கடலின் அக்கரை போனோரே…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 2,426 
 
 

(1993 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வீதியைக் குறுக்காகத் தாண்டி, குச்சொழுங்கையில் இறங்கி, முடுக்கிலிருந்த சின்னஞ்சிறு கண்ணகியம்மன் கோயிலைச் செங்கோணமாய் வளைந்து, மீண்டும் குச் சொழுங்கையில் இறங்கிக் கடற்கரையை அடைந்து, ‘க.- ற் கரைப் பிள்ளையார் கோயிற் சுவர் விழுத்தும் நிழலில் அமர்ந்தேன். என்னுடன் வந்த பேரக் குழந்தைகள் கடற் கரை மணலில் இறங்கி விளையாடத் தொடங்கினார்கள். இனி அவர்களின் தொந்தரவு சொற்ப நேரத்துக்கு இல்லை .

பட்டினத்தில் முற்றமேயில்லாத வீடுகளில் முடங்கிக் கிடக்கும் எனக்கு, அந்தக் கடற்கரை சாயந்திர வேளை களில் நிம்மதியை அளித்தது. நான் இப்போது கடற்கரை மணலில் வெறுமனே அமர்ந்திருக்கவில்லை. வீற்றிருக் கிறேன்; ஒரு அரசனைப் போல.

கடற்கரை மணலில் ஓடி விளையாடும் சிறுவர்களும், கரையில் இழுத்து வெக்கப்பட்டிருந்த தோணிகளின் பக்க லில் அமர்ந்து கொண்டு தம் வலைகளைப் பழுதுபார்க்கும் மீனவர்களும் என் பரிவாரங்கள்.

அந்திவானத்தில் செக்கர் ஒளி கருநீலக் கடலில் படிந்து தகதகத்தது. கடலைப் பார்த்துக் கொண்டிருப் பதில் எப்போதுமே எனக்கு ஒரு அலாதியான விருப்பு. தலைமுறை தலைமுறையாக என் முன்னோர் கடலோடி கள் என்பதாலா?

கடற்கரையில் வீற்றிருக்கும் என் மனத்தில் எத் தனையோ அகநானூற்றுக் காட்சிகள் விரிகின்றன. இரங் கலும் இரங்கல் நிமித்தமும் தான் கடலோர மக்களின் வாழ்க்கையின் பொருள் என்று சங்க இலக்கியங்கள் சொல்கின்றன.

கிழக்கே மலையுச்சியிற் பூசை புனஸ்காரங்களின்றித் தோற்றமளிக்கும் கோணேசர் ஆலயமும், அம்மலைக் குன்று தெற்காய்த் திரும்பிக் கரையைத் தொட, கடற் கரை மணல் மேற்காகப் பரந்து சென்று இரண்டு மைல் களுக்கப்பால் மீண்டும் வடக்கு நோக்கித் கற்பாராய்க் கடலிற் பரந்து முளைத்து நிற்கும் சல்லிக் குன்றுகளுக்கு மிடையே குடாவாய்க் கிடக்கும் அந்தக் கடற்கரையில், எரிந்த வீடுகள, கூரையற்ற குட்டிச் சுவர்கள், சிதிலமாகி விட்ட ஓலைக் குடிசைகள், கரையில் இழுத்து வைக்கப் பட்டிருக்கும் தோணிகள், விசைப் படகுகள், குடாக் கடலிலே நங்கூரமிட்டு நிற்கும் இயந்திரப் படகுகள் எல்லாவற்றிலுமே ஒரு சோகம் தொக்கி நிற்பதாக எனக்குப் படுகிறது.

ஆனாலும் வாழவேண்டும் என்ற ஆசையும் வாழு வேன் என்ற மனத்தெம்பும்…

சற்றுத் தொலைவிலே பிரெடெரிக் கோட்டைப் பக்கமாகக் கரைவலை “வளைக்க” ஆயத்தங்கள் நடக் கின்றன.

தெப்பக் கட்டைகள் கட்டிய வலையையும் கம்பான் கயிறுகளையும் வள்ளத்தில் ஏற்றி, முன் அணியத்தில் கற்பூரம் கொளுத்திச் சாம்பிராணி காட்டித் தேங்காய் உடைத்து…. |

பூசை நடக்கிறது.

கடற்கரை மணலில் வீற்றிருந்த நான் என்னை அறியாமலே கரங்கூப்பிப் பூசையிற கலந்து கொள்கிறேன்.

”பிள்ளையாரே!” என்ற ஏகோபித்த குரலோடு வள்ளம் கடலில் தள்ளப்படுகின்றது. நானும் எழுந்து சென்று வள்ளத்தைத் தள்ளுபவர்களோடு சேர்ந்து தள்ளு கிறேன்.

வள்ளம் கடலில் இறங்கியதும் கம்பான் கயிற்றைப் பிடித்தபடி சிலர் கரையில் நிற்கிறார்கள்.

துடுப்பு வலித்து வள்ளத்தைச் செலுத்தி நீண்ட கம்பான கயிறுகளையும் பின்னர் வலையையும் கடலில் இறக்கிக் கரையிலிருந்து ஒரு பெர்லாங் தூரம் சென்று அரைவட்டமாக வளைந்து கரையை அடைந்ததும் வள்ளத்திலிருந்து இறங்கியவர்களும், அடுத்த பக்கத்தில் நின்றவர்களுமாகக் கம்பான் கயிறுகளைப் பிடித்து இழுக் சிறார்கள்.

கரைவலை கரையை அடைந்து வலையையும் கம்பான் கயிறுகளையும் மீண்டும் சுருட்டிப் பத்திரப்படுத்தி, மீன்களைத் தெரிவு செய்து முடிய இருட்டிவிடும். தான் மீண்டும் என் யதாஸ்தானமான கோயிலடிக்கு வருகிறேன். கோயிலடியில் நான் வீற்றிருந்த இடத்திற்கு அருகாமையில் ஒரு மூதாட்டி அமர்ந்திருக்கிறாள்.

நான் நின்ற நிலையிலேயே கடற்கரையைப் பார்க் கிறேன். என் பேரக் குழந்தைகள் கடற்கரையில் மண் தோண்டி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கண்ணுக்கெட்டிய தொலைவில்தான் நிற்கிறார்கள் என்ற திருப்தியோடு நான் மூதாட்டியின் பக்கலில் அமர்ந்து கொள்கிறேன்.

பொழுது நன்றாகச் சாய்ந்து விட்டதால், கடற்கரை களை கட்டிவிட்டது. வீடுகளிலும், குடிசைகளிலும் அடை பட்டுக் கிடந்த பெண்களும் கடற்கரை ஓரத்தே தம் குடிசைகளுக்கு முன்னால் வந்து அமர்ந்து கொண் டார்கள்.

நான் என் பக்கத்தில் அமர்ந்திருந்த மூதாட்டியைக் கவனித்தேன். உடல் வற்றித் தோல் சுருங்கி நின்ற அம் மூதாட்டி தன் நெற்றிப் பொட்டிற் கைவைத்துத் தூரத்தே கடலையே வெறித்து நோக்கிக் கொண்டிருந் தாள். ரவிக்கை அணியாத அவளது மார்பை, உடுத்தி யிருந்த சிகப்புச் சேலையால் போர்த்திருந்தாள். கழுத்திலே மாலை மஞ்சள் வெய்யிலிற் தகதகவென்று ஒளி காலிக் கொண்டிருக்கும் இரட்டை வடத் தங்கச் சங்கிலி. கையிற் பட்டணக் காப்பு இரண்டு சோடி. காதை இழுத்துக்கொண்டு பென்னம் பெரிய தென்பாண்டி நாட்டுப் பாம்படம் தொங்கிக் கொண்டிருந்தது.

ஐம்பதாண்டுகளுக்கு முன்னால் இத்தகைய மூதாட்டி களைத் திருக்கோணமலை மீன் சந்தையிற் கண்டிருக் கிறேன். இப்போது காலம் மாறிவிட்டது. அங்கே அவர் களைக் காணக்கூடியதாயில்லை. பருத்தித் துறைச்சந்தை யில் காணலாம் போலும்.

அவள் நெற்றிப் பொட்டில் கைவைத்தபடி வடக்கே நீலக் கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்!

அவள் யாரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்? யாருக்காக ஏங்குகிறாள்?

கடலில் இப்போது கீரி மீனும், சூடை மீனும்தான் ‘சீஸன்’. அம்மீன்களைப் பிடிக்க அதிகாலையில் கடலுக் குச் செல்பவர்கள் காலையில் எட்டு ஒன்பது மணிக்கெல் லாம் திரும்பி விடுவார்கள்.

ஆனால் இந்த மூதாட்டி இந்த அந்திநேரத்தில் யாரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்? யாருக்காக ஏங்கு சிறாள்?

சிலவேளை நேற்றுக் கடலுக்குச் சென்ற அவள் மகன் காலையில் மீண்டும் கரைக்கு வரவில்லையோ? என்று நான் எண்ணினேன்.

“இருக்காது. அப்படி எவரும் காணாமற் போன தாகக் கதை இல்லையே” என்று என்னை நானே சுதாரித் துக் கொண்டேன்.

ஆனாலும் இம்மூதாட்டி யாரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்? யாருக்காக ஏங்குகிறாள்?

நான் அம்மூதாட்டியைக் கூர்ந்து நோக்கினேன். நீலக் கடலையே பார்த்துக் கொண்டிருந்த அவள் அழுகிறாள். சுருக்கம் விழுந்த அவள் கன்னங்களில் கண்ணீர் வழிந்து ஓடுகிறது. கதிரவன் மறைந்தனனே காரிருள் பரந்ததுவே

எதிர்மலர் புரை உன்கண் எவ்வநீர் உ. குத்தனவே என்ற சிலப்பதிகார வரிகள் எனக்கு நினைவுக்கு வரு கின்றன.

சே! பொருத்தமில்லாத வரிகள் பிய்த்துக்கொண்டு வந்து விட்டன. நிச்சயமாக இம்மூதாட்டி மாலைக் காலத்தே விரகதாபத்தால் கண்ணீர் உகுத்திருக்க மாட் டாள். அப்படியானால் இவள் கண்ணீர் வடிக்கக் காரணம் என்ன?

நான் அம்மூதாட்டியை இன்னம் சற்று நெருங்கி, “அம்மா! ஏன் அழுகிறீர்கள்? கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே. யாரைப் பார்க் கிறீர்கள்? யாரும் இப்போது வர மாட்டார்களே” என்று ஆதுரத்துடன் கேட்டேன்.

அவள் என் பக்கம் சட்டென்று திரும்பி “ஏண்டா தம்பி வராயினம்? ஒரு மாசத்துக்கு முன்னால் இப்படி அந்திபட்ட நேரத்திலதான் மாரிமுத்தன் குடும்பத்தோட வந்தான்” என்றாள் சற்று ஆத்திரத்தோடு.

குடும்பத்தோடயா? எல்லாருமா மீன்பிடிக்கப் போனாங்க?”

“என்னடா தம்பி கேலியா பண்றா? பெண்டுகளும் மீன் பிடிக்கப் போறதே?”

“அப்படியெண்டா அவங்க ஏன் கடலிலே போனாங்க?”

“எள்னடா மகனே ஒண்ணும் அறியாதவன் மாதிரிக் கேட்கிறாயே. இந்தக் கலவரத்தில் ஆண், பெண், குழந்தை குஞ்சு எல்லாருந்தான் ஓடினாங்க. நாலு பெட்டைகளுக்கு பிறகு நான் பெத்த ஒரே ஒரு ஆண் குஞ்சு. அவனும் ஓடிற்றான்.”

அந்தத் தாய் தன் கண்ணீரை தன் முந்தானையால் துடைத்துக கொண்டாள். நான் மேலே என்ன பேசுவது என்று தெரியாமல் மௌனித்தேன்.

“அண்டைக்கு ஆனி பிறக்க இன்னமும் ரெண்டு நாள் தான். எல்லா இடத்திலயும் வெடிச் சத்தம் கேட்டது கந்தசாமி கோயிலடியிலயும், சிவன் கோயிலடி யிலயும் வீடெல்லாம் எரியுது. எண்டு சொல்லிச் சனமெல் லாம் ஓடிச்சு. அப்பதான் என்ர மகன், “நீயும் வாம்மா, ஓடித் தப்புவம்” என்று என்னையும் கூப்பிட்டான்.”

“எங்க போகக் கூப்பிட்டான்?”

வேறெங்க போறது. நாங்க எல்லாம் பட்டண்வர் தானே. எங்க இனசனம் எல்லாம் இன்னமும் நாகப்பட்ட ணத்தில் இருக்கிறாங்க. அங்க போகத்தான் மகன் கூப் பிட்டான். ஆனா எனக்கு நான் பிறந்த இந்தப் பத்தாம் நம்பர் மண்ணையும் இந்த பிள்ளையாரையும் விட் டிற்றுப் போக விருப்பமில்ல. ஆனா என்ர மகனையும் இங்க வைச்சிருக்க விரும்பல்ல. நான் தான் அவனை வழி யனுப்பினேன். ‘போட்’டத் தள்ளிக் – கூட வந்தவங்க ஐஞ்சாறு பேரையும் ஏத்திக் கொண்டு கடலிலே போனான்.”

“அப்ப கலவரம் நடக்கக்குள்ள நீங்க இனிய தனியாவா இருந்தீங்க?”

தனி யெண்டில்லாடா பொடியா. என்னைப் போல ஏழெட்டுக் கிழடு கட்டைகள், இந்தப் பிள்ளையார் கோயிலடியில் அவர்ர நிழலிலதான் தஞ்சமடைஞ்சம். பக்கத்தில் வீடெல்லாம் எரிபட்டுது. உடை பட்டுது. ஆனாப் பிள்ளையார் எங்கட உயிருக்கு ஒண்ணும் நேர விடவில்லை. மூணு நாலு நாளைக்குப் பிறகு போன சலங்கள் கொஞ்சங் கொஞ்சமாகத் திரும்பிச்சுது?”

“அப்ப மகன் நாகப்பட்டணம் போய் விசளம் அனுப் பினானா அம்மா?”

“பருத்தித் துறைக்குப் போயிற்றன் என்று விசளம் அனுப்பினான். அங்குக் கொஞ்சக் காலம் தங்கிக் கலவரம் முத்தினால் வாடை பேர்றதுக் கிடையில” நாகப் பட்டணம் போவேன் என்று செய்தி சொல்லி அனுப் பினான்.”

“இந்தியாவிலிருந்து ஏதும் வந்ததா?”

“அங்கிருந்து தான் ஒண்ணும் வரல்ல. ஆனா என்ர மகன் தைரியசாலி. எந்தக் காத்துக்கையும் கடலுக்சையும் தேர் மாதிரி ‘போட்’டை ஓட்டுவான். அவன் அங்கப் போய்ச் சேர்ந்திருப்பான். இப்ப போனவங்க திரும்பி வரு வாங்கதானே அவனும் திரும்பி வருவான் என்றுதான் காத்துக் கொண்டிருக்கிறேன்.”

“வந்த மாரிமுத்தர் குடும்பம் மகனைப் பற்றி ஏதும் சொல்லவில்லையா?”

“அவங்க நாகப்பட்டணம் போகல்லியாம். ஆனா என்ர மகன் நாகப்பட்டணந்தான் போயிருப்பான். அங்க தானே எங்களுக்கு இனசனம் இருக்கு. எண்பத்தெட்டி லயும் அவன் அங்கதான் போய் வந்தவன். இப்பவும் இண்டைக்கு நாளைக்கு வந்திடுவான்.”

“ஆம் அம்மா. இப்ப போனவங்க எல்லாம் திரும்பிக் கொண்டிருக்காங்க. உங்கட மகனும் கட்டாயம் வந்திரு வான்.”

“ஓமடா மோனை கட்டாயம் வருவான். அவன் வந்து தானே எனக்குக் கொள்ளி வைக்க வேணும். அவன் வந்தாத் தொழில் செய்ய இயத்துக்கள் வாங்க வேணும் என்று தான் இந்தக் காப்புக்களையும் சங்கிலியையும் பத்திரப்படுத்தி வைச்சிருக்கன். இப்பத்தையப் பவுன் விலைக்கு எழுபத்தஞ்சாயிரம் பெறும்!” .

கவலைப்படாதேயுங்க ஆச்சி. மகன் சுகமாக வந்து சேருவான்” நான் அம்மூதாட்டிக்கு ஆறுதல் சொன்னேன்.

“எழுபத்தையாயிரத்த என்ர மகன் ஒரு நாளில்கூட உழைப்பான். ஒரு குடியா, சூதா ஒண்ணுமில்ல. அவருஞ் செத்தப்பிறகு தன்னந்தனியனா உழைச்சி நாலு அக்கா மாரையும் கட்டிக் கொடுத்தான். அந்தச் செல்ல மகனைப் பாக்காம ஒரே கவலையாயிருக்கு. தின்ர சோறும் உடலில் ஒட்டுதில்ல” அந்தத் தாய் மீண்டும் அழுதாள்.

சிலப்பதிகாரப் பாடலின் மீதியடிகள் என் நினைவுக்கு வந்தன…’புதுமதி புரை முகத்தாய் போனார் நாட்டுள தாங்கொல்-மதி உமிழ்ந்து கதிர் விழுங்கி வந்த இம்மருள் மாலை.’

தோழி! அவர் போயிருக்கும் நாட்டிலும் இந்த மாலைக் காலம் உள தாமோ? என்று கேட்டாளாம் தலைவி. ஆம், தம் தாம் தந்தையரை இன பந்துக் களை சுற்றத்தவர்களை பிரிந்து அக்கரைச் சீமையில் அகதிகளாக வாழ்பவர்களும் இத்தாயைப் போல தம் அன்புக்குரியவர்களை நினைத்து ஏங்குகிறீர்களா? எப்போது ஊருக்கு வருவோம் என்று காத்திருக்கிறார் கனா?

கரைவலை கரைக்கு வந்துவிட்டது. இருள் குமைந்து கொண்டு வரத் தெருவிளக்குகள் எரிந்தன. நீராடிய காகங்கள் கூடு நோக்கிப் பறந்தன.

நானும் அம்மூதாட்டியை மகனுக்காகக் காத்திருக்க வீட்டு விட்டு என் பேரக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு குச்சொழுங்கை வழியே நடந்து வருகையில் “மாஸ்ரர்” என்ற அழைப்பைக் கேட்டுத் திரும்பினேன்.

அழைத்த தாமோதரம் மாஸ்ரர் சொன்னார், “ நீங்க. கதைச்சிக் கொண்டிருந்தது என்ர பெரியம்மாவோடதான் பாவம் அந்த மனுசிக்கு நடந்தது தெரியாது. நாங்களும் சொல்ல வில்லை” “என்ன? என்ன நடந்தது? என்று தான் அதிர்ந்து போய்க் கேட்டேன்.

“தம்பி; அவன் தான் எங்கட பெரியம்மாட மகன் ராமதாஸ், இங்கிருந்து போய்ப் பருத்தித்துறையில் நின் றிருக்கிறான், அங்கிருந்து அக்கரைக்குச் செல்பவர்களை அடிக்கடி ஏற்றிக்கொண்டு சென்று வந்திருக்கிறான். கடைசியாய்ப் போன தீபாவளியை யொட்டிக்கரைக்குப் போகக்குள்ள வாடைக் கடலிலயும் காத்திலயும் அகப்பட்டு அவன்ரை போட்’ கடலில் மூழ்கிப் போயிற்றாம் என்று கதைக்கிறாங்க. ஏதும் திட்டமாய்த் தெரியாது. நாங் களும் பெரியம்மாக்கிட்ட ஏதும் சொல்லல்ல. மனுசியும் மகன் வருவான் என்று ஒவ்வொரு நாளும் கடற்கரை யில காத்துக் கொண்டிருக்கா…”

“உங்களுக்கும் திட்டமாய்த் தெரியாது தானே. நானும் என்னவோ உங்கள் பெரியம்மாவைப் போல ராமதாஸ் திரும்பிவருவான் என்றே நம்புகிறேன்” என்று கூறிவிட்டு வழி நடந்தேன்.

முடுக்கிலுள்ள கண்ணகி கோயிலிற் பூசை நடந்து – கொண்டிருந்தது. “தாயே, கடலின் அக்கரை போனோ ரெல்லாருமே தாய்நாடு திரும்பி சமாதானமாக வாழ அருள் செய்வாயாக” என்று அந்தப் பெரிய நாயகியிடம் என் மனம் முறையிட்டது.

– வீரகேசரி ’93

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *