(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மூடியிருந்த ‘ரயில்வே கேட்’டுக்கு முன்னும் பின்னும் மத்திய சர்க்காரை மீறி ஒன்றும் செய்ய முடியாத மாகாண சர்க்கார்களைப் போலச் சகல வண்டிகளும் நின்று கொண்டிருந்தன; சகல மக்களும் நின்று கொண்டிருந்தார்கள்.
அப்போது ‘பாம், பாம்’ என்று குரல் கொடுத்துக் கொண்டே வந்த லாரி நம்பர் 3636, “இங்கே ஒரு மேம்பாலம் எப்பொழுது தான் கட்டித் தொலைக்கப் போகிறார்களோ!” என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே நின்றது.
“கவலைப்படாதீர்; அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்துக்குள் அவசியம் கட்டிவிடுவார்கள்!” என்றது அதற்கு முன்னால் நின்று கொண்டிருந்த கார் நம்பர் 4545.
இதைக் கேட்டதும் “நீங்கள் நாசமாய்ப் போக!” என்று சாபம் கொடுத்தது, அவற்றுக்கு அருகே நின்று கொண்டிருந்த ஒரு கைவண்டி.
“யாரது, வண்டியப்பரா? பாவம், அவர் என்ன செய்வார்? மேம்பாலத்தின் மேல் ஏறும் போதும் கஷ்டம், இறங்கும் போதும் கஷ்டம், அவருக்கு!” என்றது முப்பத்தாறு முப்பத்தாறு.
“ஒருவர் கஷ்டப்படுவாரே என்பதற்காக உலகத்தில் உள்ளவர்களெல்லாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க முடியுமா என்ன?”
“முடியாது, முடியாது அதற்கு நாம் தயாராயிருந்தாலும் நம்முடைய எஜமானர்கள் தயாராயிருக்கமாட்டார்கள் ஏனெனில் அவர்கள் மனிதர்கள்; நாமோ இயந்திரங்கள்”
“மேலும்…”
“சொல்லுங்கள், சொல்லுங்கள்?”
“வண்டியப்பர் எப்போதும் வண்டியப்பராகவே இருந்து விடப் போகிறாரா, என்ன? நமது சர்க்கார் நாட்டை முன்னேற்றிக் கொண்டிருக்கும் வேகத்தைப் பார்த்தால் நாளைக்கே அவரும் உம்மைப் போல் லாரியப்பரானாலும் ஆகிவிடுவார், இல்லையா?” என்றது நாற்பத்தைந்து நாற்பத்தைந்து.
கைவண்டி பெருமூச்சுடன் சொல்லிற்று.
‘ம், அந்த நம்பிக்கையுடன்தான் வாழ்க்கையை ஆரம்பித்தார் என் முதலாளி; ஆனால்…’
“என்ன ஆனால்?”
“இப்போது அவர் வாழவில்லை; செத்துக் கொண்டிருக்கிறார்!”
“சர்க்காருக்குத் தெரியாமலா?”
“ஆமாம்!:
“சட்ட விரோதமாச்சே?”
இப்படி ஒரு ‘சட்டப் பிரச்சனை’யைக் கிளப்பியது, கார் நம்பர் 4545.
“சட்ட விரோதம் மட்டுமல்ல; இலக்கிய விரோதமுங்கூட. ஏனெனில், மனிதன் சாகும் போது கூட நம்பிக்கையுடன்தான் சாக வேண்டுமென்று தற்கால இலக்கியகர்த்தாக்கள் சொல்லிக் கொண்டிருக்கும்!”
இப்படி ஒரு இலக்கியப் பிரச்சனை’யைக் கிளப்பியது லாரி 3636.
“அந்தப் பிரச்சனைகளைப்பற்றியெல்லாம் எங்களுக்கு என்ன தெரியும்? எங்களுக்குத் தெரிந்தது ஒரே ஒரு பிரச்சனைதான்” என்றது கைவண்டி.
“அது என்ன பிரச்சனை!” என்று ஆவலுடன் கேட்டது. கார் நம்பர் நாற்பத்தைந்து நாற்பத்தைந்து.
“வயிற்றுப் பிரச்சனை!”
“உமக்குத் தெரியாதா, அந்தப் பிரச்சனையைத் தீர்க்கத்தான் நமது சர்க்கார் ஐந்தாண்டுத் திட்டத்துக்கு மேல் ஐந்தாண்டுத் திட்டமாகப் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்”
“நானும் கேள்விப்பட்டேன்; எங்களுக்கும் அந்தத் திட்டங்களில் இரண்டு அம்சங்கள் இருக்கத்தான் இருக்கின்றன”
“அவை என்ன அம்சங்கள்?”
“ஒன்று, கர்ப்பத்தடை; இன்னொன்று; சுடுகாட்டு அபிவிருத்தி”
“பொய்; பொய் இதெல்லாம் எதிர்க்கட்சிக்காரர்கள் செய்யும் தப்புப் பிரசாரம்!” என்று கத்திற்று கார் நெம்பர் 4545.
“கிடக்கிறார்கள், விட்டுத் தள்ளுங்கள்! அபிவிருத்தியும் பிடிக்கவில்லை. தடையும் பிடிக்கவில்லை என்றால் அப்புறம் என்னதான் செய்வது?” என்றது லாரி நம்பர் முப்பத்தாறு முப்பத்தாறு.
”அப்பள வியாபாரம்!” என்றது கைவண்டி.
”நிறுத்தும்! எதற்காக அப்பளவியாபாரம் தெரியுமா?” என்று அடித்துக் கேட்டது கார் நம்பர் 4545.
”தெரியும், ஏற்கெனவே அந்தத் தொழிலை நம்பிப் பிழைத்து வந்த அபலைகளின் வாயில் மண்ணைப் போடுவதற்காக!” என்றது கைவண்டி.
”பொய், பொய்; இதெல்லாம் எதிர்க்கட்சிக்காரர்கள் செய்யும் தப்புப் பிரசாரம்!”
இந்தச் சமயத்தில் 3636 குறுக்கிட்டுச் சொன்னதாவது
”சரியான பிரசாரம் என்னவென்றால்……”
அது முடிக்கவில்லை ; 4545 தொடர்ந்தது.
”எல்லாவற்றுக்கும் சர்க்காரை நம்பாதீர்கள்; உங்களையும் கொஞ்சம் நம்புங்கள் என்பதே!”
கைவண்டி கேட்டது.
”எங்களை நாங்களே நம்பாவிட்டால் வேறு யார்தான் நம்புவார்கள்?”
”எங்கே நம்புகிறீர்கள்? அப்படி நம்புவதாயிருந்தால் நாட்டின் முன்னேற்றத்துக்காக நமது சர்க்கார் ஐந்தாண்டுத் திட்டங்கள் வகுப்பது போல, வீட்டின் முன்னேற்றத்துக்காக உமது முதலாளியும் ஏன் ஓர் ஐந்தாண்டுத் திட்டம் வகுக்கக் கூடாது?”
”ஓர் ஐந்தாண்டுத் திட்டம் என்ன, ஒன்பது ஐந்தாண்டுத் திட்டங்கள் இதுவரை வகுத்திருக்கிறார்!”
”அப்படியானால் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னாலிருந்தே அவர் ஐந்தாண்டுத் திட்டம் வகுக்க ஆரம்பித்துவிட்டாரா, என்ன?” என்று ஆச்சரியத்துடன் கேட்டது, கார் நம்பர் 4545.
”ஆமாம்!” என்றது கைவண்டி அழுத்தந்திருத்தமாக.
“சபாஷ், அப்படித்தான் இருக்கவேண்டும். ஆமாம், அத்தனை திட்டங்கள் வகுத்துமா உம்மை லாரியப்பராக்க அவரால் முடியவில்லை!”
“எப்படி முடியும்? முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் போது முந்நூற்றுச் சொச்சம் ரூபாய் சேர்ந்தது; மூத்த மகள் கல்யாணத்துக்கு நின்றாள்!”
“அப்புறம்?”
“அரோகரா, ஐந்தாண்டுத் திட்டம் அரோகரா!”
இதைக் கேட்டதும் முப்பத்தாறு முப்பத்தாறு என்ன தோன்றிற்றோ என்னமோ, “திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம்!” என்று தனக்குத் தானே வாய் விட்டுச் சொல்லிக் கொண்டது, மனச் சாந்திக்காக.
“ஓய், உம்மை யார் ‘திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம்’ என்று சொல்லச் சொன்னது?” என்று எரிந்து விழுந்தது, 4545.
“என் அப்பன் திருநாமத்தைச் சொல்ல எனக்கு யார் சொல்ல வேண்டும்?” என்று திருப்பிக் கேட்டது. 3636.
“சரி, சொல்லும்! அவர் கிடக்கிறார்; நீர் மேலே சொல்லும் ஐயா?”
“இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் போது இருநூற்றுச் சொச்சம் ரூபாய் சேர்ந்தது; கல்யாணத்துக்கு நின்றவள் பிள்ளைப் பேறுக்காகப் பிறந்த வீட்டுக்கு வந்தாள்!”
“அப்புறம்?”
“அரோகரா, ஐந்தாண்டுத்திட்டம் அரோகரா!'”
“திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம்!”
“மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் போது நூறு ரூபாய் சேர்ந்தது; எங்கிருந்தோ வந்த வெள்ளம் எஜமானின் குடிசையை அடித்துக் கொண்டு சென்றது!”
“ம், அப்புறம்!”
“அரோகரா, ஐந்தாண்டுத் திட்டம் அரோகரா!”
“திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம்/”
அதற்குள் ‘ரயில்வே கேட்’ திறக்கவே, “ஆமாம், உங்கள் ஐந்தாண்டுத் திட்டங்களின் தொகை ஏன் வரவரக் குறைந்து கொண்டே வருகிறது?” என்று நகர்ந்து கொண்டே கேட்டது, கார் நம்பர் நாற்பத்தைந்து நாற்பத்தைந்து.
“உணவு உற்பத்தி பெருகுகிறதோ இல்லையோ உணவுப் பொருட்களின் விலை பெருகிக் கொண்டே வருகிறதல்லவா? அதனால்தான்” என்றது கைவண்டி.
“பொய், பொய் இதெல்லாம் எதிர்க்கட்சிக்காரர்கள் செய்யும் தப்புப் பிரசாரம்!” என்று சொல்லிக் கொண்டே காற்றாய்ப் பறந்தது கார் நம்பர் 4545.
மறு நாள்……
துறைமுகத்திலே வாடிய முகத்துடன் சரக்குகளை ஏற்றிக் கொண்டிருந்தது கைவண்டி.
“என்ன வண்டியப்பரே, ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்?” என்று கேட்டது லாரி நம்பர் 3636.
“அதை ஏன் கேட்கிறீர்? நேற்று முழுவதும் என் எஜமான் பட்டினி!”
“பட்டினியா, பாரத நாட்டிலா? கிடையவே கிடையாதே!”
“அப்படித்தான் சொல்கிறார்கள், ஆனால் நேற்று முழுவதும் அவர் பட்டினி இருந்தது என்னமோ உண்மை!”
“ஏன், காதல் கொண்ட மனைவியிடம் ஊடல் கொண்டு விட்டாரோ?”
“காதலாவது, ஊடலாவது! அதெல்லாம் ஒன்றுமில்லை; நேற்றைக்கு முதல் நாள் என்னுடைய சக்கரங்களில் ஒன்றை உடைத்துக் கொண்டு நான் நின்றேன். அதைப் பழுது பார்த்ததில் அன்று கிடைத்த கூலி தீர்ந்து விட்டது!”
“அதனாலென்ன, பகல் பட்டினி’ இருந்தாலும் ‘இராப் பட்டினி’ இல்லாமல் இருந்திருக்கலாமே?”
“அதற்கும் குறுக்கே வந்து சேர்ந்தான் அவருடைய மைத்துனன்!”
“ஊரிலிருந்தா?”
“ஆமாம், சாப்பிடப் போகும் போது வந்து, ‘என்ன மாமா? சௌக்கியமா?” என்று விசாரித்தால் அவர் என்ன செய்வார், பாவம்! மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ஒரு கணம் தவித்தார்; மறுகணம் தன்னைச் சமாளித்துக் கொண்டு, “ஏதோ இருக்கிறேன்! வா, உட்கார் சாப்பிடு! என்றார். ‘நீங்களும் உட்காருங்கள்; சாப்பிடலாம்!” என்றான் அவன். “நான் இப்பொழுதுதான் சாப்பிட்டேன்; நீ சாப்பிடு!” என்று சொல்லிக் கொண்டே அவர் வெளியே வந்து விட்டார்!”
“ம், வயிறு காப்பாற்றப்படவில்லை யென்றாலும் கௌரவம் காப்பாற்றப்பட்டதாக்கும்?”
“அதன் பலன் என்னடாவென்றால், இன்று என்னை இழுக்கும்போது அவருடைய கால்கள் பின்னுகின்றன!”
“பின்னட்டும்; பின்னட்டும்!”
“இந்த நிலையில் தான் இன்று அவர் எழும்பூர் பாலத்தைக் கடக்க வேண்டுமாம்!”
“கடக்கட்டும்; கடக்கட்டும்!”
இந்தச் சமயத்தில் இறக்குமதியாளரான தன் எஜமானரை ஏற்றிக் கொண்டு அங்கே வந்த கார் நம்பர் 4545 “இன்னுமா நீ சரக்கை ஏற்றிக் கொண்டு கிளம்பவில்லை? மோசம், மோசம்! ரொம்ப ரொம்ப மோசம்! இப்படி வேலை செய்தால் உம்முடைய முதலாளி எப்படி உருப்படுவார்?” என்று கேட்டுக் கொண்டே ஓர் உறுமல் உறுமிவிட்டு நின்றது.
“அவர் உருப்பட்டால் உருப்படுகிறார்; உருப்படாவிட்டால் போகிறார், நீர் போய் உம்முடைய வேலையைப் பாரும்” என்றது கைவண்டி வெறுப்புடன்.
“ஆத்திரப்படாதே! மனிதன் எதனால் உயர்கிறான் தெரியுமா? உழைப்பினால் தான் உயர்கிறான்!”
“போதும்! எனக்குப் புளித்துப்போய் விட்டது, உம்முடைய உபதேசத்தைக் கேட்க கேட்க!”
“உம்மைப் போன்றவர்களுக்கு இந்த உலகத்தில் மிக மிக மலிவாகக் கிடைப்பது அது ஒன்று தானே, ஐயா? அதையும் வேண்டாம் என்கிறீரே, நீர்?” என்று சொல்லிக் கொண்டே, கார் நம்பர் நாற்பத்தைந்து நாற்பத்தைந்து நோக்கித் திரும்பியது, லாரி நம்பர் 3636.
“அதற்கு தான் என்ன செய்வேன்? எதனால் வயிறு நிறையுமோ, அதைத் தான் என் காது கேட்க விரும்புகிறது!” என்றது கைவண்டி.
“உலகத்தில் அதைத் தவிர வேறொரு இன்பமும் இல்லையா?” என்று கேட்டது 4545.
“இருக்கிறது, உங்களுக்காக!” என்றது கைவண்டி, ஆத்திரத்துடன்.
“நீலவான், நெடுங்கடல், தென்றல், தேனருவி, வட்டநிலா, விண்மீன் ஆகியவை கூடவா எங்களுக்காக இருக்கின்றன?”
“இருக்கும், அவை உங்களுடைய சிருஷ்டிகளாக இருந் திருந்தால்!” என்று ஒரு போடு போட்டது கைவண்டி.
“இருக்காது! அவையும் சந்தைக்குக் கொண்டு வரப்பட்டு, உம்மைப் போன்றவர்களுக்கு விலைக்கு விற்கப்பட்டிருக்கும்!” என்று அது போட்ட போட்டையே திருப்பிப் போட்டது, லாரி நம்பர் முப்பத்தாறு முப்பத்தாறு.
“விற்பார்கள், விற்பார்கள்; ஏன் விற்கமாட்டார்கள் ஒரு காலத்தில் மனிதர்களையே சந்தைக்குக் கொண்டு வந்து விலை கூறி விற்றுக் கொண்டிருந்தவர்கள் தானே இவர்கள் ஆனால்…”
கைவண்டி முடிக்கவில்லை; கார் நம்பர் நாற்பத்தைந்து நாற்பத்தைந்து தொடர்ந்தது:
“என்ன ஆனால்?”
“இனியும் நாங்கள் சின்னஞ்சிறு குழந்தைகளாக இருந்து கொண்டிருக்கப் போவதில்லை; நீலவானையும் நெடுங்கடலையும் காட்டி நீங்கள் எங்களை ஏமாற்றிக் கொண்டிருக்க!”
“பொறும் வண்டியப்பரே, பொறும். மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் முடிவதற்குள்…”
“நாங்களே முடிந்தாலும் முடிந்து விடுவோம்; நீர் போய் வாரும்!” என்றது கைவண்டி அலுப்புடன்.
“இழக்காதீர்! நம்பிக்கையூட்டும் இலக்கியங்களைப் படிக்காதவரே, படிக்க முடியாதவரே, நம்பிக்கையை இழக்காதீர்”
என்று போகிற போக்கில் அதை எச்சரித்துக் கொண்டே போயிற்று லாரி நம்பர் முப்பத்தாறு முப்பத்தாறு.
அன்று மாலை…
இரண்டாவது முறையாக எழும்பூர் மேம்பாலத்தின் மேல் ஏற முடியாமல் ஏறிக் கொண்டிருந்த கைவண்டியை நோக்கி, “ஏறு, முன்னேறு!” என்று கத்திக் கொண்டே சென்ற கார் நம்பர் 4545, திரும்பி வரும் போது அப்படியே திகைத்து நின்றுவிட்டது. காரணம், பாலத்தின் இறக்கத்தில் தன்னை மீறி உருண்டு சென்ற வண்டியைத் தடுத்து நிறுத்த முடியாமல் அதன் முதலாளி கீழே விழுந்து, அவர்மேல் வண்டியில் ஏற்றப் பட்டிருந்த சரக்குகளெல்லாம் சரிந்து, அவர் உருத்தெரியாமல் நசுங்கிப் போயிருந்தது தான்.
மேற்படி காட்சியைப் ‘பெரிய மனிதர்கள் தோரணையில் அருவருப்புடன் பார்த்துக் கொண்டே நின்ற கார் நம்பர் நாற்பத்தைந்து நாற்பத்தைந்தை நோக்கி “என்ன பார்க்கிறீர்? என் எஜமான் சட்டத்துக்கு விரோதமாக சாகவில்லை ஐயா, சட்டத்துக்கு விரோதமாகச் சாகவில்லை!” என்றது கைவண்டி, விரக்தியுடன் சிரித்துக் கொண்டே.
அதைக் கேட்டுக் கொண்டே அந்த வழியாக வந்த லாரி நம்பர் 3636 “சட்டத்துக்கு விரோதமாக மட்டுமல்ல; இலக்கியத்துக்கும் விரோதமாகச் சாகவில்லை!” என்றது, அழுத்தந்திருத்தமாக.
“உண்மை; முற்றிலும் உண்மை. ஏனெனில், சாகும் போதுகூட அவர் நம்பிக்கையுடன் தான் செத்திருக்கிறார்” என்றது கைவண்டி.
“அவசரப்பட்டு விட்டார்; மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் முடிவதற்குள் அவசரப்பட்டு விட்டார்” என்று முணுமுணுத்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு அகன்றது கார் நம்பர் 4545.
– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.