கர்ண வேஷம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 3, 2018
பார்வையிட்டோர்: 4,120 
 
 

நேசன் ‘றேமாத்தூசன்’ கடைக்குள் தனது கழுவும் வண்டிலைத் தள்ளிக்கொண்டு அதன் பின்பகுதிக்குச் சென்றான். அங்கிருந்துதான் கழுவத் தொடங்க வேண்டும். அது ஒரு பெரிய நீட்டான கடை. கடைசிப் பகுதியில் மதுவகையில் தொடங்கி முன்னோக்கிச் செல்லச் செல்ல பால், பழரசம், தயிர். வெண்ணை, சீஸ், சிறு உணவுகள், சூடாக்கிச் சாப்பிடும் உணவுகள், கேக், பிஸ்கற், சமைத்த, சமைக்காத மாமிசம், கடல் உணவுகள் என்று உண்பதற்கு வகை வகையான உணவுகளென நீண்டு முன்பகுதியை அடையும். உணவு வகைகள்ளூ அவை கணக்கில் அடங்கா. அதை நேசனின் பொறியான கண் பார்க்கப் பிணியான பசி இரும்பைப் பழுக்கக்காய்ச்சி வயிற்றில் செருகியதாகப் பற்றியது…

பழங்கள் என்றால் அப்பிள் பழம், வாழைப்பழம், பாரைப் பழம், தோடம்பழம், திராட்சைப்பழம் என்று அது நீண்டு செல்லும் பெரும் பட்டியல். ஒவ்வொரு பழத்திலும் தான் எத்தனை நிறம்? எத்தனை வகை? இனிப்பு வகைகள் எவ்வளவு? நேசனின் வயிறு மீண்டும் மீண்டும் ஈயத்தை உருக்கி ஈனக்குடலில் உற்றியதாக எரிந்தது. ஒரு பாதம் பருப்பு, ஒரு கயூக்கொட்டையை எடுத்து வாயில் போட்டால் என்ன என்பதாகக் கைகள் பரபரத்தன. கால்கள் பசியில் படபடவென நடுங்கின. எதையும் எடுத்துச் சாப்பிட முடியாது. ஒவ்வொரு கோணத்திற்கும் ஒவ்வொரு கமராப் பூட்டப்பட்டிருக்கிறது. ஏதாவது தடுமாறிக் கைவைத்தால் அடுத்த நாள் வேலையை விட்டுக் கலைத்து விடுவார்கள். வேலையை விட்டால் இருப்பதற்கு வீடு கிடைக்காது. வீடு இல்லாவிட்டால் குளிரில் விறைத்துச் சாகவேண்டும். மனிதனின் மற்றைய செலவுகளுக்கான ஐம்பது குரோணர்களும் இல்லாமல் போய்விடும். நடுத்தெருவில் நின்றால் பொலீஸ் அப்பிக்கொண்டு போகும்.

கடைக்குள்ளிருந்து எதையும் எடுக்கக்கூடாது என்பது பற்றி வேலை தருவதற்கு முன்பே விரிவாக நேசனுக்குச் சொல்லி இருந்தார்கள். நேசனால் வேலை செய்ய முடியும் என்று தோன்றவில்லை. பசியின் கொடுமை அவனை வாட்டியது. பசி… இந்தப் பிணியில்லாத மனிதனாய்ப் படைத்திருந்தால் இன்று இந்த அடிமை வாழ்க்கை அவனுக்கு நேர்ந்திருக்காது. பிறந்தது தொடக்கம் ஆயுட்கைதியாகப் பிணைத்துக் கொள்ளும் பிணியில் இருந்து விடுபட முடியாத மனிதகூட்டத்தில் அவனும் ஒருவனாக.

நேசன் வண்டிலை நிறுத்திவிட்டு கை துடைக்கும் காகிதத்தைக் கொஞ்சம் இழுத்து எடுத்துக்கொண்டு, கடையின் பின்பக்கக் கதவைத் திறந்து வெளியே வந்தான். வெளியே குளிர் இதமாகத் தழுவியது. இயற்கையை இரசிக்கும் வாழ்வல்ல அவன் வாழ்வு. இந்த வாழ்வு ஏன் எனக்குத் தரப்பட்டது என்கின்ற கேள்வியே அவனை எப்போதும் வாட்டியது. என்றும் நெஞ்சில் வடுவான மாறாத இரணங்கள்.

*
அகதியாய் ஐரோப்பாவில் அங்கீகரிக்கப்பட்டு வாழ்வதற்கும் அதிஸ்ரம் செய்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் எந்தக் காரணமும் இல்லாது வந்தவர்கள் இன்று ஐரோப்பியக் குடிகளாகிவிட்டார்கள். அப்போது அது மலிவுச் சரக்கு. இப்போது அதுவே குதிரைக் கொம்பு. குண்டு துளைத்த அடையாளத்தைக் காட்டினாலும் நம்ப மறுக்கிறார்கள். நேசன் தன்னை விசாரித்த அதிகாரியிடம் காட்டிப் பார்த்தான். அவன் அவசரமாக நேசனின் சட்டையை கீழே இழுத்துவிட்டு, இப்படியெல்லாம் அனுதாபம் பெறமுடியாது என்றான். பிறகென்ன இரண்டாயிரத்து ஏழில் வந்தவனுக்கு இரண்டாயிரத்து எட்டில் அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட போது அவனிடம் மூன்று தெரிவுகள் இருந்தன. ஒன்று வேறு நாட்டிற்குச் செல்ல வேண்டும். மீண்டும் அதே படலம் தொடரும். அதற்கு அங்கு உறவினர்கள், உதவிகள் இருக்க வேண்டும். நேசனுக்கு அப்படி யாரும் இல்லை. இரண்டாவது பொலீஸிடம் சென்றால் மானத்தோடு நாட்டிற்குத் திருப்பி அனுப்பி வைப்பார்கள். இறங்கிய பின்பு என்ன நடக்கும் என்பது பற்றி இவர்கள் கவலைப்படமாட்டார்கள். அங்கு முதலில் மானம் போகலாம். இரண்டாவதாக அவர்கள் கருணை காட்டுவது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. நாலாம்மாடி போவதற்கும் அங்கு தராளமாய்ச் சந்தர்ப்பம் கிடைக்கலாம். அதைவிட மூன்றாவதாக ஒரு தெரிவு இருந்தது. அதுதான் மறைந்து வாழ்தல் அல்லது மண்ணிற்குள் புதைதல்.

இந்தக் குளிர்நாட்டில் மறைந்து வாழ்வது ஒன்றும் சுலபம் இல்லை. வன்னி அழிந்த பின்பு, வன்னிக்கு எப்படிச் செல்வது? நேசனுக்கு வன்னியில் இருந்து எந்தத் தொடர்பும் வரவில்லை. நேசன் நகருக்குள் அஞ்ஞாத வாசம் செய்வதாய் முடிவு செய்தான்.

அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட சிலகாலத்தில் புத்தியோடு நேசன் முகாமைவிட்டு வெளியேறி ஒஸ்லோவுக்கு வந்தான். ஓஸ்லோவில் யாரையும் அவனுக்குத்; தெரியாது. வன்னியைச் சார்ந்த தமிழர் யார் என்று எப்படிக் கண்டு பிடிப்பது? கண்டு பிடித்தாலும் அவர்கள் உதவுவார்களா?

ஒஸ்லோவிற்கு வந்த முதல் நாள் இரவு றுமேனியாக் காரர்களோடு சேர்ந்து குரன்லாந்துப் பாலத்திற்குக் கீழே குளிரில் படுத்து நடுங்கி விறைத்தான். அது அவனுக்குப் போதும் என்றாகிவிட்டது. அன்று இரவு சாப்பாடும் கிடைக்கவில்லை. நேசனுக்குக் களவெடுத்துச் சாப்பிடுவதற்கு மனம்வரவில்லை. சாப்பாட்டை இங்கு பிச்சை எடுக்கவும் முடியாது.

அடுத்த நாள் விடிந்ததும் குரன்லாந்தை ஒரு முறை சுற்றி வந்தான். இவனது கோலத்தைப் பார்த்துவிட்டுத் தமிழரே முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றார்கள். என்ன செய்வது? மானம், அவமானம் இனிப் பார்க்க முடியாது என்கின்ற தெளிவு நேசனுக்கு வந்தமாதிரி இருந்தது. அவன் குரன்லாந்தில இருந்த தமிழ்க் கடையைப் பார்த்தான். நேசன் அதற்கு முன்னால் போய் நின்றான். உள்ளே பலர் இருந்து சுவையான நிறமான, மணமான உணவுகளைச் சாப்பிட்டார்கள். வாயும் நாவும் வரம் கேட்டன. நாக்கால் நாய் போல் நீர்வழிந்தது. காசு இல்லாத காசனாய் அவன் தவித்தான். மனித உருவத்தில் அந்தக் கடைக்கு முன்பு நாயாய்ப் பழிகிடந்தான். நன்றி விசுவாசமாய் இருப்பதற்கு அவன் தயார் என்றாலும் நக்க யாரும் கொடுப்பதற்குத் தயாராக இல்லை.

அந்தக் கடைக்குள் இருந்து ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்கவர் இவனை உற்றுப் பார்த்த வண்ணம் வடையும் சாப்பிட்டுத், தேனீரும் அருந்தினார். அவரது கையில் ஒரு ஷஐ போன்| இருந்தது. விலை உயர்ந்த சேட்டும், ஜீன்சும், சப்பாத்தும் அணிந்து, மேலே ஒரு கோட்டும் போட்டிருந்தார். அட்டைக் கறுப்பு நிறத்தில் அவர். அடர்த்தியாகக் கேசத்தின் நெளிந்த, நெளிந்த அலையான அமைப்பு. கழுத்திலும் ஏதோ தங்கம் போன்று மின்னியது. கையில் மணிக்கூடும், மோதிரங்களும். அதில் சில வைரக் கற்களும் சிவப்பாக மின்னின. இரத்தினமாய் இருக்கலாம் என்று நேசனுக்குத் தோன்றியது.

நேசனிற்குப் பசித்தது. யாரிடமாவது வாய்விட்டுச் சாப்பாடு கேட்க வேண்டும் போல் இருந்தது. மனிதனின் மிகவும் அடிப்படையான தேவை உணவும் நீரும். அது கிடைக்காத போது அதற்காக அவன் எதையும் செய்வான். நேசனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் போல் இருந்தது. வன்னியில் அவன் குடும்பம் எப்போதும் ஈர்ந்துதான் பழக்கப்பட்டது. கர்ணன் குசேலனான கதையாக இங்கு இரங்க வேண்டி வந்துவிட்டது. அது அவனிடம் மிச்சமிருந்த ஆத்மாவையும் கொன்றது. நேசன் என்ன செய்வது என்று தெரியாது தயங்கியபடி நின்றான். இரந்தாலும் இரப்பதற்கு இல்லாதவர் பூமியாக இந்தப் பணக்காரத் தேசங்கள்.

இதற்கிடையில் அழுக்கான உடையோடு தங்கள் கடைக்கு முன்பு வந்து நிற்கும் நேசனைக் கவனித்த கடைக்காறர் பொறுமை இழந்திருக்க வேண்டும். எந்தக் கடைக்காறர்தான் பிச்சைக்காறன் கடைக்கு முன்பு நிற்பதை விரும்புவான். நேசனிடம் அவசரமாக அந்தக் கடைக்காரன் வந்தான்.

அந்தக் கடைக்காரனுக்கு முப்பது வயது இருக்கும். கறுப்புக் கால்சட்டையும் பிங் முழுக்கைச் சேட்டும் அணிந்து, கழுத்து ஒட்டத் தெறி பூட்டி இருந்தான். தலைக்கு ஏதோ பூசிக் கருகரு வெனப் படிய வாரப்பட்டு இருந்தது. முகத்தில் கொழு கொழுவெனக் கொழுப்பு கொப்பழிப்பதான ஊதல். கைவைத்தால் வழுக்கிவிடும் என்பதான மென் நீலம் படர்ந்த தாடை. கண்களில் சந்தேகம் பூசிய பார்வை. மணிக்கட்டில் விலை உயர்ந்த கை மணிக்கூடு. இரண்டு விரல்களுக்குத் தங்க மோதிரங்கள் அணிந்த இரண்டு கைகள். நேசனை நோக்கிக் கோபமாக வந்த அவன்,

‘நீங்கள் தமிழா’ என்று கேட்டான். அவன் அப்படிக் கேட்டதால் ஏதாவது உதவி செய்வானோ என்கின்ற நப்பாசை நேசனுக்கு உண்டானது. அவசரமாகத் தமிழில்,
‘ஓம்’ என்றான். ஓம் சொன்னால் புண்ணியம். அது எங்கள் பிரணவ மந்திரம். இங்கு அது பாவப்பட்ட சொல்லாகிற்று. அவன் மேலும் கீழும் நேசனைப் பார்த்துவிட்டு,
‘தம்பி கொஞ்சம் தள்ளி நில்லுங்கோ. சனங்கள் கடைக்கு வராமல் போயிடுங்கள்’ என்றான்.

நேசனுக்கு மூஞ்சையப் பொத்தி அறைந்தது போல இருந்தது. அவன் தனது உடுப்பைத் தட்டிய வண்ணம் அப்பாற் சென்றான். நேசனுக்குக் கத்தி அழவேண்டும் போல் இருந்தது. அந்தச் சுரங்க நிலையத்திற்குள் அப்படிச் செய்ய முடியுமா? தமிழருக்காய் மடிந்த தேசத்தவன். அவனுக்கு அவமானமாக இல்லாவிட்டாலும் தமிழருக்கு அவமானமாக இருக்கும். அவன் கத்தவில்லை. அவன் கண்ணில் இருந்து கரைந்த கண்ணாடி முத்துக்கள் சரிந்த பூமியை நோக்கி விழுந்தன. உழுதுண்ட கைகள் இன்று தெருத் தெருவாய்ப் பிச்சை கேட்டு அலைகின்ற அவமானம் அவனுக்குள். குரன்லாந்தில் ஒரு சிறிய ஆறு ஓடுகிறது. அதற்குள் விழுந்து சாகமுடியுமா என்று ஒருகணம் எண்ணிப் பார்த்தான். ஷஇல்லை… வாழ வேண்டும்| என்று நினைத்தான். வன்னியை மீண்டும் ஒரு முறை சாகமுதற் பார்க்க வேண்டும் என்கின்ற ஆசை அவனிடம் இருக்கிறது.

முன் கடையிலிருந்து பலவகைச் சாப்பாட்டு வாசம் வந்தது. யாரும் பணம் இல்லாது எதுவும் தரமாட்டார்கள் என்பது நேசனுக்குப் புரிந்தது. அந்தக் கடையில் நின்ற யுவதி கொட்டோக்கிற்கு உருளைக்கிழங்கு மாசலா போன்ற வெள்ளைக் கழியை சிறிய பாணிற்குள் வைத்து, அதற்கு மேல் பொரித்த வெங்காயம் தூவி ஒரு வெள்ளை மனிதனுக்குக் கொடுத்தாள். அந்த மனிதன் கையில் அரை லீற்றர் கோலாப் போத்தல் இருந்தது. இரண்டையும் பறித்துக் கொண்டு ஓடினால் என்ன என்பதாக நேசனுக்குப் பசித்தது. தன்மானம் என்கின்ற சாகாத அந்த வரட்டுக் கௌரவம் அவனோடு இன்னும் ஒட்டிக்கொண்டிருக்காவிட்டால் நிட்சயம் அவன் பறித்துக் கொண்டு ஓடியிருப்பான். உள்ளே நின்ற யுவதி நேசனை அருவெருப்பாகப் பார்த்தாள். நேசனுக்கு அவமானமாய் இருந்தது. சொக்கிளேற்றை அள்ளிக்கொண்டு ஓடிவிட்டால் என்று ஒருகணம் எண்ணினான். கொடுத்த கைகள், களவெடுத்த கைகள் அல்ல என்கின்ற அழியா நினைப்பு அவனைத் தடுத்தது.
‘ஆ சாப்பாட்டின் வாசனை’ அவன் வயிற்றுகுள் அணுகுண்டு வெடிப்பது போல இருந்தது. என்ன செய்ய முடியும். அவன் வயிற்றை தனது கைகளால் அமர்த்திய வண்ணம் கண்ணை மூடினான். கடவுளைப் பிராத்தித்தான். தியானத்தில் பசி அடங்குமாம். அடங்குகிறதா என்று பார்த்தான். அடங்கவில்லை. ஆவி தாவென்று அது பத்திரகாளியாக வயிற்றுக்குள் குடலை மாலையாகத் தரித்து கூத்தாடியது. மாலையைப் பினைந்தது. திருகியது.

*

‘றேமாத்தூச’னின் பின்கதவுக்குப் பக்கத்திலே பெரிய பெட்டி ஒன்று இருக்கிறது. அங்கு வேலை செய்பவர்கள் அதில் திகதி முடிந்த உணவுப் பொருட்களை வேலை முடிந்து போகும் போது எறிந்து விட்டுச் செல்வார்கள். மறுநாள் அதைக் குப்பை வண்டியில் வருபவர்கள் எடுத்துச் சென்று குப்பையாக்குவார்கள். பின்பு அதைப் பசளையாக மாற்றி எடுப்பார்கள். அது மனிதன் பட்டினி கிடக்கத் தாவரத்திற்கு மீண்டும் உணவாகும்.

நேசன் மெதுவாக அந்தப் பெட்டியின் மூடியைத் திறந்தான். மேலே நிறைய அழுகிய அப்பிள்பழங்கள் கிடந்தன. அவன் அதில் நன்றாக இருக்கும் ஒன்றை எடுத்து தான் கொண்டு வந்த காகிதத்தால் மீண்டும் மீண்டும் துடைத்தான். பின்பு அதில் அழுகிய சிறு பகுதியைக் கடித்துத் துப்பிவிட்டு அதைச் சாப்பிடத் தொடங்கினான். கையில் வைத்திருந்த காகிதத்தைப் பொக்கேற்றுக்குள் வைத்துவிட்டு மறுகையால் அப்பிள்களை விலத்தி, விலத்தி ஆழமாகத் தோண்டினான்.
ஒரு சீஸ் பக்கற் வந்தது. அதன் ஒரு பகுதியில் பூஞ்சனம் இருந்தது. அதை எடுத்துக் கொண்டான். மேலும் தேடும் போது ஒரு பாணும் இரண்டு வனிஸ்சும் அகப்பட்டன. தேடும் வேலையை நிறுத்திவிட்டுச் சாப்பிட்டு முடிந்த அப்பிள் நடுத்தண்டை எறிந்தான். அவசர அவசரமாக அந்த வணிசைச் சாப்பிட்டான். அதன்மேல் இருந்த தேங்காய்பூவும், சினியும் அமிர்தமாய் வாய்க்குள் தித்தித்துத் தொண்டைக்குள் இறங்கியது. சாப்பிட்டுப் பசி தீர்ந்ததும் ஏதாவது குடிக்க வேண்டும் போல் இருந்தது. உள்ளே சென்றால் நீர் அருந்தலாம். அதற்கு முன்பு நாளைக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என நினைத்தான். அவன் வசிக்கும் அறைக்குள் ஒரு பழைய பிறிச் இருக்கிறது. பழுதான பகுதியை வெட்டி எறிந்துவிட்டு மீதியை வைத்திருந்தால் பசிக்கும் போது சாப்பிடலாம் என்று அவனுக்குத் தோன்றியது.

மீண்டும் பெட்டிக்குள் கையை ஆழமாக நூளைத்துத் தேடத் தொடங்கினான். கையில் ஏதோ தட்டுப்பட்டது. அதை எடுத்து முகர்ந்து பார்த்தான். அதில் நல்லதான ஒன்றை எடுத்தான். மற்றதை மீண்டும் உள்ளே போட்டான். மேலும் கிண்டிய போது பொரித்த கோழிப் பக்கேற் ஒன்று வந்தது. அதையும் எடுத்துக் கொண்டான். பின்பு பக்கத்தில் இருந்த பிளாஸ்ரிக் குப்பை போடும் பெட்டியில் இருந்து இரண்டு பிளாஸ்ரிக் பைகளை எடுத்து அதற்குள் அவற்றைப் போட்டு மீண்டும் சாப்பாட்டுக் குப்பைகள் போடும் பெட்டியின் ஒரு ஓரத்தில் அதை வைத்துப் பெட்டியைக் கவனமாக மூடிவிட்டு, உள்ளே சென்றான்.

*

அவனது வயிற்றைப் பிடித்திருந்த கையை யாரோ மெதுவாகப் பற்றுவதை உணர்ந்தான். அவன் கண்ணைத் திறவாதே கையை அதன் பாட்டில் விட்டான். அதன்மேல் சூடாகக் காகிதப்பை ஒன்று வைக்க முதலே வடையின் மணம் அவன் மூக்கை எட்டியது. பசித் தவத்தில் மூடியிருந்த கண்கள் தீடிரென விழித்துக்கொண்டன. சூடான வடைப்பை அவனது கையைத் தொட்டது. நேசன் அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். எனக்கா என்று அவன் அந்த மனிதனிடம் கேட்கவில்லை. கேட்பதற்கு பொறுமையோ, நேரமோ இருக்க வில்லை. அவசரமாக அந்தப் பைக்குள் கையை நுளைத்து ஒரு வடையை எடுத்து ஆவேசமாகச் சாப்பிட்டான். பசி மனிதப் பண்பு அத்தனையையும் விழுங்கிவிடும் வயிற்றில் பற்றும் அஹோர அக்கினி. அதை அனுபவிப்பவனுக்குப் பூலோக வாழ்வு நித்தம் நரகமாகச்… செத்துச் செத்துப் பிழைக்கும் நாட்களாக… அது தொடரும். அவன் ஆவேசமாக அந்தக் காகிதப்பையில் இருந்து இன்னொரு வடையை முன்னே நின்றவரைப் பார்த்தவண்ணம், அவரோடு எதுவும் பேசாது உண்டு முடித்தான். அதையும் உண்டு முடித்த போது விக்கல் எடுத்தது. அந்த மனிதன் வாங்கி வந்த தேனீரைக் கொடுத்தார்.
அவர் குடித்து மீதமாக வைத்திருந்த சோடாவை நேசன் பார்த்தான். அந்த மனிதர் அதையும் கொடுத்தார். நேசன் அவசரமாக அதை முதலில் குடித்தான். பின்பு தேனீரை வாங்கிக் கொண்டு அவரைப் பார்த்துச் சிரித்தான். அதில் ஒரு மிடறு மீண்டும் இழுத்துவிட்டு,

‘இப்பதான் உயிர் வந்த மாதிரியே இருக்குது. நீங்கள் கடவுள் அண்ணா. பசிக் கொடுமையில தவிக்கிறது நரக வேதனை அண்ணா’ என்றன் நேசன்.

‘ம் உன்ர பெயர் என்ன? ஏன் இப்பிடி நிக்கிறாய். உனக்குச் சொந்தக்காறர் ஒருத்தரும் இங்க இல்லையா?’ என்றார் அவர்.

‘என்ர பெயர் நேசன் அண்ணா. நான் அகதி முகாமை விட்டு வெளியால வந்திட்டன். அங்க இருந்தால் என்னைத் திருப்பி அனுப்பிப் போடுவாங்கள். எனக்குச் சொந்தக்காறர் எங்கையும் இல்லையண்ணா. அதுதான் இப்பிடித் தெருவில நிக்கிறன்’

‘ம்… சரி. என்னுடைய பெயர் கருணாகரன். தெரிஞ்சவங்கள் கருணன் எண்டு சொல்லுவாங்கள். எனக்கு இப்படி யாரையும் பார்த்தா இரக்கம் வந்திடும். எல்லோரும் மனிசர்தானே. பாவம்… உன்னைப் பார்க்க சொந்தத் தம்பி மாதிரியே இருக்குது. உனக்கு ஏதும் உதவி வேணுமா? ஒரு அண்ணனைப் போல நினைச்சுக்கொண்டு நீ என்னிட்ட என்ன உதவி வேணுமெண்டாலும் கேட்கலாம்’ என்றார் அவர்.

‘எனக்கு நிறைய உதவி வேணும் அண்ணா. சாப்பாடு வேணும். தங்க இடம் வேணும். உதவி செய்வீங்களா அண்ணா? உங்களைக் கடவுள் அனுப்பி வைச்சிருக்கோணும் போல இருக்குது அண்ணா’ நேசன் கலங்கிய கண்களும் கவுண்ட தலையுமாக அவரது கைகளைப் பற்றி முத்தம் வைத்தான்.

‘தமிழருக்குத் தமிழர் உதவி செய்யத்தானே வேணும். என்னோட வா. நான் ஒரு வீடு வைச்சிருக்கிறன். அதில உன்மாதிரி வேற ஆட்களும் தங்கி இருக்கினம். அவைக்கு வேலையும் நான் ஒழுங்கு செய்து கொடுத்திருக்கிறன். ஒரு நாளைக்கு வேலை செய்தா ஐம்பது குரோணர் தருவினம். வீட்டில தங்கிறது பிறி. மிச்சம் நீங்கள் பார்த்துக் கொள்ள வேணும்.’

‘சாப்பாட்டுக்குக் காசு அண்ணா?’

‘தாறதிலதான் பாக்க வேணும்.’

‘எப்படியண்ணா உதுக்க ஒண்டும் வேண்ட ஏலாதே’

‘என்னுடைய முதலாளி இவ்வளவுதான் தருவார். கஸ்ரம் எண்டா நீ வேற யாரிட்டையும் கேட்டுப் பாரும்’

‘ஐயோ அண்ணா, நான் வேற யாரிட்டப் போறது. எனக்கு ஒருத்தரும் இல்லை. நீங்கள்தான் கடவுள்’

‘நான் என்ன செய்ய முடியும். என்ர கையில காசிருந்தா நானே போட்டுத் தந்திடுவன். அந்த முதலாளி ஒரு நப்பி. அவன் அவ்வளவுதான் தருவான். தங்க விடுறதுக்கு வேலை. சாப்பாட்டுக்குக் கொஞ்சக் காசு. உடுப்புகள் சப்பாத்துக்கள் எண்டுறதெல்லாம் நீங்கள் அதிலதான் பார்க்க வேணும். வேற செலவுகள் வந்தாலும் அதுக்கதான் பாக்க வேணும். வருத்தம் வந்தாப் பரசித்தமோலைப் போட்டுச் சமாளிக்க வேணும். லேகவக்த்துக்குப் போனியள் எண்டா அவனே காட்டிக் குடுத்திடுவான். ஆகவும் பிரச்சனையாக வந்தால் முதலாளி அதுக்கு ஒழுங்கு செய்வார். ‘நான் சொல்லுறது விளங்குதா? உமக்குச் சம்மதம் எண்டா என்னோட வரலாம்’

‘நான் வேற எங்கையண்ண போறது. நீங்கள் தெய்வம் மாதிரி அண்ணா. எனக்கு வேற வழியில்லை. இதைவிட்டா நான் தெருவிலதான் படுக்கோணும் அண்ணா’

‘சரி வா போவம்.’

அண்ணாவுக்கு முதலாளி கொடுப்பதில் மூன்றில் ஒன்றைத்தான் அவர் வேலை செய்பவர்களுக்குக் கொடுப்பார் என்கின்ற உண்மை அப்போது நேசனுக்குத் தெரியாது. தெரிந்தாலும் வேறு வழி? இப்படியாக ஆட்கள் பிடித்துக் கொடுப்பதற்குப் பிறிம்பாக அவர் முதலாளியிடம் மொத்தமாக ஒரு தொகையும் பெற்றுக் கொள்வார். அதுவும் அவனுக்குத் தெரியாது. தெரிந்து?

*

நேசனுக்கு முகமில்லாத மனித வாழ்வு வெறுத்தாலும் உயிரைப் போக்கிக் கொள்ளும் துணிவு இன்னும் வரவில்லை. அண்ணாவின் தயவில் அடிமையாக வேலை செய்து, அப்படியே செத்துப் போய்விடலாம் என்று முடிவு செய்தான். இனி எதைப்பற்றியும் கவலைப்படாமல் வேலையைத் தியானமாக்கி, மற்றைய உயர்ந்த வாழ்வு வாழும் மனிதர்களைப் பற்றி ஒப்பீடு செய்யாது, சேரியில் வாழ்வது அல்லது பிச்சை எடுப்பதைவிட இது உத்தமம் என்கின்ற நினைப்போடு, வாழ வேண்டும் என்று முடிவு செய்தான். வாழ்ந்தான். அந்த வாழ்க்கைக்கும் அன்று வேலை முடித்துவிட்டு வரும் போது முடிவு வந்துவிட்டது. யாரோ போட்டுக் கொடுத்து விட்டார்கள். பிடிப்பதற்காக வாசலில் நின்ற பொலிஸ் கையும் களவுமாய் அவனைப் பிடித்த போதுதான் முடிவு வந்தது புரிந்தது. சட்டத்தை மீறி ஆட்களை அடிமையாக வைத்திருந்தற்காக அண்ணாவுக்கும் அவரது நோர்வேக்கூட்டாளிக்கும் சிறைத் தண்டனை கிடைத்திருக்கிறது. நேசனை அடிமையாக வைத்து வேலை வாங்கியதற்காகக் கவலைப்பட்டதாக காட்டிய நோர்வே அரசாங்கம், சட்டப்படி விசா இல்லாது நாட்டில் வாழ்ந்தால் கொழும்பிற்குத் திருப்பி அனுப்ப முனைப்பாகச் செயற்படுகிறது. இப்போது அவனையும் சிறையில்தான் அடைத்து வைத்திருக்கிறார்கள். இது வேறு குற்றமாம். அது வேறு குற்றமாம். இருக்க வேண்டிய இடம் மாத்திரம் ஒன்றுதானாம்.

அங்கு இருந்த தொலைக்காட்சியில் சிரியாவில் உள்ள அகதிகளுக்கு அங்கேயே வைத்து உதவப்போகின்றார்கள் என்றும், அகதிகளைக் கட்டுப்படுத்த நோர்வே காவலுக்குக் கப்பல் அனுப்பப் போகிறது என்றும் கூறியது.

நேசனுக்குக் கைவிலங்குகள் அகற்றப்பட்டிருந்தன. அவன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். அவன் சுகந்திரம்; ஐரோப்பியச் சட்டங்களால் கட்டப்பட்ட நான்கு சுவர்களுக்குள்… மனிதம் வெட்கிக், பொருளாதார அரசியல் காரணத்திற்காய் அது அடைக்கப்பட்டிருந்தது.

கர்ணனிடம் குந்தி மூன்று வரங்கள் இரந்தாள். இந்திரன் கவசகுண்டலம் இரந்தான். கண்ணன் பாவ புண்ணியம் இரந்தான். அதற்கும் மேலும் சாபம் அவனுக்கு மறதியானது. என்ன சாபமோ நேசனுக்குப் புரியவில்லை. இரக்காமலே அவனது ஊனையும், உயிரையும், அதன் உழைப்பையும் தங்கள் சொந்தமாக்கினர். கர்ணனைக் கண்ணன் ஆட்கொண்டான். நாரர் நேசனை அடிமைப்படுத்தினார். கர்ணனுக்கு மோட்சமாவது கிடைத்திருக்கும். நரனான அற்பப் மனிதனுக்கு நரகம் ஒன்று காத்திருக்கிறது. எதை யிளந்தாலும் துன்பத்தைப் பரிசாக்கும் இவ்வுலகம். அதில்தான் எத்தனைபேரின் அழகான கர்ண வேஷங்கள். வுன்னி மண்ணிற்கு வேஷம் போடத் தெரியாது என்பது அவனுக்குப் புரிந்தது.

– செப்ரெம்பர் 12, 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *