கதவு திறந்தது!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 1, 2021
பார்வையிட்டோர்: 2,807 
 
 

டாக்டர் ரங்கராவ் அந்த ஆஸ்பத்திரியில் வேலைக்கு அமர்ந்ததிலிருந்து இதுவரை எத்தனையோ பிரேதங்களைப் பரிசோதித்திருக்கிறார். ஆனால் அன்றைய தினம் பரிசோதனைக்கு வந்த பிரேதத்தைப் பார்த்ததும் ஏற்பட்ட அதிர்ச்சியும் அனுதாபமும் என்றுமே அவருக்கு ஏற்பட்டதில்லை.

ஏன்?

அவருடைய உள்ளமறிந்த ஒரு ஜீவனின் பிரேதமாயிருந்தது அது!

அவன் எப்படி இறந்தான்?

‘போலீஸ் ரிப்போர்ட்’ அவருக்குப் பதில் சொல்லிற்று;

வழி நடைப் பாதையிலே, கொட்டும் மழையிலே, குளிரிலே அவன் விறைத்துக் கிடந்தான் என்று!

அவன் யார்?

*⁠*⁠*

அரசியல் கொந்தளிப்பில் குதித்து அதிகார வர்க்கத்துடன் போராடி அம்பலத்துக்கு வந்தவனல்ல; பேரும் புகழும் பெற்ற பிரமுகனல்ல; காரிருளில் ஒரு மின்னல்போல் கலைவானில் தோன்றி மறைந்த கலைஞனுமல்ல; சர்வ சாதாரணமான தொழிலாளி! — குழந்தைகள் மாம்பழத்தைச் சப்புக் கொட்டித் தின்றுவிட்டுக் கொட்டையை வீசி எறிந்து விடுவதுபோல, முதலாளிகள் அவனுடைய இரத்தத்தை உறிஞ்சிவிட்டுத் தள்ளி விட்டார்கள்!

பார்க்கப் போனால் அந்த முறையில் அறிமுகப்படுத்துவதற்குக் கூட அவன் அருகதையற்றவன். தொழிலாளிகளுக்காவது வேலை செய்வதற்கென்று ஓர் இடமுண்டு; அவர்களுடைய வேலைக்குக் கூலியும் இவ்வளவுதான் என்று நிச்சயமாக உண்டு; வசதியுடனோ, வசதியில்லாமலோ அவர்கள் வசிப்பதற்கென்று வாடகைக்காவது ஒரு சின்னஞ் சிறு அறை உண்டு; உணவும் உயிர் போகாமலிருப்பதற்காவது ஓரளவு உண்டு. ஆனால் அவனுக்கோ?

இந்த உலகத்தில் எதுவுமே நிச்சயமில்லை!

ஆம்; இந்த உலகத்தில் யாருக்குமே எதுவுமே நிச்சயமில்லைதான்; அப்படித்தான் வேதாந்திகள் சொல்லுகிறார்கள்.

ஆனால், அந்த வேதாந்திகள் தங்குவதற்கு மட்டும் சகல செளகரியங்களும் பொருந்திய எத்தனையோ மடங்கள் சர்வ நிச்சயமாக இருக்கின்றன; சாப்பாட்டு விஷயத்திலோ சாம்ராஜ்யாதிபதிகள் கூட அவர்களிடம் பிச்சை எடுக்கவேண்டும்!

இத்தனைக்கும் அத்தனை செளகரியமான வாழ்க்கைக்கு அவர்களுடைய உடலும் ஊனும் அணுவளவாவது தேய்வதில்லை; உள்ளம் நொந்து உயிரும் ஓரளவாவது ஒடுங்குவதில்லை.

மோட்ச சாம்ராஜ்யத்தில் தாங்கள் வகிக்கப் போகும் பதவிக்காக, முன் கூட்டியே அவர்களுக்குக் காணிக்கை என்ற பெயரால் லஞ்சம் கொடுத்துவைக்கும் மகானுபாவர்கள் எத்தனையோ பேர் இருக்கும்போது, அந்த வேதாந்திகளுக்கு இந்த அநித்தியமான உலகத்தில் எதைப் பற்றித்தான் என்ன கவலை?

ஆனால், மேற்கூறிய அந்தப் பரிதாப ஜீவனுக்கோ?—

எத்தனையோ கவலைகள்!

விடிந்தால் வேலை கிடைக்குமா என்று கவலை; வேலை கிடைத்தால் கூலி கிடைக்குமா என்று கவலை; கூலி கிடைத்தால் சோறு கிடைக்குமா என்று கவலை; அதுவும் கிடைத்தால் ‘அப்பாடி!’ என்று சற்று நேரம் விழுந்து கிடக்க எங்கேயாவது கொஞ்சம் இடம் கிடைக்குமா என்று கவலை.

ஆம்; அவனுடைய வாழ்க்கை அந்த லட்சணத்தில் தான் இருந்தது. “குடை ரிப்பேர், குடை ரிப்பேர்!” என்று தெருத் தெருவாய்க் கூவிக்கொண்டு போவான்; கூப்பிட்ட வீட்டுக்குள் நுழைவான்; கொடுத்த வேலையைச் செய்வான்; “கூலி என்னடா வேண்டும்?” என்றால், “கொடுக்கிறதைக் கொடுங்க, சாமி!” என்பான்.

சிலரிடம் அவன் வேலை செய்த கூலிக்காக வம்புக்கு நிற்பதும் உண்டு; மல்லுக்கு நிற்பதும் உண்டு; எப்படித்தான் நின்றாலும் ஏமாந்து வருவதும்.

கிடைத்த காசுக்கு ஏற்றவாறு அவன் தானே சமைத்துச் சாப்பிடுவது வழக்கம். எங்கே?-வீதியோரங்களில் இருக்கும் நடைப்பாதையிலே!

ஆம்; தீயர்கள், திருடர்கள், தீராத நோயாளிகள், திக்கற்றவர்கள் இவர்களின் மத்தியிலே உழைப்பாளியான அவனும் உயிருக்கு மன்றாடிக் கொண்டு வாழ்ந்து வந்தான்.

வயிற்றுப் பிழைப்பையொட்டி அவன் வழக்கம் போல் வீதிகளில் பவனி வரும்போது, சில வீடுகளின் முன்சுவரில் பின் வருபவை போன்ற கல்வெட்டுக்கள் காட்சியளிக்கும்;

“1930 ஸ்ரீ மேமீ 7உ மொட்டையம்மன் தேவஸ் தானத்துக்கு முல்லைவனம் ஜமீன்தார் ஸ்ரீ முருகேச முதலியார் பாரியாள் ஸ்ரீமதி முத்தம்மாள் எழுதிவைத்த வீடு.”

இந்தக் கல்வெட்டுக்களைப் படிக்கும்போது, ‘ஆதியும் அந்தமும் இல்லாத ஆண்டவனுக்கு இந்த வீடு என்னத்துக்கு வாசல்தான் எள்னத்துக்கு?” என்று அவன் நினைத்துக் கொள்வானோ என்னமோ, தன்னையும் அறியாமல் சிரித்து விடுவான் !

*⁠*⁠*

ஒரு நாள் வழக்கம்போல் தான் தங்கியிருக்கும் வழி நடைப் பாதையிலே, படுப்பதற்காகப் பழைய கோணிக் கந்தையொன்றை உதறிப்போட்டுக் கொண்டிருந்தான் குப்புசாமி.

வானத்தில் சந்திரன் இல்லை; வீதிகளில் விளக்குகளும் இல்லை.

ஏற்கெனவே அவனுக்கு இரண்டு நாட்களாகக் காய்ச்சல். சர்க்கார் ஆஸ்பத்திரிகளில் ‘மிக்சர்’ என்று சொல்லி அனாயாசமாக ஊற்றிக் கொடுக்கும் ‘வர்ணத் தண்ணீ’ரை வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தான். குணம் தான் அவன் உயிரோடு இருக்கும் வரை தெரியப் போவதில்லையே!

இந்த அழகில்தான் அன்று காற்றும் மழையும் கலந்தடித்தது. மனிதர்களைப் போல் தன்னை வஞ்சிக்காத காற்று, மழையின் கருணையை எண்ணி அவன் மகிழ முடியுமா? வேதனையுடன் விழுந்தடித்துக் கொண்டு ஓடினான், வீடு வீடாகச் சென்று எட்டிப் பார்த்தான். படியில், நடையில், வழியில், வராந்தாவில்-எந்த மூலையிலாவது கொஞ்சம் இடம் கிடைக்குமா என்று தான்!

“அம்மா!”, “ஐயா!” என்று வாசலில் நின்றபடி அவன் கத்தினான். அவனுடைய கதறலைக் கேட்டு “ஐயோ!” என்று இரங்குவாரில்லை; “வா!” என்று வழி விடுவாரில்லை.

எத்தனையோ ஒட்டுத் திண்ணைகள் அவனை “வா வா!” என்று அழைப்பது போலிருந்தன; ஆனால் வாசற் கதவுகள் வழி மறித்து நின்றன.

அங்கு மிங்குமாக அலைந்து அலுத்துப்போன பிறகு; அருகிலிருந்த ஒரு வீட்டின் கதவைப் பலமாகத் தட்டினான் அவன்.

அந்த வீட்டுக்காரர்தான் டாக்டர் ரங்கராவ், “யாரப்பா, அது?” என்று சாவதானமாகக் கேட்டார் அவர்.

“நான்தான் குப்புசாமிங்க!”

டாக்டருக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது. “என்னடா, உன்னையும் ஆட்லி, ட்ரூமன் மாதிரி உலகமே அறிந்திருக்குமென்று நினைத்துக் கொண்டாயா?” என்று கேட்டார் படுக்கையில் கிடந்தபடியே.

“நான் ஏன் சாமி, அப்படியெல்லாம் நினைச்சிக்கிறேன்? வெளியே காத்தும் மழையும் கலந்தடிக்குது; உங்க வீட்டுத் திண்ணையிலே கொஞ்சம் இடம் கொடுத்தீங்கன்னா, இராப்பொழுதைக் கழிச்சுடுவேன்!” என்றான் குப்புசாமி.

இப்பொழுதுதான் டாக்டருக்கு விஷயம் விளங்கிற்று. உடனே அவர், “என்னடா, இது சத்திரமா?” என்று உறுமினார்.

“நிஜத்தைச் சொல்லப் போனா சத்திரந்தானே, சாமி! இருக்கிற வரை தானே இந்த வீடு வாசல் எல்லாம்……” என்று தனக்குத் தெரிந்த வேதாந்தத்தை அவருக்குப் போதிக்க ஆரம்பித்தான் குப்புசாமி.

அவ்வளவுதான்; அடுத்த நிமிஷம் சாத்தியிருந்த கதவு ‘தடா’ ரென்று திறந்தது. வராந்தாவிலிருந்த மின்சார விளக்கு ‘குப்’ பென்று எரிந்தது. பசியால் வாடி, மழையால் நனைந்து, குளிரால் நடுங்கி நின்ற குப்புசாமியின் தோற்றம் கூட ஏனோ டாக்டர் ரங்கராவின் ஆத்திரத்தை அடக்கவில்லை. “அவ்வளவு திமிரா, உனக்கு?” என்று சீறிக்கொண்டே அவர் வாயு வேகத்தில் அவனுடைய கழுத்தில் கையை வைத்தார்; அடுத்த கணம் கொட்டும் மழையில் அவன் குப்புற விழுந்தான்.

அதற்குப் பிறகு கதவைப் ‘படா’ ரென்று சாத்திய சத்தமும், விளக்கை ‘டக்’ கென்று அணைத்த ஓசையும் கேட்கும் வரை தான் அவனுடைய உடம்பில் உயிர் இருந்தது.

*⁠*⁠*

இந்தச் சம்பவம் டாக்டர் ரங்கராவின் நினைவுக்கு வந்ததும் அவருடைய உள்ளம் பதைந்தது ; தியாயத்துக்கு விரோதமாகத் தம்முடைய தீர்ப்பில் ‘இயற்கை மரணம்’ என்று எழுதும்போது அவருடைய மனச்சாட்சி அவரை வதைத்தது.

அந்த வேதனையுடன் அவர் யந்திரம்போல் தம்முடைய வேலைகளை அன்று எப்படியோ கவனித்து விட்டு வீடு திரும்பினார்.

அன்றிரவு அடாத மழை பெய்தது.

முன்னிரவு நடந்ததுபோல் அன்றிரவும் இரண்டொரு நடைப் பாதை வாசிகள் வந்து அவருடைய வீட்டுக் கதவை இடித்தனர்.

என்ன விந்தை இது! இன்று அவருக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வரவில்லை; அமைதியுடன் எழுத்து வந்தார்.

அடுத்த நிமிஷம்………கதவு திறந்தது!

– ஒரே உரிமை, 1950, வெளியீடு எண்:6 – அக்டோபர் 1985, புத்தகப் பூங்கா, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *