எழுத்துக்காரன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 9,672 
 
 

வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரெதிரில் சற்றுத் தொலைவில் பெரிய வேப்பமரம் நின்று கொண்டிருந்தது. அதனுடைய நிழலில் ஐந்தாறு பேர் தனித்தனி ஈச்சம்பாயை விரித்துப்போட்டுக் கிழக்குமுகமாக உட்கார்ந்து கொண்டிருந்தனர். ஒவ்வொருவரின் முன்னும் மரத்தாலான எழுதுபலகை இருந்தது. வரிசையின் முதல் ஆளாக உட்கார்ந்திருந்தவன் அன்றையச் செய்தித்தாளில் லாட்டரிச் சீட்டு பகுதியில் மூழ்கியிருந்தான். அவனுக்கு வலது கைப் பக்கமாக உட்கார்ந்து கொண்டிருந்தவன் வட்டாட்சியர் அலுவலகத்தையே பார்த்தவாறு இருந்தான். வரிசையின் கடைசியில் உட்கார்ந்திருந்த சிவராமன் பட்டைப் பட்டையாக நெற்றியில் விபூதியை அப்பியிருந்தான். அவனுடைய முகம் எதையோ பறிகொடுத்ததுபோல் வாடிப்போய்க் கிடந்தது. மற்ற எழுத்துக்காரர்களைப் போலவே அவனும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சார்பதிவாளர் அலுவலகத்திற்குப் போய்க்கொண்டிருந்த ஒன்றிரண்டு ஆட்களைப் பார்த்து ‘பெட்டிசன் எழுதணுமா?’ என்று வலியக் கேட்டவாறு இருந்தான்.

சிவராமன் வட்டாட்சியர் அலுவலகத்தைப் பார்த்தான். பதினோரு மணிக்கு மேலாகியும் அதிகக் கூட்டமில்லாமல் இருந்தது. சார்பதிவாளர் அலுவலகத்திலும் இன்று அதிகக் கூட்டம் இல்லை. அந்த அலுவலகத்திற்கு முன் நின்றுகொண்டிருந்த வேப்ப மரத்தின்கீழ் உட்கார்ந்து கொண்டிருந்த எழுத்துக்காரர்களின் முன் ஒரு ஆள்கூட இல்லை. காலையிலிருந்து ஒரு மனுகூட எழுத வாய்க்கவில்லையே என்று சிவராமனுக்கு ஆத்திரமாக இருந்தது. திங்கள்கிழமையே இப்படி இருந்தால் என்ன செய்வதென்று அலுத்துக்கொண்டான். ஒரு பீடியோ சிகரெட்டோ குடித்தால் தேவலை போலிருந்தது. அவனுக்கு இடது கைப்பக்கம் உட்கார்ந்து கொண்டிருந்த சின்னசாமியிடம் ‘சிகரெட் இருக்குமா?’ என்று கேட்டான். இல்லை என்று அவன் வாயைத் திறந்துகூடச் சொல்லாமல் வெறுமனே உதட்டை மட்டும் பிதுக்கிக் காட்டிவிட்டு முன்பு போலவே மனு எழுதித்தர கேட்டு யாராவது வருகிறார்களா என்று பார்க்க ஆரம்பித்தான்.

‘காலையிலிருந்து டீக்கு, பீடிக்குக்கூட வருமானம் பொறக்கலியே’ என்று சொன்ன சிவராமனுக்கு சுரத்தில்லாமல் ‘வெரப்புக் காலத்திலெ அப்பிடித்தான் இருக்கும்’ என்று சொன்ன சின்னசாமி பாயின்மீது விழுந்திருந்த வேப்ப இலைகளை எடுத்து விட்டெறிந்தான்.

ஒரே நேரத்தில் ஐந்தாறு பேருமே ‘இங்க வாம்மா’ என்று கூப்பிட்டனர். வட்டாட்சியர் அலுவலகத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்த அந்தப் பெண் ஒன்றும் புரியாமல் திகைத்துப்போய் எழுத்துக்காரர்களைப் பார்த்ததுதான் தாமதம். அந்தப் பெண் தங்களுடைய பக்கம் நின்று பார்த்ததையே சாக்காகவும், பிடிமானமாகவும் வைத்துக்கொண்டு ‘என்னம்மா வேணும்?’ மனுகினு எழுதணுமா? இங்க வாம்மா. வந்து பாயிலே குந்து’ என்று ஐந்தாறு பேருமே கூப்பிட்டனர். யாரிடம் கேட்பது, எப்படிக் கேட்பது என்று யோசித்த அந்தப் பெண், தனக்கு நேராக உட்கார்ந்திருந்த சிவராமனை நோக்கி இரண்டு மூன்று அடிகளை எடுத்துவைத்து நடக்க ஆரம்பித்ததுமே மற்றவர்கள் மறித்துக் கூப்பிட்டுவிடுவார்களோ என்ற பயத்தில், ‘வாம்மா, வாம்மா’ என்று சிவராமன் அவசரமாகக் கூப்பிட்டான். அதோடு ரொம்பவும் வேண்டியவர்களுக்கு, பெரிய மனிதர்களுக்குச் செய்வது மாதிரி பாயை ஒருமுறை துண்டால் விசிறிவிட்டு ‘குந்தும்மா குந்து. என்னா வேணும் சொல்லு. எதுக்கு நிக்குற? வந்து குந்தும்மா’ என்று ரொம்பவும் உரிமையுடன் கூப்பிட்டான். ஒன்றும் புரியாமல் குழம்பிப் போன அந்தப் பெண் சுற்றும் முற்றும் பார்த்தவாறே தயங்கித் தயங்கி மேலும் சில தப்படிகள் முன்னே வந்து நின்றாள். அந்தப் பெண் தயங்கி நிற்பதைப் பார்த்த சிவராமன் ‘வாம்மா. நான் கரடியா புலியா? பயப்படுறதுக்கு? மொதல்லெ பாயிலே வந்து குந்து’ என்று கட்டாயப்படுத்திக் கூப்பிட்டான்.
‘எம்மவனெ கவுருமெண்டு ஆஸ்டல்ல சேக்கறதுக்கு இந்தப் பாரத்திலெ இன்னா சாதி, இன்னா எனம்னு சொல்லி எயிதி ஒரு கையெழுத்து வாங்கியாரச் சொன்னாங்க’ என்று அந்தப் பெண் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே ‘அவ்வளவுதான. அதுக்கு ஏன் தயங்குற. வந்து குந்து’ என்று சொல்லி லேசாக சிவராமன் சிரித்தான். அந்தப் பெண் அவனை நோக்கி ஒன்றிரண்டு அடிகள் முன்னே வந்தான்.
‘எடுத்த எடுப்புலெ நேரடியா விண்ணப்பத்திலெ கையெழுத்துப் போட்டுத் தர மாட்டாங்க. அதுக்கு மொதல்லே ஒரு மனு கொடுக்கணும். அந்த மனுவுலெ கையெழுத்துப் போட்டுத் தருவாங்க. அதெ எடுத்துக்கிட்டுப் போயி மணியாரு, ஆர்.ஐ.ன்னு இருக்கிறவங்கக்கிட்டெ கையெழுத்து வாங்கியாந்த பின்னாலெதான் தாசில்தார் கையெழுத்துப் போடுவாரு’ என்று சொன்ன சிவராமன், எங்கே அந்தப் பெண் நழுவிப் போய்விடப் போகிறாளோ என்ற கவலையில் அவனே மீண்டும் பேச ஆரம்பித்தான்.

அந்தப் பெண் சிறுபிள்ளை மாதிரி ‘அந்தக் கையெழுத்த நீ வாங்கித் தர்றியா?’ என்று கேட்டாள். அதற்கு லேசாகச் சிரித்துக்கொண்டே ‘வாங்கிக்கலாம் வாம்மா. மொதல்லெ நீ வந்து பாயிலெ குந்து. ஒரு நாளு ரெண்டு நாளு அலையணும். அவ்வளவுதான். இதுக்கு எதுக்குக் கவலப்படுற?’ என்று சொன்னவன் சாதிச்சான்று, வருமானச்சான்று, நிரந்தரக் குடியிருப்புச் சான்று பெறுவதற்கான வழிமுறைகளை விளக்கமாகச் சொல்லிவிட்டுக் கடைசியில் ‘மனு எயிதித் தரட்டுமா?’ என்று கேட்டான்.

‘ரொம்பப் புண்ணியமா இருக்கும் சாமி. செத்தே எயிதித்தாங்க. எங்க ஊரு குள்ளக் கருப்பன்தான் ஒங்களெக் கொண்டாந்து இங்க வுட்டுருக்கான். நீங்க இல்லன்னா வய்யி வாயிக்கா தெரியாம அலஞ்சி திரிஞ்சிப் போயிருப்பன். ஒங்கெ புள்ளெ மக்கெ நல்லாயிருக்கே’ என்று சொன்ன அந்தப் பெண் வானத்தை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டாள். பிறகு முன்னே வந்து சிவராமன் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் பாயை ஒட்டித் தரையிலேயே உட்கார்ந்து கொண்டாள்.

அவன் கேட்காமலேயே ‘எனக்கு நாலு புள்ளீவோங்க. தலெச்சன் பொட்டே. அடுத்தது ஆணு. கடேசியும் பொட்டக்குட்டி. மொதப் பயல நானும் என்னாலெ ஆனமுட்டும் அடிச்சி ஒதச்சிப் பாத்தங்க. பள்ளிக்கூடத்துப் பக்கமெ தலெ வச்சிப் படுக்க மாட்டன்னுட்டான். ஆனா ரெண்டாவது பயதான் கொஞ்சம் கருத்தா, வெகரமா இருக்கான். அவன் தாங்க என்னெக் காட்டு வேலெக்கி கூப்புடாதடி. நான் பள்ளிக்கூடத்துக்குத்தான் போவன்’னு போறாங்க. இப்படி இருக்கிற புள்ளய நாம்ப கெடுக்கலாமுங்களா. அதாங்க இந்தப பாரத்தெ தூக்கிக்கிட்டு வந்தன்.’

அந்தப் பெண்ணிடம், அவளுடைய ஊர், சாதி, வருமானம் போன்ற விபரங்களைக் கேட்டுக் கொண்டு ஒரு பேப்பரை எடுத்து எழுது பலகையின் மீது வைத்து சிவராமன் எழுத ஆரம்பித்தான். அப்போது அவனுடைய உதட்டில் லேசாகச் சிரிப்பு மலர்ந்தது. ஓரக்கண்ணால் பக்கத்துப் பாயில் உட்கார்ந்து கொண்டிருந்த சின்னசாமியைப் பார்த்து ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்தான். அதே நேரத்தில் சின்னசாமியின் முகத்திலிருந்த வெறுப்பைப் பார்த்தும் பார்க்காதவன் மாதிரி இருந்தான். விண்ணப்பத்தை எழுத ஆரம்பித்ததுமே அவனுடைய மனம் கணக்குப்போட ஆரம்பித்துவிட்டது. முதலில் டீ குடிக்க வேண்டும். ஒரு கட்டு பீடி வாங்க வேண்டும் என்ற எண்ணம் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. அதோடு காலையில் வீட்டை விட்டுக் கிளம்பும் போது ‘சாயங்காலம் நேரத்திலியே வாங்க. நீங்க வந்துதான் ஒலக்கி அரிசி வாங்கணும்’ என்று வள்ளி சொன்னது நினைவுக்கு வந்ததும், அவள்மீது கோபப்பட்டான். கோபத்தில் விண்ணப்பத்தை வேகமாக எழுத ஆரம்பித்தான்.

அந்தப் பெண் சிவராமனையே பார்த்தவாறு இருந்தாள். அவளால் ஒன்றையும் நம்ப முடியவில்லை. தானாகவே கூப்பிட்டுத் தன்னுடைய சொந்தக் காகிதத்தைப் போட்டுப் பொறுப்பாக எழுதிக் கொண்டிருக்கிறானே என்று அவனை மனதார வாழ்த்தினாள். விசயம் இப்படி எளிதில் முடியும் என்று தெரிந்திருந்தால் மூன்று நாட்களுக்கு முன் விண்ணப்பத்தைக் கொண்டுவந்து பையன் கொடுத்த அன்றே வந்திருக்கலாம் என்று எண்ணினாள். மூன்று நாட்களாக முயன்றும் அவளால் வரமுடியவில்லை.
பஸ்ஸுக்குக் காசு, யாருக்காவது ஐந்து ரூபாய், பத்து ரூபாய் கொடுக்க வேண்டி இருக்குமோ என்று ஒரு இருபது ரூபாய்க்காக ஊரில் கேட்காதவர்களிடம் எல்லாம் கேட்டுப் பார்த்து விட்டாள். இரண்டு நாட்களாக அலைந்துவிட்டுக் கடைசியில் இன்று வீட்டிலிருந்த ஒரே ஒரு சின்ன குத்துவிளக்கை அடகு வைத்துவிட்டுத்தான் வந்தாள். அதற்காக அலைந்த அலைச்சலில் காலையில் கஞ்சி குடிக்கக்கூட அவளுக்கு நேரமில்லை. அவன் எழுதிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது அவளுக்கு விளக்கை அடகுவைத்தது, நடந்துவந்த களைப்பு, காலையில் நீராகாரம் குடிக்காதது என்று எல்லாமும் மறந்துபோய்விட்டது. சந்தோசத்தில் அவளுடைய முகம் மலர்ந்திருந்தது. சிவராமன் எழுதுவதையே ஆர்வம் பொங்கப் பார்த்தாள். அவனுடைய பேனா எப்படியெல்லாம் வளைந்து நெளிந்து எழுதுகிறது என்பதைப் பார்த்து வியந்தாள். எழுதுவதற்காக ஏதாவது காசு பணம் கேட்பானோ என்ற சந்தேகம் திடீரென்று வந்தது. முகத்தைப் பார்த்தால் கேட்கமாட்டான் என்பதுபோல்தான் தெரிந்தது. மீறிக் கேட்டால் டீ சாப்பிடச் சொல்லி காசு தரலாம் என்று நினைத்தாள்.

ரொம்பவும் கவனத்துடன் எழுதுவது மாதிரி சிவராமன் முகத்தை வைத்துக் கொண்டிருந்தான். ஒருமுறை தலையைத் தூக்கி அந்தப் பெண்ணைப் பார்த்தான். அவளுடைய தோற்றமும் ‘சாமி, சாமி’ என்று சொல்கிற வார்த்தையும் அவனுடைய நம்பிக்கையை வளர்ப்பதாக இருந்தன. ஒன்றிரண்டு ரூபாய் கூட்டிக் கேட்கலாமா என்று யோசித்தவன், பார்ப்பதற்குப் பிச்சைக்காரி மாதிரி இருக்கிறவளிடம் கூடுதலாகக் கேட்டால் பாவம் என்று நினைத்துக் கொணடான். அந்த நேரத்தில் மரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த காகம் எச்சமிட, அது சரியாக வந்து அவனுடைய தோள்பட்டையில் விழுந்தது. எச்சத்தைத் துடைத்து விட்டுக் காகத்தைத் திட்டிக்கொண்டே எழுதி முடித்ததை ஒருமுறைப் படித்துப் பார்த்தான். பிறகு அந்தப் பெண்ணிடம் ‘ரேகயா, கையெழுத்தா?’ என்று கேட்டான். ‘கை வெரலுதான் சாமி’ என்று சொன்னதும் அவளுடைய இடது கை பெருவிரலைப் பிடித்து மை டப்பாவில் தேய்த்து எடுத்து, விண்ணப்பத்தில் ரேகையைப் பதித்தான். மீண்டும் ஒருமுறை விண்ணப்பத்தைப் படித்தான். பிறகு விண்ணப்பத்தை அவளிடம் கொடுத்தவன், மற்றொரு காகிதத்தை எடுத்து வேகமாக எதையோ எழுத ஆரம்பித்தவன், தலையை நிமிர்த்தி ‘இதெ எடுத்துக்கிட்டு நேரா ஆபீஸ்குள்ளாரப் போ. டி.டி.ன்னு ஒருத்தர் இருப்பாரு. இதெ அவுருகிட்டெ கொடு. அவுரு மனுவுலெ கையெழுத்துப் போட்டுத் தருவாரு. அதெ எடுத்துக்கிட்டுப் போயி ஒங்க ஊரு மணியாருகிட்டெ கொடு. மத்ததெல்லாம் அவுரு பாத்துக்குவாரு’ என்று சொன்னவன் மீண்டும் எழுத ஆரம்பித்தான்.

பூரித்துப்போன அந்தப் பெண் ‘கடவுளு மாரி நீ இருந்த சாமி. நீ இல்லன்னா ஒரு வெகரமும் தெரியாம தெவச்சி தெகயோடிப்போயிருப்பன். ஒன்னோட நல்ல மனசுக்கு ஆண்டவன் ஒனக்கு ஒரு கொறயும் வுடமாட்டான்’ என்று சொன்னவள் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு எழுந்தவளிடம் சாதாரணமாக சிவராமன் ‘ஐஞ்சி ரூவா கொடும்மா’ என்று கேட்டான். தன்னிடம்தான் கேட்டானா என்று சந்தேகப்பட்டவளாக ‘என்னியவா சாமி கேட்டெ?’ என்று அந்தப் பெண் கேட்டாள்.

‘ம்’ என்று தலையை ஆட்டிவிட்டு அவன் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தான்.

‘எதுக்குச் சாமி பணம் கேக்குற?’ என்று அந்தப் பெண் கேட்டாள்.

‘எதுக்கா? எழுத்துக்கூலிம்மா.’

‘எயித்துக்கூலியா? இதுக்கா எயித்துக்கூலி கேக்குற? அதுவும் புக்காம கொள்ளாம ஐஞ்சி ரூவா’ ஒரு காகிதத்திலெ எழுதியதற்கு இவனே ஐந்து ரூபாய் கேட்டால் மற்றவர்கள் எவ்வளவு கேட்பார்களோ என்று பயந்துபோனான்.

‘வளவளன்னு பேசாம, எடும்மா ரூவாய.’

‘என்னாத்த எயிதிப்புட்டன்னு வடயாட்டம் ஐஞ்சி ரூவா கேக்குறவன்? இன்னா ஊரு, இன்னாரு மவன்னு எயிதினதுக்கா கூலி. அடக்கடவுளே, இது எந்தூர்லெ அடுக்கும்?’

‘காசெ கொடுத்திட்டுப் பேசாம போம்மா.’

‘இப்பிடி கேக்குறியே இது ஒனக்கே ஞாயமா படுதா? அவன் என்னோட மவன்ங்கிறது பொய்யா, இல்லே நான் தான் அவனோட அம்மாங்கிறது பொய்யா? தலெமொற தலெமொறயா நாங்க அந்தூர்லதானெ குடியிருக்கம். இதுக்கே நானு அந்தூர்லியே பொறந்து அந்தூர்லியே வாக்கப்பட்டு நாலு புள்ளெக்கித் தாயானவ. மூணு ஊரு எல்லெயிலே வாயிதா கட்டிக்கிட்டு வர்றம். உள்ளெத எயிதினதுக்கா பணம் கேக்குற? இந்தெக் கொள்ளெப்பிறிக் கூத்தெ நான் எங்கப் போயி சொல்லுவன்? எங்க ஊருப் பள்ளிக்கூடத்து வாத்தியாருகிட்டெ போயிருந்தா, ஓசியிலெ, வாத்தெயிலியே இந்த மாரி நூறாயிரம் சீட்டு எயிதிக்கிட்டு வந்திருப்பன். பாக்குறதுக்கப் பகரா இல்லாம பித்திச்சி வெறிச்சி மாரி இருக்காளேன்னு நெனச்சிக்கிட்டுப் பேசுறியா?’

‘எங்கிட்ட வசனமா பேசுற? இதெத் தூக்கிக்கிட்டு மணியாரு, ஆர்.ஐ. தாசில்தார்ன்னு அலைவ இல்லெ: அங்க அவுங்கக்கிட்டெ பேசு ஒன்னோட வசனத்தெயெல்லாம். பேசாம காசெக் கொடுத்துட்டு வாய மூடிக்கிட்டு போ.

‘நாலே நாலு எயித்து, அதுவும் நல்லா எயிதினியோ இல்லியோ அதுக்குப் போயி நெஞ்சுக்கு நீதியாத்தான் ஐஞ்சி ரூவா பணம் கேக்குறியே. இந்த நாயத்தெ கிராமத்தான்கிட்டெ சொல்லிப்பாரு தெரியும். படிக்கிற புள்ளெக்கி அதுவும் நாலு எயித்தெ காகிதத்திலே கிறுக்குனதுக்குப் பணம் கேக்குற ஆளெ இப்பத்தான் நான் பாக்குறன். ஒங்களெ மேரி ஆளுவுளாலதான் மானம் மழை பெய்யமாட்டேங்குது. நீ என்னாப் பண்ணுவ ஒலகம் அப்பிடிப் யோயிடிச்சி. யாரு ஏமாறுவா, புடுங்கித் திங்கலாமின்னு அலையுற ஒலகமா மாறிடிச்சிடாப்பா கடவுளே. தெரியாதெ எடத்துக்கு ஒருத்தி வந்தட்டாப்லெ என்ன வேணுமின்னாலும் பேசிப்புடுறதா?’

‘சுமாமா பேசக்கூடாது. பணத்தெ எடு. காலையிலியே வந்திருக்குது பாரு சனியன்’ என்று சிவராமன் சொன்னதுதான் தாமதம். மள்ளென்று அந்தப் பெண் அவனிடம் சண்டை போட ஆரம்பித்தாள். அவளுடைய முகம் நிறம் மாறிப்போயிற்று. பேய்ப் பிடித்தவள் மாதிரி கத்த ஆரம்பித்தாள். ‘யாரப் பாத்து சனியன்னு சொன்ன?’ என்று கேட்டதையே திரும்பத் திரும்பக் கேட்டாள். அவளுக்க ஈடு கொடுத்து சிவராமனும் கத்திப் பார்த்தான். ஆனால் அவனுடைய குரல் எடுபடவில்லை. அவனுக்கு ஆதரவாக மற்ற எழுத்துக்காரர்களும் அந்தப் பெண்ணிடம் சண்டைபோட ஆரம்பித்தனர். எழுத்துக்கூலி தந்துதான் தீரவேண்டும் என்று வாதிட்டார்கள். அந்தப் பெண் ஒரே நேரத்தில் பலருக்கும் பதில் சொல்ல முயன்றாள். அந்த இடத்தில் கூட்டம் சேரத் தொடங்கியது.

‘யாரப் பார்த்துச் சனியன்னு சொன்னவன்? இன்னொருத்தங்க ஒயலு எனக்கு வாண்டாம். பாப்பான் சம்பாரிச்சது பிண்டத்துக்கு, துலுக்கன் சம்பாரிச்சது துண்டத்துக்கு, ஏர் ஓட்டுறவன் சம்பாரிச்சது தெண்டத்துக்குங்குற கதயாதான் இருக்கு. வாயத் தொறந்து கேட்டுப்புட்டெ இல்லன்னு சொன்னா ஏயி ஊரு பாவம் என்னே சுத்திக்கும். இந்தா, நீ எயிதுனதுக்கு இதுதான் தகும்’ என்று சொல்லி இடுப்பில் செருகியிருந்த வெற்றிலைப்பாக்குப் பையிலிருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து சிவராமனிடம் நீட்டினாள்.
அந்த பெண்ணையும் தன்னையும் மற்றவர்கள் வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவனுக்கு அவமானத்தில் உயிரே நின்றுவிடும் போலிருந்தது. அருவருப்புடன் முகத்தைக் கோணிக்கொண்டு ‘போம்மா எட்டெ போ’ என்று சொல்லி கத்தினான். அவனுடைய கத்தலை அந்தப் பெண் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் ‘ஐயோன்னா எனக்குப் பாவம் புடிச்சிக்கும். இந்தா ஒங்காசி’ என்று சொல்லி பாயில் நாணயத்தைப் போட்டுவிட்டு வட்டாட்சியர் அலுவலகத்தை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.
சிவராமன் மற்ற எழுத்துக்காரர்களைப் பார்த்தான். ‘ஐயோ பாவம்’ என்று அவர்கள் இவனைப் பார்ப்பது தெரிந்ததும் அப்படியே குறுகிப் போனான். தலையைக் கவிழ்த்துக்கொண்டான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *