கதையல்ல

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 7,003 
 

களம்: கல்லூரி
காலம்: 1972

சீக்கிரமாக எழுந்து அவசர அவசரமாக கல்லூரிக்குக் கிளம்பினேன். அம்மா என் அவசரத்தைப் பார்த்து அதிசயமாகப் பார்த்தாள். நான் எப்பொழுதும் பின் தூங்கி பின் எழுபவன். இவ்வளவு சீக்கிரமாக நான் கிளம்பியதில்லை. அம்மாவின் தலைக்கு மேல் தெரிந்த ஆச்சரியக் குறியை அழித்து, ‘கல்லூரியில் தேர்தல், நண்பனுக்காக பிரச்சாரம் செய்ய வேண்டும்’ என்று கூறிக் கிளம்பினேன்.

கல்லூரி வந்தடைந்ததும் எப்போதும் இருந்ததைவிட கூடுதல் அமைதியாக இருந்தது. விசாரிக்க விடுதி மாணவர் ஒருவர் இறந்து விட்டதாகவும் அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்றும்.

கல்லூரியும் விடுதியும் அடுத்தடுத்தே. விடுதியில் ஒர் அறையில் இறுதி அஞ்சலி செலுத்த அவரது உடல் உள்ளதாகவும் அறிந்தேன். விவரம் அறியாத மாணவர்கள் ஒவ்வொருவராக கல்லூரிக்குள் வந்துகொண்டிருந்தனர். தேர்தலில் நிற்கும் நண்பன் இன்னும் வரவில்லை. இன்னொரு நண்பருடன் இணைந்து அருகிலுள்ள கடைக்கு ஒடிச்சென்று அந்த கடையிலுள்ள அனைத்து கருப்பு ரிப்பனும், தேவையான குண்டூசியும் வாங்கினோம். கல்லூரிக்குள் நுழையும் ஒவ்வொரு மாணவருக்கும் கருப்பு ரிப்பன் துண்டு, குண்டூசி கொடுத்தும், சிலருக்கு குத்தியும் விட்டோம். குறிப்பாக இது இன்ன வேட்பாளர் சார்பாக என்பது உணர்த்தப்பட்டது. சிறிது நேரத்தில் வேட்பாள நண்பரும் வர அவனுக்கும் குத்திவிட்டு, அனைவர் கண்ணிலும் படும்படி நிற்கச் சொன்னோம். அவனுக்கு அதில் முற்றிலும் உடன்பாடில்லை.

“வாங்கடா.. இதெல்லாம் தேவையில்லை. போய் இறந்த மாணவனைப் பார்த்துவிட்டு வரலாம்…” என்று எங்களை இழுத்துக் கொண்டு சென்றான். அதற்குள் நாங்கள் ரிப்பனை காலி செய்திருந்தோம்.

முதல் மாடியில் ஒர் அறையில் அவனின் உடல் கிடத்தப்பட்டு, மாணவர்கள் ஒரு நீண்ட ஒற்றை வரிசையில் மௌனமாகச் சென்று தமது இறுதி அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தனர். ஒரு பதினைந்து நிமிடக் க்யூ வரிசைக்குப் பின் என் முறை வந்தது.

அறையில் கிடந்தவனை ஜன்னல் வழியாகவே பார்க்க முடிந்தது. ஒரு கணம் ஏதோ மனதைப் பிசைந்து அழுத்தியது. அன்பரே யார் நீ? ஏன் இறந்தாய்? உன் உறவுகள் வரக் காத்திருக்கிறாயோ. உன் பெயர்கூட நான் யாரையும் கேட்கவில்லையே… என்ன படித்துக் கொண்டிருந்தாய். என்னவாகக் கனவு கண்டிருந்தாய். உன் அம்மா, அப்பா,சகோதர சகோதரிகள் என்ன பதட்டத்துடன் பயணித்துக் கொண்டிருக்கின்றனரோ… இங்கே உன் கால் கட்டை விரல்களை இணைத்து ஒரு மொட்டை அறையில் நீ கிடக்க அங்கே இதுவரை உன் இழப்பை ஒரு சிறிய ஆதாயமாக்க முயற்சித்த இந்த அர்ப்பனை பார்க்காதே… மன்னித்துவிடு.

வெகு நேரம் ஜன்னல் கம்பியைப் பிடித்துக்கொண்டு நிற்பதை பின்னாலிருந்த நண்பன் உணர்த்த மெல்ல நகர்ந்தேன்… அன்றைய எனது நீண்ட மௌனத்திற்குக் காரணம் ‘நான் என் செய்கையால் உணர்ந்த அவமானம்’ என்று அறியா நண்பர்கள் sentimental fool என்றனர்.

பி.கு: ஒவ்வொரு முறை ஒர் உயிர் இழப்பை யாரேனும் சுயலாபத்திற்குப் பயன் படுத்தும் போது அந்த முகமறியா சகமாணவனிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்கிறேன், இன்றும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *