எடிசனும்… மாரியக்காவும்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 13, 2012
பார்வையிட்டோர்: 9,618 
 
 

என்னமோ காளிமுத்து மட்டுந்தேன் இந்த எட்டு ஜில்லாவிலேயே பத்தாவது படிக்கிற மாதிரியும், அவுங்க ஸ்கூலு ஆண்டு விழா என்னமோ அவனுக்கு மட்டுந்தேன் நடந்த மாதிரியும், அந்த விழாவுல பேச வந்தவரு இவன்கிட்ட மட்டுந்தான் பேசினமாதிரியும் அவுங்க அம்மா பஞ்சவர்ணத்துக்கிட்ட பள்ளிக்கொடக் கதய தயாரிப்பாளர்கிட்ட புது டேரக்டரு அழுதுகிட்டும் சிரிச்சிக்கிட்டும் ஆக்ஷனோட சொல்லுவாரே அதே மாதிரி சொல்லிக்கிட்டிருந்தான்.

கத புடிக்கலேன்னா, அப்பறம் பாக்கலாம்னு தயாரிப்பாளர் எந்திரிச்சுப் போயிருவாரு, ஆனா பஞ்சவர்ணம் தயாரிப்பாளரில்லை என்பதாலும், அவனைப் பெற்ற தாய் என்பதாலும், இவன் சொல்றது அத்தனையும் அவன் மனசு நோகக்கூடாதுன்றதுக்காக உம்மு போட்டுக்கிட்டே கேட்டுக்கிட்டிருந்தா.

அவுங்க அப்பா பாக்கியம் ரெண்டு ஏக்கர் நெலத்துல (சொந்த நெலமில்ல, சொந்தக்காரவுக நெலம்…) வரப்பு வெட்டி தண்ணி பாய்ச்சீட்டு கூலிய வாங்கி, பஞ்சவர்ணத்துக்கிட்டு கொடுத்திட்டு ஆத்தத்தோன்னு அப்பந்தேன் வந்து படுத்தாரு… இவன் பள்ளிக்கூடக் கதைய சொல்லச்சொல்ல கொஞ்சம் சல்லையா இருந்தாலும், சரி என்னிக்கோ வருஷத்துக்கு ஒருநா ஆண்டு விழா நடக்குது. பய அந்த ஆர்வத்துல பேசிக்கிட்டிருக்கான்ன்னு சுயசமாதானம் பண்ணிக்கிட்டு, தூக்கப்பார்த்தாரு.

“இன்னிக்கோட எங்க பள்ளிக்கொடம் ஆரம்பிச்சி முப்பத்தாரு வருஷம் ஆகுது. எர்ரம்பட்டி கிராமத்தில, இனி அடுத்து ஒரு பஸ்சு வர்றதுக்கு அஞ்சாறு மணிநேரம் ஆகும். அதுக்குள்ள ரோட்டுல சிந்தியிருக்கிற நெல்லுகள நம்ம பொந்துக்கு கொண்டு போயிரலாம்னு எறும்புக் கூட்டங்கள் பேசி சாவகாசமா நடந்து பேற ரோட்டுல… ஒத்தையாளா வந்து கலந்துக்கிட்டாரும்மா அந்த வாத்தியாரு… சிவகங்கை மாவட்டத்துல மாநகராட்சி ஸ்கூல்ல தமிழ் வாத்தியாரா இருக்காரும்மா அவரு… பேரு சதாசிவம்”

அப்போது இடைமறித்த பஞ்சவர்ணம், “நடந்தா வந்தாரு, பள்ளிக்கொடத்துல இருந்து காருகீரு புடிக்கலயாடா?”

“என்னது புடிக்கலயாவா? மதுர பஸ்டாண்டுக்கே அனுப்புறதா இருந்தாராம் எங்க கெச் எம்மு… ஆனா அவருதான் வேண்டாம்னுடாராம்…” கொஞ்சம் கோபமாகவே சொன்னான்.

“மரியாத கிரியாதல்லாம் பலம்மா இருந்திருக்குமே” என்ற அம்மாவின் கேள்விக்கு

“பின்ன! சும்மாவா, ரோஜாப்பூ மாலை என்ன? பட்டு சால்வை என்ன?அமக்களப்படுத்திட்டோம்ல! ” என்று, எளக்காரமாகவும், கர்வமாகவும் ஒலித்தது அவன் குரல்.

“மொத எங்க பள்ளிக்கூடத்து பேரு என்னா? அப்படின்னு கேட்டாரும்மா…” அப்போது குழம்பு தாளிக்க கருவப்பிள்ளையை தேடிய சற்று நேரத்தில், “என்னம்மா…” என்று பரிதாபமாக கேட்டு மிச்சத்தையும் கேக்காமபோயிருமோன்னு பயந்தான்.

“கேட்டுக்கிட்டுத்தானடா இருக்கேன்” என்று எரிச்சலுடன் சொன்ன அம்மாவை, கொஞ்சநேரம் பாவமாய் இவன் பார்க்க, அவன் தாவாங்கட்டையை பிடித்து ஒரு ஆட்டு ஆட்ட… மீண்டும் விட்ட எடத்தில் இருந்து தொடர்ந்தான்.

“ம்…நாங்கள்லாம், பள்ளிக்கூடத்து பெயர்கூட தெரியாம, பேச வந்துட்டாருன்னு, எங்களுக்குள்ள சிரிச்சிக்கிட்டோம். சொல்லுங்கப்பா எல்லாம் காரணமாத்தான் கேக்குறேன்னார். நாங்கள் உமறுப்புலவர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி என்று ஒரே குரலாகக் கத்தினோம்”

வெண்டிக்காக் கொழம்பு, தளக்கு தளக்குன்னு கொதிக்க, அவுங்க அப்பா கொரட்டு கொரட்டுன்னு கொரட்ட விட, இந்த ரெண்டு சத்தத்தையும் தன் கதைக்கு பின்னணி இசையா ஆக்கிக்கிட்டவன் மாதிரி அவன் உற்சாகமாகத் தொடர்ந்து கொண்டிருப்பதை, அம்மா சிரிப்பும் கடுப்புமாக பார்த்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தாள்.

“உமறுப்புலவர் என்பவர் சீறாப்புராணத்தை எழுதியவர், வள்ளல் சீதகாதி என்னும் மன்னனால் ஆதரிக்கப்பட்டு வந்தவர், நபிகள் நாயகத்தின் வரலாற்றை மிகவும் எளிய தமிழில் படைத்தவர், அப்படிப்பட்ட ஒரு புலவரின் பெயர் உங்கள் பள்ளிக்கு வைக்கப்பட்டிருப்பது உங்கள் பள்ளிக்கு பெருமைதானே! இதை நீங்கள் அறிந்து வைத்திருப்பது கடமைதானே!’ ன்னு அவர் சொன்னதும் நாங்களெல்லாம் கொஞ்சநேரம் அமைதியாயிட்டோம்”

“உங்க வாத்தியாருக யாரும் இதுவரைக்கும் இதப்பத்தி சொல்லலீயா, இதை நீங்க தெரிஞ்சிக்கிறதுக்கு சிவகங்கையிலா இருந்தா ஆள் வரணும்” என்று அசட்டையாகச் சொன்னாள் பஞ்சவர்ணம்.

“யம்மா! அதெல்லாம் விடும்மா. தன்னம்பிக்கையா எப்படி வாழனும்கிறதுக்கு அவரு உதாரணமாக சொன்னாரே ஒரு விஷயம்,.. அதைத்தாம்மா என்னால மறக்கவே முடியல” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, உணர்ச்சிவசப்பட்டான்.

(உணர்ச்சிவசப்படுவது என்பது தமிழில் இருவேறு அர்த்தங்களை கொடுப்பதால், அவனின் அப்போதைய நிலைக்கு இங்கிலீசுல இந்த வார்த்தைய சொன்னாத்தான் நல்லாருக்கும்றதால… ‘ஃபீல்’ பண்ணினான்னு வச்சிக்குங்க.)

அவனின் செயல்களையும் முகபாவனைகளையும், குரலில் காணும் ஏற்ற இறக்கங்களையும் கண் கூசாம கவனித்துக் கொண்டிருந்த பஞ்சவர்ணம் சடக்குன்னு அடுப்பைப் பார்த்தாள். அப்புறம் கொழம்பைப் சுவை பார்த்து இறக்கினாள்.

அப்புறம் தன்னம்பிக்கை சம்பந்தமாக சதாசிவம் சொன்னதாக, காளிமுத்து, பஞ்சவர்ணத்திடம் சொன்னதாவது,

“தன்னம்பிக்கை என்பது என்ன? ஆயிரம் முறை தோல்வியடைந்தாலும் சளைக்காமல் வெற்றியை நோக்கிய பாதையில் பயணிப்பது… எதிர்நீச்சல் போடுவதுதான். உதாரணத்திற்கு மின்சார பல்பை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனை எடுத்துக் கொள்வோம்… ஆயிரத்திற்கும் மேற்பட்ட இழைகளை இரும்புக் கம்பிகளுக்கு இடையில் பொருத்தி பல்பை எரியச் செய்து பார்த்தார். இவர் செய்வதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அவரின் சக நண்பர், இவ்வளவு தூரம் நீங்கள் பட்ட கஷ்டங்களெல்லாம் வீண்… இதுவெல்லாம் சாத்தியமில்லை… விட்டுவிடுங்கள் என்று சொன்னார்.

அதற்கு எடிசன், ‘நாம் இந்த சோதனைகளில் இருந்து ஒன்றைத் தெரிந்து கொண்டோம், என்னவென்றால் நாம் இதுவரை பயன்படுத்திய இழைகளால் மின்விளக்கை எரியச் செய்ய முடியாது என்பதுதான் அது’

எடிசன் இப்படிச் சொல்லியது தன்னம்பிக்கையின் வெளிப்பாடு அன்றி வேறில்லை… அந்த நண்பர் சொன்னது மாதிரி எடிசன் அடுத்ததான முயற்சிகளை செய்யாதிருந்தால் நாம் மின்விளக்கின் பயன்களை பெற்றிருக்க முடியுமா? அடுத்தாக நடைபெற உள்ளதே உங்களின் கலை நிகழ்ச்சிகள்… அதில் வண்ண வண்ண ஒளியில் நீங்கள் நடனமாட முடியுமா? பள்ளி முடிந்து சென்றதும், வீட்டில் நீங்கள் மின்னொளியில் படிக்க முடியுமா?”

– என்று ஒரே மூச்சில் சொல்லிவிட்டு அம்மாவை அம்புட்டுத்தேன் என்கிற மாதிரி பார்த்தான். உடலில் களைப்பு தட்டியிருந்தது. தண்ணீரை எடுத்து சட்டை நனையயும் வயிறு நிறையவும் குடித்துக் கொண்டான்.

அம்மா இந்த வார்த்தைகளைக் கேட்டு எவ்வித மாற்றமும் கேள்வியும் கேட்காமலிருப்பது காளிமுத்துவை சங்கடத்திற்கு உள்ளாக்கியது. ஏதாவது கேட்பான்னு நினைத்தான். ஆனால் ஒண்ணுமே கேக்கவில்லை பஞ்சவர்ணம்.

கொஞ்சநேரம் பேசாம இருந்த அவ ஒரு கதையச் சொன்னா. “ஒனக்கெல்லாம் தெரியாது அப்ப நீ ரெம்ப சின்னப்பைய…” ன்னு ஆரம்பித்தாள்…

அப்போது, அப்பா பாக்கியம் எந்திரிச்சுப்பாத்தாரு, இவ வேற ஆரம்பிச்சுட்டாளான்ற மாதிரி ஒரு பார்வை பாத்திட்டு, “சோறு கொழம்பு ஆக்கிட்கீட்டியா என்ன…?” ன்னு கடுப்பாக கேட்டார்.

“இன்னும் செத்த நேரம் படுய்யா… தொட்டுக்குற ஏதாவது வெஞ்சனம் செஞ்சுக்கிறேன்…” என்னு சொல்லவும், மீண்டும் துண்டை எடுத்து மூஞ்சிய மூடிக்கிட்கிட்டு படுத்துக்கிட்டார் பாக்கியம்.

அம்மா என்னமோ சொல்லவருதுன்னு காளிமுத்து பரவசப்பட்டான்,…

“நம்ம வீட்டுக்கு ஒரு நாலு வீடு தள்ளி, மாரின்னு ஒரு பொம்பள குடியிருந்திச்சு, எஞ்சோட்டுப் பொம்பகளுக்கெல்லாம் மூத்ததுன்றனால நாங்கெல்லாம் அத மாரியக்கா மாரியக்கான்னு தான் கூப்பிடுவோம்”

“ஏன் ஒருதடவை மாரியக்கான்னு கூப்ட்டா திரும்பாதா?” என்று கேட்க வாய் வந்தது ஆனால் கேட்காமல் பேசாமல் இருந்து கொண்டான் காளிமுத்து.

“அதுக்கு வராத கஷ்டமா, புருஷன் எவ கூடயோ ஓடிப்போயிட்டான் ஒரு பொம்பளப்பிள்ளையையும் கொடுத்துட்டு,.. பத்தாததுக்கு கடன் வேற வாங்கித் தொலைச்சிட்டுப் போயிட்டான். கடன் குடுத்தவுக வந்து மானக்கேடா கிழிச்ச கிழியில சாகப்போன அவள, அவளோட பிள்ளையின் அழுகைச் சத்தம்தான் திரும்ப வரவச்சிச்சு, ”

அப்போது ரெண்டு தடவை கண்ணை டபக்டபக்னு திறந்து திறந்து மூடினான் காளிமுத்து. இதை வருத்தத்தை வெளிப்படுத்த செஞ்சானா, ஆச்சரியத்தை வெளிப்படுத்த செஞ்சானா என்பது அவனுக்கே வெளிச்சம்.

“அப்பறமா, பெரிய வீட்டாளுகளுக்கு தண்ணியெடுத்து வக்கிறது, துணி தொவைச்சு போடுறதுன்னு வேலசெஞ்சு கொஞ்சம் காச சேத்து வச்சா, அதையும், அவளோட மாமியாகாரி வந்து மகளுக்கு அண்ணன் சீரு செய்யீன்னு சொல்லி புடுங்கிட்டுப் போயிட்டா. இன்னும் கொஞ்சத் தொல்லையா அவங்க மாமியா குடுத்தா… பாவம் அந்த மாரியக்கா அம்புட்டு தொல்லையையும் ஒத்த பொம்பளையா நின்று சமாளிச்சா ”

“இந்தப்புள்ளையையும் வச்சிக்கிட்டு இந்த கருமாயப்படுறீயேன்னு யாராவது இரக்கம் காட்டுனா மட்டும் அந்த அக்காவுக்கு புடிக்காது. எம்மவள இந்த ஊருக்கே கலெக்டராக்கிக் காட்டுவேன் அதுக்காக என்ன கஷ்டத்தையும் அனுபவிப்பேன்னு சொல்லிச்சு”

“அதே மாதிரி கலெக்டரா ஆக்கிருச்சாம்மா அந்த மாரியக்கா… ” என்றான் பேராவலுடன்…

“அந்தக்கா சொன்னது ஒண்ணு மட்டுந்தாண்டா நடக்கல”

“அய்யய்யோ கலெக்டரா ஆக்கலயாம்மா…?” பதற்றப்பட்டான் காளிமுத்து.

“முழுசா கேள்றா… இந்த ஊருக்கு கலெக்டரா ஆக்குவேன்னுச்சு, ஆனா அந்தக்காவோட மக சிவகங்கைக்கு கலெக்ட்ரா ஆயிருச்சு, எந்த ஊருல இருந்தாலும் கலெக்டரு கலெக்டருதானே, என்னடா காளிமுத்து” என்றாள் பெருமிதத்துடன்,

இனிமேலும் பொறுக்க முடியாதுன்னு வெஞ்சனம் வெந்தா என்ன வேகலேன்னா என்ன என்று அவராகவே எடுத்துப்போட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார் பாக்கியம்….

“சாப்ட வாடா” என்று வாயில் சோற்றை வைத்துக் கொண்டே கூப்பிட்டார்.

அவன் உட்கார்ந்திருந்த இடத்திலேயே சாய்ந்து படுத்துக் கொண்டான். ‘சதாசிவம் சாரு படிச்சனால எடிசனப்பத்தியும் ஆராய்ச்சியப்பத்தியும் சொன்னாரு, ஆனா எங்கம்மா படிக்காதனால மாரியக்காவப் பத்தி சொல்லிச்சு ஆனா ரெண்டும் ஒன்னுதானே’ என்ற சிந்தனை அவன் மனதில் தோன்றி மறைந்து கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *