ஒரு கன்னத்தில் அறைந்தால்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 27, 2023
பார்வையிட்டோர்: 2,355 
 

யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு எட்டிப்பார்த்த மேரி வாசலில் எலிசபெத் நிற்பதை பார்த்தாள். தலை கலைந்திருந்தது, உடையில் வறுமை தெரிந்தது, முகத்தில் தெரிந்த தேஜஸ் ஒரு காலத்தில் அழகாய் இருந்திருக்கவேண்டும் என்பதை தெரிவித்தது.

சார் இருக்காருங்களா? அந்த பெண் கேட்டவுடன் என்னங்க, அழைத்தாள். உள்ளறையில் சாலமனுக்கும், ரூபினுக்கும் பாடத்தில் சந்தேகம் சொல்லிக் கொண்டிருந்த டேவிட் வெளியே வந்தான். அந்த பெண்ணை பார்த்தவுடன் உள்ளே வாங்க, மேரி உனக்கு தெரியுதா, இவங்க எலிசபெத், .தெரியுது, தெரியுது புன்னகையுடன் சொன்ன மேரி, வாம்மா..உள்ளே அழைத்தவள் உக்காருங்க, காப்பி கொண்டு வாறேன், சமையலறைக்குள் நுழைந்தாள்.

எதிரில் உட்கார்ந்திருந்த எலிசபெத் என்ன பேசுவது என்று தயங்கினாள், அவளின் நிலையை பார்த்த டேவிட் சற்று மனம் கலங்கினாலும், தயங்காம சொல்லுங்க, நான் உங்களுக்கு என்ன பண்ணனும்? அதற்குள் மேரி காபியையும், குழந்தைகளுக்கு பாலையும் கொஞ்சம் பிஸ்கட்டுகளையும் தட்டில் கொண்டு வந்து வைத்தாள். முதல்ல காப்பி சாப்பிடுங்க, குழந்தைகளுக்கு பால் கொடுங்க..சொல்லிக்கொண்டிருந்தவளிடம் டேவிட் மேரி நீயும் கொஞ்சம் உட்காரு, அவங்க என்ன்மோ சொல்லணும்னு நினைக்கறாங்க, மேரி அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். குழந்தைகள் ஆர்வமாய் பாலை பருகுவதை பார்த்தவள் அவர்கள் பசியோடு இருந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்தாள். அதற்குள் உள்ளிருந்து வெளியே வந்த சாலமன், ரூபினையும், நீங்க போய் படிங்க, அப்பா

வந்திடுவாரு, உள்ளே அனுப்பி வைத்தாள். அவர்கள் இந்த பெண்ணையும் அவர்களின் குழந்தைகளையும் கோபமாய் பார்த்து விட்டு சென்றார்கள்.

நீங்கதான் எப்படியாவது இவங்க இரண்டு பேருக்கும் வழி பண்ணனும். அவ்ங்க வீட்டுல இருந்து இந்த பசங்களுக்கு சொத்துல பங்கு தரமாட்டாங்களாம், கண்ணீர் வழிய சொன்னாள். டேவிட் யோசனையாய் பார்த்தவன் மேரியிடம் நீ கொஞ்சம் நம்ம வக்கீல் அருணாச்சலத்துகிட்டு பேசி ஏதாவது பண்ணமுடியுமா?

மேரி சட்டபூர்வமா கிடைக்கறது கஷ்டம்தான், எதுக்கும் வக்கீல்கிட்ட பேசி ஏதாவது பண்ண முடியுமான்னு பாக்கறேன், ரொம்ப நன்றிங்க, சொல்லிவிட்டு கிளம்ப இருந்தவளை கொஞ்சம் இருங்க, உள்ளே சென்று ஐந்து நிமிடத்தில் வெளியே வந்தவள் அந்த பெண்ணின் கையில் இதுல இரண்டாயிரம் ரூபாய் இருக்கு, செலவுக்கு வச்சுங்குங்க, அந்த பெண் கண்ணீருடன் நன்றியை சொன்னாள்.

உள்ளே வந்த மேரியை சாலமனும், ரூபினும், ஏம்மா அவங்களை உள்ளே விட்டே, அன்னைக்கு அப்பா கம்பெனிக்குள்ள இந்த அம்மா வந்ததுனாலதான் ஒரு ஆள் அப்பா சட்டையை பிடிச்சான், கோபத்துடன் சொன்ன குழந்தைகளை பார்த்த மேரி ‘பாய்ஸ்’ அப்படி எல்லாம் பேசாதீங்க, நீங்க வயசுல சின்ன குழந்தைங்க, அப்பா கிட்ட அதுக்கு அவங்க மன்னிப்பு கேட்டுட்டாங்க, அது போதும் விட்டுடலாம், இப்ப நீங்க படிச்சிட்டீங்கன்னா கொஞ்ச நேரம் விளையாட போங்க, நான் அப்பாவை வேலைக்கு அனுப்பிச்சுட்டு வர்றேன்.

குழந்தைகள் சொல்வதை கேட்டுக்கொண்டுதான் இருந்தான் டேவிட். அன்று லாரன்ஸ் அப்படி நடந்து கொள்வான் என்று எதிர்பார்க்கவில்லை. வழியில் பார்த்தால் முறைப்பான், கிண்டலாய் பேசிவிட்டு போவான். இல்லாவிட்டால் அலட்சியமாய் பார்ப்பான். அவ்வளவுதான்

அன்று ஞாயிற்றுக்கிழமை, டேவிட் சிறிய ‘மோட்டார் பார்ட்ஸ்’ தயார் செய்யும் கம்பெனி ஒன்றை நட்த்தி வருகிறான். பத்து ஊழியர்கள் அதில் வேலை செய்கிறார்கள். அன்று விடுமுறையாதலால், மூன்று ஊழியர்களுக்கு மட்டும் அன்று வேலை இருப்பதால் வந்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் அப்பா கம்பெனிக்கு வந்த சாலம்ன், ரூபின், அப்பா டேவிட்டுடனும், அங்கிருந்த ஊழியர்களுடனும் சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். டேவிட் ஊழியர்களிடம் நட்பாய் நடந்து கொள்வான். அவர்களையும் குடும்ப உறுப்பினர்கள் போல் நடத்துவதால் நீண்ட வருடங்களாக இவனிடம் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த நேரத்தில் இன்று போலவே கம்பெனி வாசலில் வந்து நின்ற எலிசபெத், குழந்தைகளுடன் பார்த்த டேவிட், சாலமன் ரூபினுடனும் வெளியே வந்தான். வாங்க, என்று அழைத்தவனிடம் எலிசபெத் ஏதோ சொல்ல வந்தாள்.

அப்பொழுது நல்ல குடிபோதையில் வந்த லாரன்ஸ் எலிசபெத்தை பார்த்து கத்தினான் எனக்கு தெரியும்,,தே… ஆபாசமான வார்த்தைகளை உதிர்த்தவன் இவனைத்தான் பாக்க வருவேன்னு தெரியும், கிண்டலாய் சொன்னான். டேவிட் அவனிடம் ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா பேசுங்க,, சொல்லிக்கொண்டிருந்தவனின்

சட்டையை குடிபோதையில் இருந்தவன் எட்டிப்பிடிக்க..ஒரு கணம் டேவிட் கோபத்திற்கு தாவினான். அவன் நினைத்திருந்தால் ஒரே அடியில் அவனை படுக்க வைக்க முடியும், நாற்பது வருடங்களாக இரும்பிலேயே பணி செய்து கொண்டிருப்பவன், அந்த பெண்ணுக்காக அவனை எதுவும் செய்யாமல் அப்ப்டியே நின்றான். சத்தம் கேட்டு ஓடி வந்த ஊழியர்கள் அந்த குடிகாரனை அப்படியே தள்ளிவிட்டு அடிக்க ஓங்கினார்கள். அவர்களை தடுத்து வேண்டாம் போகட்டும் விட்டுடுங்க, அவர்களை சமாதானப்படுத்தி உள்ளே கூட்டி வந்தான்.

எலிசபெத் அவர்கள் தள்ளி விட்ட்தில் மல்லாந்து கிடந்தவனை எப்படியோ எழுப்பி கூட்டிக் கொண்டு சென்றாள். டேவிட்டுக்கு மனசு பாரமாயிருந்தது, அவனுக்கு ஊழியர்களை பற்றி கவலை இல்லை, ஏனெனில் அவனை பற்றி முப்பது வருடங்களாக அவர்களுக்கு தெரியும், ஆனால் சாலமன், ரூபன், இவர்களின் மனம் அப்பாவை பற்றி என்ன நினைக்கும். மேரியிடம் அனைத்தும் சொன்னான். எப்ப்டியாவது அவங்க மனசை சமாதானப்படுத்து. மேரி அவர்களை அன்று சமாதானப் படுத்தினாள். ஆனால் அது இன்று வெளி கிளம்புகிறது.

வக்கீல் அருணாச்சலம் அலுவலகத்தில் எதிரே உட்கார்ந்திருந்த மேரியிடமும், டேவிட்டிடமும், ‘லாரன்ஸ் சொந்தக்காரங்க’ சட்டபூர்வமா கேஸ் நடத்த தயாரா இருக்காங்க, அப்படி போனா எலிசபெத்துக்கு எதுவுமே கிடைக்காம போறதுக்கு வாய்ப்பு இருக்கு. அதனால நான் சமாதானமா பேசி அவ குழந்தைகளுக்கு ஆளுக்கு கொஞ்சம் சொத்தை எழுதி வைக்கறதுக்கு சம்மதிக்க வச்சேன். அப்புறம் மேரி நீ சொன்னதால எலிசபெத்துக்கு ஒரு வேலையை ஏற்பாடு செஞ்சு கொடுத்திருக்கேன். எப்படியும் அவங்க மூணு பேர் நல்லா வாழற அளவுக்கு சம்பளம் தருவாங்க..

ரொம்ப நன்றி சார், இந்த உதவிய மறக்கவே மாட்டேன், சொன்ன மேரியிடம் நான்தான் உனக்கு ‘தேங்க்ஸ்’ சொல்லணும், எப்படியோ ‘கணக்குன்னாலே’ மூஞ்சிய சுழிச்சுகிட்டிருந்த என் பையனை பத்தாவதுல எழுபது மார்க் வாங்க வச்சு காப்பாத்திவிட்டே, சிரித்துக்கொண்டே சொன்னார். சார் ஸ்கூல்ல அவன் ஸ்மார்ட் பையன், கணக்குன்னா கொஞ்சம் அல்ர்ஜியாயிடுவான், அதனால கிளாஸ் டீச்சர் அப்படீங்கற முறையில அவனை கொஞ்சம் ‘கேர்’ எடுத்தோம் அவ்வளவுதான் . விடைபெற்றார்கள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்கு சென்று பிரார்த்தனை முடித்து வெளியே வந்த மேரியை பார்க்க எலிசபெத் நின்று கொண்டிருந்தாள். ரொம்ப நன்றிங்க… இதுக்கெல்லாம் எதுக்கு நன்றி, நல்லபடியா குழந்தைங்க வளர்ந்தா போதும், ஏதாவது உதவின்னா கூச்சப்படாம கேளுங்க….விடைபெற்றாள்

வழியில் “பாதர் பிரான்சிஸ்”‘மேரி டீச்சர்’ எப்படியோ எலிசபெத்துக்கு நல்ல வழி காண்பிச்சுட்டீங்க, கர்த்தர் அவர்களை ஆசிர்வதிக்கட்டும். அப்புறம் டேவிட் எப்படியிருக்கிறார்? சர்ச்சுக்கே வர்றதில்லை, குறையுடன் சொன்னவரை பார்த்த மேரி பாதர் அவருக்கு சர்ச்சுக்கு வந்து தன்னை கிறிஸ்துவனா காட்டறதை விட இயல்பாவே காட்டிடறாரு, அதனால எங்களோட வர்றதுக்கு அவருக்கு நேரமிருக்கறதில்லை.

உண்மைதான் மேரி டீச்சர், அன்னைக்கு எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு, நான்தான் “எலிசபெத்துக்கும் டேவிட்டுக்கும்” கல்யாணம் பண்ணி வச்சேன். அதுக்கு முன்னாடியாவது அந்த பெண் சொல்லியிருக்கலாம், எனக்கு லாரன்ஸ் கூட பழக்கம் இருக்குதுன்னு. “பாவம் நல்ல பையன் டேவிட்” அவனா உழைச்சு ஒரு கம்பெனியை உருவாக்கி நாலு பேருக்கு வேலைய கொடுத்துட்டு இருந்தான். நாங்கதான் தனியா இருக்கறவனாச்சேன்னு இந்த எலிஸ்பெத்தை அவங்க அம்மாகிட்டே பேசி ஏற்பாடு செஞ்சோம். ஆனா கல்யாணத்தன்னைக்கு இராத்திரியே அவ லாரன்ஸ் கூட போயிட்டா.. ஏசுவே….நெஞ்சில் சிலுவை இட்டுக்கொண்டார்.

பாதர் ஒரு கன்னத்தில் அடிச்சா மறு கன்னத்தை காட்டுன்னு சொல்லுவாங்க, டேவிட் அப்படி செய்யலை, அதுக்கு மேலயும் செஞ்சுட்டாரு. அவ்வளவு அவமானத்துலயும், அவங்க இரண்டு பேரும் இவர் முன்னாடியே குடும்பம் நடத்த வந்ததும், ஒரு ஆண் மகனா எந்த மன நிலையில அவரால இந்த சமூகத்துல நடக்க முடிஞ்சிருக்கும், அது மட்டுமில்லை, லாரன்ஸ் அந்த பொண்ணை கூட்டிட்டு போய் குடும்பம் நடத்துனதுமில்லாம, டேவிட்டை பார்த்து கண்டபடி பேசறதும், கிண்டல் பண்ணினதும், ஏதோ இவர் அவங்களை ஏமாத்திட்ட மாதிரி நடந்துகிட்டாங்க, அவரை பொருத்த வரைக்கும் எலிசபெத், அதுக்கப்புறம் லாரன்ஸ் இவங்க இரண்டு பேரையும் முன்ன பின்ன கூட தெரியாது, கல்யாண பேச்சு வரும் போதுதான் எலிசபெத்தை தெரியும், அதுல வந்த பிரச்சினை லாரன்ஸ். ஆனா லாரன்ஸ் என்னமோ இவரை ஜென்ம விரோதி மாதிரி நடந்துகிட்டது, அப்பப்பா, அத்தனையும் பொறுமையா ஏத்துகிட்டாரு. எங்களுக்கு கல்யாணம் ஆன போது கூட அவர் சொன்னது இதுதான், அந்த பெண் என்னை விட்டு போனதை கூட நான் மறந்துட்டேன், ஆனா அவன் கூட சர்ச்சுல ஒரு கல்யாணத்தை செஞ்சுட்டு வாழலாமில்லையா நாளைக்கு எதுனா நடந்துடுச்சின்னா அவ வாழ்க்கை பாதிக்குமே அப்படீன்னுதான் சொல்லுவாரு. அதே மாதிரி லாரன்ஸ் தினமும் அவ மேல சந்தேகத்துலயும், குடியினாலயும் அவளை இம்சிச்சப்ப அவர் ரொம்பவுமே என்கிட்டே சொல்லி புலம்புவாரு. பாவம் அந்த பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமையலையேன்னு. அப்பக்கூட அவ செஞ்ச காரியத்துக்கு அப்படித்தான் வேணும்னு நினைக்கவேயில்லை‘பாதர்’இப்ப கூட அவளோட பிரச்சினையை சரி செஞ்சு கொடுன்னு வற்புறுத்தி சொன்னதுனாலதான் இவ்வளவு ஏற்பாடும் என்னால செய்ய முடிஞ்சுது.

‘பாதர்’ மெல்லிய புன்னகையுடன் சொன்னார் உண்மைதான் டேவிட்..ஒரு உண்மையான கிறிஸ்துவன்தான்..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *