ஒரு தேவதையின் குரல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 4, 2021
பார்வையிட்டோர்: 2,120 
 
 

தாக்குதலுக்குப் பயந்து ஓடுகின்ற அப்பாவியைப் போல புகையிரதம் ஓடிக்கொண்டிருந்தது. அருணாசலம் உயிரைக் கையிலே பிடித்துக்கொண்டு ஒரு மூலையில் அமர்ந்திருந்தார்.

இறங்கவேண்டிய இடம் அண்மித்துக்கொண்டுவர அவரது மனதில் பதட்ட உணர்வும் அதிகரித்தது. இந்த செப்டம்பர் மாத நடுப்பகுதியிலும், அநுராத. புரத்தில் இறங்க வேண்டியேற்பட்டது தனது கஷ்ட, காலமே என எண்ணிக்கொண்டார்.

எதிர்பாராமல் நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரங் களினால் தத்தமது சொந்த இடங்களுக்கு ‘ ஏற்றுமதி செய்யப்பட்ட விசித்திர அனுபவம் பெற்றவர்களில் அவரும் ஒருவர். (அவர் வேலை செய்கின்ற சிங்களக். கிராமத்திலிருந்து கொழும்பிற்கு அரசாங்க லொறி மூலம் எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து கப்பலில் ஏற்றி யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டவர்.) அந்த நேரத்தில் கடவுள்மாதிரி வந்து காப்பாற்றி அரச பாதுகாப்புடன் அனுப்பி வைத்தவன் அவருடைய சிங் கள நண்பன் ஒருவன் தான்; மனிதர்களில் இயமன் களும் இருக்கிறார்கள், கடவுள்களும் இருக்கிறார்கள்.

நாடு சகஜநிலைமைக்குத் திரும்பிவிட்டதால், இடம் பெயர்ந்த அரசாங்க ஊழியர்கள் தங்களது வழக்கமான அலுவல்களுக்குத் திரும்பிவிடுமாறு வானொலி அறிவிப்புச் செய்தது.

தப்பிப் பிழைத்து வீட்டிற்கு வந்த நேரத்தில் ‘சாப்பிடாமல் கிடந்து செத்தாலும் பரவாயில்லை… இனி அங்கை போகவேண்டாம்!” என அன்புக்கட்டளையிட்ட அவரது துணைவிகூட, “இப்பிடியே நெடுகலும் இருந்தால் என்ன செய்யிறது… சம்பளத்தையெண்டாலும் எடுத்தால் ஒரு மாதிரிச் சமாளிக்கலாம்.” என நச்சரிக்கத் தொடங்கிவிட்டாள். உண்மையிலேயே சமாளிக்க முடியாத நிலைமைதான்.

ஆரம்பத்தில் ஐந்தைப்பத்தைக் கொடுத்துதவிய அக்கம்பக்கத்தவர்களும் கையை விரிக்கத்தொடங்கிவிட்டார்கள். நிலைமை சுமுகமாகும் வரை அது எவ்வளவு காலம் சென்றாலும் வேலைக்குத் திரும்புவதில்லை என அரச ஊழியர் ஆங்காங்கே கூடி முடிவெடுக்கவும், அந்தரமாபத்திற்கு உதவியவர்களும் கைவிடத் தொடங்கி விட்டார்கள்.

“என்ன?… அப்ப இனி வேலைக்குப் போகமாட் டீங்களோ?… இந்தப்பக்கத்துக்கும் மாற்றம் எடுக்கேலா தாக்கும்?… அவங்களும் என்னெண்டுதான் எல்லாரையும் மாத்திறது?” என சிலர் அனுதாபம் தெரிவித்தார்கள்.

“வேலையைவிட்டிட்டு… ஏதாவது கடையைத்தன்னியைப் போட்டுக்கொண்டு ஊரோடை இருங்கோவன்.” – இன்னும் சிலர் இப்படி இலவச ஆலோசனை வழங்கினார்கள்.

நிரந்தரமான ஒரு சேமிப்போ வேறு வருவாய்களோ இன்றி மாதாந்த சம்ப்ளத்தை எடுத்து (கௌரவமான) வாழ்க்கை நடத்துகிற நடுத்தரவர்க்கத்தினரில் ஒருவர்தான் அருணாசலமும்.

பலசரக்குக் கடைக்காரனுடைய கணக்கை இந்த மாதம் ‘செற்றில்ட்’ பண்ணமுடியவில்லை. அவனும் நிலைமை புரியாமல், “ஐயா, அந்தக் கணக்கு…?” எனக் கேட்டவாறு ஒரு மாதிரிச் சிரிக்கத்தொடங்கிவிட்டான். அது சுத்தமான சிரிப்பல்ல, அவனது கடையிலுள்ள பொருட்களைப் போலவே கலப்படம் நிறைந்தது, அந்தச் சிரிப்பை அவரால் தாங்கமுடியாது.

தொட்டம் தொட்டமாக வேண்டிய சில்லறைக் கடன்களும் பல. அறிஞ்சவன் தெரிஞ்சவனைக் கண்டு வெட்கத்தையும் விட்டுப் பல்லைக்காட்டிப் பார்த்தால் அந்த வித்தைகளும் பலனளிக்கவில்லை.

பெண்சாதியின் கழுத்தில் தப்பியொட்டிக்கிடந்த தாலிக் கொடிதான் அவரது கண்களைக் குத்தியது. மெதுவாகக் கதை விட்டுப் பார்த்தார்… கண்மணியின் கண்கள் கலங்கிவிட்டன.

“முந்தி வைச்ச நகையளெல்லாம் வருசக் கணக்காய் மீளாமல் இருக்குது… இதையும் கொண்டு போய் வைக்கப் போறியளோ?”

அந்தக் கண்ணீர் அவரது இதயத்தைத்தொட்டது. கவலை மேலிட்டது. ஒரு பாவமும் அறியாத குழந்தை குட்டிகள் நாளைக்குச் சாப்பாடு என்று கையை நீட்டும் பொழுது என்ன செய்வது?

“எப்படியாவது வேலைக்குத் திரும்பியிடவேணும்” என முடிவெடுத்துக் கொண்டார்.

அருணாசலம் வேலைசெய்கிற சிங்களக் கிராமத்திற் குப் போவதானால் அநுராதபுரத்தில் இறங்கி கண்டி பஸ் எடுக்க வேண்டும். இந்த இடங்களெல்லாம் கல வரத்தின்போது கடுந்தாக்குதலுக்குள்ளான இடங்கள். இவரோடு வேலைசெய்த செல்லத்தம்பி அந்த அதிர்ச்சி யில் வேலையையே ‘றிசைன்’ பண்ணிவிட்டார்!

மீண்டும் அங்கு வேலைக்குப் போவதற்கு, முதல் நாட்களிற் கண்டு சம்மதம் செய்தவர்களில் கத்தசாமி மாத்திரம்தான் இப்பொழுது கூடவந்திருக்கிறார். வருவ தாக ஒப்புக்கொண்ட மகேசு கடைசி நேரத்தில் காலை வாரிவிட்ட சங்கதி புகையிரதத்தில் ஏறிய பின்னர் தான் தெரியவந்தது.

“அவனும் வந்திருந்தால்… சேர்த்து அடிவேண்டு வான்… எங்களுக்குக் கொஞ்சமாவது குறையும்!” என புகையிரத்தினுள் ‘ஜோக்’ அடித்த கந்தசாமியும் அலங்க மலங்க விழித்தவாறு இருந்தார். இறங்குவதற்கு முன்னர் கடிகாரத்தைக் கழட்டி காற்சட்டைப் பைக்குள் வைத்தார்.

“அடிக்கிறவங்கள் காற்சட்டையையும் கழட்டிக் கொண்டுதான் விடுவாங்கள்!” என இரகசியமாகப் பகிடிவிட்டார் அருணாசலம்.

அந்த நகைச்சுவையை அனுபவிக்குமுன்னரே புகையிரதம் நின்றது. இதயங்களே நின்றுவிட்டது போல.

பஸ் நிலையம் வரை உயிரைக் கையிலே பிடித்துக் கொண்டுதான் நடக்க வேண்டும். மௌன விரதம் மேற் கொண்டவர்களைப் போல நடக்கத்தொடங்கினார்கள்.

கந்தசாமி சற்று விலகியே நடந்துவந்தார். அருணா சலத்தாரைப் பார்த்தால் ‘அசல் தமிழன்’ என முகத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கிறதாம்! தன்னைப் பார்த்து யாரும் மட்டுக்கட்ட முடியாது என அந்தரங்கமாக நினைத்து மகிழ்ந்து கொண்டே நடந்தார்.

‘வன் செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப் பட்டுவிட்டார்கள்’ எனப் பத்திரிகைகளில் வந்தசெய்திகளை நினைத்து சற்று நிம்மதியுடன் நடந்துகொண்டிகுந்தார் அருணாசலம்.

அந்த நிம்மதி நீடிக்கவில்லை, “அடோ!” என அட்டகாசமாக எங்கிருந்தோ ஒருகுரல் வந்தது. நெஞ் சில் இடிவிழ. அருணாசலத்தாரின் இரத்தம் உறைந்து விட்டது போலிருந்தது. திரும்பிப் பார்த்தார். வீதியோரத்தில் சில காடையர்கள் நின்றுகொண்டு தங்களுக்குள் யாரையோ அழைப்பது போலப் பாவனை செய்தார்கள். ஏதோ புதினமான பிராணிகளைப்பார்ப் பது போல அவர்களது கண்கள் தங்களை ஊடுருவுவ தைக் கவனித்தபோது நடுக்கம் இன்னும் அதிகரித்தது.

இப்படியொரு பரிதாபமான நிலையை நினைக்க அருணாசலத்தாருக்கு பெரிய வேதனையாக இருந்தது. நாங்கள் பிறந்து வளர்ந்த இந்தமண்ணிலேயே – எங்கள் நாட்டிலேயே இப்படி உயிருக்குப் பயந்து சீவிப்பதை எண்ணி அழவேண்டும் போலிருந்தது. பூமியில் காலைப் பதித்து நடப்பதே ஏதோ பாவமான செயலைச் செய்கிறோமோ எனக் கசப்பையளித்தது. ஒரு தாயின் வயிற்றில் பிறந்த குழந்தைகளைப்போல ஏன் நாங்களெல்லாம் சகோதரத்துவமாக வாழமுடியாது? பிரச்சனைகளைப் பரந்த மனப்பான்மையுடன் அணுகித் தீர்வுகாண எல்லோருமே தயங்குவதேன்?

நெடுநேரம் காத்து நின்ற பின்னர் அவர்களுக்குரிய பஸ் கடவுளைப்போல வந்தது. உள்ளே அடைக்கலம் புகுந்தபின்னரும் வாயைத் திறக்க மனமில்லை-மௌன விரதம் நீடித்தது. அந்த இடத்திலே சம்பாசித்து தங்களை வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்கு இருவருமே விரும்பவில்லைப் போலும்.

அவர்களிருந்த இருக்கைக்குப் பின் இருக்கையில் மூன்றுபேர் – காடையர்கள் போல அருணாசலத்தாரின் கற்பனையிலிருக்கும் கோலம் கொண்டவர்கள் வந்து அமர்ந்தனர். அவர் மீண்டும் நம்பிக்கை இழந்தார். பின்னர் தான் கவனித்தார், அவர்களும் தமிழில் கதைத்துக் கொண்டிருந்தனர். இப்பொழுது தெம்புடன் திரும்பிப் பார்த்தார் அருணாசலம். அவர்களது கையில் ஒரு தமிழ்த் தினசரியும் இருந்தது,

இது அவருக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது.

அகங்காரமான இரைச்சலுடன் விரைந்து கொண் டிருந்தது பேரூந்து. சில இடங்களில் நிறுத்தப்பட்டு மட்டில்லாமல் ஜனங்கள் அடைக்கப்பட்டனர். இன்னோரிடத்தில் பெண்கள் மூவர் தமது கைக்குழந்தைகளுடன் ஏறிக்கொண்டார்கள்.

தனது இயல்பான உறுமலுடன் பேரூந்து கிளம்பியது. குழந்தைகளுடன் நிற்பதால் யாராவது இருப்பதற்கு இடம் தருவார்களென்ற எதிர்பார்பில் இவர்ககளது பார்வை ஒவ்வொருவர் மேலும் படர்ந்தது. ஆனால் என்ன அதிசயம் – அங்கு இருக்கை கொண்டிருந்தவர்களில் எவரும் இவர்களைக் காணவில்லை! கந்தசாமிக்கு இந்த நேரமாகப் பார்த்து உறக்கம் பிடித்துக் கொண்டதால் முன் இருக்கையில் தலையைச் சாய்த்துக் கொண்டார். இந்தத் தந்திரம் தெரியாத அருணாசலம் தனது முறை வருமுன்னர் யாராவது இடம் கொடுப்பார்கள் என நிம்மதியுடனிருந்தார்.

அந்தத் தாய்மார்கள் சில இருக்கைகளைக் கடந்து நெருக்கத்தில் நுழைந்தவாறு யாராவது தானம் செய்யப் போகும் இருக்கைகளை எதிர்பார்த்து வந்து கொண்டிருந்தபொழுது அந்த இளைஞர்கள் (காடையர்கள்) எழுந்து இடம் கொடுத்தார்கள். தோற்றத்தைக் கருத்திற் கொண்டு அவர்களைக் காடையர்கள் என எண்ணியிருந்தவர் அருணாசலம். இப்பொழுது அவர்கள் தன்னை விடவே உயர்ந்துவிட்டவர்கள் போலத்தோன்றினார்கள்!

பஸ்சினது இரைச்சலையும், கண்டக்டருடைய “ஈஸ்ஸரட்ட யன்ட!” குரலையும் மீறிக்கொண்டு சடுதியாக இன்னொரு குரல் வெடித்தது.

“ஈஸ்ஸரட்ட யனவாவோய்!” (முன்னுக்குப் போம் காணும்)

“தம்ச யனவா ஐசே!… அபிற்ட கியன்ட ஓணனே!” (நீர் போம்காணும்! …எங்களுக்குச் சொல்லத் தேவையில்லை.)

அருணாசலம் பரிதாபமாகத் திரும்பிப் பார்த்தார். பார்த்ததுமே நெருப்பை மிதித்துவிட்டது போன்ற உணர்வு. இந்தத் தர்க்கத்தில் எதிராளியாக நிற்பவன் அந்த இளைஞர்களில் ஒருவன்- தமிழன்! ஒரு சிறுபான்மை இனம் துணிவுடன் வாய்திறந்து பேசுவதே குற்றமல்லவா!

பிரச்சனை என்னவென்று சரியாகப் புரியவில்லை, அந்த இளைஞனை முன்னுக்குப் போகுமாறு அவர் உறுமுகிறார் அவனோ தைரியமாக மறுக்கிறான்.

அருவருப்பான (அழுக்கான) தோற்றத்தோடு அவன் தன்னோடு முட்டிக்கொண்டு நிற்பது அவருக்குப்பிடிக்க வில்லை, அல்லது நேற்றோ முந்தநாளோ தான் மூட்டுமூட் டாக கழட்டப்பட்டவர்கள் இன்றைக்கு இவ்வளவு துணிவோடு உரசிக்கொண்டு நிற்பது பிடிக்கவில்லை என் பது சீக்கிரமாகவே புரிந்தது. இப்படியான பதட்ட. மான காலத்திலும் அவனுக்கிருக்கும் துணிவை எண்ணி வியப்பதா அல்லது தவிப்பதா என்று புரியவில்லை .

அவருக்கு வியர்த்தது – பயத்தில்! “நியாயம் ஒருபக்கம் இருக்கட்டும்… இப்ப இவன் தமிழன் என்றதுக்காகவே போட்டு உழக்கத் தொடங்கிவிடுவாங்களே… தொடங்கினால் அது அவனோடு மாத்திரம் நிற்காமல் எல்லாத் ‘தெமள’ர்களையும் பார்த்துத்தானே நடக்கும்?”

அவர் பயந்தது போலவே ஒருவன், ‘இவ்வளவு நடந்தபிறகும் இதுங்களுடைய துணிவைப் பற்றிக்கூறி வகுப்புவாதத் தீயை மூட்டிவிட்டான் . மின்வேகத்தில் அது பற்றிப்பரந்தது – பலர் சேர்ந்து கொண்டனர்.

தனித்த இளைஞனது அவல நிலையைக் கண்டதும் முன்னே நின்ற மற்ற இரு இளைஞர்களும் பாய்ந்து தங்கள் நண்பனுக்கு அருகில் வந்தனர். அத்தனை பேர் மத்தியில் அகப்பட்டு விட்டுக்கொடுக்காமல் வாதித்துக் கொண்டு நின்ற அவனுக்காக அவர்களும் குரல் கொடுத்தனர்.

அருணாசலம் திகைத்துப் போய்விட்டார். பயம் அதிகரித்தது. இனிக் கையைக்காலை மாறுகிற வைபவம் தொடங்கிவிடும்.

அந்த இளைஞர்களின் குரல்களும் உயர்ந்து கொண்டிருந்தன. ஆனால் பெரும்பான்மையாக இருக்கிற எதிராளிக்கு முன்னால் இது எம்மாத்திரம்? இந்த அமர்க்களத்தில் குழந்தைகள் அழுதன. பஸ் நிறுத்தப்படாமல் ஓடிக்கொண்டே இருந்தது.

கந்தசாமி முன் இருக்கையில் மீண்டும் சரிந்து உறங்கத் தொடங்கினார். அவருக்கு இங்கு நடப்பது ஒன்றுமே தெரியாதாம்!

நிலைமை முற்றியது! சமாதானப்படுத்துவது போல இரு சூரர்கள் முன்னே வந்தார்கள். “தம்சலா உறிற் டப்பு தெனற்ட யனவா!” (நீங்கள் நின்ற இடத்துக்குப் போங்கடா) என உதவிக்குவந்த இரு இளைஞர்களின் நெஞ்சிற் பிடித்துத் தள்ளினார்கள்.

“அபி மெதனதமாய் உறிற்றியே!” (நாங்கள் இதிலே தான் இருந்த நாங்கள்) என முதலில் அமர்ந்திருந்த இருக்கையைக் காட்டி அங்கே குழந்தைகளுடன் இருந்த பெண்களை எழும்புமாறு கேட்டுக்கொண்டு அவ்விடத்தில் அமரச் சென்றனர்.

இது அங்கிருந்த சில மனிதாபிமானிகளுக்குப் பிடிக்கவில்லை. “உங்களுக்கு ஒரு மனிசத்தன்மை இருக்குதா?… பிள்ளைகளுடன் இருக்கும் பெண்களை எழுப்ப எப்படி மனம் வந்தது?” என (சிங்களத்தில்) ஏசியவாறு ஒருவனது சேட்டைப் பிடித்து இழுத்தார்.

மற்றைய கைகளும் உயர்ந்தன.

இவர்கள் நாய்க்குட்டிகளைப் போல பரிதாபமாக தலையைக் குனிந்தனர் – சமாளிக்க முடியாத நிலை.

உயர்ந்த கைகள் அவர்கள் உடம்பில் விழுவதற்கு முன்னரே அவ்விடத்து இரைச்சல்களையும் ஊடறுத்துக் கொண்டு ஒரு குரல் வெடித்தது.

“எங்களுடைய சிங்கள ஆக்களும் எத்தனையோ பேர் இருந்தனீங்கள் தான்… ஒருவர் கூட எழுந்து எங் களுக்கு இடம் தரவில்லை. அந்தத் தமிழ்ப்பிள்ளைகள் தான் மனிசத் தன்மையுடன் இடம் தந்தார்கள்… இவ் வளவு நல்லது செய்த பிள்ளைகளுக்கு நீங்களெல்லாம் செய்யிறது நியாயம்தானா?”

அவள் கோபாவேசம் கொண்டு நின்றாள். கனல் கக்குவது போலிருந்த அவள் கண்கள் பின்னர் கலங்கின. மற்றப் பெண்களும் அவளுடன் சேர்ந்து கொண்டனர்.

எழுந்த கைகள் குறிதவறி விழுந்தன. சூரர்களெல்லோரும் தலையைக் கீழேபோட்டார்கள் .

எதிர்பாராமல் தோன்றிய அமைதியில் கந்தசாமியும் உயிர்பெற்றெழுந்தார்! அருணாசலம் அந்தப்பெண் கூறிய வார்த்தைகளை எண்ணி நன்றிப் பெருக்குடன் அவளை நோக்கினார்.

அக்கிரமங்களை அழித்தொழித்து உலகை உய்விக்கும் பத்திரகாளி தெய்வத்தைத் தரிசிக்கின்ற பக்தி நெஞ்சில் முட்டியது.

– ஒக்டோபர் 1977 – ஈழத்துச் சிறுகதை மஞ்சரி 1980 – கொடுத்தல், சிரித்திரன் அச்சகம், முதற்பதிப்பு: 10-6-1983

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *