சேலத்திலிருந்து கோயமுத்தூருக்கு பஸ் கிளம்ப போகிறது. அதற்குள் உட்கார்ந்திருந்த சாமியப்பனுக்கு ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கி வந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டார். பஸ்ஸைவிட்டு இறங்க வேண்டும். எல்லா இருக்கைகளும் நிரம்பி வழிகின்றன. இவருக்கு என ஒரே ஒரு சீட் கிடைத்து அதில் உட்கார்ந்தும் விட்டார். திடீரென தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து இப்பொழுது தீவிரமாகி விட்டது. ஓட்டுநர் வேறு பஸ் பக்கத்திலேயே நின்று கொண்டிருக்கிறார். ஐந்து நிமிடத்தில் வண்டி ஏறிவிடுவார். சட்டென முடிவு எடுத்தவர் ஒரு கைக்குட்டையை அவர் சீட்டில் போட்டு விட்டு இறங்கி கடைக்கு ஓடினார். கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டில் ஒன்றை வாங்கிவிட்டு பணம் எடுத்து கொடுத்தவர் திரும்பி பார்க்க பேருந்து நகர்ந்து கொண்டிருந்தது. அவ்வளவுதான் அவனிடம் பாக்கியை கூட வாங்காமல் பேருந்தை நோக்கி ஓடி வந்து ஏறிக் கொண்டார். மூச்சு வாங்கியது. கடைக்காரன் மீதி இரண்டு ரூபாய் தரவேண்டும். போனால் போகிறது, ஊர் போய் சேரவேண்டும்.
பேருந்து முழுக்க கூட்டம் வேறு .எல்லோரையும் விலக்கிக் கொண்டு அவர் கைக்குட்டை போட்டிருந்த இடத்திற்கு வந்தவர் அதிர்ந்து போனார். அதில் ஒரு ஆள் உட்கார்ந்திருந்தார்.
ஹலோ சார் கொஞ்ச ம்எந்திரிக்கறீங்களா?
எதுக்கு எந்திரிக்கணும் ?
இது என்னோட இடம்
அவர் கொஞ்சம் கிண்டலான பேர்வழி போலிருக்கிறது, அப்படியா உட்கார்ந்த நிலையிலேயே தான் உட்கார்ந்திருந்த இருக்கையை சுற்றி பார்த்து, உங்க பேர் ஒண்ணும் போட்டிருக்கலையே?
அவ்வளவுதான் கோபம் தலைக்கேறியது சாமியப்பனுக்கு, என்னசார் கிண்டலா, கடைக்கு போய் ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கிட்டு வரதுக்குள்ள என் சீட்டுல உட்கார்ந்துகிட்டு கிண்டலா பண்ணிகிட்டு இருக்கறீங்க. வேணும்னா பாருங்க, என் கர்சீப் போட்டு வச்சுட்டுட்டுத்தான் போனேன் சொல்லிவிட்டு சுற்று முற்றும் குனிந்து பார்க்கிறார். அவர் நேரமோ என்னவோ கைக்குட்டை காணவில்லை. இதனால் மேலும் எரிச்சலாகி விடுகிறது சாமியப்பனுக்கு.
போட்டிருந்த கர்சீப்பை கூட எடுத்து எங்கியோ வீசிட்டு உடகார்ந்திருக்கரதை பாரு, சத்தமாய் முணங்கினார்.
சார் இங்க கர்சீப் ஒண்ணும் இல்லை சார், நான் வரும் போது காலியாத்தான் இருந்துச்சு இந்த சீட், அதனால உட்கார்ந்துட்டேன்.
நான்தான் உட்கார்ந்துகிட்டு இருந்தேன்னு சொல்லிகிட்டு இருக்கேனே, ஏன் சார் நான்தானே இங்க உக்காந்துகிட்டு இருந்தேன்? பக்கத்து இருக்கை ஆளிடம் கேட்கிறார்.
சாரி நான் கவனிக்கலை, அந்த ஆள் நாகரிகமாக ஒதுங்கிக் கொண்டாரா, இல்லை நமக்கெதுக்கு வம்பு என்று ஒதுங்கிக் கொண்டாரா தெரியவில்லை.
இதை கேட்டவுடன் சாமியப்பனுக்கு இன்னும் சூடு ஏறியது.
தயவு செய்து என்னுடைய இடத்தை விட்டு எந்திரிங்க ,அந்த ஆளிடம் மிரட்டும் தொனியில் கேட்டார்.
கண்டக்டர் ஒவ்வொரு சீட்டாக பார்த்து டிக்கெட் கொடுத்துக் கொண்டு வந்தார். இந்த இடத்துக்கு வரவும், சாமியப்பன் கண்டக்டரிடம் பாருங்கசார் ஒருநிமிசம் இறங்கி போய் தண்ணீர் பாட்டில் வாங்கிட்டு வரதுக்குள்ள இந்தஆள் என்சீட்டுல உட்கார்ந்துட்டாரு..
கண்டக்டர் இதை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. இதுபோல் தினம் தினம் நிறைய கேஸ்களை பார்த்திருப்பதால் அவர் பாட்டுக்கு உட்கார்ந்திருந்த இருவரிடமும் கோயமுத்தூரா என்று டிக்கட் கிழித்து இருவருக்கும் தனித்தனியாக கொடுத்து பணத்தை வாங்கி போட்டுக்கொண்டார். திரும்பி சாமியப்பனிடம் சார் நீங்க கோயமுத்தூருதானே என்று டிக்கட் கிழிக்கப் போனார்.
என்ன சார் நான் என்சீட்டுல இவர் உட்கார்ந்துட்டு எந்திரிக்காம ரகளை பண்ணிகிட்டிருக்காரு, அதைய கேளுங்கன்னா, நீங்க பாட்டுக்கு அவங்களுக்கு சீட்டை கொடுத்துட்டு எங்கிட்ட டிக்கட் கேட்டுகிட்டிருக்கறீங்க?
கண்டக்டரும் ஜாலியான பேர்வழி போலிருக்கிறது, என்னசார் பண்ணறது எங்க வேலையே டிக்கட் கிழிக்கறதுதான், இப்ப உங்களுக்கு கோயமுத்தூருக்கு டிக்கெட் கிழிக்கட்டுமா? அவரின் கேள்வி சாமியப்பனுக்கு எரிகிற தீயில் இன்னும் கொஞ்சம் எண்ணை ஊற்றுவது போலிருந்தது.
சார் இதுதான் சார் உலகம், கொஞ்சம் கூட நியாயம் தர்மம் இல்லாத உலகம். கிட்டத்தட்ட பத்துநிமிசம் உட்கார்ந்து கிட்ட இருந்த சீட்டுல ஒரு இரண்டு நிமிசம் இறங்கி போய் தண்ணி பாட்டில வாங்கிட்டு வரதுக்குள்ள இந்த ஆள் என் சீட்டுல உட்கார்ந்துகிட்டு ரகளை பண்ணறாரு, அந்த நியாயத்தை கேக்கறதுக்கு இங்க யாரும் தயாராயில்லை. அப்புறம் எப்படி நாடு உருப்படும், எல்லாம் நாசமாகத்தான் போகும். தனது ஆற்றாமை காரணமாக சத்தம் போட்டு சொல்லும்போதே வாய் குழறி. கண்ணில்நீர் எட்டிப்பார்த்தது.
சார் ஒரு நிமிசம் நீங்களே உட்கார்ந்துக்குங்க சார், இவ்வளவு தூரம் மனசு கஷ்டப்படறீங்க, வாங்க சார். அவர் சீட்டில் உட்கார்ந்திருந்தவர் எழுந்தவர் தனது காலை இழுத்து கையை முழங்காலில் வைத்து நகர்ந்து முன்னால் போகிறார்.
சாமியப்பன் அப்படியே சிலையாகி நின்றுவிட்டார்.
இவர் நடப்பதற்கு சிரமப்படுபவரா? கடைசி வரை தான் செய்த செயலுக்கு வருத்தப்பட்டு அந்த சீட்டில் உட்காரவே இல்லை
இதில் யார் மனிதாபிமானி சாமியப்பனா? காலியாய் இருந்த சீட்டில் உட்கார்ந்து கொண்ட அந்த மனிதரா?