உரிமை எங்கே?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 24, 2023
பார்வையிட்டோர்: 1,733 
 
 

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காலை மூன்று மணி பறங்கி மலைத் தோட்டம் ஏழாம் நம்பர் ‘லயத்தில்’ உள்ள சுப்பையா நாயக்கரின் ‘காம்பிராவி’ல் கொழுந்து கணக்குப்பிள்ளையிடம் கைமாற்றாக வாங்கிய ‘அலாரம்’ கணீர் என்று ஒலித்தது. வழக்கத்திற்கு மாறாகத் தூங்காமலே கனவு கண்டு கொண்டிருந்த சுப்பையா நாயக்கர் மணியோசை கேட்டதும் எழுந்து விட்டார். எழுந்தவர் சும்மாயிருக்கவில்லை. நாள் முழுவதும் உழைத்த களைப்பால் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த மனை வியையும், பிள்ளைகளையும் திட்டிக் கொண்டே எழுப்பினார் சுப்பையா.

“சனியனுங்கோ! நேரம் போச்சேன்னு கொஞ்சமாவது யோசனை இருக்கா? வெறகு கட்ட மாதிரில்ல ஆயியும் பிள்ளை களும் கெடக்குதுக. ஏ…… புள்ளே , மீனாட்சி! எந்துருடி! எந்திரிச்சி அடுப்புப் பத்த வைச்சிப் புளிச்சாறு கட்டிடு, விடிஞ்சு வெள்ளக் கோழி கூவிடிச்சே, காது கேக்கலே? காதுல என்ன மத்துக் கட்டையா வச்சு அடைச்சிருக்கு? என்று சத்தமிட்டுக் கொண்டே மீனாட்சியை எழுப்பினார் நாயக்கர்.

“என்னங்க! என்னிக்கும் இல்லாத புதுமையா இன்னிக்கு என்னா வந்திரிச்சு? காலங்காத்தாலே எந்திரிச்சு ஏன் இப்படி சத்தம் போடுறிங்க? என்றாள் அரைத் தூக்கத்திலிருந்த மீனாட்சி.

“ஆமாடி. வந்திரிச்சு? நமக்கு நல்ல காலம் இன்னிக்கு தான் பொறக்கப்போவுது. இன்னிக்கே கண்டியிலே போய்ச் சத்தியம் செஞ்சிப்புட்டா, நாமெல்லாரும் இந்த நாட்டிலே ‘பெரசை’ ஆயிரலாமுடி. வரச்சொல்லி ‘கண்டுரோலர்’ எழுதியிருக்காருன்னு நேத்துச் சொன்னேனே; அறிவில்லே, மூதேவி, ஏந்துருடி! அடியே செகப்பி ! நீயும் ஆயோடு சேர்ந்து தூங்காம சட்டுப்புட்டுனு வேலையைப் பாரு. ஆறு மணி பஸ்லே போவணும். தேத்தண்ணி, கீத்தண்ணி குடிச்சுறாதீங்க; அப்புறம் பஸ்சிலே வாந்தி எடுப்பிங்க” என்று பட பட வென்று கூறிக்கொண்டே வெளியில் சென்றார் நாயக்கர்.

சுப்பையா நாயக்கருக்கு அன்று நிலை கொள்ளவில்லை. ஆமாம் இருக்காதா என்ன? எத்தனை ஆண்டுகள் அந்த ஒரு கடிதத்திற்காக அவர் தவியாய்த் தவித்தார். ஓராண்டா, ஈராண்டா? பத்தாண்டுகள் எப்படியோ ஓடி மறைந்துவிட்டன. அவருடைய பாட்டன் இந்தியாவிலிருந்து வந்தது ஏதோ உண்மை தான். சுப்பையாவின் தந்தையோ கடலைப் பற்றிக் கேள்விப்படாமலே தேயிலைக்கு உரமானார். சுப்பையாவுக்குக் கடல் என்ன நிறம் எப்படி இருக்கும் என்று கண்டவர்கள் சொல்லக் கேள்வி தானே யன்றி கண்டதேயில்லை. ஈழத்தின் மத்திய பகுதியில் இருக்கும் ஒரு தேயிலைத் தோட்டத்தில் உழைக்கும் ஒரு தொழிலாளி தான் நாயக்கர். சுமார் பதினொறு ஆண்டுகளுக்கு முன்னர் – பிரசா உரிமைச் சட்டம் வந்த புதிதில் – தம்மையும் தம் குடும்பத்தையும் இலங்கை பிரசைகளாய்ச் சேர்த்துக் கொள்ளுமாறு மனு போட்ட வர்களில் அவரும் ஒருவர். மனு போட்டதும் உரிமை கிடைத்து விட அவரென்ன இலட்சாதிபதியா? எத்தனை விசாரணைகள்? எவ்வளவு பணம் செலவு. அலைச்சல்? அப்பப்பா, அவர் தம் பிறப்புரிமையைப் பெறும் பொருட்டு பஸ்களுக்கும் கடிதம் எழுதுபவர்களுக்கும், தபால் அலுவலகத்திற்கும் கொடுத்த பணம் இன்று அவரிடம் இருந்தால் குறைந்தது ஐந்து ஏக்கர் தேயிலை தோட்டத்திற்காவது அவர் அதிபதியாக இருந்திருப்பார்! பாவம் இத்தனை இன்னல்களுக்கு பின்னர், ஒரு நாள் அந்தக் கடிதம் வந்தது.

“உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் பிரசா உரிமை தரப் படும். கண்டியில் வந்து பிரசா உரிமைக் கமிசனர் முன்னிலையில் சத்தியம் செய்து, பிரசா உரிமை ‘சர்டிபிகேட்’டைப் பெற்றுக் கொள்ளவும்” என்று தேதியும் குறிக்கப்பட்டிருந்த கடிதம் கிடைத் தால் சொல்ல வேண்டுமோ?

தோட்டத்துப் பெரிய கங்காணி, கண்டாகய்யா, கிளாக் கரையா முதலியோருக்கெல்லாம் பிரசா உரிமை கிடைக்கு முன்னர் தமக்குக் கிடைக்கப் போவதில் அவர் உள்ளம் பூரித்தது. அந்த மகிழ்ச்சியில் பூத்த கோபத்தில் தான் காலையில் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்.

பதினாறு கல் தொலைவில் இருக்கும் கண்டி நகருக்குச் செல்வதென்றால் தோட்டத்து மக்களுக்குத் தனி உற்சாகம்.

நாயக்கர் மாத்திரம் அதற்கு விதிவிலக்கா? ஓட்டல் சாப்பாடு உடம்புக்கு ஒத்துக் கொள்ளாதல்லவா? அதனால் பகல் உணவுக் காகப் புளிச்சாதம் கட்டிக்கொண்டு, புதிய ஆடைகளையும் அணிந்து, குடும்பத்தோடு காலை 5.45க்கு நல்ல நேரம் பார்த்து வீட்டைத் தாளிட்டுக் கொண்டு புறப்பட்டார். அன்று வேலைக்குச் செல்வதற்காகக் காலையிலேயே எழுந்து ‘பிரட்டு’க்குச் சென்று கொண்டிருந்த தம் நண்பர்களிடம் தாம் செல்லும் விடயத்தைக் கூறி விடை பெற்றார். ‘பிரட்டு’க்குச் சென்று கொண்டிருந்த பெரிய கணக்குப்பிள்ளையும் வழியில் சந்தித்தார்.

“என்ன நாயக்கர். எங்கிட்டு இப்பிடிக் குடும்பத்தோட விருந்தாடக் கிளம்பிட்டே?” என்று வியப்புடன் கேட்டார் கணக்குப்பிள்ளை.

“விருந்தாடி ஒண்ணுமில்லீங்க. கண்டிக்கு, பிரசா உரிமைத் தர வரச்சொல்லியிருக்காங்க, கணக்குப்பிள்ளையா அதுக்குத்தாங்க போறோம்” மகிழ்ச்சியோடு கூறினார் நாயக்கர்.

“ஓகோ! அப்படியா சங்கதி. நீ கொடுத்து வெச்சவன் நாங்களும் தான் எழுதி எழுதி, ஒரு இழவையும் காணோம்.” பொறாமையோடு வெளிவந்தன கணக்குப்பிள்ளையின் சொற்கள்.

“எல்லாம் ஏழுமலையான் கண் பார்த்ததுங்க, இல்லாட்டி எனக்கு இப்போதைக்கு இந்தப் பாக்கியம் கிடைக்குப் போவுதுங் களா? சரிங்க……. பஸ்ஸுக்கு நேரமாகுதுங்க நான் வாரேங்க “என்று விடை பெற்றார் நாயக்கர்.

நாயக்கரின் அவசரத்தைப் பஸ் போக்குவரத்துச் சபை அறியவில்லை போலும், அன்றைக்கென்று பஸ் பத்து நிமிடங் கள் தாமதித்தே வந்தது. அதற்குள் நாயக்கர் இலங்கைப் போக்கு வரத்துச் சபையையே சபித்துக் கொட்டிவிட்டார். வழக்கமாக காரசாரமாகப் பேசாத நாயக்கர் அன்று சிறிது கடுமையாகவே ஏசினார்.

“மடப்பயலுக? நேரங்காலத்திற்கு வந்து தொலையிறானுங் களா? அரசாங்க உத்தியோமின்னா அவிங்க நினச்சபடி நடக்க நாங்க என்ன ஏமாளிங்களா? இவங்களுக்கு ஒரு ‘பெட்டிசன்’ எழுதிப்போட்டாத்தான் சரிப்படும்” என்று உரிமையோடு திட்டிக் கொட்டினார். ஆமாம், இன்னும் சிறிது நேரத்தில் அவரும் இந் நாட்டில் உரிமையோடு பேசப்போகிற பிரசைதானே? அதனை இப்போதே போக்குவரத்துச் சபையில் ஒத்திகை செய்து பார்த்தார்.

வண்டியும் வந்தது, எதோ பதினைந்து இருபது ஆயிரங்கள் கொடுத்து வாங்கிய தமது சொந்தக்காரில் ஏறி இருக்கப்போகும் உற்சாகம் அவருக்கு. ‘பஸ் சாரதியும் டிக்கட் கலக்டரும் தமது சேவகர்கள்’ என்ற எண்ணம் உரிமையைப் பெறுமுன்னரே அவர் உள்ளத்தில் தோன்றிவிட்டது. எவ்வளவுதான் உரிமை உடையவ ராயினும் டிக்கட் கலக்டருக்கு அவர் தோட்டக்காரனாகத்தான் காட்சியளித்தார், பாவம்!

“ஏய், வாந்தி போடற மனுஷனல்லாம் பின்னுக்குப்போ !” என்று தமக்குத் தெரிந்த தமிழில் அவரிட்டக் கட்டளை, நாயக் கரையும், குடும்பத்தையும் வண்டியின் இறுதி ஆசனத்துக்கே அனுப்பிவிட்டது. நாயக்கருக்கோ அவரின் கட்டளை கோபத்தை கிளறியது. இருப்பினும், குடும்பத்தோடு வந்தபடியால் தகராறுக் குச் செல்ல மனம் கூசியது. அமைதியாக இருந்து விட்டார்.

மலைகளையும், ஆறுகளையும் கடந்து தேயிலைத் தோட் டங்களினூடே வளைந்து வளைந்து செல்லும் சாலையில் ஓடிக் கொண்டிருந்தது வண்டி. சாலையின் இருமருங்கிலும் அழகாய்ப் பச்சை பசேலென்று காட்சி தந்த தேயிலைச் செடிகள் தமக்கு உணவளித்துப் பாதுகாக்கும் இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்நாட்டு உரிமை கிடைக்கப் போகிறது என்ற மகிழ்வில் கம்பீரமா கக் காட்சி தந்தன. அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் நாயக் கரின் உள்ளம் பூரித்தது. அப்பொழுது எழுந்த பூரிப்பில் அவர் தம் மையே மறந்தார். மகிழ்ச்சியின் எல்லையும், வண்டியின் வேகமும் அவரது எண்ணத்தை எங்கோ இழுத்துச் சென்றன.

அடேயப்பா! முதன் முதலில் பிரசா உரிமை மனுப்போடும் பொழுது, ‘தமக்கு இந்நாட்டில் உரிமை கிடைக்காது’ என்றே கருதினார் நாயக்கர். அவர் ஈழத்தில் பிறந்ததற்கு ‘ருசு’ இல்லை . அவரது தந்தை செய்த தவறினால் பெயரில்லாத ‘பிறப்புச்சாட்சிப் பத்திரம்’ தான் ‘கச்சேரி’யில் இருந்தது. அதை வைத்துக்கொண்டு எப்படி வாதாடுவது? ஒன்றுமே அவருக்குப் புரியவில்லை . இருப் பினும், ‘ஒரு கை பார்த்துவிடுவோம்’ என்று தான் எல்லோரையும் போல் மனுப் போட்டார். ‘இந்த ஊர் இல்லாட்டி வேறே எங்கே தான் தள்ளுவான்? அதையும் பார்ப்போமே’ என்ற அசட்டுத் தைரியம் அவர் உள்ளத்தில் அப்பொழுது இருந்தது. துணிந்து விட்டார் நாயக்கர்.

ஆண்டுகள் ஆறு. எங்கும் பிரசா உரிமைப் பேச்சிலேயே உருண்டோடின. ஒருநாள் சுப்பையா நாயக்கரையும், குடும்பத் தாரையும் மூன்றாம் முறையாக விசாரிக்கக் கமிஷனர் வரப் போவ தாகக் கிடைத்த கடிதத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே உரிமை கிடைத்து விட்டதாக எண்ணினார். நாட்டுரிமையென்ன அவ் வளவு மலிவாகக் கிடைத்துவிடக் கூடிய கடைச்சரக்கா? அதுவும் நாயக்கரைப் போன்ற ஒரு தொழிலாளிக்கு! விசாரணை நடத்து வோருக்கு ஆயிரம் ஆயிரமாக ‘லஞ்சம்’ கொடுத்தவர்களுக்கே உரிமை கிடைக்கப் பல ஆண்டுகள் செல்லும் போது இவருக்கு உடனே நாட்டுரிமை கிடைத்துவிட்டால், தொழிலாள வர்க்கத் துக்கே விமோசனம் கிடைத்த மாதிரித்தானே? வழக்கம்போல் அன்றும் விசாரணை நேரத்தில் அடுக்கடுக்காகக் கேள்விகள் கேட்கப்பட்டன. நாயக்கரும் சிந்தித்தே பதில் அளித்தார். சில கேட்கத் தகாத கேள்விகளும் கூடக் கேட்டார்கள். அவர்கள் – தமது பொழுதைப் போக்குவதற்காக. சுப்பையாவுக்கு அவர்களது ‘பகிடி’ எப்படித் தெரியும்? மிகவும் பயபக்தியோடு பதில் கூறினார்.

“ஆமாம்பா, உன் பொம்பளையை நீ உண்மையாகத்தான் கல்யாணம் முடித்தாயா?” விசாரணையின் இறுதிக்கட்டத்தில் கேட்கப்பட்ட மிகவும் முக்கியமான கேள்விகளில் ஒன்று இது.

“என்னங்க இப்படி கேட்டுட்டீங்க? நம்ம மாரியம்மாவுக்குத் தெரியுங்க! ஆத்தா கோயில்லதாங்க நான் தாலி கட்டினேன்!! நம்ம தோட்டத்திலே எல்லாருக்கும் வெத்தலை பாக்குவச்சேங்க!!!”

“ஓகோ அப்படியா! நீங்க ரெஜிஜ்டர் பண்ணலையா?”

“அதெல்லாம் இப்ப வந்ததுதானுங்களே. அந்தக் காலத் துலே அதெல்லாம் ஏதுங்க? தமக்குத் தெரிந்த வரலாற்று உண் மையை அடிப்படையாக வைத்துப் பதில் கூறினார் நாயக்கர். பாவம்! வரலாற்றுக்கும், பிரசா உரிமைச் சட்டத்திற்கும் தொடர் பில்லையென்பது அவருக்கு எங்கே தெரியப்போகிறது?”

“சரியப்பா, உன்னுடைய முதல் பிள்ளையும், மூன்றாம் பிள்ளையும் இலங்கையில் பிறந்தாங்கன்னு ‘புரூவ்’ பண்ணறே. இரண்டாவது பிள்ளைக்கு ‘புரூவ்’ இல்லையே?” பெரியதோர் உண்மையைக் கண்டுபிடித்தார் உதவி விசாரணையாளர்.

“இது அநியாயமுங்க, எம் மவன் கந்தையா பொறந்த அன்னிக்கே தோட்டத்து டாக்டரய்யாகிட்டே சொன்னேனுங் களே” பரிதாபமாகக் கூறினார் நாயக்கர்.

நமக்கு அதெல்லாம் தெரியாது. உனக்குப் பிரசா உரிமை தரத் தகுந்த புரூவ் இல்லை என்று ஒரே அடியாகக் கூறி, நாயக்கரை வெளியே செல்லுமாறு பணித்தார். எதையோ எதிர்ப்பார்த்த விசாரணையாளர்.

சோர்ந்த முகத்தோடு வெளியே வந்த சுப்பையாவைக் கண்ட விசாரணையாளரின் கார் சாரதி ”மெய்யே விசாரணை முடிஞ்சுதோ?” என்று அக்கறையோடு கேட்டார்.

“ஆமாய்யா. ‘புரூவ்’ இல்லையாம், பிரசா உரிமையும் இல்லையாம்” சுப்பையாவின் பதில் வெறுப்பாகவே இருந்தது.

“ஓ அதுவே, நானொண்டு சொன்றேன், கேப்பியோ?”

“என்னையா? சொல்லித் தொலை.”

“இங்கார், அவைக்கு ஓராயிரம் இருந்தால் கொடுமன். சரி . பண்ணி விடுவினம்”. உரிமைபெற குறுக்குவழியைக் காட்டினார்.

அந்த சாரதி.

“ஆ…. ஆயிரமா…. அடேங்கப்பா, நான் எங்கிட்டையா போவேன்? மூன்று பிள்ளைகளையும் மூணு எடத்திலே ஒக்கார வைச்சாலும் அவ்வளவு கெடைக்காதே!” என்று ஏங்கித் தவித்தார் நாயக்கர்.

“பின்ன ஏனப்பா வந்த நீ ? எங்கடை ஐயா, அவை உன் னைப் போல ஆள்கிட்டத்தான் ஆயிரம், மற்ற இடங்களிலெல்லாம் அஞ்சாயிரம் குறையாது. அப்படித்தானே பிரசா உரிமை வேண்டினம்.“

உண்மையை ஒளிவு மறைவின்றிக் கூறினார் சாரதி.

சுப்பையா நாயருக்கருக்கு என்ன செய்வதென்றே தெரிய வில்லை. இந்த நாட்டிலே பிறந்து, இங்கேயே வளர்ந்து, காடு மலைகளைச் சீர்படுத்தி, நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த வெய்யில், மழை, பனி எதையுமே பாராமல் ஈழவள நாட்டை உயர்த்துவ தற்குப் பாடுபட்ட அவர் – இன்று நாடற்றவராக நிற்பதா? திகைத்துப்போய் நின்றார் நாயக்கர்.

‘ஏனப்பா நிக்கறே? நேரமல்ல போகுது. ஓடிப்போயி எண்ணூறாவது பார்த்துவா. நான் ஐயாகிட்டச் சொல்றேன்” என்று நாயக்கரின் அமைதியைக் குலைத்தார் சாரதி.

ஏதோ முடிவுக்கு வந்த நாயக்கர், “சரி” என்று அவசரமாக வீட்டுக்குச் சென்றார். சற்று நேரத்திற்குப் பின்னர் நூறு ரூபா நோட்டுக்கத்தைகள் ஐந்துடன் திரும்பினார். அந்தப் பணத்தைச் சாரதியிடம் கொடுத்து, “ஐயா, நீங்க தான் எப்படியாவது இதைக் கொடுத்து, பிரசா உரிமை எடுத்துத் தரணும்” என்றார் அழாக் குறையாக.

இப்படி எத்தனை இன்னல்கள்? எண்ணவே முடியாது. அத்தனையும் தன்னை இந்த நாட்டில் உரிமையோடு வாழத் தகுதி உடையவனாக ஆக்கிக் கொள்ளத் தானே? எத்தனை பேருக்கு எப்படி எப்படிப் பணம் கொடுக்க முடியுமோ அந்த வழிகளிலெல்லாம். தாம் அறியாமலே, தம்மால் இயன்ற தொகை களைக் கொடுத்தார். பெரிய இடங்களில் பத்தாயிரம் என்றால், நாயக்கரைப் பொறுத்தமட்டில் பத்து ரூபாயாக இருந்தது. எந்த வழியிலாவது உரிமை பெற்றுவிட்டால். நாட்டில் தலை நிமிர்ந்து திரியலாமல்லவா? பிறகு, யார் இவரை கள்ளத்தோணி என்று அழைக்கப் போகிறார்கள்? நம்பிக்கையைத் தளரவிடவில்லை நாயக்கர். தொடர்ந்து முயற்சி செய்தார். பலனும் கிட்டியது. அதனை அனுபவித்தான் தனது குடும்பத்தோடு இன்பம் கண்டு கொண்டே, கண்டியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார் அவர்.

பஸ் கண்டி நிலையத்தில் நின்றதும், அன்று வண்டி மிக விரைவில் வந்து விட்டதாக அவர் உணர்ந்தார். உரிமை வேட்கை வண்டியின் வேகத்தையே அதிகரித்துவிட்டது – அவரளவில்! மக்கள் நெருக்கம் மிகுந்த, அழகுமிக்க கண்டி நகரை முன்பின் கண்டறியாத தம் மனைவி மக்கள், வழி தவறி விடக்கூடாதே என்று எண்ணிய நாயக்கர் அவர்களைத் தம்முடனே அழைத்துக் கொண்டார்.

“ஏ… புள்ளைங்களா, அங்கிட்டு இங்கிட்டுப் பராக்குப் பார்க்காம என் பின்னுக்கே கையைப்புடிச்சுகிட்டு வாங்க” என்று கட்டளை இட்டார். கணவன் கூறுவதில் மிகப் பெரிய உண்மை யைக் கண்ட மீனாட்சி, ”சரிங்க” என்று தலையசைத்தவளாய் அவரைத் தொடர்ந்தாள்.

பலரையும் கேட்டுக் கேட்டுக் கண்டி “கச்சேரி” இருக்கு மிடத்தைக் கண்டு பிடிப்பதற்குள் கண்டி நகரையே பலமுறை வலம் வந்துவிட்டார். அப்படி வழி தெரியாமல் கண்டியைச் சுற்றியதில் அவருக்கோ, மனைவி மக்களுக்கோ ஒரு சிறிதேனும் களைப்பு ஏற்படவில்லை. உரிமை கிடைக்கப் போகும் உற்காசத் தோடு, அந்நகரும், அங்கு காணப்பட்ட காட்சிகளும் அவர் களுக்குப் புதிதாகவே தோன்றின. புத்தரின் தந்தம் இருந்ததாகக் கருதப்படும் “தலதாமாளிகா’வும், கண்டி நகரை அழகுபடுத்தும் “தெப்பக்குளமும் ” பூங்காக்களும் சிலைகளும் அவர்களை வியப்பில்

ஆழ்த்தின. ஒருவாறு முன்னர் சென்ற வழியிலேயே ‘கச்சேரி’ யைக் காலை 10.30 மணியளவில் நாயக்கரும் குடும்பத் தாரும் வந்தடைந் தனர்.

அன்று, ‘கண்டி, இலங்கைப் பிரசா உரிமை’ அலுவலகத் திற்கு முன்னால் பல குடும்பங்கள் தமது உரிமைக்குரிய சாட்சிப் பத்திரத்தைப் பெறுவதற்காகக் காத்திருந்தன. அவற்றோடு நாயக் கரின் குடும்பமும் பெருமையோடு கலந்து கொண்டது. வந்திருந்த குடும்பங்களனைத்தும் பணம் படைத்த குடும்பங்களாகவே காட்சியளித்தன. அவர்கள் பேச்சு, நடை, உடை பாவனை, அனைத்தும் தோட்டத்திலே உரிமையாளர்களாகவும், பெரிய ஸ்தாபனங்களின் உரிமையாளர்களாகவுமே அவர்களைக் காட் டின. இத்தகைய செல்வக் குடும்பங்களோடு வேறு எத்துறை யிலும் எந்நேரத்திலும் சரிநிகர் சமானமாக இருக்கக் கனவு கூட கண்டிராத நாயக்கர், இன்று உரிமையை நிலைநாட்டப் போகும் பொழுது அவர்களோடு சமமாக இருப்பதை கனவிலே கண்டு உச்சி குளிர்ந்தார். தம் மகிழ்ச்சியை மனைவியிடம் கூறித் தம்மைப் பற்றிப் பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டும் என்று அவர் உள்ளம் அவரைத் தூண்டியது.

“அடியே, மீனாட்சி! பாத்தியாடி, வந்திருக்கிற பெரிய புள்ளிகள்? அவுங்களோட நமக்கும் பிரசா உரிமை கெடைக்கப் போவுதுடி இப்ப தெரிஞ்சுக்க, இந்த நாயக்கர் மனம் வெச்சா ருன்னா எதையும் செஞ்சுயுட்டுத் தான் சும்மா இருப்பாரு….. ஆ..மா!” என்று இழுத்த நாயக்கர், தமது சுருண்டு வளைந்துள்ள மீசையை ஒரு முறை தடவிக் கொடுத்தார்.

“ஆ….மா, சும்மா இருங்க, யாரும் பார்த்தா , ஏதும் நெனப் பாங்க” என்று அவ்விடத்தில் தன்னுடைய குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றினாள் மீனாட்சி.

இலங்கைப் பிசா உரிமை சாட்சிப் பத்திரத்தைப் பெற்ற குடும்பங்கள் ஒவ்வொன்றாக மகிழ்வோடு சென்று கொண்டிருந் தன. நேரம் நெருங்க நெருங்க நாயக்கரின் மனமும் ‘பட பட’ வென அடித்தது. சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் அவரை, “சுப்பையா யாரு?” – என்ற குரல் விழிப்படையச் செய்தது.

“நான் தான், ஐயா!” – உட்கார்ந்திருந்த நாயக்கர் பயபக்தி யோடு எழுந்து பியூனை வணங்கினார்.

தனக்குள் முறுவலித்த சேவகன், “உள்ளே போகலாம்” என்றான்.

கமிஷனரின் அறைக்குள் சென்ற நாயக்கருக்கு உடம் பெல்லாம் நடுங்கியது. ‘பயாஸ்கோப்பில் பார்த்த சிவபெருமான் இருக்கும் கைலாசமலைக்குத் தாம் வந்து விட்டதாக’ அவர் நினைத்தார். தாம் இந்நாட்டில் உரிமையோடு வாழ உரிமை அளிக்கப்போகும் தெய்வமே அவர்தானே! அவரை அப்படியே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கவேண்டுமென்றே அவர் எண்ணி னார். ஆனால், ‘கமிஷனர்’ பேசத் தொடங்கவே அவ்வெண் ணத்தைக் கைவிட்டு “நமஸ்காரங்கைய்யா!” என்றார், இரத்தத்தில் ஊறிய பண்போடு.

“நமஸ்காரம். நீ எந்தத் தோட்டம்?” – அதிகாரத்தோடு கேட்டார் கமிஷனர்.

“நான் பறங்கிமலைத் தோட்டங்கய்யா.'” பணிவோடு பதில் கூறினார் நாயக்கர்.

“ஓ…யெஸ், குட் ஓம் பேரு?” “எம் பேரு சுப்பையா நாயக்கர்’ அவ பேரு மீனாட்சிங்க.” “இன்னொரு முறை திருப்பிச் சொல்லு; ஓம் பேரு?”

“சுப்பையா நாயக்கர் தாங்க” தன் பெயரை மீண்டும் கேட்டதில் நாயக்கருக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சி.

“அப்படியா, இன்னிக்கு நாங்க கூப்பிட்டது பறங்கிமலை சுப்பையா – எட் கங்காணிதானே? அவன் சம்சாரம் பேரு தெய்வானை.”

சம்மட்டியால் தலையில் அடிப்பது போல் இருந்தது நாயக் கருக்கு. ”ஐயா! எனக்குத் தாங்க வரச்சொல்லி கடுதாசி வந்திச்சு!” என்றார் அழாக்குறையாக.

“எங்கே? அந்த கடுதாசியைக் கொண்டு வா” என்ற கமிஷ னர் அழைப்புக் கடிதத்தை வாங்கிப் பார்த்தார். நாயக்கரின் உள் ளமோ ஏதேதோ எண்ணித் தவித்தது. நன்றாகப் பார்த்து முடித்தார் கமிஷனர்.

“சுப்பையா, கோவிக்க வேணாம், இது நம்ப ‘கிளாக்கர்’ செய்த குத்தம். ஒனக்குப் ‘பிரசா உரிமை இல்லை’ன்னு அனுப் பிட்டான். அவங்க கடுதாசி ஒனக்கு வந்தது. கோபிச்சுக்கவேணாம். நீங்க போகலாம்” என்று அரைகுறைத் தமிழில் கூறிய கமிஷனர். கோபமாக மேசை மணியைத் தட்டிச் சேவகனை அழைத்தார்.

கமிஷனர் ஏதோ சாதாரணமாக மன்னிப்புக் கேட்டு விட்டார். தமக்கே உரிய முறையில். ஆனால், நாயக்கருக்கோ , அவரது ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு அம்பாக உள்ளத்தில் பாய்ந்தது. எண்ணிய எண்ணங்கள், கட்டிய கோட்டைகள், அத்தனையும் ஒரு நொடிப் பொழுதில் தூள்தூளாயின. தலைசுற்றியது. கீழே விழந்து விடாமல் இருக்க மீனாட்சி உரிமையோடு அவரை அணைத்து வெளியே அழைத்து வந்தாள். உலகமே அவரை எண்ணி நகைப்பதாக அவர் எண்ணினார். திரும்பிய பக்கமெல் லாம், “கள்ளத்தோணி! கள்ளத்தோணி!!” என்ற சத்தம் கேட்ப தாக அவரது பேதை உள்ளம் எண்ணித் தடுமாறியது. ஏதேதோ பிதற்றினார். சிரித்தார், அழுதார். வெளியில் நின்றவர்களில் சிலர் அவருக்காக அநுதாபப்பட்டனர்; சிலர் சிரித்தனர்.

பணம் படைத்த பிரபு ஒருவர், ”இந்தத் தோட்டக்காட்டுச் சனியங்களே இப்படித்தான். எதையும் ஓர் ஆளுக்கு நாலு ஆளுங் களை விசாரிக்காம வந்து, நம்ம இந்தியக்காரன் மானத்தையே வாங்குதுங்க” என்றார். இலங்கையன் என்ற உரிமையை நிலை நாட்ட வந்த இடத்தில் பாரத நாட்டு உரிமையையும் இழந்துவிட மனமில்லாமல்.

அலுவலகத்தினின்றும் தள்ளாடித் தள்ளாடி வெளியில் வந்த நாயக்கர் ஒரு மரத்தடியில் தம்மையும் மறந்து இருந்துவிட்டார். தொடர்ந்து வந்த மீனாட்சியும் பிள்ளைகளும் அழுதுகொண்டே அவரைச் சுற்றி அமர்ந்தனர். ஒன்றும் புரியாத நிலையிலேயே இருந்தார் அவர். நாட்டுரிமையைத் தான் மேலிடத்தாரால் பறிக்க முடிந்ததேயன்றி அவரது அன்பு நிறைந்த குடும்ப உரிமையை யாராலும் பறிக்க முடியவில்லை. மனைவி மக்களை அப்படியே கட்டித் தழுவிக் கொண்டு அழுதார் நாயக்கர். எங்கிருந்தோ அவர் அழுகையை அடக்கிக் கொண்டு மணியோசை ஒன்று கேட்டது. அவ்வோசை வந்த திக்கை நோக்கி மெதுவாக நடந்தார் நாயக்கர்.

காடாகக் கிடந்த இந்த நாட்டை வற்றாத வளங்கொழிக்கும் நாடாக உயர்த்தி உலக அரங்கிலே அதனைக் காட்சிக்கு வைத்த அவ்வேழைத் தொழிலாளிக்கு இன்று இந்நாட்டிலே உரிமை யில்லை! ஆனால், எங்கிருந்தோ வந்த புத்தரின் தத்துவத்திற்கு இன்று இந்நாட்டில் கௌரவ உரிமை! அது மட்டுமா! மக்கள் அனைவரும் போற்றி புகழும் ‘தலதாமாளிகை’ எழுவதற்கும், பெரகரா என்ற யானை விழா நடப்பதற்கும் அத் தந்தம் உரிமை பெற்று திகழ்வதை – ஈழத்து உரிமையையும் பாரத நாட்டு உரிமையும் இழந்த நாயக்கர் எப்படி அறிவார்? தலதாமாளிகை நெருங்க நெருங்க நடுப்பகல் பூசையின் மணியோசை “டாங்…..! டாங்…..!!” என்று பலமாக ஒலித்தது. ஒவ்வொரு ஒலியும் “உரிமை எங்கே? உரிமை எங்கே?” என்று நாயக்கரின் செவியில் மாத்திரமல்ல, மலைநாடு முழுவதுமே கேட்பது போல இருந்தது.

– முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள், முதற் பதிப்பு: மாசி 2010, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *