கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: October 23, 2017
பார்வையிட்டோர்: 8,012 
 
 

எழுதியவர்: பிரமேந்திர மித்ரா

மிகவும் மோசமான நாள். குளிர்காலத்தில் மேகங்கள் கவிந் திருக்கும் நாளைப்போல் எரிச்சலூட்டும் நாள் வேறொன்றும் இருக்க முடியாது. மழையும் பெய்யவில்லை, மேகம் மூடிய வானமும் மங்கிய பூமியும் ஜீவனின்றிக் கிடந்தன. திடீரென்று சோமேஷ் அங்கு வந்திராவிட்டால் நான் எப்படித்தான் நண்பகல் நேரத்தைக் கழித்திருப்பேனோ தெரியாது.

ஆனால் அன்று சோமே ஷும் ஏனோ சுரத்தில்லாமல் இருந்தான். செய்திப் பத்திரிகையை ஓரிருமுறை புரட்டிப் பார்த்து விட்டு அவனிடம் அதை எறிந்துவிட்டுச் சொன்னேன், “ஒரு விஷயம் பார்த்தியா?”

“என்ன?”

“இன்னிப் பேப்பர்லே காணாமப் போனவங்களைப் பத்தி ஒரே சமயத்திலே ஏழு விளம்பரங்கள்!” இந்தச் செய்தியில் எவ்வித ஆர்வமும் காட்டவில்லை சோமேஷ். இயந்திரம்போல் சும்மா சிகரெட் புகையை ஊதிக் கொண்டிருந்தான். நிசப்தமான அறையில் புகை சுருள்சுருளாகக் கிளம்பி உயரே போய்க் கொண்டிருந்தது. மற்றபடி எல்லாம் சலனமற்றிருந்தது. வெளியி லிருந்த சோர்வு எங்கள் மனதிலும் தொற்றிக்கொண்டுவிட்டாற் போலிருந்தது.

இந்தச் சோர்வுமிக்க சூழ்நிலையைக் கலைத்து விடுவதற் காகவே நான் பேசத் தொடங்கினேன், இந்தக் ‘காணாமற் போன’ விளம்பரங்களைப் பார்த்தா எனக்குச் சிரிப்புத்தான் வருது. முக்கால்வாசி கேஸ் என்ன தெரியுமா..? பையன் ராத்திரி சினிமா பார்த்துட்டு ரொம்ப நேரங்கழிச்சு வீடு திரும்புவான். கொஞ்ச நாளா இந்த மாதிரி அடிக்கடி செய்வான். சில சமயம் சாப்பிட உட்காரும் போது அப்பா தன் மனைவியிடம் கேட்டிருப்பார்.

“ஒம்புள்ளெயெக் காணமே! எங்கே போயிருக்கான்?” மனைவி எரிந்து விழுவாள், “சும்மா அனத்தாதீங்க! இந்த மாதிரிப் புள்ளே போயிட்டாலே தேவலாம்!” அப்புறம் பெரிதாக அழுவாள் அவள்.

அப்பா பல்லைக் கடித்துக்கொண்டு பேசினாலும் உள்ளூரத் தன்னிடமுள்ள நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துவார். “அப்படிப் போய்த் தொலைஞ்சா நா பிழைச்சுப் போயிடுவேனே! பாரு, கொஞ்ச நேரத்திலே திரும்பி வந்துடுவான்! இந்த மாதிரி காசு வாங்காமே சாப்பாடு போடற ஓட்டல் வேற எங்கே கிடைக்கும்?”

அம்மா இப்போது அழுதுகொண்டே சொல்வாள், “இந்த நடுக்கற குளிர்லே, ராத்திரியிலே என்ன செய்யறானோ? என்ன பண்ணிடுவானோன்னு பயமாயிருக்கு”

“உம், என்ன பயம்?” அப்பா கேலிப் பேச்சாலேயே அவளுடைய பயத்தை உதறித் தள்ளப் பார்ப்பார். “நம் புள்ளெ ஒண்ணும் பண்ணிடல்லே. யாராவது ஒரு சிநேகிதன் வீட்டிலே மஜாவா இருப்பான். அசௌகரியம் ஏற்பட்டா உடனே வந்து சேர்ந்துடுவான்!”

அம்மாவின் அழுகை ஓயாது. “அவன் எவ்வளவு ரோசக் காரன்னு ஒங்களுக்குத் தெரியுமே!”

எரிச்சலுடன் எழுந்து போய்விடுவார் அப்பா. மாலையில் ஆபிசிலிருந்து திரும்பிவந்து, நிலைமை இன்னும் மோசமாகி விட்டதைப் பார்ப்பார். பையன் வீடு திரும்பவில்லை. அம்மாக்காரி படுத்த படுக்கையாகி விட்டிருப்பாள்.

“என்னை நிம்மதியா இருக்கவிட மாட்டியா! இதைவிட வனவாசம் மேல்!” என்று எரிந்து விழுந்துவிட்டு அப்பா நேரே செய்திப் பத்திரிகை ஆஃபிசுக்குப் போய்விடுவார்.

பத்திரிகை ஆஃபீஸ் என்பது ஒரு சிக்கலான விஷயம். அங்கே எந்த இடத்தில் என்ன இருக்கிறத என்று தெரிந்து கொள்வது மிகவும் கஷ்டம். அப்பா ஒன்றும் புரியாமல் சற்று நேரம் இங்குமங்கும் அலைந்துவிட்டுக் கடைசியில் ஓர் அறையில் நுழைந்து சாதுவாகத் தென்படும் ஒருவரைக் கேட்கத் துணிவு கொள்வார்..- “ஒங்க பேப்பர்லே.. அதாவது.. ஒர் செய்தி வெளியிடணும்..”

அந்த மனிதர் தலையை நிமிர்த்திக் கேலியாகப் பேசுவார் – “செய்தியா? ஏன் நாங்க போடற செய்தியெல்லாம் ஒங்களுக்குப் பிடிக்கல்லியா…? நாங்க இவ்வளவு நாளா ராம நாடகமா பிரசுரிச்சுக்கிட்டிருக்கோம்?”

பையனின் கெஞ்சல் தாங்காமல் அம்மா தான் திருட்டுத் தனமாகச் சேர்த்து வைத்திருக்கும் சிறுவாட்டுப் பணத்திலிருந்த கொஞ்சம் பணம் கொடுத்திருக்கிறாள் அவனுக்க. ஆகையால், பொய் பேசத் துணியாமல் கணவனின் குற்றச்சாட்டைப் பொறுத்துக் கொள்கிறாள்.

அப்பா சொல்லிக் கொண்டு போகிறார்,”இருட்டி இவ்வளவு நேரமாகியும் இன்னும் வர முடியல்லே பெரியவருக்கு! போன தடவைதான் பெரிய தயவு பண்ணிப் பரீட்சையிலே பெயிலானார். இந்தத் தடவையும் என்ன செய்யப்போறார்னு நல்லாப் புரியுது. என் காசெல்லாம் அவருக்கு ஓட்டாஞ் சல்லிதானே! அதனாலே நவாபு இஷ்டம்போல செலவு செய்கிறார்.. விரட்டிவிடப் போறேன். இந்தத் தடவை நிச்சயம் விரட்டி விட்டுடப் போறேன்!”

இந்த ஆர்ப்பாட்டத்தோடு விஷயம் முடிந்திருக்கும். ஆனால் அதே சமயத்தில் அங்கு வந்து சேர்ந்த விட்டான் அருமைப் பிள்ளை!

அப்பா இப்போது சும்மா இருக்க முடியாது. தன் கௌர வத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காவது அவர் ஏதாவது சொல்லத் தான் வேண்டும்.

ஆகவே அவர் கத்துகிறார், “இந்த மாதிரிப் புள்ளெ எனக்கு வேணாம்! நீ வெளியே போ!”

ரோசக்காரப் பிள்ளை அப்பாவின் இந்த ஆணையைக் கடைப்பிடிக்க முற்படுகிறான்.

எந்தப் பக்கம் சமாளிப்பது என்று தெரியாமல் தவிக்கும் அம்மா வேதனையோடு சொல்கிறாள், “சோறு திங்கற சமயத்திலே ஏன் இப்படியெல்லாம் சொல்றீங்க! அப்பறம் சொல்லக்கூடாதா?”

அப்பா தன் மனைவி மேல் எரிந்து விழுகிறார். “நீ செல்லங் கொடுத்தத்தான் இவன் இப்படிக் குட்டிச் சுவராப் போயிட்டான்!”

அம்மா புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள், பையன் வெளியேறி விடுகிறான்.

மறுநாள் ஒரே களேபரம். அம்மா முதல் நாளிரவிலிருந்து ஒன்றும் சாப்பிடவில்லை. இன்றும் படுக்கையிலிருந்து எழுந்திருக்க மாட்டாள் போலிருக்கிறது. அப்பாவும் இரவு முழுதும் தூங்க வில்லை. ஆனால் இதை ஒப்புக்கொள்ளக் கூச்சமாயிருக்கிறது அவருக்கு.

***

செய்திப் பத்திரிகை ஆஃபீசில் அந்த மனிதரின் கேலிப் பேச்சைக் கேட்டுத் திகைத்துப் போய் இங்குமங்கும் பார்க்கிறார்.

பக்கத்தில் உட்கார்ந்திருந்த மனிதர் பார்ப்பதற்குச் சற்று முரடராகக் காணப்பட்டார். ஆனால் அவர்தான் அனுதாபத் துடன், “பாவம், இவர் ஏதோ கேக்கறார், நீ ஏன் இப்படிப் பேசேறே இவர்கிட்டே…? உக்காருங்க சார்!” என்று சொல்கிறார்.

அப்பா தயக்கத்தோடு ஒர நாற்காலியில் உட்கார்ந்த பின் அந்த மனிதர் கேட்கிறார், “என்ன செய்தி, சொல்லுங்க!”

“செய்தியொண்ணும் இல்லே.. ஒர விளம்பரம்..”

“விளம்பரமா? எந்த மாதிரி விளம்பரம்? எவ்வளவு இடம் வேணும். காப்பி கொண்டு வந்திருக்கீங்களா?”

“இல்லீங்க.. விளம்பரம் இல்லே…பாருங்க, என் பையன் வீட்டிலேருந்து ஓடிப்போயிட்டான்..”

அவர் பேசி முடிப்பதற்குள் அந்த மனிதர், “புரிஞஞசுது, காணாமற்போனகேஸ்தானே..? என்ன விளம்பரம் தரப்போறீங்க? அங்க அடையாள வர்ணனையா, இல்லே, திரும்ப வான்னு வேண்டுகோளா?” என்று கேட்கிறார்.

அப்பாவுக்கு இப்போதுதான் கொஞ்சம் தெளிவு ஏற்படுகிறது. “வேண்டுகோள்தான்.. அவனோட அம்மா அழுதுக்கிட்டே யிருக்கா..”

“புரியுது, புரியுது.. கோவிச்சுக்கிட்டுப் போயிட்டானாக்கும்?” அந்த மனிதர் அப்பாவிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்து விட்டுச் சொல்கிறார், “எழுதிக் கொடுங்க..”

“எழுதியா?”

அவருடைய குழப்பத்தைக் கண்டு பத்திரிகைக்காரருக்கு அனதாபமேற்படுகிறது. “சரி நாங்களே எழுதிக்கறோம். நீங்க பேரு, விலாசம் மட்டும் எழுதிக் கோடுங்க” என்று சொல்கிறார்.

பெயர் விலாசத்தை எழுதிக் கொடுத்துவிட்டுப் புறப்படும் போது அப்பா வேண்டிக் கொள்கிறார், “கொஞ்சம் நல்லா எழுதுங்க1 இவனோட அம்மா நேத்திலிருந்த ஒரு சொட்டுத் தண்ணி கூடக் குடிக்கலே..”

“அதெல்லாம் நீங்க சொல்லவே வேண்டாம். நாங்க எழுதின விளம்பரத்தைப் படிச்சுட்டு உங்க பையன் அழுது தீர்த்துடப் போறான்.. உங்களுக்குக் கவலையே வேணாம்!”

சற்று மனம் தேறி வீடு திரும்புகிறார் அப்பா.

ஆனால் விளம்பரம் வெளியாகுமுன்னரே வீடு திரும்பி விடுகிறான் பையன். வீட்டில் தங்கிவிட அல்ல, தனக்குத் தேவையான சில புத்தகங்களை எடுத்துக் கொண்டு போகத்தான்.

இப்போது அம்மாவுக்க வந்ததே கோபம்! “போறதுன்னாப் போயிக்கோயேன், குலத்தைக் கெடுக்க வந்த கோடாலிக் காம்பு!

ஒரு பிள்ளையும் அப்பாகிட்டே திட்டு வாங்கறதில்லே! நீதான் ஒரு மகாத்மாவாப் பொறந்துட்டே..! அவர் நேத்து ராத்திரி பூரா இமையை மூடல்லே, தெரியுமா உனக்கு? கவலைப்பட்டுக் கவலைப்பட்டு அவர் மூஞ்சி எப்படி ஆயிருக்குன்னு பார்த்துட்டு வா! கோவிச்சுக்கிட்டுப் போறாராம் பெரிய மனிசர்..!”

அப்பா வீட்டுக்குள் நுழைந்தவாறு மனைவியை அடக்கு கிறார், “ஏன் திட்டிகிட்டிருக்கே? விட்டுத் தள்ளு!”

இப்போது அம்மா பொரிந்து தள்ளுகிறாள்,”நீங்க சும்மா இருங்க! இவ்வளவு செல்லம் ஆகாது! ஏதோ நாலு திட்டுக் கேட்டது பொறுக்கலியாம், வீட்டைவிட்டுப் போயிடுவாராம்! என்ன திமிரு..!”

பெரும்பாலான “காணாமற்போன” விளம்பரங்களின் வரலாறு இதுதான்..” என்ற சொல்லி முடித்தேன் நான். இதற்குள் சோமேஷின் சிகரெட் தீர்ந்துவிட்டது. அவன் இவ்வளவு நேரம் என் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான் என்று தோன்றவில்லை, சற்றே அசையக்கூட இல்லை அவன்.

நான் எரிச்சலடைந்து, “உனக்கு என்ன ஆச்சு, சொல்லு! நான் பேசிக்கிட்டே இருக்கேன், நீ உம்முன்னு உக்காந்திருக்கியே!”

சோமேஷ் பதிலொன்றும் சொல்லாமல் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு தன் கெயிலிருந்த சிகரெட் துண்டை எறிந்தான். பிறகு, “இந்த மாதிரி விளம்பரங்களுக்குப் பின்னாலே பல உண்மையான சோக நிகழ்ச்சிகளும் இருக்கு, தெரியுமா?” என்று சொன்னான்.

“நான் இல்லேன்னு சொல்லலே. சில சமயம் ஓடிப் போனவன் திரும்பி வர்றதில்லே..”

சோமேஷ் சிரித்துக்கொண்டு சொன்னான், “நான் அதைச் சொல்லலே.. திரும்பி வந்ததே ஒரு சோக நிகழ்ச்சியா ஆன கதை ஒண்ணு எனக்குத் தெரியும்..”

“அப்படீன்னா..?”

“கேளு, சொல்றேன்..”

வெளியே மறுபடி மழை தொடங்கி விட்டது. ஜன்னலின் கண்ணாடிக் கதவு வழியே தெருவும் வீடுகளும் மங்கலாகத் தெரிகின்றன. நாங்களிருவரும் உலகத்திலிருந்தே விலகிப்போய் விட்ட மாதிரி ஓர் உணர்வு..

“ரொம்ப வருஷத்துக்கு முன்னால் ஒரு முக்கியமான செய்திப் பத்திரிகையிலே நாள் கணக்கிலே ஒரு விளம்பரம் வந்துக்கிட் டிருந்தத. அது வெறும் விளம்பரமில்லே, ஒரு முழு வரலாறு. அந்த விளம்பரங்களையெல்லாம் வரிசையாப் படிச்சுக்கிட்டு வந்தா ஒரு முழுக்கதை தெரியவரும். அச்சடிச்ச எழுத்திலே காது கொடுத்துக் கேட்டா உண்மையிலேயே வேதனையொலி கேக்கும்.

தொடக்கத்திலே அந்த விளம்பரத்திலே ஒரு தாய் தன் காணாமற் போன பிள்ளையைத் திரும்பி வரச் சொல்லிக் கெஞ்சறா. அதன் மொழியிலே தெளிவில்லே, வேகமில்லே, ஆன் அதுக்குள்ளே தொனித்த தேனையை அதைப் படிச்சவங்கதான் உணர முடியும். அதுக்கப்பறம் வந்த விளம்பரங்களிலே தாயோட அந்த சோக அழைப்பு கொஞ்சங் கொஞ்சமா மறைஞ்சு போச்சு. அப்பறம் வந்த விளம்பரங்களிலே தந்தையோட உணர்ச்சி கரமான — ஆனால் கூடவே நிதானமான – வேண்டுகோள் “சோபன், திரும்பி வா! உன் அம்மா படுத்த படுக்கையாயிருக்கிறாள். உனக்குக் கொஞ்சமும் கடமையுணர்வு இல்லையா?”

“விளம்பரங்கள் இதன் பிறகும் தொடர்ந்தன. தந்தையின் சோகச் சுமையால் கனத்தாற் போன்ற, தொண்டையில் அடைத்துக் கொண்டாற் போன்ற விளம்பர வாசகங்கள்.. “சோபன், இப்போது, நீ திரும்பி வராவிட்டால் அம்மாவை உயிருடன் பார்க்க முடியாது! “இதிலும் சோபனின் மனம் இளகவில்லை போலும். விளம்பரங்கள் தொடர்ந்தன, ஆனால் தந்தையால் இன்னும் தாக்குப் பிடிக்க முடியாது போலிருந்தது. இப்போது வெளியான விளம்பரங்களில் உருக்கமான கெஞ்சல்.. நம்பிக்கையிழப்பு.. “சோபன், நாங்கள் எப்படி உயிர் வாழ்கிறோம் என்று உனக்குத் தெரியாது, உடனே வா! இனியும் எங்களைத் துன்புறுத்தாதே!”

“விளம்பரங்கள் ஓலங்களாக மாறிவிட்டன. சிறிது காலத் துக்குப்பின் அவற்றின் தன்மை முற்றிலும் மாறியது. ஒரு சாதாரண அறிவிப்பு: “இந்த வயதுள்ள இந்த மாதிரி தோற்றமுள்ள பையனை ஒரு வருடமாகக் காணவில்லை. கண்டுபிடிப்பவர்களுக்குப் பரிசு வழங்கப்படும்.”

“பின் வந்த விளம்பரங்களில் பரிசுத்தொகை படிப்படியாக உயர்ந்தது: பதினாறு – பதினேழு வயதுப் பையன் – இரட்டை நாடி உடம்பு. அடையாளம் – வலது காதுக்கருகில் ஒரு பெரிய மச்சம். அவன் உயிரோடிருக்கிரானா இறந்துவிட்டானா என்பதைத் தெரிவித்தால் சன்மானம் அளிக்கப்படும்..”

சோமேஷ் சற்று நேரம் பேசாமலிருந்தான். மழைச்சாரல் பட்டு ஜன்னல் கண்ணாடிகள் முற்றிலும் மங்கலாகி விட்டன. அறைக்குள் குளிரத் தொடங்கி விட்டது. கம்பளியை எடுத்துக் கொண்டால் தேவலை என்று தோன்றியது.

“சரி, இதெல்லாம் விளம்பரம் சொல்ற கதை. நிஜமா என்ன நடந்தது?” என்று கேட்டேன்.

“சோபனை எனக்குத் தெரியும். அவன் ஏதோ ரொம்பக் கோவத்திலே வீட்டை விட்டு ஓடி வந்துட்டான்னு நினைக்காதே.

வீட்டைவிட்டு ஓடிப்போறதுங்கறது அவனுக்கு ரொம்ப சாதாரண விஷயம். ஏதாவதொரு சின்னக் காரணம் இருந்தாப் போதும். உலகத்திலே ஒரு சில பேர் இயற்கையாகவே விட்டேத்தியாக இருக்காங்க. அவங்க உண்மையிலேயே கல்நெஞ்சக்காரங்க இல்லே. அவங்க நெஞ்சிலே எண்ணெய் தடவினாப்பல இருக்கும். எதிலேயும் அவங்களுக்குப் பிடிப்பு, பாசம் இருக்காது. உனக்கு இதைக் கேக்க ஆச்சரியமாயிருக்கலாம் — விளம்பரங்கள் வந்துக் கிட்டிருக்கறது அவனுக்குத் தெரிஞ்சாலும் அவன் அதையெல்லாம் கவனமாப் படிக்கலே. என்னிக்காவது ஒரு நாள் ஒரு விளம்பரம் அவன் கண்ணிலே பட்டிருக்கும். அவன் அதைப் படிச்சுட்டு அப்பறம் மறந்து போயிட்டான். வீடு வாசலை விட்டுட்டு வெளி யுலகத்திலே காலங்கழிக்கறதுன்னா எவ்வளவு அசௌகரியங்கள் இருக்கும்! அதையெல்லாம் அசௌகரியமாகவே கருதலே அவன். அதிலேதான் அவன் சுதந்திர உணர்வை அனபவிச்சான், மத்தவங்க அவனைப் பத்தி என்ன நினைச்சுக்கிட்டிருந்தாலும் அவன் தன்னை ஒரு சின்னக் குடும்பத்தோட செல்லப்பிள்ளையா நினைச்சுக்கலே.

“ஆனால் திடீர்னு ஒரு நாள் விளம்பரங்கள் நின்னு போன போது அவன் மனசுகூட சஞ்சலப்பட்டது.

விளம்பரங்கள் நின்னு போனதுகூட ஒரு விசித்திரமான விதத்தில்தான். அவை கொஞ்சங் கொஞ்சமாக ஊக்கங் குறைஞ்சு நின்னு போகலே, திடீர்ன ஒரு நாள் ஒரு விபத்தை அறிவிச்சுட்டு விளம்பரம் நின்னு போச்சு; “சோபன், இனி உன்னாலே உன் அம்மாவைப் பார்க்க முடியாது. அவள் இன்னும் உன் பெயரைச் சொல்லிப் புலம்பிக் கொண்டுதானிருக்கிறாள்…” இதுதான் கடைசி விளம்பரம்.

“இதுக்குள்ளே ரெண்டு வருஷம் ஆயிட்டது. திடீர்னு ஒருநாள் சோபன் தன் ஊருக்குப் போனான். அவன் நடந்து கொண்ட மாதிரியிலேருந்து நி அவனோட சுபாவத்தை ஓரளவு புரிஞ்சுக்கலாம். அவன் தான் வர்ற விஷயத்தை முன்கூட்டித் தெரிவிக்கலே. அவன் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த வனில்லே.பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவன்னு சொன்னாலும் போதாது. பழையகாலத்து ஜமீந்தார் பரம் பரையைச் சேர்ந்தவன் அவன். அந்தக் குடும்பத்துப் பெருமையும் சொத்தும் ரொம்பத் தேய்ஞ்சு போயிருந்தாலும் இன்னும் நிறையவே மிஞ்சியிருந்தது. அது எல்லாத்துக்கும் ஒரே வாரிசு சோபன்தான்.

“இந்த ரெண்டு வருஷ காலத்திலே சோபன் எவ்வளவோ அசௌகரியங்களுக்கு, கஷ்டங்களுக்கு உள்ளாகியிருந்தாலும் அவற்றை அவன் பொருட்படுத்தலே. ஆனால் அவற்றாலே அவன் மேலே பாதிப்பு ஏற்பட்டிருந்தது, வெளித்தோற்றத்திலே ரொம்ப மாறிப் போயிருந்தான் அவன். இருந்தாலும் ஜமீன் சிப்பந்திகள் தன்னை அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று அவன் நினைக்கவேயில்லை.

அவன் தன் ஊர் போய்ச் சேர்ந்ததும் நேரே தன் மாளிகைக்குள் நுழையப் போனான்.

நாயப் – அதாவது ஜமீனின் நீண்டகால மானேஜர் – அவனை இடைமறித்துக் கேட்டார், “யாரைப் பார்க்கணும்?”

சோபன் சிரித்தவாறே சொன்னான், ” வீட்டுக்குள்ள போகணும்..”

நாயப் அவனைச் சற்றுநேரம் உற்றுப் பார்த்துவிட்டுப் புன்சிரிப்புடன் சொன்னார், “ஓ, உள்ளே நுழைய ஏன் இவ்வளவு அவசரம்? கொஞ்சநேரம் வெளியறையிலே இளைப்பாறிட்டுப் போங்களேன்!”

சோபன் ஆச்சரியத்துடன் கேட்டான், “நாயப், உங்களுக் கென்ன வந்தது?”

“எனக்கொண்ணும் ஆகலியே”

“அம்மா சௌக்கியமா இருக்காங்களா?” சோபனின் குரலில் அக்கறை தொனித்தது.

நாயப் முன்போலவே விசித்திரப் புன்னகையுடன், “நல்லாத் தானிருக்காங்க.. வாங்க என்னோடே!”

சோபன், “உள்ளேயே போகலாமே!” என்றான்.

நாயப் சற்றுக் கடுமையான குரலில், “அதெல்லாம் முடியாது! என்னோட வாங்க!” என்றார்.

சோபன் ஒன்றும் புரியாமல் நாயபுடன் வெளியறைக்கு வந்தான். இந்த ரெண்டு வருஷத்திலே அங்கே சில மாறுதல்கள் ஏற்பட்டிருந்தன. அவர்களோட பழைய குமாஸ்தாவைக் காணோம். ரெண்டு புதிய குமாஸ்தாக்கள் கணக்கு எழுதிக் கிட்டிருந்தாங்க. பழைய பொக்கிஷதார் கிழவரே இன்னும் இருந்ததைப் பார்த்துக் கொஞ்சம் தெம்பு வந்தது சோபனுக்கு.

நாயப் அவனை ஒரு நாற்காலியிலே உட்காரச் சொல்லி விட்டுப் பொக்கிஷதார்கிட்டே “இவருக்கு உள்ளே போகணுமாம்!” என்றார்.

நாயபோட குரல் ஒரு மாதிரியாக இருந்தது. பொக்கிஷதார் தன் மூக்குக் கண்ணாடியை விதலாலே மூக்குமேலே தூக்கிவிட்டுக்கொண்டு அவனை உற்றுப் பார்த்துவிட்டு, “இன்னிக்குத்தான் வந்தாராக்கும்!” என்று சொன்னார்.

“ஆமா, இப்பத்தான்!”

சோபன் பொறுமையிழந்துபோய், “நீங்க என்ன சொல்ல விரும்பறீங்க? தெளிவாச் சொல்லுங்களேன்! அம்மாவுக்கு என்னவாவது ஆயிடுச்சா? அப்பா எப்படி இருக்காங்க?”

அங்கிருந்த எல்லாரின் பார்வையும் அவன் மேலே நிலைத் திருந்தது, எல்லாரும் கொஞ்சநேரம் பேசாமலிருந்தாங்க. அப்பறம் நாயப் சொன்னார், “அவங்க நல்லாத்தான் இருக்காங்க, அனா நீங்க அவங்களைப் பார்க்க முடியாது!”

சோபனுக்குக் கோபம் வந்துவிட்டது. “ஏன் பார்க்க முடியாது? உங்களுக்குப் பைத்தியம் பிடிச்சுடுத்தா? நான் உள்ளே போகிறேன்!”

சோபன் எழுந்தான். உடனே நாயபும் எழுந்திருந்து வாசல்பக்கம் போய் அமைதியாகச் சொன்னார், “இதோ பாருங்க, அனாவசியமாத் தகராறு பண்ணாதீங்க. அதனாலே பிரயோசன மில்லே.”

அப்போதுதான் சோபனுக்கு ஒரு பயங்கர உண்மை புரிஞ்சது. அவன் ஆச்சரியமும் பயமுமாகக் கேட்டான், “உங்களுக்கு என்னைத் தெரியல்லியா?”

எல்லாரும் மௌனம்.

“நான்தான் சோபன்..நான் சோபன்தான்னு உங்களுக்குத் தெரியலியா?”

நாயப் இப்போது, “நீங்க கொஞ்சம் இருங்க. இதோ வரேன்” என்று சொல்லிவிட்டுப் பக்கத்து அறைக்குப் போனார். அங்கே ஒரு மேஜை டிராயரைத் திறந்து எதையோ எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தார். சோபனோட பழைய போட்டோ தான். அது, சாதாரண போட்டோ. கொஞ்சம் பழுப்பேறி மங்கிப் போயிருந்தது.

“இந்தப் பையனைத் தெரியுமா?” என்று கேட்டார்.

சோபன் ஆச்சரியத்துடன் சொன்னான், “இது என் போட்டோதான்..! நீங்களே ஒப்பிட்டுப் பாருங்களேன்! சே, இதைப் பொறுக்க முடியல்லியே!”

அவன் தலைமுடியைக் கையால் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான்.

நாயப் அவன்கிடடே உட்கார்ந்து கொண்டு சொன்னார், “பாருங்க, நான் சொல்றதுக்கு வரத்தப்படாதீங்க. உங்களுக்கும் இந்த போட்டோவுக்கும் கொஞ்சம் ஒத்துமை இருக்கு, வாஸ்தவந் தான். ஆனா, இதுக்கு முன்னாலே வந்த ரெண்டு பேருக்கும் இந்த மாதிரி போட்டோவோட ஒத்துமை இருந்தது. அவங்க உடம்பிலேயும் மச்சம் இருந்தது. இப்படி வர்றவங்களோட தகராறு செய்யக்கூடாதுன்னு எங்களுக்கு உத்தரவு. அதனாலே நாங்க உங்களை ஒண்ணும் செய்யமாட்டோம். நீங்க இப்பவே இங்கே யிருந்து போயிடுங்க!”

சோபன் திகைத்துப் போய் அங்கிருந்த மற்றவர்களைப் பார்த்தான். அவர்களுடைய பார்வையில் அவனிடம் நம்பிக்கை யின்மை தெரிந்தது.

அவன் கெஞ்சும் குரல்லே சொன்னான், “நீங்க என்னை நம்பமாட்டேங்கறீங்க. என்னை ஒரு தடவை என் அப்பா அம்மாவைப் பார்க்கவிடுங்க..”

சோர்வோடு கையை அசைத்தார் நாயப், “அப்படீன்னாக் கேட்டுக்கங்க. ஏழுநாள் முன்னாலே சோபன் செத்துப் போயிட்டதா எங்களுக்குத் தகவல் கிடைச்சிருக்கு..”

சோபனால் அந்த நிலையிலும் சிரிக்காமலிருக்க முடியல்லே. “எப்படிச் செத்துப் போனான்?” என்று அவன் கேட்டான்.

அவன் குரல்லே ஒலித்த கேலியைப் பொருட்படுத்தாமல் நாயப் பதில் சொன்னார், “ஒரு சாலை விபத்திலே கார் ஏறிச் செத்துப் போயிட்டானாம். விபத்து நடந்த இடத்திலே அவனை யாரும் அடையாளம் காணல்லே. ஆனா அங்கே அந்த சமயத்திலே இருந்த சில பேர் பத்திரிகையிலே எங்க விளம்பரத்தைப் பார்த்து எங்களுக்குத் தகவல் தெரிவிச்சாங்க. ஆஸ்பத்திரியிலேயும் நாங்க விசாரிச்சுத் தெரிஞ்சுகிட்டோம். டாக்டரோட வர்ணனை சோபனோட அங்க அடையாளத்தோடு ஒத்திருக்கு..”

சோபன் இப்போ என்ன செஞ்சிருப்பான்னு சொல்ல முடியாது. ஆனா அந்த சமயத்திலே அவன் தன்னோட அப்பா வீட்டுக்குள்ளேயிருந்து வெளியே வர்றதைப் பார்த்தான். அவன் இலக்கியம் படிச்சவன்தான். இருந்தாலும் ஒரு மனிதனைப் புயலால் முறிந்த ஒரு மரத்தோடு ஒப்பிட முடியும்னு அவனுக்கு அவரைப் பார்க்கறதுக்கு முன்னாலே தோணினதில்லே. அவருக்கு ஏற்பட்டிருந்த சோகத்தோட பாதிப்பு அவரோட நடையில கூடத் தெரிஞ்சுது.

மத்தவங்க ஏதாவது புரிஞ்சுக்கறதுக்குள்ளே சோபன் அறைக்கு வெளியே ஓடினான். மத்தவங்க அவனுக்குப் பின்னாலே ஓடிவந்தாங்க. அதுக்குள்ளே அவன் தன் அப்பாகிட்டே போய்ச் சேர்ந்துட்டான்.

“அப்பா!”

கிழவர் திடுக்கிட்டு நின்றார். அவரது முகத்தில் காணப்பட்ட வேதனைத் திகைப்பு அவனோட நெஞ்சைக் குத்தியது.

“அப்பா, என்னை அடையாளந் தெரியுதா?”

கிழவர் தடுமாற்றத்தோடு இன்னொரு அடிவைத்து விட்டுப் பிறகு மறுபடி நின்றார். அவரோட கிழடு தட்டின முகத்தைத் தீவிர உணர்ச்சி வேகம் மேலும் கெடுத்துவிட்டது.

இதுக்குள்ளே நாயப், குமாஸ்தா எல்லாரும் அங்கே வந்துட்டாங்க.

கிழவனார் நடுங்கற கையைத் தூக்கி, நடுங்கற குரல்லே “யாரு?” ன்னு கேட்டார்.

நாயப் சோபனோட தோள்மேலே கையை அழுத்தமா வச்சிக்கிட்டு, ‘ஒருத்தருமில்லே..அந்த தடவை மாதிரி இப்போ மறுபடியும்.. இதோட மூணு தடவை ஆயிடுச்சு” என்றார்.

ஒரு குமாஸ்தா சொன்னான், “நாங்க வரவிடல்லே.. இவன் திமிறிக்கிட்டு ஓடி வந்துட்டான்..”

கிழவர் அவனை இடைமறித்து, “ஒண்ணும் சொல்ல வேணாம், போகவிடு..!”ன்னு சொன்னார். பிறகு சோபனைப் பரிதாபமாகப் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினார்.

திகைச்சுப்போய் நின்னுக்கிட்டிருந்தான் சோபன். நாயப் அவன்கிட்டே ஏதோ சொன்னார். அவன் அதைக் காதிலே போட்டுக்கலே. அவன் எப்போ வெளிப்பக்கத்து அறைக்கு வந்தான்னு அவனுக்குத் தெரியாது.

கொஞ்ச நேரங்கழிச்சு அவனோட திகைப்பு ஒரு வழியாக் குறைஞ்சது.. வீட்டுக்குள்ளேயிருந்து ஒரு வேலைக்காரன் வந்து நாயப்கிட்டே என்னவோ சொன்னான். நாயப் சோபன்கிட்டே ஏதோ சொன்னார். முதல்லே அவனக்கு ஒண்ணம் புரியல்லே. அப்பறம் புரிஞ்சது.. நாயப் கையிலே ஒர கட்டு கரன்சி நோட்டு. அவர் குரல்லே கெஞ்சல். சோபனிடம் ஏதோ உதவி கேக்கறார்..

“நீங்க ஒரு உதவி பண்ணணும்.. ராணியம்மா சாகக் கிடக் கறாங்க, பிள்ளை செத்துப்போன செய்தி தெரியாது அவருக்கு. எப்படியும் பிள்ளையைப் பார்க்கலாம் என்கிற நம்பிக்கையிலே உசிரை வச்சிக்கிட்டு இருக்காங்க. நீங்க அவங்களோட காணாமல் போன பிள்ளை மாதிரி அவங்களுக்கு முன்னாலே போய் நில்லுங்க. இப்போ இருக்கிற நிலையிலே அவங்களுக்கு நிசம், போலி எதுவும் கண்டுபிடிக்க முடியாது. நிசமாகவே உங்களுக்கும் காணாமல் போன பிள்ளைக்கும் நிறைய ஒத்துமை இருக்கு. சாகப்போறவங்களுக்கு இந்த ஆறுதலையாவது கொடுக்கும்படி ராஜாபகதூர் உங்களைக் கேட்டுக்கறார். இதனாலே உங்களுக்க ஒரு நஷ்டமுமில்லே..” இதைச் சொல்லிட்ட நாயப் அவன் கையிலே நோட்டுக் கட்டைத் திணிச்சார்.

சோமேஷ் மௌனமானான், சிறிதுநேரம் வரை வெளியே மழை பெய்யும் அரவம் தவிர வேறு ஒலி இல்லை.

நான் கடைசியில் சொன்னேன், “சோமேஷ், உன் காதுக்குப் பக்கத்திலே ஒரு மச்சம் இருக்கே!”

சோமேஷ் சிரித்துக் கொண்டு சொன்னான், “அதனால்தான் கதை கட்டறது சுலபமாயிருந்தது.”

ஆனால் ஏனோ தெரியவில்லை.. அந்தக் குளிர்காலத்தின் மேகம் கவிந்த, இயற்கைக்கு மாறாக இருட்டிப் போய்விட்ட பிற்பகல் நேரத்தில் அவனுடைய சிரிப்புப் பேச்சை நம்பத் தோன்றவில்லை எனக்கு…

பிரேமேந்திர மித்ரா (1904 – 1988)

*’கல்லோல்’ குழு எழுத்தாளர்களில் ஒருவர். கவிதை, கதை, பாடல், கட்டுரை, குழந்தை இலக்கியம், திரைக்கதை, இவற்றைப் படைப்பதில் தேர்ந்தவர். இவர் படைத்த ‘கனாதா’, ‘பராசர் வர்மா’ போன்ற பாத்திரங்கள் சிறுவர், வயது முதிர்ந்தவர் இரு பிரிவினரையும் ஒருங்கே கவர்ந்தன. இவருடைய வாழ்க்கையின் ஒரு பகுதி காசியில் கழிந்தது. இவர் பலவகையான பணிகளில் ஈடுபட்டிருந்தார். சிறிது காலம் கல்கத்தா வானொலியின் இலக்கிய ஆலோசகராக இருந்தார். ஆனால் இறுதிவரை இவர் புகல்* பெற்றது இலக்கியத்தில்தான். இவரது எழுத்தில் மனித வாழ்க்கை யின்பால் பரிவு வெளிப்படுகிறது. வெளிப்புற வாழ்க்கையைவிட அகவயமான தேடலிலேயே இவருக்கு ஆர்வம் அதிகம். மனத்தின் ஆழத்தில் நுழைய விரும்புகிறார் இவர். சரத் நினைவுப் பரிசு (1955), ரவீந்திரர் நினைவுப் பரிசு(1958), சாகித்ய அகாதமிப் பரிசு (1967) பெற்றவர். ‘பத்மஸ்ரீ’ விருதும் பெற்றார்.

– க்வசித் கக்கனோ, 1962.

– அனைத்திந்திய நூல் வரிசை, வங்கச் சிறுகதைகள், முதற் பதிப்பு: 1997, தொகுப்பு: அருண்குமார் மகோபாத்யாய், வங்கத்திலிருந்து தமிழாக்கம்: சு.கிருஷ்ணமூர்த்தி, நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.

நன்றி: http://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email

1 thought on “காணாமற்போனவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *