட்டது. பக்தன் முழுப்பலத்தையும் கொண்டு தாக்கவே ஜோ பணிந்து சிணுங்கத் தொடங்கிவிட்டது.

நாய்களுக்குள்ளே இப்பொழுது ஒழுங்கும் கட்டுப்பாடும் ஏற்பட்டு விட்டன. எல்லா நாய்களும் சேர்ந்து பழையபடி ஒருமனத்தோடு வேலை செய்தன.

வழியிலேயே ஓரிடத்தில் டீக், கூனா என்ற பெயருடைய இரண்டு எஸ்கிமோ நாய்களையும் புதிதாக வாங்கி சேர்த்தார்கள். அந்த நாய்களைப் பக் வெகு சீக்கிரத்தில் பழக்கியதைக் கண்டு பிரான்சுவா ஸ்தம்பித்துப் போனான்.

“பக்கைப்போல் நாயே கிடையாது; கிடையவே கிடையாது. அதற்கு ஆயிரம் டாலர் கொடுக்கலாம். பெரோல்ட், நீ என்ன சொல்லுகிறாய்?” என்று அவன் உற்சாகமாகக் கூவினான்.

அவன் கருத்தைப் பெரோல்ட் ஆமோதித்தான். எதிர்பார்த்ததை விடப் பிரயாணம் வேகமாக நடந்தது. ஒவ்வொரு நாளும் வேகம் அதிகப்பட்டது. பாதையும் நன்றாக இறுகி இருந்தது. புதிதாகப் பனி விழாததால் ஒரு தொந்தரவும் இல்லை. குளிரும் மிகக் கடுமையாக இருக்கவில்லை. வெப்பநிலை பூஜ்யத்திற்குக் கீழே ஐம்பது டிகிரியில் மாறாமல் இருந்தது. பிரான்சுவாவும், பெரோல்ட்டும் வண்டியை ஓட்டுவதும், வண்டிக்கு முன்னால் ஓடுவதுமாக மாறி மாறி வேலை செய்தார்கள். அடிக்கடி நிற்காமல் வண்டி ஓடிக்கொண்டிருந்தது.

முப்பதுமைல் ஆறு என்ற ஆற்றிற்கு வந்து சேர்ந்தார்கள். அதன்மேல் பனிக்கட்டி நன்கு படிந்திருந்தது. அதனால் ஒரே நாளில் அதைக் கடந்து விட்டார்கள். வரும்போது அதைக் கடப்பதற்குப் பத்து நாட்கள் பிடித்தன. ல பார்ஜ் ஏரியிலிருந்து ஒரேயடியாக அறுபது மைல் செல்ல முடிந்தது. பல ஏரிகளின் வழியாக அவர்கள் மிக வேகமாகச் சென்றதால் வண்டிக்கு முன்னால் ஓடுகின்ற முறை யாருக்கு வந்தாலும் அவனுடைய சிரமம் அதிகரித்தது. அதனால் அவன் வண்டியின் பின்னால் தன்னைக் கயிற்றால் பிணைத்துக் கொண்டு நாய்களே தன்னையும் இழுத்துச் செல்லுமாறு செய்து கொண்டான். இரண்டாம் வாரத்தின் கடைசி நாள் இரவிலே அவர்கள் கடற்கரைப்பட்டினமான ஸ்காக்வே[1] வந்து சேர்ந்தார்கள்.

இதுவரையிலும் யாரும் அவ்வளவு வேகமாக வந்ததில்லை. நாளொன்றுக்குச் சராசரி நாற்பது மைல் வீதம் அவர்கள் பதினான்கு நாட்கள் பிரயாணம் செய்திருக்கிறார்கள். பெரோல்ட்டும் பிரான்சுவாவும் ஸ்காக்வேயின் முக்கிய வீதிகளில் மூன்று நாட்கள் வரை தலைமிர்ந்து பெருமையோடு உலாவினார்கள். பல பேர் அவர்களை விருந்துக்கு அழைத்தார்கள். அவர்களுடைய நாய்களைச் சுற்றி எப்பொழுதும் ஒரு கூட்டம் நின்று அவற்றைப் புகழ்ந்தது.

இந்த நிலையிலே அரசாங்கத்திலிருந்து புதிய உத்தரவுகள் வந்தன. பிரான்சுவாவும் பெரோல்ட்டும் அந்த வேலையிலிருந்து மாற்றப்பட்டார்கள். பிரிவதற்கு முன்பு பிரான்சுவா பக்கைத் தன்னருகே அழைத்தான். அதைக் கைகளால் அணைத்துக்கொண்டு கண்ணீர் வடித்தான். அதன் பிறகு பிரான்சுவாவையும் பெரோல்ட்டையும் பக் பார்க்கவில்லை. மற்ற மனிதர் தொடர்பைப் போலவே அவர்களுடையதொடர்பும் அதனுடைய வாழ்க்கையிலிருந்து நீங்கிவிட்டது.

ஸ்காச்சு மக்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவன் இப்பொழுது பொறுப்பேற்றான். பத்து பன்னிரண்டு சறுக்குவண்டிகள் டாஸனுக்குப் புறப்பட்டன. அவற்றோடு இந்த வண்டியும் சேர்ந்துகொண்டது.

இந்தத் தடவை பிரயாணம் அவ்வளவு எளிதல்ல. வேகமாகவும் போக முடியாது. வண்டியில் பாரம் அதிகம். தபால் மூட்டைகள் மிகுதியாக இருந்தன. வடதுருவத்தின் அருகிலே தங்கம் தேடிக்கொண்டிருக்கிறவர்களுக்கு உலகத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் கடிதங்களைக்கொண்டு செல்ல வேண்டும். அதனால் ஒவ்வொரு நாளும் சிரமப்பட்டு உழைக்க வேண்டியிருந்தது.

பக்குக்கு அந்த வேலையில் ஈடுபாடு கிடையாது. இருந்தாலும் டேவையும் சோலெக்ஸையும் போல் வண்டியை வேகமாக இழுப்பதிலே அது ஒரு தனிப்பெருமை அடைந்தது. மற்ற நாய்களும் தங்கள் பணிகளை ஒழுங்காகச் செய்யுமாறு அது கவனித்துக்கொண்டது. ஒரே மாதிரியான வேலையை எந்திரம் போல் செய்யவேண்டும். ஒருநாள் போலவே எல்லா நாட்களும் சரியாக இருக்கும். அதிகாலையிலேயே குறிப்பிட்ட நேரத்தில் சமையல்காரர்கள் தீ மூட்டுவார்கள்; காலை உணவு நடக்கும். பிறகு சிலர் கூடாரங்களைக் களைவார்கள்; சிலர் நாய்களுக்குச் சேணமிடுவார்கள். பொழுது நன்கு விடியுமுன்பே பிரயாணம் தொடங்கிவிடும். இரவிலே மீண்டும் முகாம் போட வேண்டும். சிலர் முளையடிப்பார்கள். சிலர் விறகு வெட்டுவார்கள். சிலர் படுக்கைக்காகப் பைன் மரத்தின் சிறுகிளைகளை வெட்டி வருவார்கள். மற்றும் சிலர் சமையலுக்கு வேண்டிய தண்ணீர் கொண்டு வருவார்கள். தண்ணீர் உறைந்து கிடந்தால் பனிக்கட்டிகளை எடுத்து வருவார்கள். நாய்களுக்கு உணவு கொடுப்பார்கள். இது ஒன்றுதான் அவைகளுக்குக் கொஞ்சம் இன்பமளிக்கும் நிகழ்ச்சியாகும். இதுவும் மீனைத் தின்ற பிறகு சுமார் ஒரு மணி நேரத்திற்கு நாய்களெல்லாம் சேர்ந்து சுற்றித்திரியும். அந்தப் பிரயாணக்கூட்டத்திலே நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களிருந்தன. அவற்றில் சில சண்டைக்குப் பேர் போனவை. ஆனால் மூன்று வெவ்வேறு சண்டைகளிலே பக் எல்லா முரட்டு நாய்களையும் அடக்கிவிட்டது. அதனால் அது பல்லைக் காட்டி உரோமத்தைச் சிலிர்க்கும் போது மற்ற நாய்கள் பணிந்து ஓடலாயின.

தீயின் அருகிலே முன்னங்கால்களை நீட்டிக்கொண்டு படுத்துக் கொள்வதில் பக்குக்கு மிகுந்த விருப்பம். தலையை நிமிர்த்திக்கொண்டு அது படுத்திருக்கும். தீக்கொழுந்துகளைப் பார்த்தவாறே ஏதாவது நினைத்துக்கொண்டிருக்கும். கதிரவனின் ஒளி கொஞ்சும் சான்டாகிளாராவில் உள்ள நீதிபதி மில்லரின் பெரிய மாளிகையைப் பற்றிச் சிலவேளைகளில் அது நினைக்கும். சிமென்டால் கட்டிய நீச்சல் குளமும் மெக்சிக்கோ நாட்டு நாயான இசபெலும், ஜப்பான் நாட்டு டுட்ஸும் அதன் நினைவுக்கு வரும். ஆனால் சிவப்பு மேலங்கிக்காரனைத்தான் அது அடிக்கடி நினைத்துக்கொள்ளும். கர்லி இறந்த சம்பவமும், ஸ்பிட்ஸுடன் நடந்த பெரும் போரும் மனத்திலே தோன்றும். முன்பு உண்ட சுவையான உணவுகளின் நினைப்பும் உண்ண வேண்டுமென்று தனக்கு விருப்பமாகவுள்ள உணவுகளின் நினைப்பும் மேலெழும். மில்லரின் மாளிகைக்குத் திரும்பிப்போக அதற்கு ஆசையில்லை. வெப்பமான தென்பிரதேசம் எங்கோ இருக்கிறது. அதைப் பற்றிய ஞாபகம் அதைக் கவரவில்லை. பாரம்பரியமாக வந்த மிகப் பழமை நினைவுகள்தான் மிகுந்த சக்தியோடெழுந்தன. வாழ்க்கையிலே கண்டறியாத விஷயங்களையும் இந்தப் பழைய நினைவுகள் அதற்குப் பழக்கமானவைபோல் ஆக்கிவிட்டன. அதன் முன்னோர்களின் வாழ்க்கை அனுபவங்களும், பழக்கங்களும், நினைவுகளும் அதன் இயல் பூக்களாகஅமைந்திருந்தனவல்லவா? மனத்திலே மறைந்திருந்த அவைகளெல்லாம் புத்துயிர் பெற்று மேலெழுந்தன.

சில வேளைகளில் சுடர்விட்டு எரியும் தீக்கு முன்னால் படுத்துக் கொண்டு ஏதோ கனவுலகத்தில் இருப்பது போல் அது தோன்றும். அந்தச் சமயத்தில் அந்தத் தீக்கொழுந்துக்கள் ஏதோ பழைய காலத்தில் மூட்டிய தீயிலிருந்து எழுவது போல் அதற்குத் தோன்றும். முன்னால் அமர்ந்திருக்கும் சமையல்காரனும் வேறொரு மனிதனாக அதன் கண்களில் காட்சியளிப்பான். அந்த மனிதனுடைய கால்கள் குட்டையாயிருந்தன. கைகள் நீண்டிருந்தன. தசைநார்கள் ஒழுங்காயிராமல் முடிச்சு முடிச்சாக இருந்தன. அந்த மனிதனின் தலைமயிர் நீளமாகவும் சடை விழுந்தும் இருந்தது. மேலே போகப் போக நெற்றி பின்னால் சாய்ந்திருந்தது. அவன் விநோதமாகப் பல குரல்களை எழுப்பினான். இருட்டைக் கண்டு அவன் மிகவும் பயமடைந்தான். ஒரு கழியின் நுனியிலே பெரிய கல்லைக் கட்டி அதைக் கையில் வைத்துக்கொண்டு அவன் இருட்டுக்குள்ளே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அநேகமாக நிருவாணமாகவே இருந்தான். தீயால் பல இடங்களில் பொசுக்கப்பட்ட ஒரு கந்தையான தோல் அவன் முதுகிலே ஒரு பகுதியை மறைத்துக் கொண்டிருந்தது. அவன் உடம்பிலே உரோமம் செறிந்திருந்தது. நெஞ்சின் மீதும், தோள்களின் மீதும், கைகளின் வெளிப்பகுதிகளிலும், துடைகளின் பின்புறத்திலும் உரோமம் நீண்டு வளர்ந்து சடையாக இருந்தது. அவனால் நேராக நிமிர்ந்து நிற்க முடியவில்லை. இடுப்புக்கு மேல் உடம்பு முன்னால் சாய்ந்திருந்தது. முழங்கால்களுக்குப் பக்கத்தில் கால்கள் வளைந்திருந்தன. பூனை போல எளிதில் தாவும் சக்தி அவனிடத்திலே இருந்தது. கண்ணுக்குத் தோன்றும் பொருள்களிடத்திலும் தோன்றாத பொருள்களிடத்திலும் எப்பொழுதும் அச்சம் கொண்டிருப்ப வனைப்போல அவனிடத்திலே எச்சரிக்கையும் துடிப்பும் காணப்பட்டன.

வேறு சில சமயங்களில் அந்தச் சடை மனிதன் தீக்கு முன்னால் அமர்ந்து தனது தலையைக் கால்களுக்கிடையிலே வைத்துக் கொண்டு உறங்கினான். அந்தச் சமயங்களிலெல்லாம் மழைநீரைக் கைகளின் வழியாகக் கீழே வழியச் செய்கின்றவன் போல அவன் தனது முழங்கைகளை முழங்கால்களின் மீது ஊன்றிக் கைகளைத் தலைக்கு மேல் கோத்துக்கொண்டிருப்பான். கொழுந்துவிட்டு எரியும் நெருப்புக்கு அப்பால் சூழ்ந்திருக்கும் இருளிலே ஜோடிஜோடியாகச் சுடர்விடும் கண்களோடு பெரிய கொடிய விலங்குகள் இரையை நாடிக் காத்திருப்பதையும் பக் பார்த்தது. புதர்களுக்கிடையே அவைகள் பாய்வதால் சடசடவென்று ஏற்படும் சப்தமும், அவைகள் இரவில் எழுப்பும் ஓசைகளும் பக்கின் காதுகளில் ஒலித்தன. யூக்கான் ஆற்றின் கரையிலே தீக்கு முன்னால் படுத்துக்கொண்டு தீயைப்பார்த்து மெதுவாகக் கண்களைச் சிமிட்டியவாறே இவ்வாறு கனவு காணும் வேளையில் தோன்றிய தொல் உலகக் காட்சிகளும், ஒலிகளும் சேர்ந்து பக்கின் உடம்பிலுள்ள உரோமத்தைச் சிலிர்க்க வைக்கும். பக் மெதுவாக சிணுங்கும், அல்லது உறுமும். அதைக் கேட்டுச் சமையற்காரன், “டேய், பக், தூங்காதே எழுந்திரு’ என்று கத்துவான். உடனே அந்தப் பழைய உலகம் மறைந்துவிடும்; உண்மையாக அன்றுள்ள உலகம் கண் முன்பு தோன்றும். பக் எழுந்து நின்று கொட்டாவி விடும். தூங்கி எழுந்தது போல உடம்பை நெளித்து மூளி முறிக்கும்.

தபால் மூட்டைகளை எடுத்துச் செல்லும் அந்தப் பிரயாணம் மிகச் சிரமமானதாய் இருந்தது. நாய்களெல்லாம் அலுத்துப் போயின. டாஸன் சேர்ந்த போது அவைகள் இளைத்து மோசமான நிலையில் இருந்தன. பத்து நாள் அல்லது ஒரு வார ஓய்வாவது அவைகளுக்கு அவசியம் வேண்டும். ஆனால், வெளியூர்களுக்குச் செல்லும் கடித மூட்டைகளைச் சுமந்து கொண்டு இரண்டே நாட்களில் அவைகள் திரும்பிப் புறப்பட வேண்டியதாயிற்று. நாய்கள் களைத்திருந்தன. வண்டியைச் செலுத்துபவர்களும் முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள். நிலைமையை இன்னும் மோசமாக்குவதற்குத் தினமும் உறைபனி விழலாயிற்று. அதனால் பாதை கெட்டுவிட்டது. வண்டிக்கு முன்னால் ஓடுபவர்களுக்கு வேலை அதிகமாயிற்று. நாய்களும் அதிக சிரமப்பட்டு வண்டியை இழுக்க வேண்டும். இருந்தாலும் வண்டி ஓட்டுபவர்கள் நாய்களுக்குக் கூடுமான வரை உதவி செய்தார்கள்.

ஒவ்வோர் இரவிலும் முதலில் நாய்களைத்தான் கவனித்தார்கள். அவைகளுக்கு முதலில் உணவு கொடுத்தார்கள். நாய்களின் பாதங்களை ஆராய்ந்து சிகிச்சை செய்யாமல் யாரும் உறங்கச் செல்லவில்லை. இவ்வாறு செய்தும் நாய்கள் சக்தி இழந்துகொண்டே வந்தன. பனிக்காலத் தொடக்கத்திலிருந்து அவை ஆயிரத்து எண்ணூறு மைல்கள் வண்டியை இழுத்துக்கொண்டு பிரயாணம் செய்திருக்கின்றன. உரம் மிகுந்த நாய்களும் ஆயிரத்தெண்ணூறு மைல்கள் பிரயாணம் செய்தால் சோர்ந்து போகும். பக் ஒருவாறு சமாளித்து வந்தது; மற்ற நாய்கள் ஒழுங்கு தவறாமல் வேலை செய்வதையும் கவனித்துக் கொண்டது; இருந்தாலும் அதுவும் களைத்துப்போய்விட்டது. ஒவ்வோர் இரவிலும் தூங்கும் போது பில்லி தவறாமல் கத்திக்கொண்டும் சிணுங்கிக் கொண்டும் இருந்தது. ஜோ முன்னைவிட அதிகமாகச் சிடுசிடுப்பு கொண்டது. சோலெக்ஸை மற்ற நாய்கள் அணுகவே முடியவில்லை.

ஆனால், டேவ்தான் மற்ற நாய்களைவிட அதிகம் வருந்திற்று. ஏதோ ஒரு கோளாறு அதற்கு ஏற்பட்டுவிட்டது. எரிந்து விழுகின்ற அதன் தன்மையும் சிடுசிடுப்பும் அதிகமாயின. முகாமிடத் தொடங்கியதும் அது வளை தோண்டிப் படுத்துவிடும். அந்த வளைக்குச் சென்றுதான் அதற்கு உணவு கொடுக்க வேண்டும். சேணத்தைக் கழற்றியவுடன் அது படுத்துக்கொள்ளும். அடுத்த நாட்காலையில் மீண்டும் சேணம் போடும் வரையில் அது எழுந்திராது. சில சமயங்களில் வண்டி திடீரென்று நிற்கின்ற போதும், நின்ற வண்டியைப் பலமாக அசைத்து இழுக்கத் தொடங்குகின்ற போதும் அது வலி தாங்காமல் அலறும். டேவைப் பரிசோதித்துப் பார்த்ததில் எந்தவிதமான கோளாறும் தென்படவில்லை. சறுக்கு வண்டிகளை ஓட்டுபவர்களெல்லாம் அதன் மேல் கவனம் செலுத்தினார்கள். உணவு வேளைகளில் படுத்துறங்கப் போகுமுன் ஓய்வாகக் கூடியிருக்கும் போது அதைப்பற்றிப் பேசிக்கொண்டார்கள். ஒருநாள் இரவு அனைவருங் கூடி ஆலோசித்தார்கள்; டேவை அதன் வளையிலிருந்து பிடித்து வந்து தீ வெளிச்சத்திலே நன்றாகப் பரிசோதித்தார்கள். உடம்பையெல்லாம் அழுத்தியும், குத்தியும் பார்த்தார்கள். அது பல தடவை கத்திற்று. உடம்புக்குள்ளே ஏதோ கோளாறு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அது இன்னதென்று கண்டு பிடிக்க முடியவில்லை. எலும்பொன்றும் முறிந்திருக்க வில்லை.

கான்ஸியர் பார் என்ற இடத்தை அடைவதற்குள் அது மிகவும் பலவீனமடைந்து வண்டியிற் பூட்டியிருக்கும் போதே பல தடவை கீழே விழுந்துவிட்டது. தபால்வண்டிப் பொறுப்பை ஏற்ற ஸ்காச்சு இனத்தான் வண்டியை நிறுத்தி டேவை அவிழ்த்துவிட்டு அதன் ஸ்தானத்தில் சோலைக்ஸைப் பூட்டினான். வண்டிக்குப் பின்னால் டேவ் பாரமின்றிச் சும்மா வரவேண்டும் என்பது அவன் கருத்து. நோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருந்தாலும் டேவ் இதை விரும்பவில்லை. வண்டியிலிருந்து அவிழ்க்கும் போதே அது உறுமிக்கொண்டும் சீறிக்கொண்டுமிருந்து, சோலெக்ஸை அதனுடைய இடத்தில் பூட்டியதைக் கண்டதும் மனதுடைந்து அது சிணுங்கியது. தீராத நோய்வாய்ப் பட்டிருப்பினும் அதனுடைய ஸ்தானத்தில் மற்றொரு நாய் வேலை செய்வதை அதனால் தாங்கமுடியவில்லை; வண்டியிழுப்பதிலே அதற்கு அத்தனை உற்சாகமும் பெருமையுமிருந்தன.

வண்டி புறப்பட்டதும் அது பக்கவாட்டிலே ஓடி சோலெக்ஸின் மீது பாய்ந்து கடிக்கலாயிற்று. சோலெக்ஸை மறுபக்கத்திலே தள்ளவிட்டுத் தனக்குரிய இடத்திலே திராஸ் வார்களுக்கிடையிலே புகுந்து கொள்ளவேண்டும் என்பது அதனுடைய நோக்கம். இந்த நோக்கத்தை நிறைவேற்ற முயற்சி செய்து கொண்டிருக்கும் பொழுதே அது நோய் தாங்காமல் குரைத்துக் கொண்டும் சிணுங்கிக்கொண்டுமிருந்தது. ஸ்காச்சு இனத்தான் அதைத் தன் சாட்டையால் அடித்து விரட்ட முயன்றான். அது சாட்டையடியைப் பொருட்படுத்தவேயில்லை. அதைப் பலமாகத் தாக்க அவனுக்கும் மனம் வரவில்லை. வண்டியின் பின்னால் பாதையிலே செல்வது எளிது; ஆனால் டேவ் அப்படிச் செல்ல மறுத்தது. பாதையின் பக்கங்களிலே ஒழுங்கில்லாமல் கிடந்த பனிக்கட்டிகளின் மீது ஓடிக்கொண்டே அது தனது ஸ்தானத்தைக் கைப்பற்ற முயன்றது. அதனால் அது மிகவும் களைப்படைந்து துயரத்தோடு ஊளையிட்டுக்கொண்டு கீழே சாய்ந்துவிட்டது. சறுக்கு
வண்டிகளெல்லாம் அதைக் கடந்து சென்றுவிட்டன.

அதன் உடம்பிலே எஞ்சியிருக்கும் ஒரு சிறிது பலத்தையும் பயன்படுத்தி டேவ் தடுமாறித் தடுமாறி எழுந்து ஓடியது. வண்டிகள் மீண்டும் ஓரிடத்திலே தங்கியபோது அது அங்கே வந்து சேர்ந்துவிட்டது. உடனே அது சோலெக்ஸ் இருந்த இடத்தில் போய் அதனருகில் நின்றது. சற்று நேரத்திற்குப்பின் பயணத்தைத் தொடங்குவதற்காக நாய்களை அதட்டினார்கள். நாய்கள் முன்னால் சுலபமாகத் தாவின. ஆனால் வண்டி நகரவில்லை. எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். சோலெக்ஸின் பக்கத்திலேயுள்ள இரண்டு திராஸ் வார்களையும் டேவ் கடித்தெறிந்துவிட்டு அதற்குரிய ஸ்தானத்தில் போய் நின்றுகொண்டிருந்தது.

தனக்குரிய இடத்திலிருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கெஞ்சிக்கேட்பதுபோல அது தோன்றியது. அதன் கண்களிலே கெஞ்சும் பார்வை இருந்தது. வண்டியோட்டுபவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. உயிரை வாங்குகின்ற வேலையாக இருந்தாலும் அந்த வேலையைக் கொடுக்க மறுத்தால் நாய்கள் எவ்வாறு மனமுடைந்து போகின்றன என்பதைப் பற்றி அவனுடைய தோழர்கள் பேசலானார்கள். வயது முதிர்ந்து தளர்ச்சியுற்ற பல நாய்களும், ஊனமடைந்த பல நாய்களும் தம்மை வண்டியில் பூட்டுவதை நிறுத்தியவுடன் மனமுடைந்து இறந்து போன சம்பவங்களைப் பற்றியெல்லாம் அவர்கள் எடுத்துக் கூறினார்கள். டேவ் எப்படியும் சாகப்போகிறது, அது நிம்மதியாகச் சாக வேண்டுமானால் அதை வண்டியில் பூட்டுவதே நல்லதென்று அவர்கள் எண்ணினார்கள். அதனால் அதற்கு மறுபடியும் சேணம் போட்டார்கள். உள்ளேயிருந்த கோளாறால் டேவ் பலமுறை தன்னையறியாமல் அலறினாலும் அது பொறுமையோடு வண்டியை இழுத்துக்கொண்டு சென்றது. அடிக்கடி அது கீழே விழுந்தது; வண்டியோடு அதையும் சேர்த்து இழுத்துக்கொண்டு மற்ற நாய்கள் சென்றன.

ஒரு தடவை வண்டி அதன் மேலேயே ஏறிவிட்டது. அதனால் அதன் பின்னங்கால் ஒன்றில் அடிபட்டது. டேவ் நொண்டி நொண்டிச் செல்லலாயிற்று.

அடுத்த முகாம் வரையில் அது எப்படியோ சமாளித்துவிட்டது. வண்டி ஓட்டுபவன் அதைத் தீயின் அருகிலேயே படுக்க வைத்தான். அடுத்த நாட் காலையில் அது மிகவும் சோர்ந்துவிட்டது. அதனால் இனிப் பிரயாணம் செய்யமுடியாது. இருந்தாலும் சேணம் போடுகிற சமயத்தில் அது வண்டியோட்டுகிறவனிடம் ஊர்ந்து கொண்டே சென்றது. நடுங்கிக்கொண்டே அது எழுந்து நிற்க முயன்றது; ஆனால் தட்டுத் தடுமாறி விழுந்தது; பிறகு தவழ்ந்து கொண்டே மற்ற நாய்களிடம் செல்லலாயிற்று. முன்னங்கால்களை அது கொஞ்சம் முன்னால் நகர்த்தும்; பிறகு உடம்பை அசைத்து முன்னால் இழுக்கும்; இப்படியே அங்குலம் அங்குலமாக நகர்ந்தது. ஆனால், அதன் சக்தியெல்லாம் போய்விட்டது. அது மூச்சுதிணறி பனியிலே விழுந்து கிடந்தது. மற்ற நாய்கள் வண்டியை இழுத்துக்கொண்டு புறப்பட்டன. அவற்றை ஆவலோடு பார்த்துக் கொண்டு டேவ் செயலற்றுக் கிடந்தது. வெகுதூரம் வரையில் அதன் துன்பக்குரல் கேட்டது. ஆற்று வெளியிலே இருந்த மரக் கூட்டத்திற்குப் பின்னால் வண்டி மறையலாயிற்று.

அங்கே வண்டியை நிறுத்தினார்கள். ஸ்காச்சு இனத்தான் முகாம் போட்டிருந்த இடத்தை நோக்கித் திரும்பிப்போனான். மற்ற மனிதர்கள் நாவொடுங்கியிருந்தார்கள். சுழல் துப்பாக்கியின் வேட்டுச் சத்தம் கேட்டது. ஸ்காச்சு திரும்பி வேகமாக வந்து சேர்ந்தான். சாட்டைகள் ஒலித்தன; மணிகள் ஓசையிட்டன; வண்டிகள் பனிப்பாறையிலே நறநறவென்று சப்தமிட்டு முன்னேறின. மரக்கூட்டத்திற்குப் பின்னால் என்ன நடந்ததென்பது ஒவ்வொரு நாய்க்கும் தெரியும். பக்குக்கும் தெரியும்.

[1] யூக்கான் பிரதேசத்தில் ஒரு நகரம். கிளாண்டைக் தங்க வேட்டைக் காலத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தது.

– தொடரும்…

– கானகத்தின் குரல் (நாவல்), ”The Call of the Wild” by Jack London, ஜாக் லண்டன், தமிழில்: பெ.தூரன், முதற் பதிப்பு: 1958, பதிப்பு: 2000, புதுமைப்பித்தன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *