கனவுகளே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 31, 2023
பார்வையிட்டோர்: 2,117 
 
 

கரையோரம் ஓங்கி உயர்ந்து நிற்கும் அரசமரம். பக்கத்தில் வேப்பமரம். அடியில் எண்ணெய்ப்பசை காணாத பிள்ளையார். அவர் காலடியில் காய்ந்து சருகான செம்பருத்திப் பூக்கள், முதிர் கன்னிகள் தங்களது கல்யாணக் கனவு நிறைவேறப் பிள்ளையாருக்குத் தந்த கையூட்டு, அவர்களைப் போலவே வாடி வதங்கி பொலிவிழந்து கிடந்தது.

பரந்து விரிந்த மணற்பரப்பு. ஒரு ஓரமாக ஒடுங்கி ஓடும் தண்ணீர். அதில் குதித்துக் கும்மாளமிடும் அம்மணச் சிறுவர்கள். ஒரு காலத்தில் நானும் அப்படிக் கும்மாளமிட்டவன் தானே? கடவுள் கஞ்சத்தனம் மிகுந்தவன். கவலை அறியாத இளம் பருவத்தைக் கொஞ்சமாகவும், எதிர்காலக் கவலையில் உழலும் பருவத்தை அதிகமாகவும் வைத்தக் கொடுங்கோலன்.

பொட்டென்று தலையில் விழுந்து தெறித்த அரசம் பழம் என் கனவுகளைக் கலைத்தது. எதிர்க் கரையில் அம்பாரமாகக் குவிந்து கிடக்கும் ஈரமாக ஆற்றுமணல். எவ்வளவு உயரம்! திடீரென அந்த மணற்குன்றுகள் சரியத் தொடங்கின அவன் கனவைப் போல. இப்படிச் சரியும் மணல் சிமெண்ட்டுடன் கலந்து விட்டால் எவ்வளவு உறுதிப்படுகிறது. எப்படி திடமானக் கட்டிடமாக எழுந்து நிற்கிறது. திடமாக எழுந்து நிற்கத் திடமான ஊன்று கோல் தேவை போலும். அந்த ஆண்டவன் தான் நமக்கு ஊன்றுகோலாய் அமையும் துணை என்பாள் அம்மா,

டொடடொட…. டிராக்டரின் உறுமல். டிரைவர் சீட்டில் பால்ய நண்பன் குமார் பத்தாவதுடன் படிப்பை முடித்து டிரைவராக வேலை செய்கிறான். பிழைக்கத் தெரிந்தவன்.

“ஏய்பாலு! என்ன ஆத்தங்கரையில் அந்தி நேரத்தில் தனியாக ஏதேனும் காதல் விவகாரமா”?

குறும்பாய் கேட்டபடியே பக்கத்தில் வந்து அமர்ந்தான். “என்ன கிண்டலா?” உடைந்தேன்.

“ப்ளீஸ் கோபிச்சுக்காதேடா, உன்னை ரிலாக்ஸ் பண்ணத்தான் கேட்டேன். கண்ணைத் திறந்து கொண்டு கனவு கண்டு கொண்டு இருக்கும் உன்னை உற்சாகப்படுத்தத் தான் அப்படிக் கேட்டேன். மன்னிச்சுக்கோடா!,” ஆதரவாகக் கரங்களைப் பற்றினான்.

“கனவு காணவில்லைடா, ஏதாவது வேலைக்கு உடனே போகணும். எத்தனை நாட்கள் தான் அம்மாவின் உழைப்பில்  உட்கார்ந்து சாப்பிடுவது? அப்பா உட்டுட்டு ஓடிப்போன நாளில் இருந்து அம்மா படும் கஷ்டம் கொஞ்சமா? நஞ்சமா?

நாலு ஆட்டையும் இரண்டு எருமையையும் வைத்துக் கொண்டு இந்த அளவுக்கு என்னை வளர்த்து ஆளாக்கி என் ஆசைப்படி டிப்ளமாவில் படிக்க வைச்சு படிப்பு முடிஞ்ச அஞ்சு வருஷம் ஆச்சு. வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குப் போய்விட்டது. அப்பப்ப ஒயரிங் வேலைக்குப் போறேன். அது அப்ளிகேஷனுக்கேச் சரியாய்ப் போய்விடுகிறது.

மாடுகளும் கிழடுதட்டி மரப்படி ஆகிவிட்டது. அம்மாவும் கிழடுதட்டி மரத்துப் போய் விட்டாள். இருந்தாலும் இருவருக்கும் வயிறுமரத்துப் போகமாட்டேங்குதே”. என்றேன் தொண்டை அடைக்க.

“சீச்சீ கவலைப்படாதே நல்லதே நடக்கும்.

ஐந்து வருஷத்துக்கு முந்தி பாரதிராஜா படம் பார்த்தோமே; அப்போ என்ன சொன்ன மறந்துட்டியா? அதுல நாயகனும் நாயகியும்.

      தென் மேற்குப் பருவக்காற்று
      தேனிப்பக்கம் சிலுசிலுன்னு வீசுது

என்று பாடியபடியே ஹீரோ ஹோண்டாவில் போவது போல போகனும் அம்மாவைப் பின்னால் வச்சுகிட்டு போகனும்னு, அந்தக் கனவை நனவாக்க வேண்டாமா? தைரியமா இரு. நேரம் வரும்”.

 “இப்பத்தான் புத்தி வரும் நேரம் வந்திருக்கு. ஹோண்டா வேண்டாம். ஏன் சைக்கிள் கூட வேண்டாம். ஆனா வயித்துக்கு சோறு வேணும்டா. இந்த மண் ஏத்துறவேல கிடைச்சாகக் கூட போதும். என்னையும் சேத்து விடு டா”, என்று கெஞ்சிய என்னைக் கண்கலங்க வெறித்தான் குமார்.

ஏதோ முடிவுக்கு வந்தவனாகச் “சரிடா நாளைக்குக் காலைல எட்டுமணிக்கு இங்க வந்துடு. ஒருலோடு மண் ஏற்றி விட்டால் முன்னூறு ரூபாய் சம்பளம். எல்லோரும் சமமாப் பிரிச்சுக்கனும். உன்னையும் சேத்து விடுறேன். நம்ம பள்ளிக் கூடத்திக்குத்தான் மண் அடிக்கிறேன். புதுசாயாரோகட்டிடம் கட்டித் தரப் போறாங்களாம். இன்னைக்கு அதுக்கு அடிக்கல் நாட்டுறாங்க. விழா ஏற்பாடு ஜரூரா நடந்துகிட்டு இருக்கு. அப்ப நான் வரட்டுமா இன்னும் ரெண்டு ட்ரிப் அடிக்கணும் நாளைக்கு சந்திப்போம்”.

விடை கொடுத்து வீட்டுக்குத் திரும்பினேன். வரும் வழியில் லைப்ரரி, ஆசைவெட்கம் அறியாது என்பது சரிதான். பத்திரிகையில் வாண்டட் காலம் பார்ப்போம் இன்று மட்டும்.

முதல் பக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி பற்றிய செய்திகள் போட்டோவுடன் கனவுகாணுங்கள். முயற்சி செய்யுங்கள். தொழில் கல்வி பயிலுங்கள். தொழில் தொடங்குங்கள். 2020ல் இந்தியாவை வல்லரசு ஆக்குங்கள். என்ற தலைப்புகளுடன். வெறுப்புடன் பத்திரிகையை வீசி எறிந்து விட்டு வீட்டை நோக்கி நடந்தேன். கண்ட கனவு போதாதா, இன்னும், கனவு முணுமுணுத்தபடியே நடக்க ஆரம்பித்தேன்.

இருட்ட ஆரம்பித்துவிட்டது. வழியிலேயே பள்ளிக்கூடம். ஜேஜேன்னு கூட்டம். மின் விளக்கில் ஒளிர்ந்தது பள்ளிக்கூடம். குமார் கூறியது நினைக்கு வந்தது.

       “ஒளிமயமான எதிர்காலம்
      என் உள்ளத்தில் தெரிகிறது”

டி.எம். சௌந்தரராஜன் கம்பீரமாக கனவு கண்டு கொண்டிருந்தார் இசைத்தட்டில்.

விர்ரென்று ஓசையின்றி தவழ்ந்து வந்தது அம்பாசிடர். சீருடையில் டிரைவர் பவ்யமாகக் காரைத்திறந்து விட மிடுக்காக் கதர் உடையில் இறங்கி வருபவர் தான் அந்தத் தொழில் அதிபர் போலும். பருத்தி உடையிலும் பணக்காரமிடுக்கு நன்றாகவே தெரிந்தது. பணக்காரன் வீட்டு பிள்ளையும், பால் மாட்டின் கன்றும் பார்த்தாலே தெரியும் என்று ஓயாமல் கூறும் அம்மாவின் பொன்மொழி நினைவுக்கு வந்தது.

டி.எம்.எஸ் இசைத்தட்டில் தொடர்ந்தார்

“இந்த உலகம் பாடும் பாடல் ஓசை’ என்காதில் விழவில்லை. பவர்கட் ஒரே இருள்.

தொழிலதிபர் ஏற்றிவைத்த குத்து விளக்கின் ஒளியில் தலைமையாசிரியரும் அவர் பரிவாரங்களும் தவிப்புடன் கைகளைப் பிசைவது நன்றாகவே தெரிந்தது. எதிரே இரண்டு வெளிச்சப் புள்ளிகள் குமாரின் டிராக்டர் தான். கை அசைத்து அவனை நிறுத்தி டிராக்டர் பேட்டரியில் இணைப்புக் கொடுத்து மேடைக்கு ஒளியூட்டினேன். டி.எம்.எஸ் தொடர்ந்தார் இசைத்தட்டில்

       “நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார்
       வாழ்க வாழ்க என்று பூ மழை தூவுகிறார்”

வான் மழைக்கே இங்க வழியில்ல. இதுலபூ மழை, யார்காதுல பூ என்று முணகியபடியே நின்றேன். மீண்டும் கரண்ட்வர டிராக்டரை விடுவித்து வீடுதிரும்பி படிக்கையில் பொத்தென்று விழந்தேன்.

சாப்பிட அழைத்த அம்மாவிடம் பசியில்லை என்று கூறி விட்டத்தையே வெறித்தேன். நல்ல வேளை சொந்த வீடு. இல்லையேல் வீட்டுவாடகையே கழுத்தை இறுக்கும். எப்போது உறக்கம் என்னைத் தழுவியதோ தெரியவில்லை.

சூரிய ஒளி சுள்ளென்று அடிக்க வாரிசுருட்டி எழுந்து குளித்து அம்மா தந்த பழய சோற்றை உண்டு வேலைக்குக் கிளம்பினேன். மண் சுமக்கத்தான்.

“அம்மா கொஞ்சம் வெளியில போயிட்டு வர்றேன்”. படியிறங்கினேன்.

ஜிவ்வென்று புத்தம்புதிய ஹோண்டோ வாசலை வழிமறிக்க அதில் வந்த இளைஞன் “இங்க பாலுங்கறது…”இழுத்தான்.

“நாந்தான்”.

“ஐயா இத உங்ககிட்ட கொடுத்து வரச்சொன்னார்” கடிதத்தை நீட்டினான்.

“உட்காருங்க”, காலு டைந்து கட்டுப்போட்ட ஸ்டூலை எடுத்துப் போட

“பரவாயில்லை நான் வெயிட்பண்றேன்” என்று ஸ்டைலாக ஹோண்டாவில் சாய்ந்து தலைவார ஆரம்பித்தான்.

“யார் இந்த ஐயா”

பள்ளிக் கூடத்தில் கண்ட வி.ஐ.பியின் முகவரி. அவசரமாகக் கடிதத்தை மேய்ந்தேன். அழகாகடைப் அடிக்கப்பட்டக்கடிதம். “டியர் யங்மேன்!

உங்கள் திறனை நேற்றுப் பள்ளி விழாவில் கண்டேன். உங்களைப் பற்றிய முழு விபரமும் தலைமை ஆசிரியர் மூலம் அறிந்தேன். உங்களுடைய சமயோசிதமும். சுறுசுறுப்பும் – தொழில் முனைவும் – திறனும் எனது நிறுவனத்திற்குத் தேவை. இணைவீர்களா?

சம்பளம் ஆறு ஆயிரம் மற்றும் இதரபடிகள். தங்குவதற்கு சகல வசதிகளும் கூடிய குவாட்டர்ஸ். அலுவலகம் வர ஹீரோ ஹோண்டா வசதி. விருப்பம் இருப்பின் உடன் வரவும்” கீழே முத்து முத்தாக நிர்வாகியின் கையொப்பம்.

கலாம் உனக்கு ஒரு சலாம் என்று உள்ளுக்குள் கூவியபடியே அம்மாவிடம் ஓடி விபரம் கூறினேன். வேறு உடைக்கு மாறி அந்த இளைஞனின் ஹீரோ ஹோண்டாவில் தொற்றினேன். போகும் வழியில் குமாரிடம் கூற வேண்டும், வேலை கிடைத்த விபரத்தை,

ஹோண்டா விரைய எனது கனவுகளும் விரைந்தது. அந்த ஆண்டு ஹோண்டாவின் பின்னே மனைவி, அதற்கு அடுத்த ஆண்டு அவள் மடியில் மழலை… என கனவுகள் தொடர்ந்தது. என்ன! நீங்களும் கனவு ரெடிதானே?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *