வேலை செய்து பழகியவர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 30, 2019
பார்வையிட்டோர்: 7,345 
 

அந்த தெருவில் “சினிமாக்காரி” என்று ஒரு காலத்தில் பேர் பெற்றிருந்த மீனாம்மாள்  தன் தெருவை தாண்டி சென்ற சினிமா ஸ்டுடியோ காரை பார்த்து விட்டு பெருமூச்சு விட்டாள்.  அடுத்த தெருவில் உள்ள அம்பிகாவின்,வீட்டுக்குத்தான் கார் செல்லும், அவள் கொடுத்து வைத்தவள், இன்னும் நடித்து கொண்டிருக்கிறாள். எனக்கு பாழாய் போன நோய் தாக்கி இந்த திண்ணையில் உட்கார வைத்ததும் இல்லாமல்,  இவளோடு நடித்து கொண்டிருந்தவர்களை கூப்பீட்டு போக வருபவர்களை பார்த்து வயிற்றெரிச்சல் பட வைக்கிறது.

மீனாம்மாள் போன வருடம் வரை எக்ஸ்ட்ரா நடிகையாக இருந்தாலும், ராசியான நடிகை என பெயர் வாங்கியிருந்தாள். இதனால் தினமும் அவளுக்கு ஏதாவது ஒரு இடத்தில் ஷூட்டிங்குக்கு அழைத்து செல்ல கார் வந்து விடும். சினிமாவோ இல்லை தொலைக்காட்சி தொடரோ, அவளுக்கு சின்ன வேடமே ஆனாலும் வாய்ப்பு கொடுத்து போதுமான வருமானத்தை கொடுத்துக்கொண்டிருக்கும்..

தன்னுடைய கஷ்டம் உண்ர்ந்தோ என்னவோ பையனையும், பெண்ணையும், இந்த தொழில் பக்கம் அண்ட விடவில்லை, கணவனும் இவளைப்போல ஒரு எக்ஸ்ட்ரா நடிகனாகத்தான் போய்க்கொண்டிருக்கிறான். இவள் அளவுக்கு அவனுக்கு சம்பாத்தியம் இல்லையென்றாலும், ஏதோ பேர் சொல்லும் அளவுக்கு வருமானம் வந்தது.

இப்பொழுது அந்த வருமானத்திற்கு அடி விழுந்து விட்டது. மீனாம்மாள் ஒரு நாள் காலையில் எழும்போது தலை சுற்றி கீழே விழுந்தாள், மருத்துவ மனைக்கு எடுத்துச்சென்று

பார்த்ததில் இரத்த கொதிப்பால் மூளைக்கு செல்லும் இரத்த குழாயில் பிரச்சினை என்று சொல்லி விட்டார்கள், ஓரளவு நடமாட முடியும், அவ்வளவுதான், மற்றபடி ஓய்வு தேவை.

இவள் அப்படியே நொறுங்கி விட்டாள். மகனும், மகளும் ஆறுதல் படுத்தினர். போதும்மா,

நீ பாடு பட்டது. நாங்களும் வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டோம். இனியாவது ஓய்வு எடுத்துக்கோ.

அவர்கள் சொல்லிவிட்டாலும் மீனாம்மாளின் மனது கேட்கவேண்டுமே, அவளுக்கு

இள வயதில், கதாநாயகி ஆக வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படவில்லை, ஓரளவு பேர் சொல்லக்கூடிய இடம் திரையுலகில் கிடைத்தாலே போதும் என்றுதான் நினைத்தாள். அந்தளவுக்கு அவளுக்கு கிடைக்காவிட்டாலும் ஏதோ ஆடல், பாடல் காட்சிகளில் வந்து போகும் அளவுக்கு இருந்ததே, அவளுக்கு பெரிய சாகசமாக இருந்தது, அந்தளவுக்கு  போட்டியும், பொறாமையும் கொண்டிருந்தது இந்த திரையுலக வாழ்க்கை.

இதனால் தன்னுடைய குழந்தைகளை இந்த பக்கமே திரும்ப விடவில்லை.தன்னுடைய வருமானத்தையும் மீறி தனியார் பள்ளியிலேயே படிக்க வைத்தவள் இருவரையும் பட்டதாரியும் ஆக்கி விட்டாள், இருவருமே நல்ல வேலையிலும் உட்கார்ந்து  விட்டனர். இருந்தாலும் இந்த நடிப்பு வாழ்க்கையை விட்டு விட மனசு மட்டும் கேட்கவே இல்லை.

வேலை முடிந்து உள்ளே வந்த மகள், திண்ணயில் உட்கார்ந்திருந்த அம்மாவின் முகத்தை பார்த்தவள் ஏம்மா உடம்பு சரியில்லையா, கேட்டவளிடம் மீனம்மாள் ஹூம் என் போதாத காலம் இப்படி முடக்கி இந்த திண்ணையில உட்கார வச்சுடுச்சு. மகள் சற்று கடுப்புடன் ஏம்மா இப்ப என்னாச்சுன்னு புலம்பறே. நீதான் பதிமூணு வயசுல இருந்து இந்த வேலை செஞ்சு கிட்டு இருக்கறயே? கடவுளா பாத்து உனக்கு ரெஸ்ட் கொடுத்திருக்காருன்னு நினைச்சுக்கயேன்.

என்னதான் மகள் சொன்னாலும் இவளுக்கு மனசு மட்டும் கேட்கமாட்டேனெங்கிறது.

தடுமாறிக்கொண்டு எழுந்தவள் மெல்ல சுவற்றை பிடித்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள்.

சற்று நேரத்தில் உள்ளே நுழைந்த கணவனை கண்டவள் மீண்டும் அந்த உலகத்தை பற்றி நினைக்க ஆரம்பித்து விட்டாள். ஏய்யா, இன்னைக்கு எங்க ஷூட்டிங்க் போன? அட போம்மா

இன்னைக்கு எங்கேயும் போகலை. சும்மா தான் இருந்தேன்.

அவ்வளவுதான் மீனாம்மாளுக்கு கோபம் தலைக்கேறியது, ஆமா, இப்படியே தண்டத்துக்கு இருந்தா நம்மளை பசங்க எப்படி மதிப்பாங்க. என்னோட போறாத காலம் நான் வீட்டுல முடங்கி போய் கிடக்கிறேன், இப்ப நீயும் வீட்டுல சும்மா இருக்கறேன், அப்படீன்னு சொல்லிகிட்டு திரியறே. வார்த்தைகள் கடு கடுவென வெளி வந்தன.

இதுவரை கணவனை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் இருந்தவள்தான்.அவனாக தனக்கு வாய்ப்பு வரவில்லையே என்ற பொழுது அதனால் என்னயா, நான் இருக்கறேனுல்ல, என்று அவனுக்கு ஆறுதல் சொன்னவள்தான். இன்று இவளின் இயலாமை இப்படி பேச வைக்கிறது.

மீனம்மாளின் குணம் தெரிந்தவனாகையால் எதுவும் பேசாமல், ஏதோ வேலை இருப்பவன் போல் வீட்டின் பின் புறம் போய் விட்டான்.

இந்த வீடு ஏதோ இவளின் மாமனார், அந்த காலத்தில் குதிரை வண்டி ஓட்டி சம்பாதித்து  கட்டியது. அதனால் இவர்கள் நால்வர் தங்குவதற்கு போதுமானதாகவே இருக்கிறது. இவளுக்கு தன் கையில் இதுவரை புழங்கிக்கொண்டிருந்த வருமானம் இல்லையே என்ற கவலைதான் இப்படி எல்லோர் மேலேயும் எரிந்து விழ வைக்கிறது என்பது இந்த வீட்டில் உள்ளவர்களுக்கு புரிந்ததால் வாழ்க்கை அமைதியாக ஒடிக்கொண்டிருந்தது.

ஒரு நாள் மகன் யாரோ இருவரை அழைத்து வந்து வீட்டு முன்புறத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தான். மீனாம்மாள் என்னடா பண்ணப் போறே ?என்று கேட்டதற்கு, திண்ணையை எடுத்துட்டு அதுக்குள்ள ஒரு ரூம் போடப்போறேன் சொன்னவனிடம் சண்டைக்கு போனாள் மீனாம்மாள், அது ஒண்ணுதான் நான் ஒண்டறதுக்கு இருந்தது, அதையும் புடுங்கிக்கிறீங்க, அவளின் வார்த்தைகளுக்கு மகன் எதுவும் பேசாமல் சிரித்துக்கொண்டே சென்று விட்டான்.

ஒரு வாரம் ஆட்கள் வர போக அந்த திண்ணை சற்று உரு மாறி ஒரு கடை போல அமைந்து விட்டது. வீட்டுக்குள் இருந்து அந்த கடைக்குள் வந்து சென்று வர வசதியும் செய்யப்பட்டு இருந்தது.

மறு நாள் “அம்மா..அம்மா”..சத்தம் கேட்டு முணு முணுத்துக்கொண்டே,வந்த மீனாம்மாள், தன் கணவன், மகன், மகள், மூவரும் சிரித்துக்கொண்டே நிற்பதை பார்த்தவள் ஏதும் புரியாமல் விழித்து பார்க்க, அம்மாவின் கையில் ஒரு சாவியை திணித்தான். அம்மா முன்னாடி இருக்கற கடையோட சாவி. இது இனிமேல் உங்கிட்டதான் இருக்கும். நீ இப்ப வேலை வெட்டி இல்லாத ஆளு இல்லை, ஒரு கடைக்கு முதலாளி, போய் உங்கடைய திறந்து பாரு.

சாவியை வாங்கியவுடன் திகைத்தவள் மெல்ல நடந்து அந்த அறையை திறக்க கடை முன்னால் விற்க கூடிய பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இவள் உட்காருவதற்கும் வசதி செய்யப்பட்டிருந்தது.அப்படியே நின்றவளிடம் என்னம்மா பிடிச்சிருக்கா? இனிமேல் உன்னை எல்லோரும் பெட்டிக்கடை மீனாம்மாள் அப்படீன்னு கூப்பிடணும். போ, உள்ளே போய் வியாபாரத்தை கவனி.

இப்பொழுதெல்லாம் சினிமாக்காரி மீனாம்மாள் பெயர் மறைந்து போய் பெட்டிக்கடை மீனாம்மாள் ஆகிவிட்டாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *