வாழ்வும் ஒரு வலைப் பந்தாட்டம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 27, 2021
பார்வையிட்டோர்: 3,866 
 

(1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முந்தின விடுமுறை நாளின் மகிழ்வை நினைத்து ஏங்கி, மறு நாள் பிறந்தும் விடுபடாத துயரில் மூழ்க்கிக் கிடக்கும் இந்தத் திங்கட்கிழமை, பல சமயங்களில் இவளுக்கு வெகு துயரம் மிக்கதாய் இருந்திருக்கிறது.

அவற்றைப் போலில்லாமல் இந்தத் திங்கட்கிழமை மாலை உற்சாகம் நிறைந்ததாய்த் தொடங்கியிருப்பது போலவே, உற்சாகம் நிறைந்து முடியவேண்டும் என்று அவள் மனதார விரும்பினாள். இறைவனை வேண்டினாள்.

இலை துளிர் காலத்து அறிகுறியாய் மைதானத்தைச் சுற்றியிருந்த பெரு மரங்கள் யாவும் பூத்து நிறைந்திருந்தன. அருகே நிற்பவர்களை மணம் வீசி மகிழ்வித்தன. இந்தப் பருவகால விதிகள் அவளுக்கு நிறையவே பிடிக்கும்!

வலைப் பந்தாட்ட விதிகளும் கூடத்தான் !

மையத்தில் நின்று விளையாடும் தேவகி அபாரமாக ஆடிக்கொண்டிருந்தாள்! அவளிடம் வருகின்ற பந்துகள் யாவும் பெரும்பாலும் தவறாமல் சிறை தாக்கு வோளிடம் சென்று பேற்றுக் கெய்யும் மதிவதனியிடம் சென்று கொண்டிருந்தன. மதிவதனி கொக்கு’ என்ற பிரபலமான அவளது பட்டத்திற்குப் பொருத்தமாய் நல்ல உயரம் ! அவளிடம் பந்து போய்விட்டால் … நின்ற நிலையில் எட்டிப் போட்டால் போதும்! பந்து தவறாமல் வளையத்தினூடாக விழுந்து கை தட்டலைப் பெற்றுக் கொள்ளும்.

இன்றைய வெற்றி எப்படியும் அவளது கல்லூரிக்குத் தான் வரும்! வரவேண்டும்! இல்லாவிட்டால்….?

“என்ன மிஸ் …… ரங்காதரன் …. இண்டைக்கு நாங்கள் வெல்லுவமோ?” இறுதிப் போட்டியைப் பார்ப்பதற்குத் தானாகவே ஆர்வம் கொண்டு சைக்கிளில் வந்திருந்த நல்லநாதன் மாஸ்டர் அருகில் வந்து கேட்டார்.

“எங்கடை வெற்றியைப் பொறுக்க மாட்டாமல் அவையின்ரை ஆக்கள் இடையிலை ‘கிறவுண்சிலை’ பூந்து குழப்பியடிக்காட்டில் போதும்…. அசைக் கேலாது எங்கடை வெற்றியை …”

தீர்க்கமான நம்பிக்கையுடன் கூறிக் கொண்டே ‘ஸ்கோர் போர்ட்’ டைப் பார்த்தாள்.

ஐந்துக்கு ஆறு!

ஆட்டம் ஆரம்பித்து ஏழு நிமிடங்கள் முடிந்த நிலையில் எதிரணிதான் முன்னுக்கு நின்றது ! ஆயினும் அவளுக்கு அபரிமிதமான நம்பிக்கை !

“கஷ்டம் போலை கிடக்கு, என்ன?..” நல்லநாதன் மாஸ்டர் கேட்டார். இவள் மௌனமானாள். நல்லதை எதிர்பார்த்துக் கூடப் பழக்கமில்லாத ஆசிரியர்கள் ! தான் நம்பும் போது மற்றவர்களை நம்பவைக்க வேண்டியது என்ன நிர்ப்பந்தம் என்ற கேள்வி மனதில் தோன்ற அமைதி பெற்றாள்.

எதிரணியின் மைய ஆட்டக்காரியான பிள்ளை குறி வட்டத்தினுள் வந்து பந்தைப் பிடித்து வேகமாய் தமது பேற்றுக் கம்பத்தின் பக்கமாய் வீசி எறிந்தாள். மைய ஆட்டக்காரி குறி வட்டத்துனுள் வரலாமா? இவளுக்குக் கண்களில் புன்னகை மறைந்து சிறிது எரிச்சல் தெரிந்தது. நடுவர் இந்த நிகழ்வுக்கு ‘விசில்’ ஒலிக்கவில்லை. ஒரு வேளை காணாமல் இருக்கலாம். சில வேளை கண்டும் காணாதது போல் இருக்கலாம்.

மனதில் தோன்றிய அரிப்புணர்வை மெதுவாகத் துடைத்தெறிந்து விட்டுத் தொடர்ந்து ஆட்டத்தைக் கவனித்தாள்.

எதிரணி மாணவி ஒருத்தி பிடித்த பந்து கைதவறி விழுந்து கொண்டிருக்கையில் ஜானகி எடுத்தெறிந்தாள். வெளியே நின்ற பார்வையாளர் சிலர் சத்தமிடத் தொடங்கினர்.

“தட்டிப் பறிக்கவே வந்தனீங்கள்?” “அம்பயர் எவ்வளவு லஞ்சம் வாங்கினீர்?”

“நிப்பாட்டு விளையாட்டை….” பலமாய் எழுப்பப்பட்ட கோஷங்கள் சிறிது நேரத்தில் மெதுவாக ஓய்ந்தன. கோஷங்கள் நீதியை அநீதியாயும், உண்மையைப் பொய்யாகவும் மாற்றி விடுமோ? மாற்றி விடும் போலத்தான் தெரிந்தது.

உள்ளத்தின் அடித்தளத்தில் தோன்றிய எதிர்ப்புணர்வை மிக நிதானத்துடன் சமாளித்துக் கொண்டாள். நிமிர்ந்து பார்த்தாள். நீலவானில் வெண் மேக பிசிறுகள் ஒன்றை ஒன்று துரத்திச் சென்றன.

துரத்துகின்ற நினைவுகளின் துயர் மனதில் ….! இன்று மட்டும் வென்று விட்டால், பழைய துயரங்கள் யாவும் மறைந்து விடும்.

தமிழ்ப் பெண்ணாய்ப் பிறந்ததில், உயர்கல்வி வாய்ப்புகளின் கதவுகள் தரப்படுத்தல் என்ற கோலினால் தாழிடப்பட்டிருந்த நிலையில் தான் புத்தி ஜீவியான அவள் ஒரு ஆசிரியையாக நேர்ந்தது. அது ஒரு வகையில் ஒரு விபத்துத்தான் !

ஆயினும் ஆசிரியையாக வந்த பிறகு, டெலிவிஷனில் தோன்றும் வெறும் விம்பம் போல இருக்க அவள் விரும்பியதில்லை. தன்னால் முடிந்த எதையும் கல்லூரிக்காகச் செய்யும் உயிர்ப்புள்ள ஜீவனாக இருக்க வேண்டும் என்ற நினைவு அவளுக்குள் எப்போதும் இருந்தது.

இதுவரை தோல்விகள் என்ற நிழல்களைத் துரத்தியே வந்த வாழ்வாக இருந்த போதிலும், இனிமேலாவது மனதுக்கு நிறைவாய் ஏதோ செய்ய வேண்டும்.

கல்லூரிக்கு இவளைப் போலவே புதிதாக வந்த அதிபர் ஒரு ஆசிரியர் கூட்டத்தில் சொன்னார்.

“கடந்த சில வருடங்களாக எமது கல்லூரியின் வலைப்பந்தாட்ட அணி சிறப்பாக இல்லை. நாங்கள் மாவட்டப் போட்டிகளில் பங்கு பெறவில்லை. பங்குபற்றிய ஓரிரு சிநேக பூர்வமான போட்டிகளிலும் வெற்றி பெறவில்லை. இவ்வருடம் இந்த அணியைப் புத்துயிர் பெறச் செய்ய வேண்டும். ஒரு சுறுசுறுப்பான இளம் ஆசிரியை இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும் யார் விரும்பி ஏற்றுக் கொள்வீர்கள்?”

மௌனத்தின் சிறப்பை யுணர்ந்து எல்லா ஆசிரியைகளும் வாய்திறவாமல் உட்கார்ந்திருந்தார்கள். இவளுந்தான்!

இருக்கும் வேலைகள் போதாதென்று. ‘வலைப்பந்தாட்டப் பொறுப்பாசிரியை’ என்று இன்னொரு பதவியையும் வாங்கிக்கொண்டு பின்னர், பதவி என்று சுமப்பதா? சிலுவை என்று சுமப்பதா?

ஒருவரும் ஏற்றுக் கொள்ளாத நிலையில், புதிய ஆசிரியையான, இவளின் தயக்கத்தை அதிபர் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

“ரீச்சர்….. மிஸ் ரங்காதரன் ….. உங்களைத்தான் … இந்தப் பொறுப்பை எப்படியும் நீங்கள் தான் ஏற்றுக் கொள்ள வேணும். முடியாதெண்டு சொல்ல முடியாது …. கல்லூரி நன்மைக்காண்டித்தான் கேக்கிறான் …..”

புதிய அதிபர் கல்லூரியில் சில நல்ல முன்னேற்றங்களை விரும்புகிறார் ! ஆசிரியர்கள் எல்லாரும் அவரை நட்டாற்றில் கைவிடுவதும் பிழைதான். அவள் ஏற்றுக் கொண்டாள்.

அதன் பின்னர் சூறைக் காற்றில் அகப்பட்ட தளிர் மாதிரி… அவள் பட்ட பாடுகள்!

எல்லாப் புண்களும் இன்றைய வெற்றியால் மறைந்து போகும்! இடைவேளைக்கு ஐந்து நிமிடங்களேயிருக்கையில் ……. ‘ஸ்கோர் போர்ட் ஒன்பது பதினொன்று காட்டுவதால் மனம் சிறிது சஞ்சலப்படுகின்றது. ஒரு வேளை தோற்றுப் போய் விடுவோமோ?

தோல்வியை ஏற்றுக் கொள்வது ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறது? பாதுகாப்பு உணர்வு இல்லாதவர்கள் தான் கலைஞர்களாகிறார்கள் என்று எங்கோ வாசித்த நினைவு !

தோல்வியை ஏற்றுக் கொள்ள விரும்பாதவர்கள் தான் விளையாட்டில் அக்கறை கொள்கிறார்களா?

இவர்களின் பேற்றுக் கம்பத்தின் பக்கமாய் வேகமாய் வரும் பந்தை மதிவதனி பிடிக்கப்போகும் போது, துள்ளிப்பாய்ந்து வந்த எதிராளி ஒருத்தி மதிவதனியின் கால்களை முழங்கால் கொடுத்துத் தடக்கி மடக்கி விட்டாள். அவள் இடறிக் கீழே விழ பந்து எதிரணிக்குச் சென்றது.

மனதிற்குள் எரிந்தது இவளுக்கு ! வாழ்க்கையிலும் செய்கிறார்கள்! இங்கும் செய்கிறார்கள்! ஒரே மனிதர்கள், அதே மனிதர்களின் பிள்ளைகள் !

போட்டிக்குப் பொறுப்பாக இருந்த உயர் அதிகாரியிடம் சென்றாள். மிகவும் தீட்சண்யமான பார்வை இவளுக்கு ! அப்பார்வைக்கு அவரது எலும்புக்கூடு நிச்சயம் உதிர்ந்திருக்க வேண்டும். உதிராத படியால் அவர் நிமிர்ந்து கேட்டார்.

“என்ன மிஸ்…? என்ன பிரச்சினை?”

“காலைத் தடக்கி விழுத்தியினம், வேணு மென்டு இடிக்கினம். வெளியாக்கள் அம்பயரைக் குழப்பினம்…… ஃபவுல் கேம் விளையாடினம்.. எல்லாத்துக்கும் அம்பயர்ஸ் பேசாமல் நிண்டால் … இதென்ன சேர் விளையாட்டு ……….?”

கால்களின் இடையில் வாலைச் செருகும் நாயின் பணிவுடன் தான் கேட்டாள்.

“அதுக் கொண்டும் செய்யேலாது. அம்பயரின்ரை தீர்ப்புத்தான் முடிவு. என்னோடை கதைக்க வரப்பிடாது .. பொம்பிளையளோடை பெரிய கரைச்சல் ….”

அவர் சிறிய குட்டி நாய் போல் ‘வள்ளென்று பாய்ந்தார். அவர் கண்கள் வழக்கம் போலவே, எல்லாப் போட்டிகளின் போதும் இருப்பது போலவே, சிவந்திருந்தன!

சொல்லை மிஞ்சிய மொழி கண்ணீர். அந்த மொழியின் உதவியுடன் இவள் திரும்பி வந்தாள். அதிபர் வந்திருந்தால் அவரிடம் முறைப்பட்டிருக்கலாமோ? அவர் தான் வரவில்லையே, பிறகென்ன?

இவள் வலைப்பந்தாட்ட அணியைக் கூட்டிக் கொண்டு கல்லூரியிலிருந்து புறப்பட்டபோது, தன்னுடன் வரும்படி வேறு எந்த ஆசிரியர்களையும் கேட்கவில்லை. கேட்க வேண்டிய அவசியமிருப்பதாய் எண்ணவில்லை. அது கூடப் பிரச்சினையாகப் போய் விட்டதாம்.

அடக்கமாக இருப்பது, விலகி நடப்பது நல்ல தென்று நினைத்தாள். அதை அடக்கமோ? புத்திசாலித்தனமான அகம்பாவம்…. இவை எல்லாம் என்ன ஆக்கள் …. தான் பெரிசெண்ட திமிர்…. தனக்கு ஒருத்தற்றை உதவியும் தேவையில்லை எண்ட கொழுப்பான நினைப்பு…”

ஒரு ஆசிரியையால் அந்த நிகழ்வு இப்படி வர்ணிக்கப்பட்ட தாய் சற்று முன் கமலநாதன் மாஸ்டர் சொன்னார்.

பத்மநாதன் ரீச்சராகத்தான் இருக்கும்!

தற்செயலாக நடப்பது போன்ற பாவனையில் தனது முழங்கையினால் கோமதியின் நெஞ்சில் ஓங்கி இடிக்கிறாள் ஒரு மாணவி. ஒரு கணம் நெஞ்சைப் பிடித்துக் கொண்ட கோமதி, மறுகணம் அதை விழுங்கிச் சமாளித்துக் கொண்டு முன்போலவே விளையாடுகிறாள்.

வலைப்பந்தாட்டக் கோஷ்டியைக் கல்லூரியில் மூன்று மாதமாய் மாலை தோறும் விடாமல் பயிற்சி கொடுத்தபோது ஏற்பட்ட பிரச்சினைகள் கொஞ்சமா?

அடி மனதில் ஒரு ஊமை அரிப்பு!

விளையாட்டுப் பயிற்சிக்கென வந்த மேனகா ஏன் தனது படத்தைக் கொண்டு வந்தாள்? சரி ஏதோ கொண்டு வந்தாள் …. அது உண்மையாகவே தொலைந்து போயிருந்தால் உடனேயே இவளிடம் வந்து சொல்லியிருக்கலாமே. மிஸ் ரங்காதரன் என்று ஒரு ஆசிரியை வலைப்பந்தாட்டப் பொறுப்பாசிரியையாக இருப்பது அவளுக்கேன் நினைவு வராமல் போயிற்று? அவள் ஏன் நாகேஸ்வரன் மாஸ்டரிடம் சென்று “என்ரை ஃபோட்டோவைக் காணேல்லை….” என்று சொல்ல வேண்டும்?

பெண் பிள்ளைகள் தமது பிரச்சினைகளை ஆண் ஆசிரியர் களிடம் சொல்லித் தீர்த்துக்கொள்ள விரும்புகிறார்கள். இது போன்ற நிகழ்வுகளை – அவற்றின் உளவியல் காரணங்களை ஒதுங்கி நின்று ஒரு புறநோக்குடன் ஆராய முடிந்தால் நல்லது, முடியுமா?

அதிபர் இவளிடம் வந்து “என்ன மிஸ் , உங்கடை ‘நெற்போல் பிறக்ரிஸ் ‘ நடக்கிற நேரம் பெரிய பிரச்சனையளாம். நீங்கள் எனக்கும் சொல்லேல்லை. தெரியாதது மாதிரி இருக்கிறியள். பிள்ளையளின்ரை ஒழுக்கத்தை நீங்களெல்லோ கவனிக்க வேண்டும்?” என்று இவளது அக்கறையில் குறைகாணும் தோரணையில் கேட்டிராவிட்டால் “யார் போய் எதை எங்கு சொன்னால் எனக்கென்ன?” என்று பேசாதிருந்திருக்கலாம்.

பின்னர் விசாரித்ததில் அவள் விரும்பியே அந்தப் படத்தை ஒரு மாணவனிடம் கொடுத்துவிட்டுக் காணவில்லை என்பதாய் ஆண் ஆசிரியர் ஒருவரிடம் முறையிட்டாள் என்று தெரிந்தது.

தனது புகைப்படத்தை மிக விரும்பி மாணவர்கள் களவெடுத்துச் செல்வதால் தான் அவ்வளவு அழகாக இருக்கிறேன் என்பதை மறைமுகமாய் ஆண் ஆசிரியர்களுக்குச் சொல்வதை அவள் விரும்புகிறாளா? |

எவ்வளவு ருசிகரமான உண்மை ?

தனது சொந்த முகம் எப்படியும் இருக்கட்டும். மற்றவனுக்கு எந்த முகத்தைக் காட்டுவது என்பதுதான் எல்லோருக்குமே பிரச்சினை.

மேனகா என்ன இருந்தாலும் நல்ல டிஃபெண்டர்’. ஆனாலும் இத்தகைய பிரச்சினைகளால் அவளை ரீமில்’ வைத்திருக்க முடியாமல் போயிற்று.

பிறகு புதிதாக பாமதியைத்தேடி, அவளைப் பயிற்றி…. சூழ்நிலையில் ஏற்பட்ட ஒரு தவிர்க்க முடியாத தன்மையினால் இவள் வலைப்பந்தாட்ட ஆசிரியையாக வந்த போதிலும் அவள் அதற்காக ஒவ்வொரு நிமிடமும் பாடுபட்டது என்னவோ நிஜம்!

இன்றைய வெற்றி அந்தக் கஷ்டங்களை மறக்க வைத்துவிடும்!

இடைவேளைக்கான ‘விசில்’ ஊதப்பட்டபோது இரு பகுதியினரும் ‘கோல்’ போட்டிருந்தனர்.

பதினொன்று – பதினொன்று.

இடைவேளையின் போது இவள் வீராங்கனைகள் ஏழுபேரையும் கூப்பிட்டு வைத்து உற்சாகப்படுத்தினாள்.

“நாங்கள் தான் எப்படியும் வெல்லப்போறம். பயப்பிடாமல் விளையாடுங்கோ …. என்ன ?”

“உடம்பு களைக்கிறவை குளுக்கோசு சாப்பிடுங்கோ… மனம் களைக்கப்படாது, ஒருத்தரும் ……….?”

“டிஃபென்டோஸ் பக்கம் தான் கொஞ்சம் வீக். உங்கடை பாடனேர்ஸை விட்டிட்டு விலகப்பிடாது நீங்கள் …..?”

“தேவகி கட்டைதானே …. அவக்குப் பந்து போடேக்கை ‘லோவர் பாஸ்’ போடுங்கோ ….”

“தேவகி நீர் கோமதிட்டைக் குடுக்கிற மாதிரிக் காட்டிச் சீற்’ பண்ணிப் போட்டு , நேரை மதிவதனிக்கு எறியும் ….”

இவளது ஆர்வம் நிறைந்த உற்சாக மொழிகளைக் கேட்டுக் கொண்ட மாணவிகள் மீண்டும் மைதானத்தில் இறங்கினார்கள்.

இன்று வெற்றியுடன் பாடசாலை திரும்பும் போது, அதிபரும் ஏனைய ஆசிரியர்களும் மனத்தடையற்ற முறையில் இவளையும் இவளது மாணவிகளையும் பாராட்டத் தானே போகிறார்கள். அந்த நிமிட மகிழ்வுக்காக எத்தனை கஷ்டமும் படலாம்.

தனக்குத் தெரியாத சில நுட்பமான விடயங்களைப் பயிற்றுவதற்கு விசேட பயிற்சியாளர் ஒருவரைப் பிடிப்பதற்கு இவள் அலைந்த அலைச்சல்! நாய் அலைச்சல் என்றுதான் சொல்ல வேண்டும். எத்தனை இடம் தேடி… எத்தனை பேரை விசாரித்து …..!

‘கப்ரின்’ தெரிவாவது சுலபமாய் முடிந்ததா? உண்மையில் நல்ல ஆட்டக்காரியான, மையத்தில் விளையாடும் தேவகியை அணித்தலைவியாகத் தெரிவு செய்த போது, பத்மநாதன் ரீச்சர் அருகில் வந்து,

“என்னப்பா…. எங்கடை துஷி இருக்கிறா… அவவைப் போடுமன் கப்ரினாய் ” என்றாள்.

துஷி ‘சிறைக்காவலர் ‘ நிலையில் விளையாடும் பிள்ளை.

ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கே கல்லுாரியின் எல்லா நிகழ்வுகளிலும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்று மதில்களில் எழுதப்படுவதை மெய்ப்பிக்க இவள் விரும்பவில்லை.

“தகுதி எண்டு பாத்தா… தேவகி தான் பொருத்தம். நான் இதிலை ஒரு மாற்றமும் செய்ய ஏலாது ரீச்சர்…’ என்றாள் இவள்.

மனச்சாட்சி அவளுக்குள் மிகப்பலமாய் ஒலித்ததில் அவள் இதனைத் தீவிரமாய்ச் சொல்லிவிட்டாள். ஆனால் அன்று முதல் பத்மநாதன் ரீச்சரின் குரல் பல இடங்களில் ஒலிக்கத் தொடங்கியது.

“இவ்….. நேற்றைக்கு வந்தவ. இவக்கு ‘நெற்போல்’ பற்றி என்ன மண்ணாங்கட்டி தெரியும் ?”

“இந்தியா யூனிவேர்சிற்றியிலை இவக்கு நெற்போலும் படிப்பிச்சவை யாமோ ?”

அலைந்த அலைச்சல்! நாய் அலைச்சல் என்றுதான் சொல்ல வேண்டும். எத்தனை இடம் தேடி… எத்தனை பேரை விசாரித்து …..!

‘கப்ரின்’ தெரிவாவது சுலபமாய் முடிந்ததா? உண்மையில் நல்ல ஆட்டக்காரியான, மையத்தில் விளையாடும் தேவகியை அணித்தலைவியாகத் தெரிவு செய்த போது, பத்மநாதன் ரீச்சர் அருகில் வந்து,

“என்னப்பா…. எங்கடை துஷி இருக்கிறா… அவவைப் போடுமன் கப்ரினாய் ” என்றாள்.

துஷி ‘சிறைக்காவலர் ‘ நிலையில் விளையாடும் பிள்ளை.

ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கே கல்லுாரியின் எல்லா நிகழ்வுகளிலும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்று மதில்களில் எழுதப்படுவதை மெய்ப்பிக்க இவள் விரும்பவில்லை.

“தகுதி எண்டு பாத்தா… தேவகி தான் பொருத்தம். நான் இதிலை ஒரு மாற்றமும் செய்ய ஏலாது ரீச்சர்…’ என்றாள் இவள்.

மனச்சாட்சி அவளுக்குள் மிகப்பலமாய் ஒலித்ததில் அவள் இதனைத் தீவிரமாய்ச் சொல்லிவிட்டாள். ஆனால் அன்று முதல் பத்மநாதன் ரீச்சரின் குரல் பல இடங்களில் ஒலிக்கத் தொடங்கியது.

“இவ்….. நேற்றைக்கு வந்தவ. இவக்கு ‘நெற்போல்’ பற்றி என்ன மண்ணாங்கட்டி தெரியும் ?”

“இந்தியா யூனிவேர்சிற்றியிலை இவக்கு நெற்போலும் படிப்பிச்சவை யாமோ ?”

பதின்மூன்று – பதினொன்று ஆயிற்று!

அடுத்து வந்த ஒவ்வொரு கணமும் யுகமாக நீடித்தது. ‘மாச்’ முடிவதற்கு இன்னும் ஐந்து நிமிடங்களே இருக்கின்றன.

பந்து மாறி மாறி நடுப்பகுதியிலேயே நிற்கிறது!

ஒருவருக்குப் போய்க் கொண்டிக்கும் பந்தை நடு வழியில் தட்டி எடுத்துக் கொள்ளும் திறன் கோமதிக்கு நன்றாகவே கை வந்திருந்தது. இந்தந் திறனைப் பயிற்றுவதற்கென்றே விசேடமாய் வந்த கோபி, பிள்ளைகளைத் தனியாகக் கன்ரீனுக்குக் கூட்டிச் சென்று ‘ரீ’ கொடுத்த போதும், வேறு கல்லுாரிகளுக்கிடையிலான போட்டிகளைப் பார்க்க வென்று தனியாக அழைத்துச் சென்ற போதும், பெற்றோர் இவளை நோக்கி எய்த அம்புகள் பல.

“பொறுப்பாசிரியர் எண்டிருக்கிறா. அவக்கு இந்தப் பிள்ளையள் போனதெண்டு தெரியாதாம்……”

“தெரியாட்டால் அவ அந்தப் பதவியை ராஜினாமாச் செய்ய வேண்டியது தானே?”

பிள்ளைகளைக் கூப்பிட்டு , “நீங்கள் ஏன் எனக்குச் சொல்லாமல் கோபியோடை ‘மாச்’ பார்க்கப் போனனீங்கள்?” என்று கேட்டாள்.

“அது ‘ஸ்கூல்’ நேரமில்லை மிஸ். சனிக்கிழமை நாங்கள் எங்கையும் போறதுக்கு உங்களிட்டை ஏன் மிஸ், சொல்ல வேணும்?”

அதுவும் சரிதான்!

அதிபரிடம் போனாள். அவர் சொன்னார்,

“அவை போனா உங்களுக்கென்ன மிஸ் … எங்கையும் போகட்டன்.”

“பிள்ளையளின்ரை ஒழுக்கத்தை நீங்கள் தானே கவனிக்க வேணும்” என்று கேட்ட அதே அதிபர் தான் ! சந்தேகமில்லை!

அந்த நிகழ்காலத்தின் குரூரத்திலிருந்து தப்பியது பெரும் விடயம் எனலாம். சிறிது காலம் இந்தப் பதவி வகித்தால் போதும்… கெட்டியான சருமம், உணர்ச்சியற்ற சருமம், தானே வந்து விடும் போல் தோன்றியது அவளுக்கு !

இவர்கள் கல்லுாரியின் ‘ஸ்கோர்’ கூடியதைத் தொடர்ந்து ஆட்டம் விறுவிறுப்படைத்தது. கோமதி, ஜானகி, மதிவதனி எல்லோருக்கும் கைகளாலும் கால்களாலும் பந்தாலும் நல்ல அடி! தாறுமாறான ஃபவுல்கள்’ எல்லாம் கவனிப்பாரற்று பறந்தன. அவுட் போல் ‘களெல்லாம் இன் போல்’களாய் மாறித் தொடர்ந்து பாய்ந்தன. கால் வழுக்கிக் கீழே விழுந்து விட்ட தேவகியின் மேல் பாய்ந்து உழக்கிக் கொண்டு ஓடினாள் ஒருத்தி. இவ்வாறெல்லாம் அகோரமாய்’ ஆடியதில் ஸ்கோர்’,

பதினாலு – பன்னிரண்டு ஆகியது!

கல்லுாரி அணியைத் தெரிவு செய்வதற்காய் கல்லுாரியில் இல்லங்களுக்கிடையே போட்டி நடத்திய போதும் இப்படித் தான் அகோர ஆட்டங்கள் நடந்தன.

வேறு கல்லுாரிகளிலிருந்து வருவிக்கப்பட்ட இரண்டு அம் பயர்கள் இருக்கக் கல்லுாரி ஆசிரியை ஒருவர் தனக்கு அவர்களை விட அதிகம் தெரியும் என்று இவளிடம் கூறிக் கொண்டே ஒரு விசிலைத் தூக்கிக் கொண்டு ஊதத் தொடங்கியதே யாரும் நம்ப முடியாத வேடிக்கை நிகழ்வு! அந்த ஆசிரியையின் பிள்ளைகள் அணிகளில் விளையாடினார்கள் என்பது தெரிந்தவர்களுக்கு அது வேடிக்கையாகத் தோன்றாது! மதிலில் எழுதப்படுபவற்றிலும் சில உண்மைகள் உண்டு தான்!

வேடிக்கையான அந்த நிகழ்வை நிறுத்த இவள் பட்டபாடு ! சரி, இன்றைய சாம்பியன் கிண்ணத்துடன் அவற்றையெல்லாம் மறந்து விடலாம்!

அவர்கள் எவ்வளவு முயன்றும் ஸ்கோரை பதினாலு – பதின் மூன்றுக்கு மேல் உயர்த்த முடியவில்லை.

நேரம் கூட ஒரு நிமிடம் அதிகமாகவே தரப்பட்டு விட்டது. முடியவில்லை !

வெற்றிதான் !

மனம் நிறைந்த பூரிப்புடன், எல்லாம் மறந்து, கல்லுாரியினுள் நுழைந்த போது முதலில் எதிர்ப்பட்டது மிஸிஸ். சவுந்தரநாய கந்தான் !

“எப்படி மிஸ். ரங்காதரன் மாச்…?”

“வெற்றி தான்…..!”

அவள் கைதரக் கூடும் என்ற எதிர்பார்ப்பில் சற்று உயர்ந்த கைகள், எதிர்பார்ப்பின் தோல்வியினால் தாமாகவே தாழ்ந்து கொண்டன.

“எண்டாலும் எங்கடை பிள்ளையளின்ரை இந்தச் சிவப்பு உடுப்புச் சரியில்லை . பட்டிக்காடு மாதிரிக் கிடக்கு….. சீ…. !”

பொறாமை! பொறாமைக் குவியல்கள்!

அவள் இதைப் பொருட்படுத்தாமல் அதிபரைத் தேடி விரைந்தாள். அணி பெருமித நடையுடன் பின் தொடர்ந்தது.

“சேர்! சாம்பியன் கப் கொண்டுதான் வந்திருக்கிறம்….”

“ஆ! எண்டாலும் இந்த முறை ரீமின்ரை ‘டிசிப்பிளின்’ அவ்வளவு சரியில்லை எண்டுதான் எல்லா ரீச்சேர்ஸும் சொல்லினம். நான் எப்படியும் ‘மாச்’ முடியட்டும் எண்டு பேசாமல் இருந்தனான். அடுத்த வருஷம் இந்தப் பொறுப்பை மிஸிஸ் . பத்மநாதனிட்டைக் குடுப்பம் எண்டு யோசிக்கிறான் ….”

கூறிக் கொண்டே அதிபர் உள்ளே போனார்.

இவள் மனதில் ஒரு சூன்ய உணர்வு தோன்றியதைத் தொடர்ந்து அங்கு சில நிமிடங்கள் பொருள் பொதிந்த அமைதி நிலவியது.

தனக்குக் கோபம் வரக்கூடும் என இவள் எதிர்பார்த்தாள். ஆனால் வரவில்லையே!

– வீரகேசரி – 01.02. 87

– வாழ்வு வலைப்பந்தாட்டம் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: ஜூலை 1997, கலை இலக்கியக்களம், தெல்லிப்பழை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *