ரெண்டு பெண்டாட்டிச் சங்கடங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 9, 2019
பார்வையிட்டோர்: 5,459 
 

(இதற்கு முந்தைய ‘அடுத்த மனைவி’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)

ஆச்சு. ஊரே எதிர்பார்த்த பனங்காட்டுச் செல்வனின் அதிவீர திருமணம் நல்லபடியா நடந்து முடிந்தது. இசக்கி அண்ணாச்சியின் ரெண்டாங் கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சதில் இருந்து அவரின் வீட்டையே வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த பாளை சனங்கள் இப்பவும் அவருடைய வீட்டையே ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நப்பின்னை பிள்ளை உண்டாகியிருக்கிறாளா இல்லையான்னு உடனே தெரிஞ்சாகணுமே! இசக்கி அண்ணாச்சி கல்யாணம் செய்ததே நப்பின்னை மூலம் வாரிசு பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தானே? அவரின் அந்த லட்சியம் நிறைவேறுதா இல்லையான்னு பாத்திடணுமே! இசக்கி மாதிரியே ஊர்சனமும் காத்துக் கிடந்தது.

அதுக்காக அரச மரத்தைச் சுத்தினதும் அடி வயிற்றைத் தொட்டுப் பார்த்தால் எப்படி? ஆனால் அப்படிப்பட்ட மனநிலையில்தான் இசக்கி இருந்தார். நப்பின்னை பாவம் இல்லாத வீட்டில் இருந்து வந்த பெண் இல்லையா? புருசன் வீட்டுக்கு வந்த பத்தே நாளில் ரெண்டு சுத்து பெருத்து விட்டாள். சந்தோஷ பூரிப்புடன் காணப்பட்டாள். சாப்பிட்ட சாப்பாடு அந்த மாதிரி! வயிறே ஊதிப்போனது போலிருந்தது. இந்த அழகில் சாப்பிட்டது சரியா சீரணம் ஆகவில்லையோ என்னவோ, ஒருநாள் காலையில் ஒரே வாந்தி வேற. இசக்கி படு பரவசமாகி விட்டார்! அவர் பாவம் முன்னே பின்னே செத்திருந்தால் தானே சிவலோகம் தெரியும்?

நப்பின்னை கர்ப்பவதி என்று நினைத்து, மீசையைக்கூட முறுக்கிவிட்டுக் கொண்டார், பெரிய சாதனை புரிந்து விட்டதாக! ஆனால் அடுத்த நாலாவது நாள் இசக்கி அண்ணாச்சியின் சாதனையின் குட்டு உடைந்துவிட்டது. நப்பின்னை தூரமாகி விட்டாள். மூச்சுக் காட்டாமல் ‘அந்த’ மூணு நாளும் பாயை எடுத்துக்கொண்டு மச்சில் போய் தனியாகப் படுத்துவிட்டார். கோமதியும், நப்பின்னையும் ஒற்றுமையாக சிரித்துக் கொண்டார்கள்! அவர்கள் ரெண்டு பெரும் நெஜமாகவே ஒற்றுமையாகத்தான் இருந்தார்கள்.

ரெண்டு பேருமே புருசனுக்கு சாப்பாடு பரிமாறினார்கள்; ரெண்டு பேருமே வாசலுக்கு வந்து அவரைக் கடைக்கு வழியனுப்பினார்கள்; ரெண்டு பேருமே அவருடன் உட்கார்ந்து சிரித்தார்கள். ஆனால் படுக்கையிலும் அவருடன் அவர்கள் ரெண்டு பேரும் போய்ப் படுத்துக்கொள்ள முடியாதே? அந்த நேரத்தில்தான் மனசுக்குள் என்னவோ வந்து போனது. ராத்திரிப் பொழுது வந்தாலே வீட்டுக்குள் ஒரு கரிய மேகம் வந்து விடுவது போலிருக்கும். முக்கால்வாசி நாள் இசக்கி நப்பின்னையைத் தேடித்தான் ‘ஆட்டோமேடிக்’காகப் போவார்!

ஆனாலும் இன்னைக்காவது இங்கே வராரான்னு பாக்கலாம்னு நினைத்து நினைத்து எதிர்பார்த்துக்கொண்டு கோமதி அவளுடைய கட்டிலில் காத்துக்கொண்டே இருப்பாள். இசக்கியும் இன்னைக்கி கோமதியுடன் உறங்கலாம்னு ஒவ்வொரு நாளும் நினைக்கத்தான் செய்வார். ஆனால் எல்லாம் நினைப்போடு சரி! இரவு அவரது கால் சரியாக நப்பின்னையைத் தேடித்தான் விரைந்து போகும்! நப்பின்னைக்கு இதில் ரொம்பப் பெருமை! நெஞ்சு கொள்ளாத சந்தோசம். கோமதிக்கு இதில் வருத்தம். மனசு பூராவும் ஏக்கம்!

ஒரே வீட்டில் ஒருத்தன் ரெண்டு பெண்டாட்டிகளுடன் குடித்தனம் பண்ணுகிற குடும்பங்களில் இந்தப் பெண் ‘மனப்புயல்’ தவிர்க்க முடியாதது. புருசன் தன்னிடம்தான் வருகிறான் என்ற பெருமை ரெண்டாவதாக வருபவளுக்கு ஏற்படுவது இயல்புதான். அதே மாதிரி, புருசன் முன்புபோல தன்னிடம் வருவது கிடையாது என்ற ஏக்கம், முதலாவது சம்சாரத்துக்கு வருவதும் இயல்புதான். இந்த இயல்புதான் நிசம். ‘ஆனா நாங்க அப்படியெல்லாம் கெடையாது, நாங்கள்ளாம் நேரா வானத்ல இருந்து குதிச்சி வந்திருக்கோம்’னு யாராவது சொல்லிக்கிட்டாங்கன்னா அதை நம்ப வேண்டியதில்லை. அதெல்லாம் பாசாங்கு! அலட்டல்! அவகளோட உண்மையான மனசை ராத்திரியில் பிளந்து பார்த்தா தெரியும்.

ஆனால் இங்கே பிளந்து பாக்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டது. ராத்திரி மனசின் எண்ணம் பொழுது விடிஞ்சதும் தெரிஞ்சது. ரெண்டு மனைவிகளின் நாலு கண்களில் கோமதியின் கண்கள் பகல் நேரத்திற்காக காத்திருந்தன. நப்பின்னையின் கண்கள் ராத்திரிக்காகக் காத்திருந்தன. இப்படியே போயிருந்தாலும்கூட விவகாரம் வருவதற்கு வழியில்லை. பகலும் ராத்திரி ஆகவேண்டும் போலிருந்தது நப்பின்னைக்கு. ராத்திரியும் பகலாக வேண்டும் போலிருந்தது கோமதிக்கு. இது நடக்கிற காரியமா? நடக்காதே! ஆகக்கூடி ஆறே மாதத்தில், ரெண்டு பொம்பளைகளுக்குள்ளும் சண்டை வந்து விட்டது.

‘நீ நேற்று வந்தவள்’ என்ற அலட்சியம் பெரியவளுக்கு! ‘நான் உன்னால் முடியாத வாரிசையே பெத்துக் கொடுக்க வந்தவள்’ என்ற அலட்சியம் சின்னவளுக்கு! கேக்கணுமா? மாறி மாறி அடித்துக்கொண்டார்கள்.

இசக்கி அண்ணாச்சிக்குத்தான் மண்டை காய்ந்து போனது. பொழுது விடிந்தால் இவர்களின் சண்டையைத் தீர்த்து வைப்பதுதான் அவருடைய வேலையாகப் போய்விட்டது. பார்த்தார் இசக்கி. வேற ஒரு வீடு வாங்கி சின்னவளை அங்கே கொண்டுபோய் வைத்துவிட்டார்.

பெரியவளும், சின்னவளும் ஆளுக்கொரு வீட்டில் கொஞ்சம் அக்கடான்னு இருந்தார்கள். பாவம் இந்த மனுசன்தான் ரெண்டு வீட்டுக்குமாக ‘லொக்கோட்டம்’ ஓடிக்கிட்டு இருந்தார். சின்னவளைக் கல்யாணம் பண்ணி வருசம் ஒண்ணாகியும் வாரிசு உண்டானதற்கான எந்த அறிகுறியும் தோன்றாமல் அவரை மிகவும் எரிச்சல் படுத்தியது. இந்த வீண் ‘லொக்கோட்டம்’தான் மிச்சம்!

நெசமாகவே இசக்கிக்குப் பயமாகப் போய்விட்டது. சின்னவளுக்கும் பிள்ளை பிறக்காமல் போனால் என்ன பண்ணுவது? அவருடைய மானம் கப்பலில் அல்லவா ஏறிவிடும்? இசக்கி அண்ணாச்சி பயந்து நடுங்கினார். பேசாமல் இருந்திருக்கலாம்! வம்பைப் போட்டு விலைக்கு வாங்கி இப்போது பெரியவளுடனும் சுமுகமான உறவு இல்லாமல் போய்விட்டது. பெரியவளின் வீட்டில் சேர்ந்தாற்போல் ரெண்டு நாள் தங்கிவிட்டால், சின்னவள் சத்தம் போடுகிறாள். மூஞ்சியைத் தூக்கி வைத்துக்கொள்கிறாள். அதேபோல் சின்னவளின் வீட்டில் தொடர்ந்து ரெண்டு நாள் இருந்துவிட்டால் பெரியவள் அப்படிக் கத்துகிறாள். சோறு போட முடியாதென்று முறைக்கிறாள். பாவம் இசக்கி அண்ணாச்சி, மத்தளம் படும்பாடு பட்டார்! காவலூர் சோசியனை செருப்பால் அடிக்க வேண்டும். பாவி அவன்தானே கெடுத்தான்.

ஆனாலும் இசக்கி அண்ணாச்சிக்கு தனக்கு நிச்சயமாய் வாரிசு பிறக்கும் என்ற நம்பிக்கை உள் மனசில் இருந்துகொண்டே இருந்ததாலோ என்னவோ, அது ஒரு பிரார்த்தனை மாதிரி ஒருநாள் பலித்துவிட்டது. ஆமாம்… மாதா மாதம் தவறாமல் நடக்கும் ‘தூரக் கல்யாணம்’ அந்த மாசம் சின்னவளில் நடக்கக் காணோம்! இசக்கி அண்ணாச்சிகூட கசப்பான முன் அனுபவங்களால், வழக்கமான தூரக் கல்யாணம் மேள தாளத்துடன் நடந்து கொண்டிருக்கும் என்ற எரிச்சலில் சின்னவளின் வீட்டுப் பக்கம் வராமல் கொஞ்ச நாள் பெரியவளின் வீட்டிலேயே தங்கி விட்டார்.

ஆனால் அவரை அவசர அவசரமாகக் கூப்பிட ஆள் வந்துவிட்டது!

என்னமோ ஏதோன்னு நெனச்சா விசயம் இந்த மாதிரி! வழக்கமா நடக்கிற தூரக் கல்யாணாம் நடக்கலையாம். ‘அடிச்சாண்டா லக்கி ப்ரைஸ்’ன்னு இருந்தது அண்ணாச்சிக்கி. ரெண்டு கண்லேயும் கண்ணீரே வந்திருச்சி மனுசருக்கு. கேள்விப்பட்டதும் விசயத்தை மொதல்ல தலை தெறிக்க ஓடிப்போய் காவலூர் சோசியனிடம் சொன்னார். காவலூரான் ஆச்சர்யமே படலை. மிகவும் இயல்பாக, “ஒங்களுக்கு கண்டிப்பா வாரிசு உண்டுன்னுதேன் எனக்குத் தெரியுமே”ன்னு சுருக்கமா சொல்லிவிட்டு அவன் சோலியைப் பாக்க ஆரம்பிச்சுட்டான்.

பெறகு இசக்கி வேகமா கோமதியை பாக்கிறதுக்குப் போனார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *