கத்தாமா எனும் கண்ணீர்க் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 13,021 
 
 

பணத்தை மட்டுமே ஆதாரமாக கொண்டு மனிதம் விற்கும் ஒரு நபரின், மனிதம் ஏன் பணத்திற்கெனில் எதையும் விற்கும் ஒரு நபரின் அலுவல் அது. அங்கே வெளிநாட்டிற்கு ஆட்களை விற்கும் பணி நடந்துக் கொண்டிருந்தது. கேட்டால் வெளிநாட்டில் வேலை செய்ய ஆள் எடுக்கிறோம் என்றார்கள்.

அதும் “குவைத்திற்கு படித்த பெண்கள் தேவை” என ஆங்காங்கே விளம்பரம் வேறு. மீரா வெகு ஆவலாக அந்த அலுவலை நோக்கி வந்தாள். குடும்ப அழகிற்கு ஒரு உதாரண முகம் மீராவிற்கு. சுண்டினால் சிவக்கும் நிறமில்லை, ஆயினும் பார்ப்பவரை கவர்ந்திழுக்கும் கவர்ச்சியான உடலும் பார்வையும் கொண்ட அழகி மீரா.

அவளின் சான்றிதழ்களை எல்லாம் பார்த்துவிட்டு, எட்டிப் பிடிக்கும் தூரத்தில் நிற்கும் மான்குட்டியை, மலைப்பாம்பொன்று பார்ப்பது போல் பார்த்தான் அவன்.

“கத்தாமா”வா வரியா?”

“கத்தாமா…..????”

“என்ன கத்தாமான்னா எளக்காரமா இருக்கா? அப்போ நீ போலாம்..”

“சார் சார்.. நான் பி.எஸ். சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்..”

“அதனாலதான் உன்னை உள்ளே அனுப்பலாம்னு பார்த்தா நீ கத்தாமாவான்ற..?”

“எனக்கு கத்தாமான்னா என்னன்னே தெரியாதுங்க”

“அப்படியா விஷயம், அது கெடக்கு விடு, அதை நான் பார்த்துக்குறேன், நீ கண்டிப்பா செலக்ட் ஆயிடுவ உள்ள போ..”

“நான் செலக்ட் ஆயிடுவேனா..!!! உண்மையாவா?”

“ஆமாம்மா.., சந்தேகமே வேணாம், நீ பாஸ்போர்ட கொடுத்துட்டு அதோ அங்க போயி உட்காரு. இன்டர்வியூவுக்கு கூப்பிட்டாங்கன்னா.. உள்ள போ..,கொஞ்சம் தாழ்வா பேசு, ஒரு அரபி ஆள்தான் இருப்பான். எது கேட்டாலும் எஸ் சார்., எஸ் சார் னு சொல்லு.. உனக்காக நான் ஸ்பெசலா உள்ள வருவேன். நான் பார்த்துக்குறேன் போ..மா போ”

“ரொம்ப நன்றிங்க சார். உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. எனக்கு தெய்வம் மாதிரி நீங்க”‘

“ஆமாம்.. ஆமாம்.. நிறைய பேருக்கு நான் தெய்வம் மாதிரி தான்” சிரித்துக் கொண்டான் அந்த சண்டாளன். மீரா சற்று நேரம் வெளியே அமர்ந்திருக்க அந்த அறையிலிருந்து அழைப்பு வந்தது.

“மீரா….”

“தோ..இருக்கேன்…”

“உள்ளே வாங்க”

உள்ளே போனாள்.

“நீங்க தான் மீராவா..?!!” அந்த அரபி ஆள் கேட்டான்.

“ஆமா சார்”

“ரொம்ப அழகா இருக்கீங்க” ஆங்கிலத்தில் சொன்னான் அந்த அரபி. கொச்சையாக பார்ப்பது தெரிந்தது. ‘கடனெல்லாம் நிறைய இருக்கு மீரா…, பெரியவனுக்கு பீஸ் எல்லாம் வேற கட்டனும்” உள்ளிருந்து ஏதோ ஒரு குரல் கேட்டது.

“ரொம்ப நன்றி சார்..” ஆங்கிலத்திலேயே பதில் சொன்னால்

“எந்த வேலை விட்டாலும் செய்வீங்களா?”

“சார்.. நான் பி.எஸ். சி. கம்ப்யூட்டர் சயின்ஸ்.., எனக்கு கணினியில் நல்ல வேலைகள் தெரியும்..”

அந்த அரபி ஆள் ஏஜண்டை திரும்பி நாக்கில் எண்ணமோ தேன் சொட்டுவது போல் பார்த்தான். “குட்டியை நல்லா தான் புடிச்சிருக்க” என்பது போல் இருந்தது அவனின் பார்வை.

“கல்யாணம் ஆயிடுச்சா?”

“ஆமா சார். இரண்டு குழந்தைகளும் இருக்காங்க”

“உங்க புருஷன்?”

“அவருக்கு இதயத்துல ஏதோ பிரச்சனையாம். சொல்லாமையே கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க சார். அவர் இறந்து இரண்டு வருஷம் ஆச்சு”

“அச்சச்சோ…” என்று ஏஜண்டை பார்த்தான் அந்த அரபி ஆள். வசதியாப் போச்சு என்பது போலிருந்தது அந்த பார்வையின் அர்த்தம்.

“சரி. எவ்வளோ சம்பளம் வாங்குறீங்க..?”

“இங்க வெறும் ஆப்பரேட்டரா தான் இருக்கேங்க சார், வேற நல்ல வேலை கிடச்சா இன்னும் நிறைய தருவாங்க.”

அந்த அரபி ஆள் திரும்பி ஏஜெண்டைப் பார்த்தான்.

“அதாம்மா எவ்வளோ வாங்கறிங்க இப்போ. அவர் கேட்பதற்கு மட்டும் பதில் சொல்லுங்க”

என்னமோ அவனுக்குத் தெரியாமல் இவர் தமிழில் சொல்லி, உதவி செய்வதைப் போல் நடித்தான் அந்த ஏஜென்ட்.

“மன்னிக்கணும் சார், மூவாயிரம் பிளஸ் வாங்குறேன்”

எங்கு இன்டர்வியுல தோத்துப் போயிட்டன்னு சொல்லிடுவாங்களோன்னு ஒரு பயம் அவளுக்கு. இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு ” குழந்தைங்க தேர்ச்சி பெற்று மேல படிக்க வந்துட்டாங்க, பீஸ் நிறைய ஆகுது, விலைவாசி எல்லாம் ஏறிப் போச்சிங்க சார்”

“சரி… உனக்குப் பத்தாயிரம் சம்பளம் தரேன் போதுமா…?”

‘கடவுளே!!! என் கஷ்டமெல்லாம் தீர்ந்துவிடும். கடனெல்லாம் அடைச்சிடுவேன். என் குழந்தைகள நல்லா படிக்க வைக்கலாம்..”மனதில் நினைத்து சந்தோசத்தில் பொங்கினாள் மீரா..” சரியென்றோ இல்லையென்றோ ஏதும் சொல்லாமல் மௌனமாக யோசித்ததால், அவளுக்கு சம்பளம் போதவில்லையோ என்று நினைத்துக் கொண்டார்கள் அவர்கள்.

“என்னமா யோசிக்கிற….? சரி.. பன்னிரண்டாயிரம் போதுமா?”

மீரா சற்று சுதாரித்துக் கொண்டாள். அரபிக்காரனையும் அந்த எஜென்டையும் மாறி மாறிப் பார்த்தாள்.

“நான் பி.எஸ். சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்..”

“எல்லாம் வேலையும் செய்வியா?”

“கண்டிப்பா செய்வேன் சார்”

“என்ன சொன்னாலும் கேட்பியா?”

ஒரு பெண்ணிடம் கேட்கக் கூடாதா கேள்வி. ஒரு பெண் சம்மதித்துக் கொள்ளக் கூடாதா இடம். ஆனால், அவள் வறுமை அவளை தலை ஆட்ட வைத்தது.

“கேட்பேன் சார்..”

“அங்க வந்ததும் ஊருக்கு வரேன்னு எல்லாம் வந்து நிக்க மாட்டியே?”

“நிக்க மாட்டேன் சார்..”

“ரெண்டு வருடத்திற்கு ஒரு முறை, ஒரு மாதம் விடுப்பு தான் கிடைக்கும்” அவளை அவர்களுக்கு புரிந்துப் போனது. அவளின் ஆர்வத்தை மிக நன்றாக பயன்படுத்திக் கொள்ள துடித்தன அந்த இரண்டு மிருகங்களும். அவள் சற்று பாவமாக

“ரெண்டு வருடத்துக்கப்புறம்; ஒரு மாதம் தான் விடுப்பா?” என்றாள்.

“சும்மால்ல, சம்பளத்தோட லீவு கிடைக்கும். ஒழுங்கா சொல்ற மாதிரி எல்லாம் நடந்துக்குனா ராணியாட்டம் இருக்கலாம்”

ராணியென்பதன் அர்த்தம் மீராவிற்குப் புரியவில்லை. துள்ளிக் குதிக்கும் சந்தோசத்தோடு அவர்களைப் பார்த்தாள்.

“எத்தனை கிலோ எடை இருப்ப?”

“அறுபத்தி மூணு கிலோ சார்”

“உயரம்?”

“169 செண்டி மீட்டர்”

“பாடி அளவு எவ்வளோ?”

“பாடி..?” அவள் சற்று அதிர்ந்தாள். “ஏன் அதலாம்?”

“அங்க அதலாம் கேட்பாங்கமா..” அந்தக் கைக்கூலி பேசியது.

“பதினைந்தாயிரம் சம்பளம் போதுமா?” அரபி ஆள் கேட்டான்.

“பதினைந்தயிரமா!!!? போதும்.. போதும்…”

“பதினைந்தாயிரம் உனக்குப் பெருசு தானே?”

“ஆமா.. ஆமாம்..”

அத்தனைக்கும் தலையாட்டினாள் மீரா. காட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்திட்டாள். எல்லாமே அரபியில் மட்டுமே எழுதப் பட்டிருந்தது. அதையெல்லாம் பதினைந்தாயிரம் மறைத்துக் கொள்ள, எண்ணி இருபதே நாட்களில் விசா வந்தது. அடுத்த ஒரு வாரத்தில் விமானமேறினாள்.

காலம் ஒரே மாதிரியா இருக்கு, கெட்டது வர மாதிரி நல்லது வரதும்; நல்லதுவர மாதிரி கெட்டது வரதும் வாழ்க்கைய போச்சி, கேட்டா விதி என்னும் உலகம். ஆனால் அப்படி ஒரு காலம் மீராவிற்கும் வந்தது.

அருகருகே இருக்கையில் அம்மா அப்பா கூட பெரிதாக தெரிவதில்லை. தூரம் சென்று விட்டால் அக்கம்பக்கத்து வீடு கூட கண்ணீருக்குக் காரணமாகி விடுகிறது. மீராவின் கண்ணீருக்கு நிறைய காரணமிருந்தது. என்னதான் விமானமேறி விட்டாலும், நெஞ்சு கனத்தது. இரண்டு பிள்ளைகளும் மாறிமாறி மடியைக் கட்டிக் கொண்டு அழுதது நினைவிலேயே இருந்தது.

விமானத்தில் இருந்தவர்கள் அவளின் சோக முகத்திற்கான காரணத்தைக் கேட்பதையெல்லாம் விட்டுவிட்டு பீர் வாங்கிக் குடிப்பதிலும் ஹெட்போன் மாட்டி பாட்டு கேட்பதிலும் மும்முரமாக இருந்தார்கள். ஒரு ஐந்து மாதக் குழந்தை இடைவிடாமல் அழுதுக் கொண்டே இருந்தது. இவளுக்கும் தன் குழந்தைகளின் நினைவு நீங்குவதாக இல்லை. நினைத்து நினைத்து அழுதாள். சாப்பிடக் கொடுத்த உணவுகளைக் கூட உண்ணாமலே திருப்பிக் கொடுத்தாள். நெஞ்சு கனத்தது மீராவிற்கு.

“அம்மா அம்மா.. போகாதேம்மா..” பிள்ளைகள் கெஞ்சியது நினைவிலேயே இருந்தது.

“உன்னை விட்டு நாங்க எப்படிம்மா இருப்போம்” சின்னவள் அழுதது நெஞ்சை உளுக்கியது. தாங்க முடியவில்லை அவளால். தொண்டை விக்கி விக்கி வர தலையை கவிழ்ந்து கொண்டு அழுதாள். தேம்பினாள். இப்படியே இறங்கி ஓடி விடலாமா என்று கூட நினைத்தாள். ஆனால் எப்படி முடியும், எதுவாயினும் சந்தித்தேயாக வேண்டிய சூழலில் தானே புறப்பட்டிருக்கிறேன், வேறென்ன செய்ய இந்த பாழும் உலகில் தனியே வாழும் ஒருபெண் நான். எல்லோரும் இருந்தும்; யாரும் இல்லாத அனாதை. காண்போருக்கு வெறும் உடலாக மட்டும் தெரியும்; விதவையாயிற்றே நான்.

அதும் இளம் விதவையாயிற்றே விடுவார்களா? கொஞ்சம் மயக்கமாக பேசினால் விழுந்து விடுவாள், ஏதேனும் பணம் கொடுத்து விலை பேசி விடலாமென, சர்க்கரையை மொய்க்கும் சாக்கடை ஈக்களுக்கிடையே வாழ்பவள் ஆயிற்றே நான். வாழ்க்கையையே போராட்டமாகக் கொண்டு இரவு பகலைத் தொலைப்பவள். இதில் ஒரு பெண் குழந்தை வேறு வைத்து எப்படி கரை சேர்ப்பேனோ’ என்றெல்லாம் சிந்தனையும் அழுகையுமாக விமான பயணத்தின் நேரம் கடந்தது.

குழந்தைகள் பேசியது, அவர்களை ஆஸ்டலில் சேர்த்தது என எல்லாம் நினைவுதனில் ஊறிக் கொண்டிருக்க, பக்கத்தில் இருந்தவன் அவளின் தோளில் கை வைத்தான்.

“ஹலோ..” என்றான்

அவள் திரும்பி முறைத்துவிட்டு தலை கவிழ்ந்து கொண்டாள். அவன் மீண்டும் தோளில் தட்டினான்.

“ஹலோ ஐ’யம் பவன், கோயிங் டு குவைத். அண்ட் யூ?” பேசிக் கொண்டே கைகளை நீட்ட, மீரா அவன் கை நீட்டியதை அலட்சியம் செய்து விட்டு… “நான் லண்டன் போறேன், போதுமா” என்றாள் கோவமாக.

‘ஹோ.. நையிஸ், ரியளி யூ ஆர் சோ கியூட்” அவன் பல்லை காட்டியதிலிருந்து வழிந்த காம ஆசைகள் ‘அவன் கையில் வைத்திருந்த மதுக் குவளை வரை, நிரம்பி வழிவது அவளுக்கு தெரியாமலில்லை. விருட்டென எழுந்து ஏரோஸ்டஸ்சை அழைத்தாள், இடம் மாற்றிக் கேட்டு வேறு இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள். நேரங்கள் கரைந்ததில்விமானம் தரை இறங்கியது.

எங்கு இறங்கி எங்கு போவது? ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு. எங்கு கண்டாலும் எல்லாமே அரபியில் மட்டுமே எழுதப்பட்டிருந்தது. கூட்டத்தோடு கூட்டமாக இவளும் போனாள். ஒரு ஆள் இடைமறித்து ‘குவைத்.. குவைத்..’ என்று கத்த, ஆம் என்று சொல்லி இன்னும் நான்கைந்து பேராக அவன் பின்னால் போக, வழியில் பேசிக் கொண்டிருந்தவர்கள் மூலம் இது துபாய் வழி பயணம் என்றும், தற்போது துபாயில் இருக்கிறோம் என்றும், இனி இங்கிருந்து குவைத் போக வேண்டும் என்றும் தெரிந்துக் கொண்டாள். முன்னரே போர்டிங் போட்டு வாங்கியிருந்ததால் ஓரிரு மணி நேரக் காத்திருப்பிற்குப் பிறகு ‘வேறொரு குவைத் விமானத்தில் ஏறி ஒரு வழியாக அமர்கையில், வயிறு கிள்ளி பசியெடுத்தது.

இது அரை மணிநேரப் பயணம் மட்டுமே என்பதால், விமானத்தில் உணவு சேவை இல்லை என்று சொல்லி பழச்சாறும், சான்விட்ச்சும் கொடுத்தார்கள். பிடித்தும் பிடிக்காமலும், பாதி தின்று மீதி பாதியில் பசியையும் சேர்த்தெரிந்தாள். விமானம் ஒருவழியாக தரையிறங்க, எல்லோரையும் ஓரிரு பேருந்தில் ஏற்றி விமான நிலையத்திற்கு அழைத்து வந்து கொண்டிருந்தார்கள். பக்க இருக்கையில் அமர்ந்து சுத்திசுத்திப் பார்க்கிறாள் மீரா.

இதயத்தை யாரோ, வெட்டி இரண்டாகப் போடுவது போல் இருந்தது. அகன்று விரிந்திருந்த பாலைவனம் மனதிற்குள் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியது. பேருந்திலிருந்து இறங்கி இமிக்ரேசனை நோக்கி நடந்தாள். கூட்டமாக வந்து நிற்க, ஒரு அரபி ஓடி வந்து ‘எல்லா.. எல்லா..’ என்று கத்தினான். இரண்டு மூன்று பெண்களை இழுத்து அங்கே போவென தள்ளிவிட்டான். அந்த பொம்பளை ஏதோ சொல்ல இழுத்து தனியாக நிற்க வைத்து விட்டான். உள்ளே சுளீரென வலித்தது அவளுக்கு. அடிமை என்றால் என்ன அர்த்தம் இருந்திருக்கும், சுதந்திரம் என்றாள் என்ன? சுதந்திரம் என்பது எதுவரை உள்ளடக்கம்? என்றெல்லாம் யோசித்திடாத புத்திக்கு, அந்த அரபி போலிசின் செயல் வலித்தது.

பயந்து பயந்தே நின்றிருந்தாள். அருகே நின்றிருந்த இன்னொரு பெண்மணி தமிழ் போல தெரிந்தது. ஆனால் கண்களைச் சுற்றிக் கருவூலம் பூத்திருக்க, பேசுவதற்கு யோசித்தாள். இருந்தும் வேறு வழியில்லையே என நினைத்துக் கொண்டு…

“நீங்க தமிழா?” என்றாள்

“ம்ம்..”

“நீங்களும் இப்போதான் முதல் முறையா குவைத் வரீங்களா?”

“எட்டு வருசமா இங்க தான் இருக்கேன்”

“எட்டு வருசமா? எப்படி இருக்கீங்க இங்க எட்டு வருஷம்? இப்படி நடந்துக்குறாங்களே. இங்க எல்லோருமே இப்படித்தானா?”

“எல்லோரும் இல்லை. ஆனா அதிக பட்சம் பேர் இப்படித்தான். இவுங்களைப் பொறுத்த வரை நாமெல்லாம் அடிமை. நீயும் உன்னை அப்படியே நினைச்சிக்கோ. இல்லைனா ரிட்டன் பிளைட் இஸ் பெட்டெர்”

“ஐயோ…”

“ஏன் .. ஏன்.., பயப்படாதீங்க, உங்களுக்கெல்லாம் ஒன்னும் அவ்வளவு பிரச்சனை இருக்காது. எங்களை மாதிரி கத்தாமான்னா தான் பிரச்சனை”

“கத்தாமா? நானும்…” நிறுத்திக் கொண்டாள்.

“குவைத்துல கத்தாமா’வா மட்டும் வந்துடக் கூடாதுங்க. அதிலும் சம்சாரிங்க வரவே கூடாதுப்பா!!!”

“ஏன்?”

“அதிர்ச்சியா இருக்குல்ல. ஆம்பளை துணை இருந்தா அப்படி மதிப்பானுங்க. அதே வீட்டு வேலை செய்றவன்னு தெரிஞ்சா அவ்வளவுதான், பச்சை வேசியாக்கிடுவானுங்க நம்மளை. சொல்றதுக்கெல்லாம் ஒத்துக்குனா, கூத்தியாளுக்கு ஒரு படி மேலே இருக்கலாம், மறுத்தோம்னா ‘நாய விடக் கேவலம் நாம தான்..”

உள்ளே ஐயோவென்றுக் கதறினாள் மீரா. கீழே உடகார்ந்து ஓ..ன்னு கத்தலாமா என்றிருந்தது அவளுக்கு. அதற்குள் மற்றொரு அரபி அருகே வந்து எல்லா.. எல்லா. ரோ ரோ என்று கை காட்டி போ போ என்றான். பயந்து பயந்து முன்னே போனாள். எப்படியோ எல்லாம் ஒருவழியாக முடிந்து மூட்டைக் கவலைகளையும் பயத்தையும் சுமந்து வெளியே வந்தாள்.

அத்தனைப் பெரிதாகச் சொல்ல ஒன்றுமில்லை என்றாலும், ஏதோ வெளிநாடு போல் காட்சியளித்தது குவைத் விமான நிலையம். தெய்வத்தை தேடுவது போல் அந்த ஊரில் ஆளெடுக்க வந்த அரபியைத் தேடினாள். அவளுக்கென்று இங்கு தெரிந்த முகம் அவன் மட்டுமே என்பதால், அவனைக் கண்டால் சற்று மனதிற்கு அலாதியாக இருக்குமென்று நினைத்திருப்பாள் போல்.

அவள் யாரையோ தேடுவதைப் பார்த்து விட்டு, வேறொருவன் வந்து யாரை தேடுகிறீர்கள், தொடர்பு எண் ஏதாவது இருக்கிறதா என்று கேட்க, அந்த அரபி ஆளின் அலைபேசி எண் கொடுத்து அழைக்க, அவன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிற்க சொல்லி, அரை மணி நேரத்திற்கெல்லாம் அங்கு வந்துவிட்டான்.

“வெல்காம்… வெல்காம் மீரா…., ஹொவ் இஸ் ட்ரிப்? என்றான். கை கொடுத்தான். அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, அமைதியாகத் தலையாட்டி விட்டு அவன் பின்னாலேயே போக. கடல் மாதிரி நின்றிருந்த ஒரு பெரிய காரில் ஏறினான். தன்னையும் ஏறி முன் பக்கத்தில் அவனுக்கருகில் அமரச் சொன்னான். மனசு பக்கென்றது. வண்டி பாலைவனங்களக் கடந்து ஒரு பெரிய கட்டிடங்கள் நிறைந்த நகரத்தில் நுழைந்தது.

இது தான் குவைத் சிட்டி’பார்த்துக் கொள் என்றான் அவன். அவளுக்கு கட்டிடங்கள் எல்லாம் பார்க்க சற்று அலாதியாக இருந்தது. தெரியாத்தனமாகப் புடவையை கட்டிக் கொண்டு வந்து விட்டாள். புடவை வேறு அவ்வபொழுது கீழிறங்க, அவன் திரும்பித் திரும்பி மாராப்பையேப் பார்த்தான். அவள் முந்தானை இழுத்து சுற்றிக்கொண்டு சற்று தூரமாக விலகியே அமர்ந்திருந்தாள். வண்டி நகரத்தைக் கடந்து ஒரு ஒதுக்குப்புறமான பாலைவனப் பிரதேசம் போன்ற இடத்தில் நுழைந்தது.

நெடிய நீண்ட பாலைவனத்தில் ஆங்காங்கே சில வீடுகள் மட்டுமே இருந்தன. இரண்டு ஆள் உயரத்திக்கு மண் சுவர் எழுப்பியும், சில வீடுகள் அரண்மனை போலவும் ஒன்று விட்டு ஒன்றாக இருக்க. ஒரு வீட்டில் சடாரென வண்டி நின்றது. அந்த அரபி கீழிறங்கி மீராவையும் இறங்கச் சொன்னான். அவள் கீழிறங்கியதும். அவள் தோள் மீது கை போட்டு, நீ ரொம்ப அழகா இருக்க என்று சொல்லி பல் இளித்தான். மீரா அவன் கையைத் தட்டிவிட்டு அமைதியாகத் தலைகுனிந்து தூர விலகி நின்று கொண்டாள். கோபமும் பயமும் அவளுக்கு எல்லோரின் மீதும் ஒருவாறாகவே இருந்தது.

வீட்டிலிருந்து கருப்பு அங்கி மூடி இரண்டு பெண்கள் ஓடிவந்து அவளை உள்ளே அழைத்துப் போனார்கள். சற்று நேரத்திற்கெல்லாம் எல்லோருமாக அமர்ந்து ஏதேதோ பேசினார்கள். அந்த அரபி ஆள் சிகரெட்டினை மாற்றி மாற்றிப் பிடித்துக் கொண்டே இருந்தான். இடை இடையே இவளை திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டான். அந்த இரண்டு பேரில் ஒருத்தி எழுந்து வந்து மீராவை வேறு ஒரு அறைக்கு கூட்டிச் சென்று ‘இனி நீ இங்கு தான் தங்க வேண்டும் என்று காட்டினாள். இரண்டடுக்காக நான்கு கட்டில்கள் போடப்பட்டிருந்தது அந்த அறையில். ஒரு மேல் படுக்கையைக் காட்டி ‘அது தான் உன் இருக்கை என்றாள்’ கூட்டி வந்தவள்.

அறை முழுதும் ஏதோ சில தவறான வாடைகள் அப்பட்டமாக அப்பி இருந்தது. எப்போது வேண்டுமானாலும் எந்த ஆம்பளை வேண்டுமாயினும் வந்து தங்கிக் கொள்ளும் ஒரு போக்கு சிதறிக் கிடந்த துணிகளையும் சிகரெட் துண்டுகளையும் காண்கையில் மீராவிற்குப் புரிந்தது. இன்னொருத்தி வந்து இந்தா இது தான் இனி உன் உடுப்பென இரண்டு நைட்டிகளை கொடுத்தாள். மீரா ‘இல்லை வேண்டாம், நான் துணிகள் கொண்டு வந்துள்ளேன் என்று சொல்ல, அவள் சற்று கோபமுற்று, ஏதோ அரபி மொழியில் கத்தினாள்.

உடனே அந்த ஆளெடுக்க வந்த அரபி உள்ளே வந்து ‘என்ன’ என்று கேட்க அந்த கருப்பங்கி போட்டவள் ஏதோ கத்திக் கத்திச் சொல்ல அவன், ம்ம்.. வாங்கு, வாங்கிப் போட்டுக் கொள் என்று மிரட்டிச் சொன்னான். அவள் சற்று அதிர்ந்து ‘வேண்டாம் பகலில் நான் நைட்டி எல்லாம் உடுத்தமாட்டேன், என்னிடம் வேறு துணிகள் இருக்கின்றன என்று தான் கொண்டு வந்திருந்த புடவையை எடுத்துக் காட்ட, அவன் அவளின் முந்தானையிலிருந்து விலகியிருந்த மார்பில் நேராக கைவைத்து, விருட்டென அவளின் புடவையை உருவி, பச்சையாக இடுப்பைப் பிடித்து, பார்த்தியா…. , இதலாம் இங்கே தெரியக் கூடாது புரியுதா….’ என்றான். மீரா அவனை முறைத்துப் பார்த்துக் கத்த, அவன் அவளுடைய முந்தானையை பிடித்து உருவி விட, மீரா திமிறி அவன் கையைத் தட்டிவிட்டு அலறி சற்று தூர போய் நின்றாள். வீரிட்டுக் கத்தினாள். அவன் அருகே வந்து அவளின் கன்னத்தில் ஓங்கி ஒருஅறை விட்டு சப்தம் வரக் கூடாது நிறுத்து நிறுத்து என்று சொல்லி மீண்டும் அடிக்க கை ஒங்க…, நைட்டியை வாங்கி, போட்டுக் கொள்கிறேன்.. விட்டு விடுங்கள்.. போட்டுக் கொள்கிறேன் விட்டுவிடுங்களென அவள் கதற, அவன் அரபி மொழியில் கத்திப் பேசிக் கொண்டே வெளியில் போனான்.

அந்த அறையில் இருந்தவர்கள் சிலர் பெண்கள் சிலர் ஆண்கள். எல்லோருமே அவளருகே வந்து, அவரவர் மொழியில் என்னென்னவோ ஆறுதல் போல சொன்னார்கள். அவளுக்கு ஒன்றுமே மண்டையில் ஏறவில்லை. ஓவென்று கத்திக் கத்தி அழுதாள். அழுது வடிந்தக் கண்ணீரில் இரவு நகர்ந்து கொண்டிருந்தது. விடியற்காலை மணி நான்கென்று சொல்லி, ஒரு அலாரம் அடிக்க, அருகே படுத்திருந்தவன் எழுந்து அவளை எழுப்பினான். இப்போது தான் கண்ணயர்ந்து தூங்கியது போல் இருந்தது அவளுக்கு. சீக்கிரம் எழுந்து போய் குளி, சமையலுக்கு ஆள் வேண்டுமென்றான் அவன்.

சமையலா? ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு. கண்ணைக் கசக்கிக் கொண்டு தன்னை எங்கிருக்கிறோம் என்பதை சற்று உறுதிப்படுத்திக் கொண்டு நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவனை யாரென்று கூட தெரியவில்லை அவளுக்கு. ‘நான் பி.எஸ். சி கம்ப்யூட்டர் சயின்ஸ்’ நான் சமையல் வேலைக்கெல்லாம் வரவில்லை என்றாள் அவள்.

“அதலாம் முதிர் வந்ததும் பேசிக்க, இப்போ வா…” என்றான் அவன்

“முதிரா? அது தான் அவன் பெயரா?”

“முதிர்னா… முதலாளி. தலைவன்-ன்னு அர்த்தம். அவன் பெயர் அகமத்” என்றவன் சொல்லி முடிக்க இரவு கருப்பங்கி உடுத்தி வந்த அவள் வந்து என்னாச்சு என்ன கேள்வி இங்க, மணி நாலாச்சில்ல என்று சத்தம் போட்டாள். அதற்குள் அருகிலிருந்தவள்.. எழுந்திரு போ.. போ.. என்று சைகை போல் காட்ட.., மீரா விறுவிறுவென ஓடி குளித்து வேறொரு நைட்டியை மாட்டிக் கொண்டு சமயலறைக்கு ஓடி.., சொல்லும் வேலைகளை எல்லாம் செய்ய ஆரம்பிக்க, ஓட்டுனர் ஒருவன் வந்து ‘வா இன்னைக்கு உனக்கு மெடிக்கல் இருக்கு போகணும் என்றழைக்க. துணி மாற்றி வருகிறேன் என்று கேட்டாள், அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இது தான் இங்கு நம் உடை. கத்தாமா’ன்னா இது தான் உடுத்தணும் போய் வா.. என்றாள் உடன் இருந்த இந்தோனேசியாக்காரி ஒருத்தி.

இரவு நடந்தது நினைவில் வர, எதிர்த்துப் பேச திராணியின்றி, அப்படியே வயிற்றின் மீதெல்லாம் நனைந்திருந்த ஈரத்தைக் கையில் தட்டிவிட்டுக் கொண்டு அவனோடு சென்று வாகனத்தில் அமர்ந்தாள். வாகனம் புறப்பட்டது. வாகன ஓட்டி ஒரு பெங்காளி, பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவன். ஏதேதோ அவளிடம் பேசிக் கொண்டே வந்தான். அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. சற்று கண்ணயர்ந்து உறங்கிப் போனாள்.

ஒரு இரண்டுமணி நேரப் பயணத்திற்கு பிறகு, வண்டி ஓரிடத்தில் நின்றது. இங்கு தான் இறங்கு என்றான் அந்த பெங்காளி ஓட்டுனர். அவளோடு கூடவே வந்து கூடவே இருந்து எல்லாவற்றையும் அவனே முடித்து கொண்டான். கடைசியாக எக்ஸ்ரே எடுக்க வேண்டுமென்று சொல்லி, மற்றொரு கூடத்திற்குள் அழைத்துச் சென்று விட.., அங்கு ஒரு மளையாளி பல்லிளித்துக் கொண்டு “வரு வரு.. தமிழா?? தமிழ் பொண்ணுதானே நீங்கோ?” என்று கேட்க இவள் ஆம் என்று தலையாட்டினாள். அதற்குள் அவன் அவள் மேல் கை வைத்து “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, உடம்பெல்லாம் நல்ல உடம்பு தான். உள்ள வாங்கோ நான் பாசாக்கி அனுப்புறேன்” என்று சொல்ல செருப்பு பிஞ்சிடும் என்றாள் இவள் நல்ல தமிழில் அழுத்தமாக.

அதற்குள் அவன் ஹிந்தி மொழியில் ஏதோ சொல்லிக் கத்திவிட்டு, நான் உன்னைப் பெயில் ஆக்கி விடுவேன்.. நீ கத்தாமாதானே, எங்கே உன் விசா கொடு” என்று கேட்டு கையில் வைத்திருந்த விசாவை வாங்கிக் கொள்ள. அவளுக்கு கைகால் நடுங்கித் தான் போனது. அக்கம் பக்கத்தில் வட்டிக்கு வாங்கியும், மீதியாகவும் கடைசியாகவும் இருந்த தாலிச் சரடினை அடகு வைத்தும், மீதி இருபத்தைந்தாயிரத்தை இங்கு வந்து தருவதாகச் சொல்லியும் மொத்தம் அறுபதனாயிரம் பணத்திற்கு கையெழுத்து வாங்கிக் கொண்டு தான் அந்த ஏஜென்ட் விமான சீட்டையே கையில் கொடுத்திருந்தான். பதினைந்தாயிரம் சம்பளமாச்சே எப்படியும் நான்கு மாதத்தில் அடைத்து விடலாமென்னுமொரு தைரியத்தில்தான் இத்தனையையும் செய்தாள். இப்போது இவன் பெயில் என்றதும் அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

அதற்குள் இன்னொரு நர்ஸ் ஒருத்தி உள்ளிருந்து வந்து வா.. வா வந்து ஆடையை கழற்று என்றாள்.

“ஐயோ… ஏன்?”

“நீ கத்தாமாதானே???”

“தெரியாது”

“கத்தாமான்னா தெரியாமையா கொய்த்து வரையும் வந்துட்ட, எங்க உன் விசா கொடு.. , ஆமாமாம், நீ கத்தாமா தான் போ.. உள்ள போ.. எக்ஸ்ரே எடுக்கணும், பிசிக்கல் செக்கப் பார்க்கணும், துணி எல்லாம் கழற்று, அங்க பார் அதோ ஒரு உறை ஓன்னு இருக்கு பார் அதை மாட்டிக்கோ..,”என்று அவசர அவசரமாக அவள் கைகாட்டிய இடத்தில் அந்த உறை இருந்தது. எடுத்துப் பார்த்தாள். மார்பகத்தில் ஒரு ஜன்னல் போல் வைத்த உரை அது. மாட்டிக் கொண்டு உள்ளே போக, அவள் என்னென்னவோ வேறு நோய்களைப் பற்றியெல்லாம் கேட்டாள், எக்ஸ்ரே எடுத்தாள், எல்லாம் முடித்து வெளியே வருவதற்குள்; தலையே சுற்றுவது போலாகி விட்டது மீராவிற்கு.

திரும்பி வருகையில் அந்த பெங்காளி ஓட்டுனருக்கு, மீராவிற்கு ஹிந்தி தெரியவில்லை என்று புரிந்துவிட, கொஞ்சம் ஆங்கிலம் கலந்து கலந்து ஏதேதோ பேசினான். கொஞ்சம் ஆறுதலும் சொன்னான். இங்கெல்லாம் இப்படித் தான் என்றான். அதிலும் கத்தாமா என்றாள் மதிக்கவே மாட்டார்கள் என்று வருந்தினான். கத்தாமாவாக பெண்கள் வரவே கூடாதென்றான். குவைத்தில் குடும்பப் பெண்களுக்கு இருக்கும் சுதந்திரம் பணிப்பெண்ணாக வரும் கத்தாமா’க்களுக்கு இல்லை என்றான்.

கத்தாமா என்பதன் அர்த்தம் வேலைக்காரப் பெண் என்றாலும், சூழ்நிலை காரணமாக வந்துவிடுகின்ற நிறைய பெண்கள், நிறைய அரபியின் வீடுகளில், அடிமை என்றே கொள்ளப்படுவதை மீராவினால் தற்போது உணர முடிந்தது. அதிலும், தெருவில் இறங்கி கடக்கையில் எங்கேனும் வெளியில் செல்கையில் கூட இதே நைட்டியிலேயே போவதற்கு மீரா மிக நாணித்தான் போனாள். தெருவில் ஆங்காங்கே நிற்கும் பிற நாட்டவரும், பிற மாநிலத்தவரும் மீராவைப் பார்க்கையில் ஆங்.. கத்தாமாதானே என்று ‘தன் மனைவியைப் பார்ப்பது போல, மார்பைத் தனியாகவும், மேலிருந்துக் கீழாகவும் கொச்சையாகப் பார்ப்பது உடலில் நெருப்பை வைப்பது போலிருந்தது.

யார் கண்ணைப் பிடுங்கி எங்கே போட்டுவிட இயலும், எல்லாம் தலைவிதி என நொந்துக் கொண்டு குனிந்த தலை நிமிராமல் வந்தாள். மூன்றாயிரத்திற்கே வக்கில்லாத நாய்க்கு பதினைந்தாயிரம் தேவையா? நொந்து தனக்குள்ளே குமுறிப் போனாள். வீடு வர வர தடக் தடக்கென்றிருந்தது. கடனாக வாங்கியிருந்த நாற்பதனாயிரம் ரூபாய் பணமும் எமன் போல வந்து எதிரே நின்றது.

வீடு வர, மலைத்துப் போய் இறங்கினாள் மீரா. வீட்டிற்குள் வந்ததுமே நிறைய வேலைகள் அவளுக்கென காத்திருந்தன. ஆளாளுக்கு புது ஆள் வேறு என்பதால், இது எடு, அதை செய், அங்கே போ, இங்கே வாவென ஓடியாடிக் களைத்துப் போய் அப்பாடா என வந்து இருக்கையில் அமர மணி பன்னிரெண்டாயிருந்தது. நாயடித்துப் போட்டது போன்ற அசதியிலானாள் மீரா.

எப்போது யார் வந்து நிர்ப்பார்களோ, யார் வந்து எங்கு கை வைப்பார்களோ என்ற பயம் வேறு ஒரு புறமிருக்க, ஒரு இரவு ஒரு பகல் மட்டுமே கடந்திருப்பதை உணர்கிறாள் மீரா. இன்னும் இரண்டு வருடம். நினைக்கவே பயமாக இருந்தது. ஊரிலிருந்து வந்து எத்தனையோ வருடங்கள் கழிந்து விட்டதை போல் மனம் கனத்தது அவளுக்கு. இடையே திடீரென நினைவுகளில் வெட்டிய ஒன்றாக குழந்தைகளின் நினைவு வர, ஐயோ கடவுளே, என் பிள்ளைகள் எங்கிருக்கோ என்ன செய்கிறார்களோ.. என்றெண்ணி அவர்களின் புகைப்படத்தப்ை பார்க்க எடுக்க, முன்பே உறங்க வந்த ஒருத்தி எழுந்து விளக்கை அணைத்து விட்டாள்.

ஒன்றும் பேச வழியில்லாமல் வாயில் துணி பொத்தி, வந்த அழுகையை அடக்க, இன்னொருத்தி எழுந்து விளக்க்கிட்டு விட்டு, போ.., போயி குளித்துவிட்டு வா, அதுவரை விளக்கெரியும், சீக்கிரம் போ என்று சொல்ல. எழுந்து துணிகளுக்கிடையே குழந்தைகளின் படத்தையும் மறைத்துக் கொண்டு குளியலறைக்குள் ஓடிவந்து நின்று, கதவை அடைக்கையில் மனது உடைத்துக் கொண்டு வர ஓ….வென கத்தி அழுதாள். குழந்தைகளின் முகம் பார்த்துப் பார்த்து அழுதாள். சற்று நேரம் பார்த்து விட்டு, அறையில் விளக்குகள் அணைக்கப்பட்டன. வாசலில் ஒரு வண்டி வந்து நிற்கும் சப்தம் கேட்டது.

பயமும் கவலையும் கண்ணீருமாய் இறைவா…’யென வாய்பொத்தி நிற்கிறாள் மீரா. அந்த அரபி முதிர், அகமத் அவளின் அறைக்கு சென்று அவளை எங்கே என்று கேட்கிறான். அவர்கள் ஏதோ சொல்ல, குளியலறை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறான். மீரா இனி இழக்கப் போகும் மானத்தை; இழுத்து இழுத்து மூடிக் கொண்டு, கண்ணீரில் மறைந்த குளியலின் சப்தமாக நின்றிருந்தாள்.

*****
கதை அன்றே முடிந்துதான் போயின. நாட்கள் வாரங்கள் வருடங்களென காலம் வெகு தூரம் வரை கடக்கிறது. வருடங்கள் பல கடந்த பின், ஊருக்கு வருகிறாள் மீரா. ஊரில் சில நாட்கள் மட்டும் தனக்கான நாட்களை குழந்தைகளோடு வாழ்ந்து விட்டு மீண்டும் புறப்பட்டு விதியின் பயணமாக குவைத் வருகிறாள்.

ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் குவைத் போகும் கத்தாமாவாகிய, மீராவின் கண்களைச் சுற்றி பூத்திருந்த கரு வலயத்தின் காரணத்தை, காலம் தன் சதியால் மறைத்துக் கொண்டுதான் விட்டது. ஊரில், தன் பிள்ளைகள் நன்றாக வளர்கிறார்களென்னும், ஒற்றை நம்பிக்கையை மட்டும் உயிராய் வைத்துக் கொண்டு.. விமான நிலையம் கடந்து வெளியே வர, அந்த அரபி முதிர், அகமதின் ஓட்டுனர் ஒருவன், மீராவை அழைத்துப் போக வாசலில் காத்துக் கிடந்தான்.

அவள் வந்ததும் வண்டி புறப்பட, காலம்; நிறைய பேரின் பின்னே, ஒருதலைபட்சமாக ஒரு சோகமான கதையை வைத்துக் கொண்டு வண்டியை பின் தொடர்ந்து ஓடியது. மீராவின் கண்களில் வெறுமையை தவிர வேறொன்றுமே இல்லாதவளாய் கண்களை மட்டும் ஆழ்ந்து மூடிக் கொண்டாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *