கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 29, 2023
பார்வையிட்டோர்: 1,727 
 
 

(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கோம்பை என்பதோர் ஊரின் பெயர். ஊரின் பெயர் எனும்போது, அம்பாசமுத்திரம் அம்பை ஆகியதுபோல என்று எண்ணலாகாது. கோம்பை என்பதே முழு பெயர்தான். ஊர்களின் பெயர்களுக்குப் பெரும்பாலும் துல்லியமானதோர் வரலாறு சார்ந்த, பண்பாடு சார்ந்த காரணம் இருக்கும். அல்லது இடுகுறிப் பெயராக இருக்க வேண்டும். அதைச் சுருக்கி விளிக்கும்போது, பெயர் அதன் தன்மையை இழந்து, இளித்துக்கொண்டு நிற்பது அடாது. எடுத்துக்காட்டாக, சிராப்பள்ளி என்று பெயர் வரக் காரணம் உண்டு. அது திரு எனும் சிறப்பு அடைமொழி பெற்று திருச்சிராப்பள்ளி ஆகியது. அதைத் திருச்சி எனக் குறுக்கும்போது பொருளற்ற முண்டமாக நிற்பது அருவருப்பாக இல்லையா? ஆனால் கோம்பை அவ்வாறல்ல.

இந்திய தேசிய நாய்களில் ராஜபாளையமும் கோம்பையும் பெயர் பெற்றவை. இடத்தின் பெயர் நாய்க்கும் ஆனது எனின் தமிழ் இலக்கணத்தின் படி அது இட ஆகுபெயர்.

கோம்பை என்பது ஊர் பெயர் என்பதுபோல், நாயினத்தின் பெயர் என்பதுபோல, அது ஒரு ஆடவப் பெயரும் ஆகும். சாதி, இனப் பாகுபாடுகள் துறந்து அந்தப் பகுதி மக்கள் அப்பெயரை அணிந்து வாழ்ந்தனர்.

இனி உங்களில் சிலர், கோம்பை எங்கிருக்கிறது எனும் கேள்வி எழுப்புவது குறித்து :தேனி மாவட்டத்தில், தேனியில் இருந்து கம்பம் போகும் சாலையில், சின்னமனூர் என்றொரு ஊர் வரும். அங்கு இறங்கி தேவாரம் போக வேண்டும். தேவாரத்தில் இருந்து போடிநாயக்கனூர் போகும் பாதையில் ஐந்தாறு மைல் தூரத்தில் இருப்பது கோம்பை.

கோபம், ஆத்திரம் வரும்போது இளக்காரமாகவும் “அவன் என்ன பெரிய கோம்பையா?” என வினவுவதுண்டு. அது கோம்பை எனும் கோபம் மிகுந்த நாயைக் குறித்தும் இருக்கலாம். கோம்பை எனும் பெயரில் ஒரு சித்தன் வாழ்ந்து சமாதி அடைந் ததற்கு அடையாளமாக, ஈத்தாமொழி அருகில் இன்றும் மக்கள் வழிபடும் கோம்பைச்சாமி மடம் ஒன்றுளது கன்னியாகுமரி மாவட்டக் கடற்கரையோரம். முழு நிலா அன்று கூட்டமாகக் கிடக்கும். ஆண்டில் ஒருநாள் குருபூஜை உண்டு. விடுமுறை நாட் களில் வில்வண்டி, சக்கடாவண்டி, கூண்டுவண்டி, பூட்டிக் கொண்டு போய், கொல்லா மரக் காடுகளுக்கு ஊடாகப் போகும் வண்டித்தடத்தில் பைதாக்கள் மணலில் புதைய நகர்ந்து, தென்னந் தோப்பில் நடுவில் இருக்கும் கோம்பைச்சாமி மடத்தை அடைந்து, வண்டியை அவிழ்த்து, அடுப்புக் கூட்டி, விறகு தேடி, சுனையில் தண்ணீர் கோரி, பொங்கிச் சாப்பிட்டு வருவார்கள். கோம்பைச்சாமியின் மடத்தில் நின்றால் கடல் அலை அடிப்பது கேட்கும்.

கோம்பைச்சாமியின் பெயரால் அந்தப் பக்கம் கோம்பை எனும் பெயர் அதிகமாக வழங்கி வந்திருக்கலாம். இராமநாதபுரம் பக்கத்தில் இருந்து வந்தவன், கிறுக்கன் போலவும் பரதேசி போலவும் நாட்டுப்புறங்களில் சுற்றித் திரிந்ததாயும் தீராத நோய்கள் தீர்த்ததாகவும் நாட்டார் கதைகள் விதந்து சொல்கின் றன. கிறுக்கன் எனும் சொல்லுக்கு மாற்றுச் சொல்லாகவும் கோம்பை மொழியில் வழங்கியது. செல்வந்தரான நாடார் ஒருவர் கோம்பைச்சாமி மடத்துக்குப் பெரியதோர் தென்னந் தோப்பு எழுதி வைத்தார். இன்றுபோல் இருநூறு ரூபாய்க்கு குழல்விளக்கு வாங்கிக் கொடுத்து அதில் சிவப்பு வர்ணத்தில் பெயர் எழுதி வைக்கும் அற்பர்கள் அன்றில்லை.

மேலும் கூனாங்கண்ணி போல கோம்பையும் இன்று துலங்காமற் போன சிறுதெய்வம், நாட்டார் மரபில், நாஞ்சில் நாட்டில் விசேட நாட்களில் கொடை கழிக்கும் போது, படுக்கை வைக்கும் போது, இருபத்தேழு சிறுதெய்வங்களின் பெயர் கூடத் தெரியாத இளைய தலைமுறைக்கு, கண்காணிக்கும் மூப்பர்கள் கட்டளை இடுவார்கள், “ஏ! கோம்பைக்கு ஒரு இலை போடப்பா” என்பதை முனைவர் அ.கா.பெருமாள் பதிவு செய்கிறார்.

நூறே வீடுகள் கொண்ட எமது குக்கிராமத்தில், பண்ணையார் கோம்பை, மருந்துக்கடை கோம்பை, நெல் அளவு கோபால் அண்ணன் மகன் கோம்பை, சவளக்காரன் கோம்பை என ஞாபக வட்டத்தில் சில பெயர்கள் தங்கிப்போயின.

கன்னியாகுமரிக் கடலில் பென்னம் பெரிய அலைகளாகப் புரண்டு மறிந்தன. கடற் சீற்றம் கொண்ட ஆனியாடி மாதங்கள். பரவருக்கும் முக்குவருக்கும் கடலுக்குப் போகவே யோசனை யாக இருந்தது. என்றாலும் பயம் என்பது அவரது ஒன்பான் ரசங்களில் ஒன்றல்ல.

துறையில் நின்று பார்க்கும் போது கட்டுமரங்கள் அலை களின் மீது துள்ளி விழுவதும் தோன்றி மறைவதுமாக இருந்தன. மீன் பாடு மிகக்குறைவு. கரையேறி வந்த மடிகள் கனமற்று இருந் தன. வலையிலன்றித் தூண்டிலில் பிடிபடும் பெரிய மீன்கள் நெய்மீன்,பாரை, கட்டா, விளமீன், திரைச்சி, வேளா, பிள்ளைச் சிறா என எதுவும் வந்திறங்கிய மடியில் காணோம். ஒன்றிரண்டு கிடந்தாலும் கொள்ளை விலை. நெத்திலியும் சாளையுமாக வந்தன சில மடிகளில்.

கன்னியாகுமரி கடற்கரையில் ‘உபகார மாதா’ எனப்படும் LADY OF RANSOM CHURCH சர்ச் மிகப் பழமையானது. ஆபரணங்கள் அணிந்து மிக அலங்காரமாக இருந்த காரணத்தால் அவள் ‘அலங்கார மாதா’ என்றழைக்கப்பட்டாள். ஒருபுறம் பாலன் ஏசுவும் மறுபுறம் சூசையப்பரும். முன்புறம் அந்தோணியாரின் குருசடி. அலங்கார மாதாவின் கோயிலின் வலதுபுறமாக மணலில் கீழே இறங்கினால் மடி வந்து இறங்கும் மீன்பிடித்துறை. காலையில் கூ கூவென்று கிடந்தது.

கட்டுமரங்கள், வள்ளங்கள், தோணிகள் கரையேறி வந்ததும் கூட்டமாய் மொய்த்த முக்குவர், பரவர் குடும்பங்கள், வியாபாரி கள், தலைச்சுமட்டுக் கூடைக்கும் சைக்கிள் கூடைக்கும் மீன் வாங்குவோர், வட்டிக்குக் கடன் கொடுத்தவர், கறிக்கு மீன் எடுக்க வந்தவர், நாய்கள், காகங்கள்…

பிரசவம் ஆன பெண்களுக்கு மார்பில் பாலூற முட்டி, பால் காரல், பிள்ளைச் சிறா கிடைக்குமா என மடி மடியாகத் தேடி நடந்தவர். தாய்ப்பால் ஊறும் மீன்களுக்கு மீனவர் விலை வைப்ப தில்லை. கொடுத்ததை வாங்கிக் கொள்வார்கள். பிள்ளைத் தாச்சிக்கு மீன் கேட்டு நின்றால் அந்த மீனை மற்றவர் எவ்வளவு விலை வைத்துக் கேட்டாலும் தருவதுமில்லை.

கொற்கையையும் புகாரையும் தொண்டியையும் போல இந்தத் துறையை சங்கப்புலவன் பாடியதாகத் தெரியவில்லை. என்றாலும் நாட்டார் வழக்குகளில் அதங்கோட்டு ஆசானும் தொல்காப்பியனும் திருவள்ளுவ நாயனும் கூழுக்குப் பாடிய அவ்வையும் தோன்றிய மண் என்பார்கள் குமரி மண்ணை.

முக்கால் அங்குலத்துக்கு பட்டைபோலத் தலையைச் சுற்றி குறுமயிர் விட்டு மற்ற மண்டையை வழித்து அந்தோணியார் நேர்ச்சை நிறைவேற்றிய சிறுவர் குஞ்சி ஆட, குரல் கொந்தளிக்க, அம்மணமாய் கடற்கரை மணலில் புரண்டும் கடலலை மீது தாவி விழுந்தும் கூகூவெனக் கூவிக் கட்டுமரங்களைச் சுற்றி மணலில் ஓடியும் கடற் காகங்களைத் துரத்தியும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அலங்கார மாதா கோயில் பின்புறமிருந்த மணலில் சைக்கிளை ஸ்டான்ட் போட்டு நிறுத்தி, பூட்டி, தலை முண்டு எடுத்து பதினெட்டு மைல் சைக்கிள் மிதித்து வந்த வியர்வையைத் துடைத்தவாறு, கடற்புறத்து மணலில் கால்பதிய நடந்தான் சவளக் காரன் கோம்பை.

வரும்போது வெற்றுச் சைக்கிள்தான். பின்னால் நீள் சதுரமான பெரிய லோடு கேரியரில் வைத்துக் கட்டிய வெற்றுப் பிரம்புக் கூடைதான். என்றாலும் ஏற்றங்கள் கொண்ட சிமென்ட் சாலை. சர்.சி.பி. ராமசாமி ஐயர் திருவிதாங்கூர் சமஸ்தான திவா னாக இருந்த காலத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து கரமனை, பாலராமபுரம், நெய்யாற்றின்கரை, பாறசாலை, களியக்காவிளை, குழித்துறை, தக்கலை, கோட்டாறு, கொட்டாரம் வழியாகக் கன்னியாகுமரிக்கு காங்கிரீட் சாலை போட்டார். பராமரிப்பு இன்றி சாலை நொந்து, துவண்டு, சவண்டு, சில இடங்களில் தார் கலந்த சல்லியால் செப்பனிடப்பட்டுக் கேவலமாகக் கிடந்தது. அதில்தான் சைக்கிள் சமுண்டி வரவேண்டும். அதிகாலைக் காற்று எனினும் ஆனியாடி மாதத்துத் தூற்றலும் கொந்தளம் கொண்ட சீதளம். குடைபிடித்துக் கொண்டோ, சம்பைக் கோரையை உலர்த்தி அடுக்கி முடைந்த கொங்காணி போட்டுக் கொண்டோ பதினெட்டு மைல் ஏற்ற இறக்கத்தில் சைக்கிள் சமுண்ட இயலாது. காற்றென்றால் காற்று, மழை என்றால் மழை, சாரல் என்றால் சாரல், ஊதல் என்றால் ஊதல், கொடும் வெயில் என்றால் வெயில்…

நாலடி நீளம் இரண்டடி அகலமும் ஒன்றரை அடி உயரமும் கொண்ட நீள்சதுரமான சூரல் மூங்கிலில் நெருக்கமாகவும் இறுக்கமாகவும் முடையப்பட்ட பிரப்பங்கூடை. சைக்கிளின் லோடு கேரியரில் வைத்து இறுக்கமாக வரிக்கொச்சக் கயிறு கொண்டு முறுக்கி வரிந்து கட்டப்பட்டிருக்கும். மீன் பாரத்துக்கு கூடை அனங்காது.

மீன் மடி வந்திறங்கும் துறையில் ஏலத்தில் மீன் வாங்கி, உடன் தானே ரொக்கமாகச் சக்கரம் எண்ணிக் கொடுத்து, விற்பனைக்கு வெளியே எடுக்கும் தோதிலும் மீனின் தரத்திலும் பருவத்திலும் கூடையில் அடுக்கி, இடக்கையில் ஹான்டில் பாரும் வலக்கை யால் கூடையையும் அணைத்துப் பிடித்து, துறையில் இருந்து மணல் பாய்ந்த ஏற்றத்தில் சைக்கிளைத் தள்ளி, அலங்கார மாதா கோயில் முகப்பைத் திரும்பிப் பார்த்து, மனதுள் சிறு பிரார்த்தனை செய்துவிட்டு, சாலைக்கு வரவேண்டும். சாலையும் ஏற்றம்தான். கோம்பை, பாரம் நிறைந்த சைக்கிளைத் தள்ளிக்கொண்டு ஓடி, துள்ளியேறி, பாரில் நின்றுகொண்டு ஆசாக மிதித்து, இருக்கையில் அமரும் விதம் ஒரு அழகு.

ஏறி மிதித்தால் கொட்டாரம், மைலாடி விலக்கு, தாமரைக் குளம் விலக்கு. முதல் எடுப்பில் சுசீந்திரம் பாலத்துக்கு முன்பு, பாழையாற்றின் வடகரையில் இருக்கும் அக்கரையில், பாசுப் பிள்ளை காப்பிக்கடை முன்பு சைக்கிளை ஸ்டான்ட் போட்டு நிறுத்துவான் கோம்பை.

பாசுப்பிள்ளை காப்பிக் கடையில் சுடச்சுட தோசை சுட்டு, கண்ணாடிப் பெட்டியில் அடுக்கி வைத்திருப்பார். இந்தக் கதை நடக்கும் காலத்தில், ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தி, ஒரு தோசை காலணா.

இளைய வாசகர்களின் தகவலுக்காக – அன்றைய நாணய மாற்று, ரூபாய்க்கு பதினாறு அணா.அணாவில் நான்கில் ஒன்று செம்பால் செய்த ஓட்டைக் காலணா. இன்றைய அளவீட்டில் அணா என்பது உத்தேசமாக ஆறு காசு.

நான்கு தோசை, ரசவடை, சுக்குக் காப்பி. ஒன்றரை அணா எண்ணி வைத்துவிட வேண்டும்.

தோசை எனில் இன்றைய ரோஸ்ட் அல்ல. கெட்டியான புளித்த மாத்தோசை. ஐந்தங்குல விட்டமும் காலங்குல கனமுமாக மெத்தென்றிருக்கும் வட்டமான தோசை. தொட்டுக் கொள்ள இலகுவாக அரைத்து நீளமாகக் கரைத்துத் தாளித்த சுள்ளென் றிருக்கும் தேங்காய் சட்டினி. பொரிகடலைச் சட்டினியும் அன்று அறிமுகம் ஆகி இருக்கவில்லை. அல்லது பூசணிக்காய் சாம்பார். பூசணிக்காய் என்பதோ எமக்கு பரங்கிக்காய். இன்றுபோல் இரண்டு இட்லிக்கு ஐந்து வகை சட்னியும் மொளகாப்பொடியும் சாம்பாரும் அன்று தேவையாக இருக்கவில்லை.

காலையில் ஒன்றரை அணா செலவென்பது எந்த மீன் விற்கும் சவளக்காரனுக்கும் பெரிய ஆடம்பரம்தான். என்றாலும் கோழி கூவியதும் எழுந்து, உமிக்கரி வைத்துப் பல் தீற்றி, குளிர்ந்த பழஞ்சித் தண்ணியை உப்புப் போட்டுக் கலக்கிக் குடித்துவிட்டு சைக்கிள் மிதிப்பது. திரும்பியும் மீன் பாரத்துடன் மிதிக்க வேண் டும் பதினெட்டு மைல்கள். போம் வழியில் அக்கரையில் இருந்து தேரூர். தண்டையார் கோணம், புதுக்கிராமம், திருப்பதிசாரம் வழியாக மீன் விற்று வீடு திரும்ப மதியம் கவிந்து விடும். வழியில் வேறென்ன தின்று பசியாற்ற?

இந்தியா சுதந்திரம் வாங்கி, மொழிவாரி மாநிலங்கள் அமைந்து, கை ராட்டை பொறிக்கப்பட்ட மூவர்ணக் கொடி அடா வடியாக தேசத்தை ஒரு குடைக்குள் ஆண்ட வந்த காலம். பாட்டுடைத் தலைவனான கோம்பைக்கு நாற்பது நாற்பத்தைந்து பருவம் எனில் பாடும் பாணனுக்கு பத்துப் பன்னிரண்டு.

அன்று வாய்ப்பாக மீனேதும் கிடைக்கவில்லை கோம்பைக்கு. அவனுக்கு மாத்திரம் என்றில்லை, மற்ற சைக்கிள் லோடு சவளக்காரர்களுக்கும், தலைச்சுமட்டு சவளக்காரிகளுக் கும், காரலும் குத்தாவும் தான் கிடைத்தன. காரல் என்றும் பூச்சி என்றும் சொல்வார்கள் பழைய ஒரு ரூபாய் வட்டத்தில் முள் நிறைந்த மீன் அது. பிய்த்துத் தின்ன எதுவும் இருக்காது. குத்தா என்பது நாவிதன் கத்தி வடிவில், சற்றுப் பெரிதாக இருக்கும். அதுவும் முட்செறிந்த மீன். ஆனால் நெய்ச்சத்து கொண்டது. குழம்பு ஏகச் சுவையாக இருக்கும். எனினும் முள் கருதி விரும்பி யாரும் வாங்குவதில்லை.

சில சமயம் சாளை மயமாக இருக்கும். குவியல் குவியலாக மடி இறங்கும். விலை சகாயமாகக் கொடுக்கலாம். மண்டை வீங்கிச் சாளை, மத்திச் சாளை, கொழுவு சாளை – இதைக் கொய் யாளை என்பாரும் உண்டு- கண்ணன் கொழுவு சாளை, நெய்ச் சாளை எனக் கலந்தும் கிடைக்கும். நாஞ்சில் நாட்டு வெள்ளாடிச்சி கள் நெய்ச்சாளையும் கொழுவு சாளையும் விரும்பி வாங்குவார் கள். மண்டைச்சாளை எனும் மண்டை வீங்கிச் சாளையைக் கையாலும் தொட மாட்டார்கள். மத்திச்சாளை மேலும் அதிக நாற்றமுடைத்து எனவே பிரியப்பட்டு வாங்குவதில்லை. தினமும் சாளை என்றாலும் சடைத்துக் கொள்வார்கள்.”சவம் தெனமும் சாளைப் புளிமுளமா?” என்ற ஆடவர் சலிப்பின் தொடர்ச்சி. அன்று மீனை எண்ணெயில் வறுக்கும் சுவாரசியத்தையும் மக்கள் விரும்பவில்லை. ஒன்றில் பச்சைத் தேங்காய் அரைத்த புளிமுளம், இன்றேல் தேங்காய் வறுத்து அரைத்த கறுத்தக் கறி. சிலசமயம் முதல்நாள் உப்புப் புளி விட்டு அவித்து வைத்து, மறுநாள் அவியல்.

சாளை எண்ணெய் மிகுந்த மீனினம். வால் நறுக்கி, வயிறு வகுந்து, குடல் எடுத்து, தலை கொய்து வீசி, உப்புப் பரல் போட்டு உரசி உரசிக் கழுவிக் குழம்பு வைத்தாலும் குழம்பில் எண்ணெ யாகப் படர்ந்து நிற்கும். சில பெண்டுகள் நிதானமாக உட்கார்ந்து துல்லியமாகச் சாளைக்குத் தோல் உரித்து விடுவார்கள். சாளையில் தோலுரிப்பது என்பது கருந்திராட்சையில் தோலெடுப்பது போல.

சாளை பட்டால் கூடை கொள்ளாது. விலை சகாயமாக வைத்து விற்பான் கோம்பை. அணாவுக்கு பதினாறு என்று கூவினாலும் இரண்டு கூடுதலாகக் கேட்பார்கள். நன்றாகப் பிரம்பு போல் மீன் தெறித்துக் கிடந்தாலும் கூடைக்குள் கை விட்டுப் பொறுக்குவார்கள். எடுத்துக் கொடுத்தால் பத்தில் நான்கைக் கழிப்பார்கள். நான்கணாவுக்கு மொத்தமாக வாங்கும்போது, மேலும் இரண்டு கூடுதலாக எடுத்துக் கொள்வார்கள். தெருவில் வியாபாரமும், அதுவும் வெள்ளாடிச்சிகளிடம் கச்சவடம், மிகக் கடினமானது. கொடிது கொடிது மீன் கச்சவடம் கொடிது.

தனது ஊரை அடுத்திருந்த சிற்றூர்களில் மட்டுமே கோம்பைக்கு வியாபாரம். ஒரு கூடை மீன் செலவாக அது போதும். மீன் விற்கும் சவளக்காரர்களுக்குள் ஒரு ஒழுங்கு உண்டு. ஒருத்தன் பதிவாகப் போகும் ஊருக்கு மற்றவன் போகமாட்டான். அதற்காக விலையை அநியாயமாக ஏற்றி விற்பது என்பதல்ல.

காலையில் ஆறு மணிக்கு மடி இறங்கும் மீன் பன்னிரண்டு மணிக்குள் முதலாகா விட்டால், நொந்து அழிந்து போகும். ஐஸ் உடைத்துப் போட்டு, மூன்று நாட்கள் முன்பு செத்ததை, வைத்திருந்து விற்கும் செத்த வியாபாரம் அன்று இல்லை.

பத்தரை மணிக்குள்ளாவது நல்லப்பம் யாவாரம் தொடங்கி விட வேண்டும். மீனைக் கழுவி, வெஞ்சணம் அரைத்து, குழம்பு கூட்டிப்போட்டால் மதியச் சாப்பாட்டுக்கு சரியாக இருக்கும். மணி பதினொன்று தாண்டிவிட்டால் வெள்ளாடிச்சிகள் கோம்பை யைத் தேட ஆரம்பிப்பார்கள்.

“என்னட்டி, பொங்காண்டாமா இண்ணைக்கு… தெருவைத் தெருவை எட்டிப் பாக்கே?”

“யாத்தா, கோம்பையைத் தாலா தேடுகேன்! ஒண்ணும் சீரில்லேண்ணா மரக்கறி வேண்டணும்.”

“ஏட்டி, இண்ணைக்கு வெள்ளிகெழமையில்லா? ஒருநாள் கூட மொடக்கமில்லாம மீன் நாத்தம் வேணுமாக்கும் ஒனக்கு?”

“எனக்கு ஒரு தொவையலும் ரெசமும் போரும். ஒங்க பேரன் மீன் நாத்தம் இல்லேண்ணா சட்டிப் பானையை இல்லா தூக்கிப் போட்டு ஒடைக்கா!”

பொதுவாக வெள்ளி, செவ்வாய், அமாவாசை, பௌர்ணமி, கார்த்திகை போன்ற நாட்களிலும் பண்டிகை நாட்களிலும் மீன் கூட்டுவதில்லை. ஆனால் சிலருக்கு அன்றும் விலக்குக் கிடை யாது. சுடுகாட்டுக்கு காவல் நிற்கும் சுடலைக்கு பிணம் எரியாத வெள்ளிக்கிழமைகளில் கருவாடு போட்டுச் சுடுவார்கள் என் றொரு கதை உண்டு. சுடலைக்குத் தெரியாது போலும் பிணம் வேறு மீன் கருவாடு வேறு என.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர் என அறியப்படு கிறவர் பரவர், முக்குவர், சவளக்காரர் என்பார். இதில் பரவர் என்பார் தொல்குடிகள். பெரும்பாலும் கருப்புத் தோலுடையவர், வீரமும் முரட்டுத்தனமும் கொண்டவர். இந்துக்களும் உண்டு, மதமாற்றம் பெற்று கிறித்துவரானவரும் உண்டு. முக்குவர் என்பார் மலையாளத்திலிருந்து வந்த குடிகள். பெரும்பாலும் கத்தோலிக் கர். சிவப்பாகவும் அழகாகவும் இருப்பதுடன், தன்மையானவர் கள். சவளக்காரர் என்பார் உள்நாட்டு மீனவர். அஃதாவது நன்னீர் மீனவர். இந்துக்களும் கிறித்துவர்களும் உண்டு. பரவருக்கும் முக்குவருக்கும் சவளக்காரர்களைக் கண்டால் இளக்காரம். தொழிலின் தீரம் சார்ந்ததாக இருக்கவேண்டும். ஆனால் எட்கார் தர்ஸ்டன் அவர்களை மறவரை ஒத்தவர்கள் என்கிறார். ‘அபிதான சிந்தாமணி’ அவர்களை செம்படவரில் ஒரு வகையினர் என்றும் சவளத் தடி என்பது படகு தள்ளும் துடுப்பு என்றும் அவர்களில் சிலர் உழுபவர் என்றும் சிலர் நாகசுரக்காரர் என்றும் சொல்கிறது. மேலும் உழுபவர் படையாட்சி பட்டமும் நாகசுரம் வாசிப்பவர் அண்ணாவி பட்டமும் பெறுவர் என்கிறது. பேராசிரியர் வையா புரிப்பிள்ளை முதலானவர் தொகுத்த தமிழ் லெக்சிகன் சவளக் காரர் எனில் வலையரில் ஒரு சாரார், ஓடம் விடுபவர், ஈட்டி பிடிக்கும் சிப்பாய்மார், உலோகத் தாதுள்ள கனிகளில் தோண்டு கருவி கொண்டு வேலை செய்வோர் என்கிறது. மேலும் சவள் தடி எனில் ஓடக்கோல் என்றும் சவளம் என்றால் ஒருவகை மீன் என்றும் கூறுகிறது.

ஆறுகளிலும் குளங்களிலும் மீன் பிடித்தாலும் அன்று மீன் வியாபாரம் செய்தது சவளக்காரர் மட்டுமே. இன்று சகல சாதியினரும் செய்கிறார்கள்.

பெரிய ஊர்களில் சவளக்காரத் தெரு ஒன்றிருந்தது. அஃதன்றியும் பம்பை, முரசு வாசிப்பதில் அவர்கள் வல்லாளர்கள். சிறுதெய்வ வழிபாட்டுத் தலங்களில் திசை பலி செய்வதும் ஆடு, கோழி, பலி செய்வதும் சவளக்கார முரசடிப்பவர்.

கோம்பை சவளக்காரன், நல்ல சிவப்பு நிறம், நெடிய உயரம், எள்ளுப்போலக் கூடக் கொழுப்புத் தங்காத உடல்வாகு, தீர்க்க மான பார்வை, முறுக்கு மீசை, பிடரியில் புரளும் கத்தைத் தலைமயிர். புதுமைப்பித்தன் பாணியில் சொன்னால் அப்படியே தூக்கி அரியணையில் அமர்த்தலாம்.

மேலும், கோம்பை, சவளக்காரத் தெருவில், அம்மன் சாமி கொண்டாடி. மாசி மாதச் செவ்வாய் ஒன்றில், மண்டைக்காட்டுப் பகவதி அம்மனுக்கு கொடை நடக்காத நாளில், அம்மனுக்குக் கொடை கழியும். கோம்பையின் ஊருக்குக் கிழக்கே, எங்களூருக்கு மேற்கே, நடுவில், பிரித்துக்கொண்டு பழையாறு. தவில், முரசு, பம்பை மேளங்களுடன், ஊர்வலமாகப் பழையாற் றின் மேற்குக் கரையில், மணல் பாய்ந்து புன்னைமரங்கள் அடர்ந்து கவிந்து கிடந்த ஆற்றங்கரையில் தண்டு இறங்கி, நீராடி, அம்மனை நீராட்ட பொன் போலத் துலக்கிய பித்தளைக் கடத்தில் நீர் நிறைத்து, ஆற்றங்கரை மணலில் கிழக்குப் பார்த்து படுக்கை போட்டு, ஆராசனை ஆகி, சூடம் காட்டியதும் கும்பக் குடம் கோம்பையின் சிரசில் ஏறும். மேனி எங்கும் மும்மூன்றாய்த் திருநீற்று வரைகள், நெற்றியில் களபம், குங்குமம், கழுத்தில் பிச்சிப்பூ ஆரம், சிரசில் மாலை சூடிய கும்பக் குடத்தில் இன்னரு நீர்க் கங்கை, கையில் சுண்டுவிரல் கனத்தில், ஒரு பாக நீளத்தில் துடிக்கும் பிரம்பு…

பிரம்பை வீசியவாறு, கும்பத்தில் கை தொடாமல், தலையை மட்டும் ஆட்டாமல், அசைக்காமல், சரிக்காமல், குலுக்காமல், உடலில் ஒரு நடன அசைவுடன் கைக்கரணங்களும் கால் சுவடு வைப்புடனும் கோம்பையின் ஆராசனை இருக்கும். இடது கையில் பிரம்பு இருந்தால், பக்கத்தில் திருநீற்றுக் கொப்பரை தாங்கி நடந்து வருபவரிடம் இருந்து திருநீறு எடுத்து வணங்குபவர் நெற்றியில் பூச, கையால் அளிக்க வலது கை. கங்கை நிறைந்த குடம் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு தலையில் இருக்கும், ஆடாது அசங்காது.

கோமரம் வந்த பிறகு கோம்பை சவளக்காரனல்ல, மீன் கச்சவடக்காரனல்ல, அம்மன். வெள்ளாளர், வைராவி, நாடார், தேவர்,சாம்பவர்,ஆசாரி, குயவர், குளுவர், குறவர் அனைவரும் திருநீறு வாங்கி அணிந்து கொள்வார்கள். அம்மன் ஆங்காரமும் அருளும் கொண்டதோர் நாட்டார் தெய்வம். பழையாற்றின் கரையில் இருந்து பீடம் வரும்வரை கோம்பையின் கை சிரசில் இருக்கும் குடத்தைத் தொடாது.

ஆனால் மீன் விற்க வரும்போது கோம்பை வேறு ஆள். கிராமத்து அரசியல் இயக்கம் ஒன்றில் கோம்பைக்கு முக்கிய பொறுப்பும் இருந்தது. அன்று அரசியல் இயக்கங்கள் எதுவும் கள்ளர் குகைகளாக மாற்றம் பெற்றிருக்கவில்லை.

காலை பத்தரை மணி முதல் பதினொன்றரை வரை எங்களூர் தெருக்களில் கோம்பையின் சைக்கிள் மணிச் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும். இரண்டு சுற்றுக்கள் வருவான். முதல் சுற்றில் தவற விட்டவர்கள் இரண்டாம் சுற்றில் வாங்கிக் கொள்வார்கள். முதல் சுற்றில் மூன்றணாவுக்கு அயிலை வாங்கி, காணாது என்று தோன்றினால் இரண்டாம் சுற்றில் மேலும் ஓரணாவுக்கு வாங்குபவர் உண்டு.

சில சமயம் கோம்பையே சொல்வான். இதை என்னுண் ணும்மா வச்சு பிள்ளைகளுக்கு வெளம்புவே? தலைக்கு ஒரு துண்டுண்ணாலும் வேண்டாமா? கூட ஒரணாவுக்கு வேண்டீட்டுப் போ.”

காசு ரொக்கமாகக் கொடுப்பாரும் உண்டு, கடன் சொல் வாரும் உண்டு.

“ஒருவாடு தொகை கூடிப்போச்சு பாத்துக்கம்மா. பொறவு கோம்பையைக் கொற சொல்லப்பிடாது” என்பான்.

சில வீடுகளில் வயல் அறுத்ததும் கொடுத்துத் தீர்ப்பார்கள். அதாவது ஆறு மாதக் கடன். மீன் கூடை காலியானதும் கணக்குப் பார்த்து, குட்டிச்சாக்கில் நெல் அளந்து வாங்கி மீன் கூடைக்குள் வைத்து கோம்பை கொண்டுபோவதுண்டு.

சொந்த வீடும் நெல் வயல் பயிரும் உண்டு. கோம்பை மீன் விற்கும் ஊர்களில் கறால்காரன், யோக்கியன் என வெகு மரியாதை. ஆடவர் மிகு கண்ணியத்துடன் பேசுவார்கள்.

கோம்பை மீன் வெட்டுவது ஒரு சஸ்திர சிகிச்சை நிபுணன் கத்தியைக் கையாள்வது போலிருக்கும். மரப்பிடியில் பித்தளைப் பூண் போட்டு எப்போதும் பளபளவென்றிருக்கும் கூர்ங்கத்தி ஒன்றரைச் சாண் நீளமிருக்கும்.

சோதிடர்கள் சொல்வார்கள், உச்சம் பெற்ற செவ்வாயை ஆட்சியிலிருக்கும் குரு பார்த்தால் சஸ்திர சிகிச்சை நிபுணன் ஆவான் என்றும் நீச்சம் பெற்ற செவ்வாயை ஆட்சியில் இருக்கும் குரு பார்க்க கசாப்புக் கடைக்காரன் ஆவான் என்றும். மூடு அகன்று நுனி சுருங்கி கோம்பையின் அச்சமூட்டும் கத்தியைப் பார்க்கும்போது எவருக்கும் தோன்றும் அது.

பெரிய மீனின் கழுத்தில் கத்தியை வைத்து இறக்கி, கத்தியைச் சரித்து, நடு முள்ளை ஒட்டி வால் நோக்கி ஒரு இழுப்பு- மறுபுறமும் அதே விதத்தில். முள்ளற்ற வாங்குகள் தனியாகவும் வெறும் முள்ளுடனே பிறந்து வளர்ந்ததைப் போன்று தலையும் முள்ளுடனும் மீன் கிடக்கும். பின்பு வாங்குகளைத் தேவைக்குத் துண்டு போட்டுக் கொள்ளலாம்.

சாளை, அயிலை, வங்கடை, நவரை, குதிப்பு, பன்னா,குத்தா எனும் சிறுமீன்களை கோம்பை வெட்டித் தருவதில்லை. முழு மீனாக, எண்ணம் தான் கணக்கு. வீட்டில் கொண்டுபோய் நறுக்கிக் கழுவிக்கொள்ள வேண்டும். நெத்திலி, கூனிப்பொடி, காரல் என்பவற்றை எண்ணுவதில்லை. சின்னச் சின்ன கூறுகளாக, அணாவுக்கு ஒரு கூறு என்ற கணக்கில்.

நெய்மீன்,பாரை, கட்டா, வாவல், திரைச்சி, பிள்ளைச்சிறா என்றால் வெட்டித் துண்டு போட்டுத் தருவான். நெய்மீன், வெள்ளை வாவல் என்றால் தோல் எடுப்பதில்லை. பாரை, கட்டா போன்ற மீன்களின் வாங்குகளில் வால் பகுதியில் கத்தியை நுழைத்தால் சட்டை போல, கோம்பைக்கு, தோல் கழன்று வரும். வாங்கு துண்டு போடும்போது, விலைக்குத் தக்கவாறு விரல் அளவு.

“என்ன கோம்பை, தங்கம் நிறுக்கது மாரி நிறுக்கே?” என்பார்கள்.

“இண்ணைக்கு மீனு பொன்னு வெலம்மா! பொன்னு குடுத்தாலும் மீனு கெடைக்காது” என்பான்.

பிரசவமான வீடுகளில் பால் மீன்களுக்கு பிரத்யேகமாகச் சொல்லி அனுப்புவார்கள்.

மஞ்சள் நிறமுடைய, கரிய வட்டங்கள் கொண்ட பெரிய கட்டா ஒன்றை வாங்காக நறுக்கிக் கொண்டிருந்தான் கோம்பை. பெரிய மீன், முள் இல்லாத கட்டித் துண்டங்கள். தீப்பிடித்த விலையும் இல்லை. இரண்டணாவுக்கு, நான்கு அணாவுக்கு, ஆறு அணாவுக்கு என அவரவர் தேவைக்கு வாங்கில் இருந்து நறுக்கி வாங்கிக்கொண்டு போனார்கள்.

பிரம்புக் கூடையின் குறுக்காக நெடிய பலகைத் துண்டொன்று வைத்து, அதன் மீது மீனை வைத்து வெட்டுவான். கோம்பை மீனையோ முட்களையோ சதைத்து வெட்டுவதில்லை. பலம் பிரயோகிப்பதில்லை. மீனின் வாக்கு, முள்ளின் போங்கு, கத்தியின் கூர்மை, வெட்டுபவனின் ஆசு…

வாவலை வெட்டுவது போல் துப்பு வாளையை வெட்டக் கூடாது. பொதுவாக மீன்களுக்கு நடுப்பகுதியில் பெரிய முள்ளும் இருபுறமும் சிறு முட்களும் இருக்கும். துப்பு வாளைக்கு பெரிய முள் முதுகில் ஓரத்திலும் முள்ளின் இருபுறமும் சீப்பு போல, ஆனால் சாய்வான கோணத்தில் தேங்காய் நாரின் கனத்தில் சிறுமுட்களும். வாளையை சாய் கோணத்தில் முள்ளின் போக்கில் துண்டு போட வேண்டும். வெட்டத் தெரியாமல் வெட்டினால் முழு நாளாகும் முள்ளெடுத்துத் தின்ன. இதுபற்றி நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மிய ‘த்தில் கவிமணி பாடியிருக்கிறார்.

ஒசரவிளை தாணம்மை பெரிய கட்டாவின் தலைக்கும் முள்ளுக்கும் விலை மதித்துக் கேட்டாள்.

“அஞ்சணா தாறன் கோம்பை…”

“வராதம்மா… ஆறணாவுக்கு சல்லி கொறையாது.”

வடக்குத் தெரு கோலம்மை தயங்கித் தயங்கி வந்து நின்றாள். கடன் ஒரு பாடு ஏறி நிற்கிறதென்று அவளுக்கும் தெரியும், கோம்பைக்கும் தெரியும். அறுக்க இன்னும் ஒன்றரை மாதங்கள் ஆகும். ஒருசேரக் கொடுத்து விடுபவள்தான், எனினும் எவ்வளவு என்று கடன் சொல்வது. ஏழு பிள்ளைகளுக்கும் மாமியாருக்கும் போக்கற்று வந்து கிடக்கும் தாயாருக்குமாக எத்தனை அணாவுக்கு மீன் வாங்கி வைத்து விளம்புவது?

“வேற சின்ன மீனா ஒண்ணும் இல்லையா கோம்பை? அறுப்புக்கு இன்னும் நாளு கெடக்கு… சரி! ஒருமிச்சு தந்திருகேன்… முள்ளும் தலையும் மதிச்சுத் தா… பின்னே வேற என்ன செய்ய? கொழம்பைத் தொட்டுக்கிட்டு திங்கட்டும்.”

“அஞ்சணாண்ணு கொண்டுகிட்டுப் போ தாயி..’ என்று சொல்லி, தலையைச் சீர் பார்த்து வெட்டி, முள்ளைப் பதமாகத் தரமாக வெட்டி, சேம்பிலையில் பொதிந்து கொடுத்தான்.

பார்த்துக்கொண்டு நின்ற ஒசரவிளைக்காரி கேட்டாள்”அதென்ன கோம்பை, நான் கேட்டதுக்கு ரொக்கத்துக்கு இல் லேண்ணு சொல்லீட்டு, அந்த அக்காவுக்கு கடத்துக்கு குடுக்கே?”

“போட்டும்மா… அஞ்சாறு கண்ணுங்கயந்தலை இல்லா? கொளம்பு வச்சு பத்து தட்டத்திலே ஊத்தாண்டாமா தாயி? நீ கோவப்படாத…வா, நல்ல வாங்கிலே கணிசமா வெட்டித்தாறன்…”

இரண்டாவது சுற்றுக்கு மேலத்தெரு போனான் கோம்பை. எதிர்பார்த்து வீட்டு வாசலில் பாஞ்சாலி நின்றாள். சைக்கிளை நிறுத்தாமல் மணி அடித்துக்கொண்டு போனான் கோம்பை.

“ஏ! கோம்பை, நில்லு… மனுசி நிக்கது கண் தெரியல்லியா? நீ பாட்டுக்குப் போற!”

ஒரு மரியாதைக்காக சைக்கிளை விட்டு இறங்கினான். பாஞ்சாலி இல்லாப்பட்டவள் அல்ல. பத்தயப் புரையில் வாட்டமில்லாமல் நெல் கிடக்கும். என்றாலும் கடன் மேல் கடன் சொல்லுவாள். விலையில் கறட்டு வழக்குப் பிடிப்பாள். கணக்கில் வெட்டிக் குறைப்பாள். அவளிடம் மீன் வியாபாரம் செய்வது அத்தனை சுகம் உள்ள காரியம் அல்ல.

“என்ன மீனு கட்டாவா? நல்ல கனமுள்ள வாங்குல எட்ட ணாவுக்கு நறுக்கு”

“கோவப்படப்பிடாதம்மா! மீனு அநியாய் விலை. இண்ணைக்கு ரொக்கக் கச்சவடம் தான். கடன் கேக்காதேங்கோ! என்னா நறுக்கட்டா?”

“நீ என்னலே, ரெம்ப ஏறிப் பேசுகே! ஒனக்க அதியாரத்தை யெல்லாம் வேற எவள்ட்டயாம். காணி … நான் நல்ல வழிச்சுத்தமுள்ள வெள்ளாடிச்சியாக்கும்…”

“அதுக்கென்னம்மா இப்போ… துட்டு தந்தா மீனு நறுக்கு கேன். கடம்ணா இல்லே…”

“அப்பிடி என்னலே ஒனக்கு பெரிய கடங்காரி நான்? எனக்க அறுத்தடிப்பு களத்திலே கோழி கொத்துக நெல்லுக்குக் காணாது ஒனக்க கடன்..’

“அதுக்காச்சுட்டி நான் கோழியாட்டு வந்து கொத்த முடியுமா? ஊரு முச்சூடும் பணத்தை விதைச்சுப் போட்டுக்கிட்டு நான் காலம்பற என்னத்தைக் கொண்டுட்டு கடப்புறத்துக்குப் போக? பரவம்மாருட்ட நான் கடஞ் சொல்ல முடியுமாம்மா?”

பேசிக்கொண்டு இருக்கும்போது, கூடைக்குள் கைவிட்டு, முக்கால் ரூபாய்க்கும் குறையாது விலையுள்ள வாங்கைக் கையில் எடுத்து, “இது போரும் எனக்கு, எட்டணா கணக்கிலே வச்சுக்கோ!” என்றாள் பாஞ்சாலி.

“அது என்ன கணக்கும்மா? நீங்க பாட்டுலே எடுத்துக்கிட்டுப் போனா எப்பிடி? கொண்டட்டுப் போங்க, ஆனா கையோட முக்கா ரூவா வரணும்…”

உள்ளே போன பாஞ்சாலி நெடுநேரம் திரும்பக் காணோம்.

நடுத்தெருவில் நின்று கோம்பை உரத்துக் கூப்பிட்டான். “யம்மா, யம்மோவ்… சட்டுணு கொண்டாருங்கோ, நான் போகாண்டமா!”

“போயேன், யாரு வேண்டாம்ங்கது?”

“வெளையாடாதம்மா… காசை எடுத்தாருங்கோ. நேரம் போகுல்லா! இங்கிண சுணங்கீட்டு நிண்ணா மீனு கச்சவடம் ஆகாண்டாமா?”

சற்று நேரம் அனக்கமில்லை.

மேலும் உறைத்த குரலில், மறுபடியும் “யம்மா,யம்மோவ்…துட்டுக் குடுங்கம்மா. போட்டும்…யாவாரத்தை மெனக்கெடுத்துனா எப்பிடி?”

‘விறீல்’ என்று வெளியே வந்தாள் பாஞ்சாலி. “என்னலே,சவளக்கார நாயே, நாளைக்குத் தாரம்ணு சொன்னக் கேக்க மாட்டயா?”

“மீனுக்குள்ள சக்கரத்தைக் குடும்மா… இல்லே, மீனைக் கொண்டா, நான் போட்டு… நாயே பேயேண்ணு பேச எனக்கும் அதிய நேரமாகாது.”

“என்னலே சொன்னே?” என்று விரைந்து வந்த பாஞ்சாலி யின் வலக்கை கோம்பையின் கன்னத்தில் அறைந்தது.

சத்தம் கேட்டு வாசற்படிகளில் முளைத்த பெண் முகங்கள் திகைப்புப் பூத்து மயங்கி நின்றன.

அதிர்ந்து பதறிப் போன கோம்பைக்கு கனத்த தலைகுனிவாக இருந்தது. யாதொன்றும் பேச, செய்ய ஆற்றாமல் சற்றுத் தூரம் சைக்கிளை உருட்டிச் சென்றான். பின்பு மெதுவாகப் பெடல் மிதித்து கால் தூக்கிப் போட்டு ஏறி மிதித்தான் பக்கத்தில் இருந்த சொந்த ஊருக்கு.

பிறகு எக்காலத்திலும் கோம்பை அந்த ஊருக்குள் நுழையவே இல்லை.பாக்கி நின்ற கடன்களை வசூலிக்கக் கூட. வெகுகாலம் வேறு சவளக்காரர்களும் போவது கிடையாது.

– டைம்ஸ் இன்று, டிசம்பர் – 2008.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *