ஓர் ஆலமரத்தின் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 17, 2023
பார்வையிட்டோர்: 1,489 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தலைக்கு மேலே ஹெலிகள் உறுமுது. ஆகாசத்திலி ருந்து வெடிகள் பறக்குது. காம்பிலிருந்து ஷெல்கள் வருகுது. கடலில கண்போட்டிலிருந்து பீரங்கிச் சத்தம் கேக்குது. என்னமோ ஏதோ என்று பயமாயிருக்கு.

மூணு கெழமையா றோட்டில் சென்றி நின்ற பொடி யன்கள் பின்வாங்கிப் போறாங்க. கடலால வந்திறங்கின ஆமி, இங்க ஆமிக்காம்பில் உள்ளவனோட சேர்ந்திற்றாங் களாம். இருட்டுற வேளையில சத்தம் ஒண்ணையும் காணம். அமைதி!

விடிஞ்சு பாத்தா ஊர ஆமி கைப்பத்திற்று. எல்லாத் தெருவிலயும் அவங்க போறதக் காணுறன்.

ஆமிக்காரன் ஊரக் ‘கிளீயர்’ பண்ணத் தொடங்கீற்றான். கிளீயர் பண்ற தெண்டாத் துப்புரவாக்கிறது.

எங்கட வீட்டுச் சுவரிலயும் நிலயிலயும் சிங்களத்தில் ‘முஸ்லீம் வீடு’ என்று அவசர அவசரமா எழுதிறம்.

ஆமிக்காரன் எல்லாத் தமிழர் வீட்டையும் ஒடச்சித் துறந்து, ஆளில்லாத வீட்டில இருக்கிற சாமான் எல்லாத் தையும் சுழட்டு எடுக்கிறான். கதவு யன்னலக்கூடக் கழட்டுறான். ரேடியோ, ரீவி, டெக் எல்லாத்தையும் எடுக்கிறான். மற்றதையெல்லாம் அள்ளிக் குமிச்சி நெருப்பு வைக்கிறான். நெருப்பு எல்லாத்தையும் கிளீயர் பண்ணுது.

போர் தொடங்கின அன்று நான் ஆலமரத்தடியில் குந்திக் கொண்டிருக்கன். வேதநாயக வாத்தியார் தன் புத்தகங்கள் சிலதையும் பேரப் பயலையும் தூக்கிக் கொண்டு இந்த வழியால போறார். எல்லாத் தமிழ்ச் சனங்களும் சூட்கேசையும் மூட்டை முடிச்சுகளையும் தூக்கிக் கொண்டு ஊரைவிட்டு ஓடுதுகள். குஞ்சுகுறுமான் கூட ஓடுது.பாத்தாப் பாவமா இருக்கு.

போய்க் கொண்டிருந்த வாத்தியார் என்னிட்டச் சொன்னார். ”எழுபது வருஷம் வாழ்ந்திட்டன். இனிச் சாகிறதப் பத்திக் கவலப்படல்ல. ஆனா என் பேரப் பிள்ளைகளைக் காப்பாத்த வேணும். அதுகள்ர அம்மாவும் மட்டக்களப்பு றெயினிங் கொலிச்சில. என்னட்ட உள்ள சொத்து என் பேரப்பிள்ளைகளும் என்ர புத்தகங்களுந்தான். உன்னால முடிஞ்சா என்ர புத்தகங்களைக் காப்பாற்று.”

அவருக்குப் புத்தகப் பைத்தியம். மாதா மாதம் சம்பளம் எடுத்ததும் ஏதாவது புத்தகம் வாங்காட்டா அவருக்குச் சாப்பாடு உடலில் ஒட்டாது. ஐம்பது ஆண்டாச் சேத்த புத்தகங்கள் அவரிட்ட இருக்கு. தமிழ், ஆங்கிலம் எல்லாப் புத்தகத்தையும் ஒழுங்காக அடுக்கி வைப்பார்.

ஏழைக் கமக்காரன் தன் துண்டு நிலத்தைக் காப் பாத்துவது போலத் தன்ர நாட்டைக் காத்தானாம் தசரதன் என்று கம்பன்ர பாட்டில் படிச்சிருக்கன். வேத் நாயக வாத்தியாரும் தன் புத்தகங்களை அப்படித்தான் காப்பாத்தினார். எந்த நேரம் போனாலும் அவர் தன் புத்தக அறையில் சாய்மனைக் கதிரையில் இருந்து கொண்டு வாசிச்சிக் கொண்டிருப்பார். ஏதாவது ஒரு விஷயத்தக் கேக்கப் போனால், அது இன்ன புத்தகத்தில் இத்தனையாம் பக்கத்தில இருக்கு என்று சொல்லி எடுத்துத் தருவார். பேசக்குள்ள சொல்வார். “நான் வாத்தியாராப் போன புதிசில நூத்தைம்பது ரூபாதான் சம்பளம். அதில் பத்துப் பதினைஞ்சு ரூபாய்க்கு அஞ்சு ஆறு நல்ல புத்தகம் வாங்குவன். இப்ப மூவாயிரத்துக்கு மேலே பென்சன். ஆனா முப்பது ரூபாய்க்குப் புத்தகம் வாங்கேலா. அவ்வளவு செலவு”.

அவர் என்னிடம் புத்தகங்களைக் காப்பாற்றும்படி சொன்ன அடுத்தநாள் நான் அவர் வீட்டுப் பக்கம் போனேன். தெருவில பொடியன்கள் சென்றி நிற்கிறாங்க. அறுபத்தினாலுக்கும் பச்சனூருக்கும் போன சனம், ஒவ்வொருவராக வந்து தங்கள் வீடுகளிலே எடுக்கக்கூடியதை எடுக்குதுகள்.

ஆனா வேதநாயகத்தார்ர வீட்டுக்க நான் எப்படிப் போறது? தமிழன் வீட்டுக்க, சோனவன் பூந்து களவெடுக்கிறான் என்று சனம் கூச்சல் போட்டால் வீண் கரச்சல். நான் மனமடிவோட திரும்பி வாறன். அவர்ர புத்தகங்களப் பற்றி எனக்கும் கவலதான்.

இப்ப அவர்ர புத்தகங்கள் ஒன்றும்இல்ல. களவெடுத்த வனும் கொள்ளையடிச்சவனும் அத எடுத்திருக்க மாட் டான். நாய்க்கு ஏன் தோல்த் தேங்காய்? நெருப்புத்தான் வெச்சிருப்பான்கள். யாழ்ப்பாண வாசிக சாலைக்கு நெருப்பு வெச்சவங்கதானே. நெருப்பு எல்லாத்தையும் கிளீயர் பண்ணியிருக்கும்!

கலவரத்துக்குள்ள நானும் ஆலிம் சேனையிலிருந்து ஊருக்க வந்திற்றன். பச்சனூருக்கும் அறுபத்தினாலுக்கும் ஓடிப்போன சனத்தை ஆமிக்காரன் பிடிச்சு வந்து, இப்ப எல்லாச் சனமும் ரெண்டு வேதக் கோயிலிலயும் அகதியா இருக்கு. நான்கூட என்ர தம்பீர வீட்டில் அகதிதான்.வீட் டுக்க இருக்கேலா செய்றதுக்கு வேலயும் இல்லே. வெளிக்கிட்டுக் குளத்தடித் தெருவால வந்து ஆலமரத்த டிக்கு வாறன்.

ஆலமரத்தடியில நின்று பாத்தா வடக்குப் பக்கமாத் தமிழர் தெரு. வீடெல்லாம் ஒடஞ்சி கெடக்கு. சுவர் மட்டும் சில இடத்திலே இருக்கு. புள்ளயார் கோயிலும் ஓடஞ்சுதான் கெடக்கு.

மேற்குப் பக்கமா இருந்த முஸ்லீம் கடைகளும் ஓடஞ்சிதான் கெடக்கு. ஆனா இது சண்டைக்க ஓடயல்ல. இந்திய ஆமிக்காரன் வர முதல் ஒருநாள் ராத்திரி குண்டுச் சத்தமும் துவக்கு வெடியும் கேக்குது. ஆமிக்காரன்தான் சுடுறான் என்றெண்ணிக் கொண்டு சாமத்தோடு சாமமா நீக்கிலா வாத்தியார் எங்க தம்பி வீட்ட பாதுகாப்புக்கு வந்திருக்கிறார். சத்தமெல்லாம் அடங் கினப் பொறகு பாத்தா முஸ்லீம் கடையெல்லாம் எரியுது. புலிதான் பத்த வச்சிருக்கு. புலி போனப் பொறகு விடியச் சாமத்தில பொறகும் சத்தம் கேக்குது. முஸ்லீம்கள் தமிழ் வீடுகளுக்கு நெருப்பு வைக்கிறாங்க, ஆனால் அடைக்கலம் தேடி வந்த நீக்கிலா வாத்தியார் தம்பி வீட்டிலதான் இருக்கார். நல்லா விடிஞ்சதும் தம்பி அவரைப் பத்திர மாகக் கூட்டிக் கொண்டுபோய் வேதக் கோயிலடியில் விட்டிற்று வந்தான். நீக்கிலா வாத்தியார் இப்பவும் சொல்வார். “இந்த ஊரில இன்னமும் மனுசத் தன்மை சர்கல்ல.”

குளத்தடித் தெரு தொடங்கிற எடத்திலயும் வீடெல்லாம் ஒடஞ்சுதான் கெடக்கு. ஆனாச் சந்தியில நிக்கிற ஆலமரம் மட்டும் இன்னமும் அப்படியேதான் இருக்கு.

இந்த ஆலமரம் பெரிய மரமில்ல. தன்படுவனாக் கொட்ட விழுந்து முளைச்சாப் பெரிசாயிருக்குமோ என்னவோ!

முப்பது நாப்பது வருசத்துக்கு முன்னே P.W.D. ஓவசியர் இந்த ஆலங்கன்றை எங்கிருந்தோ பிடுங்கிக் கொண்டு வந்து இங்க நாட்டினாராம். தண்ணி ஊத்தி வளத்தாராம். பிறகு ஆலங்கன்றைச் சுற்றிச் சுவர் டிப்பர்ல எழுப்பினாராம். மண் கொண்டு வந்து கொட்டுக்க கொட்டினாராம். மரம் என்னவோ வளருது தான். விழுதும் விட்டுத்தான் இருக்கு. ஆனா ஒரு விழுதும் தரையைத் தொடல்ல. தொட மனுசன் விட்டாத் தானே!

ஆலமர நிழலில் நாற்படையும் தங்கும்படியாக இருக்கும் என்று இரண்டாம் வகுப்பில் ஒரு பாட்டுப் படிச்சிருக்கன்.ஆனா இந்த ஆலமரம் ஜப்பான்காரன் தொட்டி யில வச்சி வளக்கிற ‘போன்சாய்’ மரமாட்டந்தான் இன்னம் இருக்கு.

கலவரத்துக்கு முன்ன ஆலமரத்துச் சுவர்க் கட்டில் தமிழன் சோனவன் எல்லாரும் நெருக்கிக் கொண்டு இருப்பம். மரத்துக்கு விலாவில் குளத்தடித் தெருப் பக்கமா மூணுகார் நிற்கும். அவசரமா ஆஸ்பத்திரிக்கோ வேறெங்கோ போறவங்க இங்கதான் கார் தேடி வருவாங்க. ஆலமரத்தடியிலதான் கடைத் தெருவும். மேற்குப் பக்கம் புடைவைக் கடைகள், நகைக் கடைகள், மணிக்கடைகள். தெற்குப் பக்கமாகப் பலசரக்குக் கடைகள், வடக்குப் பக்கமா ராசய்யா அண்ணன்ர சோத்துக் கடை.

அந்தக் காலத்திலே சோத்துக்கடையில சோறு தின்ன யார் போவான்? கடைத்தெருவுக்கு வாற நாட்டுச் சனங் கள் சிலர் கடையில சாப்பிடுவாங்க. கடையில உழுந்து வடையும் தோசையும் எப்பவும் இருக்கும் நாங்க உழுந்து வடை தின்னக் கடைக்குப் போவம். ராசய்யா அண்ணன் கேலியாகச் சொல்வார். ‘உழுந்தோட நண்டுக்கால் சதை யும் பிசைந்து தான் வட சுட்டிருககன். அதுதான் ருசியா யிருக்கு. தின்ரா பொடியா. நண்டு ‘ஹறாம்’இல்ல. ‘மக்கூறு’தான்!

ராசய்யா அண்ணனுக்குப் பிறகு அந்த இடத்தில் யாழ்ப்பாணி கடை நடத்துறான். காரதீவான்!

ஒருநாள் வேதநாயக வாத்தியாரக் கூட்டிக் கொண்டு கொழும் புக்குப் போனன். சிராவஸ்தி போய் எம்பியைக் கையோட கொண்டுபோய்க் கல்விக்கந்தோர் வேலய முடிச்சன். வேதநாயக வாத்தியார் இல்லாட்டி எம்பியைக் கிளப்பேலா. அவர் எம்பியோட நல்ல வாரப் பாடு.

மலே வீதியிலிருந்து பஸ் ஏறி அஞ்சுலாம்புச் சந்திக்கு வந்தபோது ஒருமணிக்கு மேலாச்சு. கதிரேசன் வீதி வழியா வாறம். வீதியின் இரண்டு பக்கமும் சோத்துக கடை. வேத நாயக வேதநாயக வாத்தியார் ஒரு கடைவாசலில் என்னை நிக்கச் சொல்லிற்று உள்ளே போறார். சத்து நேரத்தில சால்வையால் உதட்டையும் வாயையும் துடைச்சிக் கொண்டுவந்தார். “சாப்பிடப் பழைய சோனகத் தெருவுக்குப் போக வேணும்” என்கிறார்.

எனக்குப் பசி வயத்தைக் கிள்ளுது. “ஏன் இங்கயே சாப்பிடுவமே” என்கிறன்.

”வேணாம். இங்க எல்லாக் கடையிலயும் நண்டுக கறியும் இருக்கும். உனக்குப் பக்கத்தில சாப்பிடுறவன் நண்டுக் காலக் கடிப்பான். உனக்கு அது அருவருப்பாயிருக்கும்” என்று நடந்தார்

நடக்கும்போது சொன்னார்: “இநதத் தெருவில் கட வைச்சிருக்கவன் எல்லாரும் தீவான்கள். எல்லாச்சோத்துக் கடையிலயும் பின்னால் சாராயமும் இருக்கு.

ஆனாச் சம்பூர்ல பிறந்த ராசய்யா அண்ணன் எப்படி நம்மூரில் சோத்துக் கடை வைச்சார் என்பது எனக்கு இன்னமும் ஆச்சரியமாயிருக்கு!

அந்தக் காலத்தில் வயலில் வெள்ளாம வெட்டக்க வெட்டுக்காரங்களுக்கு வீட்டில் சமைச்சித்தான் வாப்பா சோறு கொண்டு போவார். தமிழ் ஆக்கள வேளாம வெட்டினா, மாட்டிறைச்சி ஆக்கமாட்டார். இப்ப எல்லாத் தமிழனும் மாடு தின்றான். வீட்டில சமைக்கிறது கஸ்டம் என்று சோத்துக் கடையில் தலைக்கொரு சோத்துப் பார்சல் எடுத்திற்றுப் போறாங்க. பொலித் தீனில் சோத்தப் போட்டுச் சுத்தி, அத நியூஸ் பேப்பரால பார்சல் பண்ணினா அந்தச் சோத்தில என்ன ருசியிருக்கு? ஆனாலும் ராசய்யா அண்ணன்ர ஒரே ஒரு சோத்துக் கடை இருந்த ஆலமரத்தடியில் செகநாதர்ர வயல் மேட்டில் இப்ப ஐஞ்சாறு சோத்துக்கடை இருக்கு. தமிழன்ர கடையிலயும் மாட்டிறைச்சிக் கொத்துப் போடுறான்.

ஆலமரத்துக்கு மேற்குப் பக்கமாக் கொச்சிக் காக்காட பீடிக்கிட்டங்கி. அதுக்குப் பக்கத்தில் நாயர்ர சாயாக்கடை.

விடிஞ்சா ஏழுமணிக்கே ஆலமரத்தடிச் சந்தில சனங் கூடிரும். தோப்பூர், கிளிவெட்டி, வெருகல், சம்பூர்- எல்லா பஸ்ஸும் ஆலமரத்தடியில நிக்கும். சனம் ஏறும். இறங்கும். லொஹர் தொழுகை மட்டும் கடைத்தெருவில சனக் கூட்டந்தான். பிறகு ஊருக்க இருக்க சனந்தான் கடைக்கு வரும். தாட்டுச் சனம் எல்லாம் போயிரும். ஊர்ச்சனம் கடையில என்னத்த வாங்கப் போவது?

நாட்டுச் சனம் போனபிறகு ஆலுமிசாட நகைக் கடயில் வேல செய்யிற கூனித் தீவுக் கம்மாளன் தன்ர பட்டறையில் சின்னச் சுத்தியலால் டொக் டொக்கென்று தட்ற சின்னச் சத்தமும் கேட்கும் பள்ளிக்கூடம் முடிஞ்சி வாத்திக் கூட்டமும் வந்து ஆலமரத்துக் கட்டில் குந்தும். எலெக்சன் வந்தா நீலக் கச்சிக்காரனுக்கும், பச்சைக் கச்சிக்காரனுக்குப் சொற்போர்? ஆம் வெறும் வாய்ப் போர்தான்! அதுதான் இந்தக் கொட்டியாரத்தாண்ட நல்ல குணம். அடி, குத்து, வெட்டுக் கிடையாது. கோடேறியதும் இல்ல. வாய்வீச்சு மட்டுந்தான்.

தமிழ் ஆக்கள் இந்த வாய் வெட்டில் சேர்ரதில்ல. அவங்க எல்லாம் பொத்தினாப்போல தமிழரசுக் கட்சிக்கு வோட்டப் போட்டிற்றுக் கம்மென்றிருப்பாங்க. ஆனா வேதநாயக வாத்தி மட்டும் எப்பவும் நீலக்கட்சி ஆலமரத்தடியில் எப்பவும் அவர் குரல் உரக்கக் கேட்கும்.

ஆனாக் கடைசியா வந்த எலக்ஷன்ல அவர் சிக்குப்பட்டுக் கொண்டார். நீலக் கட்சியில் முஸ்லீம் தமிழன் எவனும் கேட்கல்ல. நீலக் கட்சிக்காரனான முஸ்லீம், முஸ்லீம் முஸ்லீம் காங்கிரஸிலேயே நிக்க வேண்டியிருந்தது.

ஊர்க் கொழப்பத்துக்கு முஸ்லீம் காங்கிரஸதான் காரணம் என்று தமிழருக்க ஒரு கத. அந்தக் கட்சிக்கார னுக்காகப் பேசினாத் தன் இனசனமே தன்னைத் திட்டும் என்ற பயம் வேதநாயகத்தாருக்கு. யோசிச்சி யோசிச்சுச் சும்மா இருந்தார். அவரால் இருக்கவும் முடியல்ல. கடைசி யாகக் காங்கிரஸ்காரன்ர மேடையில் ஏறிப் பேசினார். எப்படியும் அவர்ர நீலக்கட்சி வெல்லவேண்டும் என்பது அவர்ர நோக்கம்.
.
“நீங்க ஏன் அவன்கட மேடையில ஏறிப் பேசினீங்க” என்று கேட்ட தமிழ் ஆக்களுக்கு, ”ஆண்டவன் நம்ம இந்த த ஊரில் முஸ்லீம் ஆக்களோட சேத்துப் படைச் சிற்றான். அவனுகளோட சேராட்டி நமக்கு வாழ்வில்ல. நம்மோட சேராட்டி அவனுகளுக்கும் வாழ்வில்ல”

எவருக்கும் பாதகமில்லாம எல்லாக் கட்சியும் ஆளுக் கொரு எம்பியாப் பிச்செடுத்திற்றாங்க.

இந்தியாக்காரண்ட காலத்திலதான் ஆலமரத்தடியில் நல்ல முசுப்பாத்தி. ஆலமரத்தடியில எப்பவும் துவக் கோட நாலு பேர் சென்றி நிப்பானுகள். நாங்களும் வந்து குந்திக் கொள்வம். இந்தியாக்காரண்ட இங்கிலிஸ் தான் ஆகச் சிரிப்பு, போக வேண்டாம் என்றால் நோ கோ’. போ என்றால் ‘கோ’ என்பான். சென்றில் நாலு பேர் நின்றா, கடைத் தெருவில் நாப்பது பேர் நின்று சாமான் வாங்குவாங்க. சின்னக்குடை ரோச்லைற், தேங்காயெண்ணெய், ரேப் றெக்கோடர், கெசற் ரீவி… இந்தியாவில இதுக்கெல்லாம் நல்ல மதிப்பாம். கொண்டு போறதுக்கு இவனுகளுக்குத் தீர்வையும் இல்ல-

அவனுகள் ஊரைவிட்டுப் போயும் மூணு வருசமாச்சு. நேற்றுத்தான் கதிர்காமத்தம்பி மாஸ்ரர் திருக்கிணாமலயி லிருந்து தன் வீட்டைப் பார்க்க வந்தார். நான் ஆலமரத் தடிக் குந்தில் இருக்கன்.

அவரிட்ட “போனவங்க எல்லாரும் ஒவ்வொருத்தரா வந்திற்றாங்க. நீங்க வாற இல்லியா? வீட்டைத் திருத் திறதில்லியா?” என்று கேக்கிறன்.

பொறந்த ஊருக்கு வராம எத்தன நாளைக்குத்தான் திருக்கிணாமலயில இருக்கிற. கெதியா வந்திருவன்.தயவு செய்து இந்த வீட்டிலயும் ஒரு கண் வைச்சிக் கொள். ளுங்க” என்கிறார்.

“பாதிரி கோயிலில் அகதி முகாம் இருக்கமட்டும், அங்கிருந்தவங்க இங்கிருந்த வீட்ட எல்லாம் ஹறவாக் கினாங்க. இப்ப அதுகள் போயிட்டுது இந்தப் பக்கம் ஒருத்தரும் வாறல்ல.

“எதுக்கும் என்ர வீட்டையும் ஒருக்காப் பாத்துக் கொள்ளுங்க. நான் அடுத்த கிழமை வீட்டைத் திருத்த வாறன்’ என்றுவிட்டு அவர் போய்விட்டார்.

நான் அவர் வீட்டை நிமிர்ந்து பாக்கிறன். கூரையே கிடையாது. குட்டிச்சுவர்தான் நிக்குது அதிலயும் அங்கங்க வெடிப்பு. கூரையில் தொங்கிய கைமரங்களை யும் விறகுக்காகச் சனம் கொண்டு போயிற்று. முன்னாற் தெருவோரமாக இருந்த தகரக் கதவு சாத்தினாப் போல இருக்கு. அதுக்கு மேலால பாத்தா முற்றத்தில நிக்கிற ‘வெலாட்’காய்த்துக் குலுங்கி நிக்குது.

இருந்தாற் போலிருந்த அந்த மரத்தில் குழை அசையுது நான் தகரக் கேற்றுக்கு மேலால பாக்கி றன். மரத்தில ஒரு சின்னப் பயல் காயும் பிஞ்சுமா ஆயிறான்,

“டேய் யார்ரா அவன்?” என்று சத்தம் போட்டு விரட்டி மாமரத்தடியில் ஒரு கல்லப் பொத்தென்று போடுறன்.

மரத்திலிருந்த பையன் டக்கென்று கீழ குதிச்சு ஓடுறான். ஆனா மரத்தின் கீழே அழுகைச் சத்தம் கேட்குது.

நான் தகரக் கதவால் எட்டிப்பாக்கிறன். மரத்தடியில் ஒரு சின்னப்பயல். ஆறு ஏழு வயசிருக்கும். அவன்ர தலையில் இரத்தம் ஓடுது. அழுறான்.

நான் தகரத்துக்கு மேலால ஏறிக் குதித்துச் சிறுவனை தூக்கிக் கொண்டு, “உம் பேரென்ன?’ என்று கேக்கிறன். பையன் அழறான்.

“அப்பாட பேரென்ன?”

பையன் பேசாமல் அழுறான். நான் அவனைத் தூக்கிக் கொண்டு வெளியே வாறன்.

அவரை அப்பா வாறார். வேலுப்பிள்ளையண்ணன்!

“விடுங்க மாஸ்ரர். நான் வீட்ட கூட்டிற்றுப் போறன். தலயில லேசான சிராய்ப்புத்தான்” என்கிறார் அவர்.

‘சோனவன் தமிழனுக்கு அடிச்சுப் போட்டான்’ எனப் புரளி கிளப்புவர்களுக்கு எனக்குப் பயம்!

வேலுப்பிள்ளையண்ணன் தைரியம் சொல்கிறார். நான் பையனின் சட்டையைக் கழற்றிக் காயத்தைத் துடைத்து, “ஆஸ்பத்திரிக்குக்கொண்டு போவமண்ணே” என்கிறன்.

“நீங்க போங்க மாஸ்ரர். நான் கொண்டு போறன்.” அவரை மறுதலித்துப் பையனை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போறன். வேலுப்பிள்ளை யண்ணனும் வாறார்.

மருந்து கட்டி வெளிய வந்ததும் நான் ஒரு ரீசேட்டும் வீவா போத்தலும் வாங்கிப் பையன் கையில குடுக்கிறன். “ஏன் மாஸ்ரர் இதெல்லாம்”

“இருக்கட்டு மண்ணே. பையன் நல்லாப் பயந்திற்றான்”

இருவரும் பேசிக்கொண்டே ஆலமரத்தடிக்கு வருகிறோம்.

ஆலமரத்தடி வெறிச்சோடிக் கிடக்கிறது.

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *