பெண்ணியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 15, 2023
பார்வையிட்டோர்: 1,950 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வடபழனியில் இலக்கிய நண்பரைச் சந்தித்து உரையாடிய பின்னர் வீட்டிற்குப் புறப்பட்டேன். நண்பர், “நேராக பஸ் டிப்போ சென்று 12B பஸ்ஸில் ஏறி “லிபேட்டி க்கு ரிக்கற் எடுத்து இறங்கும். பக்கத்திலேதான் உம் அச்சகம்’ என்று என்னை ஆற்றுப்படுத்தி விட்டார் நண்பர்!

அவர் வழிகாட்டியபடி நான் வடபழனி பஸ் டிப்போ விற்கு வந்து அங்கு நின்ற 12பி பஸ்ஸில் ஏறி இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.

எல்லா இருக்கைகளுமே நிறைந்து விட்டன. சாரதி யும் இல்லை நடத்துனரும் வரவில்லை. பஸ் நகர்வதாகக் காணோம். ஆனாலும் நாங்கள் எல்லோரும் பஸ்ஸிலேயே இருந்தோம். அவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையோடு.

நேரம் கடந்து கொண்டிருந்தது. கால்மணித் தியாலங்களுக்கு மேல் ஆகிவிட்டது. நடத்துனரும் வரவில்லை. சாரதியும் வரவில்லை. ஆயினும் நாங்கள் அமர்ந்தேயிருந்தோம்.

நேரம் ஓடிக் கொண்டேயிருந்தது!

திடீரென பஸ்ஸில் இருந்தவர்கள் இறங்கி ஓடுகிறார்கள். ‘ஊரோடினால் ஒத்தோடு’ என்று நானும் இறங்கி அவர்களின் பின்னால் ஓடினேன். ஓடியவர்கள் எல்லாரும் வேறொர் பஸ்ஸில் ஏறினார்கள். நானும் ஏறினேன் ஆனால் இருக்கைகள் எல்லாம் நிரம்பிவிட்டன. ஆனாலும் சாரதியின் இருக்கைக்குப் பின்னால் இருந்த ஆசனத்தின் எதிராக இருந்த ஆசனம் மட்டும் காலியாக இருந்தது. பெண்கள இருக்கையாக இருக்குமோ என்று எண்ணிக் கொண்டு அவ்வாசனத்தின் பக்கம் எல்லா இடங்களிலும் நோட்டம் விட்டேன். எதுவுமே எழுதப்பட்டிருக்க வில்லை நான் அவ்விருக்கையில் அமர்ந்து கொண்டேன். என் பக்கலில் ஒரு பையனும் அமர்ந்து கொண்டான்.

பஸ் நின்று கொண்டே யுள்ளது.

ஓரிரு நிமிடங்களின் பின்னால் இரு பெண்கள் ஏறுகிறார்கள். தாயும் மகளுமாக இருக்கலாம். பெண்ணிற்குப் பதினெட்டு வயது இருக்கலாம். தாய்க்கு நாற்பது மதித்தேன்.

ஏறிய அந்தப் பெண் சற்று விறைப்பாக “எந்திரிங்க சார். இது லேடீஸ் சீட். போய் ஜென்ஸ் சீட்டில் உட்காருங்க சார்” என்றாள். கோபத்திலும் அவள் அழகாகவே இருந்தாள்!

“லேடீஸ் சீற் என்று எங்கும் எழுதியிருக்கவில்லையே” என்றேன் நானும் விறைப்பாக.

“எழுதாட்டி என்ன சார். இது லேடீஸ் சீட்தான். ஏந்திரிங்க.” அப்பெண் என் கையைப் பிடித்து இழுத்து எறிவாள் போல இருந்தது. ஆனாலும் நான் கல்லாக உட்கார்ந்திருந்தேன்.

“என்ன சார் சொல்லச் சொல்ல உக்காந்துட்டேயிருக்கீங்க. ஏந்திரிங்க சார்” என்றாள் மிக்க றாங்கி யோடு.

“லேடீஸ் சீற் என்று எழுதப்பட்டிருக்கவில்லை. நானும் எழும்ப மாட்டன்” என்றேன் நான் அவளைவிட றாங்கியோடு.

“அப்படியா எந்திரிக்க மாட்டியா? நான் கண்டக்கரிட்ட கேக்கிறேன். எழும்புவியா இல்லயா எண்ணு பாப்பம்.”

“யாரிட்ட என்டான கேள். நான் எழும்ப மாட்டன்” என்றேன்.

அந்தக் குமரி என்னை முறைத்துப் பார்த்தாள். கோபத்திலும் அவள் அழகாக-மிக்க அழகாகவே இருந்தாள். அவள் மீண்டும் மிகக் கோபத்துடன் “எந்திரிங்க சார்” என்றாள்.

என் இருக்கைக்குப் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மூதாட்டி ஒருத்தி, “ஏண்டி அந்தப் பெரியவர எழுப்புறே. லேடீஸ் சீற் என்று எழுதல்ல எங்கிறார் அவர். நீ குமரி நின்னுக்கிட்டு வருவியா” என்றாள்.

அந்தக் குமரி என்னை விட்டுவிட்டு அந்த முதியவளிடம் வாய் கொடுத்தாள். “நீ எந்திரிச்சு அவாளுக்குச் சீட் கொடு. நா ஏன் நின்னுக்கிட்டு வரணும்?”

அம்முதியவளும் விடவில்லை. “நீ ஏந்திரிக்காத சார்” என்று எனக்கு அபயந் தந்துவிட்டு அந்தக் குமரியோடு போர் தொடுத்தாள். வாய்ப்போர்தான்.

கிழவிக்கும் குமரிக்குமிடையே துவந்த யுத்தம் ‘மசிர்’ போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் சூடாக வெளிவந்தன. மதறாஸ் தமிழின் செம்பாகம் எனக்கு அர்த்தமாகவில்லை. ஆனாலும் அவர்களிருவரதும் சண்டையை ரசித்துக் கொண்டு மேலே பார்த்தேன். என் இருக்கைக்கு மேலே ‘முதியவர்களுக்கும் அங்கவீனர்களுக்கும்’ என்று எழுதப்பட்டிருந்தது!

ஆத்திரத்தோடு பொரிந்து தள்ளிக் கொண்டிருக்கும் மகளிடம் தாப் ஏதோ சொன்னாள். அது நிச்சயமாகத் தமிழ் மொழியல்ல. கன்னடமாக இருக்க வேண்டும்.

இந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு நான் அந்தப் பெண்ணிடம் மேலே எழுதியிருப்பதைக் கையாற் காட்டினேன். அவளுக்குத் தமிழ் வாசிக்கத் தெரியுமோ என்னவோ!

“அங்கென்னய்யா காட்றா. காண்டக்டர் வரட்டும். நா பாத்துக்கிறன்” என்று முறைத்தாள்.

“என்னடி பாத்துக்குவே” என்று மீண்டும் ஆரம்பித்தாள் அந்த மூதாட்டி.

மீண்டும் அவர்களிருவருக்குமிடையில் வாய்ப்போர்! மகாபாரதக் கதையில் வரும் ‘யயாதி’ மன்னனுக்குப் போல எனக்கும் யாராவது தம் இளமையைத் தத்தம் பண்ணினால் நானும் எழுந்திருந்து அப்பெண்ணிற்கு இடங்கொடுத்து, அவள் முறுவலைச் சன்மானித்து, அவளருகிலே நின்று உரசற் சுகத்தை இரசித்திருப்பேன். அத்தனை அழகி அந்தப் பெண். ஆனால் நான் அந்த எண்ணத்தை விட்டுவிட்டு, ஒரு குமரியும் முதியவளும் தங்கள் தங்கள் பாட்டில் ‘பெண்ணியம்’ நடத்திக் கொண்டிருப்பதை இரசித்துக் கொண்டிருந்தேன்.

திடீரெனச் சாரதி வந்து இருக்கையில் அமர்ந்தார். நடத்துனர் விசிலடித்தார். பஸ் நகர்ந்தது. பெண்ணுக்கும் முதியவளுக்குமிடையிற் போர் நடந்து கொண்டே யிருந்தது.

நடத்துனரிடம் நான் ‘லிபேட்டி’க்கு ரிக்கற் வாங்கிக் கொண்டேன். அப்பெண் நடத்துனரிடம் இரண்டு ரிக்கற்றுகள் பெற்றுக் கொண்டாள். நடத்துனரிடம் ஏதுமே முறையிடவில்லை. அவளுக்குத் தமிழ் வாசிக்கத் தெரியும் போலும்!

‘லிபேட்டி’ தரிப்பிடத்தில் நான் இறங்குகையில், “இருந்துக்க பொண்ணு” என அவளைச் சீண்டினேன்

“எனக்கு இருக்கத் தெரியும். நான் வலசு குறைஞ்ச வளுமில்ல. வயோதிபனும் வயோதிபனும் இல்ல. நீ உம் பாட்டில போய்யா” என்றாள் கோபமாக.

நான் சிரித்துக் கொண்டே பஸ்ஸை விட்டிறங்கி ஆர்க்காட் வீதியில் மசூதியை நோக்கி நடந்தேன்.

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *