ஆண்ட்ராய்ட் அம்மு…!!!

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 4, 2021
பார்வையிட்டோர்: 2,933 
 

அம்மணியம்மா வழக்கம்போல பேத்தி ஆதிரைக்காக வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தாள்.

காப்பி நிறத்தில் ஸ்கர்ட்டும் அதே நிறத்தில் கட்டம் போட்ட சட்டையும் போட்டுக் கொண்டு , மஞ்சள் நிற பஸ்ஸிலிருந்து “டார்லிங் அச்சம்மா…! என்று இரண்டு கையையையும் நீட்டி அவளைக் கட்டிக் கொள்ளும் பேத்திக்காக அவள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருக்கத் தயார்….

இதைவிட வேறேன்ன சுகம் இருக்க முடியும்….???

வழக்கத்தைவிட பஸ் சீக்கிரமே வந்துவிட்டது..ஆதிரையின் நடையில் ஒரு மாற்றம்..

நேராக வந்து பாட்டியைக் கட்டிக் கொண்டு ‘ஹாய்…அச்சம்மா… என்று சொல்லி விட்டு உள்ளே போக எத்தனித்த பேத்தியிடம்….

“என்னடா..நீ சரியாத்தானே இருக்க….???” என்றாள் அம்மணி.

“அச்சம்மா…. நான் நல்லாவே இருக்கேன்” என்று சொல்லிக் கொண்டே உள்ளே போய் விட்டாள் பேத்தி..

அம்மணிக்கு ஏதோ நெருடியது….

சீருடையை கழட்டி வீசிவிட்டு ஐந்தே நிமிடத்தில் கீழே இருப்பாள் ஆதிரை…..

இன்று அவளுக்காக வெஜிடபிள் கட்லெட்டும் .. dry fruits லட்டுவும் டேபிளில் வைத்துக் கொண்டு காத்திருந்தாள் அம்மிணி….

‘ஏன் இவ்வளவு நேரம் ….??’

யோசித்துக் கொண்டிருக்கும்போதே தடதடவென்று இறங்கி வந்து பாட்டியை இறுக்க கட்டிக்கொண்டாள்..

“அச்சம்மா… ஸாரி.. இன்னிக்கு கொஞ்சம் டயர்டாக இருக்கு….!!”

“ஏண்டா…பீரியட்ஸா…??”

“நோ…நோ… இன்னிக்கு எங்க கிளாசில ரொம்ப ஓவரா சத்தம் போட்டோமுன்னு டீச்சர் கிரவுண்ட சுத்தி அஞ்சு தடவ ஓட வச்சாங்க…..

அதத்தவிர மத்தியானம் football practice வேற… காலெல்லாம் ஒரே வலி….!”

“கண்ணெல்லாம் கலங்கியிருக்கே….”

“நத்திங் அச்சம்மா….!”

சாதாரணமாய் கட்லெட்டை பார்த்ததுமே ‘ஆ’ ‘ஊ’ என்று குதிப்பாள்.இன்றைக்கு சத்தம் போடாமல் சாப்பிட்டு விட்டு ..

“நா போய் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்றேன் அச்சம்மா “என்று சொல்லி விட்டு மேலே போய்விட்டாள்.

இன்றைக்கு ஆதிரை புதிதாய்….. புதிராய் தெரிந்தாள்..

மகன் முகுந்தனும் மருமகள் ரேஷ்மாவும் பதினைந்து நாளைக்கு ஆபீஸ் விஷயமாய் வெளிநாட்டுக்கு போயிருக்கும் இந்த நேரத்தில் ஆதிரையை துருவித் துருவி கேட்க அம்மணிக்கு விருப்பமில்லை… சாப்பிடும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டாள்….

***

அம்மணியம்மா தமிழ் நாட்டை சேர்ந்தவர்தான்.ஆனால் சிறு வயது எல்லாமே பாலக்காடு, திருச்சூர், ஆலப்புழா என்று கேரளாவிலேயே கழிந்ததால் தமிழில் மலையாள மணம் வீசும்….

எட்டாவது வரைதான் படித்திருக்கிறார்.ஆனால் பட்டறிவு என்று சொல்வார்களே அது நிறையவே உண்டு.

அநாவசியமாக வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட வராது… ஒன்பது தடவை யோசித்து தான் ஒரு வார்த்தை சொல்வார்..

கணவன் பத்மநாபனுக்கு கல்யாணமான புதிதில் மனைவியைப் பார்க்க ஆச்சரியமாய் இருக்கும்.அவர்கள் வீட்டில் ஆண் குரல் அடங்கியே இருக்கும்…

முதலில் அம்மணிக்கு படிக்கவில்லையென்ற காம்ப்ளெக்ஸ் என்று நினைத்தார்…

ஆனால் போகப்போக அவளுடைய சாதுரியம் அவரை ஆச்சரியப்பட வைத்தது.!!!!

பத்மநாபன் ஸ்டாக்மார்க்கெட்டில் பூந்து விளையாடுவார்.

எப்போதாவது அம்மணியிடம் அதைப்பற்றி பேசுவதுண்டு…

“ஏங்க…I.T.C.வச்சிருக்கீங்களா?? இந்த மாசம் பயங்கரமா மேல போகும்… போனஸ் ஷேர் கூட வரலாம்.. முடிஞ்சா இன்னும் அதில இன்வெஸ்ட் பண்ணலாம் இல்ல…

உங்களுக்கு என்ன தோணுது..??”

சொன்ன மாதிரியே அடுத்த மாதங்களில் அந்த ஸ்டாக்கில் மட்டுமே நாலு லட்சம் பார்த்தார்….

அதிலிருந்து அம்மணியை கலந்து யோசிக்காமல் ஒரு இன்வெஸ்ட்மென்ட்டும் பண்ண மாட்டார்.

அவள் சிக்கனமாய் , பொறுப்பாய் குடும்பம் நடத்தும் நேர்த்தியைப் பார்த்தபின் குடும்ப விவகாரத்தில் தலையிடுவதே இல்லை…

“கம்யூட்டர் கத்துக்கோ அம்மு…நீயே Demat account open பண்ணலாம்…!!”

அது என்னவோ… அம்மணிக்கு கம்ப்யூட்டரைப் பார்த்தாலே ஒரு பயம்..கீ போர்டை தன் தொட்டு ஏதாவது ஏடாகூடமாய் ஆகி விட்டால்…???

ஆனாலும் ஒரு நாள் கம்யூட்டர் கற்றுக் கொண்டே தீருவேன் என்று மனதில் ஒரு சபதம் எடுத்துக் கொண்டாள்..

விரைவில் அதற்கு ஒரு அவசியம் வருமென்று அவள் கனவிலும் நினைக்கவில்லை…..

ஒரே பையன் முகுந்த்.அப்படியே அம்மா குணம்.அநாவசியமாய் பேசமாட்டான்….

பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தவன் , லக்னோவில் MBA படிக்கும் போது கூடப் படித்த ரேஷ்மாவுடன் காதல் .பஞ்சாபி பெண்.

அம்மணியும் பத்மனாபனும் ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

“முகுந்த்…நமக்கு அவுங்க கல்ச்சரே புதுசு…. நிறைய அட்ஜஸ்ட் பண்ண வேண்டிவரும்…

அவுங்க மொழி கூட நமக்கு தெரியாது.சாப்பாடு, பழக்க வழக்கமெல்லாமே வேற….நல்லா யோசிச்சு முடிவெடு…..

திருமணமாகி ரேஷ்மா…பத்மநாபனுடன் ஒன்றாக இருப்பதையே விரும்பினாள்….

தாயில்லாமல் வளர்ந்தவள் அம்மணியை ‘அம்மா’ என்றே கூப்பிட ஆரம்பித்தாள்.

அம்மணி கெட்டிக்காரி. கல்யாணம் ஆனதுமே மாடியில் அவர்களை சுதந்திரமாய் விட்டு விட்டாள். அவர்கள் விஷயத்தில் தலையிடவே மாட்டாள்…

“அம்மா..முகுந்துக்கு உங்க இட்லி..தோசை ..இல்லாம முடியாது…காலைல இரண்டு பேரும் கீழ சாப்பிட்டிட்டு ஆபீஸ் போறோம்….

லஞ்ச் ஆபீஸ்ல… ராத்திரி டின்னர் நானும் முகுந்தும்… நாமெல்லாம் மேல சாப்பிடலாம்…”

இப்போது ஆதிரைக்கு பதினாலு வயது…வீட்டில் பாட்டி மட்டும்தான்…..

“அம்மா… அவளுக்கு தமிழ் சொல்லிக் குடுங்க…கண்டிப்பாவே இருங்கம்மா…. நானும் முகுந்தும் செல்லம் குடுத்து கெடுத்துடுவோம்னு தோணுது….”

முகுந்தும் ரேஷ்மாவும் தீர்மானமாய் சொல்லிவிட்டார்கள்…

ஒரு நாள்…..

“அம்மா….ஆதிரை முன்ன மாதிரி கலகலப்பா இல்லைன்னு தோணுது…நேத்து சினிமாக்கு கூப்பிட்டப்ப கூட வரல்லன சொல்லிட்டா…உங்க கிட்ட ஏதாவது சொன்னாளா….??

“இல்லப்பா… நானும் அவள கவனிச்சிட்டுத்தான் இருக்கேன்…

“அச்சம்மா.. நிறைய படிக்க இருக்கு….அவ்வளவுதான்னு சொல்றா.. நீயும் பேசிப் பாரு….”

ஆனால் அம்மணி ஒன்றை மட்டும் கவனித்து விட்டாள்.முன்னை விட ஆதிரைக்கு ஃபோன் கால்கள்…. மெஸேஜ்கள் அடிக்கடி வர ஆரம்பித்திருக்கிறது….

***

ஆதிரைக்கு போன ஜுன் மாதம் பதினாலு வயது பூர்த்தியானது… பார்த்தால் பதினெட்டு சொல்லலாம்.அம்மா மாதிரி அத்தனை வளர்த்தி…

வெண்ணெய் தடவினமாதிரி வழுவழுப்பான மாசு மறுவில்லாத முகம்.. ஆனாலும் குழந்தைத்தனம் போகவில்லை.!!!!!!

பிறந்தநாளுக்கு அவளுக்கு ஒரு smart phone பரிசாய் கொடுத்தான் முகுந்த். இதுமாதிரி விஷயத்தில் அம்மணி தலையிடவே மாட்டாள்… ஆனால் அன்றைக்கு அவளுக்கு அது சரியாகப் படவில்லை…

“என்ன முகுந்த்…இப்போ அவளுக்கு எதுக்கு cell phone..???”

“அம்மா…நாங்கூட யோசிச்சேன்…ரேஷ்மாவும் வேண்டானுதான் சொன்னா..

ஆனா சேர்ந்தமாதிரி நாங்க வேலை விஷயமா நிறைய வெளிநாட்டுக்கு போறோம்.. கூப்பிட ஈஸியா இருக்கும்…

எல்லாம் கண்டிப்பா சொல்லி இருக்கோம்..

Misuse பண்ண மாட்டேன்னு சத்தியம் பண்ணியிருக்கா.. நீங்களும் ஒரு கண் வச்சுக்கங்க…”

‘நான் என்னத்த கண் வைக்கிறது..? மொபைல் பத்தி ஒரு மண்ணும் தெரியாதே ..’

மனதில் நினைத்துக் கொண்டாள் அம்மிணி…

***

வெள்ளிக்கிழமை காலை…மணி ஏழு. பள்ளிக்கூட பஸ் வரும் நேரம்..ஆதிரை இந்நேரம் கீழே இறங்கி வந்து Breakfast சாப்பிட்டுக் கொண்டிருப்பாள்..

‘என்ன இந்த பெண் இப்படி பண்ணுது…அப்பா அம்மா வேற டூர்ல இருக்காங்க..இவள இப்படியே விடக் கூடாது…..’

மேலே ஏறிப்போய் ஆதிரையின் அறைக்கதவைத் தட்டினாள்.

ஒரு பதிலும் இல்லை.கதவு தள்ளினதும் திறந்து கொண்டது.சும்மாதான் சாத்தி வைத்திருந்தாள்..

கட்டிலில் சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தாள் ஆதிரை….

“கண்ணு.. பஸ் வர நேரமாச்சுதே..எந்திரி…என்னாச்சுடா????

“அச்சம்மா…. ரொம்ப டயர்டா இருக்கு..ப்ளீஸ்.. விடுங்க.. இன்னும் கொஞ்சம் தூங்கணும்போல இருக்கு… ஸ்கூல் போல அச்சம்மா…”

மறுபடியும் இழுத்து போத்திக் கொண்டாள்…

அம்மணி அவள் கழுத்தைத் தொட்டுப் பார்த்தாள்.காய்ச்சல் ஏதும் இல்லை. கீழே பஸ் ஹார்ன் சத்தம்.

“செல்வா… ஆதிரை வரல்லன்னு சொல்லிடு….!!”

வாட்ச்மேன் செல்வத்திடம் கத்தி சொல்லிவிட்டு கீழே இறங்கி வந்தாள் அம்மிணி..

நிச்சியம் ஆதிரைக்கு ஏதோ பிரச்சனை….இதை இப்படியே விடக் கூடாது… மனசுக்குள் தீர்மானம் பண்ணி விட்டாள்.

பன்னிரண்டு மணிக்குத்தான் ஆதிரை கீழே இறங்கி வந்தாள்.குளித்து நல்ல fresh ஆக இருந்தாள்.

“பசிக்குது அச்சம்மா…. லஞ்ச் ரெடியா.???

“பசிக்காம என்ன பண்ணும் ??

வா .. உக்காரு…”

கையில் மொபைல்..!!!

“இத பாரு…மொபைல் பாத்திட்டே சாப்பிடறதுன்னா சாப்பாடு கிடையாது….!!!”

“வாட் அம்மு….புது ரூலா…???”

“ஆமாம்..”

“இங்க என் பக்கத்தில உக்காருங்க… உங்களுக்கு ஒண்ணு காட்டணும்…”

அம்மணி இதற்காகத்தான் காத்திருந்தாள்…

அவள் மொபைலில் என்னதான் செய்கிறாள் என்று தெரியாமல் மண்டை வெடிக்கும் போல் ஒரு அழுத்தம்..

கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது….

ஆதிரை பாட்டி கையைப் பிடித்து பக்கத்தில் உட்கார வைத்தாள்.

“ம்ம்ம்…சொல்லுடா கண்ணு…”

“ஏன் மொபைல்னா பயப்படுறீங்க ???

‘நான் ஒண்ணும் பயப்படல உங்கைல இருக்கும் போது தான் பயம்மாஇருக்கு…..’

அம்மணி மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்…

இதோ பாருங்க… எத்தனை Apps இருக்கு…???”

“Apps ஆ…..”

“இதெல்லாம் அப்ளிகேஷன்ஸ் பாட்டி…இதோ இதுதான் Facebook….”

“ஓ…இந்த book ஐத்தான் படிச்சிட்டிருக்கியா….???”

“Oh… my sweet பாட்டி….இது படிக்கறதுக்கில்லை.பாக்கிறதுக்கு….!
“இதோ பாருங்க..என்னோட Facebook page….”

“நீயா இது…??? இந்த போட்டோவ நான் பாத்ததேயில்லையே…இது என்னம்மா ட்ரெஸ் ??”

“அச்சம்மா…இது selfi….நானே எடுத்துக்கிட்டேன்….அப்பா… அம்மாகிட்ட சொல்லிடாதிங்க…..”
இதோ பாருங்க..

எனக்கு எத்தனை ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க…. ஆயிரத்து ஐநூறு…!!!”

அம்மணிக்கு தூக்கிவாரிப் போட்டது..

“ஆதிரை… எனக்கு தெரிஞ்சு உனக்கு அஞ்சாறு ஃப்ரெண்ட்ஸ் தானே…இவுங்கள்ளெல்லாம் ……???”

“ஐய்யோ ..அம்மு… என் தோழி நிஷாவுக்கு எவ்வளவு பேர் தெரியுமா…??? நாலாயிரத்துக்கும் மேல….”

அம்மணிக்கு அடி வயிற்றைக் கலக்கியது…

“காட்டு உன் நண்பர்கள் முகத்த…”

நிறைய நயன்தாராக்களும்…ஏராளமான தனுஷ்… விஜய்.. அஜீத்.. இன்னும் பாட்டிக்கு தெரியாத முகங்கள்….

சில பயமுறுத்தும் முகங்கள்…சில மீசை கூட முளைக்காத பால் வடியும் முகங்கள்…..

“ஏம்மா… விஜய்..அஜீத்தேல்லாம் உனக்கு எப்படி தெரியும்…???”

“இவுங்க தங்களோட முகத்துக்கு பதிலா பிடிச்ச நடிகர்கள் படத்தை போட்டுக்குவாங்க….”

“ஆமா ..இத்தன பேரையும் உனக்கு தெரியுமா ???”

“எல்லாரையும் தெரியாது… அவுங்க friend request போடுவாங்க..நாம வேணும்ன்னா சரின்னு சொல்லலாம்…”

“பிடிக்கலைனா…..”

“ஓ… வேண்டாம்னு கூட சொல்லலாம்…ஆனா அச்சம்மா…

இத பாருங்க.இது like button.. நாம போடுற போஸ்ட்டுக்கு எவ்வளவு லைக் வருதுன்னு பாருங்க… நிறைய நண்பர்கள் இருந்தா நிறைய லைக்ஸ் வருமே அச்சம்மா…!!”

அம்மணிக்கு அவள் சொன்னதில் பத்து சதவீதம் கூட புரியவில்லை…

“ஏம்மா…இதுல நிறைய ஆபத்து இருக்கும்போல தோணுதே… எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்களே… பிரச்சினை ஏதும் வராதா…??? “

“அச்சம்மா.. இப்போ நான் ஒரு பிரச்சனைல மாட்டியிருக்கேன்…பயம்மா இருக்கு அச்சம்மா…”

அம்மணி மடியில் தலை வைத்து குலுங்கி குலுங்கி அழுதாள் பாட்டியின் செல்லப் பேத்தி…..

‘ஓ இதற்குத்தான் இத்தனை பீடிகையா ??? ‘

நன்றாக வெயில் அடித்துக் கொண்டிருக்கும்போது திடீரேன்று இடி மின்னலுடன் மழை கொட்டுமே…..அது மாதிரி…..

கொஞ்ச நேரம் அழட்டும் என்று விட்டு விட்டாள்…

“அம்மூ… நீங்க சொன்னது எல்லாமே ரொம்ப சரி.. ஒரு பையன் ..வருண்…. என்னை பிளாக்மெயில் பண்றான் அச்சம்மா…..”

“விவரமா சொன்னாத்தானே புரியும் கண்ணம்மா…பாட்டி கிட்ட எதையும் மறைக்காம சொல்லணும்…”

“சொல்றேன் ..ஆனா நீங்க ஒரு ப்ராமிஸ் பண்ணனும்…. இப்போதைக்கு அம்மா.. அப்பாகிட்ட இதப்பத்தி சொல்லக் கூடாது…”

“சரி..இப்போ சொல்ல மாட்டேன் “

“Face book ல ஒரு friend request வந்திச்சு.. ஒரு பையன்.. வருண்…பாக்க டீஸன்டாதான் இருந்தான்..

அவனோட Time line போய் பார்த்தேன். என்ன மாதிரி பாட்டு.. டான்ஸ்… எனக்கு பிடிச்சதெல்லாம் அவனுக்கும் பிடிச்சிருந்திச்சு.. சரின்னு friend ஆக்கிட்டேன்.

என்னோடே எல்லா போஸ்ட்டுக்கும் லைக் போடாம இருக்கவே மாட்டான்.அவன் லைக் இல்லைனா எனக்கு அன்னிக்கு தூக்கமே வராது.என்னோட பிறந்தநாளுக்கு அஞ்சு கிரீட்டிங்ஸ் அனுப்பிச்சான்.

ஃபோன் நம்பர் கேட்டு நச்சரிக்க ஆரம்பிச்சான்.அப்பா திட்டுவார்னு எழுதினேன்…

‘நான் ப்ராமிஸா ஃபோன் பண்ண மாட்டேன்.. WhatsApp மட்டும் பண்ணலாம்னு சொன்னான்…’

வீடியோ கால்ல வர ஆரம்பிச்சான்..சில சமயம் ஓவரா வழிஞ்சான்…..

நான் கட் பண்ணிடுவேன்னு மிரட்டினதும் மறுபடி சரியா இருந்தான்.

போனவாரம் அச்சம்மா…. எனக்கு சொல்ல பயம்மா இருக்கு…..”

அம்மணிக்கு என்னென்னவோ பயங்கர கற்பனைகள்.பேத்தி என்ன சொல்லப்போகிறாளோ என்று ‘திக் திக்’ என்று மனசு அடித்துக் கொண்டது…

“போன வாரம் WhatsApp ல ஒரு போட்டோ அனுப்பிச்சான்…காட்றேன் பாருங்க….”

ஃபோனில் பார்த்த போட்டோ அம்மணியை கதிகலங்க வைத்தது.. ஒரு பையன் ஆதியைக் கட்டிப் பிடித்து முத்தம் குடுப்பது போல….

“அச்சம்மா… சத்தியமா அவன நான் நேர்ல பார்த்ததே இல்லை…நல்லா திட்டிவிட்டேன்…

இந்த சனிக்கிழமை அவன் சொல்ற இடத்துக்கு வரலைன்னா அப்பாவுக்கு இத அனுப்புவேன். ஃபேஸ் புக்கிலயும் போடுவேன்னு மிரட்றான் அம்மூ…”

ஆதிரையை அறையலாம் போல் இருந்தது… அவள் சொன்னதில் பாதிக்குமேல் அம்மணிக்கு புரியவில்லை..

ஆனால் சிலந்தி வலையில் மாட்டிக் கொண்ட பூச்சி மாதிரி இந்த வலைத்தளத்தில் பேத்தி சிக்கிக் கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் நன்றாகப் புரிந்து விட்டது….

“ஆதி…. என்னம்மா இப்படி பண்ணி வச்சிருக்க.. ..ஒண்ணு பண்ணு…இப்போ அவனோட சண்ட போடாத.. ‘ஒரு வாரம் டைம் குடு.. அடுத்த வாரம் மீட் பண்ணலாம்’ ன்னு சொல்லு.. அதுக்குள்ள வேற ஏதாச்சும் பண்ணி வைக்காத…”

“அம்மூ… எனக்கு உதவி பண்ணுங்க ப்ளீஸ்….”

அம்மணி இரவு முழுதும் யோசித்தாள்…

காலையில் எழுந்திருக்கும் போது எல்லாமே கலங்கித் தெளிந்ததுபோல ஒரு உணர்வு.

அம்மணி மனதில் ஒரு தீர்மானம் உருவாகியிருந்தது. எழுந்ததும் அலமாரியில் இருந்த அலமாரி டிராயரில் எதையோ தேடினாள்.

“ஆ….கிடைத்து விட்டது…ஒரு துண்டு காகிதம்….!!!!!

‘வயது ஒரு வரம்பல்ல. கம்யூட்டர்..ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்ஸ்..ஒரே வாரத்தில்..Crash course.….!!!

பத்திரப்படுத்திக் கொண்டாள் அம்மணி..

‘ப்பூ…இவ்வளவுதானா….???’

கோர்ஸ் முடிந்தபோது ஆதிரை கூறிய அத்தனை விஷயங்களும் தெள்ளத் தெளிவாக புரிந்தது..

முதலில் ஒரு smart phone வாங்கிக் கொண்டாள்.. முகுந்த் பலமுறை வற்புறுத்தி பணம் கொடுத்திருந்தான்.

அதற்கு இப்போதுதான் வேளை வந்திருக்கிறது…..

ஆதிரை பள்ளிக்குப் போவதற்குக் காத்திருந்தாள்..

இப்போது அவளுக்கு மொபைலைப் பார்த்து பயமாகவேயில்லை …

முதலில் Facebook ல் நுழைந்தாள்.ஒரு அக்கவுன்ட் ஓபன் பண்ணினாள்.

‘Ammu …!!!’ அதுதான் அவளுடைய Facebook பெயர்..அழகான .. எல்லோரும் அநேகமாய் மறந்துபோன…. ஒரு பழைய எக்ஸ்ட்ரா நடிகையின் புகைப்படத்தை profile photo வாக போட்டுக் கொண்டாள்..

தன்னுடைய திட்டத்தை ஆதிரையிடம் மட்டும் சொல்லிவிட்டாள்…

“அம்மூ…you are a genius….!!!”

ஆதிரை பாட்டியை இறுக்கி கட்டிக் கொண்டாள்…

மறுநாள் வருணுக்கு ஒரு friend request கொடுத்தாள்..உடனே Accepted என்று பதில் வந்தது…..

அடுத்த நிமிடம் messenger ல் கையாட்டினான் வருண்.அம்முவும் wave பண்ணினாள்.

“Hello Babe..”

“Hi….”

“You are stunning..!’.

இரண்டு இதயத்தை பறக்க விட்டான்.அம்முவும் பதிலுக்கு ஒன்றை அனுப்பி வைத்தாள்.

மறுபடியும் இரவு ஒரு message.

“Can I have your WhatsApp…?? உன்னைப் பார்க்கணும் போல இருக்கு…”

மறுபடியும் இதயங்கள் பறந்தன.

“ஒரு நாள் பொறு…”

அன்று இரவு ஆதிரையைக் கூப்பிட்டாள்.

“ஆதிரை..பக்கத்தில உக்காரு…பாரு உன்னோட நண்பனின் லட்சணத்த..!!!”

வருணுக்கு மொத்தம் மூணு அக்கவுண்ட் இருந்தது .

“பாரு அவனோட ஃப்ரெண்ட்ஸ்.!!”

நிறைய பெண்கள்… அரைகுறை ஆடையுடன்.. சில படங்கள் சென்சார் பண்ணவேண்டியவை..

“ஆதி …ஒருத்தர ஃப்ரெண்டா ஏத்துக்கிறதுக்கு முன்னால் அவனைப் பத்தி நல்லா தெரிஞ்சுக்க வேண்டாம் ??? உனக்கென்ன அவ்வளவு அறிவு கூட இல்ல..? .

“அச்சம்மா.. அவன் சரியான ஃப்ராட்னு எனக்கு புரியவேயில்லை… என்ன பண்ணப் போற அம்மூ??”

“பாரு வேடிக்கையை… இந்த சனிக்கிழமை சாயங்காலம் ஆறுமணிக்கு பீச்சில் மீட் பண்றதா சொல்லு..மீதிய நான் பாத்துக்கிறேன்..”

“அவன் என்ன ஏதாவது பண்ணிட்டா…??”

“இப்போ மட்டும் பயம் வருதில்ல..பயப்படாத.. நான் விட்டிடுவேனா..???”

அதற்குள் அம்மணி பண்ண வேண்டிய வேலைகள் நிறையவே இருந்தது…

வருணை WhatsApp ல் கூப்பிட்டாள்..

“Hi.. இந்த சனிக்கிழமை நீ என்னைப் பாக்கலாம்….!!!”

“நிஜமாவா சொல்ற…I get goosebumps டா…!”

“பீச்சில.. okay யா ..??”

“ஓ..சாரி டியர்….இந்த சனிக்கிழமை ஒரு முக்கியமான வேலை இருக்கு டார்லிங்..அத முடிச்சிட்டேன்னா அப்புறம் இந்த வருண் உனக்கே உனக்கு….!!!”

‘டேய் … உன் முக்கியமான வேலை என்ன என்று எனக்கு தெரியாதா..இரு உன்னையே முடிக்கிறேன்.!!!’ மனசுக்குள் நினைத்துக் கொண்டாள்….

“என்னை விட முக்கியமான வேலையா…???”

“உன்ன விட..இந்த ஒலகத்தில் ஒசந்தது யாருமில்ல….”

வருண் chat ல் பாட ஆரம்பித்தான்.

“சரி..சரி….. உன் வேலய முதல்ல முடி…”

இமோஜிகள் பறந்தன……

அடுத்து சைபர் க்ரைம் அலுவலகத்துக்கு போன் பண்ணினாள்.ரிசப்ஷனிஸ்ட் உடனே ஆபீஸர் டேனியலுக்கு கனெக்ட் பண்ணிக் கொடுத்தாள்…

இருபது நிமிஷம் அவள் கூறிய எல்லா விஷயத்தையும் பொறுமையாகக் கேட்டார் டேனியல்..

“இன்னும் அரைமணி நேரத்தில் எங்கள் ஆபீஸுக்கு வர முடியுமா ???”

“நிச்சயமாக…..!!!”

இருவருக்குமே அந்த சந்திப்பு ஒரு ஆச்சரியத்தைத் குடுத்தது..

ஒரு வயதானவராய் கற்பனை செய்திருந்த டேனியல் இருபத்தைந்து வயது இளைஞன்..

முப்பது வயது மதிக்கத்தக்க பெண்மணியை எதிர் பார்த்த டேனியல் முன்னால் எழுபது வயது அம்மிணி…

“வாங்க.. மேடம்..!!! நீங்க…..???”

“நான் சொன்ன ஆதிரை என் பேத்தி….”

“முதல்ல உங்களுக்கு ஒரு பெரிய வாழ்த்து.. இந்த வயசில ஸ்மார்ட் போன் பத்தின இத்தனை அறிவுள்ள பாட்டிய நான் சந்திச்சதே இல்ல.அதுவும் இவ்வளவு துணிச்சலோட..

I Salute you madam…

ஒண்ணும் கவலைப்பட வேண்டாம்… நான் சொல்றத கவனமா கேளுங்க…..”

***

சனிக்கிழமை மாலை..தன்னை கவர்ச்சியாக அலங்கரித்துக் கொண்டு பீச்சுக்கு கிளம்பினாள் ஆதிரை..

“கண்ணம்மா..தைரியமா இரு.. அதுக்காக ரொம்ப ரிஸ்க் எடுக்காத..இந்த விஸிலை எப்போ வேணுமோ அப்போ பண்ணு…ஆல் தி பெஸ்ட்….”

டேனியலுக்கு ஒரு போன் பண்ணினாள்…

வருண் ஆதிரைக்கு காத்திருந்தான்..இரண்டு பேரும் கொஞ்ச நேரம் ஏதோ பேசிக் கொண்டார்கள்..

தன் கையைப் பிடித்த வருணின் கையை ஆதிரை தட்டி விடுவதை தூரத்திலிருந்து பார்க்க முடிந்தது.

வருண் ஏதோ சத்தமாய் பேசினான்.மொபைலை எடுத்து ஆதிரையிடம் ஏதோ காட்டிக் கொண்டிருந்தான்.

சிறிது நேரம் கழித்து அவளை இழுத்துக் கொண்டு யாருமில்லாத ஒரு கட்டுமரத்தின் பின்னால் மறைந்தான்..

அம்மணிக்கு முகமெல்லாம் வேர்த்து விட்டது.

“டேனியல்… சீக்கிரம் ஏதாவது பண்ணு….”

வேகமாகச் சென்று டேனியல் கையில் பிஸ்டலுடன் வருணை நெருங்கினான்……..

இப்போது ஒரு வருடம் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறான் வருண்…

***

“வீட்ல இருக்கிறவங்களுக்கு தெரியாத எந்த நட்பும் , எந்த ஆபத்தில வேணும்னாலும் கொண்டு விடும்..பாத்து நடந்துக்கோம்மா….”

ஆதிரைக்கு ஒரு சின்ன அட்வைஸ் குடுத்து விட்டு….

“அம்மூ…நீங்க ஒரு அதிசய பிறவி..! உங்கள மாதிரி பெண்கள்தான் இப்போ சமூகத்துக்கு தேவை….!!!!

கைகுலுக்கிவிட்டு நகர்ந்தான் டேனியல்..

அம்மு இப்போ ரொம்ப பிஸி… வாரம் மூன்று நாட்கள்…

“Smart phone for smarter people ….”என்ற workshop நடத்துகிறாள்..

“அச்சம்மா…அப்பா ..அம்மா.வந்தா என்ன சொல்லப் போறீங்க…???”

“நானும் ஆதிரையும் சேந்து ஸ்மார்ட் போன்ல ஒரு த்ரில்லர் சினிமா பாத்தோம்.. இந்த வீக் எண்ட் நாம எல்லோரும் சேந்து மறுபடியும் பாக்கலாம்…!!!!

என்ன சரிதானே…”

“அச்சம்மா ….you are the smartest grandma anyone can ask for!!! Love you!!!

அம்மணியை இறுக்கிக் கட்டிக் கொண்டாள் ஆதிரை…!!!

Print Friendly, PDF & Email

3 thoughts on “ஆண்ட்ராய்ட் அம்மு…!!!

  1. “ஆண்ட்ராய்டு அம்மு” அருமையான தலைப்பு. தலைப்புக்கு ஏற்ற அற்புதமான கதை. இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ற கதை. தங்களின் எழுத்துக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். வாழ்க தமிழ்!!

  2. “அண்ட்ராய்டு அம்மு” அருமையான தலைப்பு. தலைப்புக்கு ஏற்ற அற்புதமான கதை. இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ற கதை. தங்களின் எழுத்துக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். வாழ்க தமிழ்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *