அபேட்சகர் அம்பலத்தார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 24, 2023
பார்வையிட்டோர்: 825 
 

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மண்மாதாவின் மகிழ்ச்சிப் புன்னையுடன் காலை புலர்ந்தது. இரவு, கமக்காவலுக்குச் சென்றிருந்த நான் வீட்டுக்கு வந்தேன்.

கொஞ்சம் சுடச்சுட தேநீர் குடித்தேன். சற்றுநேரம் சிரம பரிகாரம் செய்தேன். மீண்டும் கமத்திற்கே போக வேண்டியிருந்தது.

காரணம், கமத்திற்குத் தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது. குளத்திலே தண்ணீர் குறைந்த கோடைகாலம். ஒறுப்புத் தண்ணீரை ஒவ்வொருவருடைய கமத்திற்கும் ‘முறை’ வைத்துத்தான் விநியோகித்தார்கள்.

நான் பயிர்ச்செய்கை பண்ணியிருந்த கமத்திற்கு பதினாறு மணித்தியாலங்களில் தண்ணீர் பாய்ச்சி முடிக்க வேண்டும்.

குறிக்கப்பட்ட நேரத்தில் என் வயலுக்குப் பாயவேண்டிய தண்ணீர், எனது கவனயீனத்தினால் வியர்த்தமாக தரிசு நிலங் களிலே பாய்ந்து விட்டால் – அவ்வளவுதான்!

விழலுக்கு நீர் பாய்ச்சிய அந்தப் பொன்னான நேரத்திற்குப் பதிலாக மீண்டும் தண்ணீர் பாய்ச்ச முடியாது. கண்டிப்பாக மற்றவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

மனிதனுக்கு நாளாந்தம் பற்பல கடமைகள் குறுக்கிடலாம். அவைகளில் ஒன்று முக்கியமான முதற் கடமையாயும், மற்ற வைகள் அடுத்தபடியாகவுந்தான் அமைந்திருக்கும். முக்கிய கடமையை முதலிலும் மற்றவைகளை அடுத்தும் செய்து நிறை வேற்றுகிறவர்கள் தாம் வாழ்க்கையில் வெற்றி காண்கிறார்க ளென்பது அனுபவந்தந்த படிப்பினைதானே! -அன்று, பல கடமைகள் இருந்தன. தண்ணீர்ப் பாய்ச்சல் தான் முதற் கடமையாயிருந்தது. எனவே, கமத்திற்குப் புறப்பட்டேன்.

அவ்வேளையில்….

‘அம்பலம் அம்மான்’ கையிலே ஒரு கடதாசிச் சுருளுடன் என்னத்தேடி வந்தார்.

“வாருங்கள் அம்மான்! ஏதும் அலுவலா!” – வரவேற்று விசாரித்தேன்.

“ஓம் ராசா! இந்த இடாப்பை யொருக்கால் எழுதித்தா தம்பி!” – அவர் பதில் பகர்ந்தார்.

“மத்தியானம் போலே எழுதினாலென்னம்மான்….? வயலுக்குத் தண்ணீர். பாயுது..” – நான் மறுக்காமல் மறுத்தேன்.

“இண்டைக்குக் காலமை கட்டாயமாய்க் கொண்டரச் சொல்லி விதானை சொன்னவன் ராசா! நேரஞ் செல்லாது….. இரண்டெழுத் துத்தானே! கிறுக்கிவிடு அப்பு!” – அவர் வற்புறுத்தாமல் வற்புறுத் தினார்.

அதற்கு மேலும் மறுப்பது அழகல்லவென்று இடாப்பை வாங்கி நிரப்பினேன். பிரதான குடியிருப்பாளர் கையொப்பம் போட வேண்டிய இடத்தைச் சுட்டிக்காட்டினேன். வழமைப்படி ‘விரற்சீல்’ அடித்தபின் இடாப்பையும் கூப்பன்களையும் அம்பலம் மான் வாங்கிக் கொண்டார்.

“நீ வயலுக்குப் போகவேணு மெண்டு பறக்கிறாயப்பு! போய்வா, தம்பியை ஆறுதலாகக்…காணவேணும்! ஒரு அ…லு…வ…ல்…” – அவர் வசனத்தை ரப்பராக்கி, நோய் குணமின்றியே தலையையும் சொறிந்து காட்டினார்.

“அப்படியென்றால் பின்னேரம்….?”

“… கட்டாயம் வீட்டை வா ராசா! இப்ப உதிலை கொஞ்சம் வந்திட்டுப்போ…” – சிரசாலே ‘சிக்னல்’ காட்டி சிறிது தூரம் – அதாவது படலையடி வரையும் அழைத்துக் கொண்டு போனார்.

நிலத்தைக் காற் பெருவிரலாற் கிளறிக் கிளறி, கண்களை ஏறச்செருகி, நேருக்கு நேர் பார்க்காமல் எங்கேயோ பார்த்த வண்ணம், வியர்த்து விறுவிறுத்து, மரணவேதனைக்கு ஒத்திகை நடத்தி, குரலில் பீதியைத் தேக்கியவராக

“நானும் இந்தமுறை ‘நொம்பர்’ வேலை கேக்கிறன் ராசா….நேற்றுக் காசும் கட்டிப்போட்டன்” என்று சொன்னார்.

அவர் எமது வட்டாரத்துக்கு ஒரு அங்கத்துவ அபேட்சகராக கி.ச. தேர்தலில் போட்டியிடப் போவதைத் தான் இயன்றவரை சுருக்கி, ‘வீ.சி, மெம்பர்’ என்ற ஆங்கிலப் பதத்தை ‘நொம்பர்’ ஆக்கி அப்படிச் சொன்னாரென்று ஊகித்துக்கொண்டேன்.

“என்னம்மான் உங்களுடைய கதை….? நம்மூரில் போட்டியே வேண்டாமென்றல்லவா அன்றைக்கொரு பொதுக் கூட்டம் கூடி சுந்தரத்தை ஏகமனதாய்த் தெரிவு செய்து விட்டோம், ஏன் நீங்களுந் தானே அந்தக் கூட்டத்திலிருந்தீர்கள். அப்படியென்றால், உங்களு டைய விருப்பத்தைக் கூட்டத்திலே சொல்லியிருக்கலாமே!

“போனதடவை ‘துரைராசா’ வை அனுப்பினோம். அதற்கு முதல் முறை ‘ஐயாத்துரை’யை விட்டோம். இந்த முறை சுந்தரம். அடுத்த முறையும் அப்படித்தான். சில போது உங்களையே அனுப்பவுங்கூடும். பொதுநலசேவைக்குத் தகுதியான ஒவ்வொரு வருக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்படல் வேண்டும். அளித்தும் வருகிறோம். ஒரு பதவியை ஒருவரே சதாகாலமும் பார்க்கவேண்டு மென்கிற காலந்தான் மலையேறிவிட்டதேயம்மான்!

”பணத்தாலும் மதுவாலும் வாக்குரிமையை கொள்வனவு – விற்பனவு பண்ணி திறமைக்குச் சமாதிகட்டுவதற்காக ‘தேர்தல் போட்டிமுறை’ யைப் பயன்படுத்துவதிலும் பார்க்க நமது முறை சிறந்ததல்லவா அம்மான்! ஈழ நாட்டின் ஸ்தல ஸ்தாபன ஆட்சிச் சரித்திரத்திலேயே நம் வட்டாரத்துக்கு இது வரையில் தேர்தல் போட்டி நடைபெறவில்லையேயம்மான். அதையேன் நீங்கள் புதிதாக உண்டாக்குகிறீர்கள்? போட்டி மூலம் தெரிவு செய்தாலும் ஒருவரைத்தானே தேர்ந்தனுப்புவோம். அந்தத் தெரிவை போட்டி யில்லாமலே தெரிந்துவிட்டால் நேரமும் பணமும் மிச்சப்படுவ துடன் ஊரில் பகைமையும் வளராதல்லவா!

‘நீங்கள் போட்டிபோடுவது சரியில்லையம்மான். காசு கட்டினால் பரவாயில்லை. நியமனப் பத்திரத்தைத் தாக்கல் செய்யாமல் விட்டுவிடுங்கள். நான் சொல்லுவதில் பிழையிருந் தால் மன்னித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய அறிவுக்கெட்டிய வரையில் சிந்தித்துப்பாருங்கள் ….. இம்மாதிரி வேலைகளுக்கு சிறிதளவாவது படிப்பும் உலக அனுபவமும் உள்ளவர்கள் தான் போகவேண்டும். இன்னுஞ் சிறிது விளக்கமாகச் செல்வதென் றால் … ஒரு கிராமச்சங்கத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் எல்லா அங்கத்தவர்களுமே கிராமச்சங்கத்தலைவர் பதவியை வகிக்கத் தக்க தகுதியுடையவர்களாயிருக்க வேண்டும். அப்படியென்றால் தான் அந்தச் சங்கத்தில் ஊழல்கள் தலைக்காட்டாமல் நிர்வாகம் செவ்வனே நடை பெற்று கிராமங்கள் நலமடையும்……’

ஒரு குட்டிச் சொற்பொழிவாற்றிவிட்டு அம்மானின் அபிப் பிராயத்தை எதிர்நோக்கினேன். அம்மான் பேச்சை ஆரம்பித்தார்:

“அப்பிடிச் சொல்லாதை ராசா! படிச்சவங்களெல்லாம் இப்ப என்னத்தையப்பு வெட்டி நட்டவங்கள்…? வெண்டாலும் சரி தோத்தாலுஞ்சரி. எனக்கும் ஒரு ஆசையாய்க் கிடந்தது…”

“சரி! எப்படியோ நீங்கள் அங்கத்தவராகி விட்டீர்களென்று வைத்துக்கொள்வோம். உங்களாலே ‘சேமன்’ வேலை பார்க்க முடியுமோ?” – தனது முயலுக்கு மூன்றே கால்களென்று பிடி வாதம் பண்ணிய அம்மான், எனது கேள்விக்கு சரியான பதிலி றுக்காவிடினும் சப்பைக் கட்டுப் பதிலாவது தரமுடியாமல் திக்குமுக் காடினார்.

“சரி! எல்லாத்துக்கும் பின்னேரம் வீட்டுக்குவருகிறேன்… ஆறுதலாக கதைப்போம்” என்று அவரையும் அனுப்பி விட்டு நானும் கமத்திற்குப் போனேன்.

ஆயிரம் முட்டைகளிட்டுவிட்டும் ஆர்ப்பாட்டம் பண்ணாத ஆமையாக, தானுண்டு தன் கருமமுண்டென்று அடங்கி வாழ்ந்த அம்பலம் அம்மானையே ஆட்டும் பொழுது தான் ‘பதவியாசை’ யின் பரிபூரண வடிவந்தெரிகிறது.

அவரின் ஆசை, வன்னிநாட்டிலேயே ஒற்றுமையுள்ள கிராமென்று பெயரடிபட்ட எங்கள் ஊரின் மானத்தையல்லவா வாங்கப் பார்க்கிறது. எந்தப் பிரச்சினைகளையும் துப்பாக்கி முனை யிலே குண்டு வீசித் தீர்க்க முனையும், போட்டியும் பொறாமை யும் நிறைந்த நாகரிக மனிதர்கட்குச் சவால் விடுவதைப்போல, ஒற்றுமையின் சிகரத்திலே கூட்டுறவுக்கோர் முன் மாதிரியாகத் திகழ்ந்து வரும் நம் சிற்றூரின் ஒற்றுமையையல்லவா சின்னா பின்னமாக்கப் பார்க்கிறது.

அம்பலமம்மானின் நெஞ்சில் முகிழ்த்த இந்தத் தகாத ஆசைக்கு எந்தச் சுயநல புலிகள் வித்திட்டு வேடிக்கை பார்க்கிறார்களோ!

வயலுக்கு தண்ணீர் பாய்கிறவரையிலும் இவ்வண்ணமான சிந்தனைக் குமிழிகள் என்மனக் குளத்திலே தோன்றி மறைந்து கொண்டிருந்தன.

அன்று மாலை சுமார் எட்டு மணியளவில் அம்பலம்மானின் வீட்டுக்குச் சென்றேன். நான் ‘கேற்றடியில் போகும் பொழுதே, அம்மானுக்கும் மாமிக்குமிடையில் பலத்த விவாதமொன்று நடை பெறப் போகிறதென்பதை அவர்களின் ஆரம்பமொழிகள் கட்டி யங் கூறின.

அம்பலமம்மானின் ஆசையின் பிறப்பிடத்தையும் அடிப் படைக் காரணத்தையும்; அந்த விவாதம் வெளிப்படையாக்கப் போகிறதென்பதை – நூலின் பாயிரமாக – அவர்கள் முன்னுரை முரசறைந்தது.

எனக்கு என்றுமே ஒற்றுக் கேட்கும் பழக்கமில்லையென்ற பொழுதிலும், நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சந்தர்ப் பம் ஒற்றுக் கேட்க வைத்தேவிட்டது. ஓர் ஒதுக்குப் புறமாக கரந்துறைந்து கொண்டேன். அவர்களின் சர்ச்சை தொடங்கியது…

“காலைமை கோழி கூவப் போன நீ இவ்வளவு நேரமும் என்னணை செய்தாய்?”

“நான்… பழைய விதானையாரைக் கண்டாப் போலை….அவர்…”

“எந்தப் பழைய விதானையாரெணை?”

“எந்தப் பழைய விதானையார்?” கந்தனெண்ட கறுத்தப் பழைய விதானையார் – நம்மடை குணுவாயில் பழைய விதானை யாரை அவவுக்குத் தெரியுமெண்டோ…

“குணுவாய்ப்” பழைய விதானைார் என்னணை மொட்டந் தலைக்கு முடிசூட்டினவர் – இல்லைக் கேக்கிறன்!”

“இஞ்செர் கோவியாதை… கதையைக் கேளு! கேட்டுப் போட்டுப் பேந்து….”

“சரி சொல்லு”

“அவர் என்னை ‘நொம்பர்’ வேலை கேட்கச் சொல்லி முந்தாநாத்து ஒரே பிடியாப் பிடிச்சிட்டார். நானும் முகம் மறுக்க ஏலாமை வாக்குக் குடுத்திட்டன் ஏன் – உனக்கு ஒளிக்கவேணுமே? நேத்துக் காசும் கட்டிப் போட்டன்…”

”உனக்கேனணை உப்பிடி மூளை கெட்டுது? சொல்லுவார் சொன்னால் கேட்பவருக்கு மதியென்னணை….? அண்டைக் கெல்லோ ஊராக்கலெல்லா மொத்து அவன் சுந்தரப் பொடியனை போட்டியில்லாமை தெரிஞ்சு விட்டவை. இப்ப நீ போட்டி போடப் போறனெண்டால், அவனோடையில்லை ஊரவையோடை தான் போட்டி போடப் போறாய்! நல்லாய் யோசித்து பார்… ஒரு துண்டு உனக்குப் போடுவினமே நீ வெண்டாப் போலைத்தான்…”

“போட்டி போடத்தான்ரி போறேன் இந்த முறை நான் சுந்தரனை வெல்ல இல்லையென்றால் உன்ரை காலுச் செருப் பாலை அடி! ஊரவங்கள் புடுங்கி அடிக்கிறதையும் பாப்பமே. ஒரு துண்டுக்கு நூறு ரூபா குடுத்தென்றாலும் வெல்லத்தான் போறன்ரி சின்னாச்சி! இருந்து பார் உன்ரை சின்னக் கண்ணாலை…!”

“அது சரியெணை! உனக்கேனுந்த ஊர்ப்பொல்லாப்பு? நூறு உறுவாவென்னுறாய்… நூறு செப்புச் சல்லி உன்னட்டைக் கிடக்கேயெணை? பழைய விதானை உன்னைப் பேய்க்கூத்து ஆட்டுகிறான், நீயும் ஆடுகிறாய், ஆடு! ஆடு! ஆடி அரங்கேத்து”

“அந்தாளை உனக்குத் தெரியாதடி… அந்தாள் தங்கக்கம்பி. முந்தநாத்தும் நேத்தும் இண்டைக்கும் எனக்கு மட்டும் மூண்டு போத்தல் சீல் எடுத்துத் தந்தவர். நேத்துச் சுப்பனுக்கும் செல்ல னுக்கும் தலைக்கு இருவத்தஞ்சு உறுவாக் குடுத்துத்தான் எனக்கு உதவிக்கு விட்டவர், காசு கட்ட. ஒரு துண்டுக்கு நூறல்ல ஆயிரம் வந்தாலும் சில வழிச்சு உன்னை நொம்பராகக் காட்டி நான் முத்து வேலற்றை மகன் ராமலிங்கமில்லை. நீ இதொண்டையும் இருந்து பார் அம்பலம் எண்டு பெத்த புள்ளையின்ரை தலையிலையடிச்சுச் சத்தியம் பண்ணுகிறான் மனுஷன்”

“போனக் கிழமை புள்ளையள் பசியிலை கிடந்து சாகேக்கை கூப்பனுமெடுக்க வழியில்லையெண்டு ஒரு மரக்கால் நெல்லுத் தரச்சொல்லிக் கெஞ்சினபோது வராத இரக்கம் இப்ப வந்திட்டுதோ பழைய விதானைக்கு? அவன் உன்னை பேயனாக்கிறான்….”
“எடியே சத்தம் போடாதை மெல்லக் கதை….. அவர் இந்த முறை ‘சேமன்’ வேலை கேக்கப் போறார். சுந்தரன் நொப்பராய்ப் போனானென்றால் அவருக்குத் துண்டு போடமாட்டான். அதுக் குத்தான் என்னைப் புடிச்சவர். வேறை ஆக்களிலை அவருக்கு நம்பிக்கையில்லை. நான் மட்டுமில்லை இன்னம் ஏழு பேரை நொப்பராக்கிறதுக்கு மனுஷன் காசு சிலவழிச்சு வேலை செய்யுது… மனுஷன் கட்டாயம் வெல்லும். ‘நான் சேமனாய் போன னென்டால் பெரிய வேலைகளிலை நாலஞ்சை உனக்குத் தருவன் நீ ஆற்றையும் பேரிலை போட்டு செய். வாறதிலை எனக்கும் ஏதன் தரப்புறியமென்றால் தா’ எண்டு மனிசன் சொல்லுறான். நீ விசரி விசியம் விளங்காமை…! உதைச் சொல்லிறியே! அந்தப் பெரிய மனிசன் – இந்தச் சதம் பெறாத அலுவலுக்கு என்ரை கால்லை விழுந்து கும்பிடுறதெண்டால்? அவ கதை பேசுறா கதை…..

இந்தளவில அம்பலஅம்மானின் மகன் கோபால் குறுக்கிட்டு,

“எணை ஆச்சி! அப்பு பழைய விதானையாருக்கு நோட்டோ ஈடோ எழுதிக் குடுத்தவரெண்டு, மத்தியானம் செல்லம் மான் கதைச்சுதெணை…” என்று எரிகிற நெருப்பில் பெட்றோலைக்

கொட்டினான். மாமியைக் கேட்க வேண்டுமா?

“உன்-னாணை! மெய்யணை சண்டாள மனிசா! என்ன எழுதிக்குடுத்த நீ – என்னண்டு எழுதிக் குடுத்த நீ?”

“என்னண்டு – குள நண்டு! அவர் சிலவழிக் கிறாரெண்டால் நமக்கு மன அறிவில்லையே! நம்மடை கையிலையும் வேண் டாமே? அது தான் – அவர் வேண்டாமெண்டுதான் சொன்னவர் – அந்தப் புளியடித் துண்டை ஈடு போலக்காட்டி….”

“துலைச்சுத் தலைமுழுகிப் போட்டாயெண்டு சொல்லு! எத்தினை பவுணுக்கெணைவைச்ச நீ? ஆரட்டை எழுதினது?”

“நானென்ன பேயனே கனக்க வெய்க்கிறதுக்கு! நூறு பவுணுக்கு (ஆயிரம் ரூபாய்)த்தான் வெச்சநான். நம்மடை சித்தம்பலம் பிறக்கிறாசியார் தான் எழுதினவர்…”

“நாய்க்கு ஏழுகடலுக்கங் காலை புளியமிலை மட்டுக் காணிகிடக்குதெண்டு பழங்கதை. அதைப்போல ஆக உள்ள முதுசொம் அந்தப் புளியடித்துண்டு இரண்டு ஏக்கர்தான். அதுகும் முடிஞ்சிது மற்றவையைப் போல வதுவைக்காணி கீணியெடுத்து வெட்டிச்செய்ய உனக்குச்சதை காணாது. இரண்டு குமர் வீட் டோடை கிடந்து கிழடு பத்துதுகள். நண்டுங் குஞ்சுமாய்க் கிடக்கிற இந்தப் பச்சை மண்ணுகளை என்ன செய்யிறது? நாளைக்கு நீ கண்ணை மூடிவிட்டாயெண்டால் இதுகளின்ரை கெதியென்ன? அவர் நொம்பராப் போறாராம் நொம்பராய்…த்தூ! நீயும் ஒரு மனிசனே?”

“பொத்தடி வாயை! புள்ளைப் பெத்த எனக்கு வளக்கத் தெரியும்; கடன்பட்ட எனக்கு இறுக்கத்தெரியும். இந்தக் கட னெல்லாம் இரண்டு கொந்தராத்து வேலையோடை பறக்குமடீ சின்னாச்சி பறக்கும். காணி ஈடுவெச்ச கதைகிதை வெளியிலை வந்துதோ-? ‘மேடர்’ தான் செய்வன். ஓ! அவவுக்கு ஆளைத் தெரிய இல்லை..”

மாமிக்கு அடிப்பதற்கு எழும்பிய அம்மான் முற்றத்திலே குப்புற வீழ்ந்துவிட்டார். மீண்டும் எழும்புவதற்கு முற்றத்து முருங்கை மரத்தை ஊன்றுகோலாகப் பிடிப்பதற்கு அவர் பண் ணிய பிரம்மப்பிரயத்தனங்கள் வியர்த்தமாகி விட்டன. முருங்கை யைப் பிடிப்பதற்கு அவரால் முடியவே முடியவில்லை.

படுத்த படுக்கையிற் கிடந்தபடியே –

“மோனை! பெரியபுள்ளை! அந்தப் புள்ளிக்கோழிப் பேட்டை அறுத்துக் கறிகாச்சு! மத்தியானமும் சோறு தின்ன இல்லை ….. கெதியாய்க் காச்சு!” என்று, மூத்தமகள் கமலாவிடம் கேட்டுக்கொண்டார்…. வாந்தியெடுக்கவும் ஆரம்பித்துவிட்டார்…அறிய வேண்டியதனைத்தையும் அறிந்துவிட்ட நானும் வீடு சென்றேன்.

மறுநாள். அம்பலமம்மானின் தேர்தல் அபேட்சக விவ காரத்தைப் ஆலோசனைக்கெடுப்பதற்காக – சங்கப்பற்றுகளற்ற ஒரு பொதுக் கூட்டம் கூடினோம். அம்பலமம்மான், செல்லன், சுப்பன் மூவருக்கும் அழைப்பு விடுத்தும் அவர்கள் கூட்டத்திற்கு வரவில்லை.

நானும் வேறு சிலரும் தனிப்பட்ட முறையில் அம்மானைச் சந்தித்து தடுத்துப்பார்த்தோம். அவர் அசைந்து கொடுக்கவில்லை. அபேட்சகர் நியமனப் பத்திரத்தைத் தாக்கல் பண்ணி தேர்தல் போட்டிக் களத்தில் குதித்துவிட்டார்.

‘தேர்தலில் போட்டியிடுவது அவரின் உரிமை. அவரைப் போட்டியிட வேண்டாமென்று நாமேன் தடுக்க வேண்டும்? அவருக்குத் தகுந்த பதிலை மக்கள் கூறட்டும்’ என்று அவர் வழியில் விட்டுவிட்டோம்.

தேர்தல் பிரசாரம் அசுர வேகத்தில் நடைபெற்றது. எங்க ளுடைய வட்டாரத்தைச் சேராத பல ‘பெரிய புள்ளிகள்’ அம்மா னுக்காக இரவு பகலாக வேலை செய்தனர். அம்மான் காணி ஈடுவைத்தெடுத்த ஆயிரம் ரூபாவும் தண்ணீரில் போட்ட உப் பாகியது…. குறித்த தினத்திலே ‘போட்டி’ அமைதியாக நடந்தேறி யது. இரண்டாம் வட்டாரமாகிய எமது வட்டார அங்கத்தவராக சுந்தரம் அமோக வெற்றியீட்டினார்.

அம்பலமம்மானின் தேர்தல் சின்னமான ஆட்டுக்கு நேரே தவறுதலாகக் கூட யாரும் புள்ளடி போடவில்லை.

அதுமட்டுமல்ல – அம்மானின் அரசியல் குருவான முத்து வேலர் – இராமலிங்கம் என்னும் பழைய விதானையாரும் அங்கத் தவராக முடியவில்லை…

குறுக்குவழியிலே கி.ச.தலைவராக வருவதற்குக் கற்பனை பண்ணிய அவருடைய எண்ணக் கனவு, கனவாகவே கலைந்து விட்டது.

சூழ்ச்சி, சுயநலம், பதவிப்பித்துகள் படுதோல்விகண்டன. உண்மை , நேர்மை தகுதிகள் முழுவெற்றி பெற்றன.

பணத்தைக் கொண்டும், மதுவைக் கொண்டும் வாக்கு வேட்டையாடியவர்கள் மண்ணைக் கௌவினார்கள்.

வாக்குரிமையின் மகத்துவத்தை எமது வட்டார மக்கள் மட்டுமல்ல. எமது கிராமசபையைச் சேர்ந்த பதின்மூன்று வட்டார வாக்காளர்களுமே உணர்ந்து விட்டார்களென்பதை தேர்தல் போட்டிகள் தெளிவாக நிரூபித்துவிட்டன.

பழைய விதானையார் தோல்வியைக் கண்டு துஞ்சவில்லை. அவர் பாசி பிடித்த பணக்காரர். ஆயிரம் புள்ளிகளுடைய மானுக்கு ஒரு புள்ளி குறைந்ததினால் குடி முழுவிடும்?

அம்பலமம்மான் – எருமை மாட்டைக் கண்டு, அந்தளவு தானும் வரவேண்டுமென்று மூச்சுப்பிடித்து முக்கிய தவளை….

“அடியே அடியே! அலுவலைப் பாரடி! உந்த நூறு பவு ணும் இரண்டு கொந்தறாத்து வேலையோடை என்ரை சேமன் எடுத்துத் தருவாரடி… என்ரை பழைய விதானையார், முத்து வேலர் – இராமலிங்கம் சேமனாயிருக்கும் போது எனக்கென்னடி பயம்?”

இவ்வாறாக……. அம்பலமம்மான் பேசியும் அழுதும் சிரித்தும், மலைப்பிஞ்சுகளை எடுத்தெறிந்து விளையாடியும்

வருவதாக ஊரிலே கதையடிபட்டது.

“எனக்கு விசரெண்டு எந்த விசரன் சொன்னவன்… இல்லைக் கேக்கிறன்?”

இப்படியாக அம்பலமம்மான் மற்றவர்களைக் கேட்பது முண்டு. கேட்கிறார்.

– முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள், முதற் பதிப்பு: மாசி 2010, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *