முதலாளி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 4, 2023
பார்வையிட்டோர்: 2,104 
 

கந்தனுக்கு தூக்கம் வர மறுத்தது. நாளை குலதெய்வக்கோவிலில் தனது தாயின் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு, பூஜை மற்றும் அன்னதானத்துக்கென  வாங்கும் சம்பளத்தில் நான்கு வருடமாக உள்ளூரில் விநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் மாதத்தவணை சேமிப்பில் பணம் கட்டி வந்தவனுக்கு இன்று சேமிப்புத்தொகை முழுவதும் கிடைத்திருந்தது.

தாய், மனைவி, குழந்தைகள் இரண்டு பேர் மற்றும் சகோதரி, மனைவியின் வீட்டினர் என இன்றே தன் வீட்டிற்கு வந்ததோடு நாளை அன்னதானத்துக்கு சமைப்பதற்குண்டான பணிகளை தூக்கம் மறந்து மகிழ்ச்சியுடன் செய்து கொண்டிருந்தனர்.

மற்றவர்களைப்போல தக்காளி சாதம், தயிர் சாதம், புளி சாதம் இவற்றில் ஏதாவதொன்றைப்போடுவதில் கந்தனுக்கு உடன்பாடில்லை. தலைவாளை இலை போட்டு சாப்பாடு, குழம்பு, சுண்டக்காய் புளிக்குழம்பு,ரசம், கூட்டு, பொறியல்,தயிர்,ஊறுகாய், உப்பு, இனிப்பு பலகாரம், அப்பளம், வடை, பாயாசம் என அறுசுவை உணவு போட்டு விட வேண்டுமென அதற்க்கான சமையல்காரரை ஏற்பாடு செய்திருந்தான்.

காலையில் உள்ளூரிலிருந்து பங்காளிகள் மற்றும் உறவினர்களை அழைத்துச்செல்வதற்கு ஒரு பேருந்து ஏற்பாடு செய்திருந்தான். வீட்டிலிருந்து புறப்படும்போது வந்த உறவுகளுக்கு காலை உணவாக உப்புமா, லட்டு, இட்லிக்கு இரண்டு சட்னி, தயிர் என பறிமாறி சாப்பிட்டு முடித்தபின் காபி மற்றும் டீ கொடுத்து அதன் பின் பேருந்தில் சமையல் பொருட்கள் மற்றும் பூஜை சாமான்களை எடுத்து வைத்து, சமையல் காரருடன் உறவினர்களை ஏறச்செய்து நூறு கிலோ மீட்டர் தள்ளி ஒரு காட்டிற்குள் இருந்த குலதெய்வக்கோவிலுக்கு சென்று சேர்ந்தான்.

“குல தெய்வம்னா என்ன பாட்டி?” என அறியாத வயதில் புரியாமல் கேட்ட தன் பேத்தியிடம் ” குலம்னா குடும்பம். குல தெய்வம்னா குடும்பத்தக்காக்கற தெய்வம். அப்ப மத்த தெய்வம் காக்காதான்னு கேட்டீன்னா காக்கும் குலதெய்வம் போல காக்காது. அதாவது அப்பா உனக்கு பசிக்குதுன்னா சோறு ஊட்டி விடுவார். மத்தவங்க சோறு கைய நீட்டச்சொல்லிக்குடுப்பாங்க. அப்பா மாதிரி குல தெய்வம். அதுலயும் அப்பாவோட குலதெய்வம் தான் குழந்தைகளுக்கு கும்பிடற குலதெய்வம்னு நம்ம முன்னோர்கள் சொல்லி வெச்சிருக்கறாங்க. பெண் குழந்தைங்க மட்டும் கண்ணாலம் கட்டிப்போனதுக்கப்புறம் கணவனோட குலதெய்வத்தைத்தான் கும்பிடனம். அப்ப ஆம்பளப்புள்ளைங்களுக்கு ஆயுசுக்கும் ஒரே குலதெய்வம்தான். ஆனா பொம்பளப்புள்ளைங்க மட்டும் ரெண்டு குலதெய்வங்களைப்பார்ப்பாங்க” என கூறிய பாட்டியின் மடியில் பாசத்தோடு அமர்ந்து கொண்டாள் கந்தனின் பத்து வயதான மூத்த மகள். இரண்டாவது மகளுக்கு மூன்று வயது நடப்பதால் இந்த வேண்டுதலோடு முடி எடுத்து காது குத்தி விட முடிவு செய்திருந்தான் கந்தன்.

முடி எடுக்கும் வரை அமைதியாக இருந்த குழந்தை தாய் மாமன் மடியில் அமரச்செய்து காது குத்தும்போது கத்திக்கதறி, துள்ளி ஆர்ப்பாட்டம் செய்த போது வாயில் வாழைப்பழம் ஊட்ட, அதைத்துப்பி விட்டு துள்ளியபோது நான்கு பேர் கைகால்களை அசையாமல் பிடித்துக்கொள்ள காது குத்துபவர் தன் வேலையை முடித்துக்கொண்டு வெற்றிலை பாக்கில் தட்டத்தில் வைத்திருந்த தட்சிணையை எடுத்துக்கொண்டு எழுந்தார். மீண்டும் சற்று நேரம் வலியால் அழுத குழந்தைக்கு பிடித்த சாக்லெட் கொடுத்து அமைதிப்படுத்தினர்.

பின்பு குலதெய்வ அம்மனுக்கு அபிசேகம் நடந்தது. பலவித திரவியங்களால் நடந்த அபிசேகத்தை உறவுகளுடன் அமர்ந்து தரிசித்தான். தன் வேண்டுதல் நிறைவேறுகிறது எனும் மனநிலையில் தாயின் முகம் இன்று மகிழ்ந்திருப்பதைக்கண்டு மகிழ்ந்தான். சுவாமிக்கும், தாயாருக்கும் புது சேலைகளை எடுத்திருந்தான். அலங்காரத்தில் அம்மனைப்பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றியது. அர்ச்சனை செய்து தீபாராதனை பார்த்து பூசாரிக்கு உரிய காணிக்கை செலுத்தி வெளியே வந்தான்.

பின் கோவில் மண்டபத்தில் நடந்த அன்னதானத்தை உறவினர்கள் தவிர கோவிலுக்கு வந்த மற்ற பக்தர்களும் சாப்பிட்டு விட்டு வாழ்த்திச்சென்றனர். சமையல் செய்தவரை பலரும் பாராட்டினர். இன்னும் சிலர் கந்தனிடம் வந்து ‘ஹோட்டல் வைக்கிற யோகம் உனக்கு இருக்கும் போல இருக்கு. சாப்பாடு அவ்வளவு சூப்பரா சாப்பாடு இருக்கு’ என சொன்னபோது பூரித்துப்போனான்.

அப்போது தான் அழைத்ததால் தான் வேலைக்குச்செல்லும் கம்பெனியின் முதலாளி தன் குடும்பத்துடன் வந்திருந்தார். அவரை அழைத்துச்சென்று சாமி தரிசனம் செய்ய வைத்து, விருந்து நடக்கும் மண்டபத்துக்கு அழைத்து வந்து தானே உணவு பரிமாறினான்.

விருந்து உண்ட பின் செல்லும் போது தன்னிடம் முகம் கொடுத்து பேசாமல், சென்று வருகிறேன் என ஒரு மரியாதைக்கு கூட சொல்லாமல் கோபமான முகத்துடன் முதலாளி வெளியேறியது கந்தன் உள்பட உறவினர்களுக்கும் வருத்தத்தை வரவழைத்திருந்தது.

குல தெய்வ வேண்டுதலை சிறப்பாக நடத்தி முடித்தும் முதலாளியின் செயலால் இன்றும் உறக்கம் தொலைத்தான் கந்தன்.

மறுநாள் வேலைக்கு சென்ற போது முதலாளி அழைப்பதாக மேனேஜர் கூற முதலாளியின் அறைக்குச்சென்றான்.

“வாப்பா முதலாளி. என்ன முதலாளின்னு கூப்பிடறேன்னு பாக்கறியா? நீ நேத்து அப்படித்தானே நடந்து கிட்டே. ஏப்பா நீயே ஒரு கூலிக்காரன். உனக்கு இவ்வளவு பெரிய ஆடம்பர விருந்து தேவையா? ஆயிரம் பேருக்கு வேலை குடுக்கிற நானே என்னோட குலதெய்வ கோயில்ல தக்காளிசாதம் அன்னதானம் போடற போது, நீ அறுசுவை விருந்து போட்டா என்ன அர்த்தம்? திடீர்னு நீ இப்படி பணக்காரனா ஆனதுக்கு என்னோட கம்பெனில நீ சம்பளம்போக கிம்பளம் வாங்கியிருக்கனம். இல்லேன்னா இந்த விருந்து சாத்தியமில்லை” என்ற போது ‘நாலு வருசமா சேமிச்சதுங்க முதலாளி’ என உண்மை நிலையை எடுத்துக்கூறியும் ஏற்க்காத முதலாளி கந்தனை வேலையை விட்டு நீக்குவதாக சொன்ன போது மனமுடைந்து, கண்ணீர் விட்டபடி வீடு வந்தான்.

கந்தனுக்கு வேலை போனதைக்கேட்ட குடும்பத்தினர் வருத்தப்பட்டதோடு அன்று சமைத்த உணவைக்கூட யாரும் சாப்பிடவில்லை. ‘குலதெய்வத்தை கும்பிட்டா நல்லது நடக்கும்னா இப்படி கெட்டது நடந்து போச்சே’ என எண்ணி வேதனைப்பட்டனர்.

மறுநாள் காலையில் கந்தன் எழுந்தவுடன் காபி போட்டுக்கொடுத்த மனைவி கவிதா, “என்னோட நகை ஏழுபவுன் சைனை கழட்டித்தாரேன். கொண்டு போயி பேங்க்ல அடமானம் வச்சு நம்ம கோபியோட ஹோட்டல் கடைக்கு கொடுத்துட்டு நாம நடத்தலாம். கோபிக்கு துபாய்ல வேலை கெடைச்சதால அவங்க அம்மா கடைய குடுக்கறதா காலைல போன்ல கூப்பிட்டு சொன்னாங்க” என்ற போது பட்டுப்போன மரம் துளிர் விட்டது போல தன் மீது நம்பிக்கை வந்தது கந்தனுக்கு. 

‘குலதெய்வம் கைவிடவில்லை’ என மனதுள் நினைத்தவன் குளித்து பூஜையறையில் போட்டோவாக உள்ள குலதெய்வ படத்தை வணங்கிவிட்டு வங்கிக்கு சென்று நகையை அடகு வைத்து பணத்துடன் வந்தவன் கோபி வீட்டிற்குச்சென்று விலை பேசி பணம் கொடுத்தவன் மறு நாளே குலதெய்வ கோவிலுக்கு வந்து சமைத்த சமையல்காரரை வரச்சொல்லி சமைத்து ஹோட்டலில் உணவு பறிமாற, மறு நாள் முதல் கூட்டம் அலை மோதியது. குலதெய்வ கோவிலில் மகிழ்ச்சியுடன் சாப்பாடு போட்டபோது ‘நம்மிடம் நிறைய பணமிருந்தால் தினமும் இதே போல் போடலாம்’ என எண்ணியதால் அந்த அன்ன லட்சுமி அவனது விருப்பத்துக்கு கட்டுப்பட்டு ‘ பணமிருந்தால் மட்டும் போட முடியாது, உன்னைப்போல் நல்ல மனமிருந்தால் போடலாம்’ என சரி சொல்லி தன்னிடம் நிரந்தரமாக வந்து தங்கி விட்டதாகவே பட்டது கந்தனுக்கு.

குல தெய்வத்தின் பெயரில் நடத்தும் ஹோட்டல் குறைந்த நாட்களுக்குள் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்று பிரபலமாகிவிட வேறு ஊர்களிலும் கிளைகளை ஆரம்பித்து பெரிய முதலாளியாகி விட்டான் கந்தன். தற்போது குலதெய்வ கோவிலில் மாதம் ஒரு முறை கூட்டம் வரும் நாளில் அன்னதானம் போடுகிறான்.

ஒரு நாள் தனது கடைகளில் ஒரு கிளையில் நுழையும் போது மேனேஜர் ஒருவரை திட்டிக்கொண்டிருந்தார். “பார்க்கிறதுக்கு வெள்ளையும் சொல்லையுமா பணக்காரர் வேசம் போட்டிட்டு பணம் இல்லாம எதுக்கு சாப்பிட வந்தீங்க ?” என திட்டிப்பேசியது கந்தனுக்கு பிடிக்கவில்லை. “நம்ம ஹோட்டலுக்கு வர்றவங்க எல்லாருமே நம்ம உறவுக்காரங்க மாதிரி தான். பணம் கொடுக்கலேன்டா திட்டாம அனுப்பி வைக்கனம்” எனக்கூறிய போது, தலைகுனிந்து நின்ற நபர் தலை நிமிர்ந்து கந்தனைப்பார்த்த நொடி அதிர்ந்து போனான். அவர் அவனது முன்னாள் முதலாளி!

“முதலாளி…” என அவரின் காலைத்தொட்டு வணங்கியவன், “நீங்கதான் எனக்கு தெய்வம் மாதிரி. நீங்க என்னைப்பார்த்து ‘முதலாளி’ ன்னு சொன்ன வாக்கு அப்படியே பலிச்சிருச்சு. நீங்க மட்டும் அன்னைக்கு என்னை வேலையை விட்டு போகச்சொல்லாம இருந்திருந்தா நான் இன்னைக்கு நூறு பேருக்கு வேலை கொடுக்கிறவனா உயர்ந்திருக்க முடியாது.

கல்லாவுக்கு பின்னால பாருங்க குலதெய்வ படத்துக்கு பக்கத்துல உங்க படந்தான் வெச்சிருக்கிறேன்” என கந்தன் சொன்னதைக்கேட்ட முன்னாள் முதலாளி தன் படத்தைப்பார்த்து கண்களில் கண்ணீர் வடித்ததோடு தன்னை மன்னித்து விடும்படி அவனிடம் கூறினார்.

“நீ கால் வெச்சு இருபது வருசமா தொழில்ல கொடிகட்டிப்பறந்த நான், உன்னை வேலைய விட்டு போகச்சொன்னதுக்கப்புறம் படிப்படியா தொழில்ல நஷ்டமடைஞ்சு இன்னைக்கு ஒரு வேலை சாப்பாட்டுக்கு கூட இல்லாத நிலைமைக்கு ஆளாயிட்டேன். எனக்கு பணம் இருக்குங்கிற ஆணவத்துல நீ போட்ட விருந்தப்பார்த்து பொறாமைப்பட்டதோடு கொச்சைப்படுத்திப்பேசி, உனக்கு சோற்றுக்கில்லாத நிலமை வரனம்னு வேலையவிட்டு நீக்கிட்டேன். நீ எப்படியாகனம்னு நெனைச்சனோ அந்த நெலமைக்கு நானே வந்துட்டேன். ஆனா நீ நான் இருந்த வசதிய விட பல மடங்கு வசதில வளர்ந்த பின்னாடியும் பணிவா இருக்கறே. வளர்ந்த பின்னாடியும் பணிவு உள்ளவங்கதா வாழற வரைக்கும் வீழ்ச்சியடையாம இருப்பாங்கங்கிறதை உன் மூலமா தெரிஞ்சுட்டேன்” எனக்கூறி ஹோட்டலை விட்டு வெளியேறியவரை அழைத்து வந்து “என்னோட பத்து ஹோட்டல்களிலே இந்த ஹோட்டலுக்கு நீங்கதான் முதலாளியா இருக்கனம்” எனக்கூறி தான் அமர வேண்டிய முதலாளி இருக்கையில் அவரை அமரச்சொன்ன போது கந்தனை கடவுளாகப்பார்த்தார் அவரது முன்னாள் முதலாளி பரந்தாமன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *