எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 5, 2013
பார்வையிட்டோர்: 9,969 
 
 

இது ஒருவகை இயற்கையின் அவஸ்த்தை!

இந்த உபாதையை இனியும் தாங்கிக்கொள்ள முடியாது. சிறுநீர்ப்பை வீங்கிப் புடைத்து வெடித்துவிடுமாப்போன்ற வேதனை!

ராத்திரி பூராவும் வருந்தியழைத்தும் வாராதிருந்த தூக்கத்தை வரவழைத்துதவிய ‘மோல்ஸன் பியர்’ மூத்திரக் குடலினுள் முட்டி நிரம்பிக் கொடுமைப்படுத்துகின்றது.

கட்டிலை விட்டு அவசரமாக எழும்புகிறேன்.

யுத்த வலயம் ஒன்றிலிருந்து திக்குத் திக்காகச் சிதறிப்போன குடும்பத்தினராய், அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தூக்கி வீசப்பட்டுக் கிடந்த செருப்புக்களைக் கால்களால் தடவித் தேடிக் கண்டுபிடித்து, பாதங்களில் சொருகிக்கொண்டு ‘வொஷ் றூம்’ நோக்கி ஓடுகிறேன்.

‘………………’

‘அப்பாடா…!’

சிரமபரிகார சுகத்தைப் பரிபூரணமாக அனுபவித்துவிட்ட அசதியுடன் வெளியே வருகிறேன்.

கற்பனையுடன் கூடிய கவித்துவக் கலசம் வற்றி வரண்டுபோன வெற்றுக் கவிஞர்களாட்டம், போலிக் கம்பீரத்துடன் மேசைமீது நெஞ்சு நிமிர்த்தியபடி நின்றுகொண்டிருந்த ‘மோல்ஸன்’ காலிப் போத்தல்களைப் பொறுக்கி எடுத்துக் கட்டிலுக்கடியில், கண்ணில் படாதவாறு உருட்டிவிடுகிறேன்.

யன்னல் அருகாக வந்து திரையை மெல்ல விலக்கி, வெளியே எட்டிப் பார்க்கிறேன். பளிச்சென்று முகத்தில் அறைந்த வெளிச்சத்தை நேர்கொள்ள முடியாமல் தடுமாறிய கண்களுக்கு இமைகள் கவசமளித்தன.

கடைந்தெடுத்த கட்டித் தயிர்ச் சட்டியை வானத்திலிருந்து யாரோ கவிழ்த்துக் கொட்டியது போன்று, ரொறொன்ரோ நகரம் ‘ஸ்னோ’வுக்குள் புதைந்து கிடக்கின்றது.

பொழுது விடிந்து நீண்ட நேரமாகிவிட்டிருக்க வேண்டும்!

மூன்று நாட்களாகக் காணாமற் போய், இன்றுவந்து கண் சிமிட்டி நிற்கும் குழந்தைச் சூரியனின் பொற்கிரணங்கள், வெண்பனித் திட்டுக்களில் பட்டுத் தெறிக்க, கண்கள் கூசின.

யன்னல் திரையை இழுத்து மூடிவிட்டு, மறுபடியும் வந்து கட்டிலில் வீழ்ந்தேன். மார்கழிக் கடுங்குளிர்க் கொடுகலுக்கு ஏற்ற இந்தப் பஞ்சுப் பொதிப் போர்வைக்குள் உடலைச் சுருட்டிப் புதைத்துப் படுத்துக்கொள்வது ஒரு இதமான சுகந்தான்!

கொஞ்சநேரம் கூடக்குறையப் படுத்துறங்கினால் உலகம் என்ன உருண்டோட மறந்தா போய்விடும்?

‘உறங்குகின்ற கும்பகர்ண உங்கண் மாயவாழ்வெலாம்
இறங்குகின்ற தென்றுகாண் எழுந்திராய் எழுந்திராய்…..’ என்று முப்படைகளையும் என்மேல் ஏவிவிட்டுத் தட்டி எழுப்ப, நான் ஏதோ குடம் குடமாய்க் குடித்துவிட்டு உறங்கும் இதிகாச நாயகன் கும்பகர்ணனா என்ன? இதனைச் செய்விக்கவும் எனக்கு அண்ணன், தம்பி, இனம், சனம் என்று எவருமே இங்கு கிடையாதே!

எழும்பி இருந்துதான் என்னத்தைக் கிழித்தவிடக் கிடக்கிறது?
போர்வைக்குள் சுருண்டுகொள்கிறேன்.

‘மோல்ஸன் பியர்’ போத்தலைப் பால் போச்சியாட்டம் சூப்பிச் சூப்பிச் சுவைத்தபடி அரசியலென்றும், அகதி வாழ்வென்றும், இலக்கியமென்றும் ஏதேதோ அலட்டிப் போகவென்று எனது நைஜீரியக் கறுவல் நண்பன் கப்றியேல் நேற்றிரவும் வந்து போனான். அவன் போனபின்னர், தனிமைப் பேயைத் துரத்தவேண்டிய தேவை எனக்கிருந்தது. நித்திரை அவசியமாகத் தேவைப்பட்டது. அதனால் கொஞ்சம் அதிகமாகத்தான் குடித்துவிட்ட ஞாகம்.

நெற்றிப் பள்ளங்களில் மெல்லிய வலி!

தலைமாட்டில் சுவரோரமாகப் பொருத்தப்பட்டிருக்கும் ‘ஹீட்டர்’ அனல் காற்றை வேறு அள்ளி வீசிக்கொண்டிருக்கிறது. அடித் தொண்டையிலும் நாசித் துவாரங்களிலும் இருந்து ‘பியர்’ நெடி, வெளிக் கிளம்பியபடி. நாக்கு வரண்டு சொரசொரத்துக் கிடக்கிறது.
‘எழும்பி ஹீட்டரைக் கொஞ்சம் குறைத்தவிட்டு, ஒரு கிளாஸ் குளிர்ந்த நீரைக் குடித்தால் இதமாயிருக்கும்.’ மனசு ஆலோசனை சொல்கிறது.

இது போன்ற சின்னச் சின்ன உதவிகளைத் தன்னிலும் செய்து தருவதற்கு ஆளில்லாத அனாதரவான கையறுநிலை! உற்சாகத்தை இழந்துபோன உடலோ, மனசின் ஆலோசனைக்கு இசைய மறுக்கிறது. மனசுக்கும் உடலுக்குமிடையில் ஒத்திசைவே இல்லாத ஒர் அவல வாழ்க்கைதான் இந்த அகதி வாழ்க்கை!

மனம் வருந்தி அலுத்துக்கொண்டபோது –
‘விஷ் யூஎ மெரி கிறிஸ்மஸ்…. விஷ் யூஎ மெரி கிறிஸ்மஸ்….’ வாத்தியங்களின் மெட்டு அடுத்த வீட்டு றேடியோவிலிருந்து கிளம்பி, எனது தலைமாட்டுச் சுவரையும் ஊடறுத்து வந்து காதில் இலேசாக ஒலிக்கின்றது.

‘ஓ…. மறந்தே போனேனே…! இன்று கிறிஸ்மஸ் அல்லவா?’
அன்பின் வடிவத்தை வையகத்துக்கு உணர்த்தியவர் – அயலார் மீதும் அன்பு காட்டக் கற்பித்தவர் – அனைத்து உயிர்களிடத்தும் அன்பை அள்ளிப் பொழிந்தவர் – பாவப்பட்டவர் மீதான அன்பின் நிமித்தம், அவர்களை இரட்ஷிப்பதற்காக முள்முடி தரித்தவர் – சிலுவை சுமந்தவர் – அதே சிலுவையில் அறையப்பட்டு இறைவனானவர்……..
அந்தத் தேவபாலன் அவதரித்த தினம், இன்றைய தினம்!

யேசுபிதா சொல்லிப்போன அன்பு, கருணை, இரக்கம் அனைத்தையும் மறந்து துறந்து, வெறுமனே உண்பதாலும் உடுப்பதாலும் குடிப்பதாலும் கும்மாளமடிப்பதாலும்தான் அவரது பிறப்பு அர்த்தம் பெறும் என்று இன்றைய உலகு கருதுகின்றதோ என்று ஒரு கணம் எண்ணத் தோன்றுகிறது.

நெட்டி முறித்து நிமிர முனைந்த மனசும் இப்போது உடலோடு ஒட்டி இணைந்து சுருண்டு படுத்துக்கொண்டது.

ஊரில் ஒரு காலத்தில் கொண்டாடி மகிழ்ந்த கிறிஸ்மஸ் பண்டிகைகளை, சோம்பல் மனசு ஒருமுறை மீட்டுப் பார்க்கிறது.
யாழ்ப்பாணம் பெரியகடையிலுள்ள புத்தகக் கடையெல்லாம் ஏறியிறங்கி, ரொம்பவும் பணம் செலவு செய்து, அழகான கிறிஸ்மஸ் கார்ட் வாங்கி, ஒவ்வொரு கிறிஸ்மஸூக்கும் அனுப்பிக்கொண்டிருந்தவள், ஜெஸிந்தா. மச்சாள் முறை சொல்லித் தாஜா பண்ணிக்கொள்ளவோ என்னவோ, என் தங்கையர் ஒவ்வொருவருக்கும் அவளிடமிருந்து தனித்தனியே கார்ட் வரும். பிறர் கண்களில் சிக்கிக்கொள்ள விடாமல், அத்தனை வாழ்த்து மடல்களையும் தபால்காரனிடமிருந்து வாங்கி அமுக்கி விடுவேன். ஆரம்பத்தில் அவளது சிநேகிதிகள் வீடுகளிலும், பிற்காலங்களில் அவள் வீட்;டாரிடமிருந்து எமது காதலுக்குப் ‘பச்சைக் கொடி’ காட்டப்பட்டதுடன் அவளது வீட்டிலும் எனக்கென்று எத்தனை கிறிஸ்மஸ் பார்ட்டிகள் இடம்பெற்றிருக்கும்!

மட்டக்களப்பிலிருந்தபோது ‘அக்டிங் மஜிஸ்றேட்’ லோறன்ஸ் வீட்டில் ஒவ்வொரு கிறிஸ்மஸூக்கும் எனக்;கென்று ‘ஸ்பெஷல் இன்விரேஷன்’ தவறாமல் வரும். என்மீதான அளவிறந்த ‘வாஞ்சை’ காரணமாக, அவரது மூத்த குமாரி நிலானி, அந்தக் குடும்பத்தில் எனக்குத் தேடித்தந்த செல்வாக்கின் பெறுபேறு அது!

கண்டியில் வாழ்ந்த காலத்தில் எத்தனை கிறிஸ்மஸ், யார் யாரோடு, எப்படியெப்படியெல்லாம் களிந்தன என்ற புள்ளி விபரங்களை, தலதா வீதி குயீன்ஸூம், பேராதனை வீதி லியோன்ஸூம் தான் கணக்குப் போட்டுச் சொல்லவேண்டும்.

இன்றோ கனடாவில் வந்து கரையொதுங்கிய நாளிலிருந்து, ஒரு சின்ன நேசிப்புக்கும், மனம் எங்கெங்கொ எல்லாம் தேடியலைந்து யாசிக்கும்!

நாளைய பொழுதின் நிச்சயமின்மை நிமிடத்துக்கு நிமிடம் அச்சுறுத்திக்கொண்டிருக்க – நேற்றைய இனிய நினைவுகளே தஞ்சம் என்று அசைபோட்டு அசைபோட்டு, மனசு அங்குமிங்குமாய் அல்லாடிக்கொண்டிருக்க – இன்றைய பொழுதை இயலாமையில் கரைந்த ஏகாந்தம் விழுங்கிக்கொண்டிருந்தது.

கண்கள் இறுக மூடியிருக்க, மனசு எதையெதையோ எல்லாம் எண்ணி இலக்கின்றி அலைந்துகொண்டிருந்த தருணம் –
‘டொக்…டொக்….டொக்…..’

கதவில் யாரோ தட்டிக் கேட்பது போன்ற…. ஒரு பிரமையா? அல்லது….!

மீண்டும் ஒருமுறை …… உண்மையாகவே தட்டித்தான் கேட்கிறது! என்னுடைய கதவில் தானா? சொல்லாமல் கொள்ளாமல் என்னைத் தேடிவர யார் …….? கப்றியேல் ராத்திரியே மொன்றியாலில் உள்ள தனது ‘கேள் பிறெண்’டைப் பார்க்கப் போவதாகச் சொல்லிப் புறப்பட்டுவிட்டானே?

ஒருவேளை தபாற்காரனோ! சேச்சே…அவன் வழக்கமாகக் கதவிலுள்ள தபால் இடுக்கு வழியாக கடிதங்களைச் சொருகித் தள்ளிவிட்டுப் போய்விடுவானே! பதிவுத் தபால், பார்சல் ஏதாவது என்றால் மட்டும், கதவுச் சட்டங்கள் கழன்று கொட்டுப்பட – தட்டமாட்டான் – பலமுள்ளவரை குத்துவான். ஆனால் இன்றைக்குக் கிறிஸ்மஸ் விடுமுறை. அவன் ஏன் வரப்போகிறான்?

இது யாராக இருக்கலாம்……..?

பொண்டிப்போயிருந்த கண்களைக் கசக்கியபடி, மேசையில் அனாதரவாகக் கிடந்த மூக்குக் கண்ணாடியைத் தடவித் தேடிப்பிடித்து, மாட்டிக்கொண்டு கட்டிலை விட்டிறங்குகிறேன்.
தொடர்ந்து மணித்தியாலக் கணக்கில் படுத்துக் கிடந்ததால், மாடு சூப்பிய பனங்கொட்டை மாதிரிச் சிலும்பிக் கிடந்த தலை முடியைக் கைகளால் கோதிவிட்டபடி, நாட்கணக்கில் சவரம் செய்யாததால் ‘அறக்கொட்டி அடிச்சுப்போன’ வெள்ளாமை போலப் பாத்தி பாத்தியாய் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் துருத்திக்கொண்டு நிற்கும் தாடியை சொறிந்துகொண்டு, ‘லென்ஸ்’ பொருத்தப்பட்ட கதவுத் துவாரத்தினூடாக உற்றுப் பார்க்கிறேன்.

‘கிளியோப்பெட்றா…..!’

என்னால் நம்பமுடியவில்லை! முதன் முறையாக என் வீட்டுக் கதவின் முன்னால் வந்து நிற்கிறாள், எதிர் வீட்டு வெள்ளைக்காரி!
நான் இந்த ‘பச்லர் அப்பார்ட்மெண்’டில் குடியேறி ஏறக்குறைய ஏழெட்டு மாதங்களாகிவிட்டன. இந்தச் சிறிய தொடர்மாடிக் கட்டடத்துக்கு நேர் எதிர்த்தாற்போல, றோட்டுக்கு மறுபுறமாக உள்ள தனி வீட்டில் வசிக்கும் இவளை அநேகமாக ஒவ்வொரு நாளும் நான் நேருக்குநேர் கண்டிருக்கிறேன்.

இவ்வளவு காலத்திலும் ஒருமுறை தன்னிலும் என்னை முகத்துக்கு முகம் நிமிர்ந்தே பார்க்காத இவளுக்கு இன்று என்ன தேவை ஏற்பட்டிருக்க முடியும்?

ஊரிலுள்ள எனது சொந்த பந்தங்களிடமிருந்து வரும் கடிதங்களை எதிர்பார்த்து, தினம் தினம் தபாற்காரனின் தரிசனத்துக்காக வாசலில் நான் தவம் கிடப்பதை –

இரு வாரங்களுக்கொரு தடவையாவது, என் ஒண்டிக் குடித்தனத்துக்கென்று அரசு தரும் பிச்சைக் காசுக்கு சாப்பாட்டுச் சாமான்களை வாங்கி ‘பிளாஸ்ரிக்’ பைகளில் நான் சுமந்துகொண்டு வருவதை –

வாழ்வின் இனிமையான பக்கங்கள் கிழித்தெறியப்பட்ட சோகத்தை மறுப்பதற்கென்று, எங்கெங்கொ எல்லாம் அலைந்து திரிந்துவிட்டு, ஏகாங்கியாய் நான் வீடு திரும்புவதை –

எதிர் வீட்டுக்காரியான இவள், தனது வீட்டு வெளி விறாந்தையில் நிரந்தரமாகப் போடப்பட்டிருக்கும் ‘லேஸி போய்’ எனப்படும், கதிரைக்கும் கட்டிலுக்கும் இடைப்பட்ட, அந்த ஆசனத்தில் சரிந்திருந்தவாறே தினமும் பார்த்துக்கொண்டிருப்பாள். அப்பொதெல்லாம் ஒரு சிறு புன்னகையைத் தன்னிலும் என் மனதில் முதலீடு செய்துவைக்க முயற்சிக்காதவள், இன்று எதற்காக எனது வாசல் தேடி…?

பல வருடங்களுக்கு முன்னொருநாள் கனடாவின் நியூபவுண்லாந்து மாகாணத்தில் நூற்றைம்பத்தாறு இலங்கைத் தமிழர் படகில் வந்து கரையொதுங்கியபோது, இங்குள்ள ஊடகங்கள் யாவும் தொடர்ந்து பல நாட்களாக அவர்களைப் பற்றியே சுடச்சுட சர்ச்சைகளில் காலம் கழித்தனவாம். பிறிதொரு கிரகத்திலிருந்து பூலோகத்திற்கு வந்திறங்கிய பிரகிருதிகள் என்றவாறு இவர்களைப் பலர் அதிசயமாகப் பார்த்து வியந்தார்களாம். ஒரு காலத்தில் ‘சிலோன்’ என்று அறியப்பட்ட சிறுதீவுதான் இப்போது ஸ்ரீலங்கா ஆகியிருப்பதாகவும், அங்கிருந்து வந்து கரையொதுங்கிய ஓர் இனம் தான் இந்த ‘ரமிள்ஸ்’ என்றும், இவர்களெல்லாம் அப்போதுதான் பூகோள ஞானப் பிரகாசம் பெற்றுக்கொண்டார்களாம்!

‘போட் பீப்பிள்’ என்று நாமகரணம் செய்து, அருவருப்புடன் எம்மவரைப் பார்த்த இவர்களுள், வழிதெருவில் கண்ட இடங்களில் திட்டித் தீர்த்த கிழடு கட்டைகளும் – காறி உமிழ்ந்த இனத் துவேஷிகளும் உண்டென்று நிறையக் கதைகள்.

என்னை ஓர் அற்ப ஜந்துவாகப் பார்க்கும் இவள்மீது எனக்கோ எப்போதும் ஒரு வெறுப்பு!

அது மட்டுமில்லை, எழுபது வயதுக் கிழவி மாதிரியாகவா இவள் இருக்கிறாள்? ஆடம்பர ஆடை அணிகலன்கள், தலையில் ஒய்யாரமாய்க் குந்தியிருக்கும் இறகு குத்திய வெள்ளைத் தொப்பி, வயதுக்குப் பொருந்தாத குதி உயர்ந்த காலணி, கையில் எப்போதும் அநாயாசமாகத் தொங்கிக்கொண்டிருக்கும் அந்த டம்பப் பை, அவளது சருமத்தை இளஞ்சிவப்பு நிறமாக்கிக் காட்டவல்ல ஒரு செந்நிறக் குடை என்பன சகிதம் அவள் வெளியே வரும்போதெல்லாம், விலையுயர்ந்த ‘பெர்பியூம்’ வாசனை, வீதியை நிறைத்து வியாபித்து நிற்கும்!

‘இந்தக் கிழட்டு வயதிலையும், தானொரு ‘கிளியோபெட்றா’ என்ற நினைப்பாக்கும், இவளுக்கு’ என்று ஒருநாள் கப்றியேல் இவளைப் பார்த்துக் கறுவிக்கொண்டதன் பின்னர், எங்கள் இருவருக்கும் இவள் நிரந்தர கிளியோபெட்றாவானாள்!

மூன்று நாட்களுக்கு முன்னர் வீடுகளை, வீதிகளை மூடி மறைத்தவாறு மலை மலையாய் ‘ஸ்னோ’ கொட்டியபோது அவசரமாக வீடு திரும்பிக் கொண்டிருந்த என் கண்ணில், தன்னந் தனியனாக நின்று தனது வீட்டு நடைபாதையில் இவள் ‘ஸ்னோ’ தள்ளிக்கொண்டிருந்ததை நான் கண்டும் காணாதவன் போலத் திரும்பியும் பார்க்காமல் வந்துவிட்டேன்.

என்னை ஒரு மனிதனாகத் தன்னிலும் பார்க்க விரும்பாத இவளுக்காக, நான் ஏன் இரக்கப்படவேண்டும்? இவளுக்கு நான் உதவவேண்டும் என்று என்ன தேவை எனக்கு?

இவள் இன்று என்னுடைய கதவில் வந்து தட்டுவதற்கு என்ன காரணம்?

நான் கதவைத் திறக்காமல் துவாரத்தினூடாகப் பார்த்துக்கொண்டு நிற்பதை உணர்ந்த அவள், மூன்றாவது முறையாகத் தட்டுகிறாள். இனியும் கதவைத் திறக்காதிருப்பது நல்லதல்ல. மெதுவாகக் கதவைத் திறிந்தபோது பனிக் குளிர்க் காற்று எனது வீட்டுக்குள் சில்லென்று ஊடுருவிப் பாய்கிறது!

முதன் முறையாக என்னைப் பார்த்துக் குறுநகையால் குசலம் விசாரிக்கிறாள், அவள்!

ஒரு வெள்ளைக் கடித உறையை நீட்டியபடி, ‘மெறி கிறிஸ்மஸ்’ கூறி என்னை வாழ்த்துகிறாள்!

‘மெறி கிறிஸ்மஸ்’

புன்னகையை வலிந்து வரவழைத்தவாறே பதிலுக்குக் கூறிய நான், காரண காரியங்களை உணரா இயந்திரமாய் அந்தக் கடித உறையைக் கை நீட்டி வாங்குகிறேன். அதை மேலுங் கீழுமாகப் புரட்டிப் பார்க்கிறேன்.

கனவிலிருந்து கண் விழித்தவன் போன்ற திகைப்புடன் அந்த உறையை நான் பார்த்துக்கொண்டிருந்தபோதே அவள் தனது வீடுநோக்கி நடக்கலானாள்.

சீதளக் காற்று நேராகப் பாய்ந்துவந்து நெஞ்சில் குத்துகிறது!
கதவை மூடி, உட்புறமாக அதில் சாய்ந்து நின்றபடி, உறையைப் பிரித்துப் பார்க்கிறேன்.

உள்ளே அழகான ஒரு கிறிஸ்மஸ் வாழ்த்து மடல்!

முகப்பில் ஊற்றுப் பேனாவினால் முத்து முத்தான ஆங்கிலக் கையெழுத்தில் ‘மெறி கிறிஸ்மஸ் அண்டு ஹப்பி நியூ இயர்’ என்ற வாழ்த்து மொழிக்குக் கீழே ‘அன்பும் இரக்கமும் மிக்கவர்கள் ஒரு போதும் அனாதைகள் ஆவதில்லை’ எனப் பொறிக்கப்பட்டிருக்கின்றது.
மடலைத் திறந்தபோது –

ஐம்பது டொலர் நோட்டு ஒன்று காற்றில் அசைந்தாடியவாறு கீழே விழுகிறது!

வியப்புடன் அந்தச் சிவப்பு நோட்டைக் குனிந்து எடுத்துக்கொண்டு, அவசரமாகக் கதவைத் திறந்து வெளியே பார்க்கிறேன்.

அங்கே அவளது கதவு மூடப்படுவது தெரிகிறது.

நான் எனது வீட்டுக் கதவை மூடுகிறேன். கதவின் உட்புறமாக உடல் சாய்ந்து, முதுகு வழுக்கிக் கீழிறங்க, நிலத்தில் அப்படியே உட்கார்ந்துகொள்கிறேன். அவள் தந்த பணத்தையும் வாழ்த்து மடலையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

இதயம் கனத்துப் பலமாக அழுத்துகிறது!

நானோ, ….. எனக்குள் ….. புல்லாகிப் பூடாகி ….. புழுவாய் மரமாகி ……..

– ஞானம், ஜனவரி 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *