கடவுள் வாழ்த்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 27, 2021
பார்வையிட்டோர்: 1,822 
 

திருக்குறள் கதைகள்

முகவுரை

இந்த இருபதாம் நூற்றாண்டில் மற்றகாட்டு அறி வுடை மக்கள் அடைந்திருக்கின்ற ஆட்சி நலவுரிமையை இந்தியரும் அடையப் பெருமுயற்சி யெடுத்தவர் மகாத்மா காந்தியடிகள். பிரிவுற்ற இந்தியா முறிவற்று ஒருமையுற உழைத்த அடிகளின் தூய உட்கோளைத் தன் மனக் கோளுக்கு மாறென்று எண்ணி வெறிகொண்ட விநாயக நாதுராம் கோட்ஸே, இறைவனைத் தொழும் தூய வேளை யிலே சுட்டுக் கொண்றான். அந்நாள் 1948 ஜனவரி 30s வெள்ளி மாலை. இந்நாள், நாட்டு வரலாற்றில் சிவப் பெழுத்தாற் பொறித்து வருந்தத்தக்கதொன்றாம்.

உலகத்தார் உள்ளத்துளெல்லாம் விளங்குகின்ற பொய்யா விளக்காகிய காந்தியடிகளுக்கு ஒப்பாவார் திரு வள்ளுவரேயாவார் என்பதனைத் தருமபுர ஆதீன் மகா சந்நிதானமவர்கள் திருவுள்ளத் தடைத்து உலகப் பொது நூலாகிய திருக்குறளை வெளியிடத் திருவுள்ளங் கொண் டார்கள். இளைஞர்கள் யாவர்க்கும் எளிய முறையிற் பயன்பட வேண்டுமென்று எண்ணினார்கள். நம் மாகா ணக்கல்வி யமைச்சர் திரு , அவினாசிலிங்கஞ் செட்டியார் அவர்கள் கல்வித்துறையில் அமைத்துத்தந்த புதிய முறை நினைவுக்கு வந்தது.

அரசாங்கப் பாடத்திட்டப்படி நான்காம் பாரத்திற்குப் பொறுக்கபெற்ற குறள் கட்கு எளிய வுரையும், இனிய கதையும் அமையுமாறு எழுதும்படி, சிதம்பரம் வித்துவான் திரு, சேதுசுப்பிரமணியபிள்ளை அவர்கட்கு ஆணை தந்தார்கள். அவ்வண்ணம் மகாசந்நிதானமவர்கள் ஆணைக்கிணங்க எழுதப்பெற்ற இந்நூல் காந்தியடிகள் நாள் மலராக வெளிவருகிறது. ஓதற் கெளிமையும், உணர் தற்கருமையு முடைய வேதப் பொருளை விளக்குந் திருக் குறட் பெருமையை அறியும் எவர் தாம் இத்தகைய நூலைப் படித்துப் போற்ற முன்வரா மலிருப்பர்?

இந்நினைவுமலர் வெளியீட்டுக்கு முன்னுரை யொன்று எழுதப் பணித்த தருமையா தீன 25-வது மகாசந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் துணைப்பொன்னடி மலர்க்கு. என் மனமார்ந்த வணக்கத்தைப் பணிவுடன் செலுத்துகின்றேன்.

அருளறம் பூண்டே அனைத்துலகும் ஆண்ட தெருளுளம் தாங்குந் திருவன் – பொருள்வளர் இந்தியர்க் காட்சி நலம் எய்துவித்த காந்தியடி சிந்திப்போம் வந்திப்போம் சேர்ந்து.

புலவரகம்
மயிலாடு துறை
28-1-1949

அன்பும் பணிவுமிக்க,
வித்துவான்
பு.சி.புன்னைவனநாத முதலியார்,
துணைத்தலைவர், கீழ்த்திசைப்பல்கலைக்கல்லூரி
தருமபுர ஆதீனம்.

கடவுள் வாழ்த்து

சண்முகசிகாமணிக் கவிராயருக்கும் சிவகாம சுந்தரி அம்மையாருக்கும் சுமார் முன்னூறு ஆண்டு களுக்கு முன்பு புதல்வராய்த் தோன்றினார் குமர குருபரர். இவர் ஐந்து வயது . வரை ஊமையாய் இருந்து பின் செந்தூர் முருகன் அருளால் ஊமை நீங்கி எல்லாக் கலைகளிலும் வல்லவர் ஆனார். தம் கல்வித்திறமையைப் பல இடங்களிலும் அறிவித்து வெற்றிபெற்ற இவர் தருமபுரத்தை அடைந்தார். அதுசமயம் அங்குக் குருபீடத்தில் அமர்ந்திருந்தவர் மாசிலாமணித் தேசிகர் அவர்கள். தேசிகரவர்கள் இவர் வருகையைக் கண்டு “ஐந்து அறிவையும் * கண்கள் கொள்வதெப்படி?’, என்றார்கள். அக்

கேள்விக்கு விடை தெரியாமையால் “முருகன் அருளால் கிடைத்த கல்வியை அறிந்ததினால் உண்டாகிய பயன் இவர் பாதத்தை வணங்குதலே” என்று பணிந்து அவரையே குருவாகக்கொண்டு

(அறியாத கலைகள்) யாவற்றையும் அறிந்தார். அறிந்ததற்குப் பயனாகத் தாம் “பண்டாரமும்மணிக் கோவை’ என்ற நூலையும் இயற்றினார்.

தில்லையில் பிறந்து வாழ்ந்த மணியனுக்குக் காஞ்சிபுரத்தில் வாழும் காலம் வந்தது. இக் காலத்தில் இவன் குடும்பத்தையெல்லாம் தில்லையி லேயே வைத்து இவன் மட்டும் தனியே காஞ்சியில் வாழலானான். இவ்விதம் வாழும் பொழுது “தில்லைக் குச் செல்லவேண்டும்” என்று பலவித முயற்சிகள் செய்தும் அவையாவும் பயன்படாமல் போயின. அச்சமயம், சிலர் “கலியுக தெய்வமாக விளங்கும் செந்தில் முருகனைப்போய் வழிபட்டால் பயன் கூடும்” என்றார்கள். அன்பர்கள் சொற்படி செந்தி லாண்டவனைத் தொழுதான். தொழும்நேரத்தில் ஒரு எண்ணம் தோன்றியது. ‘இக்குமரன் அருள் பெற்ற குமரகுருபரர் பணிந்த இடத்தைப் பணிய வேண்டும்” என்பதே ஆகும். இவ் வெண்ணத்தையே துணையாகக்கொண்டு தருமபுரத்தை அடைந்தான். உட்செல்லும்பொழுது மாசிலாமணித் தேசிகர் வழிமுதலாகவந்த 25-வது மகாசந்நிதான மவர்கள் பூசையை முடித்து வெளியே வந்தார்கள்.

அவர்கள் திருவடிகளில் விழுந்து,

“இருபான் ஐந்தாய் எய்திய இறைவ!
மூவாக் குழவியின் மூகையைத் தவிர்த்த
குமரன் சொற்குக் குருவெனக் கண்ட
வழிமுதல் வந்த ஒருபெருந் தலைவ!”

என்ற அடிகளைப்பாடி, ஏனைய வரிகளில் அவன் குறையும் அமைத்துப் பாடிய பாடலைத் திருவடிக் குக் காணிக்கையாகச் செலுத்தினான். அவனைக் குறிப்பாலுணர்ந்த அவர்கள், “எழுந்திரு. இன்னும் ஒருதிங்களில் தில்லையை அடைவாய்” என்று அருளி யதோடு திருநீறும் அளித்தார்கள். பிறவியிலே தோன்றித் தன்னை வாட்டி வரும் நோயைத் தீர்க்கும் மருந்தாகிய பொருளையும் வழங்கினார்கள். வழங்கிய பொருளைப்பெற்ற மணியன் “தன் பிறவி நோயைத் தீர்க்கும் மருந்து இப்பாதமே” என்று தெளிந்து இத்தனை நாள் பாழாய்ப்போயிற்றே என்று வருந்தி மீண்டும் ஒருமுறை பணிந்து காஞ்சியை அடைந்தான். அத்தெய்வம் அருளிய படி அக்கால எல்லைக்குள் (1947 டிசம்பர்மீ 15ம்நாள்) தில்லையில் குடும்பத்தோடு வாழும் செல்வத் தையும் அடைந்தான். அன்று முதல் பாதம் பணி தலே கல்வி அறிவின் பயன் என்று அல்லும் பகலுமாகிய எந்நேரமும் அவர்கள் பாதத்தையே எண்ணி வழிபட்டு வருகிறான். இக்கருத்து மக்களுக்கு விளங்க வள்ளுவரும் கூறியுள்ளார்.

கற்றதனால் ஆய பயன்என்கொல்; வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

வாலறிவன் = உண்மை அறிவை உடையவனது
நன்மை தாள் – (பிறவிப்பிணியைத் தீர்க்கும்) நல்ல (மருந்தாகிய) பாதங்களை
தொழார் எனின் = வணங்கார் என்றால்
கற்றதனால் = (அவர்கள் பல அறிவு நூல்களையும்) படித்ததினால்
ஆய = உண்டாகிய
பயன் என் = நன்மையாது? (ஒன்றுமில்லை)

கருத்து: கல்விக்குப் பயன் அறிவு அடைதல்; அறி விற்குப் பயன், இறைவன் பாதத்தை வணங்கு தலாம்.

கேள்வி: கல்வி அறிவின் பயனை அடைந்தவர் எவர்?

இலக்கணம்: தொழா அர்:- உயிரளபெடை; எவன் என்னும் வினாப்பெயர் என் என்றாய் இல்லை என்னும் பொருளைக் குறித்தது.

– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.

Print Friendly, PDF & Email

விடியல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2023

சோதனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2023

யார் முதல்வன்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)