(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கதவு திறந்தது. ஆபீஸ் பையன் கடிதங்களைக் கொண்டு வந்து மேசையின் மீது வைத்து விட்டுச் சென்றான்.
செல்வநாயகன் ஒரு கடிதத்தைப் பிரித்துப் படித்தான். இதயத்தைப் பிழிந்தெடுத்த சோகசாலைகளிலே தோன்றிய ஒரு கோரப்புன்னகை அவன் கடைக் கோணங்களில் மலர்ந்தது. காதலியின் காரணமில்லாத உள்ளக்குமுறலை எழுத்து வடிவத் திலே பார்த்துச் சிரித்தான். ஆம்! பாக்கியத்தின் கடிதம் தான் அது. “என்னைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றிவிட்டுப் புது மலர்களிலே மதுவருந்துகிறாயே” என்று கதாபாத்திரம் சொல்வதாக எழுத் தாளர்கள் வரையும் அந்தக் கொடூரச் சொற்கள் கடிதத்தில் இடம் பெறவில்லை. அப்படி எழுதியிருந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கமாட்டான் – பெண்களுக்குச் சந்தேகம் இயற்கை தானே என்ற எண்ணத்தால். ஆனால், கடிதத்தில் சிதறிக்கிடந்த அந்தக் கருத்துக்களை, அந்த வார்த்தைகளைத்தான் நோக்கி அந்த வார்த்தைகளை மறுபடி ஒருமுறை முணு முணுத்தன – அவன் உதடுகள்.
‘நீர் ஒரு புரட்சி மோகன் ஆனால் நான் ஒருசாந்த குமாரி “பாக்கிய” வாழ்வு வேண்டும் எனக்கு. நீர் தமிழனுக்குச் சிங்கக் கொடி வேண்டாம் எனப் புரட்சிப் பிரசாரம் செய்கிறீர், தனியாட்சி வேண்டும் – தமிழாட்சி வேண்டும் எனக்கோஷம் செய்கிறீர் – மேடைகளிலே. ஆனால் நான் அதை விரும்பவில்லை ஏனெனில் என் தந்தை முதல் பல தமிழர்கள் வெளியூர்களில் வியாபாரிகள். சிங்களவரின் கையை எதிர்பார்த்து நான் நம் ஜீவியம் நடக்கிறது. கொடி தகாததாயிருக்கலாம். ஆனால் உம் தந்தை போன்ற தமிழ்த் தலைவர்கள் இருக்கத்தக்கதாக நீர் நான் அதற்கெதிராகக் கிளம்ப வேண்டும் என்று அர்த்தமில்லை. ஓர் வார்த்தை அது தான் என் கடைசி வார்த்தை . உமது புரட்சியில் காதல் அல்லது எனது காதலன் இரண்டில் எது வேண்டும்? தோழமையா? விரோதமா?”
அவனுடைய கை விரல்களுக்கிடையே அந்தக் கடிதம் கசங்கியது. ஆனால் அவன் உள்ளம் மலர்ந்தது. அவன் சிரித்தான்.
முன்பெல்லாம் “கண்ணே” என்று அன்புடன் தான் அவளை அழைப்பான். ஆனால்….. இன்று? அவள். உள்ளக்கண் குருடாகி விட்டதே!
இரவு பன்னிரெண்டுமணி. பாக்கியத்தின் அறையில் விளக்கு அணைக்கப்படவில்லை. அது தன் பாட்டிற்கு எரிந்து கொண் டிருந்தது. பாக்கியம் கட்டிலிற் படுத்திருந்தாள். கண்கள் மூடி யிருந்தன. ஆனால் உறங்கவில்லை .
கதவு திறந்தது அவன் வந்தான். அவள் வழித்தாள். அவர்கள் சந்தித்தனர். அவன் மேனகா துஷ்யந்த நாடகம் நடத்திக் காண்பிக்க அங்கு வரவில்லை. தன் வாழ்க்கைப் பிணைப்பிலிருந்து விடுபட அங்கு வந்தான். அவன் சாந்தமாகப் பேசத் தொடங்கினான்.
“நான் எண்ணை நீ தண்ணீர். இரண்டும் கலந்து கொள்ளா மல் பிரிந்துதான் இருக்கும். நீ என்போக்கை விரும்பவில்லை!” நான் செய்ய வேண்டியது என்ன என்பது தான் என் சிந்தனை யைத் தவிர நீயோ பிறரோ அதைப்பற்றி என்ன எண்ணுவார்கள் என்பதல்ல. நீ விரும்பாததற்கு காரணம் உன் சுயநலம்”
வர வர அவன் வார்த்தைகளில் சூடேற ஆரம்பித்தது. அவள் எழுந்து உட்கார்ந்தாள்.
“தந்தை வியாபாரத்தை விட்டுவிட்டால், நடைக்கொரு குலுக்கும், வெளிக்கொரு பகட்டும், விழிக்கொரு சிமிட்டும், மொழிக்கொரு பசப்பும் செய்து உலவ முடியாதல்லவா? ஒரு சிறு தியாகம் செய்ய உன்மனம் ஒப்பவில்லை சீ! நீ ஒரு தமிழச்சியா? தியாக பூமி என்று புகழப்படும் தமிழ் நாட்டில் பிறந்தவளா நீ?”
கொந்தளித்த கடல் அடங்கியது போல, அவன் கொதித்த வார்த்தைகள் அடங்கின. அவள் பதிலுக்கு பத்திரகாளி வேசம் போடவில்லை. வெட்கத்தால் தரையை நோக்கித் தாழ்ந்தது அவள் தலை.
“பாக்கியம்! என் தந்தை போன்ற தமிழ்த் தலைவர்கள் யாவரும் பதவிப் பித்தர்கள்! சுயநலவாதிகள்!! பரசிரம ஜீவிகள்!!! ஆகவே என்போன்ற இளைஞர்கள் யாவரும் கிளம்ப வேண்டும். விதை முளை போடுவதற்கு ஒவ்வோர் மழைத்துளியும் உதவி புரியவில்லையா? நீ என்னை எனக்காகக் காதலித்தாய் என்றிருந் தேன். ஆனால் . பாக்கியம்!…. என்னை என் கொள்கைக்காக கடத்திவிட்டாயே! கடலினும் பெரிது காதல்! ஆனால் காதலினும் பெரிது கடமை! தமிழனுக்கு உழைப்பது எம் கடமை! நான் தோழமை பூண்டு விட்டேன் பாக்கியம் உன்னோடு அல்ல – கடமையுடன்;என் வாழ்விலிருந்து நீ விடைபெறுகிறாய். போய் வருகிறேன். உன் வாழ்க்கையை விட்டே! வந்த நம் பாக்கியம்!”
மறுபடி கதவு திறந்தது. அவன் வெளியேறினான். அவன் இதயக் கதவும் திறந்தது. அதிலிருந்து அவள் வெளியேறிக் கொண்டிருந்தாள்.
நீர் துளிர்த்த அவள் கண்கள் நிலத்தை நோக்கின. கடிகாரத் தில் ‘டங்’ என்ற ஒரு ஓசை நிலத்தை நோக்கிய கண்கள் நிமிர்ந்து நோக்கின. நேரம் பன்னிரெண்டரை அரை நாளிக்கைக்கு முன் இறுகப் பற்றிக் கட்டி முத்தமிட்டுக் கொண்டிருந்த கடிகாரத்தின் பெரிய முள்ளைச் சிறிய முள்ளை கீழே வீழ்த்திவிட்டது. அவன் அவளை விலக்கியது போல.
மூன்று தினங்களுக்கு முன் செல்வநாயகத்தின் தந்தை அவ ளிடம் வந்திருந்தார். அவருக்கு அவர்களின் காதலைப் பற்றி நன்கு தெரியும். ஆனால் அவர் அதற்குக் குறுக்கே நிற்கவில்லை . ஏனிெல் அவள் ஒரு பணக்கார வியாபாரியின் மகள். ஆதனம் ஸ்ரீதனம் அபரிமிதமாகக் கிடைக்குமென்ற எண்ணம் – அவருக்கு.
வந்தவர் “அவன் அரசியல் சூழலிலே சிக்கிச் சிதையப் போகிறான். அவன் மனதில் நீதான் மாற்றிவிட வேண்டும்” என்றார் – பாக்கியத்திடம்.
“அவர் உறுதிபடைத்த நெஞ்சராகிற்றே” அவள் சந்தேகக் குரலில் கேட்டாள்.
“மாற்ற வழியுண்டு பாக்கியம். நீ ஒன்று செய். அவன் தனது போக்கை மாற்றிக் கொள்ளாவிடில், நீ அவனைக் காதலிக்க முடியாது என்று சிறிது கடூரமாக ஒரு கடிதம் வரைந்துவிடு. பிறகு பையன் உன் காலடியில் வந்து விழுந்துவிடுகிறான்.”
சிக்கலைக் குலைப்பதற்கு அவர் கூறிய வழி இது. அவளும் இயைந்துவிட்டாள். கடிதம் என்ற கத்தி, அவர்களின் வாழ்க்கையைப் பிணைந்திருந்த காதற் கயிற்றை அறுத்துவிட்டது.
மறுபடியும் “டாங்” என்ற அந்த ஓசை அவள் சிந்தனை உலகிலிருந்து விடுபட்டாள். நிமிர்ந்தாள் ஒரு மணி.
இன்னும் ஐந்து நிமிடங்களில் அந்த ஊசிகள் மறுபடியும் ஒன்று சேர்ந்துவிடுமே! ஆனால் அவனும் அவளும்? அந்த ஊசிகள் ஒன்று சேருவதை ஆசையுடன் பார்த்தாள் ஆனால் ஒன்றும் தெரியவில்லை. ஏனெனில் இருள் சூழ்ந்து விட்டது காரணம்? கவனிப்பாரற்று எரிந்து கொண்டிருந்ததால் எண்ணை தீர்ந்து போய்விட, விளக்கு அணைந்துவிட்டது – அவள் வாழ்க் கையைப் போல கண்ணில் துளிர்ந்த நீரை அவள் துடைத்துக் கொண்டது அந்த இருட்டில் யாருக்குத் தெரியப் போகிறது.
நாயகத்தின் தந்தை, பாக்கியத்திடம் உதவிக்குச் சென்ற தற்குக் காரணங்கள் இல்லாமலுமில்லை.
அதோ அவன் மேடையில் நின்று, சிங்கத்திற்கெதிராகக் கிளம்ப வேண்டுமென்று சிங்கம்போற் கர்ச்சிக்கிறான் ஆம்! செல்வ நாயகன் தான்.
ஆனால் கூட்டம் தடுக்கப்படுகிறது. தடையுத்தரவு பிறப்பிக் கப்படுகிறது. தடுப்பவர்கள் ஜனநாயக அரசாங்கத்தவர்கள் ஆட்சி பீடத்தவர்களின் பிரதிநிதியாக ஒரு தமிழன் தான் கூட்டத்தைத் தடுக்க வந்திருந்தான். தமிழன் கையாலேயே அவன் தொண்டையை நெரிக்கும் தந்திரம் இது. பின்பு நாம் துரோகம் செய்யவில்லை . உங்கள் இனம் உங்களைக் காட்டிக் கொடுத்தது என்று அரசாங்கம் காரணம் காட்டலாமல்லவா?
கூட்டத்துக்குத் தடைபோட வந்த “தரகர்” வேறு யாரு மில்லை செல்வநாயகத்தின் தந்தைதான். கூட்டம் கலைகிறது. தந்தையும் மைந்தனையும் தவிர.
“குடும்பப் பெயரைக் கெடுக்கப் புல்லுருவிகளுடன் சேர்ந்து கூச்சலிடுகிறாய்.”
“குறியில்லாத கூக்குரல் கொள்கையில்லாத கூச்சல் – நீங்கள் போடுவது.”
“தமிழ்த் தலைவன் சீர்திருத்தவாதி என்று ஊர்பூராவும் உங்களைப்பற்றிப் பேசுகின்றனரே! சீர்திருத்தவாதியின் வாயிற் சிந்தும் சொற்களா இவை?”
“சீர்திருத்தம் ஊருக்கு! நமக்கல்ல உனக்காக நான் என் பதவியை விட்டு விடுவதா? வேண்டாம் நாயகம் நான் தந்தை என்ற ஹோதாவிற் கூறுகிறேன். அரசியல் மேடையில் தந்தை, மகன் என்ற பேதம் பாராட்ட முடியாது நீ கைது செய்யப்படுவாய். நானே கைது செய்ய வேண்டி ஏற்பட்டு விடும். என் கடமை அது. நீ தன் பாதையிலிருந்து விலகிக் கொண்டால் தான் உனக்கு நன்மை.”
“இல்லை நீங்கள் உங்கள் பதவியிலிருந்து விலகிக் கொண் டால் தான் தமிழனுக்கு நன்மை.”
இது தந்தைக்கும் மகனுக்குமிடையில் நடந்த உரையாடல் இப்போது அவன் போய்விட்டான். தந்தையின் மனக்கதவு திறந்தது. கடமை, பாசம் என்ற இரு பயில்வான்களும் உள்ளே சென்று மற்போர் நடத்தினர். பாசம் சிறிது தலைதூக்கியது.
“காதலின் முன்னே தேசபக்தி பறந்துவிடும்” என்று எண்ணினார் நாயகத்தின் தந்தை. அது தான் அவர் அவளிடம் சென்று உதவிகோரியதற்குக் காரணம். ஆனால் அவர் எதிர்பார்ப்பதற்கு மாறாக விஷயங்கள் நடந்துவிட்டன. அவன் தன் காதலைத் தியாகம் செய்துவிட்டான் என்று அறிந்ததும் அவருடை மனம் கல்லாகி விட்டது. அவரும் தன் பாசத்தைத் தியாகம் செய்து விட்டார்.
அன்று அவனுடைய கட்சி மாநாடு. அறிஞர்கள் பேசினார் கள். அவனும் பேசினான்.
“மொழி ஒரு நாட்டின் விழி! அதை உயர்த்த வழி தமிழரசு ஒன்றுதான். ஆனால் நாம் கோடிட்ட ஒரு குட்டிச் சிங்கக் கொடியை மண்டியிட்டுக் குடங்கிக் கிடக்கின்றோம். அடிமை யாக்கும் கொடி, அருகில் கோடிட்ட கோடி, அருவருக்கத் தகுந்த கொடி நமக்கு வேண்டாம்.
உங்கள் முன் இரண்டு வழிகள் ! ஒன்று நிபந்தனையற்ற சரணாகதி! மற்றுமொன்று புரட்சிப் புதுவழி. பிந்தியது கடியது ஆனால் வீரர் வழி அது. புன்மை இருட்கணங்களைப் ‘புஸ்’வாண மாக்கிவிட்டு கிளம்புங்கள் போரொலியுடன்! எங்கே!? நடக்கட்டும் உங்கள் நற்பணி! தொடங்கட்டும் உரிமைப் போர்ப்படை எதிர்ப்பு! கேட்கட்டும் வெற்றிக் கோஷம்! வீழட்டும் வெறி பிடித்த ஆட்சி !”
இது அவன் பேச்சில் ஒரு பகுதி. திடீரெனக் கூச்சல்கள் ஆர்ப்பாட்டங்கள் சண்டைகள். கூட்டத்தின் மீது தடையுத்தரவு! செல்வநாயகன் கையில் விலங்கு! தமிழ் நாட்டிலே பிறந்தும் தன் மானமற்றுப் போன அத்தமிழ் நீதிபதி, மாத வருவாய்க்காக, குற்றமற்ற தமிழனை அனுப்பிய இடம் சிறை ஜெயில் கதவு திறந்தது – அவனை வரவேற்க!
உரிமைக்காகப் போராடி, உண்மையை எடுத்துக்கூறி, தாய் நாட்டின் தரத்தை உயர்த்த முயற்சித்ததற்காக அவனுக்கு 6 மாதச்சிறைத் தண்டணை – வெலிக்கடைச் சிறையில் அல்ல – தமிழ்நாட்டிலேயே சிறை.
கூட்டத்தில் ஏற்பட்ட எதிர்ப்புகளையும், ஆர்ப்பாட்டங்களை யும் அடக்கிய ‘தீரப்’, பணிக்காக அவன் தந்தைக்கு உதவிப் பொலிஸ் சுப்பிரின்ரென்டென்ட் என்ற பட்டம் வெறுமனேயல்ல – பாராட்டுக் கூட்டங்களுடன்.
மறியற் கூண்டின் சிறு துவாரங்களினூடாக இயற்கையழகை ரசித்துக் கொண்டிருந்தான் – நாயகன். இயற்கையின் ஒவ்வோரசை யும் ஆறு மாசங்களின் முன் நடந்தவைகளை அவன் ஞாபகத்திற்கு கொண்டு வந்து காட்டியது.
கதவு திறந்தது காவற்காரன் “ஆறுமாசங்கள் கடந்துவிட்டன தம்பி இன்று உனக்கு விடுதலை” என்றான் சந்தோஷத்துடன் நாயகன் திரும்பினான் “உண்மையாகவா?” என்று கேட்டன – கண்க ள்.
திறந்து கிடந்த கதவினூடாக தொலையில் ஒரு கோபுரம் தெரிந்ததும், அதிலே ஒரு கொடி கம்பீரமாகப் பறந்து கொண் டிருந்தது. தமிழனின் தன்மானக் கொடியல்ல – அது. சிங்க(ள)க் கொடி! தமிழ் நாட்டுக் கோபுரத்தில் வேறு கொடி. காற்று ஒரு முறை பலமாக வீசியது. கொடி கிழக்கும் மேற்குமாகக் கூனி ஆடி வளைந்துவிட்டு நிமிர்ந்தது. ஆறு மாசங்களின் முன் சிறிது வளைந்து கொடுத்துவிட்டு இப்போது நிமிர்ந்து நிற்பதைக்காண அவன் மனம் வெதும்பியது.
ஒரு சிரிப்பொலி. சிங்கம் சிரித்தது. அவன் மனக் கண்முன் பாக்கியமும் சிரித்தாள். கேலிச் சிரிப்புகள்! அவனால் அக்காட்சியைச் சகிக்க முடியவில்லை . திரும்ப அந்தத் துவாரங்களினிடம் அடைக்கலம் புகுந்து விட்டான். இயற்கையன்னை அவன் மனத்தைப் பறித்துக் கொண்டாள்.
கதவு திறந்தது. ஆனால் அவன் வெளியேறவில்லை. உள்ளேயேயிருந்து விட்டான் – வெளி உலகுக்கும் வேதனைச் சிறைக்கும் வித்தியாசம் கிடையாது என்ற எண்ணத்தால்.
– முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள், முதற் பதிப்பு: மாசி 2010, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.