கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 9, 2021
பார்வையிட்டோர்: 2,668 
 
 

நம்மில் பலர் கடவுளை நம்புகிறோமோ இல்லையோ, ஆனால் அவரை நம்முடைய வசதிக்கு ஏற்ப உபயோகப்படுத்திக் கொள்கிறோம். பல சந்தர்ப்பங்களில் பொய்யாக கடவுள் மீது அதீத பக்தி காட்டி மற்றவர்களை நாம் நம்ப வைக்கிறோம்.

அதுவும் இந்தியா மாதிரி ஒரு பெரிய நாட்டில் பல கடவுள்கள், பல நம்பிக்கைகள்.

யூ எஸ் போக விஸா வேண்டுமா? அதற்கென்று ஒரு பெருமாள் ஹைதராபாத்தில் இருக்கிறார். அவரிடம் வேண்டிக் கொண்டால் விஸா கிடைத்துவிடும் என்று ஒரு நம்பிக்கை. ஸ்ரீரங்கம் தன்வந்திரியை வேண்டினால் உடம்பு எப்போதும் செளக்கியமாக இருக்கும் என்று மற்றொரு நம்பிக்கை. இப்படி நம்மிடையே பலப்பல நம்பிக்கைக் கடவுள்கள்…

ஒருமுறை, புலவர் கீரன் தஞ்சாவூர் காமாட்ஷி அம்மன் கோவிலில் தொடர்ந்து பல நாட்களாக இரவில் ராமாயண புராணத்தை கதா காலட்சேபமாக விலாவாரியாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

அதைத் தினமும் ஒரு பெண்மணி விடாது முன் வரிசையில் அமர்ந்து கேட்டு வந்தாள். இதைப் புலவர் கீரனும் நன்கு அறிவார். கடைசி நாள் கதா காலட்சேபம் முடிந்ததும், அந்தப்பெண் மேடையேறி புலவர் கீரனை சந்தித்து கண்கள் கலங்கியபடி, “அடுத்து எப்போது கதை சொல்ல இங்கு வருவீர்கள்?” என்று அக்கறையுடன் வினவினாள்.

அவளது ஆர்வத்தைப் பார்த்து வியந்த கீரன், “நான் என்ன அப்படி பிரமாதமாகவா சொன்னேன்? தாங்களை தினமும் முன்வரிசையில் பார்த்தேன்…” என்றார்.

அதற்கு அவள் வெள்ளந்தியாக, “ஆமாம், என் மாமியார் தொல்லையில் இருந்து மீள, நான் தினமும் இங்கு தவறாது வந்துவிடுவேன்…” என்றாள்.

கீரன் அதிர்ந்து போனார்.

என் நண்பன் ஒருவன் கடந்த பத்து வருடங்களாக சபரிமலைக்கு விடாது போய் வந்தான்.

நான் அவனிடம் “பத்து வருடங்களாக மலைக்கு விடாது போய்வரும் உன் பக்தியை மெச்சுகிறேன்…” என்றேன்…

“அட நீ வேற… பக்தியாவது சுண்டைக்காயாவது!! வருடா வருடம் நண்பர்களுடன் எங்காவது பிக்னிக் போய் வருகிறேன் என்றால் என் பெண்டாட்டி என்னை செருப்பால் அடிப்பாள்; அதையே பக்தி என்று சொல்லி மலைக்கு பிக்னிக் போனால், கையில் பணம் கொடுத்து என்னை மரியாதையுடன் நமஸ்கரித்து அனுப்பி வைப்பாள்… நாங்க ப்ரெண்ட்ஸ் எல்லாரும் மலைக்கு போகும்போதும் சரி, திரும்பி வரும்போதும் சரி, எப்போதும் மப்பில்தான் திளைப்போம்… “ என்றான்.

நம்மிடையே பலருக்கு கடவுள் இருக்கிறாரா என்கிற சந்தேகம் இன்னமும்கூட இருக்கிறது.

நம்மில் பெரும் பாலோருக்கு இந்த மிகச்சிறிய கிரகத்தில் உள்ள ஒரு சிறிய நாடான நமது நாட்டின் பிரதமரையே நேரில் பார்க்க முடியாது.

அப்படி இருக்க, எப்படி பல கோடி அண்டங்கள் உள்ள பிரபஞ்சத்தில் அதன் அதிபரான கடவுளைப் பார்க்க முடியும்? கடவுள் நமது வேலைக்காரன் இல்லை. நம் முன்னால் நாம் விரும்பும் போதெல்லாம் அவர் நம்மிடையே வருவதற்கு!

அவரை நாம் பார்க்க விரும்பினால், அவரது நிபந்தனைகளை நாம் ஏற்று ஒப்புக்கொள்ள வேண்டும்.

நீங்கள் சீனாவைப் பார்த்திருக்கிறீர்களா? இல்லை என்றாலும்கூட, அதைப் பார்க்காத போதிலும்கூட, சீனா என்கிற ஒரு நாடு இருக்கிறதை நீங்கள் நம்புகிறீர்கள். சீனாவைக் கண்ட மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலக வரை படங்கள் அதிகார பூர்வமாக இருப்பதைக் கொண்டு அதை ஒப்புக்கொள்ள நீங்கள் தயார்.

அப்படி இருக்க, அனைத்திற்கும் மேலான பரம புருஷனான கிருஷ்ணரை பல்லாயிரம் முறைகள் தனது அசல் உருவத்தில் அதே உடலுடன் தோன்றி, ஒவ்வொரு முறையும் தானே மேலான பரம புருஷன் என்று நிரூபித்தவரை சனாதனமாக என்றும் இருக்கும் வேத நூல்களின் பிரமாணத்தைக் கொண்டு, அவரை ஏன் ஒப்புக்கொள்ளக் கூடாது? கிருஷ்ணரை தரிசித்த கோடிக்கணக்கான வேதத்தைக் கடைப்பிடிப்போர் கூறுவதை ஏன் அதிகார பூர்வமானதாக ஒப்புக்கொள்ளக் கூடாது?

கடவுள் இருக்கிறார் என்பதற்கு என்ன ஆதாரம்? விஞ்ஞானிகளும் நாத்திகர்களும் கடவுள் இல்லை என்று கூறுகிறார்கள்.

எந்த ஒரு விஞ்ஞானியாவது உயிரை உருவாக்க முடியுமா? கடவுள் பலகோடி உயிரினங்களைப் பல்வேறு வடிவங்களில் படைக்கிறார். இதுவே கடவுள் இருப்பதற்கான ஆதாரம்.

இந்தப் பூமியில் ஒவ்வொன்றும் உயிரினங்களாலேயே பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பூமிக்கு அப்பாற்பட்ட கிரகங்களை யார் பராமரித்து வருகிறார்? இதுவே கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்.

எந்த ஒரு விஞ்ஞானியாலாவது பழங்களை உருவாக்கும் மரங்களையும் காய்கறிகளையும் உருவாக்க முடியுமா?

பசுவானது புல்லையும் நீரையும் எடுத்துக் கொள்கிறது. அதைப் பாலாகத் தருகிறது. எந்த ஒரு விஞ்ஞானியாலாவது இதைச் செய்ய முடியுமா? இதுவே கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்.

சூரியன் ஒரு நிமிடத்தில் உருவாக்கும் வெப்பத்தை உருவாக்க நான்காயிரம் லட்சம் அணு ஆயுதங்களாலேயே முடியும். இப்படி கோடிக்கணக்கான ஆண்டுகளாக சூரியன் வெப்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறான் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். விஞ்ஞானிகள் இதேபோல் ஒரே ஒரு வினாடி மட்டும் வெப்பத்தை உருவாக்கிக் காட்ட முடியுமா? இதுவே கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்.

சூரியன் நேரத்திற்கு உதிக்கிறான்; நேரத்திற்கு அஸ்தமிக்கிறான். பருவங்கள் வருகின்றன. உரிய காலத்தில் போகின்றன, மாறுகின்றன. இது என்ன தற்செயல் நிகழ்வா?

மனிதன் உட்பட பலகோடி ஜீவராசிகளின் கால்கள் நூறு சதவீதம் ஒரே மாதரியாக ஒரே அளவுடன்தான் இருக்கின்றன. இது என்ன தற்செயல் நிகழ்வா?

ஏன் பல்வேறு விதமான ஜீவராசிகள் உள்ளன? மனிதன் ஒருவனால் தரப்படும் மூலப் பொருட்கள் இல்லாமல் ஒரு உற்பத்தி நிறுவனம் எதையாவது தயாரிக்க முடியுமா? இதுவே கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்.

ஒவ்வொரு மனிதனின் முகமும் தனித்தன்மையுடன் இருக்கிறது. இது என்ன தற்செயல் நிகழ்வா? தவிர, மனித உடலானது இரு பாதிகளிலும் சமச்சீராக இருக்கிறது. அதாவது இரு பகுதிகளும் ஒரே மாதிரியாக உள்ளது. இது எவ்வளவு அற்புதமான வடிவமைப்பு?

ஒரு கழுதை ஏன் மனிதன் போல சிந்திப்பதில்லை? ஒரு மனிதன் ஏன் கழுதை போல சிந்திப்பதில்லை?

நீங்கள் சில செங்கற்களை தரையில் தூக்கிப் போட்டால் அவை ஒரு வீடாக மாறிவிடுமா? ஒரு உயிருள்ள மனித ஆத்மா இல்லாமல் வெறும் செங்கற்கள் எதுவாகவும் ஆக முடியாது. அணுக்கள் சில ஒன்றிணைந்து அணுக்கூறுகளாக மாறுவது என்பது தற்செயல் நிகழ்வா என்ன?

கண்டிப்பாக இல்லை. ஒவ்வொரு அணுவிலும் உறையும் இறைவனே – கிருஷ்ணரே அணுக்களை குறிப்பிட்ட மூலக்கூறுகளாக உருவாக்குகிறார்.

கடவுள் என்பது மிகச்சிறந்த மனித நம்பிக்கை. It is a very good concept in all our religions. இந்த நம்பிக்கை இருப்பதனால்தான் நம்மிடையே வெகுவாக குற்றங்கள் குறைந்து இன்னமும் நேர்கோட்டில் வாழ்பவர்கள் மிக அதிகம்.

என் பெயர் எஸ்.கண்ணன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்'…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *