எப்பொழுதுமே என்னை தலைக்கனம் பிடித்தவன், பிடிவாதக்காரன், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று விவாதிப்பவன், இப்படியாக என்னென்னமோ என்கிறார்கள். சொல்லட்டுமே, விருதுகளை வெறுத்தவன், ஆரவாரமான வரவேற்புகளை நிராகரித்தவன், இது போதாதா என் தலைக்கனத்துக்கும், பிடிவாதத்திற்கும்.
இவன் எழுதும் இலக்கியம் புரியவில்லை, இப்படி கூப்பாடு போட்டு புலம்புவர்களும் உண்டு, அவர்கள் எல்லாம் என்னை போன்ற எழுத்தாளர்கள் தான். அவர்களுக்கு என் மீது கிலேசம், அதனால் அப்படி சொல்கிறார்கள், நான் அதற்கெல்லாம் கவலைப்பட்டு கொண்டிருப்பதில்லை.
பார்த்தீர்களா நான் எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லிக் கொண்டிருக் கிறேன். இப்படித்தான் சில விசயங்களில் என்னை பற்றி சொல்லி தற்பெருமை பிடித்தவன், அகம்பாவம் கொண்டவன், என்று மற்ற எழுத்தாளர்கள் சொல்லும்படி நடந்து கொள்கிறேன்.
அவர்கள் கிடக்கட்டும், கல்பனா, அவள் கூட இப்பொழுது என்னை பற்றி இப்படி நினைத்து கொண்டிருக்கலாம்.
அதை பற்றி எனக்கென்ன கவலை? அவள் என்னுடையவளாக எண்ணியது எவ்வளவு தவறு என்று எனக்கு இப்பொழுது புரிகிறது.
சதா காலமும் அவளை பற்றி நினைத்து நினைத்து என் குடும்பத்தில் ஒரு குழப்பத்தையே கொண்டு வந்து விட்டாள். அது அவள் தவறு இல்லை என்பது தெரிந்தாலும் அவளை அறிமுகப்படுத்தியதால் தானே இவ்வளவு சிரமம் என்று மனசுக்கு பட்டது.
எனக்கும் ஒரு சில எழுத்தாள நண்பர்கள் உண்டு, அவர்கள் கூட இப்பொழுது கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். என்னப்பா கல்பனாவை இப்படி ஓரம் கட்ட ஆரம்பிச்சுட்டே?
அவர்களிடம் என்ன சொல்வது? அவள் வரம்பு மீறி போகிறாள், உண்ணும் போது முதல் உறங்கும் வரை நினைவில் வந்து வாட்டுகிறாள் என்று சொல்ல முடியுமா?
மனைவியை அழைக்கும்போது கூட வாய் தவறி “கல்பனா” என்று அழைத்து பேசும் நிலைக்கு போய் விட்டேன்.
இனி இவளை மறந்து விட்டு, கழட்டி விட வேண்டியதுதான், முடிவு செய்தவன் அடுத்து நான் அவள் பெயரை முன்னிலைப்படுத்துவதை விட்டு விட்டேன்.
அந்தோணி, இவன் என்ன செய்தான் என்கிறீர்கள்? ராஸ்கல் நான் இவனை சமூகத்தில் மனிதனாக உலவ விட்டவன். இவனது வளர்ச்சிக்கு கல்பனாவின் உதவியைத்தான் நாடி இவனை மனிதனாக்கினேன், அது வேறு விஷயம். அவன் என்ன சொல்கிறான்?
கல்பனாவுடன் என்னை அடுத்த நிகழ்வுக்கு அழைத்தால்தான் நன்றாக இருக்கும் என்கிறான்.
இவன் என்ன எனக்கு சொல்வது?
ஆனால் மனதுக்குள் ஒரு உண்மை புரியத்தான் செய்கிறது. கல்பனா இல்லாமல் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதும், எனக்கும் முழுவதுமாக அவளை ஒதுக்கியதால் இவனுக்கு துணையாக யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாமல் தவிப்பதையும், வெளியில் சொல்ல முடியவில்லை.
எனக்கே புரியாத புதிராக இருக்கிறது, ஏன் கல்பனாவை ஒதுக்குகிறேன்?
சிந்தித்து சிந்தித்து சட்டென்று ஒரு நினைவு வந்தது. ஒரு வேளை அப்படியும் இருக்குமோ? இருக்கலாம், கண்டிப்பாய் இருக்கலாம், அன்று மேடையில் வைத்து பேசிய பேச்சுக்கள் இப்பொழுது ஞாபகமாய் வருகிறது.
எழுத்தாளர் மாதவன் மிகச்சிறந்த எழுத்தாளர்தான் ஒப்புக்கொள்கிறோம், ஆனால் அவரது எழுத்துக்களை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு ஒரு உண்மை புரியும்.
அவரது எல்லா கதாபாத்திரங்களிலும் கல்பனா என்னும் பெயர்தான் தாங்கி நிற்கிறது. கடமை உணர்ச்சி மிக்க பெண்ணாகவோ, அல்லது காவல்துறை சேர்ந்த பெண்ணாகவோ, துணிச்சல் மிகுந்த பெண்ணாகவோ எதை படைத்தாலும் அதற்கு கல்பனா என்னும் பெயரைத்தான் சூட்டுகிறார். அதே போல் எந்த ஆணின் செயலுக்கும் கல்பனாவைத்தான் பின்புலமாக நிறுத்தி கொண்டு போகிறார்.
அதனால் எங்களுக்கு வரும் சந்தேகம் என்னவென்றால் உங்களால் இனி மேல் கல்பனா இல்லாமல் எழுத முடியாதோ என்னும் எண்ணத்தை எங்களுக்கு தோற்றுவித்து விட்டது.
இதை தவறாக நினைக்க வேண்டாம், ஒரு எழுத்தாளனின் படைப்புக்களை விடாது வாசிக்கும் ஒரு வாசகனின் எண்ணமாக நீங்கள் எடுத்து கொள்ளவேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஓ…அன்றிலிருந்துதான் இந்த கல்பனாவை எல்லா விதத்திலும் ஒதுக்கி வைக்க முயற்சி செய்ய ஆரம்பித்திருக்கிறேன். இப்பொழுது எனக்கு புரிந்தது போல் இருந்தது, கல்பானவின் மேல் இவ்வளவு வெறுப்பு வர.