கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 17, 2023
பார்வையிட்டோர்: 1,644 
 
 

1

“என் ஒத்தப்புள்ள இனி எஞ்சி நிக்குமா? அது வளந்து நிக்கறத எங்கண்கொண்டு பாப்பனா?” மடியில் படுத்து முலைப்பாலுறிஞ்சிக் கொண்டிருந்த மகனின் தலையைத் தடவிக் கொடுத்தபடி பொம்மி கேட்டாள். அவள் கணவன் தன் சிக்குப் பிடித்த தாடியைச் சொறிந்தபடி, போர்த்திக் கொண்டிருந்த ஜமக்காளத் துணியை இறுக்கி, குளிரை அடக்கிக் கொண்டான். அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அவனிடத்தும் அதே கேள்வியே தொக்கி நின்றது. கங்காமூலாவெங்கும் மலைக்காடுகளில் பரவி வாழ்ந்த ஒவ்வொரு மலைச்சாதிக் குடியானவனுக்கும், குடியானத்திக்கும் கடந்த ஆறுமாதங்களாக இதே கேள்விதான். இதே கவலைதான்.

ஐந்துகுடிப் பெரியவர்களும் குலமுன்னோர் வழிபாட்டு நினைவிடமான ஹிரயிரிக்குச் சென்று தொழுது வணங்கிவிட்டு, அருகிலிருந்த தோதகத்தி மரத்தடியில் அமர்ந்திருந்தனர். இருட்டு சாரைப்பாம்புக் கூட்டத்தைப் போல சரசரவென்று எங்கும் பரவிக் கொண்டிருந்தது. விரைந்து இறங்கும் கடுங்குளிரை விரட்ட எதிரில் சவுக்குக்கட்டைகளைக் கும்பாரமாகக் குவித்து நெருப்பு மூட்டப்பட்டிருந்தது. குடிக்கு எட்டுப் பேராக நாற்பது பேர் பெரியவர்கள் முன்னிலையில் மரியாதை நிமித்தம் இடைவெளி விட்டுக் குழுமியிருந்தனர். அவர்களின் முகங்களின் அச்சமும், துயரமும் அந்த நெருப்பின் தழலில் தெரிந்தது. சுற்றிலும் பள்ளத்தாக்குகளும், மலை முகடுகளும் இருளை ஏந்திக் கொண்டு மௌனத்தில் ஆழத் தொடங்கியிருந்தன. காற்றில் பசுந்தழைகளின் வாசனையும், சற்றுதள்ளி கொட்டிலில் அடைக்கப்பட்டிருந்த ஆடு, மாடுகளின் சாணக்கழிவுகளின் நாற்றமும் கலவையாக மிதந்து கொண்டிருந்தது. வலதுபுறமிருந்த பள்ளத்தாக்கிலிருந்து ஒரு கூகை குழந்தைக் குரலில் கேவிக்கொண்டிருந்தது.

“இந்த ரெண்டு வாரத்துல மூணு கொழந்தைங்க போயிடுச்சுங்க! அய்யா, எதாச்சும் பண்ணனுமுங்க. எங்க கொலந்தழைக்க புள்ளயே இல்லாம போயிடுமோன்னு அச்சமா இருக்குங்க,” என்றான் பொம்மியின் கணவன். கூட்டத்தின் எல்லாத் தலைகளும் ஒரு கணம் அசைந்து அவன் பக்கம் திரும்பிப் பார்த்தன. பின் திரும்பி அமைதிக்குள் செருகிக் கொண்டன.

சித்தி குடியின் தலைவர் கஜவீரன்தான் சபையில் மீண்டும் குடிகொண்ட மௌனத்தைக் கலைத்தார். “ஊருக்குள் இறங்கிய புலியைப் பார்த்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா? அது எப்படி இருந்தது?”

பொம்மி கைதூக்கினாள். “மின்னங்காலத் தூக்கி நின்னா ரெண்டாள் உயரம் வருங்க. அஞ்சடி தொலைவில பார்த்தனுங்க. கொகை மாதிரி வாயி. வாயெல்லாம் கூர்பல்லு. அய்யோ, அது வாயில எங்கொலவிளக்கக் கண்டனே!” மேலும் சொல்ல இயலாமல், குமுறி அழ ஆரம்பித்து விட்டாள். அவளது இரட்டை ஆண்குழந்தைகளில் ஒன்றைச் சென்ற வாரம்தான் புலிக்குப் பலி கொடுத்திருந்தாள்.

கஜவீரன் தலை திருப்பிப் பிற குடித்தலைவர்களைப் பார்த்தார். “ரொம்பப் பெரிசுதான். ராசா பல்லாலரிடம் சொல்லி அவருக்கு ஏவல் புரியும் நம்ம ஆட்கள் சிலரை வேற்கம்பு, வாளோடு அனுப்பச் சொல்லி உதவி கேட்கலாம். வேலெறிந்து அப்புலியைக் கொல்லலாம். உசிருக்குத் துடிக்கையில் வாள் கொண்டு பிளந்து போடலாம்,” என்றார்.

“ராசா ஆட்களை அனுப்பி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். மலைச்சாதியக் கண்டாலே ஏளனம்தான் அரண்மனைக்காரர்களுக்கு. நாம பிழிந்து தருகிற கொம்புத்தேனும், வேட்டையாடி அனுப்புகிற மானிறைச்சியும் மட்டும் வேண்டுமாக்கும். நம்ம உசிரெல்லாம் ஒரு பொருட்டே இல்ல ராசாவுக்கு. அவர் கிட்ட உதவி கேக்கறத மறந்துடுங்க,” என்றார் கோலிதோர் குடித்தலைவர். அவருக்கு ஏற்கனவே மன்னரிடம் அவமானப்பட்ட அனுபவங்கள் ஏகம் இருந்தன.

“முன்னெல்லாம் ஆட்டுக்குட்டிகளையும், கன்றுகளையும்தான் பறிகொடுத்துக் கொண்டிருந்தோம். இப்போ நம்ம குழந்தைகளையும் அந்த நாசகார புலி கொண்டு போகுது. ஏதாவது செய்யணும்,” என்றார் நைக்டாவின் தலைவர்.

“நம்ம அம்பில விஷம் தடவி புலியைக் கொல்லலாம்,” என்றது கூட்டத்திலிருந்து ஓர் ஆண்குரல்.

“பொம்மி சொல்ற கணக்குப்படி பார்த்தா, புலிமேல ஏவினா அம்புதான் உடையும். இந்தப் புலியின் தோலத் தைக்கிற அம்பைத் தயாரிக்கிறவன் நம்ம கூட்டத்துல எவம்பா இருக்கான்?” என்றார் கஜவீரன்.

“நான் அந்தப் புலியைக் கொல்வேன்,” என்றான் ஹக்கா, அருகில் நின்றிருந்த பஸ்தாவாவிடம். இருவரும் கூட்டத்துக்குச் சற்று தள்ளி, ஒரு புங்கமரத்தின் அடியில் நின்றபடி நிகழ்வுகளைக் கண்காணித்துக் கொண்டிருந்தனர். “அதன் உடம்பைத் துளைக்கிற அம்பைச் செய்வேன். அதைச் செலுத்தி அப்புலியைச் சாய்ப்பேன். ஐந்துகுடி மலைச்சாதியினரின் நல்லெண்ணத்தைப் பெறுவேன்,” என்றான் உறுதியான குரலில். பஸ்தாவா அவனை வியப்பாகப் பார்த்தான்.

“ஹக்கா ராவ், நாங்க மலைக்காட்டின் பிள்ளைகள். எங்களுக்கே அந்தப் புலிய எப்படிச் சமாளிப்பதுன்னு தெரியல. நீர் இவ்விடத்துக்கு முற்றிலும் புதியவர். உம்மால் எப்படி அதைச் சாதிக்க இயலும்?”

“எங்கள் ஹொய்சால வம்சமே தன் ஆசிரியரின் கட்டளைப்படிப் புலியைக் கொன்று வீழ்த்திய வீரனிடமிருந்து உருவானதுதானே! அவன் குருதி என்னிலும்தானே ஓடிக்கொண்டு இருக்கிறது!”

“அது சரி. உங்கள் நம்பிக்கையை மெச்சுகிறோம் ஹொய்சாலரின் வாரிசே! நீரே அப்புலியைக் கொன்று வாகை சூடுவீராக. நீங்க ஆசிரியர்ன்னு சொன்னதும் நினைவு வந்துட்டிது. குருசாமிக்கு உணவு எடுத்துட்டுப் போக நேரமாயிட்டுது. போலாமா?” என்றான் பஸ்தாவா.

2

குடியிருப்புப்பகுதியில், ஹக்கா வசித்த குடிசைக்குள் குருசாமிக்குக் கொண்டு செல்லவேண்டிய உணவு மதியத்திலிருந்தே கொதித்துக் கொண்டிருந்தது. காட்டில் சேகரித்த கிழங்குகளும், காய்களும், முயல் இறைச்சித்துண்டுகளும், சிறுதானியங்களும் உருத்தெரியாமல் வெந்து கொண்டிருந்தன. பஸ்தாவா அகப்பையை பாத்திரத்துக்குள் விட்டுக் கிண்டி இறைச்சி மணம் உணவெங்கும் ஏறி விட்டதா என்று பார்த்தான். கிழங்குகளும், இறைச்சியும் கரைந்து கூழான மணம் அறையெங்கும் அடர்ந்து பரவியது. பாத்திரத்திலிருந்து சிறு சம்படத்தில் அந்தக் கூழை ஊற்றி சற்று நேரம் மிதமான சூட்டுக்கு வரும்வரை ஆறவைத்தான். பின் சம்படத்தை ஒரு மந்தாரை இலையால் மூடி, கையில் எடுத்துக் கொண்டான். ஹக்கா ஒரு கூடைக்குள் பழங்களை அடுக்கி எடுத்தவுடன் இருவரும் குடிலுக்கு வெளியே வந்து நடக்க ஆரம்பித்தார்கள். இவ்வளவு கொண்டு சென்றாலும் குருசாமி இதில் கொஞ்சம்தான் உண்ணுவார். மீதத்தை இவர்களை அமரவைத்து உண்ணச் சொல்லுவார். அடுத்தமுறை வரும்போது இதனினும் குறைவாக எடுத்து வரச்சொல்லுவார்.

இருபுறமும் மரங்களடர்ந்த ஒற்றையடிப் பாதையில், நிலா வெளிச்சத்தில் நடந்தார்கள். ஹக்கா ஒருகையில் பழக்கூடையையும், மறுகையால் தோளில் செருகிய வில்லையும் இறுகப்பிடித்துக் கொண்டான். இருள் கவிழத்தொடங்கி நேரமாயினும், குரு உறங்க இன்னும் நாழிகை இருந்தது. உண்டபின் ஓலைச்சுவடியில் நீண்ட நேரம் எழுதிக்கொண்டிருப்பார். காவலுக்கு இருக்கிறோம் என்று சொன்னாலும் கேட்க மாட்டார்.

“ஹக்கா ராவ், நீங்க அந்தப் புலியைக் கொல்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. ஆனாலும் எங்கள் மலைக்குடிக்கு நீங்கள் கைம்மாறு செய்ய வேண்டும் என்பதற்காக அப்படிச் சொன்னீர்களா?”

“கைம்மாறும்தான். ஆனால் எனக்கு உங்கள் குடிகளால் ஆகவேண்டியதொன்றும் இருக்கிறது. விரைவில் நான் அமைக்கவிருக்கும் பேரரசின் காவலர்கள் கோலிதோர், கோண்டு, மரத்தி, நைக்டா, சித்தி ஆகிய ஐம்பெரும் மலைக்குடிகள்தாம். உங்கள் உறுதியையும், வீரத்தையும் தாண்டி தில்லி சுல்தானால் பேரரசுக்கு ஊறு விளைவித்து விடமுடியாது. என் அரசில் உங்கள் குடிகளுக்குப் பாதுகாப்பையும், கௌரவமான வாழ்வையும் உறுதி செய்வேன். உங்கள் வாழ்வை மேம்படச் செய்வேன்.” ஹக்காவின் குரல் உணர்ச்சி மேலிட்டு நடுங்கியது.

“ஹக்கா! அண்ணா! நீங்க ராசாவாகிவிட்டால் எனக்கு சமஸ்கிருதம் சொல்லித்தருவதை நிறுத்தி விட்டுப் போய்விடுவீர்களா?”

“நீ என் தம்பிடா. என் தளபதி. என் கூடவேதான் இருப்பாய். எனக்கும், என் ராஜ்யத்துக்கும் அரணாக. நீ ஏன் படிப்பு, படிப்பு என்று அலைகிறாய்? எழுதுகோல் பிடித்து என்ன செய்யப் போகிறாய்? வாளெடு. போரிடு. சரித்திரத்தில் நிலைகொள். இல்லை மெத்தப் படித்து எனக்கு அமைச்சனாக அமரவேண்டுமென்று ஆசைப்படுகிறாயா?”

பஸ்தாவா வாய்விட்டுச் சிரித்தான். “அப்படிப்பட்ட பேராசையெல்லாம் இல்லை. எங்கள் கொங்கனி மொழியில் நூல்கள் எதுவும் இல்லை. சமஸ்கிருதம் தெரிந்தால் நிறைய வாசிக்கலாமே. அன்றைக்கு குருசாமியின் ஓலைச்சுவடிகள் சிலதை புரட்டிப் பார்த்தேன். நன்றாகவே வாசிக்க முடிந்தது. ஆனால் அர்த்தம்தான் ஒன்றும் புரியவில்லை.”

“தோ போகிறோமல்லவா! அவரிடமே அர்த்தம் கேட்டுக் கொள்ளேன்.”

“ஐயோ! குருசாமியிடம் நான் பேசுவதாவது! அவரைப் பார்த்தாலே என் உடல் நடுங்குகிறது. பயம் ஒன்றும் இல்லை. அவரைப் பார்க்க படைத்தவனையே பார்ப்பது போல் இருக்கிறது.”

“உங்கள் குடிகளுக்குள் வெவ்வேறு தெய்வங்கள் இருப்பினும், இவர் ஒருவரிடம் மட்டும் எல்லாருமே ஒரே மாதிரி பக்தி செலுத்துகிறீர்கள்.”

“என்னவோ அண்ணா! நீங்கள் எங்கள் குடிகளுக்கு நல்வாழ்வு அமையப் பாடுபடுவதை நினைத்தால் என் மனம் விம்முகிறது. நான் உங்களோடேயே தோளோடு தோள் நிற்பேன். உங்களுக்காக உயிரும் தருவேன்,” என்றான் பஸ்தாவா.

ஏறத்தாழ பத்து மாதங்களுக்கு முன்பு முட்புதர்களுக்கிடையில் உடல் முழுக்கக் காயங்களுடனும், சிராய்ப்புகளுடனும் மயங்கிக் கிடந்த ஹக்காவை சித்தி குடிக்காரன் ஒருவன் கண்டுபிடித்துக் காப்பாற்றி தன் குலத்தவரிடம் கொண்டு சென்றான். தில்லி சுல்தானின் அட்டூழியம் தென்னகமெங்கும் பரவிக்கொண்டிருந்தது. பெரிய அரசுகளான காகதீயர்களும், செவுன யாதவர்களும், ஹொய்சாலர்களும் சுல்தானால் வெற்றிகொள்ளப்பட்டு விட்டனர். அவற்றின் அரசர்கள் ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்டனர். காலில் விழுந்து இறைஞ்சியவர்கள் மதம் மாற்றப்பட்டனர். ஹொய்சால வம்சத்து ஹக்கா ராவ் அவனது சகோதரன் பொக்கா ராவுடன் கம்பிலி ராஜ்யத்தில் காவலனாகப் பணிபுரிந்து வந்தபோது, கம்பிலியும் சூறையாடப்பட்டது. இருவரும் சுல்தான் படைகளுக்குச் சிக்காமல் தப்பியோடினர். அன்று பிரிந்த சகோதரன் எப்படியும் தன்னைத் தேடிக்கொண்டு வருவான் என்று நம்பிக்கையோடு காத்திருந்தான் ஹக்கா.

மலைச்சாதியினர் ஹக்காவுக்கு அரசனுக்குரிய மரியாதையை அளித்தனர். பதினேழே வயதான பஸ்தாவா ஹக்காவிடம் உடனடியாக ஓட்டிக்கொண்டான். எப்போதும் ஹக்காவோடே சுற்றித்திரிந்தான். அவன் குடிலே கதியென்று கிடந்தான். ஹக்கா அவனுக்கு ஓய்வு வேளைகளில் சமஸ்கிருதம் சொல்லிக் கொடுத்தான். அவனுடைய சுறுசுறுப்பையும், திறமையையும் கண்டு அவனைத் தன்னோடே வைத்துக் கொள்ளத் திட்டமிட்டான் ஹக்கா. மலைப்பழங்குடிகளில் ஒருவனுக்கு அமையவிருக்கும் அரசில் உயர்பதவி அளிப்பது அவர்களது நம்பிக்கையையும், ஆதரவையும் பெற வழிவகுக்கும் என்று நம்பினான். என்னதான் ராஜமரியாதை கொடுத்தாலும் மலைச்சாதிகள் ஹக்காவை வெளியாளாகத்தான் கருதினர். அவர்கள் நன்னம்பிக்கையைப் பெற்று அவர்களில் ஒருவனாகிவிட இந்தப் புலியின் வருகை ஒரு நல்வாய்ப்பாக அமைந்து விட்டது. எப்படியாவது அந்தப்புலியைக் கொன்றுவிட்டால் அவனது எண்ணம் நிறைவேறும்.

இன்று எப்படியேனும் தன் உள்ளக்கிடக்கையை மகானிடம் தெரிவித்து விடுவது என்று உறுதிபூண்டு கொண்டான் ஹக்கா. அவன் உள்ளம் திமிறிக்கொண்டிருந்தது. அவர் சொன்னால் குடிகள் கேட்கும். இந்த மலைப்பகுதியில் தவம் புரிந்து வாழும் அவரும் அண்மையில், ஹக்கா வருவதற்குச் சில மாதங்கள் முன்புதான், இங்கு வந்து சேர்ந்தார். ஆனால் ஐந்துகுடிகளுமே அவரை தங்களில் ஒருவரெனவும், தெய்வத்திற்குச் சமானமாகவும் கருதத் தொடங்கியிருந்தன. அவர் யார், எங்கிருந்து வந்தார் என்பது அங்கு யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. வடக்கிலிருந்து வந்தார் என்று மட்டும் பொதுவாகச் சொன்னார்கள். அவர் பெயர் வித்யாரண்யகர் என்று சிலரும், மதுராச்சாரியார் என்று சிலரும் சொன்னார்கள். மலைக்குடிகளுக்கு அவர் குருசாமிதான். நம்மைப் போலவே இவரும் முகமது-பின்-துக்ளக் அரசின் கொடுமைக்குத் தப்பி இங்கு வந்திருப்பாரோ என்று எண்ணிக் கொண்டான் ஹக்கா. மலைக்குடிகளுக்கிடையே அவர் சொல் வேதவாக்கெனக் கருதப்பட்டது. ஆனால் அவர் யாருக்கும் பெரிதாக எதுவும் சொல்வதில்லை. மலைக்கிராமத்திலிருந்து தள்ளி ஒரு சிறிய கற்குகைக்குள்தான் அவர் வாழ்க்கை நிகழ்ந்தது. அதிகாலை வேளைகளில் அருகிலிருக்கும் அருவியொன்றுக்குச் சென்று காலைக்கடன்களைக் கழித்து, குளித்து முடித்துத் திரும்பினாரென்றால், நாள் முழுதும் பெரும்பாலும், தியானமும், வேதாந்த விசாரமும்தான். குகையின் வாயிலுக்குத் தடுப்புகூட இல்லாமல் இருந்தது. புலியின் தொல்லை ஆரம்பித்தற்குப் பிறகு ஹக்காதான் இரவில் அடைப்பதற்கென ஒரு தட்டி செய்து கொடுத்திருந்தான். ஹக்கா வருவதற்கு முன் பஸ்தாவாதான் மதியமும், மாலையும் அவருக்கு உணவு எடுத்துச் சென்று கொண்டிருந்தான். வந்த சில நாட்களிலேயே ஹக்காவும் அவனோடு இணைந்து கொண்டான். அவன் படித்தவனென்பதால், அவர்கள் வரும்போதெல்லாம் அவனை அமரவைத்து வேதாந்தபாடம் எடுப்பார் குருசாமி. பஸ்தாவா வாயிலுக்கு வெளியில் நின்று கேட்டுக் கொண்டிருப்பான். ஹக்காவிடம் அவன் யார், எங்கிருந்து வந்தான் என்று ஒரு சொல் விசாரித்ததில்லை அவர். அவர் சொல்வதில் பெரிய ஈடுபாடு எதுவும் இல்லாவிட்டாலும், பொறுமையாக இருந்து கேட்டுக் கொள்வான் ஹக்கா. அவராக ஏதாவது விசாரித்தால் தன் நிலையையும், தனக்கு தேவைப்படும் உதவி குறித்தும் சொல்லலாம். இதுவரை அதுமாதிரி சூழ்நிலை ஏற்படவில்லை. இன்று அந்தச் சூழ்நிலையை நாமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டான் ஹக்கா.

3

உணவை எடுத்துக் கொண்டு ஹக்கா மட்டும் குகைக்கு உள்ளே போனான். பின் உடனே திரும்பி வந்து வாயிலில் நின்றிருந்த பஸ்தாவாவை உள்ளே அழைத்தான். குருசாமியே அவனை உள்ளே வரச் சொன்னாராம். பஸ்தாவாவுக்கு வியப்பு தாளவில்லை. பூரித்த முகத்துடன், குதிக்கும் நெஞ்சுடன் உள்ளே நுழைந்தான். மூன்று பேருக்கு அந்தக் குகை மிகச் சிறிதாக இருந்தது. கொஞ்சம் எக்கினால் தலை இடிக்குமளவே உயரம். வெளியில் இருந்ததை விட குகைக்குள் வெதுவெதுப்பாக இருந்ததை வியப்புடன் உணர்ந்தான் பஸ்தாவா. தாயின் கருப்பைச்சூடு போல. கரடு முரடான கரும்பாறைச் சுவர்கள் ஈரம் கசிந்ததைப் போல பளபளப்புடன் இருந்தன. ஓர் ஓரத்தில் ஒரு ஜமக்காளம் தலையணையுடன் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. இன்னொரு மூலையில் குரு மான்தோல் போர்த்திய பலகை மேல் அமர்ந்திருந்தார். இப்போதுதான் பஸ்தாவா அவரை முழுமையாகப் பார்க்கிறான். பக்கத்தில் பார்க்கும்போது குள்ளமாகத் தெரிந்தார். நெஞ்சுவரை நீண்ட தாடி. குகைக்குள் எரிந்த எண்ணெய் விளக்காலோ என்னமோ, தகதகவென்று ஜொலித்தார். பஸ்தாவாவைப் பார்த்துப் புன்னகைத்து எதிரில் அமரும்படி சைகை காட்டினார். அவர் கண்களின் கருமணிகள் உறைந்த குளத்தில் சிக்கிய கருங்கூழாங்கற்கள் போலிருந்தன. ஹக்காவும் அவனுக்கருகில் அமர்ந்து கொண்டான்.

“உன் பெயர் என்ன?” என்றார். அவர் குரல் மெல்லியதாக, பலவீனமாக இருந்தது. பஸ்தாவா அவருக்குப் பின்னால் குவிந்திருந்த ஓலைச்சுவடிக் கட்டுகளை நோட்டம் விட்டபடியிருந்தான். இவ்வளவும் இவர் வாசிக்கிறாரா! அல்லது இவரே எழுதியவையா இவையெல்லாம்!… ஹக்கா அவனது தொடையில் இடித்து அவன் கவனத்தைத் திருப்பினான். பஸ்தாவா சுதாரித்துக் கொண்டு பெயர் சொன்னான். அவர் ஏதோ சொல்ல வந்து, பின் சொல்லாமல் சற்று நேரம் புன்னகைத்தபடியிருந்தார்.

ஹக்கா தயக்கத்துடன் ஆரம்பித்தான். “குருவே, உங்களிடம் எனக்கு ஒரு விண்ணப்பமிருக்கிறது.”

குருவின் தலை மெல்ல அசைந்து ஹக்கா பக்கம் திரும்பியது. உதட்டில் புன்னகை மாறவில்லை. தொடர்ந்து பேசு என்பதைப் போல அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

ஹக்கா பொறுமையாகத் தன் நிலையை விளக்கினான். குருவின் ஒரு சொல் எவ்வாறு ஐந்துகுடி மக்களையும் தன் பக்கம் திருப்பி, தனக்கு ஆதரவளிக்க வைக்கும் என்று விவரித்தான். புலியின் தொல்லையைக் குறித்தும் சொல்லி, குரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டான். புலியைக் கொல்வதற்கான ஆயத்தங்களை தான் மேற்கொள்ளப் போவதாக அவரிடம் தெரிவித்தான்.

குரு மென்மையாகத் தலையாட்டி ஆமோதித்துக் கொண்டிருந்தார். பின் சொன்னார். “ஹக்கா, நீ பேரரசனாக வருவாய்!”

பின் தொடர்ந்தார். “பாடத்தை ஆரம்பிக்கலாமா?”

குரு அப்போது தான் இயற்றிக் கொண்டிருந்த ஜீவன் முக்தி விவேகம் என்ற நூலில் இருந்து ஜீவன் முக்தி ஸ்வரூபம் என்ற பகுதியை விளக்கினார். அவரது விளக்கம் இப்போது பஸ்தாவாவுக்கு மிகத் தெளிவாகப் புரிந்தது. அவர் சமஸ்கிருதத்தில் எழுதியிருந்த நீண்ட வாக்கியங்களை பதம் பிரித்து ஒவ்வொரு சொல்லாக விளக்கியபின், வாக்கியத்தின் முழு அர்த்தத்தையும் பொறுமையாகச் சொன்னார். ஜீவன் முக்தி என்றால் என்ன என்பதற்கான விளக்கம் அந்த வாக்கியம். ‘நான் ஒரு செயலைச் செய்பவன், அதன் பலனைத் துய்ப்பவன், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நான் துக்கமாக இருக்கிறேன்’ என்பன போன்ற எண்ணங்களே பந்தம் அல்லது சம்சாரத்துக்குக் காரணம். ஒருவன் தன் உண்மையான சொரூபம் பற்றிய அறியாமையினாலேயே இவ்வாறான எண்ணங்களுக்கு ஆட்பட்டு துக்கத்துக்குள்ளாகிறான். இதுபோன்ற தவறான எண்ணங்களினின்றும் விடுபடுதலே உண்மையான விடுதலை. இதுவே ஜீவன் முக்தி எனப்படுகிறது என்று விளக்கினார். உடல், மனம், புத்தி, அகங்காரம் என்பன ஜடப்பொருட்களே எனவும், சுத்த அறிவு மயமான வஸ்துவான நான் என்ற ஆத்மாவே அவற்றுக்கு இருப்பைத் தருகின்றது என்றும் சொன்னார். பின் இக்கருத்துக்களுக்கான ஆக்ஷேபணைகளை எழுப்பும் பூர்வ மீமாம்சகர்களுடைய தரப்பையும், அவற்றுக்குத் தெளிவான பதில்கள் கூறி வேதாந்தக் கருத்துக்களை நிலைநிறுத்தும் சித்தாந்திகளுடைய தரப்பையும் அவர் மாறி மாறி அமைத்து, அந்தப் பகுதியை மிகுந்த சுவாரசியமாக்கியிருந்தார். பஸ்தாவா கண்கள் மின்ன அவர் சொற்களை விழுங்கிக் கொண்டிருந்தான். ஹக்கா தலையை பலமாக ஆட்டியபடியிருந்தான்.

குருவிடம் விடைபெறும் போது ஹக்கா மீண்டும் நினைவுறுத்தினான். “ஒரு சொல், ஒரு சொல் போதும் குருவே!” என்றான். குரு அவனுக்கு ஒரு புன்னகையை பதிலாகத் தந்தார்.

குடிலுக்குத் திரும்புகையில் பஸ்தாவா சொன்னான். “ஹக்கா, இன்றைக்கு குருசாமி சொன்ன சமஸ்கிருத பதங்கள் தெளிவாகப் புரிந்தன. அவர் சொற்களை நன்றாக அனுபவித்தேன்.”

“நான் கூட நினைத்தேன். இன்று அவரது விளக்கம் மிகவும் எளிய மொழியில் இருந்தது. உனக்காகத்தான் அவ்வாறு விளக்கினாரோ என்று எனக்கு ஐயம் வந்தது.”

“இப்படி வாசிக்க முடிந்தால் வாழ்நாள் முழுவதும் வாசித்து அனுபவிக்கலாமே!”

“வாளெடுத்தவனுக்கு ஏது நூலெடுக்க நேரம்? மக்களைக் காப்பதே முழு நேரப்பணியாக இருக்கையில் வேதாந்த விசாரம் எல்லாம் மூத்து முதிர்ந்துதான் செய்ய வேண்டும். எனக்குத் தளபதியாக இடப்பக்கம் நிற்கப்போகிறவனுக்கு அதற்கெல்லாம் எங்கே நேரம் கிடைக்கப் போகிறது?” பேசிக்கொண்டே சென்றவன் சட்டென்று நின்றான்.

“என்ன?”

“அங்கே பார்!” என்று கைகாட்டினான். அவர்கள் நின்றிருந்த இடத்திலிருந்து கீழே சமவெளி நிலவொளியில் ஊறிக் கொண்டிருந்தது. காட்டுமரங்களும், பொட்டல் நிலங்களுமாக விரிந்த பரப்பு. “அங்கேதான் என் அரசை அமைக்கப் போகிறேன். துங்கையும், பத்ரையும், நேத்ராவதியும் கலந்து ஓடும் ஆறுகளின் கரையில் செழித்துத் தழைக்கப் போகின்றனர் என் மக்கள். பாரதப்பெருநிலம் இதுவரை காணாத பேரரசாக அது இருக்கும். தில்லியிலிருந்துகொண்டு அராஜகம் செய்யும் சுல்தான்கள் இந்தப் பேரரசின் பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்க முடியாது,” என்றான்.

பஸ்தாவா நிலவொளியில் ஹக்காவின் கனவு திகழும் கண்களைக் கண்டான்.

4

கடந்த பத்து நாட்களாக புலியால் எந்தத் தொல்லையும் இல்லை. புலி என்னேரமும் ஊருக்குள் இறங்கி விடலாம் என்று மலைக்குடிகள் நடுங்கியபடியே வாழ்ந்து கொண்டிருந்தனர். இரும்பாலான எழுத்தாணிகளை சித்தி குடியினரின் மர அம்புகளின் முனையில் செருகி உறுதி வாய்ந்த அம்புகளைத் தயாரித்துக் கொண்டிருந்தான் ஹக்கா. அடுத்தமுறை புலி இறங்கும்போது தயாராக இருக்க வேண்டும் என்று உறுதி பூண்டு கொண்டான். பஸ்தாவாவை எப்போதும் தன்னோடே இருக்குமாறும், அவனுக்கும் சேர்த்தே அம்புகளைத் தயாரித்துக் கொண்டிருப்பதாகவும் சொன்னான். பஸ்தாவா தோதகத்தி மரத்துண்டுகளைக் கொண்டு இழைத்து, இழைத்து ஓர் அலமாரி செய்து கொண்டிருந்தான். “குருவின் குகைக்குள் நிறைய ஓலைச்சுவடிகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றையெல்லாம் ஒழுங்கு படுத்தி இந்த அலமாரியில் வைத்தால், நினைத்தபோது நினைத்த சுவடியை எடுக்க முடியுமே!” என்றான்.

அலமாரி செய்து முடித்ததும் குருவிடம் கொண்டு சென்றார்கள். அது குகையின் வாயிலை விட உயரமாக இருந்தது. படுக்கைவாட்டில்தான் உள்ளே கொண்டு செல்ல முடிந்தது. அப்போதும் அதன் அகலம் குகையின் வாயிலுக்கு முக்கால் பாகம் உயர்ந்து நின்றது. இவ்வளவு பெரிய அலமாரி இப்போது தேவையா என்பது மாதிரி ஹக்கா பஸ்தாவாவைப் பார்த்தான். குரு வழக்கம்போல ஒன்றும் சொல்லவில்லை. அலமாரியை உள்ளே கொண்டு வாயிலுக்குப் பக்கவாட்டில் வைத்ததும், பஸ்தாவா மூலையில் குவிந்திருந்த ஓலைச்சுவடிகளை எடுத்து அலமாரியில் ஒழுங்கோடு அடுக்கி வைத்தான்.

இரண்டு நாட்கள் கழித்து புலி ஊருக்குள் இறங்கி விட்டதாகச் செய்தி வந்தது. குடியானவர்கள் வில்லெடுத்துக்கொண்டு திசைக்கொரு ஆளாகக் காட்டுக்குள் திரிந்தார்கள். கஜவீரன் ஹக்காவை அழைத்து, குருசாமியின் குகைக்குப் பின்புறமிருக்கும் பள்ளத்தாக்கில் அரக்கு நிறத்தில் அசைவுகளைக் கண்டதாக ஒரு குடியானத்தி சொன்னதாகவும், எனவே நாள் முழுதும் குருசாமியின் குகைக்கருகிலேயே காவல் இருக்குமாறும் கேட்டுக்கொண்டார். புலியைத் தேடித்திரிய வேண்டிய ஆர்வத்திலிருந்த அவன் வேறு வழியின்றி அவர் வேண்டுகோளை ஏற்று அங்கு செல்ல வேண்டியதாயிற்று. அதிகாலையிலேயே அவனும், பஸ்தாவாவும் குருவின் குகைக்குச் சென்று விட்டார்கள். குரு உள்ளே வழக்கம்போல தன் செயல்களைத் தொடர்ந்தபடியிருக்க, இருவரும் குகைக்கு வெளியே இருந்த புங்கை மரத்தடியில் நின்று காவல் காத்தார்கள்.

நான்கு மணி நேரம் நின்றிருப்பார்கள். வெயில் நன்கு ஏறி முதுகில் சுள்ளென்று உறைத்தது. ஹக்கா நெற்றி வியர்வையை வழித்து விட்டுக் கொண்டு, சற்று நேரம் அமரலாம் என்று சொன்னான். இருவரும் அமர எத்தனித்த போது, எதிர்த்திசையிலிருந்து ஒருவன் பதறிக்கொண்டு ஓடிவந்தான். புலி குடியானவப்பகுதியில் தாவித்தாவி ஓடிக்கொண்டிருந்ததை யாரோ பார்த்ததாக மூச்சிரைத்துக் கொண்டே தெரிவித்தான். உடனே ஹக்கா பஸ்தாவாவிடம் நீ இங்கேயே இரு, நான் போய்ப் பார்த்து விட்டு வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு, வந்தவனோடு புறப்பட்டுச் சென்றான்.

ஹக்கா சென்றவுடன் அமரத் தோன்றவில்லை பஸ்தாவாவுக்கு. உள்ளுக்குள் பதற்றம் ஏறிக்கொண்டே வந்தது. இந்தப் புலி என்ன மாயாவியா? ஒரு கணம் இங்கிருப்பதாகச் சொல்கிறார்கள். பின் அங்கிருப்பதாகச் சொல்கிறார்கள். திடீரென்று புலி இங்கு வந்து விட்டால் என்ன செய்வது? உடல் மெல்ல உதறத் தொடங்கியது. முகம் வியர்த்து, கழுத்து வழியாக வழிந்து நெஞ்சை ஈரமாக்கிற்று. அவனைச் சுற்றிக் காற்றே சுத்தமாக நின்றிருந்தது. மூச்சை இழுத்து, இழுத்து நுரையீரலை நிரப்பிக் கொண்டான். என்னால் அந்தப் புலியை எதிர்கொள்ள முடியுமா? குருவின் வாயிலில் தட்டி வைக்கப்பட்டிருக்கிறதா? இத்தனை பெரிய புலிக்கு தட்டி எம்மாத்திரம்? ஐயோ, புலி குகைக்குள் புகுந்து விட்டால்!…ஓடிப்போய் குகைவாயிலில் தட்டி இருக்கிறதா என்று உறுதி செய்துவிட்டு, திரும்பி வந்து மரத்தடியிலேயே நின்று கொண்டான்.

சட்டென்று தான் யாருமற்றுத் தனியாக இருப்பது போலிருந்தது. அவன் பிறந்ததிலிருந்து பழகி வாழ்ந்த மலைக்காடுகள் அவனைக் கைவிட்டுவிட்டன போலிருந்தது. மேகங்களற்ற வானம் போவென்று விரிந்து கிடந்தது. அவனது பாதங்களுக்குக் கீழே நிலம் நழுவதைப் போலிருந்தது. பதினேழு வருடங்கள் மலைக்காடுகளில் சுற்றித் திரிந்த இந்த உடல் புலிக்கு இரையாகப் போகிறதா? குருசாமி சொன்னதைப் போல உடல் என்பது அழியும் சதைப்பிண்டம் மட்டும்தானா?

அவனுக்கு இடதுபக்கமுள்ள பள்ளத்திலிருந்து ஏதோ அசையும் ஒலிகள் கேட்டன. புலியை எதிர் நோக்கி நடுங்கியபடி திரும்பினான். அங்கிருந்து எதுவும் வெளிவந்தமாதிரித் தெரியவில்லை. ஆனால் பெரிய மூச்சுச் சப்தம் தெளிவாகக் கேட்டது. மேலே சில கிளைகள் அசைந்தன. தலையை மேலே உயர்த்துவதற்கு முன், வானிலிருந்து குதிப்பதைப் போல பொத்தென்று அவன் முன்னால் விழுந்து, எழுந்து நின்றது புலி.

அந்த மிருகம் கிட்டத்தட்ட பொம்மி சொன்ன உடற்குறிகளை ஒத்திருந்தது. அதன் குண்டுவிழிகள் பயங்கரமாக இவனை உறுத்துப் பார்த்தன. நின்ற நிலையில் இவனது நெஞ்சளவு உயரம் இருந்தது புலி. பார்த்தபடியே இருந்தபோதும் அவன் மீது பாய எத்தனிக்கவில்லை. பஸ்தாவாவும் அச்சத்தில் உறைந்து நின்றிருந்தான். நகர்ந்தால் ஒருவேளை பாய்ந்து விடுமோ என்று அஞ்சினான். புலி முன்னங்கால்களை தரையில் வைத்து மெல்லப் பின்னிழுத்து கொட்டாவி விட்டது. திறந்த அதன் வாயில் கோரமான கூர்பற்கள் தெரிந்தன. அடுத்த நொடி பாய்ந்து விடும்போல இருந்தது. பஸ்தாவா துணிச்சலை வரவழைத்துக் கொண்டு அம்பை உருவி, வில்லில் பொருத்தி விட்டான்.

அவனது அசைவைக் கண்டதும் அஞ்சியதைப் போல புலி பக்கவாட்டில் திரும்பியது. அவன் விட்ட அம்பு அதன் வாலை உரசிச் சென்றது. புலி ஓடிச் சென்று குருவின் குகைக்குள் புகுந்து கொண்டது. பஸ்தாவா பதறி குகையை நோக்கி ஓடினான். தட்டி என்னவாயிற்று? ஓடி நுழைய முற்படுமுன், அங்கு குரு வாயிலை அடைத்துக் கொண்டு நின்றிருந்ததைப் பார்த்தான். ஒரு கணம் அவர் பின்னால் புலியைப் பார்த்ததும், “குருசாமி!” என்று அலறினான். அவர் எட்டி அவன் நெஞ்சில் மிதித்தார். பஸ்தாவா தடுமாறிப் பின்னால் சென்று விழுந்தான். குரு பக்கவாட்டிலிருந்த அலமாரியைச் சரித்து குகையின் வாயிலை மறைத்தார். உள்ளே புலியின் பயங்கரமான உறுமல் கேட்டது. குருவிடமிருந்து அமங்கலமான ஒரு கேவல் வெளிப்பட்டது. பஸ்தாவா எழுந்து குடிலுக்குப் பக்கவாட்டில் இருக்கும் சாளரத்தின் பக்கம் ஓடினான். உள்ளே அவன் கண்ட காட்சிக்கு அவன் உடம்பெல்லாம் உதறிவிட்டது. குரு தரையில் மல்லாக்க விழுந்து கிடக்க, புலி அவர் நெஞ்சிலும், வயிற்றிலும் முன்னங்கால்களை வைத்து அழுத்தி, தொண்டையைக் கவ்விக் கொண்டிருந்தது. குருவின் கால்கள் தரையிலிருந்து தூக்கிப்போட்டுத் துடித்தன. பஸ்தாவா தன் வில்லில் அம்பு பொருத்தி சாளரத்தின் வழியாக விட்டான். தொடர்ந்து அம்புகளைச் செலுத்தியபடியே இருந்தான். ஓர் அம்பு புலியின் வயிற்றில் தைத்தது. இன்னொன்று அதன் கழுத்தில் பக்கவாட்டில் புகுந்து மறுபுறம் வெளிப்பட்டு நின்றது. புலி மெல்லத் தடுமாறி குருவை விட்டு அகன்றது. குருவின் கோலத்தைக் கண் கொண்டு பார்க்கமுடியவில்லை பஸ்தாவாவால்.

சற்று நேரம் கழித்து ஹக்கா திரும்பி வந்தபோது குரு இறந்திருந்தார். புலியும் இறந்து கிடந்தது. உள்ளே செல்ல மனம் பொறுக்காமல் பஸ்தாவா வெளியிலேயே ஒரு பாறை மீது அமர்ந்து தேம்பிக் கொண்டிருந்தான். ஹக்காவைக் கண்டதும் எழுந்து, ஓடிச்சென்று அவனைக் கட்டிக்கொண்டு கதறினான். “ஐயோ, அண்ணா! குருவை என்னால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே!”

ஹக்கா அவனை இறுக்கி அணைத்து, ஆறுதல் கூறினான்.

5

ஐந்துகுடிகளின் மூத்தோர் நினைவிடமான ஹிரயிரியில் குருவின் பிரதிமையும் இடம் பெற்றுவிட்டது. குடிகளின் நல்வாழ்வுக்காகத் தன் உயிரையே தியாகம் செய்ததனால் அவர் அவர்களிடையே தெய்வமெனப் போற்றப்பட்டார். புலியைக் கொன்று ஊர் மக்களை நிம்மதிப் பெருமூச்சு விடச் செய்த இரு வீரர்களையும் குடிகள் மெச்சின. ஐந்துகுடி மக்களின் முகங்களில் நீண்ட நாட்களுக்குப் பிறகு சிரிப்பும், தளுக்கும் திரும்பியிருந்தது. ஹக்கா குடித்தலைவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவனானான். அவனோடு சமவெளிக்குச் சென்று காடு திருத்தி, குடில்களை எழுப்பி, அரசமைவதற்கு அச்சாரம் போடுவதற்காக நூற்றைம்பது குடியானவ இளைஞர்கள் அளிக்கப்பட்டனர். எல்லாரும் மலையிறங்கும் நாள் அது. தம்பட்டையையும், முழவையும் ஒலித்து, பீக்கியையும், சிங்கியையும் இசைத்து, கால் மணிக்கச்சங்களை அணிந்தபடி குதித்து நடனமாடி ஒரு திருவிழா போலவே அவர்களுக்கு விடைகொடுத்தனர் ஐந்து குடிகளும். அவர்களுக்கு தேவையான உணவும், பொருட்களும் மாட்டுத்தோலில் சுற்றப்பட்டு, கழுதைகளின் மேல் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தன. ஹக்காவுக்கும், பஸ்தாவாவுக்கும் குதிரைகளை அளித்திருந்தனர் குடித்தலைவர்கள். தனது குதிரையின் சேணத்தைச் சரி செய்தபடி ஹக்கா தனக்குத் துணையாக வருபவர்களை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தான். அவன் விழிகள் அவனது தளபதியான பஸ்தாவாவைத் தேடின.

பஸ்தாவா எதிரிலிருந்த மேட்டுப்பகுதியிலிருந்து ஓட்டமும், நடையுமாக மூச்சிரைக்க வந்து கொண்டிருந்தான். அவன் முகம் சோர்வுற்று, களையிழந்து காணப்பட்டது.

“மன்னிக்க வேண்டும் ஹக்… அரசே! குருசாமியின் குகைக்குச் சென்றிருந்தேன். அவரது சுவடிகள் அரித்து விடாமல் இருக்க பாதுகாப்பாக மரப்பெட்டிகளுக்குள் அடுக்கி வைத்து விட்டு வந்தேன்.”

“பிரயாணத்துக்குத் தேவையான எல்லாம் ஆயத்தமாக இருக்கிறதா என்று பார்த்து விட்டாயா?”

“இதோ பார்த்து விடுகிறேன் அரசே!” என்று அங்கிருந்து விலக முயன்றான். அவன் கண்கள் ஹக்காவாவைத் தவிர்த்தன. அவன் தோளில் கைவைத்து நிறுத்தினான் ஹக்கா.

“உனக்கு வேண்டிய பொருட்களையும், ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டாயா?”

“ம்… எல்லாம் என் தாயிடம் சொல்லியிருக்கிறேன். அவள் எடுத்து வைத்திருப்பாள்.”

“வா என்னோடு,” என்று சொல்லி அவன் தோளில் கைபோட்டு அழைத்துச் சென்றான். இருவரும் குடியிருப்புப் பகுதியிலிருந்து விலகி, கல்தாமரையும், பூனைக்காலியும், கஸ்தூரி மஞ்சளும் முளைத்துக் கிடந்த மலை விளிம்பினோரம் நடந்து வந்தார்கள். விளிம்புக்கப்பால் சூரியன் எழுந்து மஞ்சள் ஒளியைப் பரப்பிக் கொண்டிருந்தான். ஹக்கா ஏதாவது பேசுவான் என்று பஸ்தாவா எதிர்பார்த்தபடியே நடந்தான். ஆனால் அவன் ஆழ்ந்த சிந்தனையிலிருந்ததைப் போல இருந்தது. மௌனம் அவர்களிருவரையும் போர்வை போலப் போர்த்தியடி இருந்தது. மண்பாதையில் விழுந்து கிடந்த சருகுகள் நொறுங்கும் ஒலி தவிர வேறெதும் ஒலி அங்கில்லை.

தன் தோளில் தொங்கிய சுருக்குப் பைக்குள் இருந்து இரண்டு ஓலைச்சுவடிக் கட்டுகளை வெளியே எடுத்தான் ஹக்கா. “இவை நைஷ்கர்ம்ய சித்தி சூத்திரங்கள். குருநாதர் அருளியவை. என் அரண்மனையில் அவர் இருப்பென அமர்த்தி வைக்க ஆவலுற்று இவற்றை எடுத்து வைத்திருந்தேன். இந்தா, இவற்றையும் நீ எடுத்துக் கொள். அவரது அறிவுக் கருவூலம் பெட்டிகளுக்குள் முடங்கி இருக்க வேண்டாம். நீ இங்கேயே இருந்து அவற்றை மெல்லக் கற்கத் துவங்கு. நான் உனக்குச் சொல்லித்தந்த சமஸ்கிருதம் அதற்குப் போதுமானது.”

“அண்ணா! நான் உங்களோடு வரவில்லையா?”

“உன் இடம் இங்குதான் பஸ்தாவா. நீ இங்கிருந்து குருவின் நூற்களைக் கற்றுக் கொண்டிரு. நான் உன்னிடம் கற்க ஆட்களை அனுப்புகிறேன். உனக்கு அறிவில்தான் நாட்டம் அதிகம்.”

“அண்ணா! அன்று குரு என்னைத் தள்ளி விட்டு விட்டுத் தன்னையே பலி கொடுத்துக் கொண்டார். ஏதோ ஒன்று அழியும் உடல் தாண்டியும் நிரந்தரமாக உள்ளது என்று அவர் சொன்னதற்குச் சான்றாகவே அவர் செயல் அமைந்தது. அது என்னவென்று நான் அறியவேண்டாமா? அதை அறியத்தான் என் உள்ளமெல்லாம் தவிக்கிறது அண்ணா!” என்றான் பஸ்தாவா, கெஞ்சலாக.

ஹக்கா தலை திருப்பி, கீழே பார்த்தான். காடுகளும், பொட்டல்களுமாக பரந்து விரிந்த சமவெளியின் மீது, அமையவிருக்கும் அவனது அரசின் மீது, சூரியனின் மஞ்சள் வெளிச்சம் பொழிந்து தழுவிக் கொண்டிருந்தது.

– சொல்வனம் இதழில் September 2022, இதழ்-279

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *