உயிரின் மதிப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 17, 2014
பார்வையிட்டோர்: 9,836 
 
 

ராம் அவசரமாக வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்தான்.மனைவியிடம் “சாதம் கட்டிட்டியா” என்றான். உள்ளிருந்து “ரெடி” என்றாள் அவன் மனைவி. உடனே தன்னுடைய மதிய உணவுப் பையை எடுத்துக்கொண்டு மனைவியிடம் விடை பெற்று கிளம்பினான்.

மக்களோடு மக்களாக பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தான். அப்பொழுது எதிர்புறத்தில் ஒரு வாலிபன் பார்ப்பதற்கு கல்லூரி செல்லும் மாணவன் போல் இருந்தான்.கைப்பேசியை காதில் வைத்து ஒரு பக்கம் தலை சாய்த்து சிரித்து பேசிக்கொண்டிருந்தான்.இரு பக்கமும் பாராமல் சட்டென்று கைப்பேசியில் பேசிக்கொண்டே அந்த சாலையை கடக்க ஆரம்பித்தான்.

அது ஒரு திருப்பம் உள்ள சாலை. ஆகையால், அந்தப் பக்கம் வரும் வாகனங்கள் தெரிவது கடினம். அந்த நேரம் பார்த்து ஒரு லாரி வந்துக் கொண்டிருந்தது. இந்தப் பக்கத்தில் இருந்து நானும் இன்னும் சிலரும் அவனைப் பார்த்து கத்தினோம். அவன் காதில் விழுந்ததாக தெரியவில்லை. அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.

அந்த வாலிபன் சாலையில் அடிபட்டு விழுந்துவிட்டான். அனைவரும் அவனைச் சுற்றி நின்று பரிதாபப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அக்கூட்டத்தில் இருந்த ஒருவர் பார்ப்பதற்கு மருத்துவர் போல் இருந்தார். அடிப்பட்டவனின் நாடியைப் பிடித்துப் பார்த்து இன்னும் உயிர் இருக்கிறது என்றார். அங்கு நின்றிருந்த ஒரு ஆட்டோவில் அந்த அடிபட்டவனை ஏற்றி தானும் அமர்ந்து அருகிலிருந்த மருத்துவமனைக்கு ஆட்டோவை விடும்படி சொல்லிக்கொண்டிருந்தார்.

அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு சிறிது நேரம் பிடித்தது ராம்-ற்கு.அந்த வாலிபனுக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. ஆனால் அவனுடைய கைப்பேசிக்கு ஒன்றும் ஆகவில்லை என்பது அப்போது அதில் வந்த அழைப்பை வைத்து உறுதி செய்தான். அருகில் சென்று குனிந்து பார்த்தபோது கைப்பேசியில் “Home” என்று ஒளிர்ந்துக் கொண்டிருந்தது. என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், கைப்பேசியை சொடுக்கினான். அந்த வாலிபனுடைய வீட்டிற்கு விஷயத்தை தெரியப்படுத்தி, மருத்துவமனையின் பெயரையும் குறிப்பிட்டான். அந்த முனையில் இருந்தோரின் பட படப்பு இந்த முனையில் காட்சிப் படுத்த முடிந்தது ராம்-ற்கு. அவர்களுக்கு ஆறுதல் சொல்லி கைப்பேசியை அனைத்தான். அதை அருகில் இருந்த காவல் துறை அதிகாரியிடம் கொடுத்து விட்டு, அங்கிருந்து அலுவலகத்திற்கு கிளம்பினான்.

அலுவலகத்தில் ராம்-ன் விரல்கள் மட்டும் தான் கணினி மவுசில் இருந்தது.மனம் காலையில் நடந்த சம்பவத்தில் இருந்தது. அந்த வாலிபனுக்கு என்ன நடந்ததோ என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தான். அவனுக்கு வேலை ஓடவில்லை.

அவன் மனதிற்குள் அனைவரையும் திட்டிக் கொண்டிருந்தான். “பாழா போனவர்கள் இந்த ஃபோனை வைத்துக் கொண்டு பட்ர அவஸ்தை இருக்கே. என்னத்த சொல்றது”. ”நடந்தா ஃபோனு, நின்னா ஃபோனு, உட்கார்ந்தா ஃபோனு”. தன்னை சுற்றி நடக்கற விஷயம் எல்லாத்தையும் மறக்கறாங்க. யாருக்கும் தன் உயிரைப் பத்தின மதிப்பே தெரியல. எல்லாம் அந்த சின்ன ஃபோனுக்குள்ள தான் இருக்குன்னு நினைக்கிறாங்க”. “கடவுளே எங்கே போயி முடியப் போகுதோ. நீங்தான் அந்த பையனை காப்பாத்தனும்” என வேண்டிக் கொண்டான்.

மாலை அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் முன் மருத்துவமனைக்கு சென்றான். அந்த பையனைப் பற்றி விசாரித்தான். ஒன்றும் பெரிய முன்னேற்றமில்லை, பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றனர். அந்த பையனுடைய குடும்பத்தாரைப் பார்க்க மனமில்லாமல் அங்கிருந்து நகர்ந்தான். அவன் மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான்.

மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்தவுடன் சாலையைக் கடக்க முற்பட்டான். அப்பொழுது ஒரு மாணவன் அதே போல் கைப்பேசியில் பேசிக்கொண்டே சாலையைக் கடக்க முயற்சித்தான். அவ்வளவுதான், ராம்-ற்கு கோபம் தலைக்கேறியது. அந்த நொடி அவன் தன் நிலை மறந்து நேரே அந்த மாணவன் அருகில் சென்று ஓங்கி ஒரு அறை விட்டான்.

அந்த மாணவன் அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதற்குள் ராம் அவனை கண்டபடி திட்ட ஆரம்பித்தான். “உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா. இது மாதிரி பேசிக்கிட்டே போயி வண்டில அடிபட்டு செத்து போனா உன் வீட்ல இருக்கிறவங்க என்ன ஆவாங்க-னு யோசிச்சு பார்த்திருக்கியா. அந்த பக்கம் போயி அப்புறம் பேசறதுக்குள்ள என்ன கொள்ள போகப் போகுது. உனக்கு வேணா உன் உயிரைப் பத்தி கவலை இல்லாம இருக்கலாம். ஆனா உன் வீட்டுக்கு அது முக்கியம். அத எப்பவும் மனசில நெனச்சுக்க” என்று ராம் அவன் மனதில் இருந்ததைக் கொட்டித் தீர்த்தான். அடுத்த நொடி அங்கிருந்து விருட்டென்று கிளம்பிச் சென்றான்.அந்த பையனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனாலும் கைப்பேசியை அனைத்து விட்டு சாலையைக் கடந்தான்.

ராம்-ற்கு மட்டும் காலையில் நடந்த விபத்து சம்பவம் நினைவில் இருந்து அகலவில்லை. அந்த அடிபட்ட பையன் எதிரில் கைப்பேசியில் பேசிக்கொண்டு போவது போலவே இருந்தது. அந்த வாலிபனுக்காக இறைவனிடம் வேண்டிக் கொண்டே நடந்து போய்க் கொண்டிருந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *