ஒரு ஊசி… ஒரு ஆயின்மென்ட்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 13,036 
 

டாக்டர் கஜேந்திரன் – டாக்டர்களுக்குள் ஒரு தவறான உதாரணம். எந்த நோயாளியைப் பரிசோதிக்கும்போதும், அவரிடமிருந்து எவ்வளவு கறக்கலாம் என்பதிலேயே குறியாக இருப்பார்.

சண்முகத்துக்குத் தலையில் லேசான சிராய்ப்புதான். காலையில் பாத்ரூமில் விழுந்தவர், தலையில் அடி என்றதும் பதறிப் போய் வந்திருக்கிறார். கொஞ்சம் மருந்து தடவி, ஒரு இன்ஜெக்ஷன் போட்டால் சரியாகிவிடும். ஆனால், ஸ்கேன் எடுக்கச் சொன்னால் எடுத்துக் கொள்வார். பசையுள்ள ஆசாமிதான். ஸ்கேன் செய்யும் லேபுக்கும் கஜேந்திரனுக்கும் இருந்த ஏற்பாட்டின்படி, ஒரு கணிசமான தொகை கிடைக்கும். பெரிய பாதிப்பு இல்லை என்கிற திருப்தி சண்முகத்துக்கும் உண்டாகும்.

வெளியே காத்திருக்கும் அவரை அழைப்பதற்காக அழைப்பு மணியை அடித்தார் கஜேந்திரன். ஆனால், கதவைத் திறந்துகொண்டு வந்தது அவரது மோட்டார் மெக்கானிக் செந்தில்.

‘‘சார் மன்னிச்சுக்குங்க, கொஞ்சம் கார் சாவியைக் கொடுங்க!’’ என்றார் செந்தில்.

‘‘என்ன சமாசாரம் செந்தில், காலைல தானே வண்டியை எடுத்துட்டு வந்தேன்?’’

‘‘அது… வந்து… ஒரு சின்ன தப்பு நடந்திருச்சு சார்! நேத்துதான் ஒரு பயலை வேலைக்குச் சேத்திருந்தேன். பய கொஞ்சம் விளையாடிட்டான். வேலையெல்லாம் முடிச்சு, டெலிவரி கொடுக்கும்போது பழைய ஸ்பார்க் ப்ளக் ஒண்ணை மாட்டிவிட்டிருக்கான். அப்பத்தான் நீங்க மறுபடியும் வண்டியை எடுத்துட்டு வருவீங்க, அது இதுன்னு சொல்லி இன்னும் அதிக கூலி போடலாம் னான். அவன் முந்தி வேலை பார்த்த இடத்துலே அப்படித்தான் செய்வாங்களாம். கொஞ்சம் முன்னேதான் எங்கிட்டே இதைப் பெருமையாச் சொன்னான். பளார்னு ஒரு அறை விட்டுட்டுப் பதறிப் போய் ஓடி வரேன். தொழில்ல ஒரு நேர்மை வேணாங்களா? இப்ப வண்டியை எடுத்துட்டுப் போய், உடனே சரிபண்ணிக் கொண்டாந்துர்றேங்க ஐயா! கோவிச்சுக்காதீங்க!’’

கார் சாவியை வாங்கிக்கொண்டு, செந்தில் போய்விட்டார். டாக்டர் மீண்டும் மணியை அழுத்த, காத்திருந்த சண்முகம் கவலையுடன் உள்ளே வந்தார்.

‘‘ஒண்ணும் கவலைப்படாதீங்க மிஸ்டர் சண்முகம், ஒரு சின்ன ஊசி போட்டுக்கிட்டு… ஆயின்மென்ட் ஒண்ணு தரேன், தடவிக்குங்க. எல்லாம் சரியாயிடும்’’ என்றார் டாக்டர் கஜேந்திரன்.

– மார்ச் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *