அந்த வங்கி மேலாளர் வீட்டு முன்புற ஹாலில் ‘மெத்…மெத.;.’தென்ற சோபாவில் அமர்ந்திருந்த சிவாவுக்கு எரிச்சலாயிருந்தது. ‘ச்சை…இன்னொருத்தர் வீட்டில் வந்து…இப்படிக் காத்துக் கெடக்கறதை விடக் கேவலம் வேற எதுவுமில்லை…ஏன்தான் இந்த அப்பாவுக்கு இதெல்லாம் புரிய மாட்டேன் என்கிறதோ?…’ தனக்குள் அலுத்துக் கொண்டவனுக்கு நேற்று மாலை வீட்டில் நடந்த அந்த காரசார விவாதமும்…கடுப்பான சம்பவமும் நினைவுக்கு வந்தது.
‘ஏண்டா…வெட்டியா தண்டச் சோறு தின்னுட்டு…சும்மாத்தானே ஊரைச் சுத்திட்டிருக்கே…இந்த எலக்ட்ரிக் பில்லை நீ போயி கட்டிட்டு வரக் கூடாதா?…பாவம் உங்கம்மா வீட்டு வேலைகளையும் செஞ்சிட்டு…வெளி வேலைகளையும் பார்த்திட்டு…ச்சை…உனக்கெல்லாம் மனசாட்சியே கெடையாதாடா?’
‘ஹலோ…ஹலோ…சும்மா ‘தெண்டச்சோறு…தெண்டச்சோறு’ ன்னு தெனத்திக்கும் இருபத்தியெழு தடவ சொல்லிட்டிருக்காதீங்க… டிகிரி முடிச்சிட்டா உடனே வேலை கெடைச்சிடுமா?…கொஞ்ச நாள் ஆகத்தான் செய்யும்…வெய்ட் பண்ணித்தான் ஆகணும்…அத விட்டுட்டு ‘நைய்யி…நைய்யி’ன்னு சதா தொண…தொணத்திட்டிருக்கக் கூடாது.’
‘அப்படியும் ஒண்ணும் வேலைக்கு முயற்சி பண்ற மாதிரியும் தெரியலையே…பசங்களோட சேர்ந்துக்கிட்டு..சினிமா..பார்க்குன்னு நல்லா ஊர் சுத்திட்டிருக்கே…அதான் நடக்குது…சரி…வேலை கெடைக்கற வரைக்கும்…வீட்டு வேலைகளைச் செய்வோம்…அம்மா அப்பாவுக்கு உதவியா ஏதாச்சும் ஒத்தாசை செய்வோம்னாவது நெனைக்கறியா?…அதுவும் கெடையாது’
‘என்ன…என்ன இப்ப ஒத்தாசை செய்யலை?’
‘அப்படியே வீட்டுக்குள்ளார பாருடா…எப்படி குப்பையும் கூளமுமாக கெடக்குதுன்னு…ஃபேன்ல பாரு ஒரு வண்டி தூசி…செவுத்துல பாரு அடை அடையா ஒட்டடை…’
‘அதெல்லாம் அம்மாவோட வேலை…’
‘அப்ப நீ திங்கற சோத்துக்கு என்னதான் வேலை?’
‘த பாருங்கப்பா….நான் போஸ்ட் கிராஜூவேட் படிச்சவன் இந்த மாதிரி… ஃபேன் துடைக்கறது…ஒட்டடை அடிக்கறது….ரேஷனுக்குப் போய்ட்டு வர்றது…எலக்ட்ரிக் பில் கட்டறது…இதெல்லாம் நான் செய்ய மாட்டேன்….எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு…’ முறைப்பாய்ச் சொன்னான் சிவா.
‘இந்த முறைப்பையெல்லாம் மூட்டை கட்டி வெச்சிட்டு…நாளைக்குக் காலைல சுதர்ஸன் சார்…பேங்க் மேனெஜர் …அவர் வீட்டுக்குப் போய் அவரைப் பாரு…அவருக்கு நல்ல பெரிய பெரிய கம்பெனிகள்ல பெரிய பெரிய ஆளுங்களைத் தெரியும்….ஏதாவது ஒரு கம்பெனில உன்னை நுழைச்சு விடறேன்னு சொல்லியிருக்கார்…’
அவன் யோசிக்க…
‘டேய்…என்னடா யோசனை?…அந்த மாதிரி ஒரு பெரிய மனுசன் ‘சரி..வரச் சொல்லு’ன்னு சொல்றதே ஒரு பெரிய விஷயம்…நீ என்னடான்னா யோசிக்கறே…டேய்….உனக்கெல்லாம் ரத்தத்துல திமிரைத்தவிர வேற எதுவுமே இல்லைடா…’
அப்பாவின் நேற்றைய சத்தங்களின் எதிரொலியாய் இன்று அந்த வங்கி மேலாளர் வீட்டு ஹாலில் அமர்ந்திருக்கிறான் சிவா.
‘தம்பி யாரைப் பார்க்கணும்’ அழுக்கு பனியனும்..அழுக்கு வேட்டியும் அணிந்து வேலைக்காரன் போலிருந்தவன் கேட்க,
‘மிஸ்டர் சுதர்ஸன்….பேங்க் மேனேஜர்…’
‘நீங்க?’
‘கார்ப்பரெஷன் ஸ்கூல் வாத்தியார்…தியாகராஜன் சாரோட பையன்’னு சொல்லுங்க…’ சற்றுத் திமிராகவே சொன்னான்.
‘ஓ…நீதானா தம்பி அது..’
‘ஆமாம்…அது செரி…நீ?…ஸாரி… நீங்க?’ சிவா சற்றுத் தயக்கமாய்க் கேட்டான்.
‘நான்தான் தம்பி…நீ தேடி வந்த பேங்க் மேனேஜர்…சுதர்ஸன்…’ சொல்லியவர் பக்கத்திலிருந்த ஸ்டூலை எடுத்து மேலே தொங்கிக் கொண்டிருந்த மின் விசிறிக்கு நேர் கீழே போட்டு. அதன் மேல் ஏறி அந்த மின் விசிறியைத் துடைக்க ஆரம்பித்தார்.
பேந்த பேந்த விழித்தான் சிவா. ‘இந்தாளு என்ன சுத்தக் கிறுக்கனாயிருப்பான் போலிருக்கு…ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஜி.எம்.மா இருந்துக்கிட்டு…வேலைக்காரனாட்டம்…ஃபேனைத் துடைச்சுக்கிட்டிருக்கான்…’
‘தம்பி என்ன படிச்சிருக்கீங்க?…ஏதாவது வேலைல முன் அனுபவம் இருக்கா?’
சிவா பதில் சொன்னான்.
தொடர்ந்து அவர் ஏதேதோ கேட்டுக் கொண்டேயிருக்க இவனும் பதில் சொல்லிக் கொண்டேயிருந்தான்.
இதற்கிடையில் அவர் மின்விசிறியைத் துடைக்கும் பணியை முடித்து விட்டு ஹால் கதவுக்கு அருகே இருந்த செருப்பு ஸ்டாண்டிற்குச் சென்று அங்கிருந்த மூன்று ஜோடி ஷூக்களை எடுத்து ‘பர…பர’வென்று பாலீஸ் போட ஆரம்பித்தார்.
தர்மசங்கடமாய் நெளிந்தான் சிவா.
‘சரி தம்பி…இன்னும் ரெண்டு மூணு நாள்ல உனக்கு ஒரு வேலை கிடைக்கற மாதிரி ஏற்பாடு பண்ணிடறேன்… நீ தயாராயிரு’
சரியென்று தலையாட்டி விட்டு எழுந்து வெளியேறிய சிவாவின் கூடவே வெளியே வந்தவர் போர்ட்டிகோவிற்கு வந்ததும் அங்கு மூலையில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பெரிய சைஸ் கத்தரிக்கோலை எடுத்து செடிகளை அழகு பார்த்து சீராக வெட்டத் துவங்கினார்.
அதற்கு மேலும் பொறுக்க முடியாத சிவா கேட்டே விட்டான்.
‘சார் நான் ஒண்ணு கேட்பேன் தப்பா நெனைச்சுக்கக் கூடாது…’
‘பரவாயில்ல கேளு தம்பி…’
‘நீங்க ஒரு பேங்க்ல ஜி.எம்.மா இருந்திட்டு…வீட்டுல ஃபேனைத் துடைக்கறது….ஷூவுக்குப் பாலீஸ் போடறது… இதா இப்படி தோட்டக்காரனாட்டம் செடிகளை வெட்டறது…இதெல்லாம் நீங்களே செய்யணுமா சார்?…ஒரு ஆள் போட்டுச் செய்யக் கூடாதா?.’
‘ஹா…ஹா…ஹா..’என்று வாய் விட்டுச் சிரித்த அவர் ‘தம்பி…பேங்க் ஜி.எம்.ன்னா என்ன வானத்திலிருந்து குதிச்ச அவதாரமா?…ம்ஹூம்….அவனும் ஒரு மனுசன்தான்…ஒரு ஆள் போட்டுக்கக் கூடாதா?ன்னு கேட்டீங்களே…அந்த ஆளும் ஒரு மனுசன்தான்…அந்த மனுசன் செய்யும் போது…இந்த மனுசன் செய்யக் கூடாதா என்ன?..’ என்று தன் மார்பைத் தட்டிக் கொண்டார்.
‘அதில்லை சார்…உங்க இமேஜ்.’
‘இமேஜா….அப்படின்னா?’
‘சொஸைட்டில உங்களுக்கு இருக்கற ஸ்டேட்டஸ் சார்…’
‘அடப் போ தம்பி….இந்த இமெஜ்…ஸ்டெட்டஸ்…எல்லாம் வெறும் மாயை தம்பி….இன்னும் சொல்லப் போனா…இந்த மாதிரி வேலைகளையெல்லாம் செய்யறதினாலதான் நான் இன்னிக்கும் ஆரோக்கியமா நடமாடிட்டிருக்கேன்…இல்லேன்னா…இருபத்தியேழு நோய்களை வாங்கிட்டு…நேரத்துக்கு இருபத்தியெட்டு மாத்திரைகளைச் சாப்பிட்டுட்டு இருப்பேன்…’
மலங்க மலங்க விர்pத்தபடி நின்ற சிவாவின் தோளைத் தொட்டு ‘த பாரு தம்பி…ஒண்ணு சொல்றேன் நல்லா கேட்டுக்க…நல்லா மனசுல ஆணியறைஞ்ச மாதிரி பதிச்சு வெச்சுக்க…நாம நெறைய படிச்சு…பெரிய உத்தியோகத்துக்குப் போன பின்னும் நம்மைச் சாதாரணமா நெனச்சு…இது மாதிரி யதார்த்தமா இருந்தாத்தான் மேலும் மேலும் உயர முடியம்…தலைக்கனம் வந்துச்சு….அவ்வளவுதான்….கண்; சிமிட்டுற நேரத்துக்குள்ளார…தலை குப்புற விழுந்திடுவோம்…என்ன புரிஞ்சுதா?……நம்பிக்கையோட போ…சீக்கிரமே உனக்கொரு நல்ல வேலை ஏற்பாடு பண்ணிடறேன்..’
—–
அன்றிலிருந்து சிவா தன் வீட்டில் எல்லா வேலைகளையும் தானே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய ஆரம்பிக்க மொத்தக் குடும்பமும் குழப்பத்தில் தலையைப் பிய்த்துக் கொண்டது.