கயிற்றரவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 30, 2022
பார்வையிட்டோர்: 8,242 
 
 

மே மாத மாலைநேரம். நாகர்கோயில் கிளப்பின் பெரிய திண்ணையில் ராணுவத்திலிருந்து இரண்டாம்விலைக்கு பெறப்பட்ட பெரிய இரும்பு மடக்குமேஜையின் இருபக்கமும் போடப்பட்ட இரும்புநாற்காலிகளில் காப்டன் பென்னி ஆண்டர்ஸனும் , லெஃப்டிண்ட்ண்ட் ப்ரியன் பாட்ஸும் அமர்ந்து பானைநீரில் போட்டு குளிரச்செய்யப்பட்ட பீரை பெரிய கண்ணாடிக்குடுவைகளில் அருந்திக்கொண்டிருந்தனர்.

திண்ணையின் கூரையை ஒட்டி அதுவரை வெயில்காப்புக்காக தொங்கவிடப்பட்டிருந்த வெட்டிவேர்த்தட்டிகள் சுருட்டி மேலே கட்டப்பட்டிருந்தன. அவற்றில் நீர் தெளிக்கப்பட்டிருந்தமையால் இளங்காற்றில் மென்மையான புல்மணம் எழுந்தது.

அப்பால் ஸ்காட் கிறித்தவப்பள்ளியின் விரிந்த செம்மண் மைதானத்திலிருந்து மதியம் முழுக்க காய்ந்த வெயிலின் வெக்கைமணத்தை தாங்கி வந்த காற்று கிளப்பின் உயர்ந்த ஓட்டுக்கூரை கவிந்த உள்கூடங்களில் நுழைந்து திரைச்சீலைகளையும் பிரம்புபின்னிய தட்டிகளையும் அசைத்து ஒலியெழுப்பியது.

நூறுதூண்கள் கொண்ட மாளிகையில் அமைந்திருந்தது நாகர்கோயில் கிளப். மூலம்திருநாள் மகாராஜா கட்டியது. சுதையாலான வெண்ணிறத் தூண்கள் பளிங்குபோல மின்னும்படி நன்கு தேய்க்கப்பட்டிருந்தன. சுண்ணத்தை அரைத்து பனைவெல்லமும் முட்டைவெண்கருவும் சேர்த்து கலக்கி பசையாக்கி தெளியவைத்து மேலே படியும் விழுதை மட்டும் அள்ளிப்பூசி கண்ணாடியால் தேய்த்து அதைச்செய்வார்கள். கண்ணாடித்தேய்ப்பு என்று அதற்குப் பெயர்.

கிளப்புக்கு அந்த மாளிகைதான் வேண்டும் என்று கேட்டபோது மகாராஜா சற்று தயங்கினார். முப்பதாண்டுக்காலம் அது ஹூஸூர் கச்சேரியாக இருந்தது. அரசரின் அதிகாரத்தின் அடையாளம். அதன் முகப்பில் நான்கு தூண்களால் தாங்கப்பட்ட தலைகீழ் முக்கோண வடிவமான நெற்றியில் திருவிதாங்கூர் அரசின் இரட்டையானைச் சின்னமும் நடுவே சங்கு முத்திரையும் இருந்தன. ஆனால் அனைத்து அதிகாரமும் கொண்ட ரெசிடெண்ட் ஜெனரல் மெக்காலே கோரியபோது அரசரால் மறுக்கமுடியவில்லை. “இதன் தூண்களுக்காகவே அதை கோரிப்பெற்றேன்” என்றார் மெக்காலே. “பிரிட்டிஷ்பாணி தூண்கள் இவை. நம்முடன் சேர்ந்து நிற்கவேண்டியவை”

பின்பக்கம் அடுக்களையில் தோமஸ்குட்டி மாட்டுக்கறியை வறுக்கும் மணம் எழுந்தது. ஆவியில் வெந்த சீமைப்பலாக்காயின் உள்ளே வறுத்த மாட்டுக்கறியை வைத்து அவன் சமைக்கும் உணவு நாகர்கோயில் கிளப்பின் முக்கியமான கவர்ச்சியாக இருந்தது. டாக்டர் சாமுவேல் பென்ஸன் ‘இந்தியாவை எதற்காகவேனும் நேசிப்பதென்றால் இதற்காக மட்டுமே” என்று ஒருமுறை சொன்னார்.

பென்னி ஆண்டர்சன் “டாக்டர் வரும் நேரமாகிவிட்டது” என்றார்.

“ஆம், வழக்கமாக முன்னரே வந்துவிடுவார். இன்று ஏதாவது அவசர வேலை வந்திருக்கலாம்…” என்றார் ப்ரியன் பாட்ஸ்

“இது கோடைகாலம். இந்த எரியும்நரகத்தில் நோய்கள் கிளம்பும் பருவம்”. “எங்காவது அம்மை கிளம்பியசெய்தி உண்டா?” என்றார் பென்னி ஆண்டர்சன். அவரது முதல்மனைவியும் ஏழு குழந்தைகளும் நான்காண்டுகளுக்கு முன்புதான் அம்மையில் இறந்தார்கள்.

“இதுவரை இல்லை. இனிமேல் கிறிஸ்துவின் விருப்பம்” என்றார் ப்ரியன் பாட்ஸ். அவர் நகர் நிர்வாகத்துறையில் இருந்தார். நேரடியாகவே திருவனந்தபுரம் ரெஸிடெண்டுக்கு அறிக்கையிடவேண்டியவர்.

”கர்த்தர் நம்முடன் இருப்பார்” என்றார் பென்னி ஆண்டர்சன்

ப்ரியன் பாட்ஸ் மெல்லிய பெருமூச்சுடன் அசைந்து அமர்ந்தார்.

“என்ன?” என்றார் பென்னி ஆண்டர்சன். ப்ரியன் பாட்ஸ் தலையசைத்தார்.

“நான் வரும்போதே கவனித்தேன். நீங்கள் இயல்புநிலையில் இல்லை. இத்தனை முன்னரே நீங்கள் கிளப்புக்குச் செல்லும் வழக்கமும் இல்லை”. என்றார் பென்னி ஆண்டர்சன்.

ப்ரியன் பாட்ஸ் மீண்டும் பெருமூச்சுவிட்டு அசைந்து அமர்ந்து “இங்கே நகர்நடுவே ஒரு பாம்புக்கோயில் இருக்கிறது தெரியுமா?” என்றார்.

பென்னி ஆண்டர்சன்“ஆம், அதனால்தான் இந்த ஊருக்கே நாகர்கோயில் என்று பெயர்” என்றார்

“அது ஒரு பழமையான ஜைனக்கோயில்.ஜைனர்கள் இல்லாமலானபின்னர் இருநூறாண்டுகள் கைவிடப்பட்டு சோலையாகக் கிடந்தது. பின்னர் அதை இந்துக்கள் வழிபடத்தொடங்கினர். அங்கே முன்னால் திருவிதாங்கூர் மன்னர்கள் ஓர் ஆலயத்தைக் கட்டினர்” என்றார் ப்ரியன் பாட்ஸ்

“அங்கே பாம்புகள் உள்ளனவா?” என்றார் பென்னி ஆண்டர்சன்.

”இல்லை. இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் நம் காவல்துறை அதை தீரவிசாரித்து அறிக்கையிட்டிருக்கிறது. நெடுங்காலம் முன்பு அங்கு ஒரு புற்று இருந்திருக்கிறது. அதில் பாம்புகளும் இருந்திருக்கலாம்.அந்தப்புற்றுதான் அங்கே ஆலயத்தின் மையத்தில் தெய்வமாக உள்ளது” ப்ரியன் பாட்ஸ் சொன்னார்

“இவர்கள் புற்றுகளை வழிபடுகிறார்கள். மண்டைக்காடு என்ற ஆலயத்தில்கூட மையத்தெய்வம் புற்றுதான்”

ப்ரியன் பாட்ஸ் “தானாகவே கிளம்புவதனால் அது இவர்களின் தெய்வமாக உள்ளது” என்றார் ”அந்தப்புற்றில் கிளம்பும் மண்தான் பிரசாதமாகக் கொடுக்கப்பட்டுள்ளது”

“நான் உள்ளே சென்று பார்க்க ஆசைப்படுகிறேன். ஆனால் இவர்களின் வழிபாடுஇடங்களுக்குள் நுழைய நமக்கு அனுமதி இல்லை” என்றார் பென்னி ஆண்டர்சன்

“ஆம், ஆனால் பாதுகாப்புக் காரணங்களுக்காக நுழையலாம். நான் இன்று அந்த பாம்புக்கோயிலுக்குள் நுழைந்தேன்”

பென்னி ஆண்டர்சன் ஆர்வத்துடன் “உண்மையாகவா?” என்று நாற்காலி கிரீச்சிட முன்னால் நகர்ந்தார் “என்ன கண்டீர்கள்?”

”நான் உள்ளே செல்லவில்லை. வளாகத்திற்குள் நுழைந்து அங்கே காவலுக்கிருந்தவர்களையும் அந்நேரத்தில் அந்த மரநிழல்களிலும் திண்ணைகளிலும் இருந்தவர்களையும் பிடித்து விசாரணைசெய்தேன்” என்றார் ப்ரியன் பாட்ஸ் “ஆலயத்தின் முகப்பில் வாயிலுக்கு இருபக்கமும் பிரம்மாண்டமான கல்நாகங்கள் செதுக்கி வைக்கப்பட்டிருந்தன. மூன்றுஆள் உயரமானவை. கன்னங்கரியவை. ஐந்து தலைகளும் பத்தி விரித்திருக்க மணிக்கண்களால் உறுத்துவிழிப்பவை. அவை என்னை நிலைகுலையச்செய்தன”

“அச்சமா?” என்றார் பென்னி ஆண்டர்சன்

“பென், அச்சம் என்பது தவிர்க்கமுடியாதது. இந்தக்கோடைநிலத்தின் அத்தனை நோய்களையும் நாம் அஞ்சுகிறோம். பாம்பும் யானையும் இந்நாட்டின் அடையாளங்கள்”

பென்னி ஆண்டர்சன் திரும்பி நோக்க அப்பால் நின்றிருந்த ஸ்டீபன் அருகே வந்து தலைவணங்கினான். அவர் கையைக் காட்ட அவன் குளிர்நீரில் கிடந்த பீர்புட்டியை எடுத்துவந்து உடைத்து கோப்பைகளை நிரப்பினான்

ப்ரியன் பாட்ஸ் நுரையை நோக்கிக்கொண்டிருந்தார். “பாம்பும் யானையும் எதையும் மறப்பதில்லை என்று இவர்கள் நினைக்கிறார்கள். இவர்களின் கல்வித்தெய்வம் யானைத்தலையுடன் பாம்பை கச்சையாக கட்டிக்கொண்டிருக்கிறது” என்றார்

“இவர்களின் தொன்மங்களை ஆராயப்புகுந்தால் நாம் சர். ஜான் வுட்ரோஃப் போல மேஜையளவுபெரிய நூல்களை எழுதவேண்டியிருக்கும்” என்றார் பென்னி ஆண்டர்சன் “எதற்காக அந்த விசாரணை? அதைச்ச்சொல்லுங்கள்”

“நேற்று அந்த ஆலயவளாகத்தில் ஒரு ரகசியக்கூட்டம் நடந்திருக்கிறது. யார் அதில் பேசினார்கள் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் அது நம் அரசியின் ஆட்சிக்கு எதிரான கூட்டம்தான்”

“விசாரணையில் என்ன தெரிந்தது?” என்றார் பென்னி ஆண்டர்சன் “காங்கிரஸ்தானா? இல்லை…”

“ஒன்றும் தெரியவில்லை. அங்கே இருந்தவர்கள் அனைவரும் சோம்பேறிகள். வெறும் சோற்றுக்காக அமர்ந்திருப்பவர்கள். ஒருவன் மட்டும் காவியணிந்த சாமியார். சடைமுடியும் தாடியுமாக இருந்தான்”

“வேடதாரியா?”

“இல்லை. ஆனால் மனநிலை குலைந்தவனாகத் தெரிந்தான். என்னிடம் அந்த கல்நாகத்தைச் சுட்டிக்காட்டி அது என்ன என்று தெரியுமா என்று கேட்டான்”

பென்னி ஆண்டர்சன் அமர்ந்திருந்த நாற்காலி முனகியது

“தெரியாது என்று சொன்னேன். அவன் சிரித்தபடி அதன் பெயர் தர்மன் எனறான்” என்று ப்ரியன் பேட்ஸ் சொன்னார். “ஆயிரம்தலைகொண்ட நாகமாகிய ஆதிசேடனின் குலத்தில் வந்த பாம்பு அது. அதன் ஐந்துதலைகள் நீர் நிலம் காற்று நெருப்பு வானம் என்னும் ஐந்து பருப்பொருட்களைக் காட்டுகின்றன. மானுடவாழ்க்கையை தாங்கியிருக்கும் அறத்தின் தெய்வம். ஐநூறண்டுகளுக்கு முன்பு இந்தமண்ணில் அறம்பிழைபட்டபோது மூன்றுமுறை மண்ணைக்கொத்திவிட்டு அது கல்லாகியது. அன்றுமுதல் இந்தமண்ணில் குருதி காயவில்லை என்றான்”

“யோகியர் அதனருகே அமர்ந்து ஐநூறாண்டுகாலமாக தவம்செய்துகொண்டிருக்கிறார்கள் என்றான்” என்று பிரியன் பேட்ஸ் தொடர்ந்தார் “ஐந்துகோடி முறை பாவமன்னிப்பு கோரினால் அது கண்விழிக்கும். மீண்டும் ஐந்து தலைகளும் உயிர்கொண்டு எழும் என்றான். நான் வாயை மூடு என்று சொல்லி லத்தியால் அவன் தலையை அறைந்தேன். என்னை நோக்கிச் சிரித்தபடி கயிற்றரவு என்றான்”

“என்ன அது?” என்றார் பென்னி ஆண்டர்சன்

”தெரியவில்லை. கயிற்றரவு கயிற்றரவு என்று சொல்லிக்கொண்டே இருந்தான். என்னை நோக்கி கைசுட்டி சிரித்தான். பித்தனை என்ன செய்ய முடியும்? நான் திரும்பி வந்துவிட்டேன்”

“அந்தச்சொல்லுக்கு என்ன அர்த்தம்?” என்றார் பென்னி ஆண்டர்சன்.

“தெரியவில்லை. நடராஜ அய்யரிடம் கேட்டுப்பார்க்கலாம் என்று அவரை வரச்சொன்னேன்”

“ஒரு கிறுக்கனின் உளறலை புரிந்துகொள்வதற்காகவா?”

“இல்லை, அவன் வெறும் கிறுக்கன் அல்ல”

நெடுநேரம் அவர்கள் ஒன்றும் பேசவில்லை. தோமஸ்குட்டி அவனுடைய சீமைப்பலாக்காயில் மாட்டிறைச்சி வைத்த அப்பத்தைக் கொண்டுவந்து வைத்தான். பென்னி ஆண்டர்சன் கத்தியால் அதை வெட்டி துண்டுகளாக்கி முள்கரண்டியால் குத்தி வாயிலிட்டு மென்றபடி தலையசைத்து “நன்று” என்றார்

ப்ரியன் பாட்ஸ் சாப்பிட்டபடி “அவன் எப்போதுமே சிறப்பாகச் சமைப்பவன்” என்றார்

கிளப் வாசலில் குதிரைவண்டி வந்து நின்றது. குதிரையின் உடலில் பலவகையான மணிகள் குலுங்கின. பாகன் அதை சவுக்கால் மெல்லத்தட்டி அமைதிப்படுத்தினான். இந்தியர்களின் வண்டிகள் முற்றத்திற்கு வர அனுமதியில்லை. வண்டியின் பின்பக்கம் வழியாக வெண்ணிறத் தலைப்பாகையும் சாம்பல்நிறக் கோட்டும் கீழே பஞ்சக்கச்ச வேட்டியும் அணிந்த நடராஜ அய்யர் இறங்கி அங்கிருந்தே கும்பிட்டுக்கொண்டு வந்தார்

“இந்த மடையனின் சிரிப்பு என்னை எப்போதும் அருவருக்கச்செய்கிறது” என்றார் பென்னி ஆண்டர்சன்

“இவர்கள்தான் நம் அரசின் அடித்தளக்கற்கள்”

நடராஜ அய்யர் அருகே வந்து ”இனிய மாலைவணக்கம் சார். அருமையான மாலை. நல்ல தென்றல் வீசுகிறது” என்றார்

“அமருங்கள். சாப்பிடுகிறீர்களா?” என்றபின் ப்ரியன் பாட்ஸ் பென்னி ஆண்டர்சன்ஐ நோக்கி கண்சிமிட்டினார்

“நான் மாலை எதுவுமே உண்பதில்லை, தெரியுமே” என்றார் நடராஜ அய்யர் ”செய்தியைக் கொண்டுவந்த மாடசாமி தெளிவாகவே எல்லாவற்றையும் சொன்னான். நான் என்னால் முடிந்த விளக்கத்தை அளிக்கிறேன். அதற்குப்பின்னால் நேரில்காட்டவும் ஓர் ஏற்பாடு செய்திருக்கிறேன். மாடசாமி கூட்டிவருவான்”

‘சொல்லுங்கள், கயிற்றரவு என்றால் என்ன?”

”அடிப்படையான கேள்வி. சங்கரர் கேள்விப்பட்டிருப்பீர்கள்”

“ஆம்…ஓரளவு”

“இங்கே கேரளத்தில் காலடியில் பிறந்த மேதை அவர். உங்கள் ஷெல்லிங், ஹெகல் போல தூயகருத்துமுதல்வாத தத்துவத்தை சொன்னவர். அதற்கு அத்வைதம் என்று பெயர்” என்றார் நடராஜ அய்யர் ”இந்த பிரபஞ்சம் வெறும் மாயத்தோற்றம் என்று அவர் சொன்னார். நாம் நம்முடைய மனமயக்கத்தால் இதை உண்மையானது என்று எண்ணுகிறோம். அதை விளக்க அவர் சொன்ன உதாரணம்தான் கயிற்றரவு”

“ஹும்” என்றார் பென்னி ஆண்டர்சன்

“மங்கலான வெளிச்சத்தில் நாம் செல்கிறோம். பாதையில் ஒரு கயிறுகிடக்கிறது. ஒருகணம் அதை நாம் பாம்பாக நினைக்கிறோம். அந்தக்கணத்தில் அது பாம்பேதான் இல்லையா? நம் உடல் அஞ்சி புல்லரித்துவிடுகிறது” என்று நடராஜ அய்யர் உற்சாகமாகச் சொன்னார் “அதன்பின் நாம் தெளிவடைகிறோம். அது கயிறு என்று தெரிந்ததும் பயம்போய்விடுகிறது, அது கயிறாகவே தெரியத்தொடங்குகிறது”

பென்னி ஆண்டர்சன் மீண்டும் தொண்டையைச் செருமிக்கொண்டார்

“அதேபோல நம் அறியாமை அகன்று இந்த பிரபஞ்சம் ஒரு மாயத்தோற்றம் என்று தெளிந்தோம் என்றால் அது அப்படியே தெரியத்தொடங்கும். இதுதான் கயிற்றரவுச் சித்தாந்தம். இதை ஆயிரம் ஆண்டுக்காலம் பேசி விவாதித்திருக்கிறார்கள்”

ப்ரியன் பாட்ஸ் மோவாயைத் தடவியபடி அமர்ந்திருக்க பென்னி ஆண்டர்சன் அவரையும் நடராஜ அய்யரையும் மாறி மாறிப்பார்த்தார். மாலையுணவை எடுத்துவைக்கச் சொல்லலாமா என எண்ணினார்.

மாடசாமியும் பெரிய முண்டாசு கட்டி கையில் மூங்கில் கூடை வைத்திருந்த ஒரு கிழவனும் வாசலருகே தயங்கி நின்றனர். “உள்ளே வாருங்கள்” என்ற நடராஜ அய்யர் “நான்தான் வரச்சொன்னேன். தென்காசிக் குறவர்கள் இங்கே திருவிழாவுக்கு வந்திருக்கிறார்கள். இவன் பெயர் கருப்பன்”

கருப்பனின் முண்டாசு பெரிய அழுக்குத்துணிமூட்டைபோல் இருந்தது. ஒட்டிய கன்னங்களும் கூரிய மூக்கும் கரிய சிறிய உதடுகளும் கொண்ட முகம். கரிய உடல் முதுமையில் சுருங்கி வற்றல்போலிருந்தது. அவன் வணங்கிவிட்டு மூங்கில்கூடையை தரையில் வைத்தான்

“அடேய், வாடா. வந்து உன் வித்தையைக் காட்டு” என்றபின் நடராஜ அய்யர் ”வேடிக்கையான வித்தை சார்” என்றார்

கருப்பன் தலைவணங்கிவிட்டு தன் தோளிலிருந்து மகுடியை எடுத்தான். “பாம்புவித்தையா? வேண்டாம்” என்றார் பென்னி ஆண்டர்சன்.

“இல்லை, இது வேறு” என்றார் நடராஜ அய்யர் “டேய் சீக்கிரம் காட்டுடா…முழிக்கறான் பாரு, மண்ணந்தை”

கருப்பன் ஒரு கூடையைத்திறந்தான். அதற்குள் பாம்பு சுருண்டு அசைவிழந்திருந்ததைக் கண்டு ப்ரியன் பாட்ஸ் தன் கால்களை தூக்கிக்கொண்டார். அதை அவன் கையால் எடுத்தபோதுதான் அது பாம்பல்ல கயிறு என்று தெரிந்தது.

“வெறும் கயிறு” என்றார் நடராஜ அய்யர் ‘பாருங்கள்”

அவன் அதை தரையில் சுருட்டி வைத்துவிட்டு மகுடியை வாயில் பொருத்தி வாசிக்கத்தொடங்கினான். என்ன செய்யப்போகிறான் என்று எண்ணிய பென்னி ஆண்டர்சன் கூர்ந்து நோக்கி முன்னால் குனிந்தார்

அவன் சுருள்சுருளாக ஒரே மெட்டை வாசித்துக்கொண்டிருருந்தான். சுதேசிகள் பாடும் வந்தேமாதரம் என்ற பாட்டைப்போல அது ஒலிப்பதாக அவருக்குத் தோன்றியது. அந்தப்பாட்டையே ஒரு மன்றாடலாக, கொஞ்சலாக பாடுவதுபோல

கயிறு அசைவற்றிருந்தது. என்ன செய்யப்போகிறான்? ப்ரியன் பாட்ஸிடம் மெல்ல “ஏதோ சில்லறை தந்திரம்” என்றார். ப்ரியன் பாட்ஸின் விழிகள் இமைக்காதவை போல இருந்தன.

வாசலில் தோமாவும் ஸ்டீஃபனும் கூட்டிப்பெருக்கும் ஆரீஸும் பீட்டரும் வந்து நின்றார்கள். பிடாரன் மகுடியை ஊதிக்கொண்டே இருந்தான். அவன் முழங்கால்மடிப்பு பாம்புபோல சுழன்று சுழன்று ஆடியது. மகுடியின் கீழ்முனை உடன் சுழன்றது

“அவனை நிறுத்தச்சொல்லுங்கள்” என்றார் பென்னி ஆண்டர்சன்”எனக்குத் தலைவலிக்கிறது. ஏதாவது கொடுத்து அனுப்புங்கள்”

ஆனால் ப்ரியன் பாட்ஸ் அவர் முழங்கையைத் தொட்டு “அது அசைகிறது” என்றார்

”என்ன?” என்று பென்னி ஆண்டர்சன் நோக்கினார். கயிறு அப்படியேதான் இருந்தது.

கருப்பன் அவர்களைக் கடந்து பின்னால் நிற்கும் எவரையோ பார்த்துக்கொண்டு வாசித்தான். பென்னி ஆண்டர்சன் திரும்பி நோக்கினார், அங்கே சுவர்தான் இருந்தது. ப்ரியன் பாட்ஸ் அவரை நோக்கி உதடுகள் மட்டும் அசைய ‘பாருங்கள்” என்றார்

பென்னி ஆண்டர்சன் திரும்பி நோக்கியபோதும் கயிறு அப்படியேதான் இருந்தது. அவர் கூர்ந்து நோக்கியபின் உடலைத் தளர்த்திக்கொண்டு பார்வையை எளிதாக்கினார். அப்போது மனம் அதிர்ந்தது. பின்னர்தான் அது ஏன் என அவருக்கு தெரிந்தது. அந்த சுருள் மெல்ல அசைந்தது

அவர் கூர்ந்து நோக்கினார். அது வெறும் மனபிரமை. கயிறு அப்படியேதான் இருந்தது. கயிற்றை வாசித்து பாம்பாக்குவதாவது. என்ன மூடத்தனம். அந்த எண்ணம் முடிவதற்குள் அவர் கயிற்றுச்சுருள் அசைவதை நன்றாகவே பார்த்துவிட்டார்.

நெஞ்சு அதிர அவர் பார்த்துக்கொண்டே இருந்தார். நெளிவு ஒருகணம் தெரிந்தது. அப்போது அது பாம்பாக இருந்தது. மறுகணம் அது அசைவின்றி கயிறாகத் தெரிந்தது.

மெல்லமெல்ல அது பாம்பு மட்டுமென்றாயிற்று. சுருளின் ஓர் அடுக்கு சென்ற திசைக்கு நேர் எதிர்திசையில் இன்னொரு அடுக்கு நீர்ப்பளபளப்புடன் ஒழுகிச் சென்றது.மடிப்புகளுக்குக் கீழே வால்நுனி நெளிந்தது. திகைத்து மேலே நோக்க அங்கே பாம்பின் பத்திக்குப் பதில் பிசிர்களுடன் கயிற்றுநுனியே தெரிந்தது.

பென்னி ஆண்டர்சன் ப்ரியன் பாட்ஸை நோக்கினார். அவரது விழிகள் கண்ணாடி உருளைகள் போல ஒளியுடன் அசைவற்றிருந்தன. திரும்பியபோது ஐந்து தலைகொண்ட நாகம் நாப்பறக்க மணிவிழிகள் நீர்த்துளிகள் போல ஒளிவிட அவரை நோக்கியது. அவர் கீழே நோக்க அங்கே கயிறுமுனை இழுபட்டு சுருளவிழ்ந்துகொண்டிருந்தது.

“போதும்” என்று பென்னி ஆண்டர்சன் சொன்னார். அவர் குரல் தழுதழுத்தது. “போதும்…நிறுத்தச்சொல்லுங்கள்”

நடராஜ அய்யர் “அடேய்…நிறுத்துடா” என்றார். “போதும்…நிறுத்துடா. தொரை பயப்படுறார்ல?”

ஆனால் அவன் அவர் குரலைக் கேட்டதாகத் தெரியவில்லை. “அடேய்…போரும்டா…நிப்பாட்டுடா”

பாம்பு எழுந்தபடியே இருந்தது. அதன் வால்மட்டும் சற்றே வளைந்து கீழே நின்றது. மட்டை விழும் ஒலியுடன் அது தரையில் விழுந்து தவித்து நெளிந்து சுவரை நோக்கிச் சென்றது

“நிறுத்தச்சொல் அவனை…அவனை வெளியே போகச்சொல்” என்று பென்னி ஆண்டர்சன் கூவினார்

அவன் வெறிகொண்டவன் போல கால்களை ஆட்டியபடி விரைவாக வாசித்தான். கண்கள் நிலைகுத்தியிருந்தன. உதட்டோரம் நுரை ததும்பியது.நடராஜ அய்யர் “டேய் ஸ்டீபா, தோமா அவனை புடிங்கடா. கட்டேல போறவன் நிப்பாட்ட மாட்டேங்கிறானே” என்று கூவினார்

ஸ்டீபன் ஓர் அடி முன்னால் வைக்க பாம்பு துருத்திபோலச் சீறி திரும்பி அவனை நோக்கியது. அவன் “ஏசுவே’ என அலறியபடி பின்னால் ஓடி வாசலுக்கு அப்பால் சென்றான்.

பாம்பு தலைதாழ்த்தி சுவர் மடிப்பை முகர்ந்தது பின்பு சொடுக்கப்பட்ட தோல்சவுக்கு போல வால் நெளிய உள்ளறையின் இருளுக்குள் சென்றுமறைந்தது

பென்னி ஆண்டர்சன் எழுந்து வெளியே ஓடி முற்றத்தில் நின்றார். “ப்ரியன், வாருங்கள் வெளியே…வந்துவிடுங்கள்…” என்று கூவினார்.

நடராஜ அய்யர் “நாசமா போறவனே…நாசமா போறவனே” என்று கூச்சலிட்டபடி முற்றத்திற்கு வந்தார். “டேய் படுபாவி. வெள்ளைக்காராடா. கொடல உருவிடுவா…புடிடா அதை…டேய் புடிடா அதை”

கருப்பன் திடுக்கிட்டு விழித்ததுபோல திரும்பிப்பார்த்து “சாமி?” என்றான்

“புடிடா பாம்பை…படுபாவி. கட்டேல போறவனே. சண்டாளா”

“சரி சாமி” என்றபின் அவன் மீண்டும் மகுடியை வாசித்தான். முன்பு வாசித்ததன் மறுசுற்று போலிருந்தது அந்த மெட்டு.

அவன் கூடைக்கு மேல் நெளிவதுபோலத் தெரிந்தது. பென்னி ஆண்டர்சன் நோக்கியபோது அங்கே கயிறு அசைவதைக் கண்டார்

“இதானே சாமி?” என அவன் கயிற்றை தூக்கிக் காட்டினான்

“அப்பாடா வந்துடுத்து” என்றார் நடராஜ அய்யர்.

அவன் கயிற்றை சுருட்டி கூடைக்குள் வைத்து மூடி மகுடியை தோளில் மாட்டினான். கரியபற்களைக் காட்டி சிரித்தபடி அவர்கலை நோக்கித் தலைவணங்கினான்.

“அவனுக்கு ஒரு பணம் கொடுத்து அனுப்புங்கள்” என்றார் ப்ரியன் பாட்ஸ்.

“ஒருபணமெல்லாம்….” என ஆரம்பித்த நடராஜ அய்யர் அவர் விழிகளை நோக்கியபின் “அப்படியே” என்றார். “டேய் துரைவாள் உனக்கு ஒருபணம் தரச்சொல்லியிருக்காரு. கும்பிட்டுட்டு வாங்கிட்டுப்போ. என்னடா புரியறதா? முழிக்காதே கூஷ்மாண்டம் மாதரி”

அவன் வெள்ளிக்காசை வாங்கி மண்ணை தொட்டு தலைமேல் வைத்து வணங்கிவிட்டு திரும்பிச்சென்றான்.

நடராஜ அய்யர் காவிப்பற்களைக் காட்டிச் சிரித்து “நல்லவேளை…. மறுபடியும் கயிறாக ஆகிவிட்டது. நான் பயந்தே போய்விட்டேன்” என்றார்

“வெளியே” என்றார் பென்னி ஆண்டர்சன் “வெளியேறும், உடனே”

“நான் கயிற்றரவை விளக்க—”

“வெளியே போ”

“உத்தரவு” என தலைவணங்கி நடராஜ அய்யர் வெளியே நடந்தார். பென்னி ஆண்டர்சன் விழிதூக்கி நோக்க பிறரும் உள்ளே மறைந்தனர்

“அந்தப் பாம்புதான் திரும்பிவந்ததா?” என்றார் ப்ரியன் பாட்ஸ்.

பென்னி ஆண்டர்சன் நெஞ்சு நடுங்க “ஆம், அதையே நானும் ஐயப்பட்டேன். அந்தப்பாம்பு கிளப்புக்கு உள்ளேதான் இருக்கிறது” என்றார். “நம்மை ஏமாற்றிவிட்டான். இனி இதற்குள் நாம் நுழையவே முடியாது”

“கயிற்றரவு” என்றார் ப்ரியன் பாட்ஸ் “மாயத்தோற்றம்…. பாம்புகளும் கயிறாகத்தெரியும்”

“என்ன சொல்கிறீர்கள்?”

“பென், நான் சற்று முன் அவன் அதை ஊதும்போது இந்த மாளிகையின் அத்தனை தூண்களும் பாம்புகளாக நெளிவதைக் கண்டேன்” என்றார் ப்ரியன் பாட்ஸ்.

– November 28, 2015 (நன்றி: https://www.jeyamohan.in)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *